தமிழில் : த. சிவதாசன்
2015 இல் நான் யாழ்ப்பாணத்திற்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அங்கு போர் விதவைகளால் நடாத்தப்படும் உணவகம் பற்றி பல வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். கொழும்பிலிருந்து வடக்கே வரும் நண்பர்கள் கிளிநொச்சிக்கு அருகே, A9 வீதியில் இது இருப்பதாகச் சொன்னார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து ஒன்றரை மணித்தியால வாகன ஓட்டத்தில் (சிலர் இதை ஒரு மணித்தியாலத்தில் கடந்துவிடுவார்கள்) கிளிநொச்சிக்கு அருகே இருக்கும் இவ்விடத்தைத் தரிசிக்க எனக்கு ஒரு வருடம் பிடித்தது. பின்னர் தான் தெரியவந்தது, எனது வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியில் 15 நிமிடங்கள் ஓடினால் அங்கும் ஒரு ‘அம்மாச்சி’ இருக்கிறது என்பது.
‘அம்மாச்சி’யின் உணவு பிரமாதமானது. இறைச்சியும், பியரும் இல்லாமலே இங்கு வழங்கப்படும் சுத்த சைவ உணவு மிகவும் சுவையானது என்பதை நான் பரிந்துரைப்பேன். 50 ரூபாய் பெறுமதியான காளான், மரக்கறி சூப் முதல் பழரசத்துடன் கூடிய 200 ரூபாவுக்குள்ளேயே வயிற்றை நிரப்பும் உணவு வரை அற்புதமான உணவைப் பரிமாறுகிறது ‘அம்மாச்சி’. ஆனால் அது மட்டுமல்ல எனது புகழுரைக்குக் காரணம். ‘அம்மாச்சி’, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் எனப் பல கிளைகளைக் கொண்ட ஒரு பாரிய நிறுவனம் என்பதுவும் தான். அது மட்டுமல்ல ‘ஹெல போஜன்’ என்னும் பெயரில் இலங்கையின் பெரும்பான்மை இன மக்களின் சுவைகளையும் தாங்கி அது இலங்கை முழுவதும் வியாபித்திருக்கிறது.

‘அம்மாச்சி’ ஒரு சிறந்த வியாபார உத்தி. இலங்கை விவசாயத் திணைக்களத்தினால் இவ் உணவகத்திற்கான இடமும் தளபாடமும் வழங்கப்படுகிறது. ஒரு பண்டகசாலை அளவிலான மண்டபத்தில் பல சிறிய சமையற்கூடங்களும், சமையலுபகரணங்கள், மேசை, கதிரைகள், கழிப்பறைகள், கழுவல் தொட்டிகள் ஆகியனவும் ஒழுங்கமைக்கப்ப்ட்டிருக்கின்றன. ஒரு சமையற்கூடம் காலை 7:00 மணி முதல் பி.ப. 1:00 மணி வரை ஒருவருக்கு வாடகைக்கு விடப்படும். பின்னர் பி.ப. 1:00 முதல் மாலை 7:00 மணி வரை இன்னொருவருக்கு வாடகைக்கு விடப்படும். பெண்களே (ஆண்களை என்னால் காண முடியவில்லை) இவற்றை வாடகைக்குப் பெற்று தமது உணவகங்களை நடத்துகிறார்கள். எரிவாயு முதற்கொண்டு சமையலுக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் இப்பெண்களே கொண்டுவருகிறார்கள். விற்கப்படும் உணவிற்கான விலைகளையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இலாபமோ நட்டமோ எல்லாமும் அவர்களுடையதுதான்.

முதலீடோ அல்லது உதவிகளோ இல்லாதவர்களுக்கு ‘அம்மாச்சி’ தொழில் கற்கைக்கான ஒரு ஆரம்பம். குடும்பத் தலைவிகளுக்கோ அல்லது பாடசாலையை முடித்துக்கொண்டு வேலைகளைத் தேடுபவர்களுக்கோ அல்லது இன்னுமொரு இடத்தில் வேலை பார்த்துக் கசப்புற்றவர்களுக்கோ ‘அம்மாச்சி’ ஒரு ஆபத்தற்ற தொழிற் கற்கை ஊடகம் என்பதோடு எதிர்காலத்தில் அவர்கள் உயர்தர, பாதுகாப்பான தொழில்களை ஆரம்பிக்க இக்கற்கை உதவியாகவிருக்கும். காலையில் உரிய நேரத்தில் துயிலெழுந்து, வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டமிடல், கொள்வனவு, முறையான சமையல், தூய்மை, தரம் ஆகியவற்றைத் தீர்மானித்தல் ஆகிய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவதுடன் அவ்வப்போது நடைபெறும் உணவுப் பரிசோதனைகளை வெற்றிகொள்ளவும் ‘அம்மாச்சி’ உணவகம் கற்றுத் தருகிறது. இப்படியான உணவகமொன்றில் நான் பேசிக்கொண்டிருந்தபோது அம்மண்டபத்தில் காக்கிச் சீருடையில் இரு சுகாதார பரிசோதகர்கள் சில நிமிடங்களாக நடமாடிக்கொண்டிருந்ததைப் பற்றி அவ்வுணவகப் பெண் பேசிக்கொண்டிருந்தார்.
‘அம்மாச்சி’ பற்றி அறிவதற்காக நான் எனது மும்மொழி வல்லுனர், நண்பர் ஜூட் ஜோசெஃபுடன் யாழ்ப்பாணத்திலுள்ள ‘அம்மாச்சி’ உணவகத்திற்குச் சென்றிருந்தேன். தமிழோ சிங்களமோ தெரியாத எனக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அவசியமாகவிருந்தார். அது மட்டுமல்ல பொதுவாக மெளனம் காக்கும் எமது பெண்களைத் தனது இனிய சிரிப்பால் பேசவைக்கும் ஆற்றல் படைத்தவர் ஜூட். ஒரு மணிக்கு கை மாறும் கடையின் முந்தைய, பிந்திய உரிமையாளர்களை ஒருங்கே சந்திக்கும் வாய்ப்பை நாங்கள் வேண்டுமென்றே ஏற்படுத்தியிருந்தோம். இதனால் பல ‘அம்மாச்சி’ பெண்களுடன் உரையாடும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. “அம்மாச்சியில் சேர்வதற்கு முதல் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்களில் இருவர் தமது வீடுகளில் சும்மா இருந்தனரெனவும், ஒருவர் குடும்ப மனைவியாகவும், இன்னுமொருவர் பாடசாலைக் கல்வியை முடித்திருந்ததாகவும், மற்றொருவர் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவும் அரசு சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், இன்னுமொருவர் பூ விற்றதாகவும், ஒருவர் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாக வேலை பார்த்ததாகவும் கூறினார்கள். அவர்களில் சிலர் நான்கு குழந்தைகளுக்குத் தாய்மாராகவும் சிலர் குழந்தைகளே இல்லாதவர்களாகவும் இருந்தனர். இவர்களில் ஒருவர் திருமணம் புரியாதவராகவும், மற்றுமிருவர் கணவர்களால் கைவிடப்பட்டவர்களாகவும் இருந்தனர். சிலர் சாரதிகளாகவும், தச்சுத் தொழில் செய்தவராகவும், வீடுகளுக்கு வர்ணம் பூசுபவராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றிருந்தனர்.
இவர்கள் ‘அம்மாச்சி’யில் எப்படித் தொழில்களை ஆரம்பித்தார்கள்? ஒருவர் காளான் பயிரிடலில் ஆரம்பித்து தனது தொழிலைப் பணமாக்குவதற்காக ‘அம்மாச்சி’ யுடன் இணைந்தார். அவரது உணவகம் காளானை மூலமாகக்கொண்ட இரசம் (soup), உணவுருண்டை (cutlets) போன்ற உணவுகளை விற்கிறது. இந்த நேர்காணலுக்கு முன்னதாக நான் ‘அம்மாச்சி’ க்கு பல தடவைகள் சென்று காளான் இரசத்தை அருந்தியிருக்கிறேன். 50 ரூபாய்க்கு முழுமையான காளான், மரக்கறி வகைகளுடன் பரிமாறப்பட்ட இரசம் மிகவும் அருஞ்சுவையோடிருந்தது. இக்காளான் உணவு வியாபாரம் வெற்றி பெற்றதையடுத்து அவர் மேலும் இரண்டு நண்பிகளை ‘அம்மாச்சி’ க்கு அழைத்து வந்தார். இவரது தாயாரும் இன்னுமொரு பெண்ணை ‘அம்மாச்சி’ க்கு அறிமுகப்படுத்தினார். இவர் விவசாயத் திணைக்களத்தில் தேனீ அபிவிருத்தியில் ஈடுபட்டு வருகிறார். இன்னுமொரு பெண் காலையில் யாழ். கோட்டைக்கு அருகே ஒரு சிறு உணவுச்சாலையை நடத்திவிட்டு பிற்பகலில் ‘அம்மாச்சி’யில் உணவகத்தை நடத்துகிறார்.
விவசாயத் திணைக்களத்திலிருந்து இப்பெண்கள் சிறப்பான பயிற்சியைப் பெறுகிறார்கள். உணவுத் தயாரிப்புகளுக்கான மூலப் பொருட்களை எங்கு, எப்படித் தெரிவு செய்து வாங்குவது, எப்படிச் சமைப்பது, எப்படிச் சுகாதாரத் தரங்களைப் பேணுவது, செலவீனங்களை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற ஒரு சிறுதொழிலுக்கான அத்தியாவசிய அம்சங்கள் இவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. பழரசக் கடையை நடத்தும் பெண்ணிற்கு பப்பாசி, விளாம்பழம், அன்னாசி, மாம்பழம், நீத்துப்பூசணி உட்பட்ட பலவிதமான பழங்களை வாங்குவது முதல் தயாரிப்பு வரை பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய குவளையில் வழங்கப்பட்ட (எனக்கு சிபார்சு செய்யப்பட்ட விளாம்பழ ரசமும், இதர இரசங்களும்) 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் நன்னாரித் தேனீரையும் இவரது கடையில் பெற்றுக்கொள்ளலாம்.
வாரத்தில் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் ‘அம்மாச்சி’ களை கட்டுகிறது. “செவ்வாய்க்கிழமையில் அப்படி என்ன விசேஷம்?” எனக் கேட்டேன். இந்துக்களில் பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை (இது நான் கற்றுக்கொண்ட ஒரு புது விடயம்) எனப் பதில் கிடைத்தது. “என்ன நேரம் அவர்கள் வேலைகளை ஆரம்பிக்கிறார்கள்?” என்று நான் கேட்டேன். ஒருவர் எதை விற்கிறார் என்பதில் இது தங்கியிருக்கிறது. பட்டாணிக் கடலை மற்றும் பருப்பு உணவுகளைச் சமைக்கும் பெண் அதிகாலை 3 மணிக்கு எழுகிறார். பழரசம் தயாரிப்பவருக்கு அதிக நேரம் தேவையில்லையாதலால் அவர் ஆறுதலாக எழுகிறார்.
‘அம்மாச்சி’ உணவகங்களை நடத்தும் பெண்கள் செலவுகள் போக நாளொன்றுக்கு 1,000 முதல் 2,000 ரூபாய்கள் வரை இலாபமீட்டுகிறார்கள். பழரச வியாபாரி மழைநாட்களில் இலாபமீட்டாவிட்டாலும், யாழ்ப்பாணம் வெய்யிலில் கொதிக்கும் நாட்களில் நிறைய இலாபம் சம்பாதிக்கிறார். நாள் முடிவில் எஞ்சும் உணவுகள் இலவசமாக வழங்கப்படுவதும் அல்லது குப்பைக்குள் வீசப்படுவதும் வழக்கம். வியாபாரம் நஷ்டத்தில் போகாமலிருப்பதற்காக உணவு தயாரிப்பு விடயத்தில் தரத்தையும், அளவையும் தீர்மானிக்கக் கற்றுக்கொள்வது அவசியம். இதனால் மீதியை வீசவேண்டிய நிலை ஏற்படாது தவிர்த்துக்கொள்ளலாம்.

“அம்மாச்சி வியாபாரத்தின் மூலம் நீங்கள் வேறு என்ன பலன்களைப் பெறுகிறீர்கள்?” எனக் கேட்டேன். பொதுவாக எல்லோருமே கூறியது “சமையற்கலை மட்டுமல்ல இதர வியாபார நுணுக்கங்களையும் நாங்கள் கற்றுக்கொள்ளும் அதே வேளை துணிவு, தன்னம்பிக்கை, எமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள எம்மால் முடியுமென்ற நம்பிக்கை எனப் பல வழிகளிலும் நாங்கள் பலன் பெறுகிறோம்” என்பதே. அவர்களது மனோபலத்தையும் நம்பிக்கையையும் என்னால் உணர முடிந்தது. இலங்கையின் பல பகுதிகளிலும் நான் சந்தித்த வாய்மூடி மெளனிகளைப் போலல்லாது இவர்கள் எங்கள் கண்களை ஊடுருவித் தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக முன்வைத்தமை ஆச்சரியமாக இருந்தது. தங்களில் ஒருவர் இப்படி வெளிப்படையாகப் பேசியதை தாம் இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறோம் எனச் சில பெண்கள் நகைச்சுவையுடன் கூறி மகிழ்ந்தனர். முன்னர் மெளனம் காத்தவர் சிரிப்பை உதிர்த்தது மட்டுமல்லாது அதிகப் பிரசங்கியாகவும் மாறியிருந்தார். சிலர் மெளனமாக இருப்பது அவர்களிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்பதன் வெளிப்பாடு அல்ல மாறாக அவர்களிடம் எவரும் கருத்துகளைக் கேட்காதபடியால் தான் அவர்கள் பேசுவதில்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்பெண்களிடையே தொடர்பாடலை விருத்தி செய்தமை எங்கள் வருகையின் முக்கிய வெற்றிகளில் ஒன்று என நானும் ஜூட்டும் நம்புகிறோம். உணவுக்கூடத்தின் தூய்மை, உணவுத் தரம், எரிவாயு வழங்கல் மற்றும் அத்தியாவசிய வழங்கல்களை உறுதிப்படுத்தல் தொடர்பான மேற்பார்வைத் திறன்களையும் இப்பெண்கள் இங்கு கற்றுக்கொள்கிறார்கள். சக உணவக உரிமையாளர் தெரிந்தோ தெரியாமலோ அசுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ அல்லது தூய்மையற்ற உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டாலோ, தமக்கும் அப்படி நேரலாம் என்பதையும் கருத்தில் கொள்ளாமல், அவரைக் கண்டிக்கிறார்கள் இப்பெண்கள்.
‘அம்மாச்சியில்’ இரண்டு அல்லது மூன்று வருட அனுபவத்தைப் பெற்ற பின்னர் இப்பெண்கள் தாம் கற்ற பலம், தன்னம்பிக்கை, ஒழுக்கம், செயற் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டு தமது கிராமங்களில் சொந்தமான உணவகங்களை ஆரம்பிக்கிறார்கள். இருப்பினும் ‘அம்மாச்சியில்’ காணப்படும் பாதுகாப்பு, சமூக உணர்வு காரணமாக சிலர் வேறு முயற்சிகளில் ஈடுபட அதிக அவசரம் காட்டுவதில்லை என்பதுமுண்மை. யாழ்ப்பாணம், வடக்கு, இலங்கையில் எங்கு பார்ப்பினும் இப்படியான குணாதிசயங்களைக் கொண்டவர்களைக் காண முடியும். ஆனால் இவை மட்டுமே போதாது. இதர சொத்துகளான சந்தை நுழைவு, வியாபாரத் தொடர்புகள், பணம் ஆகியவையும் அவசியமானவை. இவை இருப்பினும் வெற்றி உங்களை நெருங்கிவிட்டதென்பதில்லை. தோல்விகளுக்குப் பழகிக்கொள்ளும் போதும், தப்பிப் பிழைத்து அவற்றின் காரணங்களை அறிந்து தெளிந்து கொள்ளும்போதும் சிலவேளைகளில் உங்கள் இலக்கை அடையலாம். ஆனால் அதிஷ்டத்தின் பங்கையும் புறந்தள்ள வேண்டாம். நெப்போலியன் போனாபார்ட் கூறியது போல “நல்ல ஜெனெரல்களைவிட அதிஷ்டமான ஜெனெரல்களே எனக்குத் தேவையானவர்கள்”. இந்த ‘இதர சொத்துகள்’ வடமாகாணத்தில் மிகவும் அரிது. உண்மையில் இச்சொத்துகள் எல்லாம் மேற்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் இலங்கையின் இதர மாகாணங்கள் பின்தள்ளப்பட்டுள்ளன.
2017/2018 இல் வெளியான, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தி மையத்தின் ‘இலங்கை வளர்ச்சிப் பகுப்பாய்வு’ அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகம் பெரும்பாலும் நுட்பமற்ற (Unsophisticated products) பொருட்களிலேயே பெரும்பாலும் மையம் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாது திறன் குறைந்த வேலைகளையே நாட்டின் பொருளாதாரம் உற்பத்தி செய்கிறது. இது நாட்டின் நாள்பட்ட பிணி. இதைத் தீர்க்க நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகள் மிகவும் தாமதமாக முயன்றுகொண்டு இருக்கையில் வடக்கின் மீதான கவனம் பின்தள்ளப்படுவது இயல்பே. இப்பட்டியலில் வடக்கு துரிதமாக முன்னேற வேண்டுமாகில் அது புலம்பெயர்ந்தோரின் ஊக்கமான முயற்சியினால் தான் கைகூடும். சிலர் இம்முயற்சிகளில் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் உயர் ரக தொழில் முயற்சிகளில் ஈடுபடும் எனக்குத் தெரிந்தவர்களில் சிலர்: 1). ஒக்ஸ்ஃபோர்ட், பிரித்தானியாவைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் – இவர் கற்றாளைப் பண்ணையொன்றை ஆரம்பித்திருக்கிறார். தகுந்த முதலீடு கிடைக்கும் பட்சத்தில் பசுமை கொழிக்கும் இப்பண்ணையின் விளைச்சலைப் பதனிடும் ஆலையொன்றை நிறுவக் காத்திருக்கிறார் 2). ரொறோண்டோ, கனடாவிலிருந்து வந்திருக்கும் தளபாட உற்பத்தியாளர் – இவர் பனம் பானங்களிலிருந்து கள்ளு, சாராயம் ஆகியவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார் 3). கலிஃபோர்ணியா, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து வந்த தொழில்நுட்ப வல்லுனர் – இவர் யாழ்ப்பாணத்தில் வங்கியொன்றின் மேலுள்ள அறையில் இருந்துகொண்டு பல்கலைக்கழகத்திற்கே செல்லாதவர்களைக் கொண்டு வியாபாரிகளால் பாவிக்கப்படும் வசூல் இயந்திரங்களை (Point of Sale (POS)) உற்பத்தி செய்கிறார். இவ்வியந்திரங்கள் இலங்கையில் ஏற்கெனவே பாவனையிலுள்ளன. விரைவில் சர்வதேசச் சந்தைகளிலும் கிடைக்கும். 4). நியூயோர்க், அமெரிக்காவிலிருந்து ஒரு விவசாய – சூழலியலாளர். இவர் தெங்கு மட்டையிலிருந்து பொச்சுக்களை அகற்றி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார்). இவர்களை விட இன்னும் சிலர் வெவ்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலர், முயற்சிகளை மேற்கொள்ள தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இனிவரும் மாதங்களில் அவர்களைப் பற்றி நான் எழுதவுள்ளேன். ஆனால் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்த வல்ல சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். மேலும் பலர் எங்களுக்குத் தேவை.

‘அம்மாச்சி’ பெண்களுடன் பேசிய பின்னர் தான் அறிந்தேன், வடக்கில் பிரமிப்பைத் தரும் தொழில் முனைவர்கள் இருக்கிறார்கள் என்பதை. அவர்கள் மட்டும் என்பதில்லை. நான் 2015 இல் யாழ்ப்பாணம் வந்தபோது அங்கு சுவை தரும் உணவுச் சுருள்களையும், இனிப்புப் பண்டங்களையும் விற்கும் சிறு கொட்டகைக் கடைகள் இருந்தன. இப்போது அவை அவரவர் வீடுகளில் வசதியாக உருமாற்றப்பட்ட முறையான கடைகளாகப் பரிணமிக்கின்றன. பி.ப. 3:00 மணிக்குத் திறக்கப்படும் இக் கடைகள், பண்டங்கள் தீரும்வரை, 2-3 மணித்தியாலங்கள் திறந்திருக்கின்றன. இவை தயாரிக்கும் உணவுச் சுருள்கள் இலங்கையிலேயே அதி சுவை வாய்ந்தவை. விலையிலும் மிக மிக மலிவானவை. மிளகாய்த்தூள் கட்டிகளை வெளிப்பரப்பில் கொண்டிருக்கும் இச்சுருள்களைக் கடிக்கும் வேளையில் மறைந்த எனது தந்தை தனது சகோதரர்களோடு சிறுவர்களாக மிளகாயுடன் கூடிய பண்டங்களை வாய்களில் திணித்து கண்களில் நீர் தாரையாகி வழிய வலியுடன் சுவைத்து மகிழ்ந்த கதைகளைக் கேட்ட ஞாபகம் நினைவுக்கு வருகிறது. “நாங்கள் குளறிக்கொண்டே சாப்பிடுவோம்” என அவர் கூறுவார். சில பண்டங்கள் கண்ணீரை மட்டுமே வரவழைக்கும். ‘அம்மாச்சி’ போன்ற நுண் கடைகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய நகர்வுகள் மகிழ்வைத் தருவன. “அரசாங்கங்கள் எங்களுக்கு என்ன செய்தன?” என்று யாராவது கேட்டால் நான் தயங்காமல் சொல்வேன், இலவசக் கல்வியும் ‘அம்மாச்சியுமே’.
*இக் கட்டுரை லங்கா பிசிநெஸ் ஒன்லைன் நவம்பர் 26, 2018 பதிப்பில் பிரசுரமானது.
தொடரும்.