Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பாகம் 4

June 30, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் வெலிவிற்ற கிராமத்தில் சமூக நிலைமாற்றம் (Social Transformation) நிகழ்ந்தது. அந்நிலை மாற்றம் கண்டிப் பிராந்தியம் முழுமைக்கும் பொதுவானதாக இருந்தது என ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இச்சமூக நிலைமாற்றம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, கருத்தியல் என அனைத்துக் கூறுகளையும் தழுவியதாக இருந்ததெனவும் அவர் கூறுகின்றார். வெலிவிற்றவின் பொருளாதார நிலைமாற்றத்தை எடுத்துக் கொண்டால் அது:

அ) வெலிவிற்றவின் நெற்காணிகளில் சுழற்சி முறைப் பயிர்ச் செய்கையைப் புகுத்தியது.

ஆ) அக்கிராமத்தின் சுயதேவைக்கான உற்பத்தியை வர்த்தக விவசாயமாக (Commercial Agriculture) மாற்றியது.

இ) கூலிக்கு உழைக்கும் கூலித்தொழிலாளர் (Wage Labour) என்ற பிரிவினரைத் தோற்றுவித்தது. அருகே உள்ள பெருந்தோட்டத்தில் கூலியாட்களாக உழைப்பவர்களாகவும், தூரத்தே உள்ள வறண்ட வலயக் குடியேற்றத் திட்டங்களில் இடம்பெயர் கூலியாட்களாகவும் (Migrant Labour) வெலிவிற்றவின் மக்களில் ஒரு பிரிவினர் மாறக் காரணமாகியது.

இவை பொருளாதார மட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்களாகும். அக்கிராமத்தின் பண்பாட்டிலும், கருத்தியலிலும் சிங்கள பௌத்தத் தேசியவாதக் கருத்தியல் புகுந்தமை பிறிதொரு முக்கியமான மாற்றமாகும். இவை பிராந்திய மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களுமாகும். மேலும் இம்மாற்றங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதும் கவனிக்கத்தக்கது. கண்டியச் சமூகம் மெல்ல மெல்ல நிலமானியத்தில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறையை நோக்கிப் பயணிப்பதை இம்மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. வெலிவிற்றவிற்கு அருகேயுள்ள தெலும்கொட, யக்கடகம ஆகிய இரு கிராமங்களில் 1970 களில் நியுடன் குணசிங்க இனவரைவியல் ஆய்வினை (Ethnographic Research) நடத்தினார். அவரது கள ஆய்வு முடிவுகள் அக்கிராமங்கள் நிலமானியத்தில் இருந்து முதலாளித்துவத்தை நோக்கி நகர்ந்து செல்வதை உறுதிப்படுத்தின. (குணசிங்க 1975) அவரது ஆய்வு முடிவுகள் CHANGING SOCIO – ECONOMIC RELATIONS IN THE KANDYAN COUNTRYSIDE (1990) என்ற தலைப்பில் அமைந்த நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. கண்டிப் பிராந்தியத்தில் பேரளவிலான முழுமையான முதலாளித்துவ மாற்றம் நிகழவில்லை என்பதை நியுடன் குணசிங்க எடுத்துக் காட்டினார். சிற்றுடமை விவசாயம் அழிவுற்று நிலங்கள் யாவும் முதலாளித்துவ விவசாயிகளின் உடமைகளாக மாறுவதும், பெரும் முதலாளித்துவப் பண்ணைகளில் கூலிக்கு உழைப்பதுமான மாற்றம் வெலிவிற்ற போன்ற கிராமங்களில் ஏற்படவில்லை (பக்கம் 478).

வெலிவிற்றவின் சமூக மாற்றங்களின் உந்துவிசையாக ஜனநாயக அரசியல் (Democratic Politics) அமைந்தது. வெலிவிற்றவின் செயற்திறன் மிக்க அரசியல் தலைமைத்துவம் இருந்தது. காணிச் சீர்திருத்தம், உட்கட்டமைப்பு விருத்தி (Infra-Structural Development) ஆகியன தலைமைத்துவத்தின் சாதனைகள் எனலாம். யாவற்றிலும் மேலாக பொருளாதார, சமூக நிலைகளில் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்த அடிநிலைச் சாதி மக்களை வெலிவிற்றவின் அரசியற் தலைமை, அணி திரட்டி சமூக – பொருளாதார மாற்றங்களிலும் ஜனநாயக அரசியலிலும், செயலிகளாகவும் (Actors) பங்கேற்பாளர்களாகவும் மாற்றியது. கிராமத்திற்குள் சமத்துவ கருத்தியல் (Egalitarian Ideology) பரவியது. இக்கருத்தியல் அடிநிலைச் சாதிகளுக்கு எதிரான சாதித் தடைகளை உடைத்தெறிய உதவியது. அம்மக்கள் பிரஜை என்ற தகுதியை (Citizenship) தமது அடையாளத்தைக் கொண்டு வலுப்படுத்தி நிமிர்ந்து நின்றனர். ‘மெம்பர’, சாதி என்னும் காரணியை முரண்பட்ட முறையில் பிரயோகித்தார். சாதி முறைக்கு எதிரான அறைகூவலை விடுத்த ‘மெம்பர’ தனது மக்களின் சாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டார். நெற்காணிச் சட்டத்தை செயற்படுத்தி அவர் தனது சாதியினரான குத்தகை விவசாயிகளின் நலன்களுக்காக முன்னின்று உழைத்தார். தேர்தல் காலத்தில் அவர் சாதி உணர்வைத் தூண்டி வாக்குகளைக் கவர்ந்திழுத்தார். சிங்களத் தேசியவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதாக கண்டிய நடனம் பயன்படுத்தப்படுவதற்கு அவர் துணை போனார். ‘பொடி மினிஹா‘ (சிறிய மனிதன்) என்ற சொல்லாடல் மூலம், நலிவுற்ற தமது சாதி என்பதைப் பயன்படுத்தி, அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். சமூக, பொருளாதார வளங்கள் ‘பொடி மினிஹா’க்கள் சமூகமான, தன் சமூகத்திற்குக் கிடைப்பதற்கு வழி செய்தார்.

வெலிவிற்றவின் ஜனநாயக அரசியல் செயல்முறையில், சுதேசியப் பண்பாட்டுக் கருத்துக்கள் (Indigenous Ideas) ஜனநாயகக் கருத்துக்களுடன் கலந்து, ஒன்றை மற்றொன்று ஊடுருவிச் செல்லும் போக்கைக் காண முடிகிறது. ஜனநாயக எண்ணக்கருக்கள் (Democratic Concepts) இவ்வாறு முரண்பாடுடைய சுதேசியப் பண்பாட்டுக் கருத்துக்களுடன் ஊடுருவிச் செல்லுதல் (Interpenetration) ஒரு  விநோதமான தோற்றப்பாடாகும். 

‘பொடி மினிஹா’ என்னும் ‘Small Man’ கருத்துரு சாதிய அர்த்தத்தைக் கொண்டது. 1956 இற்குப் பிந்திய ஆட்சி இயலில் (Governance) பொடி மினிஹா என்னும் ‘Small Man’ தத்துவம் முக்கிய இடத்தைப் பிடித்தது. சிங்களம் மட்டும் சட்டம், நெற்காணிச் சட்டம் என்பன சிறிய மனிதர்களான மக்களுக்கு உதவுவன என நியாயப்படுத்தப்பட்டன (பக். 479). சமூக நல அரசு (Welfare State), சிறிய மனிதர்களுக்குச் சேவைகளை வழங்க வேண்டும் என்பது வெகுஜன அரசியலின் எழுதப்படாத விதியாக இலங்கையில் ஏற்புடமை பெற்றது. வெலிவிற்றவின் அரசியல் செயல்முறையை உற்று நோக்கும் போது, அங்கு அரசியல் அதிகாரம் ஒரு சில தனிநபர்கள் கையில் குவிந்திருப்பதைக் காண முடிகிறது. அரசியல்  முடிவெடுத்தல் (Political Decision  Making)  பற்றிய பொது விவாதம் பல்வேறு மட்டங்களிலும் இடம்பெறாத நிலையில், கிராம மட்டத்தில் சில தனிநபர்களைத் தாண்டி எந்த அரசியல் கருத்தும் உள்நுழைந்து விட முடியாது. கண்டிப் பிராந்தியத்தில் கிராம மட்டத்தில் அரசியல் வாயிற் காவலர்கள் (Political Gatekeepers) சிலர் தோன்றியிருப்பதைக் காணலாம். சிங்கள பௌத்த தேசியவாதம் (Sinhala Buddhist Nationalism போன்ற அரசியல் கருத்தியல்கள் கிராமிய மக்களிடம் மேலாண்மை (Hegemony) பெற்றிருப்பது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதற்கான  காரணத்தை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சில அரசியல் கருத்துகள் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. வேறுபல கருத்துகள் புகுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அரசியல் வாயிற் காவலர்கள் அவற்றைத் தடுத்து விடுகின்றனர்.

ரியுடர் சில்வா அவர்களின் கட்டுரையில் உள்ள கருத்துக்களைத் தழுவியும் சுருக்கியும் கூறும் முறையிலேயே இந்தத் தமிழ்க் கட்டுரையினை எழுத ஆரம்பித்தோம். ஆயினும் வெலிவிற்றவின் சமூக நிலைமாற்றம் என்னும் இப்பகுதி ரியுடர் சில்வா அவர்களின் கருத்துகளின் விருத்தி உரையாகவே அமைந்து விட்டது. அடுத்து ரியுடர் சில்வா அவர்கள் ‘பிரஜை அந்தஸ்தும் அடையாளமும் (Citizenship And Identity)’ என்ற தலைப்பில் எழுதியிருப்பவற்றை நோக்குவோம்.

பிரஜை அந்தஸ்தும் அடையாளமும்

ரியுடர் சில்வா அவர்களின் கட்டுரையில் மகுடம் போன்று அமைந்துள்ள சிறப்புடையது பிரஜை அந்தஸ்தும் அடையாளமும் (Citizenship And Identity) என்னும் பகுதியாகும். பிரஜா அந்தஸ்து நவீன அரசுகளின் கீழ் வாழும் மக்களை உரிமைகளின் உடமையாளர்களாக (Bearers of Rights) ஆக்குகிறது. பிரஜா அந்தஸ்து வழங்கும், உரிமைகளின் உடமை என்பதோடு இணைந்ததாக, பிரஜைகளுக்கு கடமைகளையும் (Duties) பிரஜா அந்தஸ்து விதிக்கிறது. இலங்கையில் 1931 ஆம் ஆண்டில் சர்வசன வாக்குரிமை இனம், மதம், மொழி, பிராந்தியம், பாலினம் என்ற வேறுபாடுகள் இன்றி வாக்குரிமையில் சமத்துவத்தை வழங்கியது. பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் பற்றிய எமது விளக்கத்தை அடுத்து, ரியுடர் சில்வா அவர்கள் கண்டியக் கிராமங்களில் அரசியல் ஜனநாயகத்தின் ஊடுருவலால் நிகழ்ந்த உணர்வுநிலை மாற்றங்கள் பற்றிக் கூறியிருப்பதை நோக்குவோம்.

பிரஜா அந்தஸ்தின் பயனாகத் தனிநபர்கள் தமக்குரிய உரிமைகள் பற்றியும் கடமைகள் பற்றியும் (Rights and Duties) உணர்வும் விழிப்பும் உடையவர்களாக இருக்க வேண்டிய தேவை உண்டாகிறது. அதே வேளையில் தேசிய அடையாளம் (National Identity) பற்றிய தீவிர உணர்வு, தமது சுய முன்னேற்றம் பற்றிய மிகையான உணர்வைத் தூண்டி விடுகிறது. அதனால் அவர்கள் பிற பிரஜைகளுக்குரிய உரிமைகளை அலட்சியம் செய்வதோடு, அவ்வுரிமைகளைப் பிறருக்கு மறுப்பதற்கும் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, பிற இனத்துவச் சமயக் குழுக்களின் (Ethno – Religious Groupings) உரிமைகளை அலட்சியம் செய்து மறுக்கிறார்கள் (பக். 479 – 480).

வெலிவிற்றவின் பெரும்பான்மையினரான பெரவ சமூகத்தினர் பிரஜா அந்தஸ்தின் பயனாகக் கிடைத்த வாக்குரிமையைப் பயன்படுத்தி 1934 இல் ‘மெம்பர’ வை கிராமச் சபை உறுப்பினராக்கினர். அவர்கள், தாம் சில உரிமைகளின் உடமையாளர்கள் (Rights Bearers) என்பதை உணர்ந்து விழிப்புணர்வு பெற்றனர். அதே வேளை சிங்கள – பௌத்த தேசியவாத அடையாள (Identity) உணர்வும் அவர்களின் உணர்வு நிலையில், அரசியல் ஜனநாயகம் ஊடாகக் கிளர்ந்தெழுந்தது. தமிழ் பேசும் மக்கள் உட்படப் பிற இன – மத – மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி அக்கறைப்படாத, அலட்சியம் செய்யும் மனப்பாங்கு இனவாதக் கருத்தியல் ஊடாக ஊட்டப்பட்டது. ‘சிறிய மனிதர்’ தத்துவம் ஆட்சி இயலின் (Governance) எழுதப்படாத விதியாக, வழிகாட்டும் விதியாக மாறியது. பிரஜா அந்தஸ்துப் பற்றிய விரிந்த கருத்து (A Broader Concept of Citizenship) உருவாக்கம் பெறுவதை, தேசிய அடையாளம் (National Identity) தடுத்தது. இதன் விளைவுகள் பின்வருவன:

  1. வேலையின்மைப் பிரச்சினையும் வேலையைப் பெறும் உரிமையும்

கண்டியின் கிராமங்களில் வேலையின்மைப் பிரச்சினை 1970 களில் மேலும் மோசடைந்தது. வேலையைப் பெற்றுக் கொள்வதற்கு அரசின் மீது முழுமையாகத் தங்கியிருக்கும் நிலை (Heavy Dependence on State) உருவானது. அரச நியமனங்களை அரசியல் முகவர்களூடாக (Political Channels) பெற்றுக் கொள்ளுதல் வழமையாக்கப்பட்டது. அதிகாரத் தரகர்கள் (Power Brokers), அடிநிலைச்சாதி மக்களின் வாக்குகளைக் கவர்ந்து வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காக வேலையற்ற இளைஞர்களின் பட்டியல்களைத் தயாரித்து அவ் இளைஞர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கினர். 1978 ஆம் ஆண்டில் தாம் வெலிவிற்றவில் கள ஆய்வு செய்த வேளையில், வேலை வங்கித் திட்டம் (Job Bank Scheme) ஆளும் கட்சியால் செயற்படுத்தப்பட்டதாக ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். இத்திட்டம் வேலைகளுக்குக் காத்திருத்தல் (Waiting), பின்னர் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைதல் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும் செயற்திட்டமாகும். கிராமத்திற்கு வெளியே உள்ள அரசியல்வாதிகள், கிராமத்தின் வாக்கு வங்கியை (Vote Bank) குறி வைத்து வேலை வங்கித் திட்டத்தைச் செயற்படுத்தினர்.

  1. சிங்கள பௌத்த தேசியவாதக் கருத்தியல்

சிங்கள பௌத்த தேசியவாதக் கருத்தியல், கிராமத்து இளைஞர்களிடம் பல தப்பெண்ணங்களை உருவாக்கியது. தமது பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், தம் மத்தியில் உள்ள பணம் படைத்த உயர் குழுக்களும், தமிழர்கள் போன்ற இனத்துவ பிறத்தியார்களும் (Ethnic Other) தான் என அவர்கள் நம்பத் தொடங்கினர். மக்களிடமும் இக்கருத்துப் பரவலாக்கப்பட்டு உட்செரிக்கப்பட்டது. சிங்கள வன்முறைக் கும்பல்கள் கண்டிப் பிராந்தியத்தின் தோட்டத் தொழிலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தின. தோட்டத் தொழிலாளர்களைத் தோட்டங்களில் இருந்து துரத்தியடித்து விட்டால், சிங்கள விவசாயிகளின் காணிப் பஞ்சம் (Land Hunger) நீங்கி விடும்; இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான உணர்வுகள் தூண்டப்பட்டன. சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு, சிங்களவர்கள் அல்லாத பிரஜைகளே (Non-Sinhala Citizens) காரணம் எனக் கூறப்பட்டது. அடையாளம் – அடையாள உணர்வு என்பனவற்றை, இனத்துவப் பிறத்தியாரின் உரிமைகளைப் பறிப்பதற்கு உபயோகிப்பதற்கு, இதுவோர் சிறந்த உதாரணமாகும்.

  1. சாதி அடையாள உணர்வு

மிகையான – தீவிர சாதி உணர்வு, சிங்கள சமூகத்தின் பிறசாதிகள் மீதும் இனம், மொழி, மத அடிப்படையில் சிறுபான்மையினரான பிற குழுக்கள் மீதும் வெறுப்புணர்வை தூண்டுவதற்குக் காரணமாக அமைகின்றது. வெலிவிற்றவில் ‘நவண்டன’ (கொல்லர்கள்), ஹேன (சலவைத் தொழிலாளர்கள்) என்ற இரண்டும், பெரவ சாதிக்குழுவை விடச் சிறிது உயர்ந்ததான இடைத்தர அந்தஸ்தில் இருந்து வந்தன. ஆயினும் அச்சாதியினரிடையே பெரும்பான்மையினர் ஏழைகளாகவே இருந்தனர். ‘பட்டி’ சாதிக்குழுமம் சாதிப் படிநிலையில் பிற மூன்று சாதிகளையும் விட உயர் நிலையில் இருந்த போதும் அச் சாதியினரிடையேயும் பலர் ஏழைகளாக இருந்தனர். மேளம் அடிப்போரான ‘பெரவ’ சமூகத்தின் நலன்களைப் பேணும் வகையில் அரசியல் அதிகாரம் வெலிவிற்றவில் பிரயோகிக்கப்பட்டதால், பிற சமூகக் குழுக்களிற்குப் பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும், கிராமத்திற்குள்ளேயே நாம் ‘பிறர்’ என்ற அடையாள உணர்வு தோற்றுவிக்கப்பட்டது என்றும் ரியுடர் சில்வா அவர்கள் குறிப்பிடுகிறார். சாதி உணர்வு தேசிய மட்டத்தில் இனங்களுக்கிடையேயான நல்லுறவுக்குத் தடையாக உள்ளது. நாட்டின் பன்மைத்துவம் பற்றிய கூருணர்வுடைய (Sensitivity) பிரஜைகள் சமூகமாக இலங்கையர் சமூகம் உருவாவதற்கு சாதியுணர்வு தடையாக அமைகிறது. உள்நாட்டுப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  1. கண்டிய நடனம்

கண்டிய நடனம் தேசிய நடனமாகத் தரம் உயர்த்தப்பட்ட போது நாட்டின் மரபுரிமையான கண்டிய நடனம் தமது பரம்பரை உரிமை என்ற உணர்வு பெரவ சமூகத்திடம் வலுப்பெற்றது. ஆயினும் சிங்கள பௌத்த தேசியவாதம் அக்கலைப் பண்டத்தைப் பொதுப் பண்டமாக மாற்றிய போது, பெரவ சமூகத்தினர் தாம் அந்நியப்படுத்தப்பட்டது போன்றும் தமது உரிமைகளை இழந்து விட்டது போன்றும் உணர்ந்தனர். கலைப்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், ‘கலா ஆயதன’ (கலா நிலையம்) போன்ற நிறுவனங்கள், கலைஞர் குழுக்கள் என்பன கண்டிய நடனத்தைப் பயிற்றுவிக்க ஆரம்பித்தன. பிறர் தமது கலையைப் பயின்று தமது பரம்பரைக் கலையை கையகப்படுத்துதல், பெரவ சாதியினரால் விசனத்துடன் நோக்கப்பட்டது. பாடசாலைகளில் கண்டிய நடனம் ஒரு பாடமாக்கப்பட்ட போது, நடன ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டன. தமது தொழில் உரிமையைப் பிறர் அத்துமீறிப் பறித்துக் கொள்வதாக, பரம்பரையாக நடனக்கலையைப் பயின்று வந்தோர் உணர்ந்தனர்.

kandyan dance

முடிவுரை

இக்கட்டுரையில் விளக்கிக் கூறப்பட்டுள்ள முக்கிய கருத்துக்கள் சில இம்முடிவுரையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

  1. கண்டியின் நிலமானிய சமூக அமைப்பில் ஜனநாயக அரசியல் பன்முகப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தியது. ஜனநாயக அரசியல் ஓர் விடுதலைச் சக்தியாகச் செயற்பட்டது. ஆயினும் அது சாதிய அடையாள உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் முரண்பாடுகளையும் வளர்த்தது. சமத்துவமான பிரஜா அந்தஸ்தை உருவாக்குவதற்கும், அரசியல் – சமூக முரண்பாடுகளைத் தீர்வு செய்வதற்கும் சாதிய அடையாள உணர்வு தடையாக அமைந்தது.
  1. ஜோர்ஜ.ஈ.டி. சில்வா கண்டியப் பிராந்தியத்தில் விளிம்பு நிலைச் சாதிகளைத் தேர்தல் அரசியல் மூலமாக தனது தலைமையில் ஓரணியில் திரட்டினார். இதனையடுத்து எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின், 1956 இன்  மக்கள்வாத அரசு, விளிம்பு நிலைச் சாதிகளின் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர், பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகங்கள் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்தன. ‘மெம்பர’ போன்ற அரசியற் தலைவர்கள் கிராம மட்டத்தில் இருந்து தோன்றினர். காணிச் சீர்திருத்தம், உட்கட்டமைப்பு விருத்தி, கல்வி விருத்தி என்பன விளிம்புநிலைச் சாதிகளின் உயர்ச்சிக்கு வழியமைத்தன. சமூக அசைவியக்கம் (Social Mobility), விளிம்பு நிலைச் சாதியினரின் மேல்நோக்கிய உயர்ச்சிக்குக் காரணமாயிற்று. இதன் விளைவால் கிராமங்களின் அதிகாரக் கட்டமைப்பு மாறியது.
  1. சிங்கள பௌத்த தேசியவாதம் கண்டிய நடனத்தை தேசத்தின் மரபுரிமையாகத் தரம் உயர்த்தியது. கண்டிப் பிராந்தியத்தின் விளிம்பு நிலைச் சமூகத்தின் பரம்பரைக் கலை வடிவம் ஒன்றிற்குக் கிடைத்த இம் மதிப்பு அக்கலையைப் பரம்பரை பரம்பரையாகப் பேணிப் பாதுகாத்து வந்த சமூகப் பிரிவினருக்கு புதிய அடையாள உணர்வை வழங்கியது.
  1. சிங்கள பௌத்த தேசியவாதம் ஜனநாயகத்தை பண்பாட்டுடன் கலக்கும் செயல்முறையை (Vernacularisation of Democracy) தொடக்கி வைத்தது. இதன் பயனாக வெலிவிற்ற போன்ற கிராமங்களில் பிரஜா அந்தஸ்து வழங்கும் தனிநபர் உரிமைகள், சாதி அடையாளத்தின் ஊடாக அடையப் பெறும் கூட்டு உரிமைகளாக (Collective Rights) அர்த்தம் கொள்ளப்பட்டன. பயிர்ச் செய்கைக் காணியின் குத்தகை உரிமை, காணியுரிமை, கல்வி உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவ உரிமையாகப் பார்க்கப்பட்டது. தேர்தல் அரசியல் மூலம் அணிதிரட்டப்பட்ட மக்கள், கூட்டு உரிமைகளைப் பெறுவதன் மூலம் கௌரவத்தையும் மதிப்பையும் பெற்றனர்.
craft
  1. ‘மெம்பர’ போன்ற கிராம மட்டத் தலைவர்களின் தோற்றம் சாதியைச் சமூகக் குழுமங்களின் அடையாளத்திற்கான அடிப்படையாக மாற்றியது. சாதிக்குப் புதிய வரைவிலக்கணம் (Redefinition of Caste) கொடுக்கப்பட்டது. உயர் சாதியினருக்குச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகவிருந்த சாதிச் சேவை (Caste Service) ஒரு கலை வடிவமாகவும், பண்பாட்டு மரபுரிமையாகவும் புதிய வரைவிலக்கணத்தைப் பெற்றது. கண்டியின் கைவினைக் கிராமங்களின் (Craft Villages) உற்பத்திப் பொருட்கள், தேசத்தின் பண்பாட்டு மரபுரிமையின் சின்னங்களாகவும் கலைப் பொருட்களாகவும் நோக்கப்பட்டன.

ஆதாரம்

book

Kalinga Tudor Silva  எழுதிய ‘CASTE, DEMOCRACY AND POST-INDEPENDENCE SOCIAL TRANSFORMATION IN A KANDYAN VILLAGE’ என்னும் தலைப்பிலான கட்டுரை. DEMOCRACY AND DEMOCRATISATION IN SRI LANKA : PATHS TRENDS AND IMAGINATIONS என்னும் நூலின் 11 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ளது (449-485).

கலிங்க ரியுடர் சில்வா

tudor silva

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் கலைமாணிப் பட்டத்தையும், அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் Ph.d பட்டத்தையும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் பேராசிரியராகவும் அப்பல்கலைக் கழகத்தின் கலைப்பீடத்தின் பீடாதிபதியாகவும் 40 ஆண்டு காலம் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தகைசால் பேராசிரியராவார். 2001 முதல் 2022 வரை ‘CEPA’ ஆய்வு நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளராகவும், 2007 முதல் 2008 வரை ‘ICES’ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளாராகவும் கடமையாற்றியனார்.

DECOLONISATION, DEVELOPMENT AND DISEASE : A SOCIAL HISTORY OF MALARIA IN SRI LANKA  (2014) என்னும் இவரது நூலை Black Swan பதிப்பகம் வெளியிட்டுள்ளது. TEMPLE, CHURCH AND MOSQUE : A COLLABORATIVE ETHNOGRAPHY OF WAR AND PEACE என்னும் இவரது நூல் Pluto Press (2015) வெளியீடாக வெளிவந்துள்ளது.  

உசாத்துணை நூல்கள்

  1. BROW,JAMES.1978. THE CHANGING STRUCTURE OF APPROPRIATIONS IN VEDDA AGRICULTURE, AMERICAN ETHNOLOGIST, 5:3, 448-467.
  2. GUNASEKERA, TAMARA.1992. DEMOCRACY, PARTY COMPETITION AND LEADERSHIP : THE CHANGING POWER STRUCTURE IN A SINHALESE VILLAGE. IN JAMES BROW AND J. WEERAMUNDA (EDS.), AGRARIAN CHANGE IN SRILANKA. NEW DELHI : SAGE, 229-260.
  3. GUNASINGHE,NEWTON. 2007. CHANGING SOCIO – ECONOMIC RELATIONS IN THE KANDYAN COUNTRYSIDE. COLOMBO : SOCIAL SCIENTIST ASSOCIATION.
  4. JAYAWARDENA, KUMARI. 2000. NOBODIES TO SOMEBODIES: THE RISE OF THE COLONIAL BOURGEOISIE IN SRILANKA, COLOMBO : SOCIAL SCIENTIST ASSOCIATION AND SANJIVA BOOKS.
  5. JIGGINS, JANICE. 1979. CASTE AND FAMILY IN THE POLITICS OF THE SINGHALESE 1947-1976. CAMBRIDGE UNIVERSITY PRESS.
  6. LEACH, E.R.1961. PUL ELIYA : A VILLAGE IN CEYLON. CAMBRIDGE UNIVERSITY PRESS.
  7. MICHELUTTI, L. 2007. ‘VERNACULARISATION OF DEMOCRACY : POPULAR PARTICIPATION AND POPULAR POLITICS IN NORTH INDIA. JOURNAL OF ROYAL ANTHROPOLOGICAL INSTITUTE.13, 639-659.
  8. RUSSEL, JANE. 1981. OUR GEORGE : A BIOGRAPHY OF EDMOND DE SILVA. COLOMBO: TIMES OF CEYLON.
  9. RYAN, BRYCE. 1953. CASTE IN MODERN CEYLON : THE SINHALESE SYSTEM IN TRANSITION. NEW BRUNSWICK: NJ: RUTGERS UNIVERSITY PRESS.
  10. RYAN, BRYCE. 2004. CASTE IN MODERN CEYLON. NEW DELHI : NAVRANG.
  11. SILVA, K.T. 1982. CASTE, CLASS AND CAPITALIST TRANSFORMATION IN HIGHLAND SRILANKA: MELBOURNE. MONASH UNIVERSITY. (PHD. THESIS).
  12. SILVA, K.T. 1992. CAPITALIST DEVELOPMENT, RURAL POLITICS AND PEASANT AGRICULTURE IN HIGHLAND SRILANKA: STRUCTURAL CHANGE IN A LOW CASTE VILLAGE. IN JAMES BROW AND J.WEERAMUNDA (EDS.), AGRARIAN CHANGE IN SRILANKA. NEW DELHI : SAGE, 63-94.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

1781 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)