­இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் - பகுதி 1
Arts
13 நிமிட வாசிப்பு

­இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 1

October 4, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : ஜயம்பதி விக்கிரமரட்ண

2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையின் நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் என்னும் விடயம் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள், இம் முறையை நீக்கி பாராளுமன்ற முறைக்கு (Parliamentary System) மீண்டும் திரும்புவதற்கான சாதக நிலையை உருவாக்கலாம் என நம்பப்படுகின்றது. இப் பின்புலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சன நோக்கிலான ஆய்வுகளைத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் இத் தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிமுறை பற்றிய விமர்சனமாக அமையும் ஆய்வுக் கட்டுரைகள் ஏராளம் எழுதப்பட்டுள்ளன; ஆய்வு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. இவ்வகை ஆய்வுகளை இரு பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம்.

  1. லிபரல் ஜனநாயகவாதிகள் (Liberal Democrats) என்னும் வகையினரான அறிவாளிகளின் ஆய்வுகள்.
  2. இடதுசாரிகள் (Leftists) அல்லது மார்க்சிஸ்டுகள் என்ற வகையினரான அறிவாளிகளின் ஆய்வுகள்.

இந்த இரு வகையான ஆய்வாளர்களினதும் கட்டுரைகள் சிலவற்றை ‘எழுநா’வில் தொடர்ந்து அறிமுகம் செய்யவுள்ளோம். மேற்கூறிய இரு பிரிவுகளில் இரண்டாவதான இடதுசாரிகளின் நோக்கு நிலை நின்று சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் எழுதிய ‘EXECUTIVE PRESIDENCY – A LEFT PERSPECTIVE’ என்னும் தலைப்பிலான கட்டுரையின் பிரதான கருத்துகளைச் சுருக்கமாக இத் தமிழ்க் கட்டுரையில் எடுத்துக் கூறவுள்ளோம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் எழுதிய ‘TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRI LANKA : A CONSTITUTIONAL MISCELLANY (2014)’ என்ற நூலின் மூன்றாவது அத்தியாயமாக அமைந்துள்ளது. எமது இத் தமிழ்க் கட்டுரை மொழிபெயர்ப்பாக அல்லாது மூலத்தின் கருத்துகளைச் சுருக்கியும், தழுவியும் எமது வார்த்தைகளில் கூறுவதாக அமைந்துள்ளது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் அவசியமானது.

இலங்கையில் ஜனநாயக ஆளுகையை நிறுவுதல்

ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் 2014 ஆம் ஆண்டு நூலின் தலைப்பு ‘இலங்கையில் ஜனநாயக ஆளுகையை நிறுவுதல்’ (Towards Democratic Governance) என்ற நோக்கு நிலை நின்று எழுதப்பட்ட கட்டுரைகளின் கதம்பம் (Miscellany) என்பதை உணர்த்துவதைக் காணலாம். விக்கிரமரட்ண போன்ற இடதுசாரிகளில் பெரும்பான்மையினர் இன்று இலங்கையில் ஜனநாயக ஆளுகையை நிறுவுதல் என்ற விவாதத்தை, வெறுமனே ஜனாதிபதி முறையா? அல்லது பாராளுமன்ற முறையா? என்ற பட்டிமன்ற விவாதமாகக் குறுக்குவதனை விரும்புவதில்லை. இவ் விவாதத்தினை பன்மைப் பண்பாட்டுச் சமூகமான (Multi – Cultural Society) இலங்கையின் தேசிய இனங்களின் பிரச்சினையை, அதிகாரப் பரவலாக்கல் (Devolution of Power) மூலம் தீர்வு செய்தல் என்ற பொதுப் பிரச்சினையுடன் இணைத்தே பார்க்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாகும். ஆகையால் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் நூலிலுள்ள 10 கட்டுரைகளில் ஒன்றான 3 ஆவது அத்தியாயமான ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை’ பற்றிய விடயத்தை ஏனைய கட்டுரைகளில் இருந்து தனிமைப்படுத்தி நோக்குதல் ஆகாது என்பதையும் இவ்விடத்து வாசகர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். குறிப்பாக 4 ஆவது அத்தியாயமான ‘LEGAL ASPECTS OF DEVOLUTION IN SRI LANKA’,  5 ஆவது அத்தியாயமான ‘POWER SHARING IN THE PERIPHERY’ ஆகியவை அதிகாரப் பரவலாக்கல் (Devolution), பிராந்தியங்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் (Power Sharing) ஆகிய விடயங்களுக்கு அழுத்தம் கொடுப்பவை.

அரசியல் யாப்பை வரைதல் (Constitutional Making), இலங்கை போன்ற பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் சர்வதேச அனுபவங்களினைக் கவனத்தில் கொண்டு நடத்தப்பட வேண்டிய விவகாரம் என்பதையும் அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தையும் அழுத்திக் கூறும் ‘CONSTITUTION MAKING IN MULTI – CULTURAL SOCIETIES : SOME INTERNATIONAL EXPERIENCES’ என்னும் தலைப்பிலான முதலாவது அத்தியாயத்தினையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதனையும் குறிப்பிடுதல் சாலவும் பொருத்தமானது.

அடுத்து ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் கட்டுரையின் முக்கியமான கருத்துகளை நோக்குவோம்.

ஜனாதிபதி முறையை ஜே.ஆர். ஜெயவர்த்தன 1978 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தினார். புதிய அரசியல் யாப்புச் சட்டம் அவ்வாண்டு  நடைமுறைக்கு வந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் இத்திட்டத்தை தொடக்கம் முதலே இடதுசாரிகள் வன்மையாக எதிர்த்தனர். இடதுசாரிகளின் இந்த  எதிர்ப்பியக்க வரலாற்றை விபரிப்பது மட்டும் தமது கட்டுரையின் நோக்கமன்று; இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு பின்னால் உள்ள ஜனநாயகத் தத்துவங்களை (Democratic Principles) எடுத்துக் காட்டுவதே தமது நோக்கம் என்று கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

1971 ஆம் ஆண்டில்  நடைபெற்ற விவாதங்கள்

ஜே.ஆர். ஜெயவர்த்தன 1978 இல் ஜனாதிபதி முறை அரசியல் யாப்பை நடைமுறைக்கு கொண்டு வந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் அவர் ஜனாதிபதி முறையை இலங்கையில் புகுத்த வேண்டும் எனும் கருத்தை 1971 இலேயே முன்வைத்தார்; அது பற்றிய சர்ச்சையைத் தொடங்கினார் என்பது பலர் அறியாத விடயமாகும். 1970 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை வரைவதற்காக அரசியலமைப்புச் சபை ஒன்றை அமைத்தது. அச்சபையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசியல் யாப்பு பற்றிய விவாதங்களில் பங்கு கொண்டு, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை இலங்கைக்கு அவசியமானது என்ற பிரேரணையை முன்மொழிந்தார் என்பதை விக்கிரமரட்ண அவர்கள் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். 1978 இல் சர்வ அதிகாரமும் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதிமுறை புகுத்தப்பட்டதன் பயனாக ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் நீண்டகாலக் கனவு ஒன்று நிறைவேற்றப்பட்டது என்பதே உண்மை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த ஜெயவர்த்தன 1971 யூலை 2 ஆம் திகதி அரசியல் யாப்புச் சபையில் முன்வைத்த பிரேரணையில்,

அ) நிறைவேற்று ஜனாதிபதி 7 ஆண்டு காலத்திற்குப் பதவி வகிக்க வேண்டும்.

ஆ) பிரதமருடன் கலந்தாலோசித்த பின் பாராளுமன்றத்தை எவ்வேளையிலும் கலைக்கும் அதிகாரம் உடையவராக இருக்க வேண்டும். 

என்ற இரு முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தார். 

அவரின் இக்கருத்தோடு அக்காலத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் முரண்பாடு கொண்டவர்களாய் இருந்தனர். ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களில் ஒருவராவர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்கவும் ஜனாதிபதிமுறை இலங்கைக்குப் பொருத்தமற்றது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். கட்சிக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், ஜெயவர்த்தன அவர்கள் தமது பிரேரணையை அரசியல் யாப்புச் சபையில் முன் வைக்கலாம் எனக் கட்சி அனுமதியளித்தது. அவரது பிரேரணையை ஆர். பிரேமதாச அரசியல் யாப்புச் சபையில் வழி மொழிந்தார். இவ்விருவரும் 1978 இல் புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த பின் நிறைவேற்று ஜனாதிபதிகளாகப் பதவி வகித்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்து நிகழ்வுகள் ஜனாதிபதி முறையின் தீங்குகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது என்பது வரலாறு. இருவரும் சர்வாதிகாரிகளாகவே விளங்கினர்.

ஏ.சி.எஸ். ஹமீட் அரசியல் யாப்புச் சபை விவாதத்தின் போது, ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் பிரேரணைக்கு மாறான தமது கருத்தைக் கூறியிருந்தார். “இலங்கை முழுவதிலும் உள்ள மக்களினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி முறை இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களுக்குத் தீங்கானதாகவே அமையும்” என்பது ஹமீட் அவர்களின் கருத்தாகும் (பக். 99).

ஜனாதிபதி முறை இலங்கைக்குப் பேரழிவையே கொண்டு வரும் என்ற கருத்துடையவரான டட்லி சேனநாயக்க அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதி முறை சிறப்பாகச் செயற்பட்டதற்கு அந்நாட்டின் பிரத்தியேகமான, விசேட வரலாற்றுச் சூழலே (Special Historical Situation)  காரணமாகும். பிரான்ஸ் தேசத்திலேயும் ஜனாதிபதி முறை இவ்வாறே விசேட வரலாற்றுக் காரணங்களால் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இலங்கைக்கு அம்முறை பேரழிவையே கொண்டு வரும். அம்முறை இலங்கையில் ‘சீசரிசம்’ (Caesarism) எனப்படும் சர்வாதிகார ஆட்சி மரபை உருவாக்கி விடும். அது ஒரு தனி நபரின் கைகளில் அதிகாரம் முழுவதையும் குவிப்பதாக அமைந்து விடும்; பாராளுமன்றத்தை அதிகாரம் அற்ற சபையாக மாற்றி விடும். அமெரிக்காவிலும் பிரான்சிலும் ஜனாதிபதி முறை சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம். ஆயினும் அம்முறை நிக்குருமா, நாசர் போன்றவர்களை உருவாக்கலாம். சுதந்திரமான ஜனநாயக சமூகத்திற்கு சர்வாதிகாரிகள் ஆபத்தானவர்கள்; இதனால் இம்முறை எமக்குப் பொருத்தமற்றது (பக். 99-100).”

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களான ஹமீட், டட்லி சேனநாயக்க ஆகியோரின் கூற்றுகளை மேற்கோள் காட்டும் ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ஜெயவர்த்தனவின் கருத்துகள் இடதுசாரிகளால் மட்டுமன்றி வலதுசாரி அரசியல் தலைவர்களாலும் நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனப் புறந்தள்ளப்பட்டிருந்தன என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

ஒரு யுகத்தின் முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டட்லி சேனநாயக்க, அக்கட்சியின் பிரதித் தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தன என்ற இருவரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துடையவர்களாக இருந்தனர் என்பதை மேலே விளக்கிக் கூறினோம். டட்லி ஒரு ஜனநாயகவாதி; ஜே.ஆர். ஜெயவர்த்தன அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி என்று இம் முரண்பாடு பலராலும் விளக்கப்படுவதுண்டு. இந்த முரண்பாட்டை ஜயம்பதி விக்கிரமரட்ண தனிநபர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடாகப் பார்க்காமல், கட்சிக்குக்குள்ளே ஏற்பட்ட கருத்தியல் முரண்பாடாக கருதுகிறார். 

டட்லி, ஜே.ஆர் என்னும் இரு நபர்களுக்கிடையிலான இந்த முரண்பாட்டை இலங்கையின் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஏற்படும் கருத்தியல் முரண்பாடாக விக்கிரமரட்ண எடுத்துக் காட்டுகிறார். 1948 முதல் 1970 கள் வரையான கால் நூற்றாண்டு காலத்தில் வலதுசாரிகளான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களிடையே ‘பாராளுமன்ற ஜனநாயகம் இலங்கைக்குப் பொருத்தமற்றது; இலங்கை சர்வாதிகார முறையை நோக்கி நகர வேண்டிய தேவை உள்ளது.’ என்ற கருத்துடையவர்களிற்கு ஆதரவு பெருகியது.

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இவ்வாறான (சர்வாதிகார முறை தேவை என்ற) கருத்துகள் தோன்றியிருந்தமை ஆச்சரியத்துக்குரியதன்று. இலங்கையின் சமூக முறைமைக்குள் முதலாளித்துவ முறைக்கு எதிர்ப்பும் ஆபத்தும் தோன்றியிருந்ததை முதலாளித்துவ வர்க்கம் உணர்ந்து கொண்டமையின் விளைவே இதுவெனலாம். ‘பொது மகன்’ (Common Man) என்ற கருத்து தேவையற்றது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். முதலாளி வர்க்கத்திடம் நாட்டை வழிநடத்தும் அறிவும் ஆற்றலும் உள்ளது; அவ்வர்க்கம் இந் நாட்டில் உறுதிநிலையுடைய ஆட்சியை நடத்தும் தகைமை உடையது என்றும் அவர்கள் கூறத் தலைப்பட்டனர் (பக். 100 – 101).” இது நவ தாராளவாதத்தின் கருத்தியல் ஆகும். 

1978 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறை என்ற சர்வாதிகார முறையை நிறுவினார். அதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே 1971 இல் இலங்கைக்கு சர்வாதிகார முறை தேவை என்பதை அவர் உரத்துக் கூறினார். மார்கிரட் தட்சரும் றொனால்ட் றீகனும் நவ – தாராளவாதம் (Neo – Liberalism) என்பதைப் பேசவும் நடைமுறைப்படுத்தவும் தொடங்குவதற்கு முன்பே அதனை எடுத்துக் கூறியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன. அது மட்டுமல்லாமல் 1978 இல் நவ – தாராளவாதத்தின் சர்வாதிகார அரசியல் மாதிரியை அவர் இலங்கையில் நடைமுறைப்படுத்தவும் செய்தார்.

1973 இல் லிபரல் ஜனநாயகவாதத்தைப் பிரதிநிதித்துவம் செய்த டட்லி சேனநாயக்க காலமானார். அவரது மறைவுக்குப் பின் கட்சிக்குள் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் கை மேலோங்கியது. டட்லியின் மறைவை ‘ஒரு யுகத்தின் முடிவு’ (End of an Era) எனத் தமது கட்சியான சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா கூறியிருப்பதை விக்கிரமரட்ண சுட்டிக் காட்டுகிறார். பொது மக்களிடம் இருந்து எழும் அழுத்தம், பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தம் என்ற இரண்டைப் பற்றியுமே கரிசனை கொள்ளும் தேவை இன்றைய அரசியல் யாப்பு முறையில் உள்ளது. இதுவொரு அவப்பேறு. நாம் நாட்டை இந்த முறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அவரது ஆதரவாளர்களும் முன்னெடுத்தனர். பெரும்பான்மைப் பலம் கிடைத்ததும் இலங்கையைச் சர்வாதிகாரப் பாதையில் எடுத்துச் சென்றனர்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அவரது ஆதரவாளர்களும் ஜனாதிபதி முறைக்கு ஆதரவாகத் தெரிவித்த கருத்துகள், பாராளுமன்ற மந்திரி சபை முறை அல்லது வெஸ்ட் மினிஸ்டர் (Westminster) மாதிரிக்கு எதிராக முன்வைத்த கருத்துகளாகும்.

அ) பாராளுமன்ற மந்திரிசபை முறையில் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர், வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவராவர். இதனால் அவர் பொது மக்களின் மறைமுகமான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவர். இலங்கையில் சாதாரண மனிதர்களின் அழுத்தம் 1956 இற்கு முற்பட்ட காலத்து அரசியலில் இருக்கவில்லை. அக் காலப்பகுதியில் ஆங்கிலம் கற்ற உயர் குழாம் பாராளுமன்ற அரசியலில் செல்வாக்கு வகித்தது. 1956 இற்குப் பின்னர் படிப்படியாக அரசியல்வாதிகள் மீது சாதாரண மக்களின் அழுத்தம் (Common Man’s Pressure) அதிகரித்துச் சென்றது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்த பின் 1970 களின் முற்பகுதியில் பொது மக்களின் அழுத்தம் எல்லை மீறிப் போய்விட்டதென இலங்கையின் வலதுசாரி அரசியல்வாதிகள் குறை கூறலாயினர்.

ஆ) பாராளுமன்ற மந்திரிசபை முறையின் இரண்டாவது பெரிய குறையாக வலதுசாரிகள் கூறியது; நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர், தமது அரசாங்கத் தரப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்நேரமும் தன்னைப் பதவியில் இருந்து நீக்கி விடலாம், காலை வாரி விடலாம் என்ற அச்சத்தோடு இருப்பார்; அதனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்திற்கும் உட்பட்டவராகப் பலவீனம்மிக்க ஒருவராக இருப்பார் என்பதாகும்.

ஒரு அரசியல் முறைமையில் இருக்க வேண்டிய கட்டுப்படுத்தல்களும் சமன் செய்தல்களும் (Checks and Balances) தேவையற்றவை; அநாவசியமானவை என்ற கருத்தை ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அவரது ஆதரவாளர்களும் ஒரு கொள்கைத் திட்டமாக முன்வைத்தனர் என்பது  தெளிவாகிறது.

1972 அரசியல் யாப்பு – ஜனநாயகத்திற்கு வைத்த ஆப்பு

நிறைவேற்று ஜனாதிபதிமுறை கருக் கொண்டு வளர்ந்த வரலாற்றுப் பின்புலத்தை 5 பக்கங்களில் (97-101) விளக்கிய பின்னர் ஜயம்பதி விக்கிரமரட்ண மிக முக்கியமான வினாவொன்றை முன்வைக்கிறார்.

‘Jayawardene’s proposal was defeated and the parliamentary system survived, at least until 1978. But one is entitled to ask : did not the various unsatisfactory features of the 1972 constitution also lead to a degree of authoritarianism?’

மேற் தரப்பட்ட ஆங்கில வாசகத்தின் பொருள் வருமாறு : “ஜே.ஆர். ஜெயவர்த்தன 1971 இல் முன்வைத்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது; இலங்கையில் பாராளுமன்ற முறை 1978 வரை நிலைத்திருந்தது. ஆயினும் இவ்விடத்தில் நாம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியவர்களாக உள்ளோம். 1972 அரசியல் யாப்பு பல மோசமான கூறுகளை உட்புகுத்தியதல்லவா? இந்த மோசமான கூறுகள் சர்வாதிகாரம் என்ற வல்லாட்சிக் கொள்கை பலம் பெறுவதற்கும், 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதி முறை என்ற வடிவில் அது இலங்கை மக்கள் மீது திணிக்கப்படுவதற்கும் உதவின அல்லவா?” 

இந்த நியாயமான கேள்வியை முன்வைக்கும் ஜயம்பதி விக்கிரமரட்ண 1972 அரசியல் யாப்பு பின்வரும் மோசமான கூறுகளைக் கொண்டிருந்தது என்று குறிப்பிடுகிறார்.

  1. ஒற்றையாட்சி அரசு (The Unitary State)
  2. பௌத்த சமயத்திற்கு முதன்மையிடம்/விசேட இடம்(Special Place of Buddhism)
  3. சிங்களம் மட்டுமே இலங்கையின் உத்தியோக மொழி (Sinhala as The Official Language)
  4. பாராளுமன்றம் சட்டங்களை இயற்றிய பின்னர் ‘நீதி மீளாய்வு’ மூலம் அச்சட்டத்தை வறிதாக்கும் நீதிமன்ற அதிகாரத்தை இல்லாமல் செய்தமை (Lack of Post – Enactment of Judicial Review)
  5. பொதுச் சேவையினை அரசியல் மயப்படுத்தியமை (Politicization of The Public Service)
  6. நீதிமன்ற முறையின் கீழ் மட்டங்களில் (உயர் நீதிமன்றம் தவிர்ந்த பிற நீதிமன்றங்களில்) நிர்வாகத் துறையின் அதிகாரம் பிரயோகிக்கப்படுதல் (Executive’s Power Over The Lower Judiciary)

1972 இன் அரசியல் யாப்பின் மேற்குறிப்பிட்ட மோசமான கூறுகள் இலங்கை அரசியலில் சர்வாதிகாரப் போக்கை அதிகரித்தன. 1975 இல் சிறிமாவோ பண்டாரநாயக்க தம்முடன் கூட்டுச் சேர்ந்திருந்த இடதுசாரிகளான சமசமாஜிஸ்டுகளை வெளியேற்றினார். அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வலதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. 1972 – 1977 காலம், பாராளுமன்ற முறையின் கீழ் சர்வாதிகாரத்தை எப்படிக் கொண்டியக்கலாம் என்பதை பண்டாரநாயக்க அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் காட்டியது. 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் புகுத்துவதற்கு கருத்தியல் மட்டத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டிருந்தன. ஜெயவர்த்தனவிற்கு முன்பிருந்த சிறிமா பண்டாரநாயக்கவும் அவரது கட்சியினரும் புனிதர்கள் அல்ல என்பதை விக்கிரமரட்ண சுட்டிக்காட்டுகிறார்.  

இலங்கையின் அரசனாக முடி சூட்டிக் கொண்ட ஜே.ஆர். ஜெயவர்த்தன

1977 பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையைக் கொண்டு வரப்போவதாக ஜே.ஆர். ஜெயவர்த்தன நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பெரும்பான்மைப் பலத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், கொடுத்த ‘வாக்குறுதியை’ நிறைவேற்றினார்.

1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர், அவ்வாண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி ஜே.ஆர். ஜெயவர்த்தன 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்திற்கு ஒரு திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். 1972 அரசியல் யாப்பின் 2 ஆவது திருத்தச் சட்டம் என அழைக்கப்படும் இச் சட்டத் திருத்தம் மூலம் அவர் தன்னை நிறைவேற்று ஜனாதிபதியாக உருமாற்றிக் கொண்டார். இத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட முறை பற்றி இன்னொரு ஆய்வாளரின் நூலிலிருந்து ஒரு மேற்கோளை கீழே தந்துள்ளோம்.

”முக்கியம் வாய்ந்த இத் திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு முன்னர், அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுவிற்கு (Parliamentary Group) சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. இத்திருத்தம் 1972 ஆண்டு அரசியல் யாப்பின் 94 ஆவது பிரிவைத் திருத்தம் செய்வதன் மூலம் பிரதம மந்திரியின் அதிகாரங்கள் சிலவற்றைப் பறித்தெடுத்தது; அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்க வேண்டும், ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் எவ்வெவ் விடயங்கள் ஒதுக்கப்பட வேண்டும், என்ன விடயங்களுக்கு அமைச்சர்களை நியமிக்க வேண்டியதில்லை என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் பிரதம மந்திரியிடமிருந்து பறிக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களாக்கப்பட்டன. இந்த முக்கியமான மசோதா அன்றைய பாராளுமன்றத்தில் (நாஷனல் ஸ்டேட் அசெம்பிளி – NSA) விவாதிப்பதற்கு மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் அவ்விவாதத்தில் கலந்து கொள்ளாது பகிஷ்கரிப்புச் செய்தனர். இத்திருத்தச் சட்டம் பற்றிய விவாதம் பாராளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்றதா என்று கேட்டால் அவ்வாறு நடந்தது என்று சொல்வதற்கு இல்லை. அரசியல் கட்சிகளுக்குள் இவ்விவாதம் நடைபெற்றதென்று வேண்டுமானால் கூறலாம். இத்திருத்தச் சட்டத்தின் பின்னர் பாராளுமன்றம் அரச அதிகாரத்தின் உறைவிடம் என்ற தகுதியை இழந்து விட்டது. அரசாங்க அதிகாரம் ஜனாதிபதியின் அதிகாரிகள் (Presidential Staff) கைகளுக்கு மாறி விட்டது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி அபிப்பிராயம் தெரிவித்தது. முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா இத்திருத்தச் சட்டம் சர்வாதிகாரியான ஜனாதிபதியை (Presidential Dictator) உருவாக்கியுள்ளது; இச் சர்வாதிகாரி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டியவராக இருக்கப் போவதில்லை“ (V.K. நாணயக்கார, IN SEARCH OF A NEW SRI LANKAN CONSTITUTION, 2016:60 – எளிமைப்படுத்திய தமிழாக்கம்).

மேற்குறித்தவாறாக பிரதமர் என்ற பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட ஜே.ஆர். ஜெயவர்த்தன, அத்தெரிவு நடைபெற்று இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பிற்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் தன்னை ஜனாதிபதியாக மாற்றிக்கொள்ள வழி செய்தார். 1977 ஒக்டோபரில் உறுதிப்படுத்தப்பட்ட இத்திருத்தம் 1978 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 04 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று நடைமுறைக்கு வந்தது.

அன்றைய தினம் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாகப் பதிவியேற்றார். இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு 1978 ஆம் ஆண்டு செப்டெம்பர் 07 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது (பக். 102).

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5083 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)