ஆதிகால மக்களின் நம்பிக்கைகளே சமயங்களாகப் பரிணமித்தன. மானுடர்களின் வாழ்வில் உருவான நம்பிக்கைகள் பல்வேறு நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், அச்சங்களையும் அவற்றினூடாகப் பல்வேறு ஐதிகக் கதைகளையும் புராணங்களையும் நீண்ட நெடுங்காலங்களுக்கு அளிக்கை செய்து வந்துள்ளன. அதன் வழி “ஓ! நம்பிக்கையே என்னை நம்பிக்கை உடையவனாக்கு” என இறைஞ்சுகின்ற நிலைக்கு மானுடரை உந்தித் தள்ளிற்று. அவை அகவியல், புறவியல் எனும் இரு தளங்களிலும் வாழ்வு முழுவதும் மானுடருடன் தொடர்ந்து பயணித்தன. அது இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, உயிரியம், மனா எனப் பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கியது.
குறித்த இனக்குழு தன்னை, தன்னினத்தைக் காத்த வீரனை, உயிரியை, இயற்கையை தன் தெய்வமாக – என்றென்றும் தம்மைக் காக்கும் தெய்வமாக நம்பி வழிபடத் தொடங்கியது. அதுவே குலதெய்வ வழிபாடாயிற்று. இது பரம்பரை, சாதி, நிலம் எனப் பல தளங்களில் கட்டமைக்கப்பட்டது. ஆரம்ப காலத் தமிழர்களின் திணைக்கடவுள்கள், பிற்காலச் சாதியக் கடவுள்கள் என்பன இதற்குத் தக்க சான்றாகின்றன. குறித்த தெய்வம் ஆண்பாற் பெயரையோ, பெண்பாற் பெயரையோ கொண்டிருக்கும். திணை, பால், எண், இடம் கொண்டிராத பெயரையுடைய தெய்வம் அரிது. அவ்வாறான பெயரை உடைய தெய்வமே ‘பெரும்படை’ என்பதாகும். ஈழத்துப் புலத்தில் அதிகம் பேசப்படாத தெய்வங்களில் ஒன்றாக பெரும்படையும் காணப்படுகின்றது.
பெரும்படை
இயற்கைநெறி வாழ்வில் தமக்காக, இனக்குழுவிற்காக, உயிர் நீத்த வீரர்களை, வீர வணக்கம் செய்யும் முறை காணப்பட்டது. இந்த வீர வணக்க முறையானது சடங்கு, நினைவுச் சின்னம் எனும் இரு அடிப்படைகளை உடையது. போரில் இறந்த வீரர்களை வணங்குதல் என்ற அடிப்படையில்:
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலெண்
றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தே”
எனும் இலக்கணத்தைத் தொல்காப்பிய புறத்திணையியல் எடுத்துரைக்கின்றது. காட்சி – போரில் இறந்த வீரருக்கு, நடுதற்கு ஏற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்; கால்கோள் – அக்கல்லைக் கொண்டு வருதலும் நாட்குறித்தலும்; நீர்ப்படை – அக்கல்லை நீராட்டுதல்; நடுதல் – உரிய இடத்தில் நடுதல்; பெரும்படை – கல்லில் வீரனது பீடு பொறித்தலும் மடை கொடுத்தலும்; வாழ்த்தல் – வணங்குதல் என்றாயிற்று.
இங்கு ‘பெரும்படை’ என்பது யாருக்காகக் கல் நடப்படுகின்றதோ அதில் அவரது பெருமைகளை எழுதலும் ‘மடை’ கொடுத்தலும் என விளக்கப்படுகின்றது. பெரும்படை என்பது பொதுவில் ‘பெரியபடை’ என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. பேரரசுகளின் படை பெரும்படை எனப்பட்டது. அது பெரியதொரு கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே பல்வகைமையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் பெரும்படை சாஸ்த்தா, ‘ஸ்ரீ பெரும் படை சாஸ்தா’ எனும் சொல் முறைகள் காணப்படுகின்றன. தூத்துக்குடி இருவப்புரத்தில் பூர்ணா, புக்ஷ்கலவுடன் பெரும்படை சாஸ்தாவின் கோவில் உள்ளது. இதேபோல தமிழகத்து சாயர்புரம், அருணாபேரி உள்ளிட்ட பல இடங்களில் பெரும்படை சாஸ்தா கோயில் காணப்படுகின்றன. சாஸ்தா ‘ஐயனார்’ ஆவார். தமிழகத்தில் தூத்துக்குடி இருவப்புர பெரும்படை சாஸ்தாவே ஆதிக்கோயில்; இராஜராஜசோழன் காலத்தில் ‘வலங்கை மகா சேனை’ என்ற பெரும்படை இருந்துள்ளது. அப்படை இவ்விருவப்புரத்தில் தங்கி இருந்த காலத்தில் தம்மோடு கொண்டு வந்த சாஸ்தாவை இவ்விடத்தில் பிரதிக்ஷ்டை செய்து வணங்கியுள்ளது. பெரும்படை வீரர்களால் வைத்து வழிபடப்பட்டது என்ற அடிப்படையில் இது ‘பெரும்படை சாஸ்தா’ என அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. இங்கே பெரும்படை எனும் ஒரு தெய்வம் தனித்து இல்லை. இவ்வாறான ஒரு கருத்தாடல் யாழ்ப்பாணத்து வேலணையிலும் உண்டு. வேலணைத் துறையூரில் இருக்கும் இலந்தைவனம் ஹரிஹர புத்திர ஐயனார் பெரும்படையோடு கந்தவனக் கடவை சென்று தங்கி வருவதான நம்பிக்கை காணப்படுகின்றது. அதனால் வேலணை கிழக்கு அரசபுரம் ஐயனார் ‘பெரும்படை ஐயனார்’ எனப்படுகின்றார். அதேவேளை ‘பெரும்படை’ தனித்தெய்வமாக ஈழத்தில் வழிபடப்படுகின்றது.
ஈழத்துப் பெரும்படை தெய்வம்
ஈழத்தின் வடபுலத்தில் இரு மாவட்டங்களாகவும் தேர்தல் மாவட்டமாக ஒன்றாகவும் காணப்படுவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களாகும். தென்மராட்சிக்கும் கிளிநொச்சிக்குமான உறவு நீர், தரை எனும் இருவழிகளாலும் ஆனது. கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு, கச்சாய், கெற்பலி என்பன குடாநாட்டின் கடல் நீரேரியில் வடக்குத் தெற்குக் கரையோரக் கிராமங்கள். அக்கடல் நீரேரி பரந்தன் வரை நீள்கிறது. அது போலவே கேரதீவுப் பாதையில் இணைக்கப்பட்ட கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு, கேரதீவு, வெட்டக்காடு, பரமன்கிராய், ஞானிமடம், கறுக்காய்த்தீவு, ஆலங்கேணி, சாமிப்புலம், குஞ்சுப்பரந்தன் பழைய சுட்டதீவு, புதிய சுட்டதீவு எனும் கரையோரக் கிராமங்களில் பெரும்படை தனித்தெய்வமாக வழிபடப்படுகிறது. கேரதீவு, பரம்பராய் ஆகிய கிராமங்களில் ஐயனாரோடு இணைத்துத் தனித்தெய்வமாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
எழுநாவில் வெளிவந்த ‘சேவகர்’ தெய்வம் பற்றிய கட்டுரையை வாசித்து விட்டு சாவகச்சேரியைச் சேர்ந்த மார்க்கண்டு அவர்கள் ‘பெரும்படை’ தெய்வம் பற்றி எமக்குக் கூறினார். அதன்வழி மாணவ நண்பர்கள் திரு S. தாரங்கன், செல்வி S. தாட்சாயினி ஆகியோரின் உதவியோடு கள ஆய்வில் ஈடுபட்டோம். யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட இக்கிராமங்களுக்குச் சென்று நேரடியாக ஆலயங்களைத் தரிசித்தபோது சில பொது அம்சங்களை அவதானிக்க முடிந்தது.
1. பெரும்படைத் தெய்வத்தின் இக்கோயில்கள் யாவும் கடற்கரையை மிக அண்மித்தே அமைந்துள்ளன.
2. இவை யாவும் கடலால் உட்கொள்ளப்பட்ட விவசாய – நெல் உற்பத்தி நிலங்கள்; வற்றுகடல்கள்.
3. இக்கோயில்களுள் சில பெருங்கோயிற் பண்பாட்டியலுடன் கட்டப்பட்டாலும் ‘பூசாரி’களே பூசை செய்கின்றனர்.
4. பரம்பரை பரம்பரையாகப் பூசை செய்யப்படுகின்றது என்ற ஒற்றை வரியைத் தவிர வரலாறு எதுவும் அறியப்படாத கோயில்கள்.
5. முக்குவர் சமூகத்தவர்களின் குலதெய்வக் கோயில்களாகவே இவை காணப்படுகின்றன.
6. எந்தக் கோயிலிலும் காலங்காலமாக உயிர்ப்பலி, மட்சப் படையல் எதுவுமில்லை. இது சேவகர் வழிபாட்டை ஒத்துள்ளது.
7. பெரும்படைத் தெய்வம் உருவமற்றது; அரூப வழிபாடும் கல் வைத்து வழிபடும் முறையுமே பெருவழக்ககாக உள்ளது.
கோயிலாக்கண்டி, வெட்டுக்காடு, பரமன்கிராய், ஞானிமடம், கறுக்காய்த்தீவு, குஞ்சுப்பரந்தன் புதிய சுட்டதீவு, பழைய சுட்டதீவு, ஆலங்கேணி, கெற்பலி ஆகிய இடங்களில் ஒவ்வொரு கோயில்களும் ஞானிமடத்துக்கு அப்பால் நாகதேவன் துறையை அண்மித்து தெருவின் இருபுறமும் இருகோயில்கள் உள்ளன. அதே போல கச்சாயில் மணற்பிட்டி சடவத்தியில் ஒரு கோயிலும் கச்சாய் துறைமுகத்தில் இருந்து 2 Km படகுப் பயணத்தில் அமைந்துள்ள சாளம்பன் தீவில் ஒரு கோயிலும் உள்ளது. இவை தவிர தனங்கிளப்பில் இருந்த பெரும்படை ‘அம்மன்’ கோயிலாக மாறிவிட்டது. சங்குப்பிட்டி, பரமன்கிராய் எனுமிடங்களில் உள்ள ஐயனார் கோயில்களின் பரிவார தெய்வமாக பெரும்படை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெட்டுக்காடு பெரும்படையும் பரமன்கிராய் ஐயனாரும்
பரமன்கிராய், வில்லடி மேற்கு ஐயனார் கோயில் பூசாரியான சதாசிவம் சிவகுருநாதன் பெரும்படை, ஐயனார் தெய்வங்களின் வருகைக்கான ஐதீகக் கதையை கீழ் வருமாறு கூறினார்:
“பேய்க்கப்பல் ஒன்று கடல் வழியாக இந்தப் பிராந்தியத்தை நோக்கி வந்தது. கௌதாரி முனையின் ஏழாத்துப்பிரிவில் மடை வைத்து தம்மைக் காக்குமாறு மக்கள் வேண்டினர். கொழும்புத்துறையிலிருந்து கடல் வாய்க்கால் வழி ஏழாத்துப் பிரிவுக்குப் பாதை இருந்தது. அப்போது எறியப்பட்ட இடம்புரிச்சங்கு, வலம்புரிச்சங்குகள் விழுந்த இடங்களே முறையே வில்லடி மேற்கு, வெட்டுக்காடு ஆகியனவாகும். தெங்குறுப்பிட்டி சுடலையில் உள்ள பாலைமரத்தில் அச்சங்கு தெரிவதாகக் கூறி பலர் அதனை எடுக்க கோடாரியுடன் சென்று பார்த்த போது அதனைக் காணவில்லை. இப்படி பலர் பல தடவை ஏமாந்துள்ளனர்.”
மேற்படிக் கதையை வெட்டுக்காடு தெங்குறுப்பிட்டி பெரும்படை ஆலயப் பூசாரி கார்த்திகேசு பஞ்சாட்சரம் இவ்வாறு கூறினார்:
“கொள்ளை (நோய்)க் கப்பல் ஒன்று இப்பிராந்தியத்துக்கு வந்தது. அக்கொள்ளை நோயிலிருந்து தப்ப இரு சங்குகள் எறியப்பட்டன. ஒன்று தெங்குறுப்பிட்டியில் விழுந்து பெரும்படையாகவும் மற்றையது வில்லடியில் விழுந்து ஐயனாராகவும் நின்று அருள் பாலிக்கின்றன. அத்தெய்வங்களால் கொள்ளை நோய்க் கப்பல் உடைக்கப்பட்டது. அந்த இடம் இன்றும் ‘கப்பல் உடைந்த வாய்க்கால்’ எனப்படுகின்றது. கொள்ளிவாய்ப் பேய்கள் காலை இழுத்து இழுத்துச் சென்றதால் அந்த வாய்க்கால் ஏற்பட்டது என்றும் கதை உண்டு.”
இவ்விருவரது கருத்துப்படியும் சங்கு விழுந்த இடங்களில் ஐயனாரும் (வலம்புரிச்சங்கு) பெரும்படை தெய்வமும் (இடம்புரிச் சங்கு) உருவாயின. தமிழகப்புலத்தில் சோழர் காலத்தில் சாதியை வலங்கை, இடங்கை எனப் பகுத்துரைத்துள்ளனர். அரசின் வலங்கை வருபவர், இடங்கை வருபவர் என இச்சாதிகள் சுட்டப்படுகின்றன. இச்சாதிகளை சார்ந்த வீரர்கள் வலங்கை வீரர், வலங்கைப்படை, இடங்கை வீரர், இடங்கைப் படை என அழைக்கப்பட்டனர்.
வலங்கைச் சாதியினருள் (வலம்புரிச்சங்கு) ஒருவரான வேளாளரினால் ஐயனாரும் இடங்கைச் சாதியினரான (இடம்புரிச்சங்கு) முக்குவரர்களால் பெரும்படைத் தெய்வமும் இன்று வரை ஆதரிக்கப்பட்டு வருவதையும், பெரும்படைத் தெய்வம் பற்றிய கதையாக பெரும்படைத் தெய்வ வழிபாட்டாளர்கள் இக் கதையையே சிறிது சிறிது வித்தியாசத்தில் கூறுவதையும் அவதானிக்க முடிந்தது. முக்குவர்களின் காவல் தெய்வமாக, குலதெய்வமாக பெரும்படை இன்றும் நின்று நிலைக்கின்றது.
ஐயனாருக்கும் பெரும்படைக்கும் இடையிலான வழிபாட்டு உறவு இவ்விரு கோயில்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டமெடுத்தல், முத்தரிசி பெறல், பவனி பாடல் என்பன ஒன்றாகவே நடைபெற்றுள்ளன. இவ்விரு இனக் குழுக்களும் இணைந்தே இக் கைங்கரியங்களை மேற்கொண்டுள்ளனர். ஐயனார் கோயிலில் கொடிமரம் நடுதல், பலியிடல் நடைபெற்றன. ஐயனார் கொடிமரம் சாய்த்தலின் பின் பெரும்படையில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. ஐயனாருக்கு பெரும்படைப் பூசாரியும் பெரும்படைக் கோயிலுக்கு ஐயனார் பூசகரும் சென்று இணைந்து பூசை செய்துள்ளமை சாதி கடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரப்படுத்துகின்றன. ஆயினும் இச்செயல்முறைகள் இன்று குறைவடைந்து வருகின்றன.
பவனி வரும் போது ‘21’ பாடல்கள் பாடப்பட்டதாகவும் அவ்வேடுகள் தொலைந்து விட்டதாகவும் ஐயனார் கோயில் பூசாரி தெரிவித்தார். இதையொத்த கதையையே யுத்தத்தால் ஏற்பட்ட பெயர்வுகளால் சுவடிகள் தொலைந்தன என கறுக்காய்தீவு பெரும்படைக் கலையாடி பொன்னம்பலம் மயில்வாகனமும் தெரிவித்தார். ஆயினும் ஐயனார் கோயில் பூசாரி தனது ஞாபகத்தில் இருந்த ஐயனார் பாடல்கள் பத்தை எழுதி வைத்துள்ளார். வெட்டுக்காடு பெரும்படை பூசாரி கா. பஞ்சாட்சரம் அப் பத்துப் பாடல்களோடு பெரும்படை பற்றிய நான்கு பாடல்களையும் இணைத்துப் பதிப்பித்துள்ளார். அப்பாடல்களில் “தர்மனே செங்கண்மால் தரு பெரும்படையே” என்றே ஈற்றடிகள் ஆண்பால் கொண்டவையாய் அமைந்துள்ளன. ஆனால் இன்று பெரும்படை ‘பெரும்படையம்மன்’ என்றே வழிபடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கோயிலாக்கண்டியைச் சேர்ந்த விஜிகரன் தனது வீட்டுக்கருகில் இருந்த வயோதிப மாது ‘பெரும்படைக் கிழவா’ என்று பெருங்குரலில் தெய்வத்தை அழைத்து வணங்குவதாக தெரிவித்தார்.
பெரும்படைத் தெய்வம் பற்றிய கதை
பெரும்படைத் தெய்வம் இரண்டு வகை உடையது. ஒன்று, வெற்றிப் பெரும்படை; மற்றயது, வீரப் பெரும்படை. இராமாயணத்தில் ‘இராவணரோடு இருந்தவள்’ என்று மக்கள் பேசியதால் சீதையை வனத்தில் விடுவித்தான் இராமன். இதனை “வண்ணாரின் மொழி கேட்டு, வனம் விடுத்த சீதை தனை” என நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடுவார். கர்ப்பமுற்றிருந்த சீதை வனத்தில் ‘லவன்’ எனும் ஆண்மகவைப் பெற்றிருக்கின்றாள். ஒருநாள் அக்குழந்தையை விசுவாமித்திர முனியின் பொறுப்பில் விட்டுவிட்டு நீரெடுக்கக் குளத்துக்குச் செல்கிறாள். செல்லும் வழியில் குரங்கு தன் மகவை நெஞ்சோடு அணைத்தபடி தான் செல்லுமிடமெங்கும் கொண்டு செல்வதைக் கண்டு, “இக்குரங்குக்கு இருக்கும் பாசம் தனக்கு லவன் மீது இல்லாமல் போய்விட்டதே” என எண்ணித் துயருற்று ஓடிப்போய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குளத்துக்குச் சென்றாள். இதனையறியாத விசுவாமித்திரர் குழந்தையைக் காணாது பதறி, செய்வதறியாது திகைத்து, பின் தேறி, தருப்பைப் புல் ஒன்றை எடுத்துத் தன் தவ வலிமையால் லவன் போல் ஒரு குழந்தையை உருவாக்கினார். இதையறிந்த சீதை மகிழ்வோடு அக்குழந்தைக்கு ‘குசன்’ எனப் பெயரிட்டு வளர்த்தாள் என்றும் கூறப்படுகின்றது. அதில் சீதையின் மகனான லவனே வெற்றிப் பெரும்படை; அம்மூர்த்தமே மூலஸ்தானத்தினுள் (சாளம்பன் தீவு, ஆலங்கேணி சாமிப்புலம்) இருக்கிறது. வெற்றிப் பெரும்படை பரிவார மூர்த்தியாக வெளியில் இருக்கிறது. வெற்றியீட்டியவன் தலைவனாகி அரசுக் கட்டிலில் ஏறுவதும் துணை நின்றவன் வீரனாகி காவற்கு நிற்பதும் மனிதகுல வரலாறு முழுவதும் இடம்பெறும் விடயம் தான்.
வழிபாட்டு முறைகள்
பொதுவாகப் பெரும்படைக்கான பூசை வழிபாடு சனிக்கிழமைகளிலேயே நடைபெறுகின்றது. ஊர் வழக்கில் ‘சனியும் புதனும் சாத்திரத்திற்குரிய நாள்’ என்பர். ஆயினும் தத்தம் வசதிக்கேற்ப வெள்ளி, ஞாயிறு தினங்களிலும் விளக்கு வைப்பர். நித்தியா பூசையும் உண்டு. ஆனால் படகுப் பாதையை மட்டும் கொண்டுள்ள கச்சாய், சாளம்பன் தீவு பெரும்படைத் தெய்வத்துக்கு பௌர்ணமி நாளிலேயே பூசை இடம் பெற்று வருகிறது.
பெரும்பாலான கோயில்களில் பங்குனி உத்திரம், வைகாசிப் பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அது ‘வேள்வி’ என அழைக்கப்படுகிறது. வெட்டுக்காடு, தெங்குறுப்பிட்டி பெரும்படை கோயிலிலும் ஐயனார் கோயிலிலும் இணைந்த வழிபாட்டு முறை உள்ளது. முன்னைய காலத்தில் பொங்கலுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு ‘நாள் காசு’ எடுத்தல் நிகழ்வு இடம்பெறும். ஐயனார்க்கு பெரும்படை கோயில் சார்ந்தவர்களும், பெரும்படைக்கு ஐயனார் கோயில் சார்ந்தவர்களும் நாள்காசு பெறுவர் என்றும் பின்பு சந்தையில் அவற்றைப் பரிமாற்றம் செய்து ‘வளந்துப்’ பொருட்களை வாங்குவர் என்றும் ஐயனார் கோயிலின் பூசாரி கூறினார். சமூக ஒற்றுமையைப் புலப்படுத்தும் இச்செயற்பாடு இன்று அருகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த ஆலயங்களுக்கான வாழைக்குலை முதலியன படகுவழி நாகதேவன் துறைக்கு வந்து பின் வண்டிலில் கொண்டு வந்ததை அறிய முடிகின்றது. அக்கால வணிக, போக்குவரத்து விடயங்கள் இதன் வழி ஆவணப்படுத்தப்படுகின்றன.
ஐயனாரில் திருக்கொண்டல் மரம் கொடிமரமாக நாட்டியபின் ஒவ்வொரு வீட்டிலும் பந்தலிடப்படும். இரு ஆலயப் பூசகர்களும் வேறுசிலரும் ‘பவனி படித்தபடி’ (ஆலயப்பாடல்கள்) வருவர். அதன் போது பறை, உடுக்கு, சங்கு, சல்லாரி போன்றவை இசைக்கப்படும். ஒவ்வொரு வீட்டாரும் அரிசி, பண்டம் இடுவர். இச்செயல்முறை ‘முத்தரசி’ தண்டல் எனப்படும். இத்தண்டல் பெரும்பாலான பெரும்படைக் கோயில்களில் நிகழ்ந்துள்ளன. இன்று இக்கூட்டு வழிபாட்டுமுறை அருகிவிட்டது. ஒரு முழு இரவு பவனி வந்தபின் காலையில் அன்னதானம் வழங்கப்படும். இரவு பொங்கல், படையல் இடம்பெறும். பெரும்படைக்கான மடையில் பொங்கலில் பல்வேறு வகையான பலகாரங்கள் குவித்து வைக்கப்படும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நிறைவாக வைக்கப்படும். பெரும்படைத் தெய்வத்துக்கு நீத்துப்பூசணிக்காய் வெட்டுதலே பலியிடலாகக் கருதப்படுகின்றது. மடை வைப்பும் பூசையும் நடைபெறும் போது கலையாடல் நடைபெறும்.
பெரும்படைத் தெய்வத்தோடு குறைந்தது பத்து வரையான வேறு தெய்வங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குத் தனித்தனிப் பந்தல்கள் போடப்பட்டிருக்கும். பல்வேறு சாதிகளின் குலதெய்வங்களுக்கு அங்கு இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதும், மடைபரவி வணங்குவதும் ஏற்றத்தாழ்வற்ற சமூக ஒழுங்கை, தொழில்சார் பாகுபாட்டை மட்டும் காட்டுவதாக அமைகிறது.
ஐயனாரோடு இரு மனைவியர் (பூரண, புட்கல), கண்ணகி, நாக தம்பிரான், முருகன், பிள்ளையார், நாச்சிமார், முத்துவைரவர், வைரவர், முன்னோடி, குறிப்பன், மாரி, காத்தவராயன், கன்னிமார், முனியப்பர், விறுமர் போன்ற இன்னும் பல தெய்வங்களை பரிவாரங்களாகக் கொண்ட தெய்வமே பெரும்படை. இதனால் இவ்வாலய வழிபாடுகளின் போது பல தெய்வமாடிகள் தெய்வங்கள் ஏறிக் கலையாடுவர். குறி சொல்லுதலும் உண்டு. நோய்நீக்கம், துன்பநீக்கம் போன்றவற்றிக்காக – சுகவாழ்வுக்காக பக்தர்களுக்கு தெய்வமாடிகள் ‘திருநீறு போட்டு’ ஆசீர்வதிப்பார்.
வளந்து எடுத்தல், மடைபரவுதல் என்பதில் ஆலயத்திக்கு ஆலயம் வேறுபாடு உண்டு. உதாரணமாக கறுக்காய்த்தீவில் மார்கழி மாதம் வழந்தெடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. வளந்துப் பானையை கறுக்காய் தீவு மேற்கெல்லை பூவரச மரக்கொப்பில் கட்டி வைப்பர். கிழக்கெல்லை கந்தசாமி கோவில் பூவரசு மரத்தில் மற்றையதைக் கட்டி வைப்பார். அது மூடியால் மூடி நீர்புகா வண்ணம் கட்டப்பட்டிருக்கும். பின்பு பங்குனி மாதம் அதனை எடுத்துப் பொங்கிப் படைப்பர். கடல்கோள் அதிகம் வாய்ப்புள்ள அத்தீவில் உயரமான மரத்தில் வளந்துக்கான முத்தரசியைக் கட்டி வைத்தல் ‘உணவுப் பஞ்சத்தில் இருந்து காக்கும்’ நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இதே போல கோயிலாக்கண்டியின் வளந்தெடுக்கும் முறையும் தனித்துவமானதாகும்.
பெரும்படை ஆலயங்களில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் வழுந்துப் பானை வைக்கப்படும். நீண்ட வெள்ளைத் துணியின் மேல் அவை வைக்கப்பட்டு கற்பூரம் ஏற்றல் நடைபெறுகின்றது. பூசை செய்யப்பட்டு பொங்கல் அடுப்பு வைக்கப்பட்டு பொங்கல் நடைபெறும். இவ் விழாக்களுக்கான கொடி கட்டல் நடைபெற்ற காலங்களில் தெய்வங்கள் பண்டங்களுக்கு காவல் காக்கும் என்பதால் பெண்கள், சிறுவர்கள் மாலைப்பொழுதின் பின் ஆலயச் சூழலுக்குச் செல்வதில்லை. தற்போது இந் நம்பிக்கைகள் குறைந்துவிட்டன.
பெரும்படைக்கு பலியிடல் இல்லை எனினும் காத்தவராயருக்கு சாராயப் படையலும் முனி, அண்ணமார், விறுமர் போன்ற தெய்வங்களுக்கு ஆலங்கேணி சாமிப்புல பெரும்படைக் கோயிலிற்குப் புறம்பாகத் தனிமண்டபம் அமைத்து (மறைவாக) பலியிடல் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அக்கோயிலில் கார்த்திகை, தை மாதங்களில் கடல் நீரேரியில் மூன்று கிலோமீற்றர் சென்று மடைபரவுதல் நடைபெறுகின்றது. இது ‘தண்ணீரில் பல காவல் மடைபரவுதல்’ எனப்படுகின்றது. ஆயினும் “கன்னாவும் ஆடு தின்னாப்பாலையும் சிக்கி நிக்கும் இடத்தில் மடை பரவுக” எனக் கனவில் தெய்வம் கூறியதாகவும் தற்போது அவ்விடத்திலேயே மடையிடுவதாகவும் ஆலயத் தலைவர் பொன்னையா கந்தையா எமக்குரைத்தார். இத்தெய்வத்துக்கு காவடி எடுத்தல் முதலான நேர்த்திகளும் செய்யப்படுகின்றன. நீர்ச்சோறு வழங்கும் முறை பொருளாதார மற்றும் காலநிலை சார்ந்ததாக அமைந்துள்ளது.
பெரும்படைக்கு மந்திரமோதி பூசை செய்யும் மரபும் சில கோயில்களில் உள்ளன. கோயிலாக்கண்டி கோயில் வரலாற்றில் தற்போது உள்ள கோயிலுக்கும், சமாதிக்கும் இடையில் இருந்த ஆலமரத்தினடியில் லிங்கத்தை ஒத்த கல்லிருந்தது. அதனை எடுத்து வழிபடுமாறு தெய்வம் உரைத்ததாகக் கூறப்படுகிறது. இது நடுகல்லாகவோ கந்துவாகவோ இருந்திருக்கலாம். நல்லதம்பி அவர்கள் அதனை எடுத்து ஆதரித்ததாகவும் அவரது கன்னிமார்த் தெய்வம் நாக்கில் கீறி மந்திரம் உபதேசித்ததாகவும் அதிலிருந்து மந்திர வழிபாடு நிகழ்ந்து வருவதாகவும் அவ்வாலயப் பூசகர் கனகரத்தினம் துரைநாதன் கூறினார். ஆயினும் அம்மந்திரத்தை எமக்குரைக்க மறுத்துவிட்டார்.
அற்புதங்கள்
வெட்டுக்காடு பெரும்படைத் தெய்வம் தொடர்பான பேய்க்கப்பல் அல்லது கொள்ளை நோய்க் கப்பல் விரட்டல் கதை அற்புதமாக பல ஆலயங்களிலும் சொல்லப்படுகிறது. அது தவிர ஆலங்கேணி சாமிப்புலத்தில் மட்டும் நிகழ்ந்த வழிபாட்டால் அந்த ஊர் மட்டும் கடல் புகாது தப்பியதால், தற்போது கட்டுக்கரையிலிருந்து குடமுருட்டி வரை பொங்கல் நடைபெற்ற பின்பு இறுதியாக பெரும்படைப் பொங்கல் ஆனியில் நடைபெற்று வருகின்றது.
வெட்டுக்காட்டில் யுத்தகாலத்தில் இராணுவம் இரவு நேரத்தில் சென்ற வெளிச்சத்தைச் சுட்டதாகவும் அடுத்த நாள் சுட்ட இராணுவ வீரர் திடீரென மரணமடைந்ததாகவும் அதன் பின் அந்த முகாம் வீரர்கள் இன்றுவரை ஆலயத்தில் வழிபடுதலும் நேர்த்தி வைத்தலும் செய்வதாக ஆலயப் பூசாரி தெரிவித்தார். அதேபோல நிசாப்புயல் காலத்தில் கறுக்காய்த்தீவு பெரும்படைக்கு வைத்த நேர்த்தியால் உப்பு நீர் ஊருக்குள் புகவில்லை என்றும் அயல் ஊர் அனைத்தும் உப்புநீர்க் காடாயிற்று என்றும் பூசாரி கூறினார்.
கடற் தொழிலாளர் வருவாய் பெரும்படையின் (சாமிப்புலம்) அருளினால் நிகழ்வதாகவும், வைத்த மடையில் குறை இருந்தால் ‘கஞ்சல் கசாளங்களே’ அகப்படும் என்றும், குறை நீக்க மீள மடை செய்யின் மீன்பிடி சிறக்கும் என்றும் ஆலயத் தலைவர் கூறினார். பொதுவில் “பெரும்படைத் தெய்வத்துக்கு மடை வைத்து அண்டாது” என்ற கருத்தும் சொல்லப்படுகின்றது.
சில அவதானிப்புகள்
• முக்குகர் குலத்தெய்வமாக கடல் நீரேரியை அண்மித்து கடலோரத்தில் உள்ள இத்தெய்வ வழிபாடு, இராமனின் நண்பனான குகன் வம்சத்தவரால் இராமனின் பிள்ளைகளான லவ (வெற்றிப்பெரும்படை), குச (வீரப்பெரும்படை) ஆகியோர் வழிபடப்படுவதாக அமைகிறது.
• கொள்ளை நோய் நீக்கம், பகைவிரட்டல் எனும் வீரச் செயல்களோடு தொழில் விருத்திக்குமான வழிபாடாக உள்ளது.
• பிட்டி, இடுகயிறு என்பன முக்குகரின் அடையாளங்கள் என ‘வலங்கை, இடங்கை சாதியர் வரலாறு’ எனும் நூலில் கூறப்படுகின்றது. பெரும்படைக் கோயில்களும் தெங்குறுப்பிட்டி, கச்சாய், மணற்பிட்டி, சாணம்பன் தீவு எனும் பிட்டி போன்ற இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
• நெய்தலும், மருதமும் இணைந்த வாழ்புலத்தின் வழிபாடாகவே இது அமைந்துள்ளது.
• குறிப்பாக கடல் கொண்ட வயல் நிலங்களை அண்மித்ததாக ‘தப்புத்தண்ணிக்’ கடலோரக் கோயில்களாக அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
• தமக்கேயான தனித்துவமான கதைகளையும் பரிவார அல்லது இணைத் தெய்வங்களையும் கொண்டவையாக இவ்வாலயங்கள் காணப்படுகின்றன.
• மரபு மணம் மாறாதவையாக பெரும்படைத் தெய்வ வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.
• பெரும்படைத் தெய்வம் உடனுறை பிள்ளையார் கோயிலாக சில கோயில்கள், (கச்சாய் மணற்பிட்டி சடவத்தி கோயில், ஆலங்கேணி சாமிப்புலக் கோயில்) மாறி வருகின்றன.
• இன்று பெரும்படை ‘பெரும்படையம்மன்’ என்றே வழிபடப்படுதல் பெரும்படையின் வரலாற்று உரையாடலின் தேய்வையும் மேனிலையாக்கத்தையும் காட்டுகின்றது.
• பல சாதிகளும் இணைந்ததான வழிபாட்டுமுறை சிதைந்து வருதலும் பௌதிகக் கட்டுமானமே முதன்மை பெறுதலும் இடம்பெற்று வருகின்றது.
முடிவுரை
ஐயனாரின் பரிகாரத்தின் தலைவன் என்று பெரும்படை பற்றிக் கூறப்படுகிறது. எல்லா இடங்களிலும் ‘வெற்றி’ மூலவிடத்திலும், ‘வீரம்’ வெளிப்புறத்திலும் தெய்வமாக்கப்பட்டுள்ளது. வெற்றியை வீரமே தக்க வைப்பதாக இதனைக் கொள்ளலாம். அரூபக் கடவுளாக, பால் வேற்றுமை அற்ற தெய்வமாகக் காணப்பட்ட பெரும்படை இன்று ‘அம்மன்’ ஆக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் மாறி வருகின்றன. சாதிய ஒற்றுமை குறைவடைந்துவிட்டது. ஆயினும் பழமையான பூசாரி வழி வழிபாடு அவ்வண்ணமே காணப்படுகிறது. ஆகமமயப்படாத சுய வழிபாட்டு முறை சிறப்பாக இடம்பெறுகின்றது. ஈழத்தில் மட்டக்களப்பிலேயே முக்குவர்கள் அதிகம் இருப்பினும் அங்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் நவாலி, தொல்புரம், காரைநகர் உள்ளிட்ட வேறு இடங்களிலோ இத்தெய்வ வழிபாடு இல்லை. கடல் நீரேரியைச் சுற்றியே காணப்படும் ‘நிலவியல்’ தெய்வம் இது எனலாம். பெரும்படைக் கோயில்களில் படையாகப் பல தெய்வங்கள் சூழ இருப்பதும் பெரும்படை எனும் சொல் பால், திணை வேறுபாடு இல்லாத ஒன்றாக இருப்பதும் இதனை ஒரு கூட்டு வழிபாடாகக் கொள்ள வைக்கிறது. பல் தெய்வங்கள் ஒருங்கே ஓரிடத்தில் வழிபடப்படுகின்ற – பல சாதி மக்கள் ஒருங்கே திரள்கின்ற இடமாக இது இருப்பது ஒரு ‘திரட்சி’ வழிபாடாக இதனைக் கருத இடமளிக்கின்றது. யாழ்ப்பாணச் சாதியத்தை முக்குவர் நோக்கு நிலையில், தம்மை மூலத்தில் வைத்து, ஏனைய சாதிகளையும் தெய்வங்களையும் ‘அடுக்குப்’ பண்ணுகின்றதான முறையில் இக்கோயில்களின் அமைப்புமுறை இருப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.