'அளிப்புரிமை' சார் கொள்கை - Ezhuna | எழுநா

‘அளிப்புரிமை’ சார் கொள்கை

July 31, 2020 | Ezhuna

எழுநா வெளியீடுகளில், வழமையாக பதிப்பகங்கள் உபயோகிக்கும் ‘காப்புரிமை’ (Copyright) என்ற உரிமத்திற்குப் (Licence) பதிலாக புதிய வகையானதொரு உரிமத்தைப் பார்த்திருப்பீர்கள். அவ்வுரிமம் தொடர்பான கேள்விகள் உங்களில் பலருடைய மனதில் தோன்றியிருக்கும்.

ஆம். எழுநா காப்புரிமைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நடைமுறையில் முன்னெடுக்க விரும்புகின்றது. காப்புரிமைக்கு எதிரான நிலைப்பாட்டை கோட்பாட்டளவில் பலர், பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வந்துள்ளார்கள். நடைமுறையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு எழுநா முதலடியை எடுத்து வைப்பதோடு, எழுத்தாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. அறிவுச்சூழலும் படைப்புச் சூழலும் தொடர்ச்சியாக ஆரோக்கியமாகவும் செழுமையுடனும் இயங்குநிலையில் இருப்பதற்காக எழுநா காப்புரிமைக்கு மாறீடான ‘படைப்பாக்க பொதுமங்கள்’ என்னும் உரிமத்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதோடு அவ்வுரிமத்தை பரவலாக்குவதற்கான முயற்சியையும் எடுத்து வைத்துள்ளது.

படைப்பாக்கப் பொதுமங்கள் என்றால் என்ன?

படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons) என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் (Lawrence Lessig) என்பவரால் தொடங்கப்பட்டது. இது ஆக்கர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. படைப்பாக்கப் பொதுவெளி உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் என்ற தெரிவு ஆக்கர்களிடமே விடப்படுகிறது. கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும், முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாத தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாற தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதுமங்கள் உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார்.

இவ்வமையமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் ஆக்கர்களை அவர்கள் தெரிந்தெடுக்கும் அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிட ஏதுவாக்கின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்ள் உருவாக்கப்பட்டுள்ளன.

எழுநாவின் உரிமம் எவ்வகைப்பட்டது?

எழுநா வெளியீடுகளின் அனைத்து உள்ளடக்கங்களும் இலாபநோக்கற்றுப் பயன்படுத்தக்கூடியவாறு ‘படைப்பாக்கப் பொதுமங்கள்’ (Creative Commons) என்ற உரிமத்தின் கீழேயே வெளியிடப்படுகின்றத. ஆயினும், அதன் வடிவம் மாத்திரம் அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு கட்டுப்படுத்தப்படுகின்றன. பதிப்புச் செயற்பாடுகளின் வளர்ச்சியையும் நலனையும் கருத்தில் கொண்டு இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகின்றது. எழுநாவின் அனைத்து வெளியீடுகளும் மூன்று வருடங்களில் அனைவரும் பயன்படுத்தக்கூடியவாறு முழுமையாக இணையத்தில் வெளியிடப்படும். பதிப்புத்துறையும் படைப்பாளியும் பாதிக்கபப்டாத அதேநேரம், அறிவுப்பரம்பலையும் கவனத்தில் கொண்டு இவ்வுரிமத்தை எழுநா பயன்படுத்துகின்றது.

எழுநா பயன்படுத்தப்போகும் உரிமத்தால் சமூகத்திற்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் எவை?

இதன் மூலம் படைப்பாளியின் நலன் பாதுகாக்கபப்டும் அதேநேரம், அப்படைப்பாளியின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அச்சமூகம் உடனடியாகப் பயன்பெற வேண்டும். இவ்வுரிமங்கள் கொண்டதாக வெளியிடப்படும் பிரதிகளின் இலாபமீட்டும் உரிமை படைப்பாளியிடமே இருக்கும். அதேநேரம் அறிவைப் பரவலாக்குதல், அறிவை விருத்தியாக்குதல் என்ற நோக்குநிலையில் இருந்தான வழிகள் திறந்துவிடப்படுகின்றன. படைப்பாளியின் உரிமையில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது அறிவு விருத்தியில் மக்கள் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு இவ்வுரிமங்கள் வழிவகை செய்துள்ளன.

அறிவு சந்தை சார்ந்தல்லாமல், மக்களுடைய தேவை சார்ந்து பரவலாகுவதற்கான வழிவகை ஏற்படுத்தபப்டுகின்றது. சந்தையில் இல்லாமல் போகும் போது, குறித்த பிரதியும் இல்லாமல் போகும் ஆபத்து தவிர்க்கப்பட்டு அறிவு பரவலாக்கபப்டுகின்றது. அதேநேரம், சந்தை சார் கட்டுப்பாடுகளை மீறி அறிவு பிறிதொரு வகையில் தன்னை பரவலாக்குகின்றது. அதுமற்றுமன்றி, குறித்த படைப்பாளியின் கருத்துக்கள் விரைவாக சமூகத்தை முழுமையாகச் சென்றடைந்து வினைபுரிவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகின்றது.

ஆதி நிலப்பொதுவுடமைச் சமூகத்தில் இருந்து நிலப்பிரபுத்துவ சமூக மாற்றத்தின் போது, நிலம் எவ்வாறு குறிப்பிட்ட குழுவினர் வசமாகி முதலீட்டியத்திற்கான ஆரம்பவிதை ஊட்டப்பட்டதோ, அதே போன்று இன்று அறிவு படிப்படியாக குறிப்பிட்ட குழுவினருக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. தமிழ்ச்சூழலில் தேவையில்லாமலே ‘காப்புரிமை’ என்ற உரிமத்தை பயன்படுத்தி அறிவுப்பரவலாக்கலுக்கு நாமே தடை போடுவதோடு, எம்முடைய அறிவு சமூகத்திற்கு பயன்படாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலமையை படைப்பாளியும் சமூகமும் பாதிக்கப்படாத வகையில் நடைமுறையில் மாற்றியமைப்போம்.

அறிவும் தகவல்களும் அனைவருக்குமானதாக, அவற்றின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அவற்றைப் பொதுவுடமையாக்குவோம்.

«