Arts
21 நிமிட வாசிப்பு

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பகுதி 2

June 26, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா

ஆய்வு வினாவும் ஆய்வுப் புதிரும்

“கண்டியின் சிங்களச் சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகப்படுத்தலுக்கும் (Caste and Democratisation) இடையிலான உறவை ஆராய்வதே இக்கட்டுரையில் நான் ஆராயவிருக்கும் பிரதான ஆய்வுப் பிரச்சினையாகும் (The Key Research Question – பக். 450)”

மேற்கூறியவாறு தாம் ஆராயவிருக்கும் ஆய்வுப் பிரச்சினை யாது என்பதைப் பேராசிரியர் தனது ஆய்வுக் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார். இவ்வாறு தமது பிரதான ஆய்வுப் பிரச்சினையை முன்வைத்து கண்டியின் சமூக அமைப்பை ஆராய்ந்த போது, தாம் எதிர்கொண்ட முரண்பாடான நிலையை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவர் எதிர்கொண்ட முரண்பாடான நிலையை ஒரு ஆய்வுப் புதிர் (A Research Puzzle) எனலாம். “நான் கண்டியச் சமூகத்தை ஆராயும் போது ஜனநாயகப்படுத்தல் செயல்முறை (Democratisation Process) கண்டியின் இறுக்கமான நிலமானிய அமைப்பின், சாதிக் கட்டமைப்பின் பல கூறுகளை அழித்து மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டேன். ஆயினும் ஜனநாயகப்படுத்தல் செயல்முறை சாதியை முழுமையாக ஒழித்து அதனைப் பலவீனப்படுத்தாமல் அதன் பல கூறுகளை அழிவுறாமல் பாதுகாப்பதையும் காண்கிறேன். இவ்வாறு சாதி முறையின் சில அம்சங்களை அழியவிடாமல், ஜனநாயகப்படுத்தல் செயல்முறை பாதுகாப்பதை, கண்டியச் சமூகத்தில் ஜனநாயகத்தைச் சிங்களப் பண்பாட்டுடன் கலப்புறச் செய்தல் எனக் குறிப்பிடலாம்.”

சிங்களப் பண்பாட்டுடன் ஜனநாயகத்தைக் கலப்புறச் செய்தலைக் குறிப்பிடுவதற்கு ரியுடர் சில்வா அவர்கள் ஆங்கிலத்தில் ‘Vernacularisation of Democracy’ என்ற சொற்தொடரை உபயோகிக்கிறார். அதாவது ஜனநாயகத்தை ஜனநாயகத்திற்கு நேர் எதிரான சாதிமுறையின் சில கூறுகளுடன் கலப்புச் செய்வதை அவர் மேற்படி சொற்தொடரால் குறிப்பிடுகிறார்.

சில ஆய்வாளர்கள் தென்னாசியாவின் சாதிமுறையை வரலாற்று நோக்கில் ஆராய்வதைத் தவிர்த்து, அதனை ஆதி முதலான, மாறாத ஒரு அமைப்பாகக் கருதத் தலைப்பட்டனர். இவ்வாறு சாதி முறையை, மாறாத அமைப்பாக விளக்கம் செய்வதை ‘Ahistorical Structuralist or Primordial Interpretation’ என்று ரியுடர் சில்வா குறிப்பிடுகிறார். பிரஞ்சு நாட்டு ஆய்வாளரான துய்மோன் (Dumont)  தென்னாசியச் சாதி முறையை, மாறாத ஒன்றாக (Immutable Entity) விளக்கியிருக்கிறார். இவ்வாறே குறோபர் (Krober) என்னும் மானிடவியலாளரின் கருத்துகளும் அமைந்தன. இதற்கு மாறாக, கண்டிய சமூகத்தில் சாதிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான பரஸ்பர இயங்கியல் உறவை (Dialectical Interplay) தாம் எடுத்துக்காட்ட விரும்புவதாக அவர் குறிப்பிடுகிறார்.

தென்னாசியாவில் ஜனநாயக அரசியல் சாதியுடன் கலப்புற்று, சாதியால் மாற்றம் பெறுகிறது. ஜனநாயக நிறுவனங்களைச் சாதிமயப்படுத்தல் இடம்பெறுகிறது. இப்புதிரான, முரண்பட்ட போக்கைச் சமூகவியலாளர்கள் ‘உள்ளூர்ப் பண்பாடு, வழமைகள், நடைமுறைகளுக்கு ஏற்ப ஜனநாயகத்தை மாற்றுதல்’ (Indigenisation of Democracy) எனக் கூறுவர். ஜனநாயகத்தை இவ்வாறு திரிவுபடுத்துவதற்குப் பல உதாரணங்களை நாம் காட்டலாம். ரியுடர் சில்வாவின் ஆய்வு, கண்டியச் சிங்களச் சமூகத்தில் ஜனநாயகத்தினைச் சாதியுடன் கலப்புறச் செய்து திரிவுபடுத்துவதை உதாரணங்களுடன் சித்திரிக்கிறது.

மைக்கலுட்டி (Michelutti) என்னும் ஆய்வாளர் தென்னாசியச் சூழலில் சாதியினை ஜனநாயகத்துடன் கலக்கும் ‘Vernacularisation of Democracy’ என்னும் செயல்முறையை விளக்கியிருப்பதை ரியுடர் சில்வா அவர்கள் மேற்கோள் காட்டுகிறார். 

“ஜனநாயகத்திற்கென குறிப்பிட்ட சில விழுமியங்கள் (Values) உள்ளன. இவ் விழுமியங்களும் நடைமுறைகளும் (இந்தியாவின்) ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் மொழி, சமயப் பண்பாட்டுக்குரிய விழுமியங்கள், நடைமுறைகள் என்பனவற்றுடன் கலப்புறுகின்றன. இவ்வாறு கலப்புறும் செயல்முறை ஊடாக ‘ஜனநாயகம்’ இந்தியச் சமூகத்தில் வேர்களைப் (Social Roots) பதிக்கின்றது. அது சமூகத்தில் புதிய சமூக உறவுகளையும் மதிப்பீடுகளையும் உருவாக்குகிறது. அப்புதிய உறவுகளும் மதிப்பீடுகளும் வெகுஜன அரசியலின் (Popular Politics) உந்து விசையாக மாறுகின்றன.”

மேற்குறித்த மேற்கோள் ‘Michelutti’ எழுதிய ‘VERNACULARIZATION OF DEMOCRACY AND POPULAR POLITICS IN NORTH INDIA’ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டதாகும். இக்கட்டுரை ‘Journal of Royal Anthropological Institute’ என்ற பருவ இதழின் 13 ஆவது இதழில் பக்கம் 639-659 இல் காணப்படுவது என்றும் ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 

‘Michelutti’ இன் மேற்கோள் உள்ளூர்ப் பண்பாட்டு வழமைகள், நடைமுறைகளுக்கு ஏற்ப ஜனநாயகம் மாற்றமுறுவதை விளக்குகிறது. இதுவே அவர் குறிப்பிடும் ‘வெர்னாகுலறைசேசன்’ என்ற எண்ணக்கருவின் உட்பொருளாகும். இதனை அறிமுகம் செய்யும் ரியுடர் சில்வா அவர்கள் ரியுடர் குணசிங்க, S.T ஹெட்டிகே ஆகிய இலங்கையின் சமூகவியலாளர்கள், தமது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் சிங்களச் சமூகத்தில் சாதி என்னும் பண்பாட்டு அம்சத்தின் சாதிய மதிப்பீடுகளும் – வழமைகளும் – நடைமுறைகளும் ஜனநாயக அரசியல் விழுமியங்களுடனும், நடைமுறைகளுடனும் கலப்புற்றுள்ளன என்பதை எடுத்துக் காட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார்.

ரியுடர் சில்வா அவர்களின் கட்டுரையில் நான்கு பக்கங்களில் (பக்கம் 451-454) கண்டியப் பிராந்தியத்தின் பின்னணியில் சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் இடையிலான உறவுகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கே விளக்கமாக எடுத்துரைப்பது இயலாது. மிகச் சுருக்கமாக அக்கருத்துக்களைக் கூறுவோம்.

  1. சாதிக்கும், ஜனநாயக அரசியலுக்கும் இடையிலான உறவு இருவழித் தொடர்பும் செயல்முறையும் ஆகும். அது ஒருவழிப் பாதையன்று (Not a One – Way Process). ஜனநாயக அரசியல், சாதிமுறையில் விரும்பத்தக்க நன்மையான மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. ஆனால் அது கண்டிய நிலமானிய முறையின் விரும்பத்தகாத கேடு விளைவிக்கும் சாதிய, நிலமானிய நடைமுறைகளையும் ஜனநாயக அரசியலில் புகுத்தியுள்ளது.
  2. 1931 ஆம் ஆண்டில், டொனமூர் அரசியல் யாப்பு சர்வசன வாக்குரிமையைப் புகுத்திய போது, கண்டியப் பிரபுக்குலம் (Kandyan Aristocracy) சர்வசன வாக்குரிமையை எதிர்த்தது. ஆயினும் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு வந்த இப் பின்னணியில் ஜனநாயக அரசியல் நிறுவனங்களில் சாதியம் ஒன்றிக் கலந்தது. பிரபுக்குலம் ஜனநாயகத்துடன் சமரசம் செய்து கொண்டது. இக் கலப்பை கண்டிய நிலமானிய முறையுடன் ஜனநாயகத்தைக் கலத்தல் (Assimilation of Democracy) எனலாம்.
  3. பொதுக் கருத்தாடல்களில் (Public Discourse) இலங்கைச் சமூகம் சாதிய நீக்கம் பெற்ற சமூகம் (Casteless Society) என்ற கருத்து அழுத்தம் பெறுகிறது. ஆனால் யதார்த்தத்தில் சாதியம், பல மட்டங்களில் செயற்படுகிறது (Operates at Several Levels). கண்டியச் சமூகமும், சிங்களச் சமூகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நியுடன் குணசிங்க அவர்களின் கண்டியச் சமூகம் பற்றிய ஆய்வு நூலில் இருந்து ரியுடர் சில்வா மேற்கோள் காட்டுகிறார். நியுடன் குணசிங்க ‘தெலும்கொட (Delumgoda)’ என்னும் கிராமத்தில் 1970 களின் பிற்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வு நூல் ‘SOCIO-ECONOMIC RELATIONS IN THE KANDYAN COUNTRYSIDE’ என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அவ் ஆய்வு, கண்டியின் கிராமங்களில் சாதி – வர்க்க உறவுகள் மிகவும் சிக்கலான உறவுகளாக இருப்பதை விளக்கிக் கூறியது. ‘தெலும்கொடவில் சாதிய உணர்வு இன்றும் தொடர்கிறது’ என்று கூறும் நியுடன் குணசிங்க ‘இது எப்படிச் சாத்தியமாகிறது? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடையையும் தருகிறார். அவருடைய கருத்துகளை ரியுடர் சில்வா அவர்கள் 453, 454 ஆகிய இரு பக்கங்களில் விபரிக்கிறார்.

நியுடன் குணசிங்க ஆய்வு செய்த விடயம் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றியதாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் சாதிக்கு இடமில்லை. இதற்கு மாறாக, நிலமானியம் சாதியின் அடிப்படையிலான உற்பத்தி முறையாக இருந்தது. காலனிய காலத்தில் கண்டியில் புகுத்தப்பட்ட முதலாளித்துவம், நிலமானியத்தின் சில அம்சங்களை அழித்தது. வேறு சில அம்சங்களை மீள் உயிர்ப்புச் செய்தது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியாவில் தோன்றிய முதலாளித்துவம், கைத்தொழில் முதலாளித்துவம் (Industrial Capitalism) ஆகும். இலங்கையின் கண்டிய உயர் நிலங்களில் அமைக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதாரம் (Plantation Economy), கண்டிய நிலமானிய உறவுகளை முற்றாக அழிக்கவில்லை. அது நிலமானியத்தின் பழைய உறவுகள் பலவற்றை மீள் உயிர்ப்புச் செய்தது. இலங்கையின் முதலாளித்துவத்தைச் சார்பு மண்டல முதலாளித்துவம் (Peripheral Capitalism) என நியுடன் குணசிங்க வரையறை செய்தார்.

வெலிவிற்ற

கண்டி இராச்சியத்தில் நிலம் முழுமையாக அரசனிற்குச் சொந்தமாக இருந்தது. நிலம் முழுமைக்கும் அரசனே சொந்தக்காரன் என்பது வெறும் கொள்கை அளவிலான கருத்தே ஆகும். நடைமுறையில் நிலம், அரசின் அதிகாரிகளுக்கிடையேயும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த குடிமக்களிடையேயும் பகிரப்பட்டிருந்தது. கண்டியின் சிங்களச் சமூகம் வெவ்வேறு படித்தரங்களில் உள்ள சாதிகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. சைத்திரிய வம்சத்தவரான நாயக்கர் குல மன்னர் கண்டியின் சாதியமைப்புக்கு வெளியே உயர் நிலையில் வைக்கப்பட்டார். கண்டியின் கொய்கம சாதியின் ‘ரதல’ உட்பிரிவினர் சாதியில் உயர்ந்தவர்களாகவும் நில உடமைப் பிரபுக்களாகவும் இருந்தனர். விவசாயக் குடியான்களில் இரு வகையினர் இருந்தனர். சேவைக் கடமைகளை அரசனுக்கும், பிறருக்கும் செய்ய வேண்டிய கடப்பாடுடைய சேவைச் சாதிகளைச் சேர்ந்த விவசாயக் குடியான்கள் ஒரு வகையினர். சேவைக் கடமைகளைச் செய்யும் கடப்பாடு இல்லாத கொய்கம சாதி விவசாயிகள் இன்னொரு வகையினர் ஆவர். இவர்களைச் சுதந்திரக் குடியான்கள் (Free Peasants) என்று குறிப்பிடலாம். கொய்கம சாதி விவசாயிகள் பெரும்பான்மையினராக வாழும் கிராமங்களில் இருந்து, சேவைச் சாதியினர் பெரும்பான்மையினராக வாழ்ந்த கிராமங்கள் வேறுபட்டனவாய் இருந்தன. கண்டிய நிலமானிய அமைப்பில் நான்கு வகையினவான சேவைச் சாதிக் கிராமங்கள் இருந்தன.

  1. கபடாகம் – அரசனுக்குரிய காணிகளைக் கொண்ட கிராமங்கள்.
  2. நிந்தகம் – அரச அதிகாரிகளான ‘ரதல’ பிரபுக்களின் காணிகளைக் கொண்ட கிராமங்கள்.
  3. விகாரகம் – பௌத்த விகாரைகளுக்குரிய காணிகளைக் கொண்ட கிராமங்கள்.
  4. தேவாலகம் – விஷ்ணு, கத்தரகம தெய்யோ முதலிய கடவுளர்களின் கோவில்களுக்குச் சொந்தமான காணிகளைக் கொண்ட கிராமங்கள்.

கொய்கம விவசாயக் குடியான்களை பெரும்பான்மையினராகக் கொண்ட விவசாயக் கிராமங்களில் இருந்து, மேற்குறித்த நான்கு வகையான சேவைச் சாதிக் கிராமங்களும் அடிப்படையில் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டவை. ‘கொய்கம’ சாதியினரான கிராமவாசிகள் பொதுவான வரிகளைச் செலுத்தினர். அவர்களுக்கு நிலமானிய சேவைகளை வழங்கும் கடப்பாடு இருக்கவில்லை.

வெலிவிற்ற, ‘கபடாகம்’ என்ற வகையைச் சேர்ந்த கிராமமாகும். இக்கிராமத்தில் பட்டி, நவண்டன, ஹேன, பெரவ எனப்படும் நான்கு சாதிகள் வாழ்ந்து வந்தன. 1978 ஆம் ஆண்டில், வெலிவிற்றவின் மக்கள் தொகை 1228 ஆக இருந்தது. அங்கு 200 குடும்பங்கள் வாழ்ந்தன. ‘பெரவ’ சாதியினர் மேளமடித்தல், நடனம் ஆடுதல் ஆகிய சேவைக் கடமைகளைச் செய்பவர்கள். இவர்கள், வெலிவிற்றவின் மக்கள் தொகையில் 82.1% வீதத்தினராவர். மொத்தம் 161 குடும்பங்களைச் சேர்ந்த, 1009 ஆட்கள் இருந்தனர். கொய்கம சாதியின் உப பிரிவுகளில் ஒன்றான ‘பட்டி’ சாதியின் 14 குடும்பங்கள் வெலிவிற்றவில் இருந்தன. வெலிவிற்றவின் ‘பட்டி’ சாதியினர் நிலமானிய முறையில் கிராமமட்ட அதிகாரிகளாக (Officials) இருந்தனர். 1978 இல் பட்டி சாதிக் குடும்பங்களில் சில, நில உடமையாளர்களாகவும், ஏனைய குடும்பங்கள் சிற்றுடமை விவசாயக் குடும்பங்களாகவும் இருந்தன. நவண்டன (தச்சு வேலை), ஹேன (சலவைத் தொழில்) ஆகிய சாதிக் குடும்பங்களும் வெலிவிற்றவில் வாழ்ந்து வந்தன.

1978 ஆம் ஆண்டில் உள்ளபடி வெலிவிற்றவின் சாதிக் கட்டமைப்பை விளக்கும் புள்ளிவிபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டில் உள்ளபடி வெலிவிற்றவின் சாதிக் கட்டமைப்பு

சாதியின் பெயரும்/சேவைத் தொழிலும்நெற்செய்கையோடு உள்ள தொடர்புகுடும்பங்களின் எண்ணிக்கை%ஆட்களின் எண்ணிக்கை%
பட்டி(OFFICIAL)(உத்தியோக வேலை)நிலப்பிரபு/காணி உடமையாளனாக உள்ள விவசாயி147.0826.7
நவண்டன(SMITHS)(கொல்லர்)காணி உடமையாளனாக உள்ள விவசாயி31.5221.8
ஹேன(சலவைத் தொழில்)காணி உடமையாளனாக உள்ள விவசாயி189.0947.7
பெரவ(மேளமடித்தல்)குத்தகைக்கும்/பயிரிடுவோர்/காணி உடைமையாளனாக உள்ள விவசாயி16180.5100982.1
பிறர்42.0211.7
மொத்தம்200100.01228100.0
ஆதாரம் சில்வா (1982 ) பக். 26

மேலே தரப்பட்ட அட்டவணை வெலிவிற்றவின் சாதிக் கட்டமைப்பின் முக்கிய இயல்புகளை எடுத்துக்காட்டுகிறது. கொய்கம சாதியினரான சுதந்திரக் குடியான்கள் (Free Peasants) வாழும் சுதந்திர கிராமங்களில் இருந்து, சேவைச் சாதிக் கிராமமான ‘வெலிவிற்ற’ வேறுபட்டதாய் இருப்பதை மேற்தரப்பட்ட புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வெலிவிற்ற ‘பெரவ’ எனும் சேவைச் சாதி பெரும்பான்மையாக வாழும் கிராமம் ஆகும். அங்கு நவண்டன, ஹேன ஆகிய இரு சேவைச் சாதிகளும் உள்ளன. வெலிவிற்றவின் சனத்தொகைக் கட்டமைப்பைக் கொண்டு அதன் பொருளாதார, சமூக உறவுகள் பற்றி நாம் ஊகித்தறியலாம்.

வெலிவிற்ற கிராமத்திற்குள் ஜனநாயக அரசியலின் ஊடுருவல்

வெலிவிற்ற ஒரு சேவைச் சாதிக் கிராமம் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். சேவைச் சாதிகளில் ஒன்றோ, சிலவோ பெரும்பான்மையாக வாழும் கிராமமே சேவைச் சாதிக் கிராமம் ஆகும். வெலிவிற்றவின் தனித்துவ இயல்பு, அது பெரவ சாதியினர் பெரும்பான்மையாக வாழும் சேவைச் சாதிக் கிராமம் என்பதாகும். இக்கிராமத்தவர்கள் வெலிவிற்றவிற்கு வெளியே வாழும் பிரபுக் குலத்திற்கு, சேவைக்கடமைகளை ஆற்றி வந்தனர்.

இப் பிரபுக் குலத்தினர், கண்டி நகரில் அரசியல் நிர்வாக அதிகாரப் பதவிகளையும், இடைநிலை உத்தியோகப் பதவிகளையும் வகிப்பவர்களாக இருந்தனர். கண்டி நகரில் குடியிருந்தவர்களும் வெலிவிற்றவின் காணிகளின் உடைமையாளர்களுமான பிரபுக் குலத்தின் சமூக அந்தஸ்தையும், சடங்கியல் மேலாண்மையையும் (Ritual Superiority)  உறுதி செய்யும் வகையிலான சேவைக் கடமைகளை வெலிவிற்றவின் பெரவ, நவண்டன, ஹேன சாதியினர் செய்து வந்தனர். கண்டி நகரில் தலதா மாளிகையும் பல தேவாலயங்களும் இருந்தன. இதனால் அது ஒரு சடங்கியல் மையமாகவும் (Ritual Centre) இருந்தது. பெரஹரா போன்ற விழாக்களின் போது மேளம் அடித்தல், நடனமாடுதல், களியாட்ட நிகழ்வுகளை நிகழ்த்துதல் என்பன பெரவ சாதியின் சடங்கியல் சேவைகள் ஆகும்.

வெலிவிற்றவின் நான்கு சேவைச் சாதிகளுக்கும் தனித்தனியான சேவைக் கடமைகள் இருந்தன. அவை கிராமத்துக்கு வெளியே இருந்த தமது மேலாளர்களுக்கு, பணிவிடை செய்பவையாக இருந்தன. இதன் பொருள், சேவைச் சாதிகளுக்குள் சாதி வேறுபாடுகள் இருக்கவில்லை என்பதல்ல. வெலிவிற்றவிற்குள் சாதி வேறுபாடுகள் இருந்து வந்தன. கொவிகமவின் உப பிரிவுகளில் ஒன்றான ‘பட்டி’ சமூகப் பிரிவினர் சாதி அந்தஸ்தில் தாழ்ந்தவர்கள். அவர்களின் மரபுவழித் தொழில் மாடு மேய்த்தல் ஆகும். கண்டி இராச்சியக் காலத்தில் மந்தை வளர்ப்பினை தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பட்டி சமூக பிரிவினரைச் சேர்ந்தவர்களான வெலிவிற்றவின் ‘பட்டிகள்’ அரசனின் கிராமமான (Royal Village) வெலிவிற்றவிற்கு வெளியே இருந்த பிரபுக் குலத்தின் முகவர்களாகச்  சேவையாற்றினர். அவ்வகையில் ‘கபடாகம’ வகையைச் சேர்ந்த வெலிவிற்றவின் பட்டி சாதியினர், கிராமமட்ட உத்தியோகத்தர்களாக இருந்தன. வெலிவிற்றவின் நவண்டன சாதியும் ஹேன சாதியும் இக்கிராமத்தின் மொத்தச் சனத்தொகையின் 10 வீதமாக இருந்தன. இவ்விரு சாதியினரும் சாதிப்படித்தர அமைப்பின் இடைநிலையில், பட்டி சாதியினருக்கு அடுத்த தரத்தில் இருந்தனர். மிகவும் அடிநிலையில் இருந்தவர்கள் வெலிவிற்றவின் ‘பெரவ’ சாதியினர். இச் சாதிகள் யாவும் கிராமத்தின் நெற்காணிகளில் பயிரிடும் தொழிலைச் செய்து வந்ததோடு, கண்டியில் நிகழும் பல்வேறு சடங்கியல் நிகழ்வுகளின் போதும், ஒன்றாக இணைந்து தமது கிராமத்துக்குரிய சேவைக் கடமைகளை ஆற்றி வந்தன. சேவைச் சாதிகளின் சேவைக் கடமைகள், பரம்பரை பரம்பரையாக இந்நான்கு சாதிகளும் நெல் உற்பத்தியில் வகித்து வந்த உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையனவாக இருந்தன. இச் சேவைச் சாதிகள் மரபு வழி நிலமானிய ஒழுங்கமைப்பில் குத்தகை விவசாயக் குடிகள் (Tenant Farmers) என்ற நிலையில் இருந்தன. குத்தகைக் குடியான், நிலத்தில் பயிரிடும் உரிமையைக் கொண்டிருந்த போதும் நிலத்தின் உடமையாளராக இருக்கவில்லை. 1815 இல், கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சியுடன் நிலமானிய முறையில் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன. சுதந்திரத்தின் பின்னர் 1958 இல் குத்தகைக்குடி – நில உடமையாளர் உறவுகளில் மாறுதல்களை ஏற்படுத்திய நெற்காணிச்சட்டம் (Paddy Lands Act) செயற்படுத்தப்பட்டது. இக்காரணங்களால் 1978 ஆம் ஆண்டில் ரியுடர் சில்வா அவர்கள், வெலிவிற்றவில் கள ஆய்வு நிகழ்த்திய போது, காணி உடைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. காணிகளின் உரிமை கைமாறி இருந்தது. வெலிவிற்றவிற்கு வெளியில் இருந்து வந்து குடியேறிய நான்கு குடும்பங்கள், வெலிவிற்றவில் 1978 இல் வாழ்ந்து வந்தன. இந்நான்கு குடும்பத்தினரும் எந்தச் சாதியை சேர்ந்தவர்கள் என்பது தெளிவற்றதாக இருந்தது.

வெலிவிற்றவின் குடியிருப்புகள் சாதியடிப்படையில் அமைந்திருந்தன. ‘பட்டி’ குடும்பங்களின் வீடுகள், கிராமத்தின் மத்தியில் அருகருகே அமைந்திருந்தன. அவ் வீட்டு வளவுகள் விசாலமான தோட்டங்களைக் கொண்டிருந்தன. ஏனைய சாதிகளின் வீடுகளும் வெவ்வேறு குடியிருப்புப் பகுதிகளாக இருந்தன. வெலிவிற்ற, சிற்றூர்கள் (Hamlets) பல சேர்ந்த ஒரு கிராமமாக இருந்தது. வயற்காணிகளும் பெயர் அடையாளங்களோடு சாதிகள் இடையே பகிரப்பட்டிருந்தன. உதாரணமாக, ‘கம்மலே வல கும்புற’ எனப்படும் வயற் காணி கொல்லர் சாதியின் காணியாக இருந்தது. ‘கம்மலே வல கும்புற’ என்பதன் பொருள் கொல்லர் வீட்டுக்கு உடமையான பள்ளத்து வயற்காணி (Low Lying Paddy Field That Belongs to Blacksmiths House) என்பதாகும்.

வீடுகள் அமைந்துள்ள காணிகள் குடும்பத்தின் (கெதர) பெயரைக் கொண்டிருந்தன. 1950 இற்கு முன்பு பிறந்தவர்களின் ஆட்பெயர்கள், குடும்பப் பெயர்களுடன் (கெதர நாம) இணைந்ததாக இருக்கும். உதாரணமாக ஆட்பெயருக்கு முன்னால் ‘பெரக்கர கெதரகே’ என்ற அடைமொழி இருக்கும். அதன் பொருள் “பெரவக் குடும்பத்து“ (Drummers House) ஆள் என்பதாகும். பெரவச் சாதியினரின் மரபு வழித் தொழில்களாக சோதிடம் (Astrology) பார்த்தல், இசைப் பாடல்களைப் பாடுதல், சடங்கியல் நிகழ்வுகளின் போது நடனமாடுதல் போன்றன இருந்தன. ஆட்பெயர்களுடன் ‘கணித’ என்ற ஒட்டு சேர்க்கப்பட்டால், சோதிடக் கலையின் முக்கிய திறனான கணிதத்தில் வல்லவர் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கும். ‘சிந்துவ’ என்ற சொல்லின் பொருள் ‘பாடகர்’ என்பதாகும். ஆட்பெயருடன் ‘சிந்துவ’ சேரும் போது, குறித்த நபர் பெரவ சாதியினர் என்பதை அடையாளம் காட்டிவிடும். சடங்குகளின் போது நடனம் ஆடுதலும் மேளம் அடித்தலும் ‘புண்ணியம்’ (‘பின்ன’) சேர்க்கும் தொழிலாகும். ஆட்பெயருடன் ‘பின்ன’ சேரும் போது குறித்த நபர் பெரவ சாதியினர் என்ற அடையாளத்தைப் பெறுவார். இவ்வாறாக ‘குடும்பம்’ செய்யும் தொழில் என்பனவற்றைக் கொண்டு, ஒருவரின் சாதியை அடையாளங் காணும் மரபுவழிச் சமூக வழமையை, வெலிவிற்றவின் புதிய தலைமுறை (1950 இற்குப் பிந்திய காலத்தில் பிறந்தவர்கள்) கைவிட்டது.

1956 இற்குப் பிற்பட்ட காலத்தின் தேசியவாத அரசியல் (Nationalist Politics) வெலிவிற்ற கிராமத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய போது, அடிநிலைச் சாதிகள் தம் பிள்ளைகளுக்குப் பெயரிடும் போது சாதி அடையாளத்தைக் காட்டும் இழிவான அர்த்தமுடைய பெயர்களைத் தவிர்த்து வந்தனர். ஆகையால் புதிய தலைமுறையினரின் ஆட்பெயர்கள் தற்போது மதிப்பு மிக்கனவாக உள்ளன. ஆட்பெயர் மாற்றமும் சமத்துவக் கருத்தியலும் (Egalitarian Ideology) கிராமங்களுக்குள் புகுந்துள்ளன எனவும் ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகின்றார் (பக். 465).

சாதிச் சேவைகளைச் செய்வதற்கு வெலிவிற்றவின் புதிய தலைமுறை இளைஞர்கள் விரும்புவதில்லை. தமது அந்தஸ்தை கீழிறக்கும் இழிதொழிலாகவே சாதிச் சேவைகள் புதிய தலைமுறையினரால் நோக்கப்படுகின்றன. ஆயினும் ‘பெரவ’ சாதி ஆட்கள் இன்றும் (1978 இல்) மேளமடித்தல், நடனம் ஆடுதல் போன்ற சாதிச் சேவைகளை கோவில்களிலும், பொது நிகழ்வுகளிலும் செய்து வருகின்றனர். கண்டிய நடனம் இலங்கையின் பண்பாட்டு மரபுரிமை (Cultural Heritage) எனவும், அதனைப் பரம்பரையாகச் செய்து வரும் கலைஞர்கள் மதிப்புக்குரியவர்கள் என்றும் நவீன காலத்தின் சிங்களத் தேசியவாதம் ‘பெரவ’ சாதியினரின் மரபுத் தொழிலுக்கு ஒரு மரியாதையைக் கொடுத்துள்ளது. எவ்வாறிருப்பினும் கண்டியின் பிற கிராமங்களோடு ஒப்பிடும் போது, 1978 ஆண்டில் வெலிவிற்றவின் சமூக நடத்தையில் (Social Behaviour) சாதி அடையாளம் வெளிப்படையாகவும் துலக்கமாகவும் தெரிந்தது.

1978 வரையான காலப்பகுதியில் வெலிவிற்றவில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை சாதி உறவுகளின் மாற்றங்களால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது. கண்டிப் பகுதியின் கிராமங்களில், அடிநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் நிலங்களின் உடைமையாளர்கள் ஆனார்கள். அச் சாதிகளைச் சேர்ந்த பலர் சம்பளம் பெறும் தொழில்களைச் செய்தார்கள். குத்தகைக்குப் பயிர் செய்வோராக இருந்தோர், நில உரிமைச் சீர்திருத்தங்களின் பயனாக சொந்தமாகக் காணியை உரிமை கொண்டவர்களாக மாறினர். பலர் சந்தையில் விற்பனை செய்வதற்கான வர்த்தகப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளாயினர். கூலிக்காக விவசாயத் தொழில்களைச் செய்யும் கூலித் தொழிலாளர்களும் கிராமப்புறங்களில் காணப்பட்டனர். உயர்சாதி நிலப் பிரபுக்களின் குத்தகைக் குடிகளாக இருந்தோர் 1930 களில், அருகில் இருந்த பெருந்தோட்டங்களில் கூலி உழைப்பாளிகளாகச் சேர்ந்து கொண்டனர். வறியவர்களான விவசாயிகள் பலர் நெல் அறுவடைக் காலத்தில், வறண்ட வலயத்தின் குடியேற்றத் திட்டங்களில் அருவி வெட்டுதல் போன்ற கூலி வேலைகளைச் செய்வதற்காகச் சென்றனர். 1960 கள் முதலாக இவ்வாறான பருவ கால வேலைவாய்ப்புகள் கண்டியின் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குக் கிடைத்தன.

வெலிவிற்றவின் பொருளாதார மாற்றங்கள் யாவற்றிலும் மிக முக்கியமான மாற்றம் அக்கிராமத்தில் மரக்கறிப் பயிர்களை வர்த்தக முறையில் பயிரிட்டமையும், அவற்றைச் சந்தைப்படுத்துவதன் மூலம் பண வருவாயை விவசாயிகள் பெற்றுக் கொண்டமையுமாகும். முன்னர் நிலப் பிரபுக்களின் குத்தகைக் குடிகளாக இருந்தோர் சுதந்திரமான விவசாயிகளாயினர். இலவசக் கல்வித் திட்டம் அடிநிலைச் சாதிப் பெற்றோரின் பிள்ளைகளுக்கு கல்வி வாய்ப்பை வழங்கியது. தாம் பெற்ற கல்வியின் மூலம் பொதுத்துறை உத்தியோகப் பதவிகளை அடிநிலைச் சாதிகளின் இளைஞர்கள் பெற்றுக்கொண்டனர். கிராமங்களையும், நகரங்களையும், தோட்டங்களையும் இணைத்த விரிந்த முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்புக்குள் கிராம மக்கள் இணைந்து கொண்டனர். வர்த்தக விவசாயம், கூலி உழைப்பு, சம்பளம் பெறும் தொழில்கள் என்பன விரிந்த பொருளாதாரத்துடன் கிராமத்தவர்கள் இணைந்து கொள்வதற்குத் துணை செய்தன.

ஜனநாயக அரசியல் வெலிவிற்றவில் புகுந்த போது அக்கிராமத்தின் சனத் தொகையில் பெரும்பான்மையினரான ‘பெரவ’ சாதியினர், அரசியல் அதிகாரம் மிக்கவர்களாக உயர்ச்சி பெற்றனர். 1960 இற்கு முற்பட்ட காலத்தில் வெலிவிற்றவின் உயர் சாதியினரான ‘பட்டி’ சாதிக் குடும்பத்தினரின் ஏகபோக உரிமையாக, கிராமத்தின் முக்கிய நிர்வாகப் பதவிகள் இருந்து வந்தன. கிராமத் தலைமைக்காரன், நீர்ப்பாசன வேலைகளுக்குப் பொறுப்பான ‘வேல் விதானை’, பிறப்பு – இறப்புப் பதிவாளர் போன்ற பதவிகள் இச்சிறு குழுவின் உரிமையாகவே இருந்து வந்தன. இவ் உயர் சாதியினரின் பிள்ளைகள் கண்டி நகரின் ஆங்கிலப் பாடசாலைகளில் கல்வி கற்று, பொதுத் துறையில் உயர் பதவிகளைப் பெற்றிருந்தனர். கண்டியின் கிராமங்களில் இருந்து தோன்றிய ஆங்கிலம் கற்ற தனிநபர்களில் பலர் தேசிய மட்டத்தில் செல்வாக்குமிக்க அரச பதவிகளில் இருந்து வந்தனர். இலவசக் கல்வித்திட்டம் அடிநிலைச் சாதிகள் சமூகப் படிநிலையில் உயர்வதற்கு வழியமைத்தது. உயர்சாதி உயர்குழுவின் ஆதிக்கம், பொருளாதார அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் படிப்படியாகத் தளர்வுற்றது. பெரவ சாதியினர் வெலிவிற்றவின் அரசியல் அதிகாரம் உடைய சமூகக் குழுவாக உயர்ச்சி பெற்றனர். 1956 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றம், கருத்தியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியது. கண்டிய நடனம், சிங்கள பௌத்தர்களின் மரபுரிமை (Heritage) என்னும் தேசியவாதக் கருத்தியல் (Nationalist Ideology) தோன்றிய போது, பெரவ சாதியினர் அக்கருத்தியலால் கவரப்பட்டு உளத் தூண்டல் பெற்றனர்.

கண்டிப் பிராந்தியத்தின் கிராமத்து அரசியல் மாற்றங்களும் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் அரசியல் பிரவேசமும்

ஜனநாயக அரசியல் செயல்முறை 1940 – 1980 காலத்தில், கிராமங்களில் ஏற்படுத்திய மாற்றங்களை வெலிவிற்ற கிராமத்தைக் குவிமையப்படுத்தி ஆராய்வதாக ரியுடர் சில்வா அவர்களின் ஆய்வு அமைந்துள்ளது. கண்டியச் சமூகத்தில் ஜனநாயக அரசியல் செயல்முறையின் ஊடாக விளிம்புநிலைச் சாதிகளில் இருந்து அரசியல் ஆளுமைகள் பலர் கிராம மட்டத்தில் தோன்றினர். ஆயினும் கண்டியின் எல்லாக் கிராமங்களிலும் விளிம்புநிலைச் சாதிகளில் இருந்து அரசியல் செயலிகள் (Political Actors) தோன்றினார்கள் என்று கூற முடியாது. சனத்தொகையில் பெரும்பான்மையினராக குறித்த ஒரு கிராமத்தின் விளிம்புநிலைச் சாதி இருக்கும் போது, வேறு வகையான சாதகமான காரணிகளும் துணையாக அமையுமிடத்து, அக்கிராமத்தில் இருந்து அரசியல் செயலிகள் தோன்றும் சாத்தியம் இருந்தது. இப்பின்னணியில் கண்டியின் சில கிராமங்கள் தேர்தல் அரசியல் ஊடாக முன்னிலைக்கு வந்தன. விழிப்புணர்வு பெற்ற இக்கிராமங்களின் அடிநிலைச் சாதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா என்னும் அரசியல்வாதி 1930 களில் சட்ட சபைக்கு தெரிவானார். 1931 – 1947 காலத்திலும், 1947 – 1951 காலத்திலும் முறையே சட்ட சபையிலும் பாராளுமன்றத்திலும் உறுப்பினராக இவர் விளங்கினார். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா சலவைத் தொழில் செய்யும் சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அவர் கிறிஸ்தவப் பின்னணியை உடையவர். கண்டி இராச்சியத்தின் தளப் பிரதேசமாகவும் நிலமானியத்தின் கோட்டையாகவும் இருந்த கண்டியின் தேர்தல் அரசியலில் புகுந்து அரசியல் தலைமையைப் பெற்றுக் கொண்ட ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா, தேசிய அரசியலில் செல்வாக்குள்ள மனிதராகவும் விளங்கினார். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், இலங்கை தேசியக் காங்கிரசின் தலைவராகவும், 1942 – 1947 காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார். கண்டியச் சமூகத்திற்கு ஜோர்ஜ்.ஈ.டி சில்வா அந்நியர் என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தோம். கண்டியின் நீதிமன்றத்தில் பறங்கி இனத்தவர்களும், ‘ரதல’ பிரபுக்களும் சட்டவாளர்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இப் பின்னணியில் அவர் சட்டவாளராகத் தொழில் செய்யப் புகுந்த போது, அவருக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. எல்லா எதிர்ப்புகளையும் தாண்டிய அவர், சட்டத்தொழிலில் சிறப்புப் பெற்றது மட்டுமல்லாமல், ‘டச்சுப் பறங்கிய உயர்குலத்துப் பெண்’ ஒருவரையே திருமணம் செய்து, கண்டியச் சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 

தலதா மாளிகையும், பழமைவாத பௌத்த பீடமான சியாம் நிகாயாவின் மடாலயங்களும், ‘விகாரகம்’, ‘தேவாலகம்’ போன்ற வகையிலான பௌத்த சமயத் தொடர்புடைய ‘கோவில் கிராமங்களும்’ (Temple Villages) அமைந்துள்ள கண்டிப் பிராந்தியத்தில், ‘கொவிகம’ சாதியைச் சாராதவரும் கிறிஸ்தவ சமயப் பின்புலத்தைக் கொண்டவருமான ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா, ஜனநாயக அரசியல் ஊடாக அரசியல் அரங்கில் பிரவேசித்து, அடிநிலைச் சாதிகளுக்குத் தலைமைத்துவம் வகித்து, அவர்களுடைய முன்னேற்றத்திற்காக உழைத்தார் என்பது வியப்புக்குரிய வரலாற்று நிகழ்வாகும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3172 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)