இலங்கைச் சோனகத் தலைமையானது, ஒரு தனித்துவமான இலங்கை-அரபு அடையாளத்தை (Ceylonese – Arab identity) வளர்ப்பதற்கான நோக்கில், இலங்கைச் சோனகர் மத்தியில் வளர்ந்துவந்த பொது விசுவாசத்தை புறக்கணித்தது. அமீர் அலி குறிப்பிட்டுள்ளபடி, இந்த நூற்றாண்டின் (இருபதாம்) தொடக்கப் பகுதியில், இலங்கைச் சோனக உயர் குழாத்தினர், எகிப்துக்குத் திரும்புவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த, நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளரான அரபி பாஷாவின் மீது ஒருவித நாடக விசுவாசத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தனர் (அசாத் 1993: 42-43). அத்துடன் உஸ்மானிய கிலாபத்தின் (துருக்கிய/ ஒட்டோமன் அரசு) மீதான பெருமிதத்திலும் இருந்தனர். டமஸ்கஸ்ஸிலிருந்து மதீனா வரையிலான ஹெஜாஸ் ரயில் பாதையை கட்டுவதற்கு அவர்கள் நிதி நன்கொடை அளித்ததை தங்களுக்கும் பெருமிதமாகக் கருதிக் கொண்டனர். பிரித்தானிய அரசுக்கும் அர்ப்பணிப்புடன் இருந்தனர். அதேநேரம், இலங்கை தேசியவாதத் தலைவர்களிடம் தங்களின் நம்பகத்தன்மையை ஆழமாக சமரசமும் செய்தனர்.
இலங்கைச் சோனகரைப் போலவே, தமிழ்நாட்டின் மரக்காயர் முஸ்லிம்களும், கேரளாவின் உயர் குழாத்தினரான மாப்பிளாக்களும் தங்கள் ஆதிகால இந்தோ-அரபு வம்சாவளியைப் பற்றி பெருமை பேசினர். ஆனால் இலங்கைச் சோனகர்கள், இலங்கையின் முழு உரிமை பெற்ற பூர்வ குடிமக்கள் என்ற அவர்களது உரிமைகளை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என்ற காரணத்தினால் அத்தகைய தென்னிந்திய ‘இனத்துடன்’ இணைவதற்கு தயங்கினார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் பெருந்தோட்டப் பொருளாதார விரிவாக்கத்தின் போது, ஏற்றுமதி/இறக்குமதித் துறைகளில் இருந்தும், பிற உள்ளூர் சந்தைகளிலிருந்தும் குடியேறிய தென்னிந்திய முஸ்லிம்கள் (கரையோரச் சோனகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்) இலங்கை முஸ்லிம் வர்த்தகர்களை திறம்பட வெளியேற்றினர். இது அவர்கள் மீது இலங்கை முஸ்லிம்களுக்கிருந்த வெறுப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனாலும் இறைபக்தி மற்றும் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைக்கு முன்மாதிரியாக விளங்கிய இந்த வெற்றிகரமான இந்திய முஸ்லிம் சகோதரர்கள் குறித்து இலங்கைச் சோனகர் ஒருவித இரட்டை நிலைப்பாட்டையே வெளிப்படுத்தினர். சில சமயங்களில் கொழும்பு பத்திரிகைகளில் கூட அவர்களைப் பாதுகாத்தனர். ஆனால் அதே நேரத்தில் அவர்களின் புறமொதுக்கும் வர்த்தக நடைமுறைகள், அவர்களின் கூர்மையான வர்த்தகப் பரிவர்த்தனைகள், மத விசயங்களுக்கான அவர்களின் அதிகரித்த செலவுகள் குறித்து வெறுப்பும் இருந்தது (அலி 1980: அத் 6-7,1981 b: 14). இந்தப் போட்டியின் எதிரொலிகளை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொழும்பில் உள்ள பள்ளிவாசல்களில் மலாயர்களுக்கும், கரையோரச் சோனகர்களுக்கும் இடையில் நடந்த தங்களது உரிமைகள் குறித்த பொறாமைச் சச்சரவுகள் பற்றிய பதிவுகளில் காணலாம். அவ்வாறே 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏனைய இலங்கை இனக்குழுக்களும் அப்போது மேற்கிளம்பி இருந்த இரு முக்கிய ஐரோப்பிய கருத்தியல்களான ‘மரபினம்’ (race) மற்றும் தந்தை வழி ‘இரத்த உறவு’ ஆகியவற்றின் அடிப்படையில் தங்களது அடையாளங்களை வடிவமைத்துக் கொண்டிருந்தனர். ஐ.எல்.எம். அஸீஸ் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வெற்றிகரமான இனச் சிறுபான்மையினராக மேம்பட்ட பம்பாயின் பார்சிகளை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார் (அஜீஸ் 1907: 15).
இறுதிப் பகுப்பாய்வில், இலங்கைச் சோனகர்கள் இலங்கை பேர்கர்களின்/ பறங்கியர்களின் (Burghers) உத்தியைப் பின்பற்றினர். அவர்கள் தங்களின் இன அடையாளமாக தாய்வழி லூசோ-சிலோனிஸ் வம்சாவளி மரபைத் துறந்து தூரத்து தந்தைவழி டச்சு ‘இன’ வம்சாவளியை வலியுறுத்தினர்.
வீட்டில் பேசும் போதும் மற்றும் பாடும்போதும் மிகவும் உயிரோட்டமான வடமொழியை (போர்த்துகீசிய கலப்பு மொழி) பயன்படுத்திய அவர்கள் சாகும் தறுவாயிலிருந்த டச்சு மொழியை தங்களின் பூர்வீகப் பெருமிதமாக புகழ்ந்துரைத்தனர். வடக்கு ஐரோப்பிய குடும்ப மூலத்தை தமது வரலாறாக முன்வைத்த ஓர் இனத்துவ அமைப்பின் மூலம் தங்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான அரசியல் சூழலையும் வலியுறுத்தினர். பின்னர், 1944 இல் செனட்டர் ஏ.ஆர்.ஏ. ராசிக் (பின்னர் சேர் ராசிக் ஃபரீத்) அவர்களினால் உருவாக்கப்பட்ட சோனக இஸ்லாமிய கலாசார இல்லமானது, டச்சு பேர்கர் யூனியன் பேர்கர்களுக்காக 1908 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வந்த வரலாற்று கட்டுரைகள் போன்று, சோனக சமூகத்தின் இனத்துவ மூலம் குறித்த வரலாற்றுக் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கியது (ஜாக்சன் 1990; மரிக்கார் மற்றும் பலர்., eds. 1976; McGilvray 1982a; Moors’s Islamic Cultural Home 1965, 1970, 1978, 1983, 1994; Roberts et al. 1989).
எவ்வாறாயினும், 20 ஆம் நூற்றாண்டில், ‘இலங்கைச் சோனகர்’ அடையாளத்தின் சமூகக் கட்டுமானம் சவாலுக்குட்படுத்தப்படவில்லை அல்லது சவால் நிலையானதாக இருக்கவில்லை (இஸ்மாயில் 1995). சோனகர்களின் தோற்றம் கலவையானதும், பன்மையானதுமாக இருந்தபோதிலும், அவர்களின் மரபினம் குறித்து ‘அரபு எதிர் தமிழ்’ எனும் இருவகை இன மூலங்களை முன்வைத்துக் கிளம்பிய விவாதம், அரசியல் போட்டித்தன்மையுடன் பல ஆண்டுகளாக நீடித்தது.
இருப்பினும், நூற்றாண்டின் நடுப்பகுதியில், முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே ஒரு குழு தமது இனப்பெயராக ‘மூர்’ என்ற அடையாளத்தையா அல்லது ‘முஸ்லிம்’ என்கிற அடையாளத்தையா, முதன்மைப்படுத்துவது என்ற நெடிய சர்ச்சை ஒன்றை தீவிரமாக முன்னெடுத்தது. தூய தனி அரேபியர்களை மட்டும் குறிக்கவே போர்த்துக்கேயர் மூர் எனும் பதத்தைப் பயன்படுத்தினர். இலங்கையின் சுதேச முஸ்லிம்களுக்கு இந்தப் பதத்தைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளும் எழுந்தன (அஸீஸ் 1907: 4; மோகன் 1987: 27-31, 117; யூல் மற்றும் பர்னெல் 1903: 502). அதேநேரம், ‘முஸ்லிம்’ என்ற அடையாளமிடலுக்கு ஆதரவானவர்கள் மொழி, இனம் போன்றவற்றைப் புறக்கணிக்கிற ஒரு பரந்த இஸ்லாமிய மத அடையாளத்தை வலியுறுத்துகின்றனர். மலாயர்கள், கரையோர சோனகர்கள் போன்றோருக்கும் இது தற்செயலாக இடமளிக்கிறது.
‘சோனகர் எதிர் முஸ்லிம்’ என்கிற இந்த பரபரப்பான விவாதம் இந்த இரு சாரராலும் நடத்தப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் பெயர்களில் பிரதிபலித்தது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இரண்டு போட்டியாளர்களாக செயற்பட்ட மேற்குக் கரையோர இரத்தினக்கல் வர்த்தக வம்சங்களின் அரசியல் முன்னணியாக செயல்பட்ட மாக்கான் மார்க்காரின் ‘Ceylon Moor’s Association’ஐயும், அப்துல் கபூரின் ‘Ceylon Muslim League’ஐயும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த இரண்டு செல்வந்த வம்சங்களின் தலைவர்களும் பொறாமையுடன் பிரித்தானிய அரசு வழங்கும் பெருந்தகைப் பட்டங்களுக்கும், ‘சேர்’ பட்டத்துக்கும் போட்டியிட்டனர். கொழும்பு மருதானைப் பள்ளியின் நிர்வாகத்துக்கும் மற்றும் சூஃபி சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கும் இலங்கை ஷாதுலிய்யா ஒழுங்கிற்கு மாக்கான் மார்க்கார் தலைமை தாங்கினார். அப்துல் கஃபூர் காதிரிய்யா ஒழுங்கை வழிநடத்தினார் (டி ஜோங் 1986; மரூஃப்: சமரவீர 1979: 252; வாக்னர் 1990: 84-117). 1945 இல் ஒரு கட்டத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் முஸ்லிம் நம்பிக்கையில் இருந்து விலகி தன்னை ‘மூர்’ என்று சொல்லிக் கொள்ளும் எவரையும் வெளியேற்றும் ஃபத்வாவை அறிவிக்கப் போவதாக அச்சுறுத்தினர். இது போட்டியாளரான ராசிக் ஃபரீத் தலைமையிலான ‘Moor’s Association’ஐ இழிவுபடுத்தும் அரசியல் தந்திரம் என்பது தெளிவாகத் தெரிந்தது (வாக்னர் 1990: 143). Moor’s Islamic Cultural Home இற்கு ராசிக் ஃபரீத் தேர்ந்தெடுத்த திறமையான பெயர் இலங்கை சோனகரின் மரபின, மத மற்றும் இன அடையாளத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.
முதலாம் உலகப் போருக்கும் 1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததிற்கும் இடைப்பட்ட காலத்தில் சோனகரின் அரசியல் நிலவரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டது. அவர்களின் சுதந்திரத்திற்கு முந்தைய வரலாற்றின் மிகவும் பயங்கரமான அத்தியாயமான 1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் விளைவினாலேயே இந்நிலை ஏற்பட்டது. முஸ்லிம் கடைக்காரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக சிங்கள வன்முறைகள் நாடளாவிய ரீதியில் வெடித்ததற்கு பின்னணியாக அமைந்த பல காரணங்கள் குறித்து இன்னும் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.
சிங்கள பௌத்த மறுமலர்ச்சி மற்றும் பிரித்தானிய எதிர்ப்பு உணர்வு (Roberts 1994a), அல்லது முஸ்லிம் வர்த்தக நடைமுறைகளுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த கரையோர சோனகரில் ஒரு சாராரின் தீவிரமான இஸ்லாமியப் பித்துப்பிடித்த செயற்பாடுகள் (அலி 1980, 1981 பி) போன்ற மாதிரியான காரணங்களால் தூண்டப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் ஆங்கிலேயர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. துருக்கிய கிலாஃபத்தின் சுல்தானை உலக முஸ்லிம்கள் அனைவருக்குமான தலைவராக முன்வைக்கும் பிரித்தானிய அரசுக்கு எதிரான அரசின் தோற்றப்பாடாக மேற்கிளம்பிய இந்த நிலைப்பாட்டுக்கான ஆதரவை இலங்கை முஸ்லிம்கள் அடக்கி வாசிக்கவும், பிரித்தானிய அரசின் பாதுகாப்புக்கு முஸ்லிம்களிடம் இருந்து நன்றி விசுவாசத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனும், பிரித்தானியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக அந்தச் சந்தர்ப்பத்தில் செயற்பட்டது.
உண்மையில், இங்கிருந்து சுமார் 400 மைல் தொலைவிலுள்ள கேரளாவில், கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் (1992) பாரிய வன்முறைகளுடனும், இரத்தக்களரியுடனும் இடம்பெற்ற பிரிட்டிஷ் எதிர்ப்பு, இந்து விரோத ‘மாப்பிளாக் கிளர்ச்சிகள்’ போன்ற நடவடிக்கைகளை இங்குள்ள சோனகரிடம் கற்பனை செய்து பார்க்கவும் முடியாதளவிற்கு பிரித்தானிய இராஜ்ஜியத்தின் மீதான சோனகத் தலைமைகளின் விசுவாசம் காணப்பட்டது (இந்த விசுவாசம் மற்றைய இலங்கைச் சமூகங்களிலும் காணப்பட்டது). 1915 ஆம் ஆண்டு சிங்கள வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை, பொன்னம்பலம் இராமநாதன் தலைமையிலான தமிழ் உயர் குழாத்தினர் மீதான சோனகரின் மனக்கசப்புக்கும் காரணமாகியது. பிரித்தானிய நீதித்துறைக்கு எதிராக சிங்கள வன்முறையாளர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கை தேசியவாத இயக்கத்தில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்ள பொன்னம்பலம் இராமநாதன் முயன்றார். இராமநாதனின் இச்செயற்பாடு சோனகருக்கு ஆழமான மனக்காயத்தை உண்டு பண்ணியது. முஸ்லிம்களின் பார்வையில், இராமநாதனின் நிலைப்பாடு ‘தமிழ் பேசும்’ சமூக ஒற்றுமையின் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்தியது. பின்னர் 1950, 60 களில் முக்கியமான சந்தர்ப்பங்களில் இந்நிகழ்வு சோனக அரசியல்வாதிகளால் கசப்பாக நினைவுகூரப்பட்டது (ஹசன் 1968: 101; சிவத்தம்பி 1987: 204).
தொடரும்.