திம்பு பேச்சுவார்த்தையின் விளைவுகள்
Arts
11 நிமிட வாசிப்பு

திம்பு பேச்சுவார்த்தையின் விளைவுகள்

January 3, 2024 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக தமிழ் மக்கள் ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையை மாற்ற எத்தனையோ போராட்டங்கள்,  தொழிற்சங்க நடவடிக்கைகள், சாத்வீக சத்தியா கிரகங்கள் என்பவற்றையெல்லாம் மேற்கொண்டு அரசாங்கத்துக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்தனர். அடுத்தடுத்து பதவி வகித்த இனவாத அரசாங்கங்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அங்குலம் கூட இறங்கிவர தயாராக இருக்கவில்லை. நாட்டின் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தங்களது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு பிரதேசத்தை ஒரு சுயாட்சியுடன் கூடிய தனிநிர்வாக அலகாகப் பிரித்து தரும்படி கோரி, ஆயுதப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இருந்த காலம் அது. இந்தியாவும் கூட தென் மாநிலமான தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகளை அதிகரித்துக் கொள்ளும் முகமாக இலங்கைத் தமிழர் மீதான கரிசனையை அதிகரித்து இருந்தது.

thimpu declaration

தனி நாடு கேட்டுப் போராடிய ஆயுதக் குழுக்கள் சில மலையக இளைஞர்களையும் ஆட்சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கின. 1985 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் இடம்பெற்ற ‘திம்பு’ சமாதானப் பேச்சு வார்த்தையின் இறுதியில் போராட்டக் குழுக்கள் சமர்ப்பித்த சமாதானத்துக்கான விதந்துரைகளின் நான்கு அம்சப் பிரகடனத்தில் நாட்டின் சகல தமிழ் மக்களுக்கும் சமமான பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற இந்த சமாதான மாநாட்டில் ஆயுதப் போராட்ட குழுக்களான எல் டி டி இ, இ பி ஆர் எல் எப்,  டெலோ, ஈரோஸ், புளட், டி யு எல் எப் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கு பற்றி இருந்தனர். இந்த பேச்சு வார்த்தையின் போது அரசாங்கத்தின் தரப்பில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தமையனான, எச்.டபிள்யூ.டபிள்யூ. ஜெயவர்த்தனவும் இடம் பெற்றிருந்தார். இவர், பேச்சு வார்த்தையின் முடிவில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை தனிப்பட்ட முறையில் சந்தித்து, மேற்படி பேச்சு வார்த்தையின் நாலாவது அம்சமாக இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் பிரஜா உரிமை பிரச்சினையும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது குறித்து பிரஸ்தாபித்ததுடன், ஆயுதப் போராட்டம் இந்திய வம்சாவழி மக்கள் மத்தியிலும் பரவுவதன் ஆபத்து தொடர்பிலும் எச்சரித்தார்.

HWW.Jayawardena

இதற்கு மேலதிகமாக சிங்கள பௌத்த உயர் மத பீடமான ‘மகா சங்கத்தினர்’ இதனை ஒரு சாக்காகக் கொண்டு இந்திய அரசு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான ஆபத்து இருப்பதாக எச்சரித்ததுடன் இந்திய வம்சாவழி மலையகத் தமிழருக்கான பிரஜா உரிமையை வழங்குவது தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தது. இது தொடர்பான விடயங்கள் யாவும் ஆமை வேகத்திலேயே நகர்ந்தன. தொடர்ந்தும் இது தொடர்பில் அழுத்தங்களை கொண்டுவராமல் விட்டால் இந்த விடயத்தை மீண்டும் கிடப்பில் போட்டு விடக்கூடும் என அறிந்திருந்த தொண்டமான், பிரார்த்தனை வழிபாடு போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார். 1985 ஜூன் மாதம் மூன்று தினங்களுக்கு இந்த போராட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர்கள் காலை ஏழு மணியிலிருந்து மதியம் 12 மணி வரையில் கூட்டுப் பிரார்த்தனையிலும் வழிபாட்டு நிகழ்விலும் கலந்துகொண்டுவிட்டு 12 மணிக்கு பின்னர் மாலை வரை தொழிலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இது ஒரு வேலை நிறுத்த போராட்டம் அல்ல என்பதாலும் இதனால் தோட்டங்களில் உற்பத்தி பாதிக்கப்படப் போவதில்லை என்பதாலும் இது தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, அநேகமாக எல்லா தொழிற்சங்கங்களும் இணைந்து செயல்பட்டமை என்பன அவர்கள் தமது நடவடிக்கைகளில் உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.

பிரார்த்தனை போராட்டத்தை தோட்ட நிர்வாகங்கள் கண்டுகொள்ளாதது போலவே அரசாங்கமும் கண்டு கொள்ளவில்லை. எனினும் தொழிற்சங்கங்களை பொறுத்தவரையில் இதனை அவர்கள் ஒரு வெற்றியாகவே கருதினார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதன் செயற்குழு கூட்டத்தையும் தேசிய கவுன்சில் கூட்டத்தையும் அதே வருடம் டிசம்பர் 3 இல் கூட்டியது. அந்தக் கூட்டத்தில், தொண்டமான் தான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதையும், ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டார். அந்தப் பிரகடனம் பின்வரும் அம்சங்களை வெளிப்படுத்துவதாக இருந்தது : 

அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான காலங்களில் எல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவர்களுக்கு உதவியும் ஒத்தாசையும் வழங்கி வந்துள்ளது. ஆனால் அவர்கள் எல்லா உதவிகளையும் பெற்றுக் கொண்டு எம்மை முதுகில் குத்துபவர்களாகவே நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நன்றி உணர்வு என்பது துளியாவது இருப்பதாக தெரியவில்லை. 4 லட்சம் தொழிலாளர்களின் பிரஜா உரிமைப் பிரச்சனையும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளும் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கான  தீர்வும் இன்னும் எட்டப்படவில்லை.

ஆதலால், தமது பிரச்சனைகளை எல்லாம் புரிந்து கொள்ளச் செய்யும் வகையில் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில், பிரார்த்தனை போராட்டத்தை அகிம்சை அடிப்படையில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 14 ஆம் தேதி தைப்பொங்கல் அன்று ஆரம்பிக்கப்படும் இந்த பிரார்த்தனை போராட்டம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு, 1986 ஏப்ரல் 15 ஆம் தேதி தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் வரை தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி அதன் நோக்கங்களை விபரித்து மூன்று மொழிகளிலும் விளம்பரங்கள் தயாரித்து பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. இது தொடர்பான செய்திகளையும் பரவலாக ஊடகங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றையும் தயாரித்து மாநாட்டு பிரகடன பிரதி ஒன்றையும் வைத்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கு தொண்டமான் கடுமையான தொனியில் கடிதம் ஒன்றையும் அனுப்பினார்.

JR Jeyawarththana

இந்தக் கடிதம் கிடைத்ததன் பின்னரே ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கு இவர்கள் ஏதோ பெரிதாகத் திட்டமிடுகிறார்கள் என்பது புரிந்தது. அவர், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற யுத்த சூழ்நிலையையும் அதன் காரணமாக பாதுகாப்புச் செலவு பன்மடங்கு அதிகரித்து இருக்கின்ற நிலையும் சீர்தூக்கி, இத்தகைய ஒரு காலகட்டத்தில் தேயிலை பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுவதன் ஆபத்தை உணர்ந்தார். உடனடியாக தொண்டமானை அழைத்து, அடுத்துவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஒரு முடிவு எட்டப்படும் என்று அறிவித்தார்.

அடுத்து வந்த  சில தினங்கள் இது தொடர்பில் பேசப்பட்ட பரபரப்பான தினங்களாக இருந்தன. அமைச்சரவை கூட்டப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. தொண்டமான், தனது மக்கள் இதுவரை காலம் அனுபவித்து வரும் கஷ்டங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்து, அவர்களின்  ‘நாடற்றவர்கள்’ என்ற நிலைமை மாறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தன அடுத்த நாளும் இது தொடர்பில் பேச தனது வீட்டுக்கு பல அரசாங்கத் தலைவர்களை அழைத்து இருந்தார். அங்கு கூடியிருந்த அமைச்சர்களில் லலித் அத்துலத் முதலியை தவிர ஏனைய அனைவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

விரைவிலேயே இந்த விஷயம் வேறு திசை நோக்கித் திரும்பியது. தொண்டமான் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்காக இந்தியா சென்றிருந்தார். அவர் நாடு திரும்பியபோது நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடாமல் இந்த விஷயத்துக்கு முடிவு ஒன்று ஏற்படுத்தலாகாது என்று கருதி இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சு வார்த்தையின் போது 18 மாதங்கள் தமக்கு அவகாசம் வேண்டும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது. அதற்கு இணங்கும் படி அப்போதைய இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் தொண்டமானை கேட்டுக்கொண்டார். தொண்டமானுக்கு இதில் உடன்பாடு இல்லை என்ற போதும் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்த நாளே தொண்டமானின் வீட்டுக்கு அவரைத் தேடி வந்த லலித் அத்துலத் முதலி இரண்டு அரசாங்கங்களின் மேற்படி ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். மேற்படி விடயம் திசை திரும்பி போய் விட்டமைக்கு காரணம் லலித் அத்துலத் முதலி தான் என்பதை புரிந்து கொண்ட தொண்டமான் “உன்னால் முடிந்ததை நீ செய்து கொள்” என்று கூறி அனுப்பி விட்டார். ஆனால் தொண்டமானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆயினும் ஒரு நன்மை நடந்தது. 18 மாத கால அவகாசத்துக்குள் இரண்டு நாடுகளும் இணைந்து சட்டமொன்றைத் தயாரித்தது. இந்திய வம்சாவழி மலையக தமிழ் மக்களின் ‘நாடற்றவர்’ என்ற பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பது உறுதியாயிற்று.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10764 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்