Arts
23 நிமிட வாசிப்பு

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பாகம் 3

June 29, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா

ஜோரஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சி

கண்டிப் பிராந்தியத்தின் அரசியலில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்டோம். இப்பகுதியில் அவரின் எழுச்சியைப் பற்றி பேராசிரியர் ரியுடர் சில்வா அவர்கள் கூறியிருப்பனவற்றைத் தழுவி விளக்கிக் கூறுவோம்.

ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா (1879-1951) 1879 ஆம் ஆண்டு பிறந்தவர். 1951 ஆம் ஆண்டில் அவர் காலமானார். 1931-1947 காலத்தில் டொனமூர் அரசியல் யாப்பின் படி அமைக்கப்பட்ட சட்ட சபையில் கண்டி தேர்தல் தொகுதியின் பிரதிநிதியாகவும், 1974 – 1951 காலத்தில் சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராகவும், 20 ஆண்டு காலம் தேசிய அரசியலில் அவர் பங்கேற்றார். அவரது அரசியல் வாழ்வு, கண்டி முனிசிப்பல் சபைக்கு 1930 இல் தெரிவு செய்யப்படுவதுடன் ஆரம்பமாகிறது. 1942 – 1947 காலத்தில் டி சில்வா சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தார். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் தந்தை ஓர் ஆயுள்வேத மருத்துவராவர். அவர் ‘ஹேன’ எனப்படும் சலவைத் தொழில் செய்யும் சாதியைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. சில்வாவின் தந்தை இலங்கையின் தென் மாகாணத்தின் கரையோர நகரொன்றில் இருந்து குடிபெயர்ந்து மலைநாட்டின் நுவரெலியாவில் குடியேறி வாழ்ந்தவர். சில்வா நுவரெலியாவில் அங்கிலிக்கன் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி கற்றார். 1900 ஆம் ஆண்டளவில் சட்டப் படிப்பைத் தொடரும் நோக்குடன், சில்வா கொழும்பு நகருக்குச் சென்றார். அங்கு தனது படிப்புச் செலவிற்காக வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். புறக்கோட்டைச் சந்தையில் ஒரு கடையைத் திறந்து நுவரெலியாவில் இருந்து மரக்கறி வகைகளை வருவித்து விற்பனை செய்தார். சட்டப் படிப்பை முடித்த பின் கண்டிக்கு சென்ற அவர் அங்கு புறக்டராக (Proctor) கண்டி நீதிமன்றில் பணியாற்றினார். அவர் கண்டிக்குத் திரும்பிய ஆண்டு 1907 ஆகும்.

நீதிமன்றில் வெளிநடப்பு

கண்டி நீதிமன்றில் அக்காலத்தில் பறங்கி இனத்தவர்களும் உயர் சாதி சிங்களவர்களுமான அட்வகேட், புறக்டர் ஆகிய சட்டவாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ‘ஹேன’ சாதியைச் சேர்ந்த ஒருவர் தம்மோடு சம ஆசனத்தில் அமர்ந்து நீதிமன்றில் வழக்குரைஞர் தொழில் புரிவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீதிமன்றில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவிற்குச் சம ஆசனம் வழங்கியதை ஆட்சேபித்து அவ் வழக்குரைஞர்கள் வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் (பக். 468). ரியுடர் சில்வா அவர்கள் கண்டி நீதிமன்றில் சாதியுணர்வு மேலோங்கியிருந்தமை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“அக்காலத்தில் கண்டியில் வழக்குரைஞர் தொழில் செய்தவர்களில் பெரும்பான்மையினர் ‘ரதல’ பிரபுக்குலத்தைச் சேர்ந்தவர்களாவர் (சிலர் கொவிகம சாதியின் அந்தஸ்தில் குறைந்த உப சாதிகளைச் சேர்ந்தவர்களாய் இருந்த போதும், தம்மை ‘ரதல’ எனப் பாவனை செய்து கொண்டனர்.) தந்தையின் தொழிலை மகன் தொடருவதாக, வழக்குரைஞர் தொழிலை இவர்கள் தமது குழுவுக்குரியதாகவும் வைத்துக் கொண்டதையும் காண முடியும். சட்டத் துறையில் தொழிலைத் தொடங்குபவர்கள் அதனூடாக தேசிய அரசியலுக்குள் புகுந்து கொள்வார்கள் (பக். 485).”

சில்வா, இவ்வாறான சமூகத் தடைகளை உடைத்து, தனது தொழிலை வெற்றிகரமாக நடத்தியதோடு அரசியலிலும் பிரகாசித்தார். அவர் டச்சுப் பறங்கிய இனத்துப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கண்டிச் சமூகத்திற்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்தார். இது பற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். இத்திருமணத்தால் பறங்கிய இனத்தவர்களான வழக்குரைஞர் பலரும் சில்வா மீது கோபமும் வெறுப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்று அவருடைய வரலாற்றை எழுதியோர் குறிப்பிட்டுள்ளனர். சட்டத் தொழில் மூலம் நல்ல வருவாய் ஈட்டிய சில்வா கண்டியில் பெறுமதிமிக்க காணி, வீடு என்பனவற்றையும் கொள்வனவு செய்து சிறப்புடன் வாழ்ந்தார்.

நிலமானியத்தின் கோட்டையான கண்டியில், தாழ்ந்த சாதியினரான அரசியல்வாதியொருவர் செல்வாக்குடையவராக எழுச்சி பெற்றது விளங்கிக் கொள்ள முடியாத புதிர் போன்றே தோன்றலாம் (பக். 468) எனக் குறிப்பிடும் ரியுடர் சில்வா அவர்கள் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் வெற்றியின் இரகசியத்தை எடுத்துக் கூறுகிறார். கண்டி நகரில் வணிக முயற்சிகளில் ஈடுபட்டவர்களான கணிசமான தொகையினர் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்தோராவர். இக்குடியேறிகள் கண்டிய நிலமானிய பிரபுக்குலத்திற்கு எதிரான உணர்வுடையவர்களாய் இருந்திருப்பர் என்பதை நாம் ஊகித்து உணரலாம். இவ் வர்த்தகர்களையும் கண்டியின் கிராமப் புறங்களில் வாழ்ந்த அடிநிலைச் சமூகத்தினரையும் (Subaltern Caste Groups) ஜனநாயக அரசியல் அணிதிரட்டல் ஊடாக சில்வா ஒன்று திரட்டினார். கண்டித் தேர்தல் தொகுதியில் அவரின் வெற்றி, அக்காலத்தில் ஜனநாயக சக்திகளின் எழுச்சியின் காரணமாக கண்டிய நிலமானிய சக்திகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு எடுத்துக்காட்டாகும் என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகின்றார். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் எழுச்சிக்குப் பக்கபலமாக நின்று உதவிய பல கிராமங்களில் வெலிவிற்றவும் ஒன்றாகும். வெலிவிற்ற பற்றியும் அக்கிராமத்தினைச் சேர்ந்த ‘மெம்பர’ என்ற அரசியல்வாதியைப் பற்றியும் இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் குறிப்பிடுவோம். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா கண்டியின் அடிநிலைச் சாதிகளதும், கொவிகம அல்லாத சமூகப் பின்புலத்தையுடைய மக்களதும் ஆதரவைப் பெற்று, சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தேசியவாத அரசியலின் பக்கம் மக்களை வழி நடத்திச் சென்றார். அவர் ஒரு சட்டவாளராக இருந்தபடியால் விளிம்புநிலை மக்களுக்குச் சார்பான வழக்குகளில் வாதாடி அவர்களின் நலன்களைப் பாதுகாத்தார். கண்டியின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் நீரோடை ஒன்றில் துணிகளைச் சலவை செய்வதற்கு அப்பகுதியின் ‘கோறளை’ (கிராமத் தலைமைக்காரன்) தடை விதித்தார். உயர் சாதியினரான ‘கோறளை’, சலவைத் தொழிலாளர்கள் நீரோடையில் துணிகளைத் துவைப்பது பொதுச் சுகாதாரத்திற்குக் கேடானது என்று கூறி தாம் விதித்த தடைக்கு நியாயம் கற்பித்தார். சலவைத் தொழிலாளர் சார்பாக நீதிமன்றில் வாதாடிய ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா அத் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்தார். நிலமானியத்தின் சாதி முறைக்கு எதிராக துணிச்சலோடு போராடிய ஒருவராக சில்வா நினைவுகூறப்படுகிறார். அவர் மக்களால் ‘அப்பே ஜோர்ஜ்’ என அழைக்கப்பட்டார். ஜேன் ரஸ்ஸல் (Jane Russell) என்பவர் பிரித்தானியாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர். அவர் ‘OUR GEORGE : A BIOGRAPHY OF EDMOND DE SILVA’ என்னும் தலைப்பில் சில்வா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். ரியுடர் சில்வா அவர்கள் ஜேன் ரஸ்ஸலின் நூலில் இருந்து மேற்கோளாகத் தந்திருக்கும் பந்தி ஒன்றை கீழே தமிழில் தந்துள்ளோம்.

“ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா தம்மைப் போன்று சமூகத்தின் அடிநிலையில், தாழ் அடுக்குகளில் பிறந்து, வாழ்வில் கஷ்டங்களைச் சுமந்தவர்களுக்காக அயராது உழைத்தார். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். இதனால் அவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். அவரது ஆதரவையும் அரவணைப்பையும் பெற்ற மக்கள் இலங்கையின் உயர்தட்டு மக்களைப் போன்று சொத்து சுகங்களை அனுபவித்தவர்கள் அல்லர். அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்கள் இருக்கவில்லை; சமூக அந்தஸ்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. அவர்களது பிறப்பால் விளைந்த துரதிஷ்டம் காரணமாக வஞ்சிக்கப்பட்டார்கள். வாழ்க்கையில் முன்னேறாதபடி அவர்களுக்குத் தடைகள் போடப்பட்டன. அவர்கள் எதிர்கொண்ட சட்டத்தடைகள் பலவற்றை உடைத்தெறிவதற்காக ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா போராடினார். அது மட்டுமல்லாமல் அம்மக்களுக்கு எதிராகச் செயற்பட்ட முறைசாரா (Informal) சமூகத் தடைகள் பலவற்றையும் அவர் உடைத்தெறிவதற்கு உதவினார் (ரஸ்ஸல் 1981:1 – எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பு).  

1956 இல் பண்டாரநாயக்க நாடளாவிய முறையில் உருவாக்கிய புரட்சியை ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா, அவருக்கு முன்பே சிறிய அளவில் கண்டியைச் சூழவுள்ள பகுதிகளில் நிகழ்த்தினார் எனலாம். சில்வா அவர்கள் கண்டிப் பகுதியின் அந்தஸ்தில் குறைந்த சாதிப் பின்னணியுடையவர்களுக்கு ஆதர்சமாக விளங்கி, விளிம்புநிலை மக்களின் மத்தியில் இருந்து அரசியல் தலைவர்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார். கண்டியில் கொவிகம சாதியினரில், வசதி வாய்ப்புக்கள் இல்லாத வறியவர்களும் சாதாரணர்களும் பெருந்தொகையில் இருந்தனர். பிற்பட்ட கொவிகம சமூகப் பின்னணியில் இருந்து முன்னேறிய தலைவர்களுக்கும் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா ஆதர்சமாக விளங்கினார். T.B தென்னக்கோன், P.B பாலசூரிய, T.B இலங்கரட்ணா ஆகிய தலைவர்கள் இத்தகையவர்கள். உதாரணமாக இலங்கரட்ணா, கொவிகம சமூகப் பிரிவினரின் சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆங்கிலக் கல்வி கற்று, எழுதுவினைஞர் சேவையில் சேர்ந்தார். இவர்கள் மூவரும் ஜனநாயக அரசியல் செயல்முறையூடாக மேல் நிலைக்கு வந்து, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமையை ஏற்று அரசியலில் பயணித்தார்கள். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவிற்கு ஒப்பான இன்னொரு தலைவர் R.S.S. குணவர்த்தன ஆவர். இவர் மாத்தறையைச் சேர்ந்தவர். அங்கிருந்து மலை நாட்டின் கம்பளை நகருக்கு வந்த R.S.S குணவர்த்தன, கம்பளையைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள அடிநிலைச் சாதிகளின் வாக்குகளைப் பெற்று சட்டசபைக்குத் தெரிவானார்.

ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா, வரலாற்று ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைக் கொண்டவனாய் இருந்த வெலிவிற்ற போன்ற கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அம்மக்களுக்குத் தலைவனாக, வாய்ப்பேச்சுடன் நின்ற விடாது, வாழ்ந்து காட்டி வழிப்படுத்தினார். பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க மக்களை விழிப்படையச் செய்து அணிதிரட்டிய போதும், அவர் சிங்கள பௌத்த தேசியவாதம் என்ற கருத்தியல் ஆயுதம் கொண்டு, கிறிஸ்தவ மயப்பட்டதும் மேற்கு மயப்பட்டதுமான ஆளும் உயர் குழாத்திற்கு எதிரான வெகுஜன மக்கள் இயக்கத்தை உருவாக்கும் உபாயத்தைக் கையாண்டார். இதற்கு மாறாக ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினராகவும், தனது இறுதி மூச்சுவரை தாராண்மைவாத அரசியல்வாதியாகவும் (Liberal Politician), தொழிற்சங்க இயக்கத் தலைவரான A.E குணசிங்கவுடன் இணைந்து, இலங்கை மக்களுக்கு சர்வசன வாக்குரிமை வேண்டும் என்று பிரச்சார இயக்கத்தை நடத்தினார். டொனமூர் ஆணைக்குழுவின் விசாரணையின் போது சர்வசன வாக்குரிமையின் அவசியத்தை இவ்விரு தலைவர்களும் எடுத்துக் கூறினர். அவ்வேளையில் கண்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களைச் சேர்ந்த உயர்சாதி அரசியல்வாதிகள் அடிநிலைச்சாதிகளுக்கு வாக்குரிமையை வழங்கக் கூடாது என டொனமூர் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுத்தனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கண்டியச் சமூகத்தில் சர்வசன வாக்குரிமையின் பயனாக ஏற்பட்ட மாற்றங்கள், 1956 இல் அரசியல் புரட்சிக்கு வித்திட்டன எனலாம்.

அ) ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா அடிநிலை மக்களை தேர்தல் அரசியல் மூலம் அணிதிரட்டி அவர்களை ஜனநாயக அரசியல் பாதையில் கொண்டியக்கினார்.

ஆ) 1956 அரசியல் புரட்சி, கிராமங்களில் கட்டமைப்பு மாற்றங்களை (Structural Changes) ஏற்படுத்தியது. குறிப்பாக, நெற்காணிச்சட்டம் கண்டியக் கிராமங்களில் நில உடைமையாளர் – குத்தகை விவசாயிகள் உறவுகளை மாற்றியமைத்தது.

இ) காணிச் சீர்திருத்த சட்டத்தின் பயனாக கண்டியக் கிராமங்களின் விவசாயிகளிடையே வர்த்தக விவசாயம் (Commercial Agriculture) விருத்தியுற்றது. இதனால் கிராமியச் சமூகக் கட்டமைப்பு மாறியது. கிராம மட்ட அரசியல் தலைமையின் தோற்றம், சர்வசன வாக்குரிமையின் விளைவு என்றே கருதலாம். 

அடுத்து வெலிவிற்றவின் அரசியல் தலைவரின் எழுச்சி பற்றி நோக்குவோம்.

வெலிவிற்றவில் ‘மெம்பர’ என்னும் அரசியல்வாதியின் எழுச்சி

வெலிவிற்றவில் ‘பெரவ’ சாதிக் குடும்பத்தில் பிறந்தவர் ‘மெம்பர’. அவரது இயற்பெயர் ‘பெரக்கர ஹெதர ரண்கிறா ஜோதிபால’ (Berakara Gethera Rangira Jothipala) என்பதாகும். நாம் முன்னரே குறிப்பிட்டபடி ‘பெரக்கர ஹெதர’ என்பது குடும்பப் பெயர். ‘பெரவ’ என்ற குடும்பத்து அடைமொழி, அவரது குடும்பம் (ஹெதர) பெரவ சாதியைச் சேர்ந்தது என அடையாளப்படுத்துகிறது. ‘ரண்கிறா ஜோதிபால’ கிராமச் சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் அவரை மக்கள் ‘Member’ (கிராம சபை உறுப்பினர்) என அழைத்தனர். சிங்களத்தில் அச்சொல் ‘மெம்பர’ ஆகியது.

ரண்கிறா பிறந்த ஆண்டான 1906 இல், அவரது தந்தை வெலிவிற்ற கிராமத்தின் பெரவா சமூகத்தின் தலைவராக (‘துறய’) விளங்கினார். கிராமத்தின் தலைமைக்காரன் சிங்களத்தில் ‘ஆராய்ச்சி மஹாத்தயா’ என அழைக்கப்படுவார். ‘பட்டி’ சாதியைச் சேர்ந்தவர்களே வெலிவிற்றவின் ஆராய்ச்சி (கிராமத் தலமைக்காரன்) பதவிக்கு நியமிக்கப்பட்டனர். வெலிவிற்றவின் பெரும்பான்மைச் சாதியான ‘பெரவ’ சாதியின் தலைமைக்காரன் (துறய) பதவியில் ரண்கிறாவின் தந்தை இருந்தாரேனும், அவரது குடும்பம் வறுமையாலும், கடன் சுமையாலும், நோயினாலும் துன்பங்களை அனுபவித்தது. அவருக்கு எட்டு வயதாகும் போது அவரது தந்தையும் தாயும் மரணித்தனர். ரண்கிறாவும், அவரது இரு சகோதரிகளும் தந்தைவழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர். உள்ளூர்ப் பாடசாலையில் சிங்கள மொழியில் சில ஆண்டுகள் கல்வி கற்றபின், ரண்கிறா பள்ளிப் படிப்பைக் கைவிட்டார். அதன்பின் தனது குலத்தின் தொழிலோடு தொடர்புடைய மூன்று துறைகளில் அவர் பயிற்சியையும் அறிவையும் பெற்றுக் கொண்டார். அ) ‘பலி’ சடங்கு (Bali Ritual) என்னும் சடங்கை செய்வது பற்றிய பயிற்சி, ஆ) சோதிடக் கலை, ஈ) கண்டிய நடனம் என்பனவே ரண்கிறா கற்றுத் தேறிய மூன்று கலைகள். ரண்கிறா எவ்வாறு இக்கலைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார் என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை ரியுடர் சில்வா 472 ஆம் பக்கத்தில் விரிவாகத் தருகிறார். 

‘பலி’ சடங்கு ஒரு நோய் நீக்கும் சடங்கு (Healing Ritual) ஆகும். ‘பலி’ சடங்கு, அச்சடங்கை  செய்வதில் தேர்ச்சி பெற்ற ஒரு குழுவால் நடத்தப்படும். குழுவின் தலைவராக (தலைமைப் பூசாரியாக) ரண்கிறா சடங்குகளை நடத்துவார். நோயுற்றவர்களின் நோயைத் தீர்த்தல், களவு போன பொருட்களை மீட்டல், கள்ளவர்களை அடையாளம் காட்டுதல், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற வாழ்வியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவராக ரண்கிறா விளங்கினார். திருமணப் பொருத்தம் பார்க்கும் சோதிடக் கலையிலும் வல்லவராக அவர் இருந்தார். கண்டிய நடனம் அவருக்கு வெளியுலகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. கண்டி ‘பெரஹராவில்’ அவர் நடனம் ஆடினார். அரசியல் தலைவர்களதும், பிரமுகர்களதும் வரவேற்பின் போது அவர்கள் முன்னால் வரவேற்பு நடனத்தை அவர் ஆடுவார். இதனால் முக்கியஸ்தர்கள் பலரதும் தொடர்புகள் அவருக்குக் கிடைத்தன.

தமது குலத்தின் தொழில்களைப் பகுதி நேரத் தொழிலாகச் செய்து வந்த ரண்கிறா விவசாயத் தொழிலையும் செய்து வந்தார். அவரது மனைவியின் மூலம் பெற்ற சொத்தாக அவருக்கு ஒரு சிறிய துண்டு நெற்காணி சொந்தமாக இருந்தது. இக்காணியில் பயிரிடுவதன் மூலம்  உணவிற்குத் தேவையான அரிசியைப் பெற முடிந்தது. அண்மையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வெலிவிற்ற மக்களுக்கு 1930 களில் கூலி வேலைகள் கிடைத்தன. இக்கூலி உழைப்பு முதற் தடவையாக கிராமத்தவர்களை பணப் பொருளாதாரத்துடன் (Cash Economy) பிணைத்தது. ரண்கிறாவிற்குத் தேயிலைத் தோட்டத்தில் ‘கங்காணி’ (தொழிலாளர்களை மேற்பார்வை செய்தல்) வேலை கிடைத்தது. அருகில் உள்ள குன்றுப் பகுதிக்குக் கிராமத்துக் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காகப் போய் வருவர். இக்கூலியாட்களில் பெரும்பான்மையினர் நிலமற்ற வறியவர்களாகவோ அல்லது சிற்றுடமை விவசாயிகளாகவோ இருந்தனர். பணத்திற்கான உழைப்பு, வெலிவிற்றவின் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ரண்கிறா பல்வேறு சமூக அலுவல்களில் ஈடுபட்டதால் ‘கங்காணி’ வேலையைத் தொடர முடியவில்லை. தனது உறவினர் ஒருவருக்கு அவ்வேலையை மாற்றிக் கொடுத்துவிட்டு நீங்கினார்.

ரண்கிறா கிராமசபை உறுப்பினராக முதன்முதலாக 1934 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார். அப்போது அவரின் வயது 28 ஆகும். கிராமசபை உறுப்பினர் பதவியில் 1960 வரை அவர் தொடர்ந்தார். 1948 இல் அவர் கிராமசபையின் பிரதித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1940 ஆம் ஆண்டளவில் அவரது பெயர் ‘மெம்பர’ என மாற்றம் பெற்றது. அதுவரை அவரது குலத்தொழிலான ‘பலி’ சடங்குடன் தொடர்புடைய ‘பலித்தன்ன’ என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். கிராமசபை உறுப்பினரான கனவான் (Member Gentleman)  என்ற அர்த்தம் உடைய தொடரான ‘மெம்பர மஹாத்தயா’ என அவரது சாதி மக்கள் அவரைக் கௌரவத்தோடு அழைத்தனர். ஆனால் உயர்சாதி நிலக்கிழார் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ‘மெம்பர’ என்று மட்டுமே அவரைக் குறிப்பிடுவார்கள். ‘மஹாத்தயா’ என்ற சொல்லைத் தவிர்த்து ‘மெம்பர’ என்று மட்டும் குறிப்பிடும் போது அச்சொல்லில் இழிவுப் பொருளே எஞ்சி நிற்கும் (பக்கம் 473). ஆகையால், பெரவ சாதி மக்களுக்கு ‘மெம்பர’ என்பது தம் சாதியின் சுயத்துவ அடையாளத்தை வெளிப்படுத்தும் சாதிப் பிரதிநிதி என்ற அர்த்தம் உடையதாக இருந்தது. பெரவ சாதியினரின் உரிமைகளை வென்றெடுத்தவர் அச்சாதிக்கு கௌரவத்தையும் மதிப்பையும் தேடிக் கொடுத்தவர் ஆகிய தகுதிகளை ‘மெம்பர’ என்ற சொல் பெறலாயிற்று.

தொடக்கத்தில் ‘மெம்பர’ ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவின் தலைமையின் கீழ் இயங்கத் தொடங்கினார். சில்வா ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். ‘மெம்பரவும்’ ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டார். அக்காலத்தில் கிராம மட்டத்தில் கட்சி அரசியல் முக்கியம் பெற்றிருக்கவில்லை. கிராமசபைத் தேர்தலில் ‘மெம்பர’வை எதிர்த்து போட்டியிட்டவரை, ‘நிலப் பிரபுத்துவக் குடும்பங்களின் ஏவலாளாக தமக்கு எதிராக நிறுத்தப்பட்டவர்’ என மெம்பர குறிப்பிட்டார். அத்தேர்தலில் தனது எதிராளியை ‘மெம்பர’ படுதோல்வியடையச் செய்தார். ஜோர்ஜ்.ஈ.டி. சில்வா 1951 இல் காலமானார். அவர் காலமான பின்னரும் ‘மெம்பர’ ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவே தொடர்ந்திருந்தார். 1956 தேர்தலில் மெம்பர ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரித்தார். அப்போது சிங்களக் கிராமப் பகுதிகளின் மக்கள் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவிற்கு பேராதரவு கொடுத்தனர். தேர்தலின் பிற்பட்ட காலத்தில் ‘மெம்பர’ படிப்படியாக பண்டாரநாயக்கவுடன் கூட்டணி அமைத்த ‘மகாஜன எக்சத் பெரமுன’ (MEP) பக்கம் திரும்பினார். அக்கூட்டணியின் சிங்கள – பௌத்த தேசியவாதக் கருத்தியல் அவரைக் கவர்ந்தது. சமூகப் படித்தர அமைப்பின் கீழ் நிலையில் இருந்த வெலிவிற்ற போன்ற கிராமத்து மக்களை, பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தின் சில செயற்திட்டங்கள் கவர்ந்தன.

  1. 1958 இன் நெற்காணிச் சட்டத்தின் பயனாக ஏற்பட்ட காணிச் சீர்திருத்த நடவடிக்கைகள்.
  2. அடிநிலைச் சாதி ஒன்றின் கலையான கண்டிய நடனத்தை தேசியக் கலையாக உயர்த்தியமை.
  3. சிங்கள மொழி மட்டும் சட்டத்தை இயற்றி அதைச் செயற்படுத்தியமை.

மேற்குறித்த காரணங்களால் ‘மெம்பர’ சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக மாறினார். அப்போது அவரின் ‘பெரவ’ சாதி ஆட்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகத் தொடர்ந்தனர். இதனால் கட்சி அரசியல் கிராமத்தை இரு பிரிவுகளாகப் பிளவுபடுத்தியது. ஆயினும் கிராமத்து மக்களிடையே தனிப்பட்ட உறவுகள் கட்சி வேறுபாடுகளால் பாதிப்புறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு கட்சிகளும் மாவட்ட, தேசிய மட்டத் தலைவர்களின் முகவர்களாக வெலிவிற்றவின் தனிநபர்கள் சிலரை வைத்திருந்தன. புரவலர் – ஆதரவாளர் வலைப்பின்னலில் (Parton – Client Network) வெலிவிற்றவின் அரசியல் முகவர்கள் இணைந்து கொண்டனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரவ சாதியின் நலன்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை இவ் வலைப்பின்னல் உறுதி செய்தது எனலாம். பெரவச் சாதிப்பிளவுகள் போன்ற பிளவுகள் வெலிவிற்றவின் பிற சாதிகளிடையேயும் கட்சி அடிப்படையில் தோன்றின.

‘மெம்பர’ தனது அதிகாரப் பலத்தை பல நிறுவனங்கள் ஊடாகப் பரவலாக்கினார். கிராமத்தில் கமக்காரர் குழுவினையும், கூட்டுறவுச் சங்கத்தினையும் உருவாக்கினார். இவை இரண்டின் ஊடாகவும் அரசாங்கத்தின் வளப் பங்கீட்டில் தனது கிராமத்தையும் பங்குபெற வழிவகுத்தார். சமாதான நீதவான் (Justice of Peace) என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டது. சமாதான நீதவான் பதவியை அவருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் T.B இலங்கரட்ணா பேசும் போது பின்வருமாறு கூறினார் : “இன்று நான் குடும்பி கட்டிய இந்தச் சிறிய மனிதருக்கு கண்டியின் ஆங்கிலம் பேசும் பிரபுக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பதவியை வழங்குவதில் மகிழ்ச்சிடைகிறேன்.”

அமைச்சர் இலங்கரட்ணா ‘சிறிய மனிதர் (பொடி மினிஹா)’ என்றும் ‘குடும்பி கட்டிய’ என்றும் குறிப்பிட்டதில் உள்ளர்த்தங்கள் உள்ளன. ‘மெம்பர’ குட்டையான தோற்றத்தை உடையவர். அவர் சிறிய மினிதர் தான். ஆனால் இச்சொல் அவரது சாதி அடையாளத்தைக் குறிப்பிட்டது. ‘குடும்பி கட்டிய’ என்பது ‘மெம்பர’ நவநாகரிக நடை, உடை பாவனைகள் இல்லாத நாட்டுப்புறத்து மனிதர் என்பதைக் குறித்தது. இச்சொற் பிரயோகங்கள் 1956 அரசியல் புரட்சியின் ஜனநாயகப்படுத்தல் மூலம் சமூகத்தில் புகுந்தவையாகும். இவற்றுள் ‘பொடி மினிஹா’ என்ற சொல் நாடு முழுவதும் உபயோகிக்கப்பட்ட சொல்லாக அமைந்தது. ‘மெம்பர’ 1985 இல் காலமானார். அவரது மறைவு வெலிவிற்றவின் அரசியலில் ஒரு யுகத்தின் மறைவைக் குறியீடாக உணர்த்திய நிகழ்வாகும்.

கிராம அபிவிருத்தியிலும் கிராம முன்னேற்றத்திலும் மெம்பரவின் வகிபாகம்

வெலிவிற்ற கிராமத்தின் அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் மெம்பரவின் வகிபாகத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

1. கிராமத்தின் உட்கட்டமைப்புகளின் வளர்ச்சி

‘மெம்பர’ கிராமச் சபையின் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் அதன் உபதலைவராகவும் இருந்த போது பின் தங்கிய வெலிவிற்றவின் பௌதீக உட்கட்டமைப்புகளை முன்னேற்றுவதற்குரிய நிதிவளத்தைப் பெற உதவினார். வெலிவிற்றவின் வீதிகள் திருத்தி அமைக்கப்பட்டன. சரிவான பாதைகளை உடைய பள்ளத்தாக்கில் அமைந்த வெலிவிற்றவின் பாதுகாப்பற்ற பாதைகள் மக்களின் போக்குவரத்துக்கு ஏற்றவையாக மாற்றப்பட்டன. மண்சரிவு  அபாயம் நிறைந்த அப்பாதைகள் காலத்திற்குக் காலம் திருத்தம் செய்து ஒழுங்காகப் பேணப்பட்டன. கிராமத்தின் நீர்ப்பாசனத் தலைமைக்காரன் என்ற பதவிக்குரிய அதிகாரத்தை உபயோகித்து, நீர்ப்பாசனக் கால்வாய்களைச் சுத்தம் செய்து நெல்வயல்களுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குதல், கிராமத்தின் காணி அபிவிருத்தி ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார். வெலிவிற்றவில் கூட்டுறவுச் சங்க கடை ஒன்றை அமைப்பதிலும், தபாற் கந்தோர் ஒன்றை அமைப்பதிலும் உள்ளூர்ப் பாடசாலையைத் தரமுயர்த்துவதிலும் அவரது பங்களிப்பு முக்கியமானதாக அமைந்தது.

2. நெற்காணிச் சட்டத்தை செயற்படுத்தல்

நெற்காணிச்சட்டம் 1958 இல் நடைமுறைக்கு வந்த போது, வெலிவிற்றவின் நெற்காணிகளின் உடமையாளர்கள், குத்தகைக்காரரைப் பலவந்தமாக வெளியேற்றல், குத்தகை உரிமையைப் பறித்து வேறு ஆட்களுக்கு மாற்றி விடுதல், காணிகளை பரம்பரை பரம்பரையாகக் குத்தகைக்குச் செய்து வந்தவர்களிடமிருந்து பறித்து வேறு ஆட்களுக்கு விற்றல் போன்ற முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர்.

வெலிவிற்றவின் கணிசமான அளவு காணிகள் கண்டியிலும் பிற நகரங்களிலும் வாழ்ந்த உத்தியோகத்தர்களான நில உடைமையாளர்களிற்குச் சொந்தமாக இருந்தன. அக்காணிகளின் குத்தகையாளர்களான (Tenants) வெலிவிற்ற விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ‘மெம்பர’ உதவினார். கிராமத்தின் விவசாயக் குழுவிலும், விவசாய அபிவிருத்திக் குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்தமையால் கிராமத்தவர்களின் உரிமைகளை அவரால் பாதுகாக்க முடிந்தது.

3. சுழற்சிப் பயிர்ச்செய்கை

வெலிவிற்றவில் வர்த்தக அடிப்படையில் மரக்கறிப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்ட போது கிராமத்தின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெற்றது. நெற்பயிரை மாரி மழைக்காலத்திலும், கோடையில் மரக்கறிவகைப் பயிர்களையும் சுழற்சி முறையில் விவசாயிகள் பயிரிட ஆரம்பித்தனர். பெரவ சாதியினரான விவசாயிகள் பலர் வர்த்தகமுறை விவசாயத்தின் மூலம் பணம் படைத்தவர்களாக மாறினார்கள். கண்டி நகரை களமாகக் கொண்டியங்கிய மரக்கறி வியாபாரிகள் மரக்கறி வகைகளை மொத்தமாகக் கொள்வனவு செய்து பிற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதலாளித்துவ உற்பத்தியும் பரிவர்த்தனையும் கண்டியின் கிராமங்களின் பொருளாதார முறையில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியது. மரக்கறிப் பயிர்ச்செய்கை மூலம் வெலிவிற்றவின் பெரவச் சமூகத்திலிருந்து பணக்கார விவசாயிகள் பலர் தோன்றினர். அவர்கள் தாம் உழைத்த பணத்தை காணிகளைக் கொள்வனவு செய்வதில் முதலிட்டனர். புதிய வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டன. பெரவ சாதிப் பிள்ளைகள் உள்ளூர்ப் பாடசாலைகளிலும், நகரப் பாடசாலைகளிலும் கல்வி கற்பதற்காககச் சேர்ந்து கொண்டனர். கிராம மட்டத்தில் படித்த இளைஞர்கள் உருவாகினர். ஜனநாயக அரசியல் செயல்முறையூடாக ‘மெம்பர’ போன்ற கிராம மட்டத் தலைவர்களுக்கு அரசியல் அதிகாரம் கைமாற்றப்பட்டமை முக்கியமான மாற்றமாகும். இம்மாற்றம் கிராமப் புறங்களிற்குள் முதலாளித்துவ உற்பத்தியும் பரிவர்த்தனையும் புகுவதற்கும், கிராமியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

4. கண்டிய நடனமும் சிங்களத் தேசியவாதக் கருத்தியலும்

கண்டி நடனம் பெரவ சாதியின் பரம்பரைத் தொழில். சிங்கள தேசியவாதக் கருத்தியல் இதன் வளர்ச்சிக்கு உந்துதலை வழங்கியது. பண்பாட்டு நிறுவன அமைப்புக்களின் ஆதரவு கண்டிய நடனத்திற்குக் கிடைத்தது. கண்டிய நடனத்தை ஓர் மதிப்புக்குரிய நிகழ்த்துக் கலையாக வளர்ப்பதற்கு தேசிய மட்டத்திலான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. மேளமடித்தல் கலையை இளைஞர்களுக்குப் பயிற்றுவித்தல், நடனத்தைப் பயிற்றுவித்தல், பிற நிகழ்த்துக் கலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயற்படுத்தல் ஆகிய செயற்திட்டங்களில் ‘மெம்பர’ நேரடியாகப் பங்குபற்றினார். கிராமிய மட்டத்தில் ‘கலா ஆயதனய’ (கலா நிலையம்) என்னும் அமைப்புகள் நிறுவப்பட்டன. பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாகவும் பிற அரசு நிறுவனங்கள் ஊடாகவும் நிதி உதவி வழங்கப்பட்டது. இலங்கை இராணுவத்தில் நடனக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

பாடசாலைகளில் கண்டிய நடனம் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. கண்டிய நடனத்தில் பயற்சி பெற்றவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்கள் கிடைத்தன. இக் கலையைத் தமது குலத் தொழிலாக செய்து வந்த ‘பெரவ’ சாதி இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது ஏற்கப்பட்டது. நடனத் தொழில் மூலம் வெலிவிற்றவின் கண்டி நடனக் கலைஞர்கள் நிரந்தர வருவாயை பெற்று, சமூகப் படிநிலையில் உயர்ச்சியையும் மதிப்பையும் பெற்றனர். மெம்பரவின் அரசியல் தலைமை, வெலிவிற்றவின் மக்களுக்கு ஜனநாயக அரசியல் விடுதலைச் சக்தியாக (Liberating Force) அமைந்தது. ‘சமூகப் பண்பாட்டுத் தரகர்’ (Social and Cultural Broker), மாற்றத்திற்கான செயலி (Change Agent) ஆகிய வகிபாகங்களோடு  ‘மெம்பர’ ஒரு அரசியற் செயலி (Political Actor) ஆகவும் செயற்பட்டார். கண்டிய நடனக் கலைஞர்கள் சிங்கள பௌத்தத் தேசியத்தின் பண்பாட்டு மரபுரிமையின் பிரதிநிதிகளாக மதிப்பைப் பெற்றனர்.

ஜனநாயகத்தைச் சுதேசியப் பண்பாட்டுடன் கலத்தல் என்னும் ‘வெர்னாகுலறைசேசன்’ (Vernacularisation) அடிநிலை மக்களின் விடுதலையின் குறியீடாக அமைந்தது. சிங்களத் தேசிய இனம் (Sinhala Nation) வெலிவிற்ற போன்ற கிராமத்தவர்களையும் இணைத்துக் கொண்டது.

அ) ஜனநாயகமயப்படுத்தல் (Democratisation)

ஆ) சமூகநல அரசுக் கொள்கைள் (Welfare State Policies)

இ) தேர்தல் அரசியல்

ஈ) முதலாளித்துவ வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார விரிவாக்கம்

ஆகியவற்றின் கூட்டு விளைவாக அடிநிலைச் சாதிகளின் கிராமங்களில் சமூக, அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. நியுடன் குணசிங்க (1975), S.T. ஹெட்டிகே (1984), ஜேம்ஸ் புறோ (1978), தமரா குணசேகர (1992,1994) ஆகியோரின் ஆய்வுகள் அம்மாற்றங்களை விளக்கும் முறையில் அமைந்தன என ரியுடர் சில்வா குறிப்பிடுகின்றார் (பக். 447).

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

2899 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)