1950 களைத் தொடர்ந்துவந்த ஒன்றரை தசாப்த காலம் இலங்கைத் திருநாட்டை சிங்கள நாடாக மாற்றுவது தொடர்பான முயற்சிகளிலேயே கழிந்தது. அதனால் தமிழ்-முஸ்லிம் சிறுபான்மையினர்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்து வெளிக்காட்டி வந்தனர். இதனால் அவ்வப்போது ரத்தக்களரிகளும் போராட்டங்களும் சத்தியாக்கிரகங்களும் வெடித்த வண்ணமே இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இலங்கையின் முதலாவது பிரதமரான டி . எஸ் . சேனநாயக்கவால் ஆரம்பிக்கப்பட்ட இனவாதக் கொள்கைகளை அடுத்து வந்த அனைத்து பிரதமர்களும் உள்ளது உள்ளபடியாகவே முன்னெடுத்தனர். 1961 ஆம் ஆண்டு நாடு முற்றிலும் சிங்களமயமாக்கப்படுவதை எதிர்த்து பெடரல் கட்சி மீண்டும் ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தது. அவர்கள் அதற்கும் கொஞ்சம் அப்பால் போய் வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு என தனியான தனித்தமிழ் தபால் சேவை ஒன்றை 14 ஏப்ரல் 1961 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள். உடனடியாக அரசாங்கம் கொதித்தெழுந்து நாடெங்கிலும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது. இந்த முயற்சியில் ஈடுபட்ட சகலரையும் கைது செய்ய விசேட பொலிஸ் படை ஒன்று அனுப்பப்பட்டது.
பெடரல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடெங்கிலும் இன வன்முறைகள் தூண்டி விடப்பட்டன. ஆங்காங்கே தமிழர்கள் ரத்தம் சிந்தி இந்த மண்ணை புனிதப்படுத்தினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாவதற்கான சகல பின்புலங்களும் தோற்றுவிக்கப்பட்டன. பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தமிழீழ விடுதலைக்கனவுடன் வளர ஆரம்பித்து.
தார் பூசப்பட்ட ஒரு இருண்ட காலத்துக்கு ஊடாக இலங்கை வரலாறு ஒரு கருநாகம்போல் ஊர்ந்து சென்றது. 1964ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டபோது வியூகம் அமைத்து மும்முனைத்தாக்குதலுக்கு தயாரான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை எவ்வாறு முறியடிக்கலாம் என கபட எண்ணங்களுடன் பல்வேறு வழிமுறைகளை யோசித்துப் பார்த்த திருமதி பண்டாரநாயக்கா அம்மையார், ஐக்கிய தேசியக் கட்சியின் மும்முனைத் தாக்குதலுக்கு எதிராக நான்கு பக்கக் தாக்குதலுக்குத் தயாரானார். அதன் பிரகாரம் அவர் முதல் நடவடிக்கையாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்களுடன் இரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்களுக்குப் பதவியும் பட்டமும் பணமும் தருவதாகத் தன் அரசாங்கத்தை நோக்கிக் கவர்ந்து இழுத்தார். மற்றும் ஒரு கபட நடவடிக்கையாக தனது கட்சி சோசலிச கொள்கைகளின் நட்புறவுக் கட்சி என்று கூறிக்கொண்டு தேர்தலின் போது இலங்கை சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடும் தேர்தல்தொகுதிகளில் தமது கட்சி போட்டியைத் தவிர்த்துக் கொள்ளும் எனவும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் எனவும் ஒப்பந்தம் ஒன்றை 1964 ஜூன் மாதம் செய்து கொண்டார். அதுமட்டுமன்றி இலங்கை சமசமாஜக் கட்சியை சேர்ந்த கலாநிதி என்.எம் . பெரேரா அவர்களை நிதி அமைச்சராகவும், சோல்மொண்டலி குணவர்த்தனவை பொதுவேலைத் துறை அமைச்சராகவும், அனில் முனசிங்கவை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் நியமித்து இடதுசாரிக் கட்சிகளைத் தந்திரமாகப் பிளவுபடுத்தினார்.
இந்தத் தேர்தலின்போதும் வழக்கமாகக் கூறுவதைப் போலவே, தான் பிரதமராக வந்ததும் இந்திய வம்சாவளிப் பெருந்தோட்ட தமிழர்களின் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பேன் என்று போலி வாக்குறுதி அளித்து அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டார். இதற்கும் அப்பால் சற்றே கீழே இறங்கி வந்து பெடரல் கட்சியின் தலைவர் எஸ் . ஜே. வி . செல்வநாயகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் எஸ். டபிள்யூ . ஆர் . டி . பண்டாரநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன் என்று உறுதியளித்து வடக்கு – கிழக்கு தமிழரின் ஆதரவையும் பெற்று, வரலாற்றில் என்றுமில்லாதபடி கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைத்தார்.
இலங்கையின் அரசியல் வரலாறு இவ்விதம் ஒரு இருண்ட திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில் மலையக தமிழ் மக்களின் அரசியல் தொழிற்சங்க அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. 1955 ஆம் ஆண்டு வரை இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் இருந்த, தொண்டமானைத் தலைமையாகக் கொண்டிருந்த இலங்கை இந்திய காங்கிரஸ் காலத்தின் தேவை கருதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் பெயரையும் இந்தியக் கொடியையும் இந்தியத் தேசிய கீதத்தையும் தம் தோள் மீதும் நெஞ்சிலும் சுமந்து கொண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கை என்ற இந்த நாட்டுக்குள் ஏன் வாழ வேண்டும், அவர்களை இந்தியாவுக்கே அனுப்பி விட்டால் என்ன? என்ற வன்மையான தொனியில் செயற்பட்டு வந்த, சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை அரசாங்கங்கள் ஓரளவுக்கு தமது நோக்கத்தினைப் பூர்த்தி செய்திருந்தன. எனவே இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இந்திய வம்சாவளி என்ற அடைமொழியை தமக்கு முன் போட்டுக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி அவர்களுக்கு முன் பூதாகரமாக எழுந்து நின்றது. இத்தனை காலமும் அதனை அவர்கள் ஒரு சிலுவையாகத்தான் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புலப்படாமலேயே இருந்தது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அதற்குள் தலைமைத்துவப் போட்டியும் பல்வேறு குழு அரசியலும் இருந்துகொண்டுதான் இருந்தது . ஏ. அசீஸ் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற பல முயற்சிகளைச் செய்தார். 1954-ஆம் ஆண்டு ஹட்டனில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் தலைமைத்துவத்துக்கான தேர்தல் நடந்த போது ஏ.அசீஸ் வெற்றிபெற்றுத் தலைவரானார். தொண்டமானால் இந்தத் தோல்வியைச் சகித்துக்கொள்ளவோ ஜீரணித்துக்கொள்ளவோ முடியவில்லை. உட்கட்சி அரசியல் முற்றியதன் உச்சகட்டத்தில் 1955 ஆம் ஆண்டு அசீஸ் சங்கத்தில் இருந்து வெளியேறி ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை நிறுவினார். அதன் பின்னரும் கட்சியின் உட்பூசல் முற்றுப்பெறாத நிலையில் கட்சியின் உப தலைவர்களாக இருந்த கே. வெள்ளையன், சி. வி .வேலுப்பிள்ளை ஆகியோரும் விலகிச் சென்றனர். எனினும் இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸின் செல்வாக்கு குறைந்து போய்விடவில்லை. இக்காலத்தில் இச்சங்கத்தில் மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் இருந்துள்ளனர் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு பின்னணியில் தான் இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பான நாடற்றவர் நிலையையும் பிரஜா உரிமை தொடர்பான விடயத்தையும் தீர்மானிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பமானது. ஏற்கனவே 1954 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நேரு – கொத்தலாவல ஒப்பந்தம் தோல்வி அடைந்திருந்த நிலையில் அதன் விஸ்தரிப்பாகவே இந்தப் பேச்சுவார்த்தை அமைந்தது. ஏற்கனவே இந்த மக்கள் கூட்டத்தினர் வாழ்க்கையின் எல்லா மூலைமுடுக்குகளிலும் முட்டிமோதித் தம் வாழ்க்கை எந்த இலக்குகளை நோக்கி நகர்கின்றது என்பதனைப் புரிந்துகொள்ள முடியாமல் மிகுந்த சோகப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அர்த்தமுள்ள வாழ்க்கை ஒன்று இல்லாமல் போன நிலையில் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தனர். தாய் தந்தையர் தமது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று ஒவ்வொரு நாளும் புலம்பிக் கண்ணீர் வடித்தனர். தாம் பெற்ற பிள்ளைகளை மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு அனுப்பக்கூட அவர்களால் முடியாமல் இருந்தது. பிள்ளைகள் தாங்கள் பாடசாலைக்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தால் ” நீ படிச்சு அரச உத்தியோத்துக்கா போகப்போற ” என்று ஓங்கி கன்னத்தில் அறைந்த சம்பவங்களும் மலையக மக்கள் வரலாற்றில் ஆங்காங்கே பதியப்பட்டுத்தான் உள்ளன.
பிரஜா உரிமை என்ற அடிப்படை மனித உரிமை, ஒரு மனிதனுக்கு ஒரு நாட்டில் இல்லாமல் போனால் அவன் நிலைமை உடலிலிருந்து உயிரை பிரித்து எடுத்துவிட்ட நிலைமை போன்றதுதான். அவனால் ஏனைய பிரஜைகள் போல் தம் வாழ்வை சகஜமாக நடத்திக் கொண்டு போக முடியாது. அவனது கால்கள் கூட இந்த மண்ணில் படக்கூடாது என்று தடைவிதித்து விட்ட ஒரு கையறு நிலை. அவர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டு விட்டன. கல்வி கற்கும் உரிமை, அரசாங்க உத்தியோகம் பெறும் உரிமை, சொந்தமாகக் காணித் துண்டு ஒன்றை வாங்கும் உரிமை, தமக்கென வீடு ஒன்றை கட்டிக் கொள்ளும் உரிமை, வெளிநாட்டுக்குச் செல்லக் கடவுச் சீட்டு ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் உரிமை, அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை, தமக்குக் குழந்தை பிறந்துள்ளது என்பதனைப் பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் உரிமை, ஒரு கிராம சேவகரின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை, அரசாங்க அதிபரின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை, உள்ளூராட்சி நிர்வாக அமைப்புக்களின் சேவைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை, பிரதேச செயலகங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை என இப்படி மறுக்கப்பட்ட உரிமைகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும். இப்போதும்கூட, பிரஜாவுரிமை வழங்கப்பட்ட பின்னரும்கூட, இந்த உரிமைகளில் சில மறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணமாக நாம் இப்போதும் இந்த நாட்டில் ஒரு மூன்றாம் தரப் பிரஜைதான் என்ற உணர்வுடன் தான்வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலனித்துவக் காலத்தின் அடிமைச் சின்னமான “லயக் ” காமிராக்களில் நமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை நாம் அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு விட்டோம் என்று கூற முடியாது.
நான் எழுதும் இந்தக் காலத்தின் வரலாறு ஒரு கண்ணீரின் வரலாறாகவும் இருந்துள்ளது என்பதனை மீண்டும் ஒருமுறை கூறி வைக்கிறேன்.
தொடரும்.