பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நவீன நிர்வாக முறைமை
Arts
10 நிமிட வாசிப்பு

பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நவீன நிர்வாக முறைமை

August 26, 2024 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

முதலாளித்துவ யுகத்தில் ஐரோப்பியர்களின் எழுச்சிக்கும் தெற்குலகின் வீழ்ச்சிக்குமான காரணங்களை பின்வருமாறு சுருக்கலாம்:

1) விஞ்ஞானம், மனித குல, பொருளாதார, நாகரிக வளர்ச்சி என்பன ஒரு நாட்டுக்கோ ஒரு கண்டத்துக்கோ ஓர் இனத்துக்கோ சொந்தமானதல்ல. அவை மனித குலம் தோன்றிய காலம் முதல், ஆதிக்குடிகளாகவும், பின்னர் கோத்திரங்களாகவும், அரசுகளாகவும், தேசங்களாகவும் அது பரிணாமம் அடைந்து காலங்காலமாக, சிறுகச்சிறுக, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு படிப்படியாக வளர்க்கப்பட்ட திரட்சியேயாகும். இவ் வளர்ச்சியில் காலத்துக்கு காலம் ஒரு சில இனங்களும் நாடுகளும் முன்னிலை வகித்துள்ளன. சில தனிநபர்களும் (ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், மகா வீரர்கள், கலைஞர்கள், பொறியாளார், மாலுமிகள், நாடுகாண் பயணிகள் போன்ற அனைவரும்) முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். இவை அனைத்திற்கும் அடிப்பைடயாகத் திகழ்ந்ததும் – ஏனைய மிருகராசிகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்தியதும் உழைப்புதான்.

2) ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சி ஏற்படும்வரை – இன்றைய வளர்ச்சி நிலையோடு  ஒப்பிடுகையில் பின்தங்கியதாக இருந்தபோதும் – ஆசியாவும்  ஆபிரிக்காவுமே நீண்டகாலம் வளர்ச்சிப் பாதையில் முன்னிலை வகித்தன. அவற்றின் ஆரம்பகால நாகரீகத்தினதும் விஞ்ஞானத்தினதும் அனைத்து  அறிவுச் செல்வங்களும் – வர்த்தக ரீதியில் ஐரோப்பாவோடு ஆசியாவையும் ஆபிரிக்காவையும் இணைத்த – மத்திய ஆசிய நூலகங்களில் சேமிக்கப்பட்டிருந்தன. இந் நிலத் தொடர்பாலும் மத்திய ஆசியாவின் நூலகங்களாலும் பயன்பெற்று தனக்கே உரிய புவியியல், சமூகப் பண்புகளோடு அவற்றை வளர்த்தெடுத்து செம்மைப்படுத்திய கிரேக்க, ரோம சாம்ராச்சியங்கள் எழுச்சிபெற்றிருந்த காலம் தவிர ஏனைய நீண்ட காலம், ஆசியாவும் ஆபிரிக்காவுமே மனிதகுல வளர்ச்சிக்கு  முன்னோடிகளாகத் திகழ்ந்தன. ஆயினும் இங்கிருந்த நாடுகளோ மக்கள் கூட்டங்களோ சமமான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவப் புரட்சி ஏற்பட்ட மேற்கு ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்தன. அத்துடன் மேற்குலகில் ஏற்பட்ட முதலாளித்துவம் உலகெங்கும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது.

3) முதலாளித்துவ கைத்தொழில் புரட்சிக்கு முந்தைய வர்த்தக முதலாளித்துவக் காலகட்டத்தில் விஞ்ஞானத்திலும் போர்க் கலையிலும் போர் தொழில்நுட்பத்திலும் ஏனைய நாடுகளை விஞ்சிய மேற்கு ஐரோப்பிய நாடுகள், புதிதாக அறியப்பட்ட அமெரிக்கக் கண்டத்தையும், ஆசிய, ஆபிரிக்க நாடுகளையும் தமது காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து அந்நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை தமது நாடுகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து பணக்கார நாடுகளாயின.

ஐரோப்பிய நாடுகளின் மேல்நிலைக்கு இவர்கள் சர்வதேச வர்த்தகத்தை தமது காட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமை மற்றொரு காரணமாகும். காலனித்துவ நாடுகளின் இயல்பான உற்பத்தி வளர்ச்சியைத் தடுத்து, அவர்களது உலக விற்பனைச் சந்தைக்குத் தேவையானவற்றை மாத்திரம் உற்பத்தி செய்யும் நாடுகளாக மாற்றி – ஏற்றுமதி மூலம் கொள்ளை இலாபம் சம்பாதித்தும், தமது விற்பனைச் சந்தையாக அவற்றை மாற்றி இறக்குமதி மூலமும் கொள்ளை இலாபம் சம்பாதித்தும், அவற்றின் மூல வளங்களை மலிவான விலையில் கொள்ளையடித்தும் கொழுத்தவைதான் இந்த மேற்கத்திய நாடுகள். இதைவிட மேற்கு நாடுகளின் வளர்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. அது அவர்களது முன்னேறிய நிர்வாக முறையாகும்.

சோழர்களின் நீண்டகால சாம்ராஜ்யமும், மகா அலெக்சாந்தரின் வேகமாக விரிந்த சாம்ராஜ்யமும், அது போன்றே முதலாளித்துவத்திற்கு முந்திய அனைத்து வல்லமை மிக்க சாம்ராஜ்யங்களும் வீழ்ந்ததற்குப் பிரதான காரணம், விரிவடைந்த சாம்ராஜ்யங்களைக் கட்டி ஆளக்கூடிய, கண்காணிக்கக்கூடிய, திறன்மிக்க நிர்வாக முறை ஒன்றினை அவை கொண்டிருக்காததும், அதற்குத் தேவையான தொலைத்தொடர்பு வசதிகளும் தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடையாததுதான். கைத்தொழில் புரட்சிக்கு மூலமாக அமைந்த விஞ்ஞானப்புரட்சி, நவீன நிர்வாக முறைக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. தொலைபேசி, வானொலி, நீராவிக் கப்பல், மோட்டார் வாகனம், புகையிரதம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமை, தபால் சேவை, போக்குவரத்துச்சேவை ஆகியவற்றின் திடீர் வளர்ச்சி போன்றவை இதற்கு வலுச்சேர்த்தன. அதுவே பிரித்தானியாவின் சூரியன் அஸ்தமிக்காத விரிந்த சாம்ராஜ்யம் சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலம் நிலைத்திருந்ததற்குக் காரணமானது.

பிரித்தானியாவின் நவீன நிர்வாக முறையை ஏற்படுத்தியவர்களும் நவீன கடற்கொள்ளையர்கள்தான் என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாக இருக்கும். ஆம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குறைந்த மனித வளத்தைப் பயன்படுத்தி, விரிவான வளங்களைக் கட்டுப்படுத்தும் நிர்வாக முறையின் முன்னோடி, கிழக்கிந்தியக் கம்பெனியாகும். உதாரணமாக, 1930 களில் இந்தியாவின் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பரப்பை வெறும் 2,000 அரசு ஊழியர்களே நிர்வகித்தனர். 

இதற்கு, பல வழிகளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் செயற்திறனே முன்மாதிரியாக அமைந்தது. அதன் உச்சத்தில், இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருந்தது. சுமார் 260,000 படை வீரர்களை அது கொண்டிருந்தது. இது பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டிருந்த மொத்த இராணுவத்தை விட  இரு மடங்கு பெரியதாகும். 1700 களின் நடுப்பகுதியிலும் 1800 இன் முற்பகுதியிலும் உலக வர்த்தகத்தில் பாதிக்கு அதிகமான பங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் அது வைத்திருந்தது. ஆனால் 1600 தொடக்கம் 1874 இல் அது பிரித்தானிய அரசினால் கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகம் முடியின் கீழ் கொண்டுவரப்படும் வரையிலான 274 வருட வரலாற்றில், அது உச்சம் தொட்டபோது அதன் தலைமை அலுவலகத்தில் 35 நிரந்தரப் பணியாளர்கள் மாத்திரமே இருந்தனர். அதன் விரிந்த சாம்ராஜ்ய நிர்வாகத்தின் கீழ் இராணுவ வெற்றிகள் குவிக்கப்பட்டன; நாடுகள் அடிபணிந்தன; தெற்கு ஆசியாவின் பரந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. அத்தனையும் மிகச் சிலரைக் கொண்டே நிர்வகிக்கப்பட்டது. இவ்வாறு அதன் நிர்வாகத்தின் கீழ் 1785 இல் பணிபுரிந்தோர் 159 பேர்; 1813 இல் 241 பேர் மாத்திரமே! இவர்களே பிரித்தானியச் சாம்ராச்சியத்தை விஸ்தரித்து மில்லியன் கணக்கான காலனிய மக்களை நிர்வகித்தனர்.

இவ்வாறுதான் சனத்தொகை குறைவான குட்டி நாடான பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத தனது விரிந்த சாம்ராஜ்யத்தை எண்ணிக்கையில் குறைவான தனது நிர்வாகிகளைக் கொண்டு நிர்வகிக்க முடிந்தது. இத்தகைய நிர்வாகத்துக்கு தனது மொழியில் தேர்ச்சிபெற்ற, தமது நிர்வாகத்துக்குக் கீழ்ப்படிந்து தமக்கு விசுவாசமாக சேவை செய்யக்கூடிய சுதேசிகளைக் கொண்ட நிர்வாகச் சேவை ஆளணி ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் அவர்களால்  அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி மூலக் கல்வியும் அதனால் உருவாக்கப்பட்ட காலனித்துவத்துக்குச் சேவை செய்யும் நிர்வாக ஆளணியும் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. அம் மாற்றங்களையும் பெருந்தோட்டப் பொருளாதரத்தை மையமாகக் கொண்ட புதிய பொருளாதாரம் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும் இனிப் பார்க்கலாம். 

உசாத்துணை

  1. Carey, W. H. (1882). 1882 – The Good Old Days of Honourable John Company. Simla: Argus Press.
  2. Fox, E. T. (2008). King of the Pirates: The Swashbuckling Life of Henry Every. London: Tempus Publishing.
  3. Roos, Dave (23 October 2020). “How the East India Company Became the World’s Most Powerful Monopoly History.”
  4. Lawson, Philip (1993). The East India Company: A History. London: Longman.
  5. Wilbur, Marguerite Eyer (1945). The East India Company: And the British Empire in the Far East. Stanford, Cal.: Stanford University Press.
  6. William Dalrymple (2015) The East India Company: The original corporate raiders, the  Guardian  04.03.2015.
  7. Kerr, Robert (1813). A General History and Collection of Voyages and Travels. Vol. 8. W. Blackwood.
  8. Wilbur, Marguerite Eyer (1945). The East India Company: And the British Empire in the Far East. Stanford University Press.

தொடரும். 


3146 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)