அறிமுகம்
மனிதகுலம் ஏனைய உயிரினங்களில் இருந்து வேறுபட்டு தனி அடையாளங்களோடு – பகுத்தறிதலோடு இயங்கத் தொடங்கிய இனக்குழுமக் காலந்தொட்டு வீரம் – போர் என்பன தவிர்க்க முடியாதவையாகி விட்டன. தனக்காக மட்டுமன்றி இனக் குழுவுக்காகப் போராடுதலும் இன்றியமையாததாயிற்று. தமக்காகப் போராடி உயிர்நீத்த தலைவனை அல்லது வீரனை அவ்வவ் இனக்குழு மக்கள் போற்றினர். இனக்குழுவின் பகையை வெல்லல், வேட்டை, குழுவின் தேவைகளை நிறைவேற்றல், பகை விலங்குகளைக் கொல்லுதல் – வெல்லுதல் என ‘வீரன்’ சாகசம் காட்ட பல சந்தர்ப்பங்கள் காத்துக் கிடந்தன. காலங்காலமாக அவர்களது வீரம் கதை கதையாகக் கூறப்பட்டது. அதன் வழி நீத்தார் வழிபாடு, முன்னோர் வழிபாடு, நினைவுக்கல் அல்லது நடுகல் வழிபாடு உருவாயிற்று.
இயற்கையான போராட்ட வாழ்வில் தொழில் வழி மனித இனக்குழுக்கள் உருவாயின. தம்மை, தம் இனக்குழுவைக் காத்த தலைவனும் வீரனும் அவ்வவ் மக்களால் போற்றப்பட்டனர். காலப்போக்கில் அவர்கள் குழுவின் – குலத்தின் தெய்வமாக்கப்பட்டனர். குலதெய்வம் உருவாயிற்று. வீரவேங்கையிலிருந்து தலைவன் வரை இவ்வழிபாடு நிகழ்த்தப்பட்டதாயினும் அவரவர் வீரபராக்கிமங்களுக்கும் அவரவர் பற்றிய கதைகளுக்கும் காலச்சூழலுக்கும் ஏற்ப அவர்கள் காலங்கடந்தும் வழிபடப்பட்டனர். அது குலமரபாக பரம்பரைகள் பல கடந்தும் நீடித்தது. ஒரு கட்டத்தில் வாய்மொழி மரபுக் கதைகள் இழை அறுந்தறுந்து போக கதைகள் அற்ற, காரணம் தெரியாத, ஆனால் மரபுவழி நம்பிக்கையால் வழிபடப்படும் தெய்வங்களாக அது மாறத் தொடங்கியது. குல ஏற்றத்தாழ்வுற்ற மக்களின் சாதிய நீக்கவுணர்வின் வழியும் பிற்காலப் பகுத்தறிவு வாதத்தின் வழியும் இவ்வழிபாடுகள் கைவிடப்பட்டன அல்லது காரணம் தெரியாத மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டன.
ஆனால் இத்தெய்வங்களின் பத்ததிகளும் வாய்மொழி வழக்காறுகளும் அந்த நிலத்தின் சுதேச வரலாற்றை எழுத பெரிதும் உதவ வல்லன என்ற வரலாற்றுச் செய்தி முக்கியமானதாகும். இவ்வாறு மறக்கப்பட்டு வருகின்ற – வீர வரலாற்றை உடைய துணைத்தெய்வமே நீலாசோதையன் எனும் தெய்வமாகும்.
நாட்டார் தெய்வம் பற்றிய எழுநா எழுத்துகள் பற்றி உரையாடிய பின் நண்பர் – கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் – கலாநிதி வாமன், நீலாசோதையன் பற்றி எமக்குத் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் புன்னைச்சோலை பூசாரியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்வழி உருவான அருட்டுணர்வால் மாணவ நண்பர்கள் சு. தாரங்கன், எஸ். அபிக்ஷனா, ஈ. நவிசா மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முகாமைத்துவ உதவியாளர் நண்பர் விஜிகரன் ஆகியோரின் உதவியுடன் இதற்குரிய கள ஆய்வில் ஈடுபட்டோம்.
நீலாசோதையன்
ஈழத்தில் நின்று நிலவுகின்ற குலதெய்வங்களுள் ஒன்று பெரியதம்பிரான். சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வம் இது. தக்கன் சிவனை அழைக்காது செய்த யாகத்தில் யாக புருக்ஷனாகத் தோன்றியவன் பெரியதம்பிரான் என்றும், யாகத்தை அழிக்கத் தோன்றிய சிவனின் அம்சமான வீரபத்திரர் தக்கனின் தலைகிள்ளி ஏனைய தேவர்கள் உள்ளிட்டவர்களை துவம்சம் செய்ததைக் கண்டு அஞ்சியோடியவர்களில் ஒருவனே பெரியதம்பிரான். அவ்வாறு ஓடிப்போனவன் குளத்தங்கரையொன்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான். அத்தொழிலாளியும் துவைக்கப் பயன்படுத்தும் பெரிய ஜாடியை அவன் மேல் கவிழ்த்து மூடிவிட்டான். அவனைத் தேடி வந்த வீரபத்திரரைச் சிறிது தேற்றி தான் பெரியதம்பிரானை ஒளித்து வைத்த வரலாற்றை உரைத்தான். அவனது சாமர்த்தியத்தைப் பாராட்டிய வீரபத்திரர் சாடிக்குள் உள்ளவனே உங்கள் குலதெய்வம் என்றும் அவன் உங்கள் பிணி, துன்பம் முதலியவற்றை நீக்க வல்லான் என்றும் கூறிச் சென்றார். அன்று தொட்டு சலவைத் தொழிலாளிகளின் (வண்ணார் – கட்டாடியார்) குலதெய்வமாகப் பெரியதம்பிரான் விளங்கி வருகின்றார் என்பது பொதுநிலைக் கருத்தாகும் (கனகரத்தினம், இரா. வை., 2016). யாகத்திலிருந்து எழுந்த யாக புருக்ஷனைக் காட்டி “இவர் யார்?” என தேவர்கள் வினாவ, பிரம்மா “எம் தம்பிரான் பெரியதம்பிரான்” எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது (நேர்காணல்: கிருக்ஷ்ணபிள்ளை புவனேசராசா. புன்னைச்சோலை, மட்டக்களப்பு).
புன்னைச்சோலை காளிகோயில் பூசாரியான கி. புவனேசராசா (யோகன் ஐயா) சாடி கொண்டு மூடிய கதையை மறுத்து, தலையில் கட்டி இருந்த சால்வையை (சால் – சால்வை) அவிட்டு பாதையின் குறுக்கே போட்டு அதனைத் தாண்டிச் செல்ல முடியாதபடி செய்ததாகவும் இதுவே ‘சால்வை தாண்டுதல்’ சம்பிரதாயமானதாயும் கூறுகிறார். மேலும் பெரியதம்பிரானுக்கு பூஜை செய்து வழிபடுமாறு கூறியபோது “தீட்டுத் துணியை அன்றாடம் தொடும் நான் எவ்வாறு பூசை செய்ய இயலும்” என காளியன் கேட்டதாகவும் “உன் குலத்தோர்க்குத் தீட்டேதும் இன்று தொட்டு இல்லை” எனக் கூறியதாகவும் யோகன் பூசாரியும் மறவன்புலோ ஆனந்தரஞ்சனும் கூறுகின்றனர். அத்தோடு இவ்வரம் பெற்ற காளியன் “இவ்வரம் தந்த நீ எதிர்ப்பூசைக்கு இவ்வாலயத்தில் இருக்க வேண்டும்” என வேண்டியதாகவும் அவரும் சம்மதித்து வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது. அத்தோடு புன்னைச்சோலை யோகன் பூசாரி “சிவனுக்கழைப்பில்லாத யாகத்தில், யாக குண்டத்தில் இருந்து சிவனின் அம்சமான பெரியதம்பிரான் தோன்றியிருக்க முடியாது என்றும் அதனை சிவனின் இன்னொரு அம்சமான வீரபத்திரர் கொல்வதற்குத் துரத்துவாரா என்றும் கூறி, ஆகவே பெரியதம்பிரான் விக்ஷ்ணுவின் அம்சம்” என்கின்றார். இத்தர்க்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதேநேரம் துரத்திச் சென்றது வீரபத்திரரல்ல சனீஸ்வரன் எனத் தனிக் கதையை மறவன்புபுலவு ஆனந்தரஞ்சன் (செல்லக்கிளி) முன்வைக்கின்றார்.
இந்தப் பெரியதம்பிரான் இருக்குமிடமெல்லாம் இவரோடு இருக்கும் தெய்வம் நீலாசோதையன். நீலன் அவரது பெயர் என்றும், சோதையன் என்பது சாதிப்பெயர் என்றும் கூறப்படுகின்றது. சோதையன் என்பது குளம் வெட்டும் மக்களைக் குறிக்கும். அவர்களின் தெய்வம் நீலாசோதையன். குளத்தில் சலவைத் தொழில் செய்பவர்களான வண்ணார், கட்டாடியார் ஆகிய இரு சாதிகளினதும் கலப்பின் வழி ஒரு கோயிற் தெய்வங்களாகி, பின் சோதையர் குலம் அருக, பெரியதம்பிரான் முதன்மைத் தெய்வமாகியிருக்கலாம். யாழ்ப்பாணத்துப் பெரியதம்பிரான் பூசாரிகள் பலரும் (ஏழாலை பெரியதம்பிரான் பூசாரி, இருபாலை பெரியதம்பிரான் பூசாரி தவிர) இரண்டும் ஒருவரையே குறிக்கின்றது என்கின்றனர்; மறுபெயர்கள் என்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இரு தெய்வமும் இணைத் தெய்வங்களாகக் கருதப்பட்டு, பெரியதம்பிரான் கோயில் எனக் கூறப்பட்டாலும், ஒரே சடங்கு – வழிபாட்டுத் தெய்வங்களாகவே அவை சுட்டப்படுகின்றன.
ஈழத்துப் பெரியதம்பிரான் கோயில் மரபில் தெய்வமாடி பெரியதம்பிரானை முன்னுறுத்தி சொற்ப நேரமே கலையாடுவதும் நீலாசோதையனாகவே பெரிதும் தெய்வமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாண மரபில் இரு தெய்வங்களுக்குமான தனிக் கதைகள் அருகிவிட்டன. பெரியதம்பிரானே குலதெய்வமாக – பெருந்தெய்வமாக மேலெழுந்து நிற்கின்றார். கிழக்கிலங்கையில் இன்றும் நீலாசோதையனுக்கு தனியிடம் வழங்குதல் குறிப்பிடத்தக்கது.
நீலாசோதையன் பற்றிய கதைகள்
இலங்கையில் ஆதி மாமலையில் பிறந்து மகர மாமலையில் வளர்ந்து தம்பளம் மலையில் (தம்பதெனிய – சிகிரியா ஆக இருக்கலாம்) பெரியதம்பிரான் முடி சூட்டுகின்றார். இவரை வளர்த்தவர் ‘சிறுக்கியன்’ இராசா எனப்படுகிறார். பெரியதம்பிரானது புத்திசாலித்தனம் கண்டு வியந்த இராசா, சோதிடத்தில் வல்ல அந்தணரை அழைத்து இவரது வாழ்வைக் கணிக்கச் சொல்கின்றார். தக்கன் யாகம் நடத்தப்பட்ட காலத்தில் எல்லாக் கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நின்றது போல இவரது பிறப்புக் காலத்திலும் நின்றதனால் ‘720’ காதவெளி தூரம் ஒரு குடையின் கீழ் ஆளுவார்; கருடக்கொடி, வெண்சங்கு, வெண் முத்துமாலை தரித்து (இவை பிற்கால வைணவ – விக்ஷ்ணு அடையாளங்கள் என்பது கவனிக்கத்தக்கது) ஆட்சி செய்வார் எனக் கணித்தனர்; அதுவே நடந்தது. பராக்கிரமம் மிக்க அரசனானான்.
இவர் பிறந்த அதே நேரத்தில் வலவை (உடவளவ) அரசாட்சிப் பிரதேசத்தில் நீலன் – யசோதை எனும் சலவைத் தொழிலாள தம்பதியினருக்கு ஒரு மகவு பிறந்தது. அதுவே நீலாசோதையன். இத் தம்பதியினர் அரண்மனையில் வாழ்பவர்களின் ஆடைகளை சலவை செய்து கொடுப்பவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஒரு நாள் தாயுடன் நீலாசோதையனும் அரண்மனைக்குச் சென்றான். தாய், மகனை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அரண்மனைக்குள் சென்றாள். மகன் நின்ற இடத்துக்கருகே அரசனின் உடற்பயிற்சிக்கூடம் இருந்தது. அங்கு அரசன் பயிற்சி செய்யும் ‘1000’ துலாம் நிறையுடைய தண்டாயுதம் இருந்தது. அந்தளவு நிறையுடைய தண்டாயுதத்தைத் தூக்குவார் அரசனைத் தவிர யாருமில்லை. நீலாசோதையன் அத் தண்டாயுதத்தைத் தூக்கி எறிந்தான். அது மறுதிசையில் விழுந்தது. அவன் தாயுடன் வீட்டுக்குச் சென்று விட்டான். உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்த அரசன் உரிய இடத்தில் தண்டாயுதம் இல்லாததையும் வேறு திசையில் அது இருப்பதையும் கண்டு காவலர்களை வினாவி நடந்ததை அறிந்தான்; நீலாசோதையனை அழைப்பித்தான்; பரீட்சித்தான். அவன் பராக்கிரமம் கண்டு மகிழ்ந்து நண்பனுமாய் மந்திரியுமாய் ஆக்கிக் கொண்டான்.
ஒரு பொழுது இருவரும் வடதிசை நோக்கி, நகரச் சோதனை சென்றபோது பெண்ணின் அழுகுரல் ஒன்று கேட்டது. நீலாசோதையன் அத்திசையில் ஒரு பெண் சிறுவெளிச்சத்தில் இருந்து அழுவதைக் கண்டு நடந்ததை வினாவினார். “மதுரை இராசா, உங்கள் இராசாவைக் கொலை செய்து விட்டான்” என அறிவித்துவிட்டு அங்கிருந்த “6000 ஆண்களைக் கைது செய்து, கொண்டு சென்று விட்டான்” எனக் கூறி அழுதாள்.
அவர்களை மீட்க அரசனும் நீலாசோதையனுமாக ‘60’ குமாரர்களைத் திரட்டி படையெடுத்துச் சென்று நந்தூர்க் கடலில் (இது முல்லைத்தீவு நந்திக் கடலாக இருக்கலாம்) தரித்து நின்றனர். இவர்களிடம் மரக்கலங்கள் இருக்கவில்லை. நாள் செல்லச் செல்ல படைவீரர்கள் மெல்ல மெல்லத் தத்தம் வீடு திரும்பினர். எஞ்சியவர் அரசனும் மந்திரியுமே. கோபங்கொண்ட நீலாசோதையன் தண்டாயுதத்தால் கடலை அடிக்க கடல் பிரிந்து வழி விட்டது. தொடர்ந்து தண்டாயுதத்தால் அடித்து அடித்து அக்கரையை சென்றடைந்தனர். தண்டாயுத்தால் கடலை அடித்து பாதை ஏற்படுத்தியவர் பெரியதம்பிரான் என்று பாண்டிருப்பு பூசாரி வே. கணபதிப்பிள்ளை கூறுகிறார் (கனகரத்தினம், இரா. வை., 2016). அரசன் அரண்மனைக்குள் உட்புக, நீலாசோதையனோ குஞ்சரப்பந்தி புகுந்து (யானைகள் கட்டுமிடம்) யானையை யானையால் அடித்துக் கொன்றான். நேரே உட்புகுந்த அரசனின் பராக்கிரமத்தைக் கண்ட மதுரை இராசா அரியணையில் ஒரு ஓரத்தில் உட்கார, அதில் அரசன் உட்கார்ந்து தண்டாயுதத்தைத் தன் மடியில் வைத்து அதன் நுனியை மதுரை இராசாவின் மடியில் வைத்தான். கனம் தாங்காது மதுரை இராசா தவிக்கும்போது யானைகள் கொல்லப்படும் சேதியை காவலன் உரைக்கின்றான். மதுரை இராசா இறுதியில் இவர்களிடம் மன்னிப்புக் கேட்டு செல்வமும் அளித்து வழியனுப்புகின்றான். அரசனும் நீலாசோதையனும் 6000 பேரை மீட்டதோடு 12,000 மக்களைச் சிறை பிடித்து இலங்கை மீண்டனர். அனுராதபுரக் காட்டை வெட்டி 12,000 பேரையும் குடியமர்த்தினர். இதனாலேயே பெரியதம்பிரான் பத்ததிப் பாடல்களில் ‘அனுராதபுரி அரசே’ எனும் விளிப்புக் காணப்படுகிறது. இக்கதையின் பெரும்பகுதி இரா.வை. கனகரத்தினம், புன்னைச்சோலை காளியம்மன் பூசாரி யோகன் ஐயா உள்ளிட்டவர்களால் ஒரே மாதிரியாகவே கூறப்படுகின்றது. அதேவேளை யோகன் ஐயா அந்த அரசன் கஜபாகு மன்னன் என்றும் அவன் கி.பி 2 ஆம் – 3 ஆம் நூற்றாண்டுக்குக்குரியவன் என்றும் கூறுகின்றார். ஆயினும் இதற்கான ஆதாரத்தைத் தேடுதல் கடினமாகவே உள்ளது.
அதேவேளை ஆலய பூசகர் இறந்திருந்ததை அறிந்து குளக்கோட்ட மன்னன் கோணேசர் கோயிலைத் தரிசிக்க குதிரையிலேயே வந்த போது, சுரங்க மண்டபம் தரிசித்ததாகவும் சிவ நடனத்தைக் கண்டு தன்னிலை மறந்து நின்றதாகவும், இதனால் பக்தி மேலிட்ட மன்னன் கோயிலைப் புனரமைத்துப் பணியாளர்களை நியமித்ததாகவும், சம்பூர் – தோப்பூர் முதலிய இடங்களில் இந்தியாவிலிருந்து குடிகளை அழைத்து வந்து குடியேற்றியதாகவும் கோணேசர் கல்வெட்டு (வடிவேல் இ., (பதி), 1995) கூறுகின்றது. அக்குடிகளின் வம்சத்தினர் இன்றும் வாழ்கின்றனர். அதேபோல கோணேசர் கல்வெட்டு, அரசன் கந்தளாய்க் குளத்தை அமைத்து நீலாசோதையன் பொறுப்பில் விட்டதாகக் கூறுகின்றது (கோணேசர் கல்வெட்டு, 28). மேலும் அப்பாடலில்,
“எட்டிசை மண்வெட்டிக் கொண்டே ஏழரைச் சுற்றாம் மரத்தை இனதா வெட்டி
தட்டி ஒரு காலாலே எற்றி அது வீழ முன்னம் தரணி மீதில்
ஒட்டி ஒரு குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு அருளையுற்ற வீரன்
அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலாசோதையன் படையும் அரசர்மாரும்”
என நீலாசோதையனின் வீர பராக்கிரமம் கூறப்பட்டுள்ளது.
வேதியன் ஒருவன் இந்திய தேசத்தைத் தன் மந்திர வலிமையால் அடிமையாக்கி, பின் இலங்கையை அடிமையாக்க வந்தான் என்றும், அதனால் சில பேய்களை ஏவினான் என்றும், நீலாசோதையன் அவற்றை எதிர் கொண்டழித்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளை அவ்வேதியன் இராமாயணத்து வாலியைப் போல தன்னெதிரே நின்று போரிடுபவரின் பாதி சக்தியைப் பெற்றுவிடும் ஆற்றல் உள்ளவன். ஆகவே நீலாசோதையன் காளியனிடம் (சலவைத் தொழிலாளி) அடைக்கலம் புக, அவன் சாடியினுள் புகச்செய்தான். இதனையே யோகன் பூசாரி ‘சால் – சால்வை’ எனப் பொருள்கொண்டு குளத்தினுள் நீலாசோதையனை மூழ்கியிருக்க வைத்து, சால்வையைக் குறுக்கே போட்டு அவ்வழி செல்லாது வேதியனை தடுத்து அப்பால் செல்ல வைத்தான் என்கிறார். வேதியன் அப்பால் செல்லும்போது மறைந்திருந்த நீலாசோதையன் விஸ்வரூபம் கொண்டு தண்டாயுதத்தால் தாக்கி வேதியனைத் தந்திரமாகக் கொன்றான் எனப்படுகிறது. ஆயினும் வேதியன் ஏவிய கம்பளி வைரவர், ஊத்தைக்காளி முதலான பன்னீராயிரம் துக்ஷ்ட சக்திகள் நின்றன. அவை மக்களைத் தாக்காத வண்ணம் நீலாசோதையன் இன்றுவரை காப்பதாக நம்பப்படுகின்றது (நேர்காணல் :யோகன் ஐயா, புன்னைச்சோலை காளி கோயில் பூசாரி). இக்கதை மரபில் இருந்து சற்று மாறுபட்டு வேதியன் ஒருவன் தன் நாட்டை சலவைத் தொழிலாளர் ஆள்வதா எனக் கருதி மந்திர சக்தியால் பேய், காளி உள்ளிட்ட துக்ஷ்ட சக்திகளை ஏவியதாகவும் அதனை எதிர்கொள்ள முடியாமல் தந்திரமாக சலவைத் தொழிலாளியின் உதவியுடன் நீலாசோதையன் அவனைக் கொன்றதாகவும் கூறப்படுகின்றது (கனகரத்தினம்,இரா. வை., 2016). அதேவேளை மந்திர சக்தியின் மூலவரான (குரு) மாகாமுனி பரசுராமர் நீலாசோதையனிடம் இத் துக்ஷ்ட சக்திகளுக்கு அவற்றைக் கட்டுப்படுத்த உரிய அவிர்ப்பாகம் வழங்குமாறு கூறினார் எனவும் அதன் வழி நின்றே இன்றும் ‘நோர்ப்பெறிதல்’ சடங்கு எனும் சடங்கு நிகழ்த்தப்படுதலையும் அறியமுடிகிறது.
நீலாசோதையன் வழிபாடு இலங்கைக்கே உரிய தெய்வ வழிபாடாகும். நீலாசோதையன் காவியம் (ஏறத்தாழ 65 பாடல்கள்) இத்தெய்வம் பற்றி விரிவுற உரைக்கிறது. வீரபத்திர காவியம், பெரியதம்பிரான் காவியம், வண்ணார் பத்ததி, கட்டாடிமார் பத்ததி, கோணேசர் கல்வெட்டு முதலியனவும் நீலாசோதையன் பற்றி உரைக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் கோயிலில் பொங்கல் அன்று நிகழும் கிரியாமுறையின் போது பாடும் பாடல்கள் 200 வருடங்களுக்கு மேலான ஏடொன்றில் உண்டு. அதில் பிள்ளையார் துதி, சுப்பிரமணியர் துதி, தேவி துதி என்பவற்றுக்கு அடுத்ததாக நீலாசோதையன் துதி காணப்படுகின்றது. அதில்,
“தாருலகில் நீலவண்ண ணாகத் தோன்றித்
தவமுனிவர் சாபமது தீர வந்து
பேருலகில் சிவன் தன்னைப் போற்றி செய்து
பெரிய தெய்வமென்பதொரு பேரினாலே
சீருலவு கொன்றை யந்தர் சிறந்த நாதன்
சிவவரு வில்லா வளமை செப்புங்கோயில்
பாரலகில் திருநீலா சோதையன் தான்
பரிந்துயில் கொல்பவர் வினைகள் தீர்ப்பாம்”
எனவுள்ளது. மேலும் பலிமுறைப் பாடலிலே “நீலா சோதை யனையும் பவள நாடு திறை கொண்ட தம்பிரானே” எனவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நீலாசோதையன் அமைவிடங்கள்
மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரியதம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் பரிவாரத் தெய்வமாக, சடங்கில் மட்டும் உருவகிக்கப்படும் தெய்வமாக, பெரியதம்பிரானாக அமைந்திருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைச்சோலை போன்ற இடங்களில் அமைந்துள்ள காளி கோயில்களில் நீலாசோதையனுக்குத் தனியிடமுண்டு. அங்கு நிரந்தரக் கட்டடமுமுண்டு. சில கோயில்களில் சடங்கு காலங்களில் தற்காலிகப் பந்தலமைத்து வழிபட்ட பின், சடங்கு முடிந்த பின் அப்பந்தலை அகற்றி விடுவர். பல ஆலயங்களில் சூலமும், சில ஆலயங்களில் உருவங்கள் அற்றும் இருக்கின்றன. நீலாசோதையனுக்கு உருவம் இல்லை. கல், சூலம் என்பவற்றால் குறி வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. பெரும்பாலும் திறந்த மண்டபத்தில் மந்திரத்தால் உருவகிக்கப்படும் தெய்வமாகவே உள்ளது. விதிவிலக்காக கோட்டைமுனை ஆலயத்தில் பெரியதம்பிரானுக்கும் நீலாசோதையனுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன என இரா.வை. கனகரெத்தினம் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பு – புன்னச்சோலையில் நீலாசோதையனுக்கு சிறு கோவிலுண்டு. இதில் வேல் வைக்கப்பட்டுள்ளது.
“தக்கனது யாகத்தில் அவதரித்து அதிரமாமலையில் சோழ குலம்தனில்
பூமிதனில் வந்து வரு பெரியதம்பிரானும் நீலா சோதையனும் ஒன்றாய்
இருபேரும் பொய்யாமலே வளர்ந்து காளியர் குலம் தனில் மெய்யான
தெய்வமாய் மானிலத்தோர் அக்கரைப்பற்று பதிதனில் ஆலமர நிழல் தனில்
கோயில் கொண்டமர்ந்தாய் யாகேஸ்வர பெரிய தெய்வமே போற்றி போற்றி”
என்னும் பாடல் அக்கரைப்பற்றில் உள்ள நீலாசோதையன் பெரியதம்பிரான் கோவில் பற்றிக் குறிப்பிடுகிறது.
யாழ்ப்பாணத்தில் ஏழாலையில் சாடியடி, நீலாசோதையன் கோயில், பெரியதம்பிரான் கோயில் என்பன தனித்தனியேயுள்ளன. இருபாலையில் உள்ள பெரியதம்பிரான் கோயிலில் மூலக் கோயிலுக்கு எதிரில் நீலாசோதையனுக்கு ஆலமரத்தடியில் நிரந்தரக் கட்டடமுண்டு. நீலாசோதையனுக்கு கைதடி பெரியதம்பிரான் கோயிலில் யாககுண்டத்துக்கு முன்பே ஆகமக் கோயிலில் தம்ப மண்டபம் இருக்கக்கூடிய இடத்தில் பெரிய சூலமுண்டு. அதனை நீலாசோதையன் என்கின்றனர். இது மூலாதார கணபதிக்குச் சமமான அந்தஸ்து எனப்படுகிறது. இத்தெய்வத்தை நீலாசோதைய வைரவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.
சடங்கு முறைகள்
பொதுவாக நீலாசோதையன் இருக்கும் பெரியதம்பிரான் ஆலயங்களில் புதன், சனிக்கிழமைகளில் விளக்கு வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் இன்று வசதிக்கேற்ப ஏனைய நாட்களிலும் விளக்கு வைக்கப்படுகின்றது. இக்கோயிலில் பழைய ஐதீகக் கதையின் நம்பிக்கையின் படி சலவைத் தொழிலாளர்களாலேயே பூசை செய்யப்படுகிறது. தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல் என்பவற்றோடு பங்குனி, புரட்டாதி மாதங்களில் வளர்ந்துப் பொங்கலும் நடைபெறுகின்றது.
“ஆலயத்து மணிமுற்றை தடர்ந்து வளர்த்தோங்கும்
அருகு நிறை பூவரசின் ஒரு மலர் வேண்டி
பாலனழும் போது தாயார் பறித்தீய பறந்த
கரம் வழங்கதை பான்மை தரு செய்து
சீதமொடு புரட்டாதி தோறும் அதில்
செம்மையோடு குளிர்த்தியுடன்
பூசனை புரியும் தேவர்களும் ஏற்ற வயல்
பதிலாழும் எம்பிரான் பெரிய தம்பிரானே”
(தகவல்: உக்ஷ்திரா தினேக்ஷ் சங்கர், தெல்லிப்பழை)
பெரியதம்பிரானுக்கு வழங்கும் அதே சடங்கு, பூசை நீலாசோதையனுக்கும் நிகழ்த்தப்படுகின்றது. ஏழாலை பெரியதம்பிரான் ஆலயத்தில் சித்திரைப் பொங்கல் சடங்கில் பூசாரி வாய் கட்டிப் பூசை செய்கின்றார். சித்திரை வருடப் பிறப்பின் பின்னான புதன்கிழமை ஆரம்பமாகி அடுத்துவரும் புதன் இரவு பெரும் பொங்கல் இடம்பெறும். மாதம்தோறும் மடை வைத்தல் ஆவணி மாதக் கடைசிப் புதன் நடைபெறும். பெரிய மடையுடன் முடிவுறும். பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பு வாழைக்குலை பழுக்கப் போடுதல் சடங்கு நடைபெறும். சித்திரை மாத முதல் புதன்கிழமை கமுகு மரம் நடப்பட்டு கொடியேற்றமும் நடைபெறும். இவ்வாலயத்தின் ஆரம்பப் பூசை சாடியடியில் நடைபெறும். ஆலயத்தில் இருந்து 250 மீட்டர் தூர அளவில் மருத, அரச மரங்கள் சூழ சிறிய மண்டபம் உண்டு. கன்னிமார், நாச்சிமார் வழிபாடு இங்கு நடைபெறும்.
நீலாசோதையன் ஆலய முன்றிலில், நீலாசோதையன் துதி படிக்கப்பட்டு சிறு பொங்கல் நடைபெறும். முதல் நாள் மற்றவர் அறியா வண்ணம் நேர்ந்து கட்டிய இழையினை அவிழ்த்து அப்பொருட்களைப் பொங்கல் பண்டங்களாகக் கொண்டு, பொங்கிப் படைத்து அதன் ஒரு பகுதியை பூசாரியும், உதவியாட்களும், வளர்ந்துக்குரியவர்களும் உணவாக உட்கொள்வர். இது கட்டாயமானது; உரிமை சார்ந்தது. இதன் பின்பே பெரியதம்பிரானுக்கு மடைப்பண்டம் எடுத்தல் நடைபெறும். மடைப்பண்டங்கள் யாவற்றையும் நீலாசோதையன் ஆலயத்தின் முன்றலில் வைத்து பூஜை செய்து வழங்கிய பின் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு கொண்டு செல்வர். அங்கு உரிய சடங்குகள் நடைபெற்றபின் மடை பரவப்படும். பல்வேறு மடைகள் எல்லாத் தெய்வங்களுக்கும் வைக்கப்படும். பூசை நடைபெற்ற பின் மடையேற்றலுக்கான பாடல் நடைபெறும். பத்ததியின் ‘கெசபலி சாந்தி’ படிக்கும்போது படிமத்தானாகிய பூசாரி கலையாடுவார். மடை மீது தண்ணீர் தெளிப்பார். பின்னர் பலிக்குரிய குங்குமம் கலந்த அல்லது மஞ்சள் கலந்த அரிசியை எடுத்து எட்டுத்திக்கும் கைமாறி வீசுவார். கொழுத்தப்பட்ட விளக்குத்திரிகளை அவ்வாறே கைமாறி வீசுவார். இது மட்டக்களப்பில் நிகழும் ‘நோர்ப்பெறிதலுக்கு’ (நோர்ப்புச் சடங்கு) சமமானதாகும். இதுவே ஆகமக் கோவில்களில் எட்டுத்திக்குப் பலியாக வளர்ந்திருக்கலாம்.
இதன்பின் கண்ணூறு கழித்தல், வழிவெட்டல், கொடியிறக்கம் முதலிய சடங்குகள் தம்பிரான் கோயிலில் நடைபெறும். கொடி இறக்கிய பின் ஞாயிறு பொங்கல் நடைபெறும். இது நீலாசோதையன் ஆலய முன்றிலில் நடைபெறும். பொங்கல் வேள்வியில் தாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து சகல நன்மைகளும் தருமாறு நீலாசோதையனை வேண்டுவர்.
“காய்ந்தவர் முகத்தினில் கல்லெறியாய்
சிரித்தார் முகத்தினில் சீதேவியாய்
பகைத்தார் முகத்தினில் பதிகமாய்
அவ்வடியார் கையைப் பிடித்துக் கரையேற்றிக்
கொள்ள வேணும் நீலாசோதையனே நல்லதம்பிரானே”
(பூசாரி, சின்னத்தம்பி பஞ்சலிங்கம் {சோமுஐயா})
எனப் பலவாறு வேண்டி வழிபடலுடன் பொங்கல் நிறைவுறும்.
இருபாலை கோட்டயபுரத்து பெரியதம்பிரான் ஆலயப் பூசாரி கந்தையா சின்னராசாவும் கைதடி பூந்தோட்டம் பெரியதம்பிரான் ஆலயத் தலைவர் மதிகாந்தனும் நீலாசோதையனை கிருக்ஷ்ணராகவே தாம் கருதுவதாகக் கூறுவதும், ஏழாலை பெரியதம்பிரான் ஏடு ‘நீலவண்ணத்தான்’ என நீலாசோதையனை வர்ணிப்பதும் சுற்றியுரைக்கத்தக்கது.
பெரியதம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் தவிர காளி, அம்மன், கன்னிமார், நாச்சிமார், காத்தவராயன், முனி, மாடன், கிங்கிலியர், நாகதம்பிரான், வீரபத்திரர், வைரவர், விநாயகர், முருக தெய்வங்களும் பரிவார மூர்த்திகளாக அமைந்துள்ளனர்.
புன்னைச்சோலை காளி கோயிலில் சடங்குகளின் முடிவில் ஆயுதங்களை நீலாசோதையனிடம் ஒப்படைத்தல் சடங்கு நடைபெறுதல் நீலாசோதையன் வீரனாக விளங்குகிறதை தெளிவுபடுத்துகின்றது. மட்டக்களப்பில் நீலாசோதையன் உள்ள ஆலயங்களில் ‘நோர்ப்புச் சடங்கு’ நடைபெறுகின்றது. தெய்வத்தன்மை இல்லாத தீய சக்திகளுக்காக பால், பழம், சோறு, கறி போன்றவற்றை (சில இடங்களில் மடைப்பண்டத்தில் ஒரு பகுதியை) ஆலயத்தைச் சுற்றி எறிவர். புன்னைச்சோலை காளி கோயிலில் இச் சடங்கு இன்றும் நடைபெறுகிறது. ஏறாவூர் காளிகோயில் ‘நோர்ப்புக் கட்டுதல்’ நடைபெறுகிறது. அதனை உண்ணக் கொடுப்பர்; எறிவதில்லை.
முடிவுரை
நீலாசோதையன் வழிபாடு பெரியதம்பிரான் வழிபாட்டுடன் பிரிப்பின்றிக் கலந்துவிட்டது. இது இரு சாதிகளின் கலப்புருப் பண்பாட்டின் வழியும் அமைந்திருக்கலாம். அன்றி காவியம், கோணேசர் கல்வெட்டு வழி கஜபாகு – குளக்கோட்ட மன்னன் அவனது மந்திரி – படைத்தளபதி நீலாசோதையன் பற்றிய தொன்மம் வழி எழுந்த வீர – முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். இக்கதையில் வரலாறும், நம்பிக்கையும், புனைவும் கலந்து நிற்பதை அவதானிக்க முடிகிறது. எது எவ்வாறாயினும் சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வ வழிபாட்டுடன் இணைந்த துணைத் தெய்வமாகவே இன்று நீலாசோதையன் அடையாளப்படுத்தப்படுகின்றார். பெரியதம்பிரான், நீலாசோதையன் ஆகியோரை விக்ஷ்ணுவின் அம்சங்களாக பூசாரிகள் கூறியிருப்பது முக்கியமானது. இது ஈழத்து வைணவ மரபு பற்றிய ஆய்வுக்கான கதவை அகலத் திறக்கிறது. ‘நீலாசோதையன் பெரியதம்பிரான்’ எனும் மறவன்புலவு ஆலயம் இரண்டும் ஒன்றான கதையின், மேலாண்மையின் கதையாடலுக்கான சாட்சியாகிறது. அவ்வாலயத்தைச் சேர்ந்த ஆனந்தரஞ்சன், 1990 களுக்கு முன் தங்களது பட்டி மாடுகளுக்கு முதுகில் ‘நீ’ (நீலாசோதையன்) எனும் எழுத்தும் தொடையில் பெரிய வட்டமும் (குளம்) அதனுள் சிறு நீள் சதுரமும் (சலவைக்கல்) பொறிக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார். இது சாதியம், தெய்வம், கால்நடை வளர்ப்பியல், விவசாயம் என்பன பற்றிய விடயங்களை ஆவணப்படுத்துகின்றது. அரசனும் நீலாசோதையனும் மரக்கலமற்று நின்றமை அக்கால அரசுகளின் நிலை, படை பலம், அரசு – மக்கள் தொடர்பு பற்றிய பல புதிய உரையாடல்களை ஆரம்பிக்க உதவுகின்றன. நீலாசோதையன் இலங்கையின் வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்த பல்வேறு பரிணாமங்களை உடைய உரையாடல்களுக்கான திறவுகோல் ‘தெய்வமாக’ அமைந்துள்ளது.