அறிமுகம்
இந்த உலகில் வாழ்கின்ற மனித இனம் தனக்கென்று ஒரு தனித்துவமான நாகரீகத்தையும், சமூக அடையாளங்களையும் மற்றும் நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது. இதில் மூத்த இனமாக தமிழினம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இதனால்தான் நாமக்கல் கவிஞர், தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு’ என்று தமிழரை அடையாளப்படுத்தினார். மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்ற வாழ்வியலையும் மற்றும் அனுபவ அறிவியலையும் கற்றுக் கொடுத்த தமிழரின் சிந்தனைகளையும் உயர்வான எண்ணங்களையும் பல்வேறு சமூகங்கள் அடியொற்றி வருகின்றன. பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல வாழ்வியலும் பண்பாடும் இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்திருக்கிறது. வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் மகத்துவத்தையும் தமிழர்கள் எவ்வாறு கருதினர் என்பதை திருக்குறளில் வள்ளுவர் அழகாக “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக கருதப்படுகிறது. இதுவரைக்கும் விளம்பரம் செய்யப்படாத ஒரே தொழில் விவசாயம் தான். ஏனென்றால் விவசாயம் தொழில் அல்ல எமது உயிர்நாடி. உலகத்தின் ஒவ்வொரு உயிருக்கும் பசி என்ற உணர்வு இருக்கும் வரை விவசாயம் அழியாது.
இப்படிப்பட்ட தமிழர்களின் வாழ்வியலில் இயற்கையும் விவசாயமும் இரண்டறப் பின்னிப் பிணைந்திருந்தன. குறிப்பாக ‘தமிழரின் திணையியல் கோட்பாடும், வேளாண் மரபுகளும்’ தனிச்சிறப்பு வாய்ந்தவை. அறிவியல் அறிஞர்கள் வகுத்த சுற்றுச்சூழலியல் மண்டலங்கள் என்ற கோட்பாடுக்கு அது இணையானது. இது உயிரியல் பன்மயம், உயிர்ம நேயம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. பண்டைய தமிழர்கள், மலை சார்ந்த இடங்களில் உழாமலே விவசாயம் செய்துள்ளனர். காடுகளில் ஓரளவு, நிலத்தைச் செப்பனிட்டு விவசாயத்துக்கேற்ப அவற்றை மாற்றினர். நதிகளைச் சார்ந்த இடங்களில், பெருகி வரும் வெள்ளத்தை கட்டுப்படுத்தி, அணைகளைக்கட்டி, விவசாயத்துக்குப் பயன்படுத்தினர். தமிழரின் நீர்ப்பாசனக் கட்டுமானத்துக்கு எடுத்துக்காட்டாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை இன்றுவரை எந்தவித சேதமும் இன்றி பயன்பாட்டில் உள்ளது ஆனால் இதே காலத்தில் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் சங்கிலித் தொடர் கல்லணை முழுவதும் அழிவடைந்து விட்டது.
தமிழர்களின் உணவுமுறையும் விவசாயமும்
தமிழர்களின் பூர்வீக வாழிடங்கள் பெரும்பாலும் வெப்பநிலை சற்று கூடிய உலர்வலயப் பிரதேசங்களாகவே இருந்தன. குறிப்பாக தென்னிந்தியாவும் வடகிழக்கு இலங்கையும் இதில் உள்ளடங்கும். தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கும் அவர்கள் விவசாயம் செய்த பயிர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருந்தது.
சிவப்பு நெல்லரிசிச் சோறும் உடல் உஷ்ணமும்
தமிழர் வாழும் பகுதிகளின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப அதிகம் சாப்பிடும் உணவுத் தானியமாக சிவப்பு அரிசி இருந்தது. சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக சிவப்பு அரிசி இருக்கிறது. மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது. இந்த சமயங்களில் சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதைத் தடுத்து உடலை குளிரச்செய்யும். நோய்க் கிருமிகளின் தாக்கத்தால் காய்ச்சல் ஏற்படும் போது விட்டமின் B நிறைந்த கஞ்சி உஷ்ணத்தைப் போக்கும் மிகச் சிறந்த ஆகாரமாகப் பார்க்கப்பட்டது. மற்றும் இதில் மூலிகைகள் கலந்து இலைக் கஞ்சியாகக் கொடுக்கப்பட்டது. இவற்றை அனுபவ ரீதியாக அறிந்து கொண்டே இன்றும் பல இயற்கை விவசாயிகள் மருத்துவக் குணம் நிறைந்த நாட்டு நெல் இனங்களைப் பயிரிடுகின்றனர்.
சிறுதானியங்களும் நீர்ச் சேமிப்பும்
நெல் அறுவடை முடிந்த பின்னர் மண்ணில் காணப்படும் எஞ்சிய ஈரப்பதனை வினைத்திறனாக பயன்படுத்துவதற்காக குறைந்த காலத்தில் உற்பத்தி செய்யக் கூடிய சிறுதானியங்களைத் தமிழர்கள் பயிரிட்டனர். வலுத்தவனுக்கு வாழை, இளைச்சவனுக்கு எள்ளு என்ற பழமொழிக்கு அமைவாக நீர் மிகக் குறைந்த தேவையுடைய இடங்களில் எள்ளு, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் இறுங்கு பயிரிட்டனர். உண்மையில் இவை சிறுதானியங்களன்று, பெருமைக்குரிய தானியங்கள். ஏனெனில் இவற்றில் இருக்கும் ஊட்டங்கள் மிகச் சிறப்பானவை. மிகக் குறைந்த நீர், மிக எளிய தொழில்நுட்பம், மிகக் குறைந்த இடுபொருள் செலவு, மிக அதிக ஊட்டம் என்று எல்லா வகையான சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும் இந்தத் தானியங்கள் நமது விவசாயத் துறைசார் அறிவியலாளர்களாலும், அரசுத் துறைகளாலும் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒரு கிலோ நெல் விளைவிக்கத் தேவைப்படும் நீர் 1,550 லீட்டர், அதேபோல ஒரு கிலோ கோதுமை விளைவிக்க தேவைப்படும் நீர் 750 லீட்டர். ஆனால், புஞ்சைத் தானியங்களுக்கு இதில் 10இல் ஒரு பங்கு நீர்கூடத் தேவையில்லை. பெரிய அணைகள் தேவையில்லை. காடுகளும் பழங்குடிகளும் அழிய வேண்டியதில்லை. ஆழ்துளைக் கிணறு மட்டுமல்ல திறந்த கிணறும் கூடத் தேவையில்லை. ஒரு கிலோ தினை சாகுபடி செய்ய, எவ்வளவு நீர் தேவைப்படும் என்ற ஆய்வுகூட நடத்தப்படவில்லை என்பதுதான் வேடிக்கை. இந்தத் தானியங்கள் மழை நீரை நம்பியே விளைகின்றன. இவற்றையே தமிழர்கள் ஆதியிலிருந்து காலை மற்றும் மாலை தனது அன்றாட ஆகாரமாக உட்கொண்டனர். அதனாலேயே அவர்களது பரம்பரை நூறு வயது கடந்தும் மூப்படையாமல் தமது அன்றாட செயல்களை தாமே செய்து வலுவாக வாழ்ந்தது.
அருந்தானியங்களும் (millets) உடல் ஆரோக்கியமும்
குறிப்பாக எமது முன்னோரின் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் அருமருந்தான குரக்கன், திணை, சாமை, கம்பு, எள்ளு, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற 12 வகையான அருந்தானியங்கள் உணவுப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் (1960 இற்கு முன்னர்) பிரதான காலை மற்றும் இரவு உணவாக இருந்தன. காரணம், அவை அரியவையாகவும், அருமையானவையாகவும் இருப்பதுதான். இதை அறிந்த எமது தமிழர்கள் ‘கருங்கால் வரகே இருங்கதிர்த்தினையே சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணவும் இல்லை’– என்று புறநானூற்றிலேயே எழுதிவைத்தனர். உயர்த்திக் கூறப்படும் வரகு, தினை போன்ற தவசங்கள் (தானியங்கள்), தமிழகத்தின் வானவாரி (மானம்பாரி) நிலத்தில் விளைந்து மிகுந்த பயனைத் தந்தவை.
இன்றைய காலகட்டத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ள இவை, பல பன்னாட்டு நிறுவனங்களால் ஊட்ட மாவுக்காகவும், ஊட்டக் குடிநீராகவும் (Health Drinks) விரும்பி வாங்கப்படுகின்றன. கடவுள் தானியங்கள் என்று வணங்கப்படுகிற புஞ்சைத்தவசங்கள் என்று அழைக்கப்படும் சிறுதானியங்கள் என்று போற்றப்படும் இந்த அருந்தானிய உணவுகளைச் சாப்பிட்டதால் முன்னைய காலத்து மக்கள் நீரிழிவு, உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டார்கள். அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தவையாகவும், அதிகளவான இரும்பு, கல்சியம் மற்றும் விட்டமின்களை கொண்டவையாகவும் உள்ளன.
வயலில் வேலை செய்யும் அனைத்துத் தரப்பினருக்கும் நீண்ட நேரத்திற்கு சக்தியை வழங்குகின்ற சத்தான ஆகாரமாக கேப்பாங் கஞ்சி, குரக்கன் கலப்பை (ரொட்டி), கம்மங் கழி போன்றன காணப்பட்டன. தினையில் கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. தினைமாவுடன் தேனைக் கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும், விரைவில் செரிமானமாகும். குருதிச்சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது. இதில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது. குதிரைவாலி சுவைமிகுந்தது. காய்ச்சல் நேரத்தில் கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும். மேலும் வாய்வுப் பிரச்சினைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்புப் பிரச்சனை சரியாகும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. காய்ச்சல் நேரத்தில் வரகுக் கஞ்சி உகந்த பானமாகக் கொடுக்கப்படுகிறது.
தமிழர்களின் வாழ்வியலை சற்றும் மதிக்காது உணவுப் புரட்சியின் பின்னர் திணிக்கப்பட்ட மேற்கத்தேய உணவுகளான கோதுமை, ஓட்ஸ், பார்லி போன்ற உணவுகளுக்கு அடிமையான எமது இன்றைய சமுதாயத்தினர் “கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வத்தைப் போல்” நோய் நாடிய பின்னர் இவ் அருந்தானிய உணவுகளைத் தேடி அலைகின்றனர்.
சமயச் சடங்குகளும் பழமரங்களும்
தமிழருடைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஒவ்வொரு தாவரத்தினுடைய பயன்களையும் ஒவ்வொரு காலத்தின் தேவைக்குத் தகுந்தாற் போல் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்பதால் அந்தந்த சமயச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தி அவர்கள் தமது வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அல்லது தமது சந்ததிக்குச் சொல்லிக் கொடுத்தனர் என்றே கூறலாம். குறிப்பாக வாழைப் பழத்தின் அரும் பலன்களை அறிந்தவர்கள் அனைத்துச் சடங்குகளிலும் வாழைப் பழத்தைச் சேர்த்தான். அது வரவேற்கும் நிறைகுடமாக இருக்கட்டும் அல்லது சாப்பிட்ட பின்னர் பந்தியில் வழங்கப்படும் பழமாக இருக்கட்டும், கோயில்களில் வழங்கப்படும் பஞ்சாமிர்தமாக இருக்கட்டும் அனைத்திலும் வாழைப் பழம் இருக்கும். இதற்கு பிரதான காரணம் நாம் வாழும் பிரதேசம் உஷ்ணம் நிறைந்தது, வாழைப் பழம் உஷ்ணத்தை நீக்கி உடலை குளிர்மைப்படுத்தி ஜீரண மண்டலத்தின் செயற்பாட்டைத் தூண்டி மலச்சிக்கல், இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
பஞ்சாமிர்தத்தில் முக்கனிகளான மா, பலா மற்றும் வாழை போன்றவற்றுடன் தேன், நெய், மற்றும் கற்கண்டு என்பன கலக்கப்படுகின்றது. உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவாக பஞ்சாமிர்தம் இருக்கிறது. இவற்றிற்கு மேலும் ஊட்டம் அதிகரிக்க விளாம்பழம், மற்றும் மாதுளம் பழம் என்பனவும் கலக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, திருமணமான தம்பதிகளை முதலிரவுக்கு அனுப்பும் சடங்கிலும் அவர்களுக்கான உணவாக பாலும் பழங்களுமே கொடுக்கப்படுகின்றன. இவை அவர்களிடத்தில் புத்துணர்ச்சியை அதிகரிக்கின்றன. இவ்வாறான சடங்குகளும் சம்பிரதாயங்களும் வருடம் முழுவதும் நடைபெற்றதால், பழங்களுக்கு அதிக கிராக்கி நிலவியது. இதனால் இப்பயிர்களை எமது மக்கள் தொடர்ச்சியாக பயிரிட்டனர். இவ்வாறாக தமிழர்களின் வாழ்வியலில் விவசாயம் பின்னிப் பிணைக்கப்பட்டிருந்தது.
விரதங்களும் உணவுச் சேமிப்பும்
தமிழர்களின் பூர்வீக மதமான இந்துமதத்தில், பல்வேறு வகையான விரதங்கள் வருடத்தின் பல்வேறு காலங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றன. இவ்விரதங்களில் பெரும்பாலானவை, புரட்டாதி மாதத்தில் இருந்தே ஆரம்பிக்கும் குறிப்பாக நவராத்திரிவிரதம்: புரட்டாதி மாதத்தின் வளர்ப்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும்; கேதார கௌரி விரதம்: புரட்டாதி மாதம் சுக்லபக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்களும்; கந்த சஷ்டி விரதம்: ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும்; விநாயகர் சஷ்டி விரதம்: கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்களும், திருவெம்பாவை விரதம்: மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி அனுட்டிக்கப்படும். இவ்விரதங்கள் அனைத்துமே ஏன் வருடத்தின் இறுதி நான்கு மாதங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன என அறிவியல் ரீதியில் நோக்கினால் எம் பண்டைத் தமிழர்களின் வேளாண் அறிவியல் வாழ்வியலில் எப்படிப் புகுத்தப்பட்டுள்ளது என்பது புலப்படும்.
பண்டைய காலத்தில் உணவு உற்பத்தி அபரிமிதமாக இருந்ததில்லை என்பதோடு, நீண்டகாலத்திற்கு பெருமளவு நெல்லைச் சேமித்து வைக்கின்ற கட்டமைப்பும் இருக்கவில்லை. எனவே ஒரு வருடத்தின் நெல் அறுவடையின் சேமிப்பின் பெரும்பகுதி அடுத்த வருட நெல் விதைப்பு மாதமான ஆவணி மாதத்தின் நடுப்பகுதியுடன் பெருமளவு முடிவடைந்துவிடும். இதனால் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவ ஆரம்பிக்கும். இந்த உணவுத் தட்டுப்பாட்டை நீக்க மிகவும் உயர்ந்த உத்தியாக உணவுத் தவிர்ப்பு இருக்கும் என்பதை நன்கறிந்த தமிழர்கள், மக்களுக்கு எவ்வாறு சுலபமான விழிப்புணர்வை ஏற்படுத்தி பிணக்குகள் ஏற்படாமல் பசியைத் தீர்க்கலாம் என்பதை சிந்தித்து பசித்திரு, விழித்திரு, பக்தியுடன் இரு என்ற கோட்பாட்டுடன் ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு மாதத்தில் விரதத்தைத் தொடங்கினர்.
ஒவ்வொரு விரத காலத்திலும் மக்களை ஆன்மீக நீரோட்டத்தில் கலக்கச் செய்ய ஒவ்வொரு விரத்தத்தின் மகிமையையும் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தனர். விரத காலத்தில் இரவுச் சாப்பாட்டிற்காக இறைவனுக்கு பூசித்த சிறுதானியங்களான பயறு, கடலை, கௌபி, மற்றும் அவல் போன்றன வழங்கப்பட்டன. இவ்வுத்தியின் மூலம் உணவுத் தேவை பெருமளவு குறைக்கப்பட்டதுடன் ஆன்மீகமும் வளர்க்கப்பட்டது.
பனைமரம் தமிழர்களின் விவசாயத்தினதும் வாழ்வியலினதும் அடையாளம்
இயற்கையை நேசித்தவர்கள் தமிழர்கள் மற்றும் உழவினை மிகச் சிறந்த தொழிலாகக் கருதி வாழ்வியல் ஆக்கியவர்கள் தமிழர்கள். மரங்களையும் அவற்றின் பலன்களையும் நன்கறிந்து அவற்றை ஒவ்வொரு மனிதனுடைய பண்புகளுடன் இணைத்தவர்கள் அவர்கள். உதாரணமாக நண்பர்களை மற்றும் நமக்கு உதவுபவர்களை பனை, தென்னை மற்றும் வாழையாக குறிகாட்டினார்கள். எந்த உதவியும் செய்யாமல் எமக்கு எப்போது பேருதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நண்பர்களை பனை என வருணித்தார்கள் ஏனெனில் எதுவும் செய்யாமல் நமக்கு அனைத்தையும் தருவது கற்பகதரு பனை. தென்னை மரத்திற்கு எவ்வளவு நீரைக் கொடுக்கிறோமோ அவ்வளவு நீரையும் பிரதிஉபகாரமாக மீளவும் இளநீராகத் தரும், இது இரண்டாவது வகை நட்பு. மூன்றாவது வகை நட்பு வாழையைப் போன்றது, அதாவது எவ்வளவு பசளை இட்டு நீர் ஊற்றினாலும் ஒரு குலையை மாத்திரமே வாழை விளைவாகத் தரும்.
இதனாலேயே திருவள்ளுவர் தினைத்துணை நன்றி செய்தாலும் அதனைப் பனைத்துனையாகக் கொள்வர் பலன் தெரிவார் என்று பனையைத் தமிழின அடையாளமாகவும், தமிழர்கள் வாழும் இடமெங்கும் பனை இருக்கும் என்ற தமிழின வாழ்வியல் அடையாளமாகவும் குறிப்பிட்டார். உலகெங்கும் இருக்கும் பனை மரங்களின் 75% இற்கு மேற்பட்ட பணிகள் தமிழர்களின் பூர்வீக இடங்களிலேயே இருக்கின்றது. இப்பனைமரங்கள் விவசாயத்திற்கும் வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையுமே தருகின்றன. குறிப்பாக மண்ணரிப்பைத் தடுத்தல், நிலத்தடி நீரைப் பாதுகாத்தல், கால்நடைகளுக்குத் தேவையான புரதம் நிறைந்த உணவாக பனை ஓலை என பல வழிகளில் விவசாயத் தேவைகளைப் பனை பூர்த்தி செய்கிறது. அதுமட்டுமன்றி, பனை ஓலையில் இருந்து பின்னப்படும் விதைப் பெட்டி, கடகம்; பனை ஈர்க்கில் இருந்து செய்யப்படும் சுளகு (முறம்), களப்பாய்; பனை மரத்தின் தண்டில் இருந்து செய்யப்படும் பட்டை, துலா, கோர்க்காலி, பனம்தீராந்தி, பனம் சலாகை மற்றும் கலப்பை நுகம் போன்றன தமிழர்களின் பண்டைய விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட பெறுமதி மிக்க பொருட்கள். இதை அறிந்தே தமிழர்கள் பனையைப் போற்றிப் பாதுகாத்துவந்தனர்.
இதனை விட பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகத்தருவுக்கு ஒப்பிடுவர். காரணம் இதன் தலையில் இருந்து கிடைக்கும் நுங்கு: நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும். பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன்படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம், தாகம் போன்றவை நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்தக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும். பதநீர் புளிக்காத வரை மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த பானம்; பனம் பழத்தில் செய்யப்படும் பனங்காய்ப் பணியாரம் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உணவாகவுள்ளது. இது மலச்சிக்கலைப் போக்கும். பனாட்டு வெயில் காலங்களில் உடல்சூட்டைத் தணிக்கும் உணவாகவும் குடற்புண்ணை ஆற்றும் மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்தாகவும் உள்ளது.
தொடரும்.