விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும்
Arts
15 நிமிட வாசிப்பு

விவசாயப் புரட்சியும் சூழல் மாற்றமும்

January 6, 2023 | Ezhuna

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

பசுமைப்புரட்சி

கைத்தொழில் புரட்சியின்போதே பசுமைப்புரட்சிக்கான அத்திபாரமும் இடப்பட்டது. எனினும் 17 ஆம் நூற்றாண்டில் அதாவது தொழிற்புரட்சி தோன்றுவதற்கு முன்பே விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுவிட்டது. டச்சுக்காரர்களின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மரக் கலப்பைகள், பொறிமுறை ரீதியில் இயக்கப்படும் விதை விதைக்கும் பொறிகள் மற்றும் சூடு அடிப்பதற்காக மனித, மிருக வலுக்களுமே பயன்படுத்தப்பட்டது. எனினும்  ஐரோப்பாவில்  நிலங்களைப் பண்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட புதிய விவசாயக் கருவிகளான, உருக்கு /இரும்புக் கலப்பைகள், கடப்பாரைகள், மிக வினைத்திறனாகவும் சம இடை வெளியில்  விதைகளை ஒரே ஆழத்தில் விதைக்கக் கூடிய கருவி, கதிர் அறுக்கும் மற்றும் சூடடிக்கும் இயந்திரங்களின் கண்டுபிடிப்பு என்பன வேளாண் துறையில்  பெருமாற்றத்தை ஏற்படுத்தின. இது உணவு உற்பத்திக்கான செலவைக் குறைத்ததோடு மட்டுமல்லாது தொழிலாளர் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்தது. மண்ணை வளப்படுத்த “பயிர்ச் சுழற்சி முறை (Crop-Rotation)” நடைமுறைப்படுத்தப்பட்டது. மண்ணின் வளத்தை மீட்டெடுக்க “குளோவர்(Clover) என்ற ஒருவகைச் செடியினைப் பயிரிட்டனர். இங்கிலாந்தின் நிலவுடைமையாளர்கள் தங்கள் பண்ணைகளை விரிவுபடுத்தத் துவங்கியதுடன், கிராமங்களில் சிதறிக்கிடந்த நிலங்களை ஒன்றிணைத்துக் கூட்டுப்பண்ணையாக்கி உற்பத்தியைப் பெருக்கினர்.

பயிர்ச்சுழற்சி (crop rotation)

விவசாயத்தை வினைத்திறனாக மேற்கொண்டாலும், மனித சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இலக்கை அடைவது மிகவும் சவாலாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் பட்டினியும் பஞ்சமும் ஏற்படக்கூடிய சூழ்நிலை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எதிர்வு கூறப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்காக ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்களை உற்பத்தி செய்ய உருவாக்கப்பட்ட இரும்பு, உருக்கு, மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகள் எந்த உழைப்புமில்லாமல் ஐரோப்பா முழுவதும் பூட்டப்பட்டிருந்தன. இந்த நேரத்தில் தான் 1940 களில் மெக்சிக்கோவில் விவசாய நடைமுறைகளின் மறுசீரமைப்புத் தொடங்கியது. இந்த விவசாய மறுமலர்ச்சித் திட்டங்கள் காரணமாக 1950 கள் மற்றும் 1960 களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய உயர்ரக கோதுமை இனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உணவு உற்பத்தி ஏக்கருக்கு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. மெக்சிக்கோவில் உணவைப் பலமடங்கு உற்பத்தி செய்வதில் கிடைத்த வெற்றி, உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. இதற்காக பல்வேறு வகையான விவசாய உள்ளீடுகள் (இரசாயன உரம், பூச்சி கொல்லிகள்) மற்றும் அதி வினைத்திறனான நிலம் பண்படுத்தும், விதைக்கும், நடும், தெளிக்கும், அறுவடை செய்யும் இயந்திரங்கள் தேவைப்பட்டன. இவற்றை உற்பத்தி செய்வதற்காக ஐரோப்பா முழுவதும் பூட்டப்பட்டிருந்த ஆயுதத் தொழிற்சாலைகள் மாற்றி அமைக்கப்பட்டு வேகமாக விவசாய உள்ளீடுகள் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் விவசாய மறுமலர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதனையே பசுமைப் புரட்சி என விரிவாக அத்தியாயம் நான்கில் பார்த்தோம்.

பசுமைப் புரட்சி வெற்றியடைந்த போதிலும், பசுமைப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், பல எதிர்மறையான குறிப்பிடத்தக்க தாக்கங்கள் எழுந்தன. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பிரத்தியேக ஆய்வுகள் பல நடாத்தப்பட்டன .

 இந்த ஆய்வு முடிவுகளை மதிப்பாய்வு செய்வது, இன்னுமொரு பசுமைப் புரட்சியின் போது கவனத்தில் கொள்வதற்கு மிக அவசியமாகும்.

green-revolution-1

பசுமைப் புரட்சியின் நன்மைகள்

  • விளைச்சலின் பன்மடங்கு அதிகரிப்பு
  • குறுகியகாலத்தில் விளைச்சல்
  • பண்ணை இலாபம் பலமடங்கு அதிகரிப்பு
  • கிராமப்புற மக்களின் போசணை மட்டம் அதிகரிப்பு
  • கிராமப்புற மக்களின் பரம்பரை உணவுப் பழக்கத்தில் மாற்றம்
  • பண்ணை உட்கட்டமைப்புக்களின் அபரிவிதமான மேம்பாடு மற்றும்  விஸ்தீரணம்
  • தொழில் வாய்ப்புக்கள் அதிகரிப்பு
  • தொழிற்சாலைகளின் அதிகரிப்பு
  • நீர்ப்பாசனக் கட்டமைப்புகளின் விருத்தியும் மேம்பாடும்

பசுமைப் புரட்சியின் எதிர்மறையான விளைவுகள்  

பசுமைப் புரட்சியினால் மேற்குறிப்பிடப்பட்ட பல நன்மைகள் இருந்தாலும், நன்மைக்கு அதிகமாக பாரிய எதிர்மறையான விளைவுகளே நீண்ட காலத்தில் ஏற்பட்டன. அவையாவன :

  • பரம்பரை பாமர விவசாயிகளின் தொழில் இழப்பு:

பசுமைப் புரட்சியால் உலகளாவிய உணவு விநியோகம் வேகமாக விரிவடைந்து வருகின்ற போதிலும், பெருந்தொகையான மக்கள் இன்னும் பட்டினியால் வாடுகின்றனர், காரணம், பசுமைப் புரட்சி ஒரு விலையுயர்ந்த தொழில்நுட்பம். எனவே அவர்கள் அதைப் பின்பற்றுவதற்கு கடன் வசதிகளைப் பெற வேண்டியிருந்தது.  ஆனால் பசுமைத் தொழில்நுட்பங்களில் பணக்காரர்கள் இலகுவாக அதிகளவில் முதலிட்டனர், புதிய தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பதில் ஏற்படும் செலவுகளை ஏழை விவசாயிகளால் ஈடுகட்ட முடியவில்லை, அதனால் அவர்கள் பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டனர், அவர்களால் குறைந்த விலையில் உணவை உற்பத்தி செய்ய முடியவில்லை, ஏற்பட்ட தொடர் நட்டத்தால் விவசாயத்தைக் கைவிட்டனர். இதனால் நடுத்தர வர்க்க வளர்முக நாடுகளில் பெருமளவானவர்கள் வேலை இல்லாப் பிரச்சினைக்கு இன்றும் முகம் கொடுக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, நமக்கு உணவளிக்கும் விவசாயியின் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றனர். பிழைக்க வழி இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையை முடித்துகொள்கிறார்கள். இந்தியாவின் தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் (NCRB) தரவுகளின்படி 1995இல் இருந்து, இதுவரை  அந்த நாட்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  நான்கு முறை இந்தியா சந்தித்த போரில் கூட இவ்வளவு மக்கள் இறக்கவில்லை. ’இந்த உலகில் யார் இறந்தாலும் நமக்கு கவலை இல்லை, உணவு வழங்கும் விவசாயியைத் தவிர’ என்பதை நாம் நினைவில் வைத்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டி அமைக்க வேண்டும். இலங்கைக்கு இந்த நேரத்தில் இது மிகவும் பொருந்தும்.

  • பரம்பரை விதை மற்றும் கால்நடைகளின் இழப்பு:

பசுமைப் பரிணாமம் என்பது சூழலியல் ரீதியாக நிலையானது அல்ல. பசுமைத் தொழில்நுட்ப மாற்றங்களின் ஆரம்ப கட்டங்களில் வியத்தகு விளைச்சல் அதிகரிப்புகளை தந்த பிறகு, பல பசுமைப் புரட்சி நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் விளைச்சல் குறையத் தொடங்கியது என பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு உதாரணம் பிலிப்பைன்ஸ், சென்ட்ரல் லூசானில் 1970 களின்போது நெல் விளைச்சல் சீராக வளர்ந்து 1980களின் முற்பகுதியில் அதன் உச்சத்தை எட்டியது. அதன்பின் விளைச்சல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. காரணம் காலநிலை மாற்றம். எமது பாரம்பரிய இனங்கள் நமது சூழல் காலநிலைக்கு ஏற்றவாறு சகித்து வாழும் தன்மை உடையவை. ஆனால், பசுமைப் புரட்சி புகுத்திய உயர் விளைச்சல் இனங்கள் தகுந்த காலநிலை இல்லாவிட்டால் விளைச்சலைத் தராது. பசுமைப் புரட்சியின் காரணமாக நமது வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தை நாம் இழந்துவிட்டோம். விவசாயிகள் புதிய மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகளைப் பயிரிடவும், புதிய கலப்பின இனங்களை வளர்க்கவும் விரும்பியபோது பல பாரம்பரிய உள்ளூர் வகைகள் அழிந்துவிட்டன. உதாரணமாக இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு முன்னர் ஏறக்குறைய 30,000 அரிசி வகைகள் இருந்தன. இன்று பத்து வகைகள் மாத்திரமே பாரம்பரிய விவசாயிகளால் மிகச் சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன. இந்தக் கொள்கை நாட்டு மாடுகள், ஆடுகள் மற்றும் கோழி இனங்களுக்கும் பொருந்தும்.

  • அபரிமிதமான இரசாயனப் பாவனையால் மண் மற்றும் நீர் பாதிப்பு:
விவசாயத்தில்-இரசாயனப்-பாவனை

பசுமைப் பயிர் வர்க்கங்கள் உயர் விளைச்சலை குறுகியகாலத்தில் கொடுக்கக் கூடியவை. உயர் விளைச்சலைக் குறுகியகாலத்தில் பெற வேண்டுமாக இருந்தால் விவசாய உள்ளீடுகளான சேதன இரசாயன உரம் மற்றும் அதிகளவான நீரைக் கொடுக்க வேண்டும். பசுமைப் பயிர் வர்க்கங்கள் மிகக் குறைந்த அளவிலே காணப்பட்டமையினாலும்  (Less Diversity), ஒரே பயிராக பரந்த அளவில் பயிரிட்டமையினாலும் (Mono-cropping) பூச்சித் தாக்கங்களுக்கு எதிர்த்துப் போரிடப் போதுமான பரம்பரை வகைகளைக் கொண்டிருக்கவில்லை. இந்தச் சில வகைகளை பாதுகாக்கும் பொருட்டு, பூச்சிக்கொல்லி பயன்பாடு வளர்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பசுமைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே உலகம் முழுவதும் பல நாடுகள் விவசாயத்தை மேற்கொண்டன. அதுமட்டுமன்றி, பசுமைத் தொழில் நுட்பங்களை வளர்முக நாடுகளில் பரப்பும்போது இரசாயன உரத்தை இலவசமாகவும் பின்னர் மானிய விலையிலும் வழங்கியமையினால், சேதன இரசாயன உரப் பாவனை மிக அதிகமாக இருந்து. உலக உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பின் கருத்தின்படி உலகளாவிய பூச்சிக்கொல்லிப் பயன்பாடு 5.89 மில்லியன்  தொன்களை எட்டியது, இது 2000 ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது 34.7% அதிகமாகும். இதேபோல், உரப் பயன்பாடு கடந்த இரண்டு தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.  நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களின் பயன்பாடு 2000 ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை முறையே 33.1%, 18.4% மற்றும் 97.9% என்றவாறு அதிகரித்துள்ளது. எனவே, விசிறப்பட்ட உரத்தில் பயிர்கள் பாவித்தது போக, எஞ்சிய இரசாயனங்கள் மண்ணில் செறிந்து, மண்நீரில் கரைந்து வெள்ளத்துடன் ஆறுகள் மற்றும் குளங்களை அடைந்தன. பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற விவசாய இரசாயனங்களின் பரவலான பயன்பாடு, கடுமையான மண் மற்றும் நீர் வளங்களின் சீரழிவுக்கு வழிவகுத்தது மட்டுமன்றி பொதுச்சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியது.

a) மண்ணில் ஏற்பட்ட தாக்கம் (Impact on Soil) :

சிபார்சு செய்யப்பட்ட அளவிலும் மற்றும் செறிவிலும் பார்க்க கூடிய அளவில் விசிறப்பட்ட பீடை நாசினிகள் மற்றும் இரசாயன உரங்கள் மண்ணை அடையும் போது மண்ணினால் அகத்துறிஞ்சப்படும். பீடை நாசினிகள் மற்றும் இரசாயன உரங்கள் அதிகளவான நச்சுப் பார உலோகங்களை (eg: ஆர்சனிக், தாமிரம்/செப்பு, ஈயம் மற்றும் பாதரசம்) மாசுக்களாகக் கொண்டவை. இதன் விளைவாக மண்ணின் அமில -காரத் தன்மை,  மண்ணின் கற்றயன் பரிமாற்ற அளவு, மண்ணின் கட்டமைப்பு மற்றும் இழை அமைப்பு, மண்ணில் காணப்படும் நன்மை தரும் நுண்ணங்கிகளின் அளவு மற்றும் பல்வகைமை என்பன மாற்றம் அடைவதினால் விவசாய மண் விரிசல் அடைந்து மணலாக மாறுகிறது மற்றும் நீரைத் தக்கவைக்கும் திறன் குறைகிறது. இதன் காரணமாக பல விவசாய நிலங்கள் வளம் அற்றவையாகவோ அல்லது மலடாகவோ மாறிவிட்டன, (Land Degradation and Soil  Fertility Depletion). The Global Land Assessment of Degradation (GLASOD) (சீரழிவின் உலகளாவிய நில மதிப்பீடு) இன் கருத்துப்படி தென் ஆசியாவில் மாத்திரம் 43% மான பயிர் நிலம் பசுமைப் புரட்சியின் நுட்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

b) நீரில் வளத்தில் ஏற்பட்ட தாக்கம் (Imapct on Water Resources):

பசுமைப்புரட்சி தந்த உயர் வர்க்க நெல் இனங்கள் குறுகிய காலத்தில் அதிக நீரை உறிஞ்சும் ஆற்றல் மிக்கவை. பாசனம் செய்யப்பட்ட தாழ்நில உற்பத்தி முறையில் 1 கிலோ அரிசியை உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 1,432 லீட்டர் தண்ணீர் தேவை என்ற ரீதியில் நிலத்தடி நீரை இறைத்து பல இடங்களில் வறட்சியை ஏற்படுத்தி உள்ளோம். உலகளவில் நன்னீர் பயன்பாட்டிற்கு இந்தியாவில் அதிக தேவை உள்ளது. 91% நீர் இப்போது விவசாயத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் பம்பிகளால் உறிஞ்சி ,நீர் மட்டம் 200 அடிக்கு கீழ் சென்றுள்ளதோடு மட்டுமல்லாமல் கடல் நீரும் உட்புகுந்து இருந்த நீரும் சவராக மாறி உள்ளது.

மழை நீர் மண்ணின் ஊடே செல்லும்போது நீரில் கரைந்த மேலதிக உரம் மற்றும் நச்சுத் தன்மையான  பார உலோகங்கள் நிலத்தடி நீரை அடைந்தது. இதனால் குடிநீர் மாசடைந்தது. மலைப் பிரதேசங்களில் இருந்து மழை நீரில் கரைந்து வெள்ளத்தினூடு ஆற்று நீரையும், ஆறுகள் பாய்ந்தது குளத்தை அடையும் போது குளங்களையும் மேலதிக குளத்து நீர் கால்வைகளினூடு பாய்ந்து கடலை அடையும்போது கடலையும் என அனைத்து நீர் முதல்களையும் இந்த நச்சுப் பொருட்கள் அசுத்தப்படுத்தி இருக்கின்றன.

இந்தப் போசணை நிறைந்த நச்சு நீரைப் பயன்படுத்தி நீர் நிலைகளில் காணப்படும் தாவரங்கள் அபரிமிதமாகப் பெருகி நீரின் பௌதீக மற்றும் இரசாயன இயல்புகளை மாற்றுவதால் நீர் வாழ் அங்கிகள் வாழமுடியாத சூழல் ஏற்படுகிறது. நச்சுப் பதார்த்தங்கள் அதிகளவில் நீரில் கலப்பதால் நீர் வாழ் உயிரினங்கள் அதிகளவில் இறக்கின்றன, நீர் வாழ் உயிரினங்களின் கொழுப்பில் கரைந்து பார உலோகங்கள் போசணை மட்டத்தினூடு மனிதனை அடைவதால்  புற்றுநோய் (அதிகமாக குருதி, நுரையீரல், தோல், குடல், மார்பகப் புற்றுநோய்), நீலக் குழந்தைகள் பிறப்பு, சிறுநீரகக் கோளாறு போன்ற பலவிதமான நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன. இப்போதைய ஆராய்ச்சி முடிவுகளின் படி   பூச்சிக்கொல்லி எச்சங்கள் கிட்டத்தட்ட வாழ்விடங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன, கடல் மற்றும் நில விலங்குகள் இரண்டிலும் கண்டறியப்படுகின்றன.

இலங்கையில் மகாவலி ஆற்றில் குறிப்பாக சிறுநீரகக் கோளாறு (CKDu) தோன்றுவதற்கான காரணிகளில் ஒன்றான கட்மியத்தின் அளவு >5 mg/L க்கு அதிகமே காரணம் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி தெதுறு ஓயாவின் நீரில் பத்து வகையான (pretilachlor, oxyfluorfen, thiamethoxam, chlorantraniliprole, fenobucarb, fipronil, diazinon, etofenprox, tebuconazole, and captan) பீடை  நாசினிகளின் நஞ்சு மனிதப் பாவனைக்கு சிபார்சு செய்யப்பட்ட அளவிலும் பார்க்க அதிகம் இருப்பதாக இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது, மிக மன வேதனையைத் தருகிறது.  

  • சமனில்லாத உயிர்ப்பல்வகைமையும் உயிர்ப்பல்வகைமை அழிவும் (Disturbed Biodiversity and Biodiversity Loss)

பசுமைப் புரட்சி ஒற்றைப்பயிர் (Monocropping) விவசாயத்தை பரந்த பரப்பளவில் ஊக்குவித்தது. ஒற்றைப் பயிர்ச்செய்கையானது பரவலான நோய் மற்றும் பீடைத் தாக்கத்திற்கு வழி வகுத்தது. அதுமட்டுமன்றி, மண்ணிலிருந்து  சில குறிப்பிட்ட சத்துக்கள்   தொடர்ந்து குறைவதால் அது மண் வளத்தைப் பாதித்தது. ஒற்றைப்பயிர்ச் சுழற்சியில் ஊட்டச்சத்துக்கள், நீர், ஆற்றல் மற்றும் கழிவுகள் ஆகியவை இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பில் இருப்பதைப் போல கிடைப்பதில்லை. இதன் காரணமாக, அதிகளவான இரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.

பெரிய அளவிலான ஒற்றைப் பயிர்ச்செய்கை மற்றத் தாவர இனங்களுடனான போட்டியின்மையால் விளைச்சலை அதிகரிக்க வழிவகுத்தது, ஆனால் காலப்போக்கில் நிலம்/மண்ணின் வளம் குறைகிறது. தொடர்ச்சியான பெரிய அளவிலான ஒற்றைப் பயிர்ச்செய்கை காரணமாக இயற்கைச் சூழல் அழிக்கப்பட்டு  விவசாயச் சூழல் தொகுதி அமைய வழிவகுத்தது. இதன் காரணமாக இதர அங்கிகள் அப்பிரதேசத்தில் வாழமுடியாமல் உயிர்ப்பல்வகைமை குழம்பியுள்ளது. இதற்கு மேலதிகமாக மண்ணின் வளம் குறைவதாலும் மக்கள் தொகை அதிகரிப்பதாலும் பரந்த அளவில் காடுகளை அழித்து விவசாயம் செய்ய ஆரம்பித்திருப்பதாலும், பல ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, வாழிடம் இழந்து வன விலங்குகள் நகரங்களுக்கு உள்ளே வர ஆரம்பித்திருக்கின்றன,  விவசாய நிலங்களையும் அழித்து மனிதனுடன் மோதத் தொடங்கியிருக்கின்றன.

  • காலநிலை மாற்றம் (Climate Change)

பசுமைப் புரட்சி நுட்பங்களினால் விவசாய மற்றும் மற்றைய நிலப் பயன்பாடு, காடழிப்பு, நீரைச் சேமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய கட்டுமானங்கள், விவசாயத் தேவைகளுக்காக பாரிய இயந்திரங்கள், கனரக வாகனங்கள்  மற்றும் நிலப்பண்படுத்தல், அறுவடை இயந்திரங்கள், பொறிகளின்  அதிகரித்த பாவனையால் பச்சை இல்ல வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு என்பன பாரிய காலநிலை சீர்கேட்டுக்கு வழி வகுத்துள்ளது. இக்காலநிலை மாற்றம் உணவு உற்பத்திக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. உணவு மற்றும் விவசாயத்துக்கான அமைப்பின் கருத்துப் படி விவசாயம், வனவியல், பிற நில பயன்பாட்டு நடைமுறைகள்  என்பன ஆண்டு தோறும் 24%-35% மான  உலகளாவிய பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்திற்கு பங்களிக்கின்றன. குறிப்பாக வறட்சி, பெரு வெள்ளம், கடும் குளிர், புயல் என்பனவற்றின் தாக்கம், பல்வேறு நாடுகளில் உணவுப் பஞ்சம் மற்றும் பட்டினி தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மாத்திரம் 1990-2018 காலகட்டத்தில் (UNDRR, 2019) மொத்தப் பேரழிவு நிகழ்வுகளில் வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி மற்றும் புயல்கள் 74% ஆகும்.  இலங்கையில் காலநிலை மாற்றத் தாக்கங்களால் அதிக ஆபத்தில் உள்ள பிரதேசங்கள் பெரும்பாலும்  விவசாயப் பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள வடக்கு, கிழக்கு வடமத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் என உலக வங்கியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Green-Revolution-and-its-Impact

தொடர் காலநிலை மாற்றம், இலங்கையில் உணவு உற்பத்தி முறைகள் மற்றும் கோலங்கள், நிலவும் வறுமை, பசி, உணவுப் பாதுகாப்பின்மை, உணவு உரிமைகள், நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி எனப் பல்வேறு கோணங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

பசுமைப் பரிணாமம், பெரிய அளவிலான ஒற்றைப் பயிர்ச்செய்கையைத் தவிர, உலகின் வளர்ந்து வரும் மக்கள் தொகையை வினைத்திறனாக கட்டுப்படுத்தி பிற இயற்கை நேய வழிகளைக் கண்டறிந்தால் மட்டுமே  நிலையான விவசாயத்தின் மூன்று பக்கங்களாக உள்ள சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூகப் பரிமாணங்களை மாற்றி அமைத்து எதிர்கால சந்ததியைக் காப்பாற்றலாம்.

உசாத்துணை

  1. https://www.asiaorganic.org/en/news/agricultural-news/38-effects-of-green-revolution-on-environment
  2. https://prepp.in/news/e-492-impact-of-green-revolution-agriculture-notes
  3. Jayasiri, M. M. J. G. C. N., Yadav, S., Dayawansa, N. D. K., Propper, C. R., Kumar, V., & Singleton, G. R. (2022). Spatio-temporal analysis of water quality for pesticides and other agricultural pollutants in Deduru Oya river basin of Sri Lanka. Journal of Cleaner Production330, 129897.
  4. Shipley, E. R., Vlahos, P., Chandrajith, R., & Wijerathna, P. (2022). Agrochemical exposure in Sri Lankan inland water systems. Environmental Advances7, 100150.
  5. John, D. A., & Babu, G. R. (2021). Lessons from the aftermaths of green revolution on food system and health. Frontiers in sustainable food systems5, 644559.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

28197 பார்வைகள்

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)