யாழ்ப்பாணத்துக்கும் மலாயா – சிங்கப்பூருக்கும் இடையில் வளர்ந்துவந்த நெருங்கிய தொடர்புகள் 1930களில் இடம்பெற்ற இரு பெரும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டன. ஒன்று, 1933 இல் தொடங்கிய பெருமந்தம் (Great Depression); மற்றது 1939இல் தொடங்கிய இரண்டாவது உலகப் போர். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தவரின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி, 1930களில் உச்சத்தை அடைந்தது. புலம்பெயர்வு தொடர்ந்து வளர முடியாத வகையில் பெருமந்தமும் உலகப் போரும் தடைபோட்டன.
தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தவர் சிலர் ஆங்கிலேய நிர்வாகிகளால் மலாயாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை ஒரு தற்செயல் நிகழ்வு போல் தோன்றினாலும், மலாயாப் புலம்பெயர்வு ஒழுங்கான முறையில் நடைபெற்ற ஒன்றாகவே வெளிப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த பலர் மலாயா அரசாங்கங்கள் கேட்டதற்கு இணங்கி ‘கடனாக’ (On Loan) அனுப்பப்பட்டனர். அவ்வாறு 1874இல் மூன்று தமிழ் நில அளவையாளரும் (Surveyors) இரண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளரும் அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர், 1880இல் இருந்து பலமுறை மலாய் அரசுகளின் ஆளுநராக இருந்த பிரித்தானியர் இலங்கை ஆளுநருக்கு எழுதி, பலவகைப்பட்ட அலுவலர்களையும் கட்டட வேலை செய்வோரையும் ‘கடனாக’ அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தனர். ஒரு ஆளுநர் 1892இல் தேவைப்பட்ட அலுவலர்களையும் தொழிலாளர்களையும் பட்டியல் இட்டு (நில அளவையாளர், வைத்தியர்கள், பொதுவேலை மேற்பார்வையாளர் போன்ற அலுவலர்களும் கட்டட வேலைத் திறன்களை உடைய 100 தொழிலாளர்களும்), இவர்களைக் ‘கடனாக’ அனுப்பிவைக்கும்படி இலங்கை ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கு அமைய அனுப்பப்பட்ட யாழ்ப்பாணத்தவர் மலாயாவில் வேலைவாய்ப்புகளைக் கண்டு, தம் உறவினர் பலரை மலாயாவுக்கு அழைத்திருப்பர் என்று எண்ண இடமுண்டு.
இலங்கை அரசாங்கத்தின் வெளியீடாகிய ‘Ceylon Government Gazette’ இலும் கொழும்பில் வெளியான ஆங்கிலச் செய்தித்தாள்களிலும் மலாயாவில் இருந்த தொழில் வாய்ப்புகள் பற்றி விளம்பரங்கள் போடப்பட்டன. இவற்றைப் படித்து விண்ணப்பம் செய்தும் பல யாழ்ப்பாணத்தவர் மலாயாவுக்குச் சென்றனர். சில தொழில்களுக்குத் தெரிவானவர்களுக்குப் பயணச் செலவும், வேலைக்குச் சென்ற இடத்தில் இலவச வதிவிடமும் கொடுக்கப்பட்டன.
மேற்குலகில், குறிப்பாக அமெரிக்காவில், தொழிற்சாலைகள் தகரமும் ரப்பரும் கூடுதலாகத் தேவைப்படும் நிலையை உருவாக்கின. இவ்விரு மூலப்பொருட்களையும் உலகச் சந்தைக்குப் பெரும் அளவில் வழங்கும் நாடாக மலாயா எழுச்சிபெற்றது. மலாயாவில் ரப்பர் பெருந்தோட்டங்கள் பெருகின. இவற்றை நல்ல முறையில் நிர்வகிக்கத் தேவைப்பட்ட இடைநிலை அலுவலர்களும், தொழிலாளர் உடல்நலனைக் கவனிக்கத் திறக்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ உதவியாளரும் (Dressers), பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றனர்.
பெருந்தோட்டங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்கும் போக்குவரத்து வசதிகளை அமைப்பதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றிலும் யாழ்ப்பாணத்தவர் பெரும்பங்கில் ஈடுபட்டனர். சிறப்பாக, தொடர்வண்டிப் பாதைகளுக்கு (Railway) பொறுப்பாக இருந்த திணைக்களங்களில் பல்வேறு நிலைகளில் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பதவிபெற்றனர்.
சிலவேளைகளில் இந்த இளைஞர்களை மலாயாவுக்கு அழைப்பதற்கு காலனிய அதிகாரிகள் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வேண்டுகோள் அனுப்பினர் என்றும் அறியமுடிகின்றது. மலாயாவின் பெரும்பாகமாகிய ‘Federated Malay States’ இன் ‘General Manager Railways’ (தொடர்வண்டிப்பாதைத் திணைக்களத்தின் அதிபர்), 1917இல் யாழ்ப்பாணத்து சாந்த யோவான் கல்லூரியின் (St. John’s College, Jaffna) அதிபருக்குக் கடிதம் எழுதி, ‘Elementary School Leaving Certificate’ பெற்ற பத்துத் திறமைசாலிப் பையன்களை (Ten Bright Boys) தனக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டிருந்தார் என அறிகின்றோம்.
நான் சிறுவனாய் இருந்த காலத்தில் என் தந்தையார் அடிக்கடி சொல்லுவார், “அஞ்சாம் வகுப்பு முடிச்சுப்போட்டு மலாயாவுக்குப் போனால் உத்தியோகம் எடுக்கலாம்” என்று. அவர் கூறியது அக்காலத்து ‘Elementary School Leaving Certificate’ என்ற தொடக்கப் பள்ளி முடிவில் கிடைத்த சான்றிதழையே என்று பின்னர் தான் எனக்குப் புரிந்தது.
இவ்வாறாக இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் பல்வேறு தொழில் வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டு, பல வழிகளில் ஆயிரக்கணக்கான யாழ்ப்பாண இளைஞர்கள் மலாயாவுக்கும் சிங்கப்பூருக்கும் சென்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் தொடர்வண்டித் திணைக்களத்தில் வேலை செய்தனர். “யாழ்ப்பாணத்தவர் Ticket இல்லாமல் Train இல் பயணஞ்செய்யலாம்” என்று மலாயாவில் இருந்து திரும்பிவந்தவர்கள் பலமுறை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். எல்லா நிலைய அதிபர்களும் (Station Masters) யாழ்ப்பாணத்தவர்களே என்று அவர்கள் கூறுவார்கள்.
மலாயாவில் யாழ்ப்பாணத்தவர் பெற்றிருந்த செல்வாக்கை மிகைப்படுத்திக் கூறுகின்றார்களோ என நான் எண்ணியதுண்டு. ஆனால், அண்மைக் காலத்தில் பல ஆய்வாளர்கள் எழுதியவற்றைப் பார்க்கும்போது மலாயாவில் 1900க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலத்தில் நிர்வாகத்தில் யாழ்ப்பாணத்தவர் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகின்றது. பல்கலைக்கழக ஆய்வுரையாக எழுதப்பட்ட ஒரு நூலில் காணப்படும் பின்வரும் மதிப்பீடு இதனைச் சுருக்கமாக ஒலிபெருக்கிக் காட்டுகின்றது:
“Jaffna Tamils dominated the clerical, medical, technical, administrative, and supervisory departments, basically holding a monopoly on government employment from 1885 to 1930.” (Kristina R. Hodelin, Navigating Empire and Social Mobility of Jaffna Tamils in Malaysia, 1800 – 1948, 2021 Dissertation, Radboud University, p.17).
மலாயா முழுவதிலும் 1931இல் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 18,000க்கு மேற்பட்ட இலங்கையர் காணப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலோர் யாழ்ப்பாணத்தவர்.
இவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்றவர்கள் அடங்குவர். பெரும்பாலும் குடும்பத்தோடல்லாது தனியாகச் சென்றவர்கள். பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்குடன் சென்றவர்கள். குடிபெயர்ந்து சென்றவர்கள் அல்லர். வேலை முடித்து ஓய்வூதியம் பெற்றதும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் செல்வதைவிட வேறு எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. போகும்போது காற்சட்டை ‘சேட்டு’ அணிந்து சென்றவர்கள். திரும்பிவந்ததும் வேட்டி – சால்வை உடுத்தவர்கள். யாழ்ப்பாணத்தில் ‘சிங்கப்பூர் பெஞ்சன்காறர்’ என்ற ஒரு புதிய சமூகக் குழுவைத் தோற்றுவித்தவர்கள்.
இரண்டாவது பிரிவில் பெரும்பாலும் 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் சென்றவர்கள் அடங்குவர். இவர்களுள் மூத்தோருடன் சென்ற பிள்ளைகள் இருந்தனர். இப்பிள்ளைகள் மலாயாவில் தங்கள் படிப்பை முடித்தவர்கள் அல்லது முழுமையாக மலாயாவிலே படித்தவர்கள்; மலாயாவில் வளர்ந்தவர்கள். இவர்களுக்கு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் செல்லும் நோக்கமே இருந்திருக்காது. இவர்களை அழைத்துவந்த மூத்தோர் ‘அரைகுறைக் குடியமர்வில்’ ஈடுபட்டவர்கள் எனலாம். திரும்பிச் செல்ல நேரிட்டால் அதற்குத் தயாராக இருந்தவர்கள். அவர்களுக்கு மலாயாவில் பிறந்த பிள்ளைகள் இருந்தனர்; சொத்துகளும் இருந்தன. மலாயாவிலேயே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கும் தயாராக இருந்தனர்.
சிறு பிள்ளைகளாகப் புலம்பெயர்ந்து வந்தோரும், மலாயாவில் பிறந்தோரும், நகர வாழ்க்கையை விரும்பியோரும் மூன்றாவது பிரிவில் அடங்குவர். இவர்களுக்கு மலாயா தாய்நாடாகியது. தாம் வாழ்ந்த நகரங்களின் சமூகச் செயற்பாடுகளில் பங்குபற்றிய இப்பிரிவினர் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகப் பேசினர்.
என் பெருங்குடும்பம்
மலாயாவுக்கு 20ஆம் நூற்றாண்டின் முதற்காலில் சென்ற என் மாமனார்களை மேலே காட்டிய மூன்று பிரிவுகளின்படி பிரிக்கலாம்.
முதலாவதாகச் சென்ற வேலுப்பிள்ளை மாமா (என் அம்மாவின் மூத்த தமையன்), 1930களில் வேலைமுடித்து ஓய்வூதியம் பெற்று ஊருக்குத் திரும்பிவிட்டார். ஊரில் பெரிய கல்வீட்டைக் (எங்கள் ஊரின் முதலாவது கல்வீடு) கட்டி, மேசை – கதிரை – கட்டில் போன்ற நவீன தளபாடங்களை அவ்வீட்டில் வைத்து, வசதியான ஓய்வு வாழ்க்கையை நடத்தினார். நிச்சயமாக இவருடைய தந்தையாரின் வாழ்க்கைத் தரத்தைவிட இவருடைய வாழ்க்கைத் தரம் பெரிதும் உயர்வடைந்து காணப்பட்டது. இவர் மலாயாவில் குடியமர ஒருபோதும் எண்ணியிருக்கமாட்டார் என்பது என் கருத்து.
செல்லத்துரை மாமா (அம்மாவின் இரண்டாவது அண்ணன்), ஒரு காலை யாழ்ப்பாணத்திலும் மற்றக் காலை மலாயாவிலும் வைத்திருந்தார் என்று எண்ணுகின்றேன். இவருக்கு ஆறு மகன்மாரும், ஒரு மகளும் இருந்தனர். இவருடைய செயல்களைப் பார்க்கும்போது, மலாயாவுக்கு வேலைசெய்யச் சென்ற பல யாழ்ப்பாணத்தவருக்கு இருந்த தடுமாற்றங்கள் இவரிடம் காணப்பட்டன என நினைக்கின்றேன். இதனைச் சிறிது விரிவாக விளக்கலாம்.
இவருடைய முதல் பிள்ளை சிவகுருநாதன். தன் பிள்ளைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க மாமா விரும்பினார். நல்ல ஆங்கிலப் பாடசாலைகள் இருந்த கொழும்புக்குத் தன் பிள்ளையை அனுப்புவதா அல்லது மலாயாவிலேயே படிக்க வைப்பதா என்ற தடுமாற்றம் அவருக்கு இருந்திருக்கலாம். பிள்ளையைச் சிறுவனாக இருக்கும்போதே கொழும்புக்குப் படிக்க அனுப்பிவைத்தார்.

இது தொடர்பாக வேறு சில யாழ்ப்பாணத்தவர் செயல்களையும் இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன். மிகவும் சிறந்த எடுத்துக்காட்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் S.J.V. செல்வநாயகம் தொடர்பானது. இவர் மலாயாவின் ஈப்போ (Ipoh) நகரில் 1898இல் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போதே இவருடைய படிப்பிற்காகத் தந்தையார் இவரைத் தாயாருடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். வரலாற்றில் நடைபெற்ற பல நிகழ்வுகளையிட்டு “இப்படி நடந்திருக்காவிட்டால்…” (ஆங்கிலத்தில் ‘What if moments’) என்று பலர் சிந்திப்பர். இது அப்படியான ஒரு நிகழ்வு. இச்சிறுவன் இலங்கைக்கு அனுப்பப்படாது, பிறந்த நாட்டிலேயே வாழ்ந்திருந்தால்!

இவர் மட்டுமல்ல, இவருக்கு அரசியல் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த மு. திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தை) இலங்கையில் பிறந்தவர் என்றாலும், மலாயாவில் தந்தையுடன் இருந்தபோது, படிப்பிற்காகத் தாயாருடன் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், தமிழ் அறிஞர் க. கைலாசபதியும் இவ்வாறே சிறுவனாக இருக்கும்போது படிப்பிற்காகத் தாயாருடன் இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்.
செல்லத்துரை மாமாவின் இரண்டாவது மகன் திருச்செல்வம் சிறுவயதில் இருந்தே படிப்பில் திறமைசாலியாக இருந்தார் என்று சொல்லுவார்கள். இவர் இளவயதில் படிப்பை முடித்து, மலாயாவின் சிவில் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வேலைசெய்யத் தொடங்கிவிட்டார். ‘இவரைத் தனியே மலாயாவில் விட்டுவிட்டு, யாழ்ப்பாணம் செல்வதா இல்லையா’ என்ற தடுமாற்றம் செல்லத்துரை மாமாவுக்கு இருந்திருக்கும்.
இரண்டாம் உலகப் போரின் பின் மலாயாவில் பல அரசியல் குழப்பங்கள் தோன்றின. இவை எந்தளவுக்கு யாழ்ப்பாணத்தவரை வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின் தம் குடும்பங்களுடன் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வைத்ததோ தெரியவில்லை. உலகப் போரின் பின் பல குடும்பங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தன. செல்லத்துரை மாமாவின் குடும்பமும் வந்தது. ஆனால் இலங்கையிலும் நெருக்கடி தோன்ற, இக்குடும்பம் திரும்பிச் சென்றது.
சதாசிவம் மாமா (அம்மாவுக்கு நேரே மூத்த தமையன்) யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிப்போகும் எண்ணமே இல்லாது மலாயா நாட்டைத் தன் நாடாகக் கருதியிருப்பார் என்று நான் நினைக்கின்றேன். அவர் சிறு வயதில் சகோதரர்களுடன் சென்றவர். கல்வியை முழுமையாக (அல்லது பெரும்பாகத்தை) மலாயாவில் பெற்றவர். ஆங்கில ஆசிரியராகப் பதவி பெற்று மலாக்கா நகரில் முதலில் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் கடமையாற்றியவர்.
இவர் மலாயாவில் பெற்றோர் இல்லாது வளர்ந்தவர். யாழ்ப்பாணச் சமூகக் கட்டுப்பாடுகளாலோ பண்பாட்டு வழக்கங்களாலோ அடக்கப்படாது ஒரு சுதந்திர ஆளுமையாக வளர்ந்தவர் என்று நான் நினைக்கின்றேன். இதனால் அவர் தன் வாழ்க்கையில் ஒரு வேறான சுதந்திரப் போக்கைக் கடைப்பிடிக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தவர் அல்லாத ஒரு பெண்ணை, கேரளத்து மங்கையை, மணம் முடித்தார். மனைவி கிறிஸ்தவர் என்றபடியால் மாமாவும் கிறிஸ்தவராக மாறினாரோ தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் இவரைப்போலப் பல யாழ்ப்பாணத்து இளைஞர்கள் மலாயாவில் இருந்திருப்பர்.
சதாசிவம் மாமாவுக்கு இளையவர்களாக (அம்மாவின் தம்பிமார்) அங்கு வாழ்ந்த எனது மூன்று மாமன்மாரும், சிறுவர்களாக யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்று மலாயாவிலேயே கல்வி கற்றவர்கள். அவர்களுக்கு மலாயாவே சொந்த நாடாகியது.
மலாயாவில் புலம்பெயர் சமூகம்
யாழ்ப்பாணத்தவர் எண்ணிக்கை படிப்படியாகப் பெருகியதுபோல், தமிழ்நாட்டார், வேறு இந்தியர், சீனர் ஆகியோருடைய மக்கள்தொகையும் 20ஆம் நூற்றாண்டின் முதற்காலில் விரைவாகக் கூடிச்சென்றது. மலாய் மக்கள் தங்கள் பெரும்பான்மை நிலையை இழந்தனர். மலாயாவில் 1931இல் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இது வெளிப்பட்டது. மலாய் மக்கள் தொகை இரண்டு மில்லியனுக்குச் சிறிது குறைந்து காணப்பட, மலாய் அல்லாதோர் இரண்டரை மில்லியனுக்குக் கிட்டியதாக இருந்தனர்.
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 1930களில் மேலும் கூடுவதைத் தணிக்கும் வகையில் ஓர் உலகளாவிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எல்லா நாடுகளையும் அச்சுறுத்தியது. அதுதான் வரலாறு முன்பின் காணாத பெருமந்தம் (Great Depression).
அமெரிக்காவில் 1929இன் இறுதியில் திடீரென ஏற்பட்ட பங்குச் சந்தைச் சரிவு இதனைத் தொடக்கிவைத்தது என நம்பப்படுகிறது. அக்காலத்தில் மலாயா அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, பிற மேல் நாடுகளுக்கும் பெருமளவு ரப்பர், தகரம் ஆகிய மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது. பங்குச் சந்தைச் சரிவு உடனடியாக மலாயாவில் பொருளாதார வீழ்ச்சியை விளைவித்தது.
தொடர்ந்தும் முன்போல மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் பெருந்தொகையான பெருந்தோட்டத் தொழிலாளரும் தகர, சுரங்கத் தொழிலாளர்களும் வேலையிழந்தனர். நாட்டில் அவர்களை வைத்துப் பராமரிக்க முடியாத அரசாங்கம் தொழிலாளர்களைப் பெரும் எண்ணிக்கையில் அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பியது. வருமானம் குறைந்த நிலையில் நிர்வாகத்தில் இருந்த பலரும் வேலை இழந்தனர்.
பெருமந்தத்தால் என் பெருங்குடும்பத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் என் தந்தையார் கந்தையா கார்த்திகேசு. தொடர்வண்டித் திணைக்களத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தந்தையார் தன் வேலையை இழந்து, ஓய்வூதியம் பெற்றுச் செல்லவேண்டியதாயிற்று.
என் தந்தை முதலில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தன் படிப்பைத் தொடங்கி, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு உதைபந்தாட்டம், கிரிக்கெட் ஆட்டம் ஆகியவற்றில் அவருக்கு இருந்த ஆர்வத்தை மேலும் வளர்த்து, கல்லூரியின் உதைபந்தாட்ட அணியின் தலைவராகவும் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் சிறப்புப் பெற்றார். பின்னர் அவருடைய மாமனார் கொழும்புக்கு அவரைக் கூட்டிச்சென்று, ‘St. Joseph’s College’ இல் சிறிது காலம் படிக்கவைத்தார். அங்கு இருந்து அவர் மலாயாவுக்குச் சென்றார்.
கோலாலம்பூரில் வேலைசெய்த காலத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. பல இலங்கையர், சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, விளையாட்டுக் கழகங்களைக்கூடத் தொடங்கியிருந்தனர். கோலாலம்பூரில் 1909இல் ‘Tamil Union’ என்ற விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணத்தவர்களால் அமைக்கப்பட்ட்டிருந்தது. இதில் என் தந்தையார் சேர்ந்து விளையாடி இருக்கலாம்.
பெருமந்தம் மலாயாவைக் கூடுதலாகத் தாக்கிய காலம் 1930-32 ஆகும். அதன் பின்னர் பொருளியல் நிலை மெதுவாகச் சீரடையத் தொடங்கியபோதும், பெருமந்தத்தின் விளைவாக மலாய்த் தலைவர்களிடம் தோன்றிய விழிப்புணர்ச்சி, வெளிநாட்டார் வருகைக்குச் சாதகமாக இருக்கவில்லை.
இந்நிலையில், ஐரோப்பாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனியின் மீளெழுச்சி பிரித்தானியப் பேரரசுக்கு இதுவரை கண்டிராத சவாலாகத் தோன்றியது. அதேகாலத்தில் ஐரோப்பியப் பேரரசுகளுடன் வைத்திருந்த நட்பைக் கைவிட்டு ஜப்பான் ஆசியாவில் அவ்வல்லரசுகளுக்கு அழிவை உண்டுபண்ணும் பகையரசாக எழுச்சிபெற்றது.

இவற்றின் விளைவாக 1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. அவ்வேளையில் ஆசியாவில் பிரித்தானியர், பிரெஞ்சுக்காரர், ஒல்லாந்தர் ஆகியோர் வைத்திருந்த பேரரசுகள் உச்சநிலையில் இருந்தன. அடுத்த மூன்று ஆண்டுகளுள் அந்த நிலை தலைகீழாகியது. பிரெஞ்சுக்காரர் ஆண்ட இந்தோசீனா 1940இல் ஜப்பானியர் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. ஒல்லாந்தருடைய பேரரசு (இன்றைய இந்தோனேசியா) 1942இல் ஜப்பானியர் கைவசமாகியது. சிங்கப்பூர் 1942இல் கைப்பற்றப்பட்டதும், விரைவில் பிரித்தானியருடைய மலாயா ஜப்பானியர் ஆட்சிக்கு உட்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கும் மலாயாவுக்கும் இடையில் நெருக்கமாக வளர்ந்து வந்த தொடர்பு இத்திடீர் நிகழ்வுகளால் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அத்தொடர்பு புத்துயிர் பெற வாய்ப்பில்லாது போனது.