உணவுத் தேவையில் தன்நிறைவு நோக்கிய பயணம்
Arts
12 நிமிட வாசிப்பு

உணவுத் தேவையில் தன்நிறைவு நோக்கிய பயணம்

December 20, 2023 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

2003 இல் தனது முதலாவது தொழிலை ஆரம்பிக்கும்போது கே. சுகந்தனுக்கு 21 வயது மட்டுமே. தோல்விகண்ட சமாதான ஒப்பந்தத்தின் மத்தியில் (2002-2006) இலங்கையின் இனப்போர் புழுங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பு புறக்கோட்டை சந்தையில் அவர் தனது சிறு கடையை ஆரம்பித்தார். நெருக்கமான கடைகளுக்கும் தெருவோர சாவடிகளுக்கும் பெயர்போன புறக்கோட்டைத் தெருவொன்றில் சமையலுக்குப் பாவிக்கும் பலவகை எண்ணைகளை விற்பதே அவரது தொழில். இன்று வரை அது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

K.Suganthan

இலங்கையில் தேங்காய் எண்ணை, பாம் எண்ணை, எள்ளெண்ணை போன்ற எண்ணைகளுக்குப் பெரும் கிராக்கி இருக்கிறது. சமையல் மட்டுமல்ல வெதுப்பகம் உட்பட்ட பல்வேறு வகையான உணவுகளின் உற்பத்தி, ஐஸ் கிரீம், செயற்கை வெண்ணெய்க் கட்டி (மார்ஜெறீன்) ஆகியவற்றின் தயாரிப்பிலும் இவ்வெண்ணைகள் பாவிக்கப்படுகின்றன. இலங்கையின் பாவனைக்கே இவ்வெண்ணைகள் போதாத நிலை. சிறீலங்கா ஃபைனான்சியல் ரைம்ஸ் ஆகஸ்ட் 2023 பதிப்பின்படி இலங்கை மக்களின் வருடாந்த பாவனையான 264,000 மெற்றிக் தொன் பாம் எண்ணையில் 20% மட்டுமே இலங்கையில் தயாரிக்கப்படுகிறது. சில சமயங்களில் இதன் விலை தொன் ஒன்றுக்கு US$ 1,000 இற்கு மேல் போகிறது. பாம் எண்ணைக்கு மட்டும் (இதர எண்ணைகளை விட்டு) இலங்கை வருடத்துக்கு US$ 264 மில்லியன், அதாவது இன்றைய பண மாற்று விகிதத்தில் ரூ. 85 பில்லியன், செலவிடுகிறது. ஒப்பீட்டளவில் 2023 இற்கான பல்கலைக்கழக மானிய ஒதுக்கீடு: ரூ.60 பில்லியன் (சம்பளம்), ரூ. 6 பில்லியன் (கட்டிடம், உபகரணம்).

எமது நாட்டில் நடைபெறும் பல முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஒன்று நாங்கள் பெருந்தொகையான இறக்குமதி செய்யும் சமையல் எண்ணைக்கான மூலப்பொருட்களை நாமே தான் ஏற்றுமதி செய்கிறோம். இவ்வெண்ணைத் தயாரிப்புக்கான விதைகளை உற்பத்தி செய்வதற்காக எமது விவசாயிகளுக்குக் கிடைக்கும் சன்மானம் வெகு சொற்பமானது. அதே வேளை எமது விதைகளைக் கொண்டு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எண்ணைகளை அமெரிக்க டொலர்களில் பெரும் விலை கொடுத்து நாம் இறக்குமதி செய்துகொள்கிறோம். பாலுணவு, இறைச்சி, வெங்காயம், உள்ளி போன்றவற்றின் இறக்குமதியில் ஊழல் எப்படிக் கோலோச்சுகிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். தேநீரில் கலந்திருக்கும் பாலை மட்டுமே அறிந்திருக்கக்கூடியவர்களை இவ்வூழல் பண்ணை வியாபாரங்கள் கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளன. சமீப காலங்களில் யூக்கிரெய்ன் போரின் காரணமாக ஏற்பட்ட தானிய ஏற்றுமதி முடக்கம் கோழித்தீன் விலையை உயர்த்திவிட்டது. இதனால் உள்ளூர் கோழிப்பண்ணைத் தொழில்கள் முடக்கப்பட்டு முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் றோயல் மாவாலையைப் போன்ற சில நிறுவனங்கள் கோழித்தீன் உற்பத்தியில் ஈடுபட்டாலும் உள்ளூர்ப் பாவனையைச் சமாளிக்க இவை போதாது. சுயநலன்களை முன்வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உணவில் தன்நிறைவை எய்துவதற்கு குந்தகமாக இருப்பது மட்டுமல்லாது இறக்குமதிக்குத் தேவையான டொலர்களையும் வற்றச் செய்கின்றன. 80% ஆன பாம் எண்ணை இறக்குமதி செய்யப்படுவது உள்ளூர் எண்ணை உற்பத்திக்கான தேவை எத்துணை அவசியம் என்பதனையே காட்டுகிறது.

சுகந்தனின் தொழில் முயற்சி

2022 இல் நடைபெற்ற பொருளாதாரச் சரிவோடு கொண்டுவரப்பட்ட இறக்குமதித் தடைக்கு முன்னர் சுகந்தன் மலேசியாவிலிருந்து மாதமொன்றுக்கு 500 தொன் சுத்திகரிக்கப்படாத பாம் எண்ணையை இறக்குமதி செய்து யாழ்ப்பாணத்தில் அதைப் பதப்படுத்தினார். 2016 இல் திரு.கே. குலேந்திரன், திரு. ஜோகலிங்கம், திரு. ஜனநாயகம் ஆகியோரை உள்ளிட்ட குழுவுடன் அவர் அச்சுவேலி தொழிற்பேட்டையில் ‘வெங்கடேஷ்வரா ஆக்றோ இன்டஸ்றீஸ்’ என்ற பெயரில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தார். மேற்கு மாகாணத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் மூன்று தசாப்த அனுபவத்தைக் கொண்ட குலேந்திரன் ஒரு மொறட்டுவ பல்கலைக்கழகப் பட்டதாரி. சுகந்தனின் முதலீட்டுடனும் முகாமைத்துவத்துடனும் இக் குழு இத் தொழிற்சாலையை வடிவமைத்து கட்டி முடித்தனர். அச்சுவேலி தொழில் வலயத்தில் இத் தொழிற்சாலை இப்போது இயங்கி வருகிறது. தென்னிலங்கையில் பணியாற்றியதன் மூலம் குலேந்திரன் தனது தொழிலை வளர்த்துக்கொண்ட ஒரு சாதனையாளர். இதை எழுதிக்கொண்டிருக்கும்போது அவருக்கு 53 வயது. அவரது இரண்டு பிள்ளைகள் கொழும்பு, மொறட்டுவ பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கிறார்கள். மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்ற அவர் இப்போது வடக்கிற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார். இருமொழி பேசும் சுகந்தனையும் ஒரு மொழி மட்டுமே பேசும் என்னையும் (ஜெகன் அருளையா) ஆங்கிலத்தால் பாலமிணைக்கும் குலேந்திரனுக்கு நான் நன்றி சொல்லவேண்டும்.

K.Kulendran

உலக வங்கியின் ஆதரவுடன் 2016 இல் சுகந்தனின் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. பிற ஆலைகளால் பாரம்பரிய முறைகளில் மூலப்பொருட்கள் 80% பிழியப்பட்டு எண்ணை அகற்றப்பட்ட பின்னர் வீசப்படும் கழிவுகளை சுகந்தன் வாங்கிக்கொள்கிறார். அவரது ஆலையின் இயந்திரங்கள் இக் கழிவுகளை மேலும் நசுக்கி எண்ணையைப் பிழிந்தெடுக்கின்றன. விலங்குகளுக்கு உணவாக மிகவும் சொற்ப விலைக்கு விற்கப்படுவதற்குப் பதிலாக சுகந்தன் மூலம் ஆலைக்காரர் தமது கழிவுகளை அதிக விலைக்கு விற்று இலாபமீட்டுகின்றனர். சுத்திகரிக்கப்படாத எண்ணையைச் சேமித்து வைக்கவென 1,000 தொன் கொள்ளளவுள்ள சேமிக்கும் கலமொன்று இருக்கிறது. இன்னுமொரு பெரிய கலமொன்றில் அரிசித் தவிடு, நசுக்கப்பட்ட தேங்காய் / கொப்பறா, எள்ளுக் கட்டிகள் போன்ற திண்மப் பொருட்கள் சேமிக்கப்படுகின்றன. 200 கிலோ வோட் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் சூரியத் தகடுகளால் வேயப்பட்ட 60,000 சதுர அடி கட்டிடத்தில் நாளொன்றுக்கு 25 தொன் சுத்திகரிக்கப்பட்ட எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. 75 பணியாட்கள் இங்கு வேலை செய்கிறார்கள். தவிட்டிலிருந்து எண்ணையைப் வடித்தெடுக்கும் தேவைக்கென இன்னுமொரு ஆலைக்கான கட்டுமானம் நிறைவேறும் நிலையில் இருக்கிறது. இலங்கையில் தவிடு பெருமளவில் கிடைக்கிறது.

இன்ஸ்டிடியூட் ஒஃப் பொலிசி ஸ்ரடீஸ் (Institute of Policy Studies) என்னும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கைப்படி 2022 இல் மேற்கொள்ளப்பட்ட உர இறக்குமதித் தடைக்கு முன்னர் இலங்கையில் வருடமொன்றுக்கு 4 மில்லியன் முதல் 5 மில்லியன் தொன் நெல் விளைவிக்கப்பட்டது. இதிலிருந்து 80,000 தொன் தவிட்டு எண்ணை உற்பத்தி செய்திருக்க முடியும் (நிறைப்படி நெல்லில் 8% தவிடு; தவிட்டில் 20% எண்ணை). தவிடு என்பது அரிசிக்கும் உமிக்குமிடையில் இருக்கும் ஒரு போர்வை. அரிசி ஆலைகளில் இது கழிவுப் பொருளாக வீசப்படுகிறது. பொரித்தல், வதக்குதல், வெதுப்புதல் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு தவிட்டெண்ணை பாவிக்கப்படுகிறது. இது முற்றுமுழுதாக உள்ளூர் விவசாயத்தின் கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சிற்சிறு மாற்றங்களுடன் வடித்தெடுக்கும் இச்செயல்முறை மூலம் சோயா விதை, சூரியகாந்தி விதை போன்ற பல எண்ணைத் தன்மை கொண்ட விதைகள், புண்ணாக்கு போன்றவற்றிலிருந்து எண்ணையைப் பிரித்தெடுக்க முடியும். வடக்கிலுள்ள சுகந்தனின் வடி ஆலை உட்பட இலங்கையில் நான்கு ஆலைகள் மட்டுமே உள்ளன எனகிறார் சுகந்தன். வருடத்தில் 9 மாதங்களுக்கு, விலை மலிவாக இருக்கும்போது அரிசி ஆலைகளிலிருந்து தவிட்டை வெங்கடேஷ்வரா நிறுவனம் கொள்முதல் செய்து சேமித்து வைக்கிறது. மீதி 3 மாதங்களில் அதைப் பாவித்து எண்ணை உறப்த்தியைச் செய்கிறது. இதிலிருந்து நாளொன்றுக்கு 20 தொன் தவிட்டெண்ணையையும் கழிவிலிருந்து விலங்குணவாக 80 தொன் புண்ணாக்கையும் இவ்வாலை தயாரிக்கிறது. தவிட்டை வாங்குவதிலிருந்து எண்ணை மற்றும் விலங்குணவு விற்பனை நிறைவேற 60 நாள் பிடிக்கிறது என்கிறார் சுகந்தன். உள்ளூர் தவிட்டை மட்டுமே கொள்முதல் செய்வதனால் இறக்குமதிக்கான டொலர் தேவைப்படுவதில்லை.

வியாபாரப் போட்டிகள்

மிகவும் போட்டியான சூழலில் சுகந்தன் தொழில் செய்யவேண்டி இருக்கிறது. விவசாயம், மீன்பிடித் தொழிற்துறைகளில் இதுபோன்ற கதைகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். வடக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலுமே இதுதான் நிலை. மாம்பழம், வெங்காயம், நண்டு போன்ற பண்டங்களுக்கும் இதுவே நிலை. நாட்டின் பெரிய நிறுவனங்கள் இப்பண்டங்களுக்கு உற்பத்தியாளர்களுக்கு அதிக விலைகளைக் கொடுத்து வாங்கிக்கொண்டு போய்விடுகின்றன. வருமானம் முடக்கப்பட்டிருக்கும்போது விவசாயிகளும், மீனவர்களும் சொற்ப இலாபங்களுக்காக உள்ளூர் ஆலைகளைத் தவிர்த்து பெரும் தேசிய நிறுவனங்களுக்கு தமது உற்பத்திகளை விற்கத் தலைப்படுகின்றனர். இதனால் உள்ளூர் ஆலைகள் மூடப்படவேண்டி ஏற்படுகிறது. உள்ளூர் போட்டிகள் ஒழிக்கப்பட்ட நிலையில் பெரும் தேசிய நிறுவனங்கள் தமது கொள்முதல் விலையை வேண்டுமென்றே குறைத்து, சிலவேளைகளில் உற்பத்தி விலைக்கும் குறைவாகக் கொடுத்து, கொள்முதலைச் செய்கிறார்கள். இதனால் விவசாயிகளும் மீனவர்களும் தொடர்ந்து தமது தொழில்களில் முதலீடு செய்வதற்கோ அல்லது தமது குடும்பங்களினது வாழ்வாதார மேம்பாட்டுக்கோ போதுமான பணமின்றி வாடும் நிலை ஏற்படுகிறது.

ஆலையொன்றை நடத்துவதென்பது மிகவும் செலவு மிக்க காரியம். அதிக முதலீடு செய்தால் உற்பத்தி அதிகமாகி இலாபமும் அதிகரிக்கும். இறக்குமதி செய்யப்படும் பண்டங்களால் உள்ளூர் உற்பத்திகள் அதிக இலாபத்தைப் பெற்றுத் தருவதில்லை. இலாபம் குறைவாக இருப்பினும் மிதமான உற்பத்தி ஓரளவு வருமானத்தைப் பெற்றுக்கொடுக்கின்றது. இருப்பினும் இப்படியான ஆலைகளைக் கட்டியெழுப்ப முயல்பவர்கள் முதலீட்டுக்காக வங்கிகளையோ தனியார் முதலீட்டாளர்களையோ நாடவேண்டி ஏற்படுகிறது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில், குறிப்பாக டொலர் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை போன்ற பல்வேறு அழுத்தங்களினால் இலங்கை திண்டாடும்போது இதிலிருந்து மீள்வதற்கு உள்ளூர் ஆலைகளே முக்கியத் தேவையாக உள்ளன. இதே வேளை தமது பணத்தை மீளப்பெறுவதில் உத்தரவாதமற்ற நிலையில் வங்கிகள் சிறிய வியாபார முயற்சிகளுக்கு கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள். அத்தோடு மிகவும் உயர்ந்த, நிலையற்ற வட்டி வீதத்தினால் கடனைப் பெற்றவர்களும் அதை மீளச் செலுத்துவதற்குச் சிரமப்படுகிறார்கள். நாடு விரைவில் தன்நிறைவு எய்துமெனப் பலரும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரே அதற்காக உழைக்கிறார்கள். 

நன்றி : மறுமொழி, Lanka Business Online (www.lankabusinessonline.com)

(கே.சுகந்தனைத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் venkadeswaraagroindustry12@gmail.com என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க


About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்