விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும்?
Arts
18 நிமிட வாசிப்பு

விவசாய எழுச்சித் திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் ?

August 7, 2023 | Ezhuna

நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும்  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது.

அறிமுகம்

இலங்கையின் இன்றைய பொருளாதார வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் துறைசார் நிபுணர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கேளாமலும் நன்கு திட்டமிடப்படாமலும் 2019 ஆம் ஆண்டு எதேச்சதிகாரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய கட்டாய சேதன விவசாயமும் அசேதன விவசாய உள்ளீடுகளுக்கான தடையுமே மிகப் பிரதானமாகப் பார்க்கப்படுகின்றன. இலங்கை கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சூழல்நேய விவசாயத் திட்டங்களினூடு தற்சார்பு உணவு உற்பத்தி செய்த நாடாக இருந்தும் பின்னர்  திறந்த பொருளாதாரத்துடன் கூடிய வியாபார நோக்கமாகக் கொண்ட ஏற்றுமதி விவசாயக் கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் இன்றுவரை இலங்கையால் விவசாயத்துறையில் தன்னிறைவு அடையமுடியவில்லை. இதற்கான காரணங்கள் சரியாகத் திட்டமிடப்படாத விவசாயத் திட்டங்களும், உறுதியற்ற விவசாயக் கொள்கைகளும், அரசியல் ஸ்திரத்தன்மை இன்மையும், உறுதியற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கைகளும், ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படாத வேளாண் துறைசார்ந்த அமைச்சு, விவசாயப் பட்டங்களை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களினூடு நடைமுறைப்படுத்தப்படும் வேளாண் துறைசார்ந்த சமூகவலுவூட்டல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், ஊழல் போன்றனவே ஆகும்.

imf (1)

இன்று அதலபாதாளத்தில் உள்ள இலங்கையின்  பொருளாதாரம்  மீண்டு எழுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் [International Monitory Fund (IMF)] கால்களில் விழுந்துள்ளது. இலங்கைக்கு நாணய நிதியத்தின் உதவி கிடைக்க வேண்டுமானால் இலங்கைக்கு IMF வைத்துள்ள பிரதான நிபந்தனைகளில் ஒன்றான ஊழல் எதிர்ப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மேம்படுத்தப்படவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி இலங்கை தனது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்துறையை சுதந்திரமானதுறையாகவும், நன்கு திட்டமிட்ட மிகப் பொருத்தப்பாடான விவசாயத் எழுச்சித் திட்டங்கள் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவையும் தாண்டி ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகின்ற துறையாகவும் எவ்வாறு மாற்றவேண்டும் என்பதையே இந்த அத்தியாயம் விரிவாக ஆராய்கிறது.

விவசாயத் துறைசார் நிறுவனங்களின் சீர்திருத்தம்

விவசாயத் துறை நிறுவனங்களின் சீர்திருத்தம் ஒரு சிக்கலான மற்றும் சவாலான பணியாகும். எவ்வாறாயினும், இலங்கையின் விவசாயத் துறையின் எதிர்காலத்திற்கு இது அத்தியாவசியமானது. நமது நாட்டின் விவசாயத்துறை சார்ந்த அனைத்து விடயங்களையும் தீர்மானித்தல் (ஆராய்ச்சி, திட்டமிடல், மற்றும் விவசாய விரிவாக்கல்), அமுல்படுத்தல் போன்றவற்றிற்கு பொறுப்பாக இருப்பது மத்திய விவசாய அமைச்சின்கீழ்வரும் இலங்கை விவசாயத் திணைக்களமே. மேற்குறிப்பிட்ட விடயங்களை மத்திய, மாகாண அமைச்சுக்களினால் கட்டுப்படுத்தப்படும் விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கல் நிறுவனங்களினூடு நடைமுறைப்படுத்துகிறது. ஆனாலும் மத்திய அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களின் செயற்பாடுகளும் மாகாணங்களின் கீழ் இயங்கும் விவசாயத் திணைக்களத்தின் செயற்பாடுகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவையாகவும் காணப்படுகின்றன (படம்  1).  

agriculture table 1

இதற்கு மேலாக விவசாயத்துறை சார்ந்த பட்டங்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் உயர்கல்வி அமைச்சின்கீழ்வரும் விவசாயபீடங்கள் தனியாக இயங்குகின்றன. நேரடியாக விவசாயிகளுடன் அதிகளவான தொடர்பைப் பேணுவதில்லை. அதுமட்டுமன்றி, விவசாயம் சார்ந்த வாழ்வாதார மேம்பாட்டுச் செயற்திட்டங்களை அமுல்படுத்தும் அரசசார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திட்டங்கள், கிராம அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்திப் பணியாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கின்றன.   

இதைவிட  இரண்டு பிரச்சினைகள் மிகமுக்கியமானவை

  1. விவசாயத்துறை சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் விவசாய நிர்வாகத்தின் அதிகாரம் முழுமையாக மையப்படுத்தப்பட்டுள்ளது. (மத்திய அரசினால் தீர்மானிக்கப்படுகிறது)
  2. அரச பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இருந்து அரச செலவில் இலவசமாகப் படித்து பட்டம் பெற்று வெளியேறும் 70% க்கும் அதிகமான விவசாயப்பட்டதாரிகள் விவசாயத் துறை சார்ந்த நிறுவனங்களில் அல்லது விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லாமை / விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லும் நாட்டமின்மை.

இவை ஒருங்கிணைப்பு இல்லாமையைக் காட்டுவதோடு மேலதிக மனித வளத்தையும் அரச செலவீனங்களையும் அதிகரிக்கும் செயலாகும். விவசாயத்துறைசார்ந்து இயங்கும் நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்புச் செய்து (படம்  2) திட்டமிடுதலானது, விரிவாக்கத்தை மாகாணமயப்படுத்தலும் விவசாயிகளின் தேவைகளை, பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்வதற்கும் பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு காணவும்  வழிவகுக்கிறது. மேலும் விவசாயப்பட்டங்களை தொழில்சார் பட்டங்களாகக் கருதி விவசாயப் பட்டதாரிகள் கட்டாயம் ஐந்து வருடங்கள் விவசாயத்துறை சார்ந்த அரச நிறுவனங்களில் மாத்திரம் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாய நடைமுறையையும் கொண்டுவர வேண்டும் (குறிப்பு: தனியான சம்பளத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்). மேலே குறிப்பிட்டுள்ள சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதன் மூலம், விவசாயத்துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் உதவ முடியும்.

agriculture table 2

பொருத்தப்பாடான இறுக்கமான விவசாயக் கொள்கைகள்

ஏற்கனவே அத்தியாயம் 10 இல் குறிப்பிட்டது போல் இலங்கையின் விவசாயக் கொள்கைகள் உறுதியற்றவையாக இருப்பதினாலும் விவசாயக் கொள்கைகளின் நோக்கத்தை அடைவதற்கு ஏதுவான வலுவான திட்டங்களையும் மற்றும் தந்திரோபாயங்களை உருவாக்கி இறுக்கமாக  அமுல்படுத்தாமையினாலும் தற்போது விவசாயத்துறை பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கிறது.

2021 இல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விவசாயக் கொள்கைகளின் பத்துக் குறிக்கோள்களையும் (அத்தியாயம் 10 ஐ வாசிக்கவும்) 2030 இல் அடைவோமாயின் இலங்கையின் விவசாயத்துறை வெற்றிபெற்ற துறையாகவே கருதப்படும். இதற்கு மேலதிகமாக அரசியல் லாபத்தைக் கைவிட்டு, இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை ஏற்படுத்தாத வகையில் இலங்கை முழுவதும் பாயும் ஆறுகளின் நீரை கடலுடன் கலக்காதவாறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் இணைப்பது தற்போதைய விவசாயக் கொள்கையின் நோக்கத்தை விரைவாக அடைவதற்கு மிக முக்கியமானது.

இலங்கையின் விவசாயத்துறைக்கு மிகவும் சவாலாக இருப்பது நிலத் துண்டாடலும் விவசாயநிலங்களை குடிமனைகளாக வேகமாக மாற்றுவதுமாகும். எனவே, இலங்கையின் காணிச் சீர்திருத்தச் சட்டமானது மிகவும் இறுக்கமாக்கப்படவேண்டும் என்பதோடு காணி அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்கி சட்டவிரோத விவசாய நில அபகரிப்புக்களுடன் தொடர்புபட்டவர்களுடைய அனைத்துச் சொத்துக்களையும் அரசுடமையாக்கக்கூடிய வகையில் கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்க வேண்டும். ஆனால் இலங்கையில் காணப்படும் இனவாத சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் லாபங்களுக்காக இனவாதத்தைத் தூண்டி இலங்கையின் விவசாயப் பொருளாதரத்தை கடந்த பல ஆண்டுகளாக சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு உடந்தையாக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் மக்களும் இருக்கின்றார்கள் என்பதே மனவேதனையோடு கூடிய இலங்கையின் வாழ்நாள் சாபக்கேடாக இருக்கிறது.

ஐந்தாண்டு விவசாய மறுமலர்ச்சித் திட்டங்கள்

ஐந்தாண்டு விவசாயத் திட்டம் என்பது ஒரு நாட்டில் ஐந்து ஆண்டுகளில் விவசாயத்தை வளர்ப்பதற்கும், விஸ்தரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் தலைமையில் முன்னிறுத்தப்படும் திட்டமாகும். இந்தத் திட்டம் பொதுவாக விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பவற்றில் கவனம் செலுத்துகிறது. அவை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாய வர்த்தகம் தொடர்பான நோக்கங்களையும் உள்ளடக்கியிருக்கலாம்.

இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளால் ஐந்தாண்டு விவசாயத்திட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் இந்த நாடுகளில் விவசாயத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், வறுமையைக் குறைக்கவும் அதிகளவில் உதவின; உதவுகின்றன.

உதாரணமாக இந்தியாவில் உணவு, தானியங்களில் தன்னிறைவு அடைய ஐந்தாண்டு விவசாயத் திட்டங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956) மொத்த திட்டச் செலவில் 20% விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. மேலும் விவசாயத்தின் மீதான இந்தக் கவனம் அடுத்தடுத்த திட்டங்களிலும் தொடர்ந்தது. இந்தத் திட்டங்களின் விளைவாக, இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1950-1951 இல் 51 மில்லியன் தொன்களில் இருந்து 2019-2020 இல் 285 மில்லியன் தொன்களாக உயர்ந்தது.

ஐந்தாண்டு விவசாயத் திட்டங்கள் சவால்கள் நிறைந்தவை. இந்தத் திட்டங்களை இலங்கையில்  முதன்முதலாக செயற்படுத்துவதற்கு அதிக செலவு நிறைந்தவையாகவும், அவை பல்வேறு அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைப்பதற்கு கடினமானவையாகவும் இருக்கலாம். கூடுதலாக, இந்தத் திட்டங்களின் செயற்திறன் வானிலை, பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற காரணிகளால் பாதிக்கப்படலாம். சவால்கள் நிறைந்த போதிலும், ஐந்தாண்டு விவசாயத் திட்டம் பல நாடுகளில் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு மதிப்புமிக்க கருவியாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் இலங்கை போன்ற பொருளாதாரத்துறையில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் உள்ள நாடுகள் தங்கள் உணவுப் பாதுகாப்பு இலக்குகளை அடையவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும், வறுமையைக் குறைக்கவும், பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லவும் உதவும்.

தற்போது சிலநாடுகளில் நடைமுறையில் உள்ள ஐந்தாண்டு விவசாய மறுமலர்ச்சித் திட்டங்களின் நோக்கங்களைப் பார்ப்போம்.

  • இந்தியாவின் 13 ஆவது ஐந்தாண்டுத் திட்டம் (2017-2021) : இந்தத் திட்டம் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது, வறுமையைக் குறைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. குறிப்பிட்ட ஐந்தாண்டில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாய உற்பத்தியை ஆண்டுக்கு 4% அதிகரிப்பது மற்றும் ஆண்டுக்கு 2% ஆல் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது போன்றன பிரதான இலக்குகள். இதன்மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்தலே இதன் பிரதான நோக்கம். அத்துடன் நிலையான விவசாயத்தையும் மேம்படுத்துவதிகும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய ஐந்தாண்டு விவசாய மேம்பாட்டுத் திட்டம் (2021-2026) பயிர் விளைச்சலை அதிகரிப்பது, கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, நிலையான விவசாயத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • சீனாவின் 13 ஆவது ஐந்தாண்டு திட்டம் (2016-2020) : இந்தத் திட்டம் விவசாயத்தை நவீனமயமாக்குதல், நிலையான விவசாயத்தை மேம்படுத்துதல் மற்றும் விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியது. குறிப்பிட்ட திட்டத்தின் இலக்குகளாக விவசாய இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், நீர்ப் பயன்பாட்டின் செயல்திறனை மேம்படுத்தல், பூச்சிக்கொல்லிகள் உரங்களின் தேவையற்ற பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற தந்திரோபாயங்களைக் கையாண்டு வெற்றியும் கண்டது. தற்போதைய ஐந்தாண்டு விவசாய மேம்பாட்டுத் திட்டம் (2021-2025) விவசாய உற்பத்தியை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • அமெரிக்காவின் தேசிய விவசாயக் கொள்கைக் கட்டமைப்பு (2018-2022) : இந்தத் திட்டம் பாதுகாப்பான, ஏராளமான மலிவு விலையில் உணவு விநியோகத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. அமெரிக்க விவசாயிகள் – பண்ணையாளர்களை ஆதரித்தல், விவசாயத்தில் புதுமைகளை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மூலம் விவசாய உற்பத்தியின் செயல்திறனை அதிகரித்து குறிப்பிட்ட இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தற்போதைய ஐந்தாண்டு விவசாய மேம்பாட்டுத் திட்டம் (2023-2027) பயிர் விளைச்சலை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. கிராமப்புற உட்கட்டமைப்பு, விவசாய ஏற்றுமதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆபிரிக்க ஒன்றியத்தின் விரிவான ஆபிரிக்கா வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (CAADP) : இந்தத் திட்டம் ஆபிரிக்காவில் விவசாய வளர்ச்சிக்கான ஒரு கட்டமைப்பாகும். இது பிரதான பயிர்களின் உற்பத்தியை அதிகரித்தல், விவசாய இடுபொருட்களுக்கான அணுகலை மேம்படுத்துதல் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், விவசாயச் சந்தைகளை வலுப்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

உலகெங்கிலும் உள்ள ஐந்தாண்டு விவசாய மேம்பாட்டுத் திட்டங்களின் சில எடுத்துக்காட்டுகளைக் கூர்மையாகக் கவனித்தால்  இந்தத் திட்டங்கள் தொடர்ச்சியான சங்கிலிக் கோர்வை போன்றவை. இவை விவசாய வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கும் குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்கும் முக்கியமான கருவிகளாகும். இப்படியான திட்டங்கள் விவசாய உற்பத்தியை நிலையான பாதையில் மேம்படுத்தி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வறுமைநிலை குறைக்கப்படுவதற்கு உதவும்.

இலங்கையில் ஐந்தாண்டுத் தொடர் விவசாயத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவோமானால் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் :

  • இலக்குகள், நோக்கங்களைத் தீர்மானித்தல் : விவசாய உற்பத்தி அதிகரிப்பு எத்தனை வீதம் ஒவ்வொரு ஆண்டிலும் அதிகரிக்கப்படவேண்டும், உற்பத்தித்திறனை எத்தனை வீதத்தினால் அதிகரிக்க வேண்டும், இலாபம் எவ்வளவாக இருக்கவேண்டும் என்பதனை உறுதியான தீர்மானமாக எடுத்து அவற்றினை அடைவதற்கான தெளிவான திட்டம் அமைக்க வேண்டும். இந்த இலக்குகள், நோக்கங்களை அடைவதற்காகப் போடும் திட்டம் அடைவுமட்டத்தை அடையக்கூடியதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள், பிராந்தியத்தின் விவசாய-காலநிலை நிலைமைகள், கிடைக்கக்கூடிய வளங்கள், சமூக-பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு, உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். மேலும் அவை நாட்டின் விவசாயத்திறனைப் பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
  • முதலீட்டு முன்னுரிமைகள் : திட்டத்தின் இலக்குகளை அடைய முதலீடு தேவைப்படும் முக்கியமான பகுதிகளை அடையாளம் காணவேண்டும். இதில் நீர்ப்பாசனம், உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி மேம்பாடு, விவசாய விரிவாக்க சேவைகள், தரநிர்ணயம், உழவர் கூட்டுறவு, நவீன விவசாயம், இளைஞர்களின் ஈடுபாடு, காலநிலை மாற்றம், தழுவல், மீள்தன்மை, சந்தைப்படுத்தல் போன்றவற்றில் இடப்படும் முதலீடுகள் முக்கியமானவை. இலங்கையைப் பொறுத்தவரை இந்தத் திட்டங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியினை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு [Food and Agriculture Organization of the United Nations (FAO)], உலக வங்கி [the World Bank], ஆசிய அபிவிருத்தி வங்கி [Asian Development Bank (ABD), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), USAID, European Union, மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் [the International Fund for Agricultural Development (IFAD)] போன்ற பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெறமுடியும். இந்த நிதியினை இலங்கை நிலைத்திருக்கக் கூடிய விவசாய அபிவிருத்திக்கான வழியில் ஊழல் இன்றி மிக வினைத்திறனாகப் பயன்படுத்தவேண்டும் என்பதே மிக முக்கியமானது. பல தசாப்தங்களாக இவ்வாறான பன்னாட்டு உதவிகள் கிடைத்தாலும் இன்றுவரை இலங்கையின் விவசாயத்துறை மேம்படவில்லை என்பதே கவலைக்குரிய விடயம். (இதற்கு மிக முக்கியமான காரணங்களை, அத்தியாயம் 11 இல் அரசியல் தலையீடும்  விவசாய வீழ்ச்சியும் என்ற தலைப்பின் கீழ்  விரிவாக எடுத்துரைத்திருக்கிறேன்)
food and agri un
  • கொள்கைச் சீர்திருத்தங்கள் : விவசாயத்துறையை ஆதரிக்கத் தேவையான கொள்கைச் சீர்திருத்தங்களையும் இந்த ஐந்தாண்டுத் திட்டம் அடையாளம் காண வேண்டும். நில உரிமை /அதிகாரம், நீரிணைப்பும் குடியேற்றத் திட்டங்களும், விவசாயச் சந்தைப்படுத்தல், வர்த்தகம் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான சீர்திருத்தங்கள் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து குறுகிய சுயலாப இனவாத அரசியலை விடுத்து நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து, நிலையான விவசாயத்தை ஊக்குவித்து, வறுமையைக் குறைத்து, கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தி, விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டை சுபீட்சமான பாதையில் கொண்டுசெல்ல வேண்டும்.
  • கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு : திட்டமானது அதன் முன்னேற்றத்தைக் கண்காணித்து மதிப்பிடுவதற்கான வழிமுறையைக் கொண்டிருக்க வேண்டும். திட்டம் அதன் இலக்குகளை அடைவதற்கான பாதையில் இருப்பதை உறுதிசெய்ய மீளாய்வு செய்யப்படவேண்டும், இது மேலும் திட்டத்தை சரிசெய்ய வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு மேம்படுத்த அல்லது அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் உள்வாங்கப்பட உதவும்.  

ஐந்தாண்டு விவசாயத் திட்டத்தின் குறிப்பிட்ட நோக்கங்கள் நாட்டின் குறிப்பிட்ட தேவைகள், முன்னுரிமைகளைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், இந்தத் திட்டங்களின் ஒட்டுமொத்த குறிக்கோள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அதன் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் விவசாயத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.

உசாத்துணை

  1. un.org
  2. Yu, J.; Wu, J. The Sustainability of Agricultural Development in China: The Agriculture–Environment Nexus. Sustainability 2018, 10, 1776. doi.org
  3. www.oecd-ilibrary.org


ஒலிவடிவில் கேட்க

13650 பார்வைகள்

About the Author

கந்தையா பகீரதன்

கந்தையா பகீரதன் அவர்கள் 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் விவசாய விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டுமுதல் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பிற்கான விவசாய நிறுவகத்தில் தாவர பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தனது முதுமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். பின்னர் இவரின் ஆராய்ச்சித் திறமைகளுக்காக 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பட்டப்பின் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில் மற்றும் அவுஸ்திரேலியன் முதுகலை விருதையும் (IPRS&APA) பெற்று அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மூலக்கூற்றியல் தாவர பாதுகாப்புப் பிரிவில் கலாநிதிப் பட்டத்தை 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மற்றும் விவசாய உயிரியல் துறையின் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். இவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை 30இற்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளில் முன்னிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற சஞ்சிகைகளிலும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரசுரித்துள்ளார். இவர் எழுதிய ‘அந்நியக்களை பாதீனியம்: அடங்க மறுப்பது ஏன்? அறியாததும் புரியாததும்’ என்ற நூல் வெளிவரவுள்ளது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்