வடக்கு - கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புக்களும்
Arts
6 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்

November 2, 2022 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

நெல் உற்பத்தியும் முதன்மைத்தன்மையும்

வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக  விவசாயத்துறை விளங்குகின்றது.  இவ்விரு மாகாணங்களினதும் பொருளாதாரத்தில் 15 சதவீதமான பங்களிப்பை விவசாயத்துறை வழங்கிவருவதுடன் 65 சதவீதமானோர் வாழ்வாதாரத்திற்கு தங்கியிருக்கும் துறையாகவும் இது செயற்பட்டு வருகின்றது. நிலப்பாவனை என்ற வகையில்  விவசாயச் செய்கைக்காக கிழக்கு மாகாணத்தின் 42 சதவீதமான நிலப்பரப்பும், வடமாகாணத்தின் 33 சதவீதமான நிலப்பரப்பும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு மாகாணங்களின் பிரதான விவசாயப் பயிராக நெல்லே காணப்படுகின்றது. வடமாகாணத்தில் 115,049 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், கிழக்கு மாகாணத்தில் 324,455 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும் மொத்தமாக காலபோகம், சிறுபோகம் ஆகிய இரு போகங்களிலும் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது.

 கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை

2019 / 2020 காலபோகத்தில் கிழக்கு மாகாணத்தில் 1,045,159.5 மெற்றிக்தொன் நெல்லும் வடமாகாணத்தில் 271,722 மெற்றிக்தொன் நெல்லுமாக 1,316,931 மெற்றிக்தொன் விளைச்சல் பெறப்பட்டதுடன் 2020 சிறுபோகத்தில் கிழக்கு மாகாணத்தில் 578,500.6 மெற்றிக்தொன் நெல்லும், வடமாகாணத்தில் 66,067 மெற்றிக்தொன் நெல்லும் விளைச்சலாக பெறப்பட்டன. இவ்வகையில் நெல் உற்பத்தியின் முதன்மை மாகாணமாக கிழக்கு மாகாணம் இருந்து வருவதுடன் இரு பருவங்களிலும் செய்கை பண்ணக்கூடிய நிலம், நீர் மற்றும் காலநிலை சூழல் காணப்படும் பிரதேசமாகவே இவ்விரு மாகாணங்களும் காணப்படுகின்றன.

நெல் விவசாயத்தின் முதன்மைத் தன்மை காரணமாக இவ்விரு மாகாணங்களின் பிரதான செயற்பாட்டு வளங்களான நன்கு பயன் தரும் நிலங்களும் இருபோக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மனிதவளம், நீர் என்பனவும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஏனைய துறை வளங்களான இயந்திரங்கள், நிதி ஆகிய வாழ்வாதார வளங்களும் பயன்படுத்தக் கூடியனவாக அமைகின்றன.  இந்த நிலையில் இருபோக பருவத்திலும் இயற்கையாக மழை மூலம் கிடைக்கும் நீர் மற்றும் குளங்களில் சேகரிக்கப்பட்ட நீர் வாய்ப்பான உற்பத்தி துறை மீது பயன்படுத்தப்படுகிறதா என்ற வினாவை எழுப்ப முடியும். மாறாக இந்த வரண்ட வலயத்தில் சேகரிக்கப்படும் நீரினை மாற்றுப் பயிர்ச்செய்கையான மேட்டு நிலப் பயிர்களிலோ, அவரையினப் பயிர்களிலோ முதலிட்டால் அதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகமானதே என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை.

நெற்செய்கை என்பது இவ்விரு மாகாணங்களிலும் விவசாயிகளினால் விருப்பத்துடன் பயிரிடப்பட்டாலும் அது ஒரு சோம்பேறித்தன்மையான தொழிலாகவே இருந்து வருகின்றது. அதனை விட ஓரினப்பயிர்செய்கை (Mono Culture) என்பதில் அதிக நிலமும் நீரும் பயன்படுத்தப்பட்டாலும் பெரிய பரப்பான நிலத்திலும் சேர்க்கப்படும் நீரினதும் பயன்பாடு திருப்தியாக இல்லை எனக் குறிப்பிடலாம். உதாரணமாக ஏக்கர் ஒன்றுக்கான சராசரி விளைச்சல் 90 புசல்களாக காணப்படுமாயின் இவ்விரு மாகாணத்திலும் மொத்தமாக செய்கை பண்ணப்படும் 439,504 ஹெக்டெயர்களிலிருந்தும் 2,673,942 நிலப்பரப்பான மெற்றிக்தொன் நெல் விளைச்சலாக ஒரு போகத்தில் பெறப்பட வேண்டும். ஆனால் 2019 அம் ஆண்டின் உண்மைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பெறப்பட்ட நெல் விளைச்சலானது 13,169,931 மெற்றிக்தொன்னாக காணப்படுகின்றது. இவ்வகையில் 50 சதவீதமான விளைச்சலே நெற்செய்கைக்காக பயன்படுத்தப்படும் நிலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இவ்வகையில் இதே நீரையும் நிலத்தையும் குறிப்பிட்ட வீதத்தில் மாற்றுப் பயிர் மீது பயன்படுத்துவதனால் இவ்வினைத்திறனை அதிகரிப்பதுடன் நெல் மீதான உற்பத்தியாளரும் மேலும் நன்மை பெற முடியும். 

பயிர் பல்லினப்படுத்தல் (Crops Diversity) என்பது நவீன தொழில்நுட்பமுறையாகவும் காலநிலைக்கு சீரமைவான (Climate Change) பொறிமுறையாகவும் பிரேரிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை விவசாயிகள் மத்தியில்  கொண்டு செல்வது என்பது பாரிய சவாலாகவே இருந்து வருகின்றது. சமகாலச் சூழலில் பல்வேறு காலநிலை சவால்கள் தோன்றி சமனிலை சீரற்ற நிலையில் பன்மை வாழ்வாதாரப் பொறிமுறை (Multi Livelihood Strategy) பற்றி பொருளியியலாளர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். சீரற்ற இயற்கை சவால்களை வெற்றிக்கொள்வதற்கு ஒருவர் தனியே ஒரு துறையில் மட்டும் தன் மூலதனத்தை இடுவதோ அதனை நம்பி தன் வருமானத்துக்கு காத்திருப்பதோ அவரை பலவீனப்படுத்திவிடும் என்பதால் அவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபட்ட துறைகளில் தன் முதலீடு வேண்டும் என்பதே பன்மைவாழ் கோட்பாடாகும். இதனைக் கடைப்பிடிப்பதனால் மட்டுமே காலநிலைக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ளவும் முடியும் என்பதனால் ஓரினப்பயிர்ச்செய்கை மீது இவ்விரு மாகாணங்களும் கொண்டுள்ள அதீத ஈடுபாட்டை விடுத்து நடைமுறைக்குச் சாத்தியமான சில வளமாற்றல்களை செய்தே ஆக வேண்டியுள்ளது.

முல்லைத்தீவில் பெரும்போக நெல் அறுவடை

 வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பருவகாலத்தில் பெற்றுக்கொள்ளப்படும் நீரை நம்பியே விவசாயச் செய்கை இடம்பெறுகிறது. இவ்வகையில் பாரிய, நடுத்தர, சிறிய குளங்களினை அபிவிருத்தி செய்து பருவகாலத்தில் பெறப்படும் நீரை பத்திரப்படுத்தி அதனை அடிப்படையாகக் கொண்டே சிறுபோக பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது. இது ஏலவே ஒழுங்கமைக்கப்பட்ட நீர்க்கட்டுமானங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. குளங்களில் நீர் சேகரிக்கப்பட்டவுடனேயே அது அதன் விளைச்சல் பரப்பிலுள்ள விவசாயிகளினது உரிமம் ஆகிவிடுகின்றது. இதனை அடிப்படையாக கொண்டு கமநல அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் பயிர்ச்செய்கை போகத்திட்டங்கள் முன்மொழியப்பட்டாலும் நெல்காணிச்சட்டத்தின் கீழ் நீர் உரிமை பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே நீர் பங்கிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது என்பதால் நெல்விவசாயத்தின் மீது விவசாயிகள் கொண்டுள்ள அதீத விருப்பை இலகுவில் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இதனை ஓரளவேனும் கட்டுப்படுத்தி மாற்றுப் பயிர்ச்செய்கை முறையை அறிமுகப்படுத்துவதற்கு நீர் உரிமையற்ற, விளை நிலங்களுமற்ற மேட்டு நிலக் குடியிருப்பாளர்களுக்கு ஏற்றவாறான நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு பாரிய, நடுத்தர குளங்களிலுமுள்ள நீரில் ஒரு பகுதியை பயன்திறன் வாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது. அத்துடன் அதிக வறுமைக்குட்பட்டுள்ள குடும்பங்களின் பகுதியில் பயிர்ச்செய்கை நிலங்களற்ற மேட்டுக்குடியிருப்பாளர்களே அதிகமாகக் காணப்படுவதினால் இந்த மாற்றுச் சிந்தனை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

உற்பத்தி தொழில்துறை என்ற பகுதியின் கீழ் எமது பிரதான உணவான அரிசியின் உற்பத்தியை நாம் தன்னிறைவு மட்டத்தில் பேணி வருகின்றோம்.  ஆனாலும் இதற்காக இடப்பட்ட முதலீட்டின் அளவுடன் ஒப்பிடும் போது இது பயன்விளைவு மிக்கதா என்ற கேள்விக்கு நாம் விடையளிக்க வேண்டியுள்ளோம். நவீனமயப்படுத்தப்பட்ட விவசாயச் செய்முறைகளை பயன்படுத்தி எமது பாரம்பரிய விவசாய முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் அது பேண்தகு தொழில் முறையாகவும் இருந்து வருகிறது என்பதால் விவசாயத்துறை சார்ந்து எமது முதலீடுகளும் அபிவிருத்தியும் சென்று சேருவது பொருத்தமானதாகும். இதில் ஓரினச் செய்கையாக நெல் முதன்மை பெறுவது தான் இன்று எம் முன் உள்ள பிரதான சவாலாகும். இதனைத் தவிர்ப்பதற்கான சிந்திப்பு இப்போதும் அவசியமாக்கப்பட்டுள்ளது.

  கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை

நெல் விவசாயம் தொடர்பில் மாகாண மட்டத்தில் நோக்கும் போது கிழக்கு மாகாணத்திலே அதிக நெல் விளைச்சல் இடம்பெறுகிறது. 2020 ஆம்  வருடத்தின் பெரும்போகத்தில் 199,855 ஹெக்டேயர்களில் நெல்விளைச்சல் திட்டமிடப்பட்டு 190,584 ஏக்கர்களில் நெல்விளைவு செய்யப்பட்டதுடன் 1,045,159 மெற்றிக்தொன் விளைவும் இதே ஆண்டின் சிறு போகத்தில் 124,600 ஹெக்டயர்களில் திட்டமிடப்பட்டு 118,134 ஹெக்டயர்களில் பயிரிடப்பட்டு 578,500 மெற்றிக்தொன் விளைச்சல் பெறப்பட்டுள்ளது. இவ்வகையில் இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவு நெல்விளைச்சல் இடம்பெறுகிறது. இம்மாவட்டத்தில் 149,398 ஹெக்டயர்களில் நெல் விதைக்கப்படுவதுடன் மாகாணமட்டம், மாகாணங்களுக்கு இடையிலானது, மகாவலி ஆகிய மூன்று பிரதான வகைப்பாட்டின் கீழ் உள்ளடங்கும் நிலங்களில் முகாமைத்துவத்தின் கீழ் இப்பயிர்ச்செய்கை இடம்பெற்று வருகின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

16575 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)