“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்”
-திருக்குறள்-
மு. வரதராசனார் விளக்கம் : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
ஓர் ஆரம்ப நிறுவனத்தை அமைக்க முதலில் ஓர் சிந்தனை (Idea) தேவை. இண்டாவது அந்தச் சிந்தனையை உற்பத்தியாக உருவாக்கும் தகுதி கொண்ட குழுவினர் (People/Team) தேவை. பின்பு அந்த உற்பத்திக்கான சந்தை (Market) அவசியம். இவை மூன்றும் அடிப்படையானவை. இவற்றை ஆராய்ந்து அறிந்தபின் அவற்றை உருவாக்க பணம் வேண்டும். நான் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில், ஒரு தொழிலை ஆரம்பிக்கத் தேவையான பணத்தை, பணம் படைத்தவர்களிடம் அல்லது வங்கியில் கடனாகப் பெற வேண்டுமெனவே அறிந்திருந்தேன். அவ்வாறு கடன் எடுக்கும் போது, தங்களிடமிருக்கும் பொருட்கள், காணிகள், சொத்துக்களை அடகு வைத்து கடன் எடுப்பார்கள். அவர்கள் ஆரம்பிக்கும் தொழில் நட்டமானால் அவர்கள் தங்களது சொத்துக்களை இழக்க வேண்டியிருக்கும். இன்னொரு முறையும் இருந்தது; நிலக்காணி இருப்பவர்கள் தங்களது நிலத்தை விவசாயம் செய்பவர்களுக்கு குத்தகைக்கு கொடுப்பார்கள். குத்தகைக்கு எடுப்பவர்கள், விவசாயம் அல்லது தொழிற்சாலை செய்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை நில உரிமையாளருக்கு கொடுப்பார்கள். அதன் மூலம் இரு பகுதியினரும் தொழிலால் வரும் ஆபத்துகளை பகிர்ந்து கொள்வார்கள்.
நான் ஐக்கிய அமெரிக்காவில் படித்து முடித்த பின் ஓர் பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு சொந்த நிறுவனம் அமைக்கும் யோசனை இருக்கவில்லை. ஈழத்திலிருந்து வந்ததால் என்னிடம் பணமும் இருக்கவில்லை; நிதியைத் திரட்டும் வழியும் தொடர்புகளும் இருக்கவில்லை. ஆனால் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு அருகில் இருந்ததால், அமெரிக்காவில் முதலாளித்துவத்தாலும் (Capitalism) கடின உழைப்பாலும் கோடீஸ்வரரானவர்களின் வரலாற்றை அறியக்கூடியதாக இருந்தது. அதில் பலர் முதல் தலைமுறை கோடீஸ்வரர்கள். கூகிள் தொடக்கம் ரெஸ்லா வரையும் இதே கதைதான். கூகிளின் தற்போதைய தலைவர் சுந்தர் பிச்சை (இந்தியத் தமிழர்) இதற்குச் சிறந்த உதாரணம்.
எனது முதலாவது நிறுவனத்தை தொடங்குவதற்கான சிந்தனை, அதற்கான சந்தை வாய்ப்புகள் பற்றிய அறிவு என்பன வேலை அனுபவங்கள் மூலம் எனக்கு கிடைத்திருந்தன. ஆனால் எனக்கு, சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு ஆரம்ப நிறுவனத்தைத் தொடங்குவது ஆபத்தாகத் தெரிந்தது. அதற்கு முதலிட எம்மிடம் பணமும் இருக்கவில்லை. அப்போது தான் ‘Venture capitalists’ எனும் பணம் உள்ளவர்களிடம் நிதி திரட்ட முடியும் என்ற விபரம் எனக்குத் தெரியவந்தது. அது இப்போது பலருக்கும் விளக்கமாக தெரிந்திருந்தாலும் 1990 களில் எங்களுக்கு புதிய விடயமாக இருந்தது. இந்தக் கட்டுரை, ஓர் நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்து, அது மக்களின் பொது நிறுவனமாகும் (IPO – Initial Public Offering) வரை, நிதி திரட்டும் நிலைகளைப் பற்றியும் அதற்கான உத்திகள் பற்றியும் சுருக்கமாக விளக்குகிறது.
நிதி திரட்டுவதைப் பற்றிக் கூற முன் அதற்கான சில தொழில்நுட்ப சொற்களுக்கு விளக்கம் கூறுவது அவசியம். ஓர் நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது நிறுவனத்தை தொடங்குபவர்கள் தமது படிப்பறிவையும், தொழில் அனுபவங்களையும் கொண்டு புதிய நிறுவனமொன்றை ஆக்க முன்வருவார்கள். அவையே நிறுவனம் ஆரம்பிப்பவர்களின் பங்களிப்பாக இருக்கும். நிதி முதலீடு செய்பவர்கள், நிறுவனம் ஆரம்பிப்பவர்களை நம்பி முதலீடு செய்வார்கள். இப்படியாக, நிறுவனத்தின் மதிப்பு (valuation) மேற் கூறிய இரண்டையும் வைத்து நிர்மாணிக்கப்படும். அப்படி நிர்மாணிக்கப்பட்ட தொகையை வைத்து பங்குகள் (Shares) கொடுக்கப்படும். பங்குகளின் தொகையை ஓர் பங்குகளின் விலையால் பெருக்கினால் நிறுவனத்தின் மதிப்பு தெரியவரும். அந்தப் பங்குகளிலும் விருப்பம்கூடிய பங்குகள் (Preferred shares) மற்றும் சாதாரண பங்குகள் (Common Shares) என்று இரண்டு நிலைகள் இருக்கும். ஓர் நிறுவனத்திற்கு பண முதலீடு செய்பவர்களுக்கு விருப்பங்கூடிய பங்குகள் கொடுக்கப்படும். அதன் மூலம் அவர்களுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்.
- குடும்பம் மற்றும் நண்பர்கள் சுற்று (Family and Friends Round) : ஓர் நிறுவனத்தைத் தொடங்கும் ஒருவரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள, அவர்களது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களுமே. நெருக்கமானவர்களுக்கு, ஒருவரின் வேலைப் பழக்கம் மற்றும் அறிவு பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். அவற்றைக் கொண்டு உறவினர்களும் நண்பர்களும் சிறிது பணத்தை முதலீடு செய்வார்கள். அந்தப் பணத்தை வைத்து சில முன்மாதிரி (Prototype) ஆக்கங்களைச் செய்யலாம். பின்பு, வாடிக்கையாளர்களிடம் சென்று அவர்களது யோசனைகளையும், அவர்கள் தீர்க்கும் பிரச்சினைகளுக்கான வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் அறிவார்கள்.
இந்தச் சுற்றில் இருக்கும் போது பங்குகள் கிடைப்பது குறைவாகவே இருக்கும். ஆனால், அடுத்து வரும் சுற்றுக்களில் அதிகமான பங்குகளைப் பெறுவதற்கான வாக்குறுதி அட்டைகள் கிடைக்கும். இந்தச் சுற்றில் இருப்பவர்கள் அதிகமான சவால்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருந்தால் அவர்களுக்கு சில வீதம் தள்ளுபடியும் கிடைக்கும்.
- முன் விதை மற்றும் விதைச் சுற்று (Pre-seed and Seed Round) : இந்தச் சுற்றில் திரளும் நிதி, குடும்ப வட்டத்தில் திரளும் நிதியை விட அதிகமாக இருக்கு. ஆனால் உற்பத்திகளைச் செய்வதற்கான முழுப் பணமும் கிடைக்காது. ஓர் பிரச்சினையை தீர்மானித்து அதை தீர்க்க ஓர் வழியையும் மனதில் கொண்டு அதற்கான முன்மாதிரி ஆக்கங்களை நன்றாக செய்து, அவ் ஆக்கங்களை ஆர்வமுடையோரிடம் கொண்டு செல்வதன் மூலம், இதில் நிதியைத் திரட்டலாம். இந்தக் கட்டத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
எனது முதலாவது நிறுவனத்தில் நாங்கள் நான்கு பேர் மூன்று மாதங்களாக இரவும் பகலும் வேலை செய்து, ஓர் வேலை செய்யும் முன்மாதிரியை (Working Prototype) உருவாக்கி அதை எமது ஆரம்ப முதலீட்டாளர்களுக்குக் காட்டினோம். அதைப் பார்த்து அவர்கள் திருப்தி அடைந்து எமக்கு ‘விதைப் பணம்’ தர ஒப்புக்கொண்டார்கள். அமெரிக்காவில் இந்தச் சுற்றில் அரை மில்லியனிலிருந்து ஒன்றரை மில்லியன் டொலர் வரை திரட்டுவார்கள். சாதாரணமாக இந்தச் சுற்றிலும் வாக்குறுதி அட்டை (Promise note) ஓர் தள்ளுபடியோடு கிடைக்கும் என்பதுடன் நிறுவனத்தின் மதிப்பிற்கும் உயர் அளவு கிடைக்கும். பின்னர், இந்தப் பணத்தை வைத்து சில முக்கிய குழுவினரை வேலைக்கு சேர்க்கலாம்.
- தொடர் ஏ, பீ, சீ…(Series A, B, C…): இந்தச் சுற்றில் தான் அதிகமான நிதியை நிறுவனங்கள் சேர்க்கும். முதல் இரண்டு சுற்றுக்களிலும் உற்பத்தி, சந்தைகள் தொடர்பான சவால்களைக் குறைப்பதன் மூலம் அதிக நிதியைத் திரட்டக் கூடியதாக இருக்கும். இதிலிருந்து சேர்க்கும் பணத்தை வைத்து உற்பத்தியைச் செய்வதற்கான முழு அணியையும் கட்டியெழுப்பி உற்பத்தியைச் செய்தால் அதைச் சந்தைக்கு கொண்டுவந்து வருமானம் எடுக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த சுற்றுக்களின் போது நிறுவனத்திற்கு ஓர் மதிப்பீடு (Valuation) அளிக்கப்படும். அந்த மதிப்பீடுகளை வைத்து நிறுவனங்களின் பங்குகளுக்கு விலை நிர்மாணிக்கப்படும். அந்தப் பங்கு விலைகளையும் முன்னைய சுற்றுக்களில் கொடுத்த தள்ளுபடிகளையும் அனுசரித்து, நிதி முதலிட்ட அனைவருக்கும் விருப்பங்கூடிய பங்குகள் வழங்கப்படும். அதோடு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கு சாதாரண பங்குகள் பல மடங்குகள் (பத்து தொடக்கம் நூறு மடங்கு) விலைக் குறைவில் கொடுக்கப்படும். ஓர் நிறுவனத்தில் மூன்று குழுக்கள் இருக்கும். முதற் குழு, முதலீடு செய்பவர்கள். இரண்டாவது, தொழிலாளர்கள். மூன்றாவது, முக்கியமானவர்கள், நிறுவனத்தை ஆரம்பிப்பவர்கள் (Founders). ஓர் நிறுவனத்தின் கூடுதலான பங்குகள், நிதி முதலிட்டவர்களிற்கும் அந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர்களுக்கும் இடையில் தான் இருக்கும்.
- ஆரம்ப நிறுவனத்தை மக்களின் பொது நிறுவனமாக்கல் (IPO): ஆரம்ப நிறுவனங்களைத் தொடங்கி அதை வளர்த்து ஓர் இலாபமான நிறுவனமாக மாற்றிய பின்னர் அதை இரண்டு விதமாக அடுத்த நிலைக்கு கொண்டு போகலாம். முதலாவது, இன்னொரு பெரிய நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து அவர்களின் விற்பனையாளர்களை பயன்படுத்தி பொருட்களை விற்பது. இதனால், பெரிய நிறுவனம் அதிக பணம் கொடுத்து பங்குகளை வாங்கும். இதன் மூலம் நிறுவனத்தில் முதலிட்டவர்களுக்கும் வேலை பார்த்தவர்களுக்கும் அதிக பணம் கிடைக்கும். இரண்டாவது முறை, பங்குச் சந்தையில் பட்டியிலிட்டு பொது மக்களுக்கு பங்குகளை விற்றுப் பணம் சேர்ப்பது. இதன்படி, பொது மக்களின் ஆர்வத்தையும் சந்தையின் தேவையையும் பொறுத்து பங்குகளின் விலை மேலேயோ கீழேயோ போகும்.
எனது இரண்டு ஆரம்ப நிறுவனங்களும் பெரிய பொது நிறுவனங்களால் வாங்கப்பட்டன. அதன் மூலம் சந்தையின் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க முடிந்தது. ஆனால் இப்படி ‘பொது நிறுவனமாதல் மூலம்’ கோடீஸ்வரர்களானவர்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கு மைக்கிறோசொவ்ற், அப்பிள் தொடக்கம் கூகிள், அமெசோன், முகநூலென்று பல உதாரணங்கள் உண்டு. இவற்றை மனதில் வைத்து உங்கள் வெற்றிப் பயணத்தை தொடங்கலாம்.
தொடரும்.