Arts
11 நிமிட வாசிப்பு

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 07

June 1, 2024 | Ezhuna

இலங்கை முஸ்லிம்கள் குறித்து பண்பாட்டு மானிடவியல் ரீதியான ஆய்வுகளை மானிடவியல் ஆய்வு மரபுகளைப் பின்பற்றி முறையான பரந்துபட்ட வகையில் மேற்கொண்டவர் பேராசிரியர் டெனிஸ் மெக்கில்ரே. அமெரிக்கரான டெனிஸ் மெக்கில்ரே கொலராடோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைப் பேராசிரியர். இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த பரந்துபட்ட மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்ட மேற்கத்தேயப் பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர் மெக்கில்ரே. குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பண்பாட்டு மானிடவியல் மரபுகள், தொன்மங்கள், பண்பாட்டுக் கூறுகள் குறித்த விரிந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனை உலகப் பரப்புக்குக் கொண்டு சென்றவர் என்ற வகையில் இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, மானிடவியல் மரபுகள், தொன்மங்கள் பற்றிய அவரது சமூகவியல் நோக்கிலான ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ‘டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு‘ எனும் தலைப்பில் வெவ்வேறு உப தலைப்புகளுடன் வெளிவரும்.

கிழக்குப் பிராந்தியத்தில் தமிழரும் சோனகரும் : ஒரு முக்கியமான சோதனை

இன்று, தமிழ் அரசியல் தலைமையின் புறக்கணிப்பு மற்றும் அவமரியாதைச் செயல்கள் காரணமாகவும், தங்களின் அரசியல் தலைவர்களின் வழிகாட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இலங்கைச் சோனகர்கள் தங்களை ஒரு தனித்துவமான இனம் மற்றும் மதக்குழுவினர் என்ற தெளிவான பிம்பத்தைப் பெற்றுள்ளனர்.

1980 களின் முற்பகுதியில் ஈழப் போர் வெடித்ததில் இருந்து, இனவாத நலன்களைப் பிரிதிநிதித்துவப்படுத்திய சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள், தமிழ் பேசும் மக்களுக்கிடையில் ஐக்கியம் உருவாகுவதைத் தடுப்பதற்காக சோனகர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் உள்ளூர் வன்முறையைத் தூண்டி, தீவிரப்படுத்துவதன் மூலம் இந்த பிளவை ஆழப்படுத்த முயன்றன (அலி 1986-87: 164; UTHR அறிக்கை 7, 1991; தனிப்பட்ட களப்பணி தரவு 1993 மற்றும் 1995).

1990 முதல், விடுதலைப் புலிகள் தொழுகையின் போது முஸ்லிம்களை படுகொலை செய்ததோடு, யாழ்ப்பாணம் மற்றும் தீவின் வடக்கிலிருந்து முழு முஸ்லிம் மக்களையும் கட்டாயமாக வெளியேற்றினர் (ஹஸ்புல்லா 1996; சிவராம் 1992). இவை அனைத்தும் கிழக்கில் சோனகரும், தமிழர்களும் கிராம மட்டத்தில் தொடர்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிற வரலாற்று ரீதியாக வேரூன்றிய மொழி, சமூக அமைப்பு மற்றும் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றிலிருந்து இந்த மக்களை தூரப்படுத்தவும் காரணமாகின்றன. குறிப்பாக கிழக்குக் கடற்கரையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகளவான முஸ்லிம்களும் தமிழர்களும் நெல் விவசாயம் செய்யும் அயலவர்களாக வாழ்கின்றனர். அவர்களின் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் வரம்புகளை சோதிக்கும் வகையில் அதே பொருளாதார மற்றும் அரசியல் வளங்களுக்காகப் பலமாகப் போட்டியிடவும் செய்கின்றனர்.

தமிழ்ப் பிரிவினைவாத இயக்கத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இங்குதான் தீர்மானிக்கப்பட வேண்டும்; அதாவது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள துணைப் பிரதேசங்களில் வாழும் கரையோர முஸ்லிம்கள் தமிழ் பேசும் தாயகத்திற்கான தமிழ்த் தலைமையிலான இயக்கத்தில் சேருவதற்கு ஒப்புக்கொள்வார்களா? அல்லது சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களுக்குள்ளேயே இன்னும் சிறுபான்மையினராக இருக்க விரும்புவார்களா?

அம்பாறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய முஸ்லிம், மற்றும் இந்து விவசாய நகரமான அக்கரைப்பற்றில் உள்ள தமிழர்கள் மற்றும் சோனகர்களிடையே மேற்கொண்ட (1969-71, 1975, 1978, 1993, 1995) எனது களப்பணி அடிப்படையிலும், மற்றும் சிறு அளவில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் ஏனைய பகுதிகளில் மேற்கொண்ட குறுகிய எனது களப்பணி அடிப்படையிலும் இந்தப் பிராந்தியத்தில் வாழும் தமிழ் – முஸ்லிம் மக்களின் கலாசார உறவுக்கான ஒரு உரு வரைவினை என்னால் முன்வைக்க முடியும்.  

இனவரைவியல் நிகழ்காலத்தில் எழுதப்பட்டாலும், நான் வழங்கும் விளக்கம் பெரும்பாலும் 1970 களில் நான் செய்த களப்பணியை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போர் மற்றும் சண்டைகள் இருந்தபோதிலும், 1993 மற்றும் 1995 இல் இப்பகுதியில் நிகழ்த்திய இரண்டு குறுகிய ஆய்வுப் பயணங்களில், தமிழ் மற்றும் சோனகத் தாய்வழிச் சமூக அமைப்பு மற்றும் பிரபலமான மதத்தின் முக்கிய வடிவங்கள், இன்னும் முடிந்தவரை எங்கெல்லாம் மதிக்கப்படுகின்றன என்பதை என்னால் சரிபார்க்க முடிந்தது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடிகள், இறப்புகள், காணாமல் போதல், இராணுவ ஆட்சேர்ப்புகள் மற்றும் வெளிநாடுகளுக்கான புலப்பெயர்வுகள் போன்றன சாதாரண திருமண முறைகள் மற்றும் பொது வழிபாட்டு முறைகள் அனைத்திலும் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் இங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

ஈழப்போர்களின் விளைவாக எத்தகைய நீண்ட கால சமூக மற்றும் கலாச்சார மாற்றங்கள் உருவாகலாம் என்பதை தீர்மானிக்க இன்னும் விரிவான களப்பணி அவசியமாகும். எவ்வாறாயினும், 1970 களில் இருந்து எனது அடிப்படை இனவரைவியல் ஆய்வானது, 1980 களின் பிற்பகுதியில் தமிழ் – முஸ்லிம் உறவானது தீவிரமான இனவாத நிலைக்குட்பட்டு துருவ முனைக்குச் செல்லு முன்னர் இருந்த உறவின் நிலையான வடிவத்தையும், பதட்டத்தையும் புரிந்துகொள்ள உதவும்.

கிழக்குச் சோனகரின் வரலாறு, பொருளியல் மற்றும் குடியிருப்பு

மட்டக்களப்புக்கு புலம்பெயர்ந்த சோனகரை மட்டக்களப்பிலே மீள்குடியேற்றம் செய்தது பற்றிய 1626 ஆம் ஆண்டின் செனரத் மன்னனின் பலவீனமான ஆவணப்பதிவைத் தவிர, கிழக்குக் கரையில் ஆரம்பகால சோனக சமூகம் குறித்த உறுதியான வரலாற்றுப் பதிவுகள் எதுவும் இல்லை. இருப்பினும் மத்தியகால கடல் வர்த்தகத்தில் காணப்பட்ட முஸ்லிம்களின் ஆதிக்கம் காரணமாக அவர்கள் அப்பகுதிக்கு போர்த்துகீசிய வருகைக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே வந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். இந்த விஷயத்தில் இலங்கையின் புலமை ஆய்வுகள் மிகவும் குறைவு.

மத்திய கிழக்கிலிருந்து நேரடியாக இங்கு வந்த நேரடி அரபு வம்சாவளியினரான ‘மிதக்கும் பலகை’ புனித மனிதர்களின் அதிசயக் கதைகளைப் பற்றியும் இங்கு கேள்விப்பட்டேன். தமிழ் முக்குவர்களுக்கும் அவர்களின் போட்டியாளர்களான திமிலர்களுக்கும் இடையே பிராந்திய ஆதிக்கத்திற்காக நடந்த சாதிப் போரை விவரிக்கும் ஒரு பிரபலமான நாட்டுப்புற கதையும் உள்ளது. இதில் முக்குவர்கள் உள்ளூர் முஸ்லிம்களின் உதவியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்களின் வெற்றிக்கான வெகுமதியாக, முஸ்லிம்கள் தமிழ் மனைவிகளை சாமர்த்தியமாக தேர்ந்தெடுத்தனர். தாய்வழி பரம்பரையின் உள்ளூர் அமைப்பின் கீழ், தங்கள் வாழ்க்கைத் துணைவர்கள் தங்களுடன் நிலத்தையும் கொண்டு வருவார்கள் (கத்ரமேர் 1934).

அதன் வரலாற்றுத்தன்மை பிரச்சனைக்குரியதாக இருந்தாலும், கடந்த காலங்களில், உள்ளூர் தமிழர்களுக்கும் (குறிப்பாக ஆதிக்க சாதி முக்குவர்களுக்கும்) முஸ்லிம்களுக்கும் இடையே நல்லதொரு கலப்புத் திருமணம் இருந்ததை இந்த பிரபலமான புராணக்கதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது. இன்று தமிழர்கள் மற்றும் சோனகர்களின் திருமணம் மற்றும் வம்சாவளி முறைகளில் காணப்படும் ஒத்த தன்மைகள் இந்தப் பார்வைக்கு பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஆதரவைக் கொடுக்கிறது (சலீம் 1990: 29). சில இந்துத் தமிழர்கள், குறிப்பாக முக்குவர் சமூகத்தைச் சேர்ந்த மிகவும் வறிய மற்றும் ஒடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதற்கான வரலாற்று ஆதாரம் என்னிடம் இல்லை என்றாலும், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள முக்குவர் மீனவ சாதியினரிடையே கத்தோலிக்க மதமாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகையதொரு நிலைமை முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் (மோரே 1993b: 78; ராம் 1991).

மட்டக்களப்பு பிராந்தியத்தின் காலனித்துவத்திற்கு முந்தைய முக்குவர் தலைவர்களின் கீழ், சோனகர்கள் ஒரு கீழ்நிலை சமூக நிலையைக் கொண்டிருந்ததாகவே தெரிகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே சோனகர்கள் வணிகம், மாட்டு வண்டிப் போக்குவரத்து, கைத்தறி நெசவு, தச்சு மற்றும் கடலோர மீன்பிடி போன்றவற்றில் வெற்றிகரமான சிறப்புத் தேர்ச்சி கொண்டவர்களாக காணப்படுகிற போதிலும், வௌ்ளாளர் மற்றும் முக்குவ உயர்சாதி ஆதிக்கம் நிலவும் தமிழ் சமூக அமைப்பில் அவற்றின் ஒட்டுமொத்த தரமும் செல்வாக்கும் குறைவாகவே இருந்தது.

முக்கிய இந்துக் கோவில்களின் தாய்வழி அடிப்படையிலான சடங்குகள் மற்றும் படிநிலைச் சாதிய சடங்குகளிலும் சோனகர்கள் பரம்பரையாக இணைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்கள், 20 ஆம் நூற்றாண்டு வரை சில பகுதிகளில் (எ.கா., கொக்கட்டிக்கோலை, திருக்கோவில்) தொடர்ந்திருந்ததாகத் தெரிகிறது. முஸ்லிம் மத மற்றும் இன உணர்வுகள் பரவலடைந்தமை அவர்கள் இத்தகைய சடங்குகளைத் துறப்பதற்கு வழிவகுத்தது. உயர்சாதி தமிழ் இந்துக் கண்ணோட்டத்தில், இந்தக் கடமைகள், அதாவது கோயில் சடங்குகளின் சோனகப் ‘பங்குகள்’ (shares) ஒரு சுமையாக அல்லது இழிவான சேவைக் கடமையாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக ஒரு சலுகையாகவும் மரியாதையாகவும் பார்க்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.

கிழக்குக் கரையோர, தமிழ் மற்றும் சோனக நகரங்களினதும், கிராமங்களினதும் தற்போதைய வடிவம் இருசாராரும் ஓரிரு மைல்களுக்குள் வாழ்வதாக அமைந்திருக்கிறது. அதேநேரம், உள்ளூரில் சில இடங்களில் தமிழ் – முஸ்லிம் பிரிவுகளும் உள்ளன. தமிழ் மற்றும் சோனக விவசாயிகள் பலர் கரையோர நகரங்களில் உள்ள வீடுகளில் இருந்து தங்கள் வயல்களுக்கு தினசரி பயணிக்கின்றனர். அவர்களின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் நீர்ப்பாசனமும், நெற்செய்கையும் ஆகும். கிழக்குக் கரையோரத் தமிழர்களும் சோனகர்களும் அருகாமையில் உள்ள வயல் நிலங்களில்தான் பயிரிடுகின்றனர். ஆனால் அவர்களது வீடுகள் இன ரீதியாகப் பிரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ளன. தமிழர்களும் முஸ்லிம்களும் சில சமயங்களில் தெருவின் எதிரெதிர் பக்கங்களில் வசிக்கலாம். அத்தோடு அவர்களது வீடுகள் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுவதில்லை. இந்த இனப் பிரிவினை பொதுவாக தேர்தல் வார்டுகள் அல்லது உள்ளூர் மத்திச்சமார் (Headmen) பிரிவுகளுடன் ஒத்துப்போகிறது. சில சமயங்களில் ஒரு குறுகிய மணல் பாதையால் மட்டுமே இரு சாராரும் பிரிக்கப்படுகின்றனர். தமிழர்கள் மத்தியில், இந்து மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட குறிப்பிட்ட பரம்பரைத் தொழில்களுக்காக (எடுத்துக்காட்டாக அடித்தட்டு சாதியப் பிரிவினரான பறையடிப்பவர்களுக்காக) ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட தெருக்கள், வார்டுகள் மற்றும் தனித்தனி குக்கிராமங்கள் போன்ற சாதிப் பிரிவினை முறை காணப்படுகிறது (McGilvray 1983). ஆனால், முஸ்லிம்கள் – சிறியளவில் முடிதிருத்துதல், விருத்தசேதனம் போன்ற வேலைகளைச் செய்கிற (ஒஸ்தா) ஓரளவு குறைந்த சமூக அந்தஸ்து கொண்ட குழுவைத் தவிர – இந்துக்களுக்கு இணையான தமது சொந்த சாதி வரிசைமுறையை உருவாக்கவில்லை. அவர்கள் மத்தியில் மதரீதியாக சற்று அந்தஸ்துக் கூடிய மௌலானா குடும்பங்களும், (சயீதுகள், நபியின் பரம்பரை வழித்தோன்றல்கள்) மற்றும் சில உள்ளூர் பாவாக்கள், மற்றும் சூஃபிகளும் சமூகரீதியாக பெரிதும் மதிக்கப்பட்டனர் (Aniff 1990; Mahroof 1991; McGilvray 1988b).

1993 மற்றும் 1995 இல் மேற்கொள்ளப்பட்ட களப்பணிகளிலிருந்து சூஃபித்துவம் நடுத்தர வர்க்கத்தினரிடையே பிரபலமடைந்து வருகிறது என்பதை உணர முடிந்தது. கேரளா மற்றும் லட்சத்தீவு தீவுகளைச் சேர்ந்த ஷேக்குகள் காத்தான்குடி, கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் தீவின் பிற இடங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு ரிபாய் ஒழுங்கின் தனித்துவமான திக்ரைக் கற்பிக்கிறார்கள் (McGilvray 1997a).

மேற்கில், உலர் வலயக் காடுகளில் ஒரு காலத்தில் வேட்டைக்கார வேடுவர்களும், ஏழை சிங்களச் சேனை விவசாயிகளும் (பியரிஸ் 1965) ஐதாக வசித்தனர். இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாவது விவசாய குடியேற்றத் திட்டமான ‘கல் ஓயா’ திட்டத்தினால் நீர் பாய்ச்சப்பட்ட புராதன தீகவாபி பௌத்த ஸ்தூபியை ஒட்டிய நிலங்களில், தற்போது 150,000 இற்கும் மேற்பட்ட சிங்கள விவசாயிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள அனைத்து இன எல்லை மாவட்டங்களிலும் உள்ளதைப் போலவே இங்கும், நன்கு நிறுவப்பட்ட தமிழ் பேசும் மாவட்டங்களில், வெற்றிகரமாக சிங்கள மக்களை உடனடியாக அருகாமையில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் சர்வதேச அளவில் நிதியளிக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்துகிறது. அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் ஆழமான மக்கள்தொகை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு தமிழர்களும் சோனகர்களும் சிங்களவர்களிடம் பெரும்பான்மை அந்தஸ்தை இழந்துள்ளனர் (கேர்னி 1987).

எனவே தமிழ் பேசும் பெரும்பான்மை நிலமான வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம்களுக்கான அரசியல் வசதிகள் செய்துகொடுப்பதன் மூலம் இந்த நிலத்தின் தனித்துவத்தை இரு சாராரும் (தமிழரும் – சோனகரும்) இணைந்து காப்பாற்ற முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3809 பார்வைகள்

About the Author

ஜிஃப்ரி ஹாசன்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜிஃப்ரி ஹாசன் அவர்கள் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’, ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பண்பாடு, சமூகவியல், ஈழ இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலான கருபொருள்களில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • July 2024 (1)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)