’பசித்த பேய்கள்’ நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வயதில் இலங்கையில் உயர்தரப் பரீட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 1984 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாய்க்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், ‘83’ கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் காப்பாற்றுகின்றது. இக்கலவரம் நிகழ்வதற்கு முன், சிவன் அவரது தமிழ்த் தந்தையை இழந்துவிடுகின்றார். சிவனின் தாயார், சிவனோடும், அவரது சகோதரி ரேணுவோடும், சிவனின் அம்மம்மாவின் வீட்டுக்கு வந்து வாழத் தொடங்குகின்றார். சிவனின் அம்மம்மா தயா, ஒரு வித்தியாசமான பெண்மணி. அவர் கொழும்பிலும், அதைச் சூழவிருக்கும் பகுதிகளிலும் வீடுகளை வாங்கி வாங்கிச் சொத்துகளைக் குவிக்கின்றார். வாங்கிய வீடுகளில் வாடகைக்கு அமர்த்தப்படும் வீட்டுக்காரர்கள் உரிய நேரத்துக்கு வாடகை கொடுக்காவிடின், தயா குண்டர்களை வைத்து வாடகையை அறவிடுகின்றார். சிவனின் தாயாருக்கும், அம்மம்மாவிற்குமான உறவு நன்றாக இருப்பதில்லை. சிவனின் தாயார், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் ஆணைத் திருமணம் செய்ததை அம்மம்மாவினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
தமிழ் என்ற அடையாளம் இருந்தாலே போதும், சிங்களவர்கள் அவர்களை எப்போதும், எங்கேயும் தாக்கிவிடுவார்கள் என்று நினைக்கும் அம்மம்மா, தனது மகளின் வாழ்வு ஒரு தமிழரை மணம் புரிவதால் விபரீதமாகிப் போய்விடும் என்று அச்சப்படுகின்றார். கடந்தகாலத்தில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் பலவற்றை அறிந்திருந்தும், அதை மீறியே சிவனின் தாய், சிவனின் தகப்பனைத் திருமணம் செய்கிறார். இவ்வாறான காரணங்களால் அம்மம்மாவிற்கு சிவனின் தாயை மட்டுமல்ல, சிவனின் சகோதரியான ரேணுவையும் பிடிப்பதில்லை. அவருக்குச் சிவனை மட்டுமே பிடிக்கின்றது. அவர் தான் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் வீடுகளை சிவனுக்குக் காட்டுவது மட்டுமல்லாது, எப்படி வாடகை வசூலிப்பது என்பதையும் சொல்லிக் கொடுக்கின்றார்.
இவ்வாறு ஒரு திசையில் போய்க்கொண்டிருக்கும் சிவனின் வாழ்வை 1983 இனக்கலவரம் கனடாவுக்குப் புலம்பெயரச் செய்கின்றது. சிவனின் அம்மம்மாவிற்கு, சிவனின் குடும்பம் கனடாவுக்குப் புலம்பெயர்வது பிடிக்கவில்லை. அவர் மனமிசைந்து அவர்களை அனுப்பாது, இவர்கள் விமானம் ஏறும் நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே போய்விடுகின்றார். தயா, அந்தளவுக்கு ஒரு முரண்டுபிடித்த பெண்மணி.
தனது அம்மம்மா இவ்வாறு இருப்பதைப் பார்க்கும்போது, ஒரு நிர்வாண யட்சிக்கதை (பெரேத்தி) சிவனுக்கு ஞாபகம் வருகின்றது. ஒரு ஏழைப் பெண், மூன்று குடிக்காரர்கள் போதையில் இருக்கும்போது அவர்களின் ஆடைகளையும், பணத்தையும் திருடி விடுகின்றார். பின்னர் ஒரு புத்தபிக்கு ஊருக்கு வரும்போது, அந்தப் பிக்குவிற்கு உணவளிக்கின்றார். பிக்கு சாப்பிடும்போது, அவருக்கு வெயில்படாது நிழலை வழங்குகின்றார். இந்த நற்காரியங்களால், அந்த ஏழைப் பெண் மறுபிறப்பில் ஒரு தீவில், தங்க மாளிகையில் பிறக்கின்றார். ஆனால் அவர் கடந்த பிறப்பில் ஆடைகளையும், பணத்தையும் திருடியதால், அவர் நிர்வாணமாகவும், பட்டினி கிடப்பவராகவும் பிறந்துவிடுகின்றார். அவரின் மாளிகையில் நிறைய ஆடைகள் இருந்தாலும், அவர் எதை அணிந்தாலும் அது அவரின் உடலை எரித்துவிடுகின்றது. அவ்வாறே அறுசுவை உணவிருந்தாலும், எதைச் சாப்பிட்டாலும் அவரின் உடலில் அது தங்கிவிடாது போய்விடுகின்றது. அவர் முற்பிறப்பில் களவெடுத்த காரணத்தால், எதையும் அனுபவிக்காது பட்டினி கிடக்கும் ஒரு நிர்வாணப் பெண்ணாக அந்தத் தீவில் திரிகின்றார். பின்னர் ஒருநாளில் தற்செயலாகக் கரையொதுங்கும் கப்பலில் வந்த புத்தரின் சீடரால், அவர் இந்தப் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றார் எனக் கதை நீளும்.
சிவன், எதையும் அனுபவிக்க முடியாது பிறந்த நிர்வாண யட்சியைப் போன்றவர்தான் தனது அம்மம்மா என நினைக்கின்றார். எல்லாம் இருந்தும், அதை அனுபவிக்க முடியாது, அவரை நேசிக்கும் குடும்பத்தவரைக் கூட புரிந்துகொள்ளாது ‘ஒரு தனித்த தீவில்’ பொருளும் பணமும் சேர்ப்பதில் அவதியுறும் ஒரு யட்சிதான் தனது அம்மம்மா என்று நினைத்தபடி, சிவன் அவரது இரண்டாவது புதிய வாழ்வை கனடாவின் ரொறொண்டோ நகரில் தொடங்குகின்றார்.
2
சிவனின் புலம்பெயர் வாழ்வில் அவரின் தற்பால் விழிப்பும், தன் உடலைப் பரிசோதனைக் களமாக்கி நடத்தும் பாலியல் உறவுகளும் விபரிக்கப்படுகின்றன. அத்தோடு ஒரு வகையில் தனது தாயிடமிருந்து விலகிப் போகின்றவராகவும் சிவன் ஆகிப்போகின்றார். சிவனின் தன்பால் ஈர்ப்பை அவரது சகோதரியான ரேணு மட்டுமே ஓரளவு விளங்கிக் கொள்கின்றார். சிவன் தனது, தன்பால் ஈர்ப்பைச் சொல்லும்போது, வழமையான இலங்கைத் தாய்மார்களைப் போல சிவனின் தாயால் அதை ஏற்றுக் கொள்ளமுடியாதிருக்கின்றது. ஏன் இப்படி என் பிள்ளைகள் எனக்குத் துயரங்களையே தந்துகொண்டிருக்கின்றனர் என்று அவர் புலம்புகின்றார். ஒரு கட்டத்தில், நீயொரு தன்பால் ஈர்ப்பாளனாக இருப்பாய் என்று தெரிந்திருந்தால் நான் உன்னைப் பெற்றிருக்கவே மாட்டேன் என்று தாய் சொல்ல, சிவனோ ‘நீங்கள் இப்படிச் சொல்வதைவிட, நித்திரைக் குளிசைகளை விழுங்கிச் செத்துப் போய்விடுங்கள்’ எனத் திட்டிவிடுகின்றார். அத்தோடு தாய் – மகன் உறவு முறிந்துவிடுகின்றது. அது மீள, நெடுங்காலம் எடுக்கின்றது.
கனடாவுக்கு வரமுன்னரே தானொரு ‘தன்பால் ஈர்ப்பாளர்’ என்பதை உணர்கின்ற சிவனுக்கு, கனடாச் சூழல் ஓரளவு சுதந்திரமான உணர்வைத் தருகின்றது. ஆனால் இங்கேயும் அவர் தன்பால் ஈர்ப்பாளராக இருப்பதால் ஒடுக்கப்படுகின்றார். யோர்க் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிவன், நான்கு வருடங்களில், அவரது அம்மம்மாவைப் பார்க்க இலங்கைக்குத் திரும்புகின்றார்.
அப்போது ஜே.வி.பி இன் இரண்டாம் ‘புரட்சி’க்கான ஆயுதப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்றது. தமிழரின் பூர்வீக நிலமான வடக்கு – கிழக்கில் இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடக்கின்றது. நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவுகின்றது. இலங்கை திரும்பும் சிவன், தனது பதின்மக் காதலரான மிலி ஜெயசிங்கேயுடன் தனது காதலை மீளக் கண்டடைந்துகொள்கின்றார். காதல், காமம் என குதூகலமாக இருக்கும் இந்த இணையின் உறவு ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவத்துடன் முடிவுக்கு வருகின்றது. அதன்பிறகு, அதுவரைக்கும் பாசத்துடன் இருந்த அம்மம்மாவை, சிவனால் மன்னிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது. மீண்டும், கதை கனடாவிற்குப் புலம்பெயர்கின்றது; அக் கதை, ரொறொண்டோ, கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவர், அங்கே புதிய காதலைக் கண்டடைதல், அதனால் ஏற்படும் காதல் – பிரிவு, குடும்ப இரகசியங்கள் என, பல கிளைகளாகச் செல்கின்றது.
ஒருவகையில் ஷியாம், தனது சொந்தக் கதைகளைத்தான் பல்வேறு பின்னணிகள், கதைமாந்தர்களினூடாகச் சொல்கின்றாரோ என அவரது மூன்று புதினங்களையும் வாசிக்கும்போது தோன்றுகின்றது. ஒரு குட்டித் தீவில், கிழக்கும் மேற்குமாகப் போனால் 250 கிலோமீற்றர்களும், வடக்கும் தெற்குமாகப் போனால் 450 கிலோமீற்றர்களுமே தூரம் இருக்கும் ஒரு நாட்டிலிருந்து வந்த நமக்கு, சொல்ல எத்தனையெத்தனை கதைகள் இருக்கின்றன. இந்தக் குட்டித்தீவில் என்ன வளந்தான் இல்லையென, இலங்கையில் ஒரு பயணியாகப் பயணிக்கும்போது வியப்பு வருவதைப் போலவே, இதே நாட்டில்தான் இந்தளவு இரத்த ஆறும் ஓடியிருக்கின்றதா என்கின்ற திகைப்பும் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

ஷியாமின் ‘Funny Boy’, ‘Cinnamon Gardens’ ஆகிய நாவல்கள் வெளிவந்த 15 வருடங்களுக்குப் பின் ‘Hungry Ghosts’ நாவல் வெளிவந்ததால், அதற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தான் ஒரு எழுத்தாளன்தான் என்கின்ற நம்பிக்கையை இந்த நாவலே முதன்முதலாகத் தனக்குத் தந்ததென்று ஷியாம் ஒரு நேர்காணலில் கூறியுமிருந்தார். அவரின், கவனம் பெற்ற முதலாவது நாவலான ‘Funny Boy’ வெளிவந்து 20 வருடங்களுக்குப் பின்னேரே, தானொரு எழுத்தாளன் என்று ‘Hungry Ghosts’ நாவலில் ஷியாம் நம்பிக்கை கொள்கின்றார்.

ஷியாமின் இந்த மூன்று நாவல்களின் பின்னணியும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பவை. அவரது நாவலின் முக்கிய பாத்திரம் இலங்கையில் தமிழ் – சிங்களப் பெற்றோருக்குப் பிறந்த ஓர் ஆணாகவும், தன்பால் ஈர்ப்பாளராகவும் இருப்பார். இலங்கையில் தமிழர் என்ற அடையாளத்துடன் இருப்பது ஒரு விளிம்புநிலை என்றால், அந்தத் தமிழ் அடையாளத்தில் தன்பால் ஈர்ப்பாளராக இருப்பது மேலும் விளிம்பு நிலையானது. எனவே ஷியாமின் பாத்திரங்கள் சிலந்திவலைப் பின்னலாகவும், எளிதில் புரிந்துகொள்ள முடியாத அடையாளச் சிக்கல்களைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
‘பசித்த பேய்கள்’ நாவலின் ஒவ்வொரு பாத்திரமும், தெரிந்தோ தெரியாமலோ இழைக்கும் குற்றங்களுக்கு, அடுத்த பிறப்பிலாவது நல்வினை கிடைக்காதா என ஏங்குகின்றன. ஆனால் அந்த ஏக்கங்களும், அதற்காகச் செய்ய முயலும் பிராயச்சித்தங்களும் இன்னுமின்னும் குற்றங்களைப் பெருக்குவதை, ஒவ்வொரு பாத்திரமும் செய்வதறியாது திகைத்துப் பார்த்தபடியிருக்கின்றன. சிவன் – அவர் சிறுவனாக இருந்ததிலிருந்து – பிறரின் நலன்களுக்காகத் தன்னைப் பலிபீடத்தில் வைக்கும் ஒருவராக நினைத்துக்கொள்ளவும் செய்கின்றார்.

ஜே.வி.பி இன் காலம், புலிகள், சந்திரிக்கா அரசு, யோர்க் பல்கலைக்கழகம், ஸ்காபரோ, மெட்ரோ, ரொறொண்டோ என நாம் பரிச்சயம் கொண்ட / கொள்கின்ற பின்னணிச் சூழல், கதையை வாசிக்கும் நம்மை நெருக்கமாய் உணர வைக்கின்றது. ஆனால் தெரிந்த பின்னணியில் தெரியாத கதையை ஷியாம் எழுதியிருப்பாரோ எனத் தேடும்போது, ஏமாற்றம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம், தன்பால் ஈர்ப்பாளர்களது உறவுகள் – முக்கியமாய் புலம்பெயர்ந்த தன்பால் ஈர்ப்பாளர்கள் – எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விரிவாகவும், அங்கே இருக்கக்கூடிய காதல், பொறாமை, கோபம் பற்றி நுட்பமாகவும் பேசும் பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.
ஷியாம் உறவுகளில் இருக்கும் சிறுசிறு விடயங்களைக் கூட நுண்ணியதாய் அவதானித்து முன் வைப்பதை இரசிக்க முடிகின்றது. ஆனால் கதையில் – முக்கியமாய் இலங்கை, புலம்பெயர் வாழ்வு என வாழும் சிவனின் பாத்திரம் – கொஞ்சமேனும் நகைச்சுவை உணர்வில்லாது, மிகத் தீவிரமாக இருப்பதாகவே வார்க்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே, மகிழ்ச்சியான சம்பவங்களின் தெறிப்புகள் இந்நாவலில் இருந்தாலும், நாவல் முழுவதும் துயரங்களால் மூடப்பட்டிருப்பதாக ஏற்படும் உணர்வையும் தவிர்க்க முடியவில்லை.
புலம்பெயர் சூழலில், இன்று ஆங்கிலத்தில் எழுதும் நமது புதிய தலைமுறைக்கு, 30 வருடங்களுக்கு முன்னரே ஒரு பாதையை உருவாக்கித் தந்தவர்களில் முக்கியமானவராக ஷியாமைச் சொல்லலாம். புலம்பெயர்ந்த தமிழர் என்ற வகையில் மட்டுமல்லாது, தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் அவர் புதிய திசைகளை அறிமுகப்படுத்தினார். மேற்கத்தேயச் சூழலில் விளிம்பு நிலையினராக இருந்த (வெள்ளையின) தன்பால் ஈர்ப்பாளர் சமூகத்தில், ஆசிய நாட்டவர் / மண்ணிறத்தவர் மேலும் விளிம்பு நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்கின்ற குரல், ஷியாம் போன்றவர்களின் படைப்புகளிலேயே தீவிரமாக, முதன்முதலாக முன்வைக்கப்பட்டும் இருந்தன.

இன்றைக்கு ஷியாமுக்கு பின்னர் எழுத வந்த அனுக்கோ, வாசுகியோ, சங்கரியோ, நயோமியோ யாராக இருப்பினும், அவர்களிடம் ஷியாமின் எழுத்துகளின் பாதிப்புகள் எங்கோ ஓரத்தில் இருப்பதை நாங்கள் எளிதாகக் கண்டுகொள்ள முடியும். அந்தவகையில் ஷியாம் ஒரு முன்னோடிதான். இலங்கைச் சூழலையும் புலம்பெயர் சூழலையும் எழுத வருகின்ற, ஆங்கிலத்தில் எழுதும் புதிய தலைமுறைக்கு, ஷியாமின் எழுத்துகளைத் தாண்டிப் போவதுதான் முக்கியமான சவாலாக இருக்கும். அதேசமயம், ஷியாம் தனது ‘comfort zone’ (வசதியாக உணரும் சூழல்) இனைத் தாண்டி எழுதுவதுதான் அவரது அடுத்த கட்டப் பாய்ச்சலைச் சாத்தியமாக்கும். இல்லாவிட்டால், ஒன்றையே திரும்பத் திரும்ப எழுதுகின்றார் என்கின்ற விமர்சனக் குரல்களைக் கேட்கவேண்டிய நிலை அவருக்கு ஏற்படக்கூடும்.
தொடரும்.