எல்லாக் கதைகளும் எழுதப்பட்டுவிட்டதெனின், எந்தக் கதையைப் புதிதாகச் சொல்வது என்பது எழுதுபவர்க்கு எப்போதும் குழப்பமாக இருக்கும் ஓர் விடயமாகும். பரவலாகத் தெரிந்த கதையை, அதிலும் சமகாலத்தில் நிகழ்ந்ததை யாரேனும் எழுதப் போகின்றார்களென்றால் அது இன்னும் கடினமாகிவிடும். ஆனால் தெரிந்த கதையாக இருந்தாலும், புதிதாய்ச் சொல்லமுடியும் என்று நம்பியதன் விளைவாகவே அனுக் அருட்பிரகாசத்தின் ‘வடக்கிற்கான பயணம்’ (A Passage North) நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது இதுவரை இலங்கையில் இருக்கும் எந்தத் தமிழ் எழுத்தாளருக்கும் வாய்க்காத ‘மான் புக்கர்’ பரிசின் குறும்பட்டியல் வரை (short list) அவரைக் கொண்டு சென்றிருக்கின்றது.
‘A Passage North’ நாவலின் கதை எளிமையாகச் சொல்லப்படக்கூடியது போன்று தோற்றமளித்தாலும், அது சிக்கலான உள்மடிப்புக்களைக் கொண்டது என்பதை நிதானமாக வாசிக்கும்போது நாம் கண்டடைய முடியும். கிளிநொச்சியில் நிகழ்ந்துவிட்ட மரணத்தைக் கேள்விப்பட்டு, கொழும்பில் வாழும் கதைசொல்லி ரயிலில் வடக்கிற்குப் போகின்ற பயணந்தான் இந்த நாவலின் மையக்கதை. பயணத்தைப் பற்றி எழுதினால், உடனேயே அது பயணக்கதையாக இருக்கவேண்டும் என்று ‘கற்பிதம் செய்யப்பட்ட’ ஒரு தமிழ் மனோநிலை பலருக்கு இருக்கும். ஹெமிங்வேயின் பெரும்பாலான நாவல்களில் ‘பயணம்’ என்ற விடயத்தை எடுத்துவிட்டால் அங்கே நாவலென்ற ஒன்றே மிச்சமிருக்காது. போருக்குள் இருந்த நாமெல்லோரும் போரைப் பற்றி எங்கும்/எப்போதும் காவிக்கொண்டு திரியவேண்டும் என்கின்ற ஓர் மனோநிலையும் பலருக்கு இருக்கிறது. ‘எனக்குத் தெரியாத ஒன்றையும் நான் எழுதுவதில்லை’ என சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஓரிடத்தில் சொல்லியிருப்பார். ஆனால் நம்மில் பலருக்கு அரசியலை, போரை விட வாழ்வில் வேறு எதுவும் கொண்டாட்டமாக இருந்துவிடக் கூடாதென்கின்ற குறுகிய பார்வையும் இருக்கிறது.
இந்நாவல், கொழும்பில் கதைசொல்லியின் வீட்டில் வேலை செய்வதற்கென கிளிநொச்சியில் இருந்து வந்த ராணி என்கின்ற பெண், அவரது சொந்த ஊர்க் கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டாரென்ற செய்தியோடு தொடங்குகின்றது. கதைசொல்லியான கிரிஷான் அந்த மரண நிகழ்வுக்குப் போகின்றபோது அவரது ஞாபகங்களில், இந்த ராணியின் நினைவுகளும், அவரின் அப்பம்மாவின் நினைவுகளும், இந்தியாவில் இருக்கும் (முன்னாள்) காதலியின் நினைவுகளும் மாறி மாறி வெட்டி இடைவெட்டிச் செல்வதாகக் கதை சொல்லப்படுகின்றது.
எவ்வித திடீர் திருப்பங்களோ, நெஞ்சைப் பிழியும் சோகச் சித்தரிப்புக்களோ இல்லாது அனுக், போரை போருக்கு வெளியில் நின்று எவ்வாறு அதைப் பார்க்க முடியும் என்பதை இங்கே எழுதிச் செல்கின்றார். நாவலுக்குள் உடனே அவ்வளவு எளிதில் நுழையவோ அல்லது விரைவாக வாசித்து முடிக்கவோ முடியாத ஓர் எழுத்து நடையை அனுக் விரும்பியே தேர்ந்தெடுத்திருக்கின்றார். அந்த நடையும், அதன் நிமித்தம் வரும் விபரிப்புக்களுமே எத்தனையோ நாவல்களில் இருந்து, இதை வித்தியாசப்படுத்தி புக்கர் விருதின் இறுதிச் சுற்றுவரை கொண்டு சென்றிருக்கின்றது.
இந்த நாவலில் எந்த உரையாடலும் இல்லை என்பது முதற் சிறப்பு. அதாவது கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பேசுவதைப் போன்ற எந்த சம்பாஷணையும் இல்லாது கிட்டத்தட்ட 300 பக்கங்கள் நீளத்திற்கு எழுதமுடியுமா என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதேபோன்று நீள நீளமான வசனங்கள். சிலவேளைகளில் ஒரு பக்கம் முழுதுமே முற்றுப் புள்ளியில்லாது வாக்கியங்கள் இருக்கும். இவ்வாறான நிறையப் பரீட்சார்த்த முயற்சி எடுக்கப்பட்டபோதும் அதைச் சோர்வில்லாது, புதிய வகையில் அனுக் எழுதிக்கொண்டே போயிருப்பதால்தான் நாவலோடு இயைந்து போகமுடிகின்றது.
அனுக், இந்த நாவலில் நிறையச் சம்பவங்களைச் சொல்லாது, குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மட்டும் எடுத்து, அதை இன்னும் இன்னும் உடைத்துப் பார்த்து நுணுக்கி நுணுக்கி எழுதுகின்றார். கதைசொல்லி தன் இந்தியக் காதலியுடன் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு போகும் ரயில் பயணத்தில், இருவரும் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருக்க, இருவருக்கும் நடுவே எந்தச் சம்பாசணைகளையும் உண்டாக்காமல், என்னென்ன எண்ணங்கள் அவர்களுக்குள் ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றியே மூன்று பக்கங்களுக்கு ஒருவித ‘உறைநிலை’யில் எழுகிறார் அனுக்.
வழமையான வாசக மனதென்றால், அதுவும் தமிழ் மனது என்றால் இதெல்லாம் ஒரு நாவலா என்று மூடிவைத்துவிட்டு ‘சுடச்சுட அதிரவைக்கும்’ நிகழ்ச்சியைக் கொண்டு வா என்று துடித்திருக்கும். இல்லாவிட்டால் அண்மையில் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாவலில் வருவது போல, இயக்கத்தில் இருக்கின்றாள் என்ற சந்தேகத்தில் ஒருத்தியை சிங்கள இராணுவம் பிடித்துக்கொண்டு போக, ஜேம்ஸ்பாண்டைப் போல ஒரு சிறுவன் அவர்களுக்கெதிரில் தோன்றி ‘சடசடவென்று’ துப்பாக்கியால் சுட்டுப்போட்டுவிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக்கொண்டு போவதாய், போர் குறித்து தெரியாத வாசகருக்கு பாவனை செய்யும் சாகசக் கதைகளுக்கு ஏங்கியிருக்கும்.
அனுக், தான் மட்டுமல்ல, இந்த நாவலில் வரும் கதைசொல்லியும் இறுதியில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்குள் இருந்ததேயில்லையென முற்கூட்டியே அறிவிப்பதுடன், அடிக்கடி அதை நாவலுக்குள் ஞாபகப்படுத்தவும் செய்கின்றார். நாம் அறியாத ஒரு கலாசாரத்தின், ஒரு நிலத்தின் – முக்கியமாக போர் நடந்த பகுதியின் மக்களில் ஒருவராக – தம்மை காட்டிக்கொள்வது முதல், தமது படைப்பில் எழுதிய ஒரு பாத்திரம் ‘உண்மையில் இருந்தது போல காட்சிப்படுத்துவதற்காக இப்போது உயிரோடு இருக்கும் யாரோ ஒருவரின் ‘புகைப்படத்தை’ சிலர் தம் நாவல்களின் பின்பக்கங்களில் பிரசுரிப்பது வரை அனைத்துமே வாசகர்களினால் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவையாகும். இந்த நாவலில் அப்படிச் செய்வதற்கு எல்லாச் சந்தர்ப்பங்களும் இருந்தபோதும் அனுக் அதைச் செய்யாது தவிர்த்திருப்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டியது.
ராணி என்கின்ற கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண்மணிக்கு ஒரு கடந்தகாலம் இருக்கின்றது. அவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். இயக்கத்தில் சேர்ந்த ஒரு மகன் இறுதி யுத்தத்தில் காணாமற் போகின்றார். இன்னொரு மகன் இறுதி யுத்தத்தின்போது இயக்க – இராணுவ எல்லையைக் கடக்கின்றபோது ஷெல்துண்டு பட்டு ராணியின் மடியிலேயே இறந்து போகின்றார்.
இவ்வாறான நிலைமைகளைப் பார்த்து மனம் பிறழ்ந்து வைத்தியசாலைக்கு அடிக்கடி சென்று சிகிச்சை எடுக்கின்ற ராணியை, கதைசொல்லியான கிரிஷான் தற்செயலாகச் சந்திக்கின்றார். இதற்கு முன்னர் போர் குறித்து எதுவுமே தெரியாது, கொழும்பில் கொஞ்சம் வசதியான வாழ்வு வாழ்ந்து மேற்படிப்புக்காக இந்தியா செல்லும் கிரிஷான், தன் காதலி இந்தியாவில் இருந்தபோதும் ஏன் மேற்கொண்டு அங்கேயே இருக்க விரும்பவில்லை என்பதை வாசகர் அறிய அனுக், கிரிஷானின் அகவுலகிற்குள் எம்மை அழைத்துச் செல்லும் இடங்களும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.
போருக்குப் பின் வடக்கு/கிழக்கில் அரசுசாரா நிறுவனமொன்றில் பணிசெய்வதற்குச் செல்லும் கிரிஷான் அதிலும் நம்பிக்கையிழந்து, கொழும்பு-வெள்ளவத்தை பகுதியில் தனது அம்மாவோடும், அப்பம்மாவோடும் தனக்கான ‘தனிமையில்’ வாழ்ந்துகொண்டிருந்த நாட்களில், அப்பம்மாவின் உதவிக்கென அழைத்து வரப்படுபவரே ராணி.
ராணியின் கதையைச் சொல்ல பூசலார் நாயனாரின் கதையும், காதலியின் பிரிவைச் சொல்ல காளிதாசரின் மேகதூதத்தையும், இயக்கத்தின் உளவியலைச் சொல்ல ‘எனது மகள் தீவிரவாதி’ என்கின்ற பெண் கரும்புலி பற்றிய ஆவணப்படத்தையும் அனுக் துணைக்கு எடுத்துக் கொள்கின்றார்.
அது மட்டுமல்லாமல், இலங்கையில் யுத்தம் தொடங்கிய வரலாற்றைச் சொல்ல, குட்டிமணியின் கதையை, ஜூலை 83 இனப்படுகொலையில் அவரது கண்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தை மிக நிதானமாகச் சொல்லிச் செல்கின்றார். மேலும் வடக்கிற்கான பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு படகுப்பயணத்தைச் செய்யாதீர்களென்று எச்சரிக்கை செய்யப்படும் விளம்பரத் தட்டிகளிலிருந்தும் கூட, ஏன் இப்படி மக்கள் உயிரைக் கொடுத்து கடலினூடு போகவிரும்புகின்றார்கள் என்பதையும் வேறொரு திசையில் நின்று விபரிக்கின்றார்.
போராளிகளின் நடுகல்கள் ஏன் வன்னி நிலப்பரப்புகளில் இருந்து புல்டோசர்கள் கொண்டு அழிக்கப்பட்டது என்ற கேள்வியிலிருந்து நினைவுகள், வடுக்கள், அழிவுகள், அவமானப்படுத்தல்கள் பற்றியும் பேசுகின்றார். இத்தனை பேசிய பிறகும் இந்த நாவலின் கதைசொல்லியான கிரிஷானின் தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என்கின்ற ஒரு கதையையும் சொல்கின்றார். அது எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஆனால் அவ்வாறு ஆகுதலும் இயல்பென எழுதிச் செல்வதுதான் இந்த நாவலை தனித்துக் காட்டுகிறது.
நாவலின் பிற்பகுதி மிக நிதானமாக ஒரு தமிழ் மரணச்சடங்கை விபரிக்கின்றது. நம் மரணச்சடங்கில் நிகழும் ஒவ்வொரு சிறுவிடயமும் சொல்லப்படும்போது, இதையெல்லாம் அறிந்த நமக்கு ஒரு அலுப்பு ஏற்பட்டாலும், அந்த நிகழ்வின் மூலம் நாவலை முடிக்கும்போது நாம் வேறொரு உலகினுள் நுழைகின்றோம். வேறு ஒருவரின் துயரம் நமதாகின்றது. கடந்தகாலத்தில் இருந்த நாம் யார் என்பது மட்டுமின்றி, நம் சமகாலத்து அலைச்சலின் இருப்புக் குறித்த கேள்விகளையும் இந்த நாவல் எழுப்புகின்றது. ஆகவேதான் தனிமனிதத் துயரம்/தேடல் நம் எல்லோர்க்கும் பொதுவான துயராக/தேடலாக விரிகின்றது.
‘எனது மகள் தீவிரவாதி’ ஆவணப்படத்தில் அந்தப்பெண்கள் இருந்து பேசும் குளத்தை தாண்டிச் செல்லும் கதைசொல்லி சிலவருடங்களுக்கு முன் இதேயிடத்தில் இருந்துதானே அந்த இரு பெண்களும் கதைத்திருப்பார்கள் என்கின்றபோது நாம் வேறு ‘காலவெளிக்குள்’ நுழைகின்றோம். அதுமட்டுமின்றி சாவை நிச்சயித்த அவர்கள், அந்த ஆவணப்படம் வந்த சில காலத்திற்குள் எப்படியேனும் இறந்திருப்பார்கள்; அவர்களுக்கு இந்த ‘வரலாற்றில்’ என்ன இடம் இருக்கப்போகின்றது என்பதும், எப்படி அவர்கள் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருந்தார்கள் என்பதும் விபரிக்கப்படுகிறது. ஓர் இராட்சத அலையென போர் வந்து அவர்களைச் சுற்றிச் சுழற்றியடித்து இழுத்துச் செல்லாதிருந்திருந்தால் அந்தப் பெண்களின் வாழ்வு இப்போது எப்படியாக இருந்திருக்குமென்று நம்மையும் கிரிஷானூடாக, அனுக் அலைக்கழிக்க வைக்கின்றார்.
ராணியின் மரணங்கூட, இயல்பாக நடந்திருக்குமா அல்லது அவர் போரின் வடுக்களால் தற்கொலையை நாடியிருப்பாரா என்ற கேள்வி, தொடக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தாலும், இறுதிவரை தெளிவாகச் சொல்லாது ஓர் இடைவெளியாகவே இந்நாவலில் விடப்பட்டிருக்கும். அதை ஒருவகையில் போரில் பாதிக்கப்பட்ட, வலிந்து காணாமற் செய்யப்பட்ட உறவினர் எல்லோரினதும் வேதனையாகவும், ஒரு முடிவு காண முடியாக் கேள்வியாகவும் நாம் பார்க்கமுடியும்.
ராணி போருக்குள் இருந்து வந்தவுடன் ஓர் உடலாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவருடைய நினைவுகள் எல்லாம் போரோடு மனதிற்குள் உறைந்துபோய்விட்டன என்பதைப் பற்றிப் பேச, தன் மனதிற்குள் பெருங்கோயில் கட்டி அங்கேயே கும்பாபிஷேகம் செய்ய சிவனை அழைத்த பூசலார் நாயனார் அனுக்கிற்கு உதவிக்கு வருகின்றார். இவ்வாறு சமகாலத்தை அவர் கடந்தகாலத்தின் கலாசாரம்/பண்பாடு/வரலாற்றுப் புள்ளிகளினூடாகவும் கண்டடைய முயல்கின்றார். அதுவே இந்த நாவலுக்கு இன்னும் செழுமை கொடுப்பதாக இருக்கின்றது. அதுபோலவே கிரிஷானின் காதலியாக வரும் அஞ்ஜம் வருகின்ற பகுதிகளுங்கூட. அதனூடாக அனுக் செய்வது தனிமனித உறவுகள் பற்றிய மிக நுட்பமான ஒரு அறுவைச் சிகிச்சையாகும்.
கொழும்பின் மரீன் டிரைவ் எனப்படும் கடலோரமாக நடந்தபடி, சிகரெட் பிடித்தபடி, விஸா பிள்ளையாருக்கெல்லாம் கதை சொல்லியபடி தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கும் ஒருவனை நீங்கள் எளிதில் உங்களுக்குரிய ஒருவராக அடையாளங் கண்டுகொள்ளத் தவறினால் இந்த நாவலுக்குள் நீங்கள் நுழைய மிகவும் சிரமப்படுவீர்கள். அந்த அலைச்சலை, தனி மனித இருத்தலின் அவதியை, வாழ்வின் அர்த்தம்/அர்த்தமின்மைகளின் கேள்விகளின் மீது ஒருசேர விருப்பும்/சலிப்பும் கொண்ட ஒரு வாசக மனதைக் தன்னகத்தே ஒருவர் கொள்ளாதிருப்பின் மிக எளிதாக, சோர்வூட்டக்கூடிய நாவலாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் இந்த நாவலுக்கு இருக்கின்றது. ஆனால் அதுவே என்னை ஈர்ப்பதால், அண்மையில் வெளிவந்த புனைவுகளில் இதை என் நெருக்கத்திற்குரிய ஒரு நாவலாக அடையாளப்படுத்த முடிகின்றது.
தொடரும்.