சென்ற கட்டுரையில் லெயுசிக்காமின் வலிகாமப் பிரிவின் நிலப்படம் காட்டும் யாழ்ப்பாண நகரப் பகுதி பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் நகரப் பகுதிக்கு அண்மையில் உள்ள வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுப் பிரிவைப் பற்றி மேற்படி நிலப்படம் தரும் தகவல்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகளைப் பற்றியும் ஆராயலாம். வலிகாமத்திலுள்ள கோவிற்பற்றுகளுள் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படாத ஒரே கோவிற்பற்று வண்ணார்பண்ணையே.
எல்லைகள்
வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றின் தெற்கில் கடலேரியும் யாழ்ப்பாண நகரப் பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கு எல்லையில் மானிப்பாய்க் கோவிற்பற்றின் ஆனைக்கோட்டை உள்ளது. வடக்கில் நல்லூர்க் கோவிற்பற்றின் துணைப் பிரிவுகளான கொக்குவில், தின்னவேலி என்பனவும் கிழக்கு எல்லையில் நல்லூரும் சுண்டிக்குழிக் கோவிற்பற்றின் கரையூரும் உள்ளன. (படம்-1) மேற்படி எல்லைகள் பெருமளவுக்குத் தற்கால எல்லைகளுடன் பொருந்திவருவதைக் காணமுடிகிறது. ஒல்லாந்தர் காலத்தில் வண்ணார்பண்ணையின் மேற்கு எல்லைப் பகுதியில் தற்காலத்தில் சில விரிவாக்கங்கள் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இது அந்த எல்லைப் பகுதியில் இருந்த சில குடியிருப்புகள் எல்லை தாண்டி விரிவடைந்ததால் ஏற்பட்டது. கிழக்கு எல்லையின் வடக்குப் பகுதி தற்காலக் கோவில் வீதி வரை பரந்திருப்பதைக் காணமுடிகிறது.
குடியிருப்புகள்
இந்த நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் மேற்குறித்த எல்லைகளுக்குள் பல குடியிருப்புகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மேற்கு எல்லையை அண்டிக் கடலேரிக் கரையோரமாக நாவாந்துறை இருந்தது. இது கடல்வழிப் பயண வசதிகளை வழங்குபவர்களும் மீன்பிடிப்பவர்களும் வாழ்ந்த ஒரு குடியிருப்பு. இதற்குத் தென்கிழக்குத் திசையில் சற்றுத் தொலைவில் முஸ்லிம்களின் குடியிருப்பு ஒன்று இருந்தது. 1614 ஆம் ஆண்டளவில் இன்று கோட்டை இருக்கும் பகுதியில் குடியிருந்த முஸ்லிம் வணிகர்கள் போர்த்துக்கேயப் பாதிரியாரின் தேவைக்காக இடம்பெயர்க்கப்பட்டனர். அவர்கள் புதிதாகக் குடியேறிய இடமே இது.1 வடக்கு எல்லையை அண்டி இக்கோவிற்பற்றுக்கு வண்ணார்பண்ணை என்ற பெயர் வரக் காரணமான வண்ணார்பண்ணைக் கிராமம் இருந்தது. இவற்றைத் தவிரத் தெற்கெல்லையை அண்டி, வடக்கு நோக்கிச் செல்லும் வீதியோரமாக ஒரு குடியிருப்பு இருந்துள்ளது. இது பெரும்பாலும் தென்னிந்திய வணிகப் பிரிவினரின் குடியிருப்பாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவற்றுடன் மேலும் சில குடியிருப்புகள் இருந்திருக்கக்கூடும். ஆனால், இவற்றைப்பற்றி எவ்வித தகவல்களும் நிலப்படத்தில் இல்லை. தெரிந்த குடியிருப்புகளையும் நிலப்படத்தில் பெயர் குறித்துக் காட்டவில்லை. உண்மையில் எல்லா ஊர்களையும் குடியிருப்புகளையும் குறித்துக் காட்டுவது நிலப்படத்தின் நோக்கமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது.
வீதிகள்
வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றை ஊடறுத்து ஏனைய பகுதிகளுக்குச் செல்லுகின்ற நான்கு வீதிகளை நிலப்படம் காட்டுகிறது. இவ்வீதிகள் அனைத்தும் யாழ்ப்பாண நகரத்துக்கும் வண்ணார்பண்ணைக்கும் இடையிலான எல்லையில் அல்லது வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றில் தொடங்குகின்றன. (படம்-2) கோட்டைக்கு வடக்கில், வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றின் தெற்கெல்லைக்கு அருகில் உள்ள ஒரு புள்ளியில் தொடங்கும் ஒரு வீதி வடக்கு நோக்கிச் செல்கிறது. இது இன்றைய காங்கேசந்துறை வீதித் தடத்தில் அமைந்துள்ளது. இதன் தொடக்கப் புள்ளியிலிருந்து வடக்கே சற்றுத் தொலைவில் இவ்வீதியிலிருந்து இன்னொரு வீதி தொடங்குகிறது. தென்மேற்குத் திசையில் செல்லும் இவ்வீதி தற்காலத்து மானிப்பாய் வீதியாகும். இவ்வீதி வழியே அது தொடங்குமிடத்திலிருந்து சற்றுத் தொலைவில் இன்னொரு வீதி தொடங்குகிறது. இவ்விடம் இன்றைய ஓட்டுமடம் சந்தி. இங்கிருந்து தொடங்கும் வீதி மேற்கு நோக்கிக் கடலேரிக் கரைவரை சென்று அங்கிருந்து வடமேற்குத் திசையில் செல்கிறது. இது தற்காலத்துக் காரைநகர் வீதியின் பகுதியாகும்.
வலிகாமப் பிரிவில் உள்ள இன்னொரு முக்கிய வீதி நகரத்திலிருந்து பருத்தித்துறையை நோக்கிச் செல்லும் வீதி. இதன் பெரும்பகுதி இன்றைய பருத்தித்துறை வீதித் தடத்திலேயே இருந்தபோதும், யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையில் இது சற்று வேறுபட்டுக் காணப்படுகிறது. முதலாம் குறுக்குத் தெருவின் வடக்கு நோக்கிய நீட்சியே இன்றைய பருத்தித்துறை வீதியின் தொடக்கமாக அமைகிறது. இந்நீட்சி பிற்காலத்தது. 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் அமைக்கப்பட்டது. லெயுசிக்காம் நிலப்படத்தில் உள்ள இவ்வீதியின் தொடக்கப்பகுதி இன்றைய மணிக்கூட்டுக் கோபுர வீதியின் ஒரு பகுதியாகும். இது இந்த நிலப்படத்தில் தெளிவாக இல்லாவிட்டாலும் கூடுதல் விவரங்களைத் தரும் வேறு சில நிலப்படங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. இனிவரும் கட்டுரையொன்றில் இந்நிலப்படங்களை விளக்கும்போது இதுபற்றி விவரமாகப் பார்க்கலாம். இந்த மணிக்கூட்டுக் கோபுர வீதிப் பகுதியைக் கடந்த பின்னர் நிலப்படம் காட்டும் இவ்வீதிக்கும் தற்கால வீதிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை.
இந்த நிலப்படம் நகரத்திலிருந்து குடாநாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் ஆரைவழி வீதிகளையே காட்டுகிறது. மேலே விளக்கப்பட்ட வீதிகள் இத்தகையவை. ஆனால், அக்காலத்தில் மேற்படி வீதிகளைக் குறுக்காக வெட்டிச் செல்லும் வீதிகள் சிலவும் இருந்துள்ளன. குறிப்பாக இன்று நாவலர் வீதி எனப் பெயர் பெற்றுள்ள வீதியும் அரசடி வீதியும் ஒல்லாந்தர் காலத்தில் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. இவற்றின் பகுதிகள் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுக்குள் அடங்குவன. உண்மையில் மேலே விளக்கிய பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியில் மணிக்கூட்டுக் கோபுர வீதி தாண்டிய பின்னர் கிழக்கு நோக்கி நல்லூர்வரை செல்லும் வீதி அரசடி வீதியின் ஒரு பகுதியே. இது முன்னர் செம்மணி வீதி எனவும் அழைக்கப்பட்டது. இவ்விடயங்களைப் பற்றி இனிவரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்க்கலாம். இவ்வாறான வீதிகள் எதுவும் நிலப்படத்தில் இல்லை. இந்த நிலப்படத்தின் நோக்கத்துக்கு அப்படியான வீதிகளைக் காட்டவேண்டிய தேவை இல்லாதிருந்திருக்கலாம்.
தமிழ் மன்னர் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட காலத்தில் போர்த்துக்கேயருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இடம்பெற்ற மூன்று போர்கள் குறித்துப் போர்த்துக்கேய வரலாற்றாளர்கள் அல்லது பாதிரிமார்கள் எழுதிய நூல்களில் விவரங்கள் உள்ளன. இவ்விவரங்களின்படி போர்த்துக்கேயப் படைகள் இன்று கோட்டை இருக்கும் பகுதியிலிருந்து வண்ணார்பண்ணையை ஊடறுத்தே நல்லூருக்குச் சென்றுள்ளனர். வண்ணார்பண்ணையூடாக நல்லூருக்குச் செல்லும்போது எதிர்ப்பட்ட சில வீதிகள் பற்றியும் அந்நூல்கள் தகவல்கள் தருகின்றன.2 எனவே வண்ணார்பண்ணையை நல்லூருடன் இணைக்க முறையான வீதிகள் அக்காலத்தில் இருந்திருக்கும் என ஊகிக்கலாம். ஆனாலும் இவ்வீதிகளை நிலப்படம் காட்டவில்லை. மேலே குறிப்பிட்டபடி தற்காலத்து நாவலர் வீதி, அரசடி வீதி ஆகிய தடங்களில் அமைந்திருந்த வீதிகள் இவ்வாறான இணைப்பை வழங்கியிருக்கக்கூடும்.
கட்டடங்களும் அமைப்புகளும்
நிலப்படத்தில் வண்ணார்பண்ணைப் பிரிவுக்குள் கட்டடம் அல்லது அமைப்பைக் காட்டும் மூன்று குறியீடுகள் உள்ளன. இவற்றுள் இரண்டைத் தெளிவாகப் பெயர் குறித்துக் காட்டியுள்ளனர். ஒன்று, முன்னர் குறிப்பிட்ட ஓட்டுமடம் சந்திக்கு அண்மையில் உள்ளது. இது தேவாலயமும் அதைச் சார்ந்த தேவாலய இல்லமும் ஆகும். அக்காலத்தில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுக்குரிய தேவாலயம் இதுவே. இந்த இடத்தில் முன்னர் இருந்த போர்த்துக்கேயரின் கத்தோலிக்கத் தேவாலயத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் அதைப் புரட்டஸ்தாந்து தேவாலயமாக மாற்றினர்.
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியின் தொடக்கத்தில் 1658 முதல் 1665 வரையான ஏழு ஆண்டுகள் மத போதனைக்குப் பொறுப்பானவராகப் பணியாற்றிய பிலிப்பஸ் போல்தேயஸ் தான் எழுதிய நூலில், வண்ணார்பண்ணைத் தேவாலயம் சிறியது என்றும் அதனோடு இணைந்ததாகக் குருமனை இருக்கவில்லை என்றும் எழுதியுள்ளார்.3 அத்துடன் அந்நூலில் உள்ள வண்ணார்பண்ணைத் தேவாலயத்தின் படம், அது நிரந்தரமல்லாத கட்டடப்பொருட்களால் ஆனதாகக் காட்டுகிறது.4 (படம்-3) மேற்படி படம் உண்மையில் இருந்த தேவாலயத்தைப் பார்த்து வரையப்பட்டது அல்ல என்று கூறப்பட்டாலும், அது நிரந்தரமல்லாத பொருட்களால் ஆனது என்ற தகவல் சரியாக இருக்கக்கூடும். நிலப்படத்தில் தேவாலயத்துக்கு அருகில் குருமனையும் காட்டப்பட்டுள்ளதால் 1665 இற்குப் பின்னர் நிலப்படம் வரையப்பட்ட 1719 வரையான காலப்பகுதியில் குருமனை புதிதாக அமைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
பின்னர், பிரித்தானியரின் கைகளுக்குச் சென்ற இது, வெஸ்லிய சபையினரின் தேவாலயமாகி இன்றும் அவ்விடத்தில் உள்ளது. போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்தக் கூறுகள் எதுவும் இன்றைய கட்டடத்தில் இல்லாவிட்டாலும் இந்த இடம் 400 ஆண்டுகாலக் கிறித்தவ சமயப் பயன்பாட்டின் அடையாளமாக இன்றும் விளங்குகிறது.
இரண்டாவது கட்டடம் ஒரு ஆனைப் பந்தி. இது நகரிலிருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் வீதியில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றின் கிழக்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. இன்றும் அப்பகுதி ஆனைப்பந்தியடி என்றும் இன்றைய நாவலர் வீதியும் பருத்தித்துறை வீதியும் ஒன்றையொன்று வெட்டும் சந்தி ஆனைப்பந்திச் சந்தி எனவும் அழைக்கப்படுகின்றது. நிலப்படத்தில் உள்ள ஆனைப்பந்தியும் ஏறத்தாழ அதே இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலப்படம் வரையப்பட்ட 1719 இனை அண்டிய காலப்பகுதியில் இவ்விடத்தில் ஒரு ஆனைப்பந்தி இருந்ததை இந்நிலப்படம் உறுதி செய்கிறது. இவ்விடம் தமிழ் மன்னர்களின் தலைநகராக இருந்த நல்லூருக்கு மிக அண்மையில் அமைந்திருப்பதால், இவ்விடத்தில் மன்னர்களின் ஆனைப்பந்திகள் இருந்திருக்கலாம் என்ற கருத்தைச் சிலர் முன்வைத்துள்ளனர். இதை உறுதிசெய்வதற்குப் போதுமான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.
பெயர் குறிக்கப்படாத மூன்றாவது குறியீடு நாவாந்துறைப் பகுதியில் கடலேரிக் கரையை அண்டி உள்ளது. சென்ற கட்டுரையில் அலுப்பாந்தித் துறையை அண்டியுள்ள ஒரு குறியீடு பற்றி விளக்கியிருந்தோம். நாவாந்துறைப் பகுதியில் உள்ள குறியீடும் ஓரளவுக்கு அதை ஒத்ததாகவே உள்ளது. இங்கும் அது இறங்கு துறை அல்லது துறைமுகத்தோடு தொடர்புள்ள ஒரு கட்டுமானத்தைக் குறிப்பதாக இருக்கலாம். முன்னைய எடுத்துக்காட்டைப் போலவே இந்தக் குறியீடு தொடர்பிலும் எழுத்துமூல விளக்கங்கள் எதுவும் நிலப்படத்தில் இல்லை.
நீர்நிலைகள்
நிலப்படத்தில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றில் ஆறு நீர்நிலைகள் குறிக்கப்பட்டுள்ளன. தற்போதைய எண்ணிக்கையையும் ஒல்லாந்தர் காலத்துக்குப் பின்னர் மூடப்பட்டதாகத் தெரியவரும் நீர்நிலைகளையும் கருத்திற்கொள்ளும்போது நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் மேலும் கூடுதலான நீர்நிலைகள் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆறு நீர்நிலைகளை மட்டும் குறித்திருப்பதன் காரணம் தெரியவில்லை. குறித்துள்ள நீர்நிலைகளில் இரண்டை மட்டுமே சிறப்புப் பெயர்களால் குறித்துள்ளனர். ஒன்று வெட்டுத் துரவு, மற்றது சாயக்காரக் குளம். இவை இன்று புழக்கத்திலுள்ள பெயர்களுடன் ஒத்துவரவில்லை என்பது தெளிவு. ஏனைய நான்கு நீர்நிலைகளுக்கும் பொதுப் பெயரையே குறித்துள்ளனர். குறிப்பாக ஒரு நீர்நிலைக்கு ‘குளம்’ என்ற தமிழ்ப் பெயரும் இன்னொன்றுக்குத் ‘துரவு’ என்னும் தமிழ்ப் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய இரண்டையும் ‘Tanck’ என்ற ஒல்லாந்த மொழிப் பெயரால் குறித்துள்ளனர். ‘குளம்’, ‘Tanck’ என்னும் இரண்டுக்குமிடையே ஏதாவது வேறுபாடுகள் உண்டா தெரியவில்லை.
கோட்டைப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வீதிக்கு மேற்குப் பக்கத்தில் மூன்று நீர்நிலைகள் குறிக்கப்பட்டுள்ளன. தற்காலத்திலும் இப்பகுதியில் கல்லுக் குளம், வண்ணான் குளம், நெடுங் குளம் என்ற மூன்று குளங்கள் உள்ளன. நிலப்படம் பெருமளவு துல்லியமானது அல்ல என்ற அடிப்படையில் நிலப்படத்திலுள்ள ‘Toerawoe’ (துரவு), ‘Tanck’, ‘Coelam’ (குளம்) ஆகிய மூன்றையும் முறையே கல்லுக்குளம், வண்ணான் குளம், நெடுங் குளம் என்பவற்றுடன் அடையாளம் காணமுடியும் என்றே தோன்றுகிறது. (படம்-2)
மேற்படி வீதிக்குக் கிழக்குப் பக்கத்திலும் ‘Wettoe Toerawoe’ (வெட்டுத் துரவு), Zaeyacaracoelam’ (சாயக்காரக்குளம்), ‘Tanck’ என்று பெயர் குறித்துள்ள மூன்று நீர்நிலைகள் உள்ளன. இப்பகுதியில் தற்காலத்தில் வண்ணான் குளம், ஆரிய குளம், கன்னாதிட்டிக் குளம் ஆகிய மூன்று முக்கியமான நீர்நிலைகள் உள்ளன. இவை தவிர, குசவன் குளம் என்ற குளம் ஒன்று இருந்து பிற்காலத்தில் மூடப்பட்டது. இது முன்னர் குறிப்பிட்ட மூன்று குளங்களுக்கு வடக்கே சற்றும் தொலைவில் இருந்தது. இது நிலப்படத்தில் காட்டிய குளங்களுள் ஒன்றாக இருக்க வாய்ப்புக் குறைவு. நிலப்படத்திலுள்ள குளங்களின் அமைவிடத் தொடர்புகளை தற்காலக் குளங்களுடன் ஒப்புநோக்கும்போது நிலப்படத்திலுள்ள வெட்டுத் துரவை இன்றைய வண்ணான் குளத்துடனும், சாயக்காரக் குளத்தை இன்றைய ஆரிய குளத்துடனும், ‘Tanck’ என்ற பெயரில் உள்ள நீர்நிலையைத் தற்காலத்துக் கன்னாதிட்டிக் குளத்துடனும் அடையாளம் காணமுடியும். (படம்-2)
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நெசவுத் தொழிலை முன்னேற்றவும் யாழ்ப்பாணத்தில் கிடைத்த சாயவேரைப் பயன்படுத்தித் துணிகளுக்குச் சாயமிடும் தொழிலை ஊக்குவிக்கவும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த நெசவாளர்களையும், சாயக்காரரையும் வண்ணார்பண்ணை, நல்லூர் போன்ற பகுதிகளில் குடியேற்றியதற்குச் சான்றுகள் உண்டு.5 இன்றும் இப்பகுதிகளில் மேற்படி தொழில் செய்பவர்களின் பரம்பரையினர் வாழ்ந்துவருகின்றனர். அத்துடன் மேற்படி சாதிகளின் பெயர்களைத் தழுவிய இடப் பெயர்களும் புழக்கத்தில் இருந்துள்ளன. சில இன்னும் புழக்கத்திலுள்ளன. இன்று ஆரிய குளம் என அழைக்கப்படும் குளத்துக்கு அருகில் சாயத் தொழில் செய்பவர்கள் வசித்ததாலோ, சாயத் தொழிலுக்கு அக்குளம் ஏதோவொரு வகையில் பயன்பட்டதாலோ அக்குளத்துக்கு ஒல்லாந்தர் காலத்தில் சாயக்காரக் குளம் என்ற பெயர் வழங்கியிருக்கக்கூடும்.
குறிப்புகள்
- Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 666.
- Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 186-191.
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 323.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 317.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 326.
தொடரும்.