2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் வாழ்ந்த ஆண்டியாகல மலைக் கல்வெட்டு
Arts
10 நிமிட வாசிப்பு

2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் வாழ்ந்த ஆண்டியாகல மலைக் கல்வெட்டு

March 11, 2025 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

ஆண்டியாகல எனும் பெயரில் இலங்கையில் பல இடங்கள் அமைந்துள்ளன. குருநாகல் நகரின் மேற்குப் பக்கத்திலும், தம்புள்ளை நகரத்தின் வடமேற்குப் பக்கத்திலும், பியகம நகரின் வடக்குப் பக்கத்திலும், அனுராதபுரத்தின் வடமேற்குப் பக்கத்திலும் இப்பெயரில் ஊர்கள் காணப்படுகின்றன. இவற்றில் இங்கே குறிப்பிட்டுள்ள ஆண்டியாகல என்னுமிடம் அனுராதபுரம் நகரில் இருந்து வடமேற்கு நோக்கி அரிப்புக்குச் செல்லும் வீதியில் 30 ஆவது கி.மீ கல்லில் இருந்து வடக்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

ஆண்டியாகல என்பது பண்டைய காலத்தில் சித்தர்கள் அல்லது முனிவர்கள் வாழ்ந்த மலைகளாகும். பண்டைய காலத்தில், குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பல இடங்களிலும் இவர்கள் வாசம் செய்துவந்த மலைகளும், காடுகளும், இடங்களும் இருந்தன. இவர்களை பொதுவாக ஆண்டி என்றே சிங்கள மக்கள் அழைப்பதுண்டு. இலங்கையில் ஆண்டிகல, ஆண்டியாகந்த, ஆண்டிகம, ஆண்டி அம்பலம எனும் இடங்கள் இன்றும் காணப்படுகின்றமை இதற்கு தக்கசான்றாகும்.

ஆண்டியாகலவில் காணப்படும் இயற்கையான கற்குகைகளில், இரண்டு முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், ஒரு பிற்கால பிராமிக் கல்வெட்டுமாக மொத்தம் 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பிற்கால பிராமிக் கல்வெட்டு நாகர் பற்றிய செய்தியைக் குறிப்பிடுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

“சித்தம், உபசக மகா நாகலஹ லேனே பிக்கு சகஹடய நியதே”

இதன் பொருள், Hail, The cave of the lay devotee Maha Nakala has been dedicated to the community of Bhikkus என்பதாகும். இது தமிழில் “வெற்றி, பாமர பக்தனான மகா நாகனின் கற்குகை பிக்கு சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது” எனப் பொருள்படும்.            

பெருமகன் நாகன் பற்றிக் குறிப்பிடும் மானாகந்த மலைக் கல்வெட்டு

அனுராதபுரம் நகரில் இருந்து தென்கிழக்கு நோக்கி தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் 34 கி.மீ தூரத்தில் மரதங்கடவல என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தெற்குப்பக்கமாக ஒரு கி.மீ சென்றதும் தினிபிட்டிகம வெவ எனும் குளத்திற்குச் செல்லும் சந்தி காணப்படுகிறது. இச்சந்தியில் இருந்து மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதியில், குளத்தைக் கடந்து சுமார் 3 கி.மீ சென்றதும் ஒரு சிறிய குளமும், குளத்தின் அருகில் மலைகள் நிறைந்த அடர்ந்த காடும் காணப்படுகிறது. இம்மலைப் பகுதியே மானாகந்த என அழைக்கப்படுகிறது.

இங்கு சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளமை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் நிரூபணமாகிறது. இக்காட்டுப் பகுதியில் பல இடங்களில் இயற்கையான மலைக் குகைகளும், புராதன கட்டட இடிபாடுகளும் காணப்படுகின்றன. இங்குள்ள மலைக் குகைகள் சிலவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. இக் குகைகளில் மூன்று பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில் இரண்டு குடும்பத்தலைவன் வம்சன் பற்றிக் கூறுகின்றன. ஒரு கல்வெட்டு நாகர் பற்றியதாகும். நாகர் பற்றிய கல்வெட்டில் மொத்தமாக 9 எழுத்துகள் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் இக்கல்வெட்டு வழமைக்கு மாறாக வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதியுள்ளமைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“பருமக நாகக லேனே”

இது “பெருமகன் நாகனின் கற்குகை” எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் காணப்படும் வாசகங்கள் மூலம் நாகன் என்பவன் இப்பகுதியின் தலைவனாக இருந்து, இப்பகுதியைப் பரிபாலித்து வந்துள்ளான் எனத் தெரிகிறது. கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை.

சுவாமி நாகன் மற்றும் பகுல நாகன் பற்றிய மஹா அளகமுவ கல்வெட்டுகள்  

தம்புள்ளையில் இருந்து வடமேற்கு நோக்கி அனுராதபுரத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள கைலபதான என்னுமிடத்தை அடுத்து மஹா அளகமுவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் வடகிழக்குப் பக்கம் மஹா அளகமுவ குளம் காணப்படுகிறது. இக்குளத்தின் வடக்குப் பக்கம் மஹா அளகமுவ விகாரையும், அடர்ந்த காடும், மலைப் பாறைகளும், குன்றுகளும் அமைந்துள்ளன. இங்கு ஏராளமான இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்ட குகைகளில் மொத்தமாக 30 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 28 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், இரண்டு பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் உள்ளன.

இவற்றில் 2 கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூன்று சொற்களைக் கொண்ட சிறிய கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் 7 எழுத்துகள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“பத நாகஹ லேனே”

இதன் பொருள், “The cave of Lord Naga” என்பதாகும். தமிழில் இது “சுவாமி நாகனின் குகை” எனப் பொருள்படும். இக்கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட பிரதி கிடைக்கவில்லை.

அடுத்த கல்வெட்டு பிற்கால பிராமிக் கல்வெட்டாகும். இதன் விவரங்கள் பின்வருமாறு:

“சித்தம் பகுல நாகஹ லேனே சக தின ஹி”

இதன் பொருள், பகுல நாகனின் குகை சங்கத்தார்க்கு வழங்கப்பட்டது என்பதாகும். ஆங்கிலத்தில் இது, The cave of Bakula Naga is given to the Sangha எனப் பொருள்படும்.

கிராமத் தலைவன் நாகன் பற்றிய ரஸ்னகாவ கல்வெட்டு

மதவாச்சியில் இருந்து ஹொரவபொத்தானைக்குச் செல்லும் வீதியில் 26 கி.மீ தூரத்தில் உள்ள வலஹாவித்த வெவ சந்தியில் இருந்து வடகிழக்கு நோக்கி நிக்காவெவைக்கு செல்லும் வீதியில் 3 கி.மீ தூரத்தில் உள்ள ரஸ்னக வெவ குளத்தை அடுத்து உள்ள மலைப்பாறைகள் நிறைந்த சிறிய காட்டுப்பகுதியில் ரத்னகிரி ராஜமஹா விகாரை அமைந்துள்ளது. இவ்விகாரையைச் சுற்றிக் காணப்படும் காட்டில் சுமார் 10 இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்ட குகைகளில் 5 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும். 

இவற்றில் ஒரு கல்வெட்டில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் விவரங்கள் பின்வருமாறு:

“பத மஹாதிசஹ க கமிக நாகச சடயச”

இதன் பொருள் “Of lord Mahatissa and his partner Naga, the village councilor” என்பதாகும். தமிழில் இது “பரத அல்லது சுவாமி மஹாதீசனினதும், அவனது பங்குதாரரான கிராமத் தலைவன் நாகனினதும்.. .. [குகை]” எனப் பொருள்படுகிறது.


ஒலிவடிவில் கேட்க


About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்