இலங்கையில் ஆசீவகச் சமயம்
Arts
26 நிமிட வாசிப்பு

இலங்கையில் ஆசீவகச் சமயம்

May 23, 2024 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

இலங்கையில் விஜயனின் வருகைக்கு முன்பும், பௌத்த சமயத்தின் வருகைக்கு முன்பும், ஆசீவகச் சமயம் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கான பல சான்றுகளை மகாவம்சம் முதலான பாளி மொழி நூல்களின் வழியாகவும், தமிழர் – சிங்களர் முதலானோரின் வாழ்வியல் தொன்மங்கள் வழியாகவும் அறியலாம். கி.பி.6 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கை அரசர்களின் மரபுகளைக் கூறக்கூடிய மகாவம்சம் என்ற நூலில், ஆசீவகம் குறித்ததான பல செய்திகள் காணப்படுகின்றன.

‘விஜயன் இலங்கை வந்து முப்பத்து எட்டு ஆண்டுகள் அரசாண்ட பிறகு தமக்குப் பிள்ளைகளற்று மாண்டான். இந்தியாவில் ஆட்சியிலிருந்த அவனது உடன் பிறப்பான சுமிதன், மதுர நாட்டு அரசனுடைய மகளை மணந்தவன். மதுர நாடு என்பது மதுரை நாடு என்னும் பாண்டிய நாடேயாகும். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களுள் இளையவன் ‘பாண்டு வாசுதேவன்’. அவன் இலங்கையின் அரசனாக விரும்பினான். தன் பயணம் சிறப்புற அமையுமென்று நிமித்தர்கள் உறுதி கூறியதன்வழி, முற்பத்து இரண்டு அமைச்சர்களின் புதல்வர்களுடன் இலங்கைக்குப் புறப்பட்டான். அவர்கள் யாவரும் இரந்துண்ணும் துறவிகளைப் போன்று கப்பலில் ஏறி இலங்கையை அடைந்தனர். அவர்கள் கந்தார நதிக் கழிமுகத்திற்கருகே கரையேறினர். அத்துறவிகளைக் கண்டதும் மக்கள் மதிப்பும் சிறப்பும் செய்து வரவேற்றனர். இம்மகாவம்சக் கூற்றில், நாம் பல செய்திகளை அறியக்கூடியதாகின்றது. முதலாவதாக, இலங்கையிலிருந்த விஜயனும், இந்தியாவிலிருந்த அவன் உடன் பிறந்தானான சுமிதனும், பாண்டிய நாட்டுப் பெண்களையே மணந்தனர். பாண்டியர்கள் பண்டைநாளில், தமிழரல்லாத பிற வடபுல அரச குடும்பங்களுடனும் மணவுறவு கொண்டிருந்தமையை, இராமனின் பாட்டியான இந்துமதியின் சுயம்வரத்தில் பாண்டிய மன்னன் பங்கு பெற்றமையால் அறியலாம்.

பாண்டு வாசுதேவன் என்ற பெயர் வழக்கினையும் கருத வேண்டியதாகின்றது. பாண்டிய இளவரசியின் மகனான இவன் ‘பாண்டு’ என்றும் அடைமொழியால் அழைக்கப்படுவது, தாய்வழி மரபு பற்றிய ‘பாண்டிய’ என்னும் வழக்கு பற்றியதா, அல்லது வெள்ளை நிறத்தினை ‘பாண்டு’ எனக் குறிக்கக் கூடியது பற்றியா என ஆராய வேண்டியதாகிறது. ‘பாண்டுரோகம்’ என்பது தோலில் வெள்ளையாக ஏற்படும் ஒருவகை நோயினையும் குறிப்பதன் வழி, அந்நோய் வெள்ளை நிறத்தினைக் குறிப்பதினை அறியலாம். வெளிறிய வெள்ளை நிறத்தில் காணப்பட்டமையால் திருதுராட்டிரனின் தம்பி ‘பாண்டு’ என அழைக்கப்பட்டான். பாண்டு வாசுதேவனுக்கு ‘பாண்டு’ எனும் பெயர் வழக்கு வெள்ளை நிறம் பற்றி ஏற்பட்டதென்றால், அதனை பாண்டு வாசுதேவனின் காலமான கி.மு.4 ஆம் நூற்றாண்டில் தமிழர்களிடையே வழகிலிருந்த வெண்நாகன், வெண்காயபன், நல்வெள்ளையார் முதலிய பெயர் வழக்குகளுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டியது இன்றியமையாததாகின்றது. இன்றைய தொல்லியல் ஆய்வுகளின்படி, சங்க காலம் என்பதும் கி.மு.5 ஆம் நூற்றாண்டிற்கு முன் சென்றுவிட்டது என்பதனை மனத்தில் இருத்திக் கொண்டு ஆராய வேண்டும். அவ்வாறெனில், மேற்கண்டதான வெண்மையை அடையாளமாகவுடைய பெயர் வழக்குகள் யாவும் ஒருவகையில் ஆசீவகச் சமயத்தொடு தொடர்பு பெற்றிருந்தமையினை அறிஞர்கள் விளக்குவர்.

ஆதலால் பாண்டு வாசுதேவனும் ஆசீவக நெறியினனாதலே வேண்டும். இதற்கான சான்றுகள் சிலவும், இவனைக் குறித்ததான குறிப்புகளிலேயே காணக் கிடக்கின்றதெனலாம். பாண்டு வாசுதேவனும் அவனுடன் பயணம் மேற்கொண்ட அமைச்சர்களும் இரந்துண்ணும் துறவியர் போல் கப்பலில் இலங்கைக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் சமணத் துறவியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இரந்துண்ணும் வழக்கமுடைய, தலையின் முடிகளை நீக்கிய சமணத் துறவியர், கடல் தாண்ட மாட்டா நோன்பினர். பண்டு வாசுதேவன் காலத்திலும் அவனது மகனான அபயன் காலத்திலும் பௌத்தம் இலங்கைக்கு வரவேயில்லை. ஆதலால் அவர்கள், தலைமயிரினை மழிக்கும் பௌத்தரும் அல்லர். மேற்கண்டோர் தலைமுடியுடனேயே வந்துள்ளனர். தமிழ் மரபில் இரந்துண்னும் துறவியர், மக்களால் மதிக்கப் பெற்ற செல்வாக்குடையோராகவும், முக்காலங்களும் அறிந்தோராகவும், மக்களுக்கு நிமித்தங்களைச் சொல்வோராகவும் விளங்கினர். அவர்களை தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ‘அறிவர்’ என அழைத்தன. இதனை ஓரில் பிச்சையாரின் சங்கப் பாடல்வழி அறியலாம். அவர்கள் ஆசீவகச் சமயத்தவரே என்பது அறிஞர் பலரின் துணிபு. 

பாண்டு வாசுதேவனின் வருகையினை இலங்கையில் உள்ள அமைச்சர்கள் நிமித்திகன் வழி அறியலாயினர். இப் பாண்டு வாசுதேவனைப் பற்றிய மற்றொரு குறிப்பும் ஆசீவக மெய்யியலின் ஊழியற் கோட்பாட்டினை விளக்குவதாக உள்ளமையினைக் காணலாம். கங்கைச் சமவெளியை ஆண்ட சாக்கிய அமிதோதனுடைய ஒரு மகன்தான் சாக்கிய பாண்டு. இச் ‘சாக்கிய’ என்னும் சொல் பௌத்தரை மாத்திரமல்லாமல் பிற அவைதிகர்களையும் குறிக்கப் பயன்படும் பொதுச் சொல்லாகவும் வழங்கும். அச் சாக்கிய பாண்டுவின் இளையமகள் பத்திர காஞ்சன, பொன்நிற அழகி. அவளை மணக்கப் பலரும் விரும்பினர். ஆனால் பாண்டு, அவள் யாரை மணக்க வேண்டும் என ஊழ் உள்ளதோ, அவரை மணக்கட்டும் எனக் கருதி ஒரு கப்பலில் அவளை ஏற்றிக் கங்கையில் விட்டான். விரும்பியோர் கப்பலைக் கைப்பற்றி அவளை மணக்கலாம் என அறிவித்தான். யாராலும் கப்பலைக் கைப்பற்ற இயலவில்லை. ஊழ்வழிச் சென்ற கப்பல் இலங்கையின் கோண கழகத்தை அடைந்தது. பின்னர் அவள் பாண்டு வாசுதேவனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள்.

இதில் அறிவது சாக்கிய பாண்டும், பாண்டு வாசுதேவனும் ஊழின்பாற் கொண்ட நம்பிக்கையையே ஆகும். இவளை இவன் மணக்க வேண்டும் என்பது முன்னமே முடிவு செய்யப்பட்டது. கருவில் உள்ள போதே எழுதப்பட்டது. அவ்வழி ஊழே அவளது கப்பலை இழுத்து வந்தது என்பதான இக் கோட்பாடு ஆசீவகர்களுக்குரியது என்பதனை இதன்வழி அறியலாம். ஆக பாண்டு வாசுதேவன் காலத்தில் பௌத்தத்திற்கு முன் இலங்கையில் ஆசீவகச் சமயம் செழித்திருந்தமையினை இதன் வழியும் அறியலாம். அறிவர்களின் துணையோடு அவர்கள் கூறும் நிமித்தங்களின் அடிப்படையில் பாண்டு பயணப்பட்டமை போலவே, இன்றும் சிங்கள மக்கள் பயணங்களின் போதும், வேட்டைக்குச் செல்லுதற்கு முன்பும், ஐயநாயக்க என்னும் ஐயனாரை வழிபட்டுச் செல்கின்றமையைக் கொண்டு, இது பண்டைய மரபின் தொடர்ச்சி எனலாம்.

பாண்டு வாசுதேவனுக்கும் பத்ர காஞ்சனாவிற்கும் பத்து ஆண் பிள்ளைகளும் பதினொராவதாகச் சித்தரா என்ற பெண் மகவும் பிறந்தன. முதல் மகனாக அபயன் அரசுக் கட்டிலேறினான். சித்தரா பேரழகி; அவளுக்குப் பிறக்கும் மகனால் மாமன்மார்கள் கொல்லப்படுவர் என நிமித்திகன் கூறியபடியால் அவளை தனியிடத்தில் சிறைவைத்தனர். சித்தரா பணிப் பெண்ணின் ஒத்துழைப்போடு, காமனி என்னும் தன் அத்தை மகனைக் கூடி, பாண்டுகாபயன் என்னும் மகவைப் பெற்றெடுத்து, பணிப் பெண்ணிடம் கொடுத்துப் பிறிதோர் இடத்தில் வளர்க்கச் செய்தாள். இப் பாண்டு காபயனின் வாழ்வும், ஊழினது தன்மையை வலியுறுத்துவதாகவே உள்ளமையினைக் காணலாம். நீண்ட வாழ்நாள் என்பது இவனது ஊழாக இருந்தமையினால், இவளது மாமன்மாரால் இவனை ஒன்றும் செய்ய இயலவில்லை. ஊழின் வழியே, இவனது மாமன்மாருடனான மோதலும் கொலைகளும் நிகழ்ந்து முடிந்து, இப் பண்டுகாபயன் மன்னனானான். இவன் கருவிலிருந்த காலத்திலிருந்து, இவனைப் பாதுகாத்தவர்களாக இரண்டு இயக்கர்கள் (யதமர்கள்) சுட்டபடுகின்றனர். அவர்கள் காலவேலன், சித்தன் என்போராவர். இவர்கள் இருவருமே ஆசீவகச் சமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் என்பதை அவர்களின் பெயர்களின் வழி அறியலாம்; இச் சித்தன் என்னும் இயக்கனுடன் சம ஆசனத்தில் அமர்ந்து தேவர்களும் மனிதர்களும் ஆடும் நடனத்தினை பாண்டுகாயபன் கண்டுகளித்தான் எனவும் மகாவம்சம் கூறுவதன் வழியும் இதனை அறியலாம். ஆசீவகர்கள் இசையிலும் நடனத்திலும் பெருவியப்புடையவர்கள் என்பதால் இவர்களும் அவற்றைப் பேணி வளர்த்துள்ளனர் எனலாம். 

மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் வழியில் மேலூருக்கு அருகேயுள்ள மலைக்குன்றில், இயற்கையாய் அமைந்த மலைக் குகையின் தளத்தில் கற்படுக்கைகளிலும் அதன் மேல்பகுதியிலும் உள்ள கல்வெட்டுகளை, அரிட்டாபட்டிக் கல்வெட்டுகள் என அழைப்பர்.

“கணிய் நந்த அஸிரிய் இகுவ் அன்கே
தம்மம் இத்தஅ நெடுஞ்செழியன் பணஅன்
கடல் அன் வருத்திய கொட்டுபித்த
பளிஇய்”

என்ற கல்வெட்டும் அக் கல்வெட்டுகளின் ஒரு பகுதியாகும். இக்கல்வெட்டில் ஆசீவகத்தின் சிறப்பிற்குரியோரான கணி நந்தாசிரியன் இயக்கன் என்போனுக்கு பாண்டிய நெடுஞ்செழியன் ஏற்படுத்திய கற்படுக்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆசீவகர்களைத் கணியர், கணி எனவும் அழைப்பர். அவ்வடிப்படையில் இயக்கன் (யட்தமன்) என்ற சொல் ஆசீவகத் துறவிகளைக் குறித்தமையையும் காணலாம். ஆடலும் பாடலும் ஆசீவகச் சமயக் கோட்பாட்டுடன் இணைந்தவை. ஆசீவகத் தோற்றுநர்களில் ஒருவரான மற்கலி கோசலர், இறுதியாகக் கூறிய எட்டு மெய்மைகளில் ஆடலும் பாடலும் அடங்கும். விழா நாட்களில் சித்தன் என்னும் இயக்கனுடன் அமர்ந்து ஆடலையும் பாடலையும் பாண்டுகாபயன் கண்டு களித்தான் என்பதும் அவனது ஆசீவகச் சார்பையே காட்டுவதாகின்றது. பாண்டுகாபயனின் அறச்செயல்கள் பற்றிக் கூறும் மகாவம்சப் பகுதியில் ஆசீவகர்களைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

1. அதற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர்களுக்காக ஒரு வீட்டைக் கட்டினான்.

2. அப் பிரதேசத்திலேயே கிரி என்னும் பெயருடைய நிகந்தரும் பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர்.

3. அங்கு அரசன் நிகந்த கும்பந்தருக்காக ஒரு பிரார்த்தனை மண்டபத்தினைக் கட்டினான். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது.

மேற்கண்ட மகாவம்சப் பகுதிகளில், நிகந்த (நிகண்ட) ஜோதியர் என்போருக்கு பாண்டுகாயபன் ஒரு வீட்டை வழங்கியதாகவும், நிகந்த கும்பருக்கு ஒரு வழிபாட்டு மண்டபம் கட்டியதாகவும் கூறப்பட்டுள்ளமையினைக் காணலாம். இந் நிகண்ட ஜோதியர் குறித்து சிலர், இவர் திகம்பர சமணர் எனக் குறிப்பர். ஆயினும் இக்கருத்து ஐயத்திற்கிடமானதே. திகம்பர சமணர்கள் கடலில் பயணம் செய்திலர். இவர்கள் கடலில் பயணம் செய்யாமையாலேயே, சமணம் துணைக் கண்டத்தினைத் தாண்டி எங்கும் பரவியது. அத்துடன் இலங்கையிற் கிடைக்கின்ற பிராகிருத பிராமிக் கல்வெட்டுகளும் சமண வாணிகர்களுடையதே; அவை சைனத் துறவியருடையதல்ல என்பதினையும் கருதுதல் வேண்டும். அத்துடன் இலங்கை மக்களின் வாழ்வியலில் இன்னும் ஆசீவக மெய்யியலின் தாக்கத்தினைக் காண இயலும். ஆனால், சமணச் சான்றுகள் எதனையும் காண இயலாது. 

4. ஜோதியருடைய வீட்டுக்கு அப்பால், காமனி வாவியின் இக்கரையில் ஊர் ஊராகச் சென்று இரந்துண்ணும் துறவிகளுக்காக ஒரு மடத்தைக் கட்டுவித்தான்.

5. ஆசீவகர்களுக்கு ஒரு தங்குமிடமும் பிராமணர்களுக்கு ஒரு தங்குமிடமும் அமைத்தான். இந்த இடத்தில் நோயுற்றவர்கள் தங்கிச் சுகம் பெற ஒரு மனையையும், மண்டபத்தையும் கட்டினான். 

பாண்டு காபயன் ஆசீவகர்களுக்கு அளித்த கொடையாக வரலாற்றாசிரியர்கள் இந் நிகழ்வினைக் குறிப்பிடுவர். ஆசீவகர் என்ற சொல் இங்கு நேரடியாகக் குறிப்பிடப்பட்டமையால் மயக்கமெதுவுமில்லை. வேறுவடிவில், சமணர் என்பதாகவோ அமணர் என்பதாகவோ பொதுச் சொல்லால் குறிப்பிட்டிருந்தால், சைனர் என்று கண்ணை மூடிக் கொண்டு கூறிவிடுவர். ஊர்தோறும் இரந்துண்ணும் துறவியர் எனக் குறிப்பிடப்பட்டவரும் ஆசீவகத் துறவியரே என்பதினை முன்னமே கண்டோம். ஆதலால் இம் மன்னன் செய்த செயல்கள் யாவும் பௌத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளேயாகும். 

பாண்டு காபயன் முற்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். எழுபது ஆண்டு காலம் அனுராதபுரத்திலிருந்து ஆண்டான். அங்ஙனமாயின், 107 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளான். பாண்டுகாபயனுக்குப் பிறகு அவனுடைய மகன், மூத்த சிவன் அரசனானான். இவனும் ஆசீவக நெறியினைக் கைக்கொண்டிருந்தான். இதற்கான ஒரு சான்றினைக் காண்போம். ஆசீவகர்கள் பூங்காக்களை அமைத்தலையும் ஆசீவகத் துறவிகள் பூங்காக்களில் ஓய்வெடுத்தலையும் பெரிதும் விரும்புவர். அது அவர் தம் வழமையாகும். அதுபோலவே ஆசீவகத்தின் அடிப்படைக் கொள்கைகள் இயல்பு, ஊழ் தற்செயலியம் என்பனவாம். 

“அரசன் அழகுள்ள மகாமேகவனம் பூங்காவை அமைத்தான். அதன் பெயருக்கேற்ப அந்த வனம் எல்லா வகையான நல்ல வளங்களையும் உடையதாக இருந்தது. பழமரங்களும் மலர் மரங்களும் அங்கு இருந்தன. பூங்காவை உருவாக்குதலுக்கு அந்த இடத்தைத் தேர்வு செய்த போது, ஒரு பெரிய மேகம் திரண்டு, கார்காலமில்லாத மழை பொழியாத அக்காலத்திலும் மழை பொழிந்தது. அதனாலேயே அந்தப் பூங்காவை மகா மேகவனம் என்றழைத்தனர்” என்ற மகாவம்சக் கூற்றுக்களின் வழி, ஆசீவகத்தின் தற்செயல் கோட்பாடு விளக்கப்படுதலினைக் காணலாம். தேவையும் தற்செயலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. வெம்மையால் காடு வாடியபோது தற்செயலாகப் பெய்த மழை, காட்டினை உயிர்பிப்பது என்பது, தேவைக்கும் தற்செயலுக்குமான தொடர்பினை விளக்கக் காணலாம். மூத்த (முத்த) சிவன் என்ற பெயர் வழக்கிலுள்ள, முத்தம் என்பது வெண் முத்தினைக் குறிக்கக்கூடியது. “வெண்முத்தம் கடலிலே பிறப்பினும் கடற்கவைதன் என்செய்யும்” என்ற கலித்தொகையடியால் அதனை அறியலாம். ஆதலால் இவனது பெயரிலும் வெள்ளை நிறம் உள்ளதைக் காணலாம். இவனுக்குப்பின் வந்தவனே தேவனாம்பிரிய தீஸன் என்னும் அவனது மகனாவன். இவனது இயற்பெயர் யாதென அறிதற்கில்லை. ஆனால் தேவனாம் பிரியன் என்பது இவனது இயற்பெயர் அல்ல; பௌத்த சமயத்தில் சேர்ந்தபின், அசோகப் பேரரசனும் அவனுடைய கல்வெட்டுகளில் தேவனாம்பிரியன் என்றே அழைக்கப்பட்டமையினைக் காணலாம். இவன் அசோகனைக் கண்ணால் காணாத அவனது நண்பனாவான். இவன் அசோகனது அவைக்குத் தூதுக் குழுவினையும் பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்தான். அசோகனாலேயே இவன் பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டான். அந்நிகழ்வை அசோகனுடைய அமைச்சர்களே செய்தனர். அதற்கான பரிசுப் பொருட்களையும் அசோகனே அனுப்பி வைத்தான். அதனை இரண்டாம் பட்டாபிசேகம் எனக் குறிப்பிட்டனர். மேற்கண்டவாறான செய்திகளை மகாவம்சத்தின் 8, 9, 10, 11 ஆம் அத்தியாயங்களின் வழியறியலாம். 

இனி இலங்கையில் தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் ஆசீவகம் தொடர்பாக உள்ள எச்சங்களைக் காணலாம். ஆசீவகம் கடவுட் கொள்கையினை ஏற்ற மெய்யியலைக் கொண்டிருக்கவில்லை என்பதினை முன்பே கண்டோம். ஒருசமயம் தனது வாழ்வியலைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பல்வேறு குறியீடுகளைக் கையாள்வது போல் ஆசீவகமும் பிற்காலத்தில் தனது மெய்யியற் கோட்பாடுகளை வழிபாட்டு மரபுகளுக்குள்ளாகவும் சடங்கியல்களுக்குள்ளாகவும் மறைத்துக் கொண்டதெனலாம். அவ்வகையில் ஆசீவகம் அறப்பேர் சாத்தன் என வழங்கும் சாத்தன் வழிபாடு என்னும் ஐயனார் வழிபாட்டில் தம்மை இணைத்துக் கொண்டதென்பர். 

மற்கலி கோசலரையும், பூரணரையும், பக்குடுக்கை நன்கணியரையுமே பூரண பொற்கலையுடன் கூடிய ஐயனாராக க. நெடுஞ்செழியன் குறிப்பிடுவார். ஐயனார் வழிபாடு இலங்கையில் தமிழ் மக்களிடமும் சிங்கள மக்களிடமும் பெரிதும் பரவியுள்ளது. இன்றளவும் இலங்கைத் தீவு முழுவதும் ஐயனார் வழிபாடானது வழக்கில் உள்ளதெனலாம். ஐயனாரை சிங்கள மக்கள் ஐயநாயக்க தேவர், ஐயநாயக்க தெய்யோ என வழங்கி வழிபடுகின்றனர். ஐயனார் குறித்த செய்திகளை ரன்ஹெலப்பகவின, கோகிலசந்தேச (குயில்விடுதூது) என்ற சிங்கள நூல்கள் கூறுகின்றன. ‘எலான றெலன் பீலியு’ என்ற அம்மையார் இலங்கையில் ஐயனார் வழிபாட்டு முறைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஐயனார் குறித்த பல்வேறு தொன்மக் கதைகள் சிங்கள மக்களிடமுண்டு. மதுரையிலிருந்து ஐயனார் இலங்கைக்கு வந்தார் என்ற கருத்தும் உண்டு. ‘புல்லுவன் என்போன் பெண்வடிவம் கொள்ள அவனது வலதுபக்க இடையில் பிறந்தவரே ஐயனார்’ என்ற வழக்கும் உண்டு. இப்புல்லுவன் மகன், யானை மீதேறி தேவருலகம் சென்றபோது தேவர்கள் அவனைக் கூடி வரவேற்றனர். ஐயனார் இயக்கர்கள் பலருடன் மல்லவ தேசத்துத் தெய்வங்களோடு பெரிய படகு ஒன்றில் கடற் பயணத்தினை மேற்கொண்டார். கப்பலிக்க என்பவனால், பல நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பளிங்குப் பொருட்களால் ஏழு அடுக்குகளையுடையதாக அக்கப்பல் கட்டப்பட்டது. பயணத்தினிடையில் கப்பல் மூழ்க மல்லவ தெய்வங்கள் ஒரு யானையைப் பலியிட்டுக் கப்பலை மீட்டதாகவும், அக்கப்பல் யாழ்ப்பாணத்தை அடைந்ததாகவும், ஐயனார் வெள்ளை யானை மீதமர்ந்து யாழ்ப்பாணத்துக் கடற்கரையோரப் பகுதிகளுக்குச் சென்றதாகவும், வீரக்குழிய என்ற இடத்தில் ஒரு கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகின்றது. 

இக்கதைகளில் பௌத்த சமயத்தின் தாக்கம் இருப்பதினை அறியினும் தமிழக ஐயனார் கதைகளுடன் இவை ஒப்புமைப்பட்டிருக்கின்றமையினைக் காணலாம். தமிழக ஐயனார் சிலைகளைப் போலவே, ஒருகையில் செண்டு என்னும் ஆயுதமும் ஒருகையில் தாமரை மொட்டு அல்லது அபய முத்திரையுடனும் காணப்படக் கூடியவராகச் சிங்கள மக்கள் வழிபடும் ஐயனார் சிலைகள் அமைந்துள்ளன. ஆசீவகர்கள், வானியல் நிமித்தம் முதலியனவற்றை அறிவதில் வல்லவர்கள். பண்டைய சிங்கள மக்கள் அவர்களின் வழிகாட்டுதலின் வழி செயற்பட்டமை போல, இக்காலத்து மக்களும் பயணம் மேற்கொள்ளச் செல்லும் முன் ஐயனாயக்க தேவரை வழிபட்டே செல்லுவர். அத்துடன் தமிழக மக்களிடமில்லாத ஒரு வழிபாட்டு மரபும் சிங்கள் மக்களிடம் உண்டு. ஐயனாருக்கு நடைபெறும் திருவிழாக்களில் ஒரு நிகழ்வாக அமைவது ‘முட்டி மங்கலம்’ என்னும் சடங்காகும். இவ்விழாவில் குளக்கரையின் இரகசியமான இடத்திற்குச் சென்று புதிய சிவப்புப் பானைகளுக்குள்ளே விளக்குகளை ஏற்றிவைத்துப் படையல் செய்து வழிபடுவர். இவ் அரிய வழிபாடு பல தெளிவுகளை நமக்கு வழங்குவதாகின்றது. முட்டி என்னும் சொல் தமிழிலும் மண்பானையினைக் குறிக்கக் கூடியதாகின்றது. பனை மரத்தில் கள்ளுக்குக் கட்டும் பானையினை இன்றும் கள்முட்டி என்றே அழைப்பர். 

கொங்குப்பகுதியில் பனங்கிழங்கினை ஒரு பானையில் அடுக்கி நீரின்றி அவிப்பர். இதனை வறமுட்டி என்பர். முட்டி என்பது முடிவு என்னும் பொருளிலும் நிலைத்தல் என்னும் பொருளிலும் வழங்கும். கோயில் தேர்கள் நிற்கும் இடத்தினைத் தேர்முட்டி என வழங்குவதால் இதனை அறியலாம். ஆசீவகச் சமயத்தார் பானையில் இருந்து தவம் செய்யக் கூடியவர்கள். பானையிலேயே இறந்தவரை அடக்கமும் செய்யக் கூடியவர். இதனையே தாழியிற் கவிழ்த்தல் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இலங்கையில் முதுமக்கள் தாழிகள் பலவும் கிடைக்கக் கூடியனவாகின்றன என்றபடியால், பௌத்தத்திற்கு முன்பு, ஆசீவகச் சமயம் இருந்தபோது தாழியிற் புதைக்கும் வழக்கமே காணப்பட்டதெனலாம். அவ்வாறு தாழியிர் புதைக்கப்பட்டோரினை வழிபடும் மரபின் தொடர்ச்சியாகவே இன்றும் பானையில் விளக்கேற்றி வழிபடும் சடங்கு ஐயனார் வழிபாட்டில் சிங்கள மக்களிடம் உள்ளதெனலாம். அதுபோலவே ஆசீவகர்களுக்குரிய தாழியில் கவிழ்க்கும் இடுகாடுகளாகவே யாழ்ப்பாணத்திலுள்ள கந்தரோடை முதலான இடங்களைக் கருதமுடியும். ஏனெனில் இறந்தோரை எரியூட்டல் மரபே பௌத்தருடையது. இறந்தோரைத் தாழியிற் கவிழ்த்துப் புதைத்தல் மரபானது ஆசீவகர்களுக்கு உரியதாகும். அவ்வடிப்படையில், இவ்விடங்களை ஆய்வு செய்கின்ற போதே இலங்கையின் உண்மையான சமய வரலாறு வெளிப்படும். தமிழர் வழிபாட்டிலுள்ள ஐயனார் சிலையின் வடிவமைப்பும், சிங்கள மக்களிடமுள்ள ஐயனார் வழிபாட்டுச் சிலையின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒன்று போன்றனவே. அனுராதபுரத்திற்கருகில் காணப்படும் ஐயனார் சிலையை ‘இசுருமுனிய’ சிலை என்றழைப்பர். ஆனால் அது ஐயனார் சிலைதான் என்பது தெளிவு. அச்சிலையின் ஒருகையில் செண்டாயுதம் உள்ளமை கொண்டும், அச்சிலை ‘அர்த்தலீலாசனத்தில்’ அமர்ந்திருத்தல் கொண்டும் இதனை உணரலாம். அச்சிலை கி.பி.6 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகலாம் என்பர். திஸ்ஸவாவி என்னும் குளத்திற்கருகே அச்சிலை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஐயனார் வழிபாடுகள் குறித்த பல பாடல்களும் சிங்கள மக்களிடமுண்டு. இன்றும் ஐயனாரை மோகினியின் மகனாகக் கருதுவோரும் உண்டு எனலாம்.

ஈழத்தில் தமிழரிடம் உள்ள ஐயனார் வழிபாடுகள் 

தமிழரின் தாயகப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படக்கூடிய கோயில்களில் ஐயனார் கோயில்களும் அடங்கும். தமிழ் பௌத்த சமயத்தின் சிறந்த தலமாக மணிமேகலை சுட்டும் மணிபல்லவம் என்னும் நயினாதீவும், கண்ணகி வழிபாட்டின் சிறந்த தலங்களில் ஒன்றாக உள்ள காரைத் தீவும் போல், ஐயனார் வழிபாட்டின் தலைமைத் தலமாக அமைவது அனலை தீவு ஆகும். யாழ்ப்பாணத்தின் மேற்கே தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடைப்பட்ட இத்தீவுகள் சமயத் தொன்மங்களை உடையதாகும். அவ்வகையில் அனலை தீவிலுள்ள ஐயனார் கோயில் பல நூற்றாண்டுகள் வரலாற்றுச் சிறப்புடையதாகும். இவை தமிழக ஐயனார் வழிபட்டு மரபுடன் ஒத்தனவாக காணப்படுகின்றன. ஐயனாரின் வாகனமாக யானையே காணப்படுகின்றது. கோயிலுக்கு முன் அழகிய தாமரைக்குளம் காணப்படுகின்றது. இக்கோயிலே இலங்கையிலுள்ள ஐயனார் கோயில்களுக்கெல்லாம் தலைமைக் கோயிலாக அமைகின்றது. ஆசீவகச் சமயம் செழிப்புற்றிருந்த காலத்தில் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான இணைப்புப் பள்ளியாக இது அமைந்திருக்கும் எனக் கருதலாம். 

analaitheevu

சுன்னாகத்தில் அமைந்துள்ள ஐயனார் கோயிலும் புகழ் பெற்றதாகும். சுன்னாகம் ஒரு காலத்தில் ஆசீவகம் சிறப்புற்றிருந்த தலமாகும் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. சுன்னாகம் என்னும் பெயர் ஆசீவகத்தின் வெண்மை நிறத்தினைக் குறிக்கும் வெண்மலை என்னும் பொருளுடையது. இச் சுன்னாகத்திற்குள்ளேயே வெண்பிறப்பினை அடைந்த ஆசீவகத் துறவிகளைத் தாழியில் கவிழ்க்கும் கந்தரோடை அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே இலங்கையின் முதற் கண்ணகி கோயிலான அங்கனாவைக் கடாவை கண்ணகி கோயிலும் அமைந்துள்ளது. ஐயனார் வழிபாட்டு முறைமைகளை நோக்குகின்றபோது பெரும்பாலான ஐயனார் கோயில்கள் தமிழ் மரபு வழிபாட்டினை உடையனவாகவே உள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தில் செல்வந்தர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் வைதீக முறை பின்பற்றப்படுகின்றன. யாழ்ப்பாணத்தார் தமிழ் பண்பாடு மரபின்பின் மீது கொண்ட தாழ்வு மனப்பான்மையும், வைதீகம் போன்ற அந்நிய மரபுகளின் மீது கொண்ட மோகமுமே இதற்கான காரணங்களில் முதன்மையானது.

aiyanar

பொங்கல் வெறியாடுதல், காவடி எடுத்தல், கட்டு செல்லுதல், குறிகூறல், தீமிதித்தல் என்பனவான நிகழ்வுகளும், இவற்றின் இறுதியில் நேர்த்திக் கடன்களைச் செலுத்துதல், தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தல், மடிப்பிச்சை எடுத்தல், பாற் செம்பு முதலியவை நடைபெறும். ஐயனார் வழிபாட்டில் பாற்செம்பு என்பது அதன் வெள்ளை நிறத்தினைக் குறிப்பதாக இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றமையினைக் காணலாம். வன்னிப் பகுதியிலும் கிழக்கு இலங்கையிலும் ஐயனார் வழிபாடென்பது மிகுதியே. ஒவ்வொரு கோயிலாகக் கூறின் பெருகும். ஆதலால் சிறப்பு வாய்ந்த கோயில்கள் பின்னர் தனி நூலாக்கம் செய்யப்படும். ஐயனார் வழிபாட்டிற்குரியதாக ஐயனார் அகவல், ஐயனார் காவியம் என்பன வழக்கிலுள்ளன. தோவனம் பிரியதிஸன் காலத்திலேயே பௌத்தம் இலங்கைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பு அவனுடைய பாட்டனான பண்டு வாசுதேவன் காலத்திற்கு முன்பே ஆசீவகம் இலங்கையிற் செழித்திருந்தது. அங்ஙனமாயின், அதனை வடபுலத்தில் மாத்திரம் தோன்றிய சமயமாக எப்படிக் கொள்வது? தமிழரின் சிந்தனை மரபில் தோன்றாத ஒரு சமய மரபினைத் தமிழர்கள் எப்படிப் பெருவாரியாகச் சில நூற்றாண்டுகால இடைவெளிகள் கூட இல்லாது உடனே கடைப்பிடிப்பர்? ஆதலால் ஆசீவகம், தமிழர் மரபில் தோன்றிய சமயம் என எண்ண இடமுண்டு.

sunnakam

அசீவகச் சமய அடையாளங்கள்

ஆசீவகச் சமயம் பல அடையாளங்களை உடையதாக விளங்கியது. பௌத்த – சமண நெறிகளில் இருந்து மாறுபட்டு, இசையினையும் நடனத்தினையும் போற்றி வளர்க்கக் கூடிய சமயமாக இருந்தது. ஆசீவகத் துறவிகளே இக்கலைகளைப் போற்றினர். தமது இறுதிக் காலத்தில் மற்கலிகோசலர், ஆலகால என்ற தனது மாணவியின் வீட்டில் தங்கியிருந்து, எட்டு உறுதிப் பொருட்களை வெளியிட்டார் என்று பகவதி சூத்திரம் கூறுவதாகக் கூறும் க. நெடுஞ்செழியன் அவர்களின் கூற்றினை நோக்குவோம்.

“மற்கலி கோசலரின் இறுதி நாட்களில் அவர் தம் மாணவியான ஆலகாலா என்னும் பெயருடைய குயப்பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். அங்கிருந்துதான் தமது எட்டு உறுதிப் பொருட்களையும் வெளியிட்டுள்ளார். அவை:

  1. இறுதிப் பருகல்
  2. இறுதிப் பாடல்
  3. இறுதி ஆடல்
  4. இறுதி வரவேற்பு
  5. இறுதிப் பெரும் புயல்முகில்
  6. இறுதிப் பெரும் புயல்முகில்
  7. இறுதிப்போர்
  8. 24 ஆவது இறுதித் தீர்த்தங்கள்

இவற்றை சைன நூலாகிய பகதி சூத்திரம் குறித்துள்ளது எனக் கூறியுள்ளதை நோக்கின், இவற்றில் ஆசீவகத்தினை அடையாளப்படுத்தக் கூடியனவாக உள்ளனவும் உள்ளன. ஆதலால் இவற்றினையும் இவற்றைப் போன்றவற்றினையும் கொண்டு, ஆசீவகத்தின் அடையாளங்களுக்கு உரியவற்றினைக் குறித்தும், அவை எவற்றைக் குறிக்கின்றன என்பன குறித்தும் பார்க்க வேண்டியதாகின்றது.

இசையும் நடனமும்

ஆசீவகர்கள் இசையும் நடனத்தினையும் போற்றி வளர்த்தனர் என்பதினை, மதுரைக்காஞ்சியில் ஆசீவகப் பள்ளியின் வழிபாட்டில் இசைப்பாடல்கள் பாடப்பட்டமையினாலும், மற்கலிகோசலர் தனது இறுதிக் காலத்தில் ஆலகால என்ற தனது மாணவியின் வீட்டில் இருந்தபோது வெளியிட்ட எட்டு மெய்மைகளில் ஆடலும் பாடலும் உண்டு என்பதாலும் அறியலாம். அத்துடன் இசைக்கும் அவர்களது மெய்யியலுக்கும் பெரிதும் தொடர்பு உண்டு என்பதினை அரச்சலூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

இக்கல்வெட்டுக்களின் வழியும், ஆசீவக அடையாளங்களின் வழியும், அவற்றிலுள்ள சமநிலைத்தன்மை ஒன்றினை நாம் அறியக் கூடியதாக உள்ளதெனலாம். அரச்சலூர்க் கல்வெட்டில் மூன்று பகுதிகள் உள்ளன. இரண்டு பகுதிகள் இசை குறித்துக் குறிப்பிடுகின்றன.

பகுதி-1

த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த

பகுதி-2

கை த தை த கை
த தை தி தை த
தை த தை த தை
த தை த தை த

வண்ணக்கண் ஆதன் சாத்தன் என்னும் இசையாசிரியனால் பாடப்பட்ட இவ் வாய்ப்பாடு இக்கால நாட்டிய மரபில் சதி என்று சொல்லப்படுகின்றது. இவ் வாய்ப்பாட்டில் ஒரு சமநிலை மரபு பின்பற்றப்பட்டுள்ளமையினைக் காணக் கூடியதாக உள்ளது. ஒரு புள்ளியும் அதனைச் சூழ்ந்ததாகவும் இச்சமநிலை மரபானது விரிவடைகின்றது.

இதுபோலவே இசையல்லாத பிற ஆசீவக மரபுகளிலும் இச்சமநிலை மரபு விரிகின்றது என்பதும் ஆய்வுக்குரியதாகும். இவ்விசைச் சொற்களின் தாளக்கட்டினுக்கு ஆடுகின்ற ஆட்டத்திலும், ஒரு சமநிலை காணப்படுமெனலாம். சித்தன்னவாசல் ஓவியங்களில் உள்ள நடனப் பெண்டீரின் வடிவிலும் ஒரு சமநிலைத் தன்மை இருப்பதினைக் காணக்கூடியதாகின்றது.

தாமரைக் குளம்

தாமரைக் குளமுமாகும் ஆசீவகச் சமயத்தின் அடையாளங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது. இன்றும் ஈழத்து ஐயனார் கோயில்களைத் தாமரைக் குளங்களின்றிக் காணுதல் என்பதியலாது. இக்குளங்களும் இவற்றிலுள்ள தாமரை மலர்களும் ஆரச் சமநிலையினை உடையனவாக விளங்குகின்றன. குளம், கவிழ்ந்த (v) கூம்பு வடிவினை உடையது. ஒரு புள்ளியில் தொடங்கி விரியும் சமநிலையினை உடையது. தாமரைப் பூக்களும், மொட்டுப் புள்ளியிலிருந்து தொடங்கி விரியும் தன்மையுடைய சமநிலையானவை. தாமரை இலைகளும் அத் தன்மையானவையே.

திருநிலை

ஐயனார் கோயில்களின் கருவறை வாயிலுக்கு மேல் காணப்படக்கூடிய திருவையும், திருவினுக்கு இரண்டு பக்கங்களிலும் காணப்படும் யானைகளின் காட்சியையும், திருநிலை என்பார். இத் திருநிலையில் யானைகள் நீரினைச் சொரியும் அமைப்புக் காணப்படும். இதனை அறிஞர்கள் ஆசீவகத்தின் அடையாளங்களில் ஒன்றாகக் குறிப்பிடுவர். இத் திருநிலையும் சமச்சீர் உடையதாகவே அமைந்து காணப்படுதலினைக் காணலாம்.

ஐயனார் சிலை

ஐயனார் வழிபாட்டினை ஆசீவகச் சமயத்தின் நீட்சியாகக் கருதுவர். ஈழத்தில் ஐயனார் கோயில்களின் எண்ணிக்கையே மிகுதியெனலாம். இவ்வகை ஐயனார் சிலை நடுவில், ஒரு பக்கம் பூரனையும் ஒருபக்கம் பூக்கலையும் அமைய, பொதுவாக ஐயனார் லீலாசனத்திலோ அர்த்த பத்மாசனத்திலோ அமர்ந்த நிலையில் காணப்படுவார். இவ்வடிவமைப்பு சமநிலைத் தன்மையினைக் கொண்டதாகவே அமைவதினைக் காணலாம்.

ஈடுகாட்டுக்கல் வட்டம்

தாழியிற் கவிழ்க்கப்பட்டோரை அடக்கம் செய்த இடத்தினைச் சுற்றி கல் வட்டங்களை அமைப்பர். அக் கல் வட்டங்களை இன்றளவும் பல இடங்களில் காணலாம். அக் கல்வட்டமும் ஒரு புள்ளியிலிருந்து விரியக் கூடிய ஆரச் சமநிலையினை உடையதாகவே அமைவதினைக் காணலாம். இவ்வடையாளங்கள் ஆசீவகக் கொள்கையை விளக்குவனவாகவே உள்ளன. வயிரமுடைய தேக்கு மரமும், உட்துளையுள்ள மூங்கிலும் ஒன்றுதான்; இரண்டு பொருட்களுமே அணுக்களால் ஆனவையே; அறிஞனும் அசடனும் ஒன்றுதான்; இதில் வியத்தற்கு ஒன்றுமில்லை; எல்லாம் ஊழின் வழி இயங்கக் கூடியனவையே என்னும் சமநிலைத் தன்மை ஆசீவகக் கோட்பாட்டினை விளக்கும்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!”
(புறநானூறு, 192)

என்ற பாடல் வரிகளின் கோட்பாட்டுடன் சமநிலைக் கருத்தியல் ஒத்துச் செல்வதினைக் காணக்கூடியதாகின்றது எனலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4758 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (5)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)