கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் - பகுதி 4
Arts
9 நிமிட வாசிப்பு

கனடாவில் பன்மைப் பண்பாட்டுவாதம் – பகுதி 4

December 9, 2022 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம்: – அலெய்ன் ஜி. கக்நொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன்

கனடாவின் பழங்குடி மக்கள்

Early-Canadian-History-Pre-Colonization



ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்ற இரு நாடுகளையும் போன்றே கனடாவும், குடியேறிகள் பெரும்பான்மையினராக அமைந்த குடியேறிகள் சமூகம் (Settler Society ) ஆகும். குடியேறிகள் சமூகங்கள் உள்ள நாடுகளில் குடியேறிய ஐரோப்பியர் சுதேசிகளான பழங்குடியினரை நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு துரத்தி விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளினர். 1763ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசுப் பிரகடனத்தில் சுதேசிகளுக்கும் ஐரோப்பியர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை அடிப்படையில் பங்குடமைச் சமூகமாக கனடா விளங்கவேண்டும் என்று கூறப்பட்டதெனினும், சுதேசிகளின் கீழ்ப்பட்ட நிலை தொடரலாயிற்று. சுதேசிகளின் நிலங்களை ஐரோப்பியர் அபகரித்தல், இந்தியர்களுக்கான ஒதுக்கிடப்பகுதிகளை உருவாக்குதல், பழங்குடியினரின் பாதுகாப்பை வழங்கத் தவறிய உடன்படிக்கைகளைச் செய்தல் போன்ற வழிகளில் பழங்குடியினர் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். பழங்குடிமக்கள் விவகாரம் சமஷ்டி அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தது. 1876 இல் இந்தியர் சட்டம் (Indian Act 1876) அமுல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்குப் பதிலாக அவர்களது உரிமைகளைப் பறித்து காலனித்துவ ஆட்சி முறைக்குள் அவர்களைக் கொண்டு வந்தது. எந்த மக்களைப் பாதுகாக்கவென இந்தச் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த மக்களை ஒடுக்குவதற்கும் அது பயன்படுத்தப்பட்டது என்று கரோல்ட் கார்டினர் என்பவர் கூறியிருக்கிறார். கனடாவின் மக்கள் இன்று திருத்த வேண்டிய வரலாற்றுத் தவறுகளில் பழங்குடியினர் பிரச்சினை ஒன்றாக உள்ளது. இந்தியர்கள், மெற்றிஸ் (Metis) இனூயிட் (Inult) ஆகிய பழங்குடிகள் 1951ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி, மொத்தச்சனத்தொகையின் 1.2 வீதத்தினராக இருந்தனர். இவ்வீதாசாரம் 1981 இல் 2.0 வீதமாகவும் 2001 இல் 4.4 வீதமாகவும் ( 1,319,890 ) காணப்பட்டது . இம்மக்கள் நீண்டநாள் மறுக்கப்பட்ட நீதியை வழங்கும்படி பலமான கோரிக்கையை விடுக்கின்றனர். பழங்குடியினரை சொத்தற்றவர்களாக ஆக்கியமை அவர்களிடையே இன்று வேலையின்மை, வறுமை, நோய் போன்ற சமூக நோய்கள் பரவியிருத்தல் ஆகியன வரலாற்று அநீதிகளின் விளைவு. பரம்பரை பரம்பரையாக இம்மக்கள் அரசியல் அநாதைகளாக இருந்து வந்துள்ளனர். அவர்களின் பண்பாடுகளும் மரபுகளும் தழைக்கவிடாமல் அழிவுக்குள்ளாக்கப்பட்டன

கனடியப்-பழங்குடி-மக்கள்

பழங்குடியினர் மத்தியில் வேலையின்மை, பிற கனடா மக்களைவிட இரு மடங்காக அதிகரித்துக் காணப்படுகிறது. கனடாவின் பிறமக்களின் ஆயுட்காலத்தைவிட பழங்குடியினர் ஆயுட்காலம் 7.4 ஆண்டுகள் குறைவாக உள்ளது. (பெண்களின் ஆயுள் 5.2 ஆண்டுகள்குறைவு). சிசுமரணவீதம் கனடாவின் சராசரியை விட இருமடங்காகும். நீரிழிவு நோய் மூன்று மடங்காகவும், காசநோய் எட்டுப் பத்து மடங்காகவும் பரவி உள்ளன. ஒதுக்குக் காடுகளில் வதியும் பழங்குடியினர்   வீட்டு வசதி, குடிநீர், கழிவகற்றல், பிறசேவைகள் ஆகியனவற்றில் உள்ள  தரக்குறைவு,  வசதியீனங்கள்  காரணமாக கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல், சிறைச்சாலைக்கு அனுப்பப்படுதல் என்பனவற்றிற்கான வாய்ப்புக்கள் பிறரைவிடப் பழங்குடியினரிடம் அதிகம். பழங்குடியினருக்கும், கனடாவின் பிறமக்களுக்கும் இடையிலான உறவு பொருளாதாரம், சமூகம், பண்பாடு, அரசியல் ஆகிய யாவும் இணைந்த பிரச்சினைகளின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இன்று அவர்கள் எதிர்நோக்கும் பண்பாட்டுச் சட்டப் பிரச்சினைகள் யாவற்றுக்கும் வரலாற்று ரீதியாக அவர்கள் சுரண்டப்பட்டதும், ஓரங்கட்டப்பட்டதும் அவர்களது பண்பாடு அழிக்கப்பட்டதும் காரணங்களாகும். அவர்களின் சமூகத் துயரத்தின் வேர்கள் வரலாற்று ரீதியானவை.

நிறுவனங்களும், நடைமுறைகளும்

கனடாவில் அரசியல் யாப்புவாதம் (Constitutionalism) வளர்ச்சியடைவதற்கு பழங்குடிகள் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அரசியல் யாப்பின் மூலமான தீர்வுகளில் தொடர்ச்சி (Continuity), பரஸ்பர அங்கீகாரம் (Mutual Recognition) சம்மதம் (Consent) அரசியல் இணக்கமும் மதிப்பும் ஆகிய கருத்துகள் பரவலாக்கப்படுவதற்கு இவர்களின் பங்களிப்பு உதவியது. நீண்டகாலமாக கனடாவில் இருந்து வந்த காலனித்துவச் சிந்தனையை தோலுரித்துக் காட்டுவதற்கு பழங்குடி மக்கள் தலைவர்களின் அரசியல் பங்களிப்பு உதவியது. புதிய குடியேறிகளுக்கும் பழங்குடியினருக்கும் இடையிலான உறவுகள் நம்பிக்கை, பரஸ்பர மதிப்பு என்பனவற்றின் அடிப்படையில் அமைதல் வேண்டும். பழங்குடிகளுக்கு சுயாட்சிக்கான உரிமை அவர்களின் பிறப்புரிமை என்ற கருத்துக்கள் பழங்குடித் தலைவர்களால் அழுத்திக் கூறப்பட்டுள்ளன.

பழங்குடிகளின் இன்றைய அரசியல் இயக்கம் 1960 களில் ஆரம்பித்தது. கியுபெக்கின் முன்மாதிரியால் இது ஊக்கம் பெற்றது. சர்வதேச மட்டத்தில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியும், பழங்குடி மக்கள் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றமையும் பழங்குடியினரின் அரசியல் இயக்கத்திற்கு ஊக்கம் அளித்தன. கனடாவின் பொதுவாழ்வில் பழங்குடியினரை எவ்வாறு இணைத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கை உயர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்பது பற்றிய பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 1969 ஆம் ஆண்டில் கனடா அரசாங்கம் வெள்ளையறிக்கையொன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை பழங்குடியினருக்கு எதிரான பாரபட்சம் காட்டுதலை ஒழித்தல் எப்படி என்ற திட்டத்தை முன்வைத்தது. இதன்படி பழங்குடிகள் கனடாவின் ஏனைய பிரஜைகளிற்குச் சமதையான அந்தஸ்தையும் வாழ்க்கையையும் பெறுவர் என்று கூறப்பட்டது. இது உண்மையில் உள்ளீர்த்தல் அல்லது ஒருங்கிணைப்பு சிந்தனையாகும். (Assimilations or integrationist view). இதற்குப் பழங்குடியினரிடமிருந்து எதிர்ப்புத் தோன்றியது. பழங்குடிகள் தம்மை கனடாவின் முதலாவது தேசிய இனங்கள் (First Nations) என்று வரையறை செய்தனர். முதலாவது தேசிய இனங்கள் என்ற முறையில் சுயாட்சிக்கான உரிமை (right to self government) தமக்கு உள்ளது என்று பழங்குடி மக்கள் கூறுகின்றனர். தம்மையும் ஒரு தேசிய இனமாகக் கருதுகின்றனர். ஒரு தேசியத்திற்கும் இன்னொரு தேசியத்திற்குமான உறவு (Nation to Nation Basis) என்ற வகை உறவுக்கான உரிமை தமக்கு உள்ளது என்றும் கூறுகின்றனர். 1990 களின் மத்தியில் பழங்குடி மக்கள் விசாரணைக்கான அரச ஆணைக்குழு அறிக்கையில் மேற்குறித்த கருத்துக்களிற்கு அங்கீகாரம் கிடைத்தது. கனடாவின் நீதிமன்றத்தீர்ப்புக்கள் பலவற்றில் தொடர்ச்சியாக பழங்குடிகளின் கோரிக்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்தது. இவை பழங்குடி மக்களின் பேரம்பேசல் வலுவை அதிகரிக்கச் செய்தன. அரசியல் யாப்புத்திருத்தப் பிரகடனம் 1983 இன்படி, 1982 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புத் திருத்தப்பட்டது. பழங்குடிகளின் அந்தஸ்தை இப்பிரகடனம் ஏற்றுக் கொண்டதோடு கடந்தகாலத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளிற்கும் அரசியல் யாப்புப் பாதுகாப்பை வழங்கியது. பழங்குடியினரின் நிலங்கள் தொடர்பான கோரிக்கைளிற்கும் அவர்களது சுயாட்சிக் கோரிக்கைக்கும் பேச்சு வார்த்தைகளின் மூலம் தீர்வுகள் கிடைத்தன. இது பெரும் வெற்றியாகும். வடக்குப் பிராந்தியத்தில் புதிய பகுதி Nunaut என்ற சுயாட்சி அலகாக உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இனூயிட் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். கியுபெக் மாநிலத்தில் வாழும் கிரிஸ் ( Crees ) மக்களும் இலூயிட் மக்களும் பேச்சு வார்த்தை மூலம் தமது உரிமைகளை வென்றெடுத்தனர். இதன்பயனால் யேம்ஸ்குடா மற்றும் வடகியுபெக் ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டது. அத்தோடு கியுபெக்கில் வாழும் இனூயிட் மக்கள் நுளாவிக் ( Nunavik ) என்ற புதிய சுயாட்சிப் பிரதேசத்தின் ஆட்சியுரிமையைப் பெற்றனர். இது கியுபெக் மாநிலத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் நிஸ்கா உடன்படிக்கை ( Nisga agreement ) இன்னோர் குறிப்பிடத்தகுந்த வெற்றியாகும். நிலங்கள் மீதான உரிமை, தமது அபிவிருத்தியைத் தாமே நிர்வகித்தல், சுயாட்சி அரசாங்கம் ஆகிய நன்மைகள் இந்த உடன்படிக்கையினால் கிடைத்தன.

canada's Chehalis First Nations in early 20th century

பழங்குடியினர் வாழ்க்கையில் மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே. இருப்பினும் இவை போதியனவல்ல. பழங்குடியினரின் மரபுரிமையான பிரதேசங்களில் வாழ்க்கை கஷ்டமானதாகவே உள்ளது. இப்பகுதியில் வெள்ளை இனத்தவர் ஊடுருவி வளங்களைச் சுரண்டுவதும் அபிவிருத்தியின் பயன்களை பழங்குடியினருக்குக் கிடைக்காமல் செய்வதும் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இப்பகுதிகளில் வளங்கள் மீதான உரிமையும் கட்டுப்பாடும் தம்மிடமே இருக்க வேண்டும், அதன் மூலம் தங்கள் சமூகத்தினர் அபிவிருத்தியின் பயன்களை அனுபவிக்க முடியும் என்று கூறும் பழங்குடியினர், இதற்காக ஒன்று திரண்டு இயக்கமாகச் செயற்படுகின்றனர்.

மரபுவழிப் பழங்குடிச் சமூகங்களிற்கு சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நகர்ப் பகுதிகளில் குடியேறி வாழும் பழங்குடி மக்கள் மீதும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. நகரப்பகுதிகள் பழங்குடியினருக்குக் கல்வியையும் வேலைவாய்ப்பையும் கூடிய அளவில் வழங்கிய போதும் சுயாட்சிக்கான நிறுவன அமைப்புக்களை சிறிய அளவிலேயே வழங்கின. பழங்குடி மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைத்தல், கனடாவின் வாழ்க்கையில் அவர்கள் ஒன்றிணைதல் என்பன கனடாவில் நிறைவேறாப் பணிகளுள் முதன்மையாக உள்ளன.

பிரதேசவாதமும் அரசியல் பன்மைத்துவமும்

பிரதேச வேறுபாடுகள் கனடாவில் இருந்து வருகின்றன. இவை ஒரு பிரதேசத்திற்கும், பிறபிரதேசங்களுக்கிடையிலான வேறுபாடுகள் என்ற வகையில் வெளிப்படுதல் கனடாவின் அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியானதொரு விடயமாக உள்ளது. இவ்வேறுபாடுகளின் முக்கியத்துவமும் தீவிரமும் காலத்திற்கு காலம் மாறுப்பட்டுள்ளன. உதாரணமாக இரண்டாம் உலகமகா யுத்தத்தின் முடிவில் கனடா சமூக நல அரசாக மாறியது. இதனால் விரிந்த கனடா என்ற உணர்வு வலுவடைந்துள்ளன. மாநில அரசுகள் தமது அதிகாரத்தை வலுவடைய செய்வது இதற்குக் காரணமாகும். அவை கனடா சமஷ்டியில் தாம் சமதையான பங்காளிகள் என்பதைக் காட்ட முயல்கின்றன. இருப்பினும் கனடா என்ற முழுமைசார்ந்த தேசிய உணர்வு வளர்ந்துள்ளது. கியுபெக் தவிர்ந்த பிற மாநிலங்கள் எவையும் தனியாகப் பிரிந்து செல்லும் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

Jacques Cartier meeting with the St. Lawrence Iroquois at Hochelaga during his second voyage in 1535

மாநிலங்களுக்கிடையிலான வேறுபாடுகள் பெரிதாக உள்ளன. இடப்பரப்பில் பெரியன, சிறியன என்ற வேறுபாடுகள் உள்ளன. இதே போன்று சனத்தொகை வேறுபாடுகளும் உள்ளன. 2006 ஆம் ஆண்டில் பிரின்ஸ் எட்வார்ட் தீவில் 133,089 பேர் இருந்தனர். ஆனால் ஒன்டாரியோ மாநிலத்தில் 12,861,940 பேர் இருந்தனர். செல்வம், வருமானம், பொருளாதாரக் கட்டமைப்பு சனத்தொகைக்கட்டமைப்பு என்பனவற்றிலும் வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகளால் கனடாவின் சமஷ்டிமுறை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கனடாவின் பொருளாதாரக் கொள்கைகள் சில மாநிலங்களுக்குப் பொருத்தமானவையாக உள்ளன. சில மாநிலங்களிற்கு அவை பொருத்தமற்றவை. 1990 களின் பின்னர் எண்ணெய் வளம் மிக்க அல்பேர்ட்டா மாநிலம் மிகத் துரிதமாக வளர்ச்சிபெற்று வந்துள்ளது. வரிவிதிப்பு முறையினால் நிதிவளம் குறைந்த பகுதிகளிற்கு  கனடாவின்  செல்வம் பகிரப்படும் வகையில் சமத்துவமான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் நிதிவளம் குறைந்த (கியுபெக், மனிடோபா, அத்திலாந்திக்கின் நான்கு மாநிலங்கள் ஆகியன) மாநிலங்கள் நன்மை பெறுகின்றன.

குறிப்பு : ‘Power Sharing : The International Experience’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து, அலெய்ன் ஜி கக்னொன் மற்றும் றிச்சார்ட் சிமியோன் எழுதிய,  ‘Addressing Multi Culturalism in Canada’ என்ற கட்டுரையின் மொழிப்பெயர்ப்பே இக்கட்டுரையாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10816 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)