1920 கள் மற்றும் 1930 களில் இலங்கைச் சோனகர்கள் அகில இலங்கை முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கைச் சோனகர் சங்கம் என இரண்டு போட்டி அரசியல் வம்சமாகப் பிளவுபட்டனர். இவ்விரு அரசியற் சங்கங்களின் தலைமைகளான T.B. ஜாயா மற்றும் சேர் ராசிக் ஃபரீட் ஆகிய இருவருமே புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டசபையில், சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் ‘50 : 50’ அமைய வேண்டும் என்ற வீணான கோரிக்கையை முன்வைத்த இலங்கைத் தமிழ்த் தலைமைகளையே ஆரம்பத்தில் பின்பற்றினர். இதனால் இவர்களின் பின்னால் அணி திரள முடியாமல் போனது (ரஸ்ஸல் 1982: அத்தியாயம் 12). எவ்வாறாயினும், 1936 தேர்தலில் அவர்களின் அனைத்து வேட்பாளர்களும் மோசமான தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அவர்கள் சிங்களப் பெரும்பான்மை ஆதிக்கத்தின் ஆற்றலை சரியாக விளங்கினர். இதனால் சோனகத் தலைமை, தந்திரோபாய ரீதியாக தங்கள் ஆதரவை சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு மாற்றியது. சோனகருக்கும், தமிழ் மொழிக்கும் இடையே அவசியமான இணைப்பைக் கூட அது வெளிப்படையாக மறுத்தது.

1948 சுதந்திரத்தின் போது சிங்கள முன்னணிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில், மூத்த முஸ்லிம் தலைவர்கள் (டி.பி. ஜயா மற்றும் ராசிக் ஃபரீத்) இருவருமே தங்களுடைய பட்டய அங்கத்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர் (கே.எம். டி சில்வா-1986a, 1986b).
புதிதாக நிறுவப்பட்ட பாராளுமன்றத்தில் பெரும்பாலான முன்னணி இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களிடத்தில் நல்லெண்ணத்தைக் காப்பாற்றும் எதிர்பார்ப்புடன், இறுதியில் அணிகளை உடைத்து, மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் 780,000 இந்தியத் தோட்டத் தமிழர்களின் வாக்குரிமையை ரத்துச் செய்ய, யூ.என்.பி எம்.பி.க்களுடன் இணைந்து வாக்களித்தனர். இதனால் இரு அணிகளாக தமிழர்கள் உடைந்தனர். அதே போன்று இலங்கையில் இன்னும் வியாபாரம் செய்து வந்த 35,000 இந்திய முஸ்லிம்களின் வாக்குரிமையை ரத்துச் செய்ய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள எம்.பிக்களுடன் இணைந்து வாக்களித்தனர். தீவின் தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை வளர்ப்பதில் டி.எஸ். சேனநாயக்கா அடைந்த வெற்றிக்கு இந்த இரண்டு நடவடிக்கைகளும் சாட்சியமளிக்கின்றன. அத்துடன் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், தேர்தலில் சிங்கள மேலாதிக்கம் அதிகரித்தது (அலி 1986-87: 155-56; இஸ்மாயில் 1995: 71-72, 84-85; மற்றும் குறிப்பாக சாஸ்திரி 1998).
1956 தேர்தல்களில், கிழக்கில் ஒரு தற்காலிகத் தமிழர் – சோனகர் கூட்டாட்சிக் கட்சிக் கூட்டணியைத் தவிர, சுதந்திரம் முதல் 1980 களின் நடுப்பகுதி வரை, சோனகர்கள் இரண்டு பெரிய சிங்களத் தேசியவாதக் கட்சிகளான UNP மற்றும் SLFP ஆகியவற்றிற்குள் கூட்டணி அரசியலுக்கான ஒரு மூலோபாயத்தைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்தனர். சில சோனக அரசியல்வாதிகள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததோ அந்தக் கட்சியில் இணைவதற்கான டிக்கெட்டை எப்போதும் உடன் வைத்திருந்தனர் (மோகன் 1987: 47; பட்னிஸ் 1979).

சுதந்திரத்தின் ஆரம்பத் தசாப்தங்களில், முன்னணி சோனக அரசியற் தலைமையாக வெளிப்பட்ட சேர் ராசிக் ஃபரீத், 1956 இல் சிங்களம் மட்டும் தேசிய மொழிக் கொள்கையை வெளிப்படையாக அங்கீகரித்தார். அவரது உரைகளில், கல்வியிலும் உள்ளூர் நிர்வாக நியமனங்களிலும் சோனகருக்கு எதிரான தமிழ்ப் பாகுபாடு பற்றியும், சோனகருக்கு குறைந்தளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதாகவும், குற்றம் சாட்டினார். 1956 இல் அரச கரும மொழி விவாதத்தின் போது, தமிழ் எம்.பி ஒருவர், அவரை சிங்களப் பிரிவினையாளர் என்று காரசாரமாகக் குற்றம் சாட்டினார். தன்னையும் சோனக சமூகத்தையும் ‘தமிழ் மதம் மாறியவர்கள்’ என்று ஒருபோதும் கருத முடியாது என்று கூறி ஃபரீத் சொல்லாட்சியாக மேசையைத் திருப்பினார். 1888 – 1907 இல் நிகழ்ந்த பழைய இராமநாதன் – அஸீஸ் ‘இனவியல்’ வாதத்தின் சூடான மறுபதிப்பு உடனடியாக பாராளுமன்றத்தின் அரங்கில் நடந்தது (ஹசன் 1968: 96-106). கிங்ஸ்லி டி சில்வா வெளிப்படையாகக் குறிப்பிடுவது போல், ‘இலங்கையில் தமிழ் – முஸ்லிம் போட்டி என்பது ஒரு அரசியல் யதார்த்தம். மேலும் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களை ஆதரிப்பதற்காக, முஸ்லிம்கள் தங்கள் எதிர்வினையை ஆற்றி இருக்கிறார்கள் (கே.எம். டி சில்வா 1986a: 449).
இந்த அர்த்தத்தில் பார்த்தால், சுதந்திர இலங்கையில் உள்ள சோனக அரசியல், தமிழக முஸ்லிம்களினதும், கேரள மாப்பிளாக்களினதும் பிரதான பெரும்பான்மைக் கட்சியுடன் இணையும் மூலோபாயத்தை பின்பற்றத் தொடங்கியது எனலாம். ஆனால் இவை அனைத்தும் கவனமாக ‘தமிழ் அல்லாத’ கொழும்புச் சோனக இனத்தின் கீழேயே கட்டமைக்கப்பட்டது. டி சில்வாவும் ஏனையோரும் முஸ்லிம்களின் கலாசாரத்தை, தமிழர்கள் போலன்றி, சிங்களச் சமூகத்தில் இணைத்துக் கொள்வதையும், அவர்களின் நடைமுறைச் சமய அரசியலையும், ஒரு ‘நல்ல’ சிறுபான்மையினரின் அடையாளமாகக் கருதுகின்றனர் (கே.எம்.டி. சில்வா,1986a,1988 தேவராஜ் 1995).
இந்த இணக்கமான நடத்தைக்கான உறுதியான வெகுமதிகளை அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு வழங்கியது. அத்துடன் முஸ்லிம்களின் ஆதரவு வலுவாக இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தின் அடையாளமாக – மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுடனான பொருளாதார உறவுகள் (அலி 1984), 1970 களில் முஸ்லிம் மாணவர்களுக்காக தனியான அரசாங்கப் பள்ளிகளை நிறுவியமை மற்றும் அவர்களுக்குப் பணிசெய்ய முஸ்லிம் ஆசிரியர் குழுவிற்குப் பயிற்சி அளித்தமை, நிலையான பாடங்களைத் தவிர, முஸ்லிம் பள்ளிகளிலுள்ள பாடத்திட்டத்தில் இஸ்லாம் மற்றும் விருப்பத்துக்குரிய அரபு மொழி ஆகிய பாடங்களை அறிமுகம் செய்தமை, சமீபத்திய ஆண்டுகளில் ஒரு தனித்துவமான முஸ்லிம் பள்ளிச் சீருடையை அறிமுகப்படுத்தியமை – போன்ற அரச செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டன. இது முஸ்லிம் கல்வியின் வெற்றியை மேம்படுத்தியுள்ளது (அலி 1986-87, 1992a). ஆனால் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையிலான நேரடியான தொடர்பைக் கட்டுப்படுத்தியதன் மூலம் இனப் பதட்டங்களை மோசமாக்கியுள்ளது. 1960 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசாங்கங்களினதும் பிரகடனக் கொள்கையான மதவாதமற்ற அரசக் கல்விக் கோட்பாட்டைத் தகர்க்கும் வகையிலான முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமான அரசியல் சலுகையையும் இது பிரதிபலிக்கிறது (கே.எம். டி சில்வா 1997: 33).
கிறிஸ்டியன் வாக்னர் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளபடி, புவியியல் ரீதியாகவும், வகுப்புவாரியாகவும் பிளவுபட்ட சோனகச் சிறுபான்மையினருக்கு சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளிடமிருந்து வெகுமதிகளைப் பெறுவதற்கான இந்த முயற்சி, கிராமப்புறக் கிழக்குக் கரையோரச் சோனக விவசாயிகள் மற்றும் மீனவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பின்வரிசைச் சோனக எம்.பி.க்களுக்கும், சில மேற்குக் கரையோர பணக்கார முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் நலன்கள் சார்ந்து பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. கிழக்குக் கரையோர விவசாய, மீனவ முஸ்லிம்களின் கடைகள், மதத் தலங்கள், நெல் வயல்கள் போன்றன அவ்வப்போது உள்ளூர்ச் சிங்களக் கும்பலால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிற போதும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் – செல்வாக்குமிக்க அமைச்சரவை நியமனங்களைப் பெற்றனர் (எம்.ஐ.எம். மொஹிதீன் 1986: 424; ராபர்ட்ஸ் 1994 ஆ: 283, வாக்னர் 1990: 136-84, 1991).
1970 கள் மற்றும் 1980 களில் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு படித்த நடுத்தர வர்க்கம் தோன்றியது. நடைமுறை சார்ந்த சமூகப் பொருளாதாரச் சலுகைகளுக்கான அதன் கோரிக்கைகள் (உதாரணமாக பல்கலைக்கழக அனுமதிகள் மற்றும் வேலை ஒதுக்கீடுகள்) மத்திய கிழக்கின் சுன்னி மற்றும் ஷீயா அரசாங்கங்களின் நிதியளிப்பின் உதவியுடன், இஸ்லாமிய மத மற்றும் கலாசார நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டு ஆற்றுப்படுத்தப்பட்டன. இதில் அரசாங்கத்திற்கு எதுவும் செலவாகவில்லை (ஓ’சுல்லிவன் 1997).
கிழக்குக் கரையோரச் சோனக விவசாயிகளை சமூகப் பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்த அதே நேரம் மேற்குக் கரையோரச் சோனகச் சமூக உயர் குழாத்தினருக்கு அரசியல் ரீதியாகச் சலுகைகளை வழங்கிய இந்த நேர்த்தியற்ற ஏற்பாடு, 1983 இற்குப் பிறகு தமிழ் கெரில்லாப் போர் உருவானதை அடுத்து, கிழக்குப் பகுதியில் சோனகரின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தி நின்றது.
1980 களின் நடுப்பகுதியில், ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் யூ.என்.பி அரசாங்கம் இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்களை நியமித்தமை, அம்பாறை மாவட்டத்தின் முக்கிய முஸ்லிம் தேர்தல் தொகுதிகளை, சிங்களப் பெரும்பான்மைமிக்க விரிவாக்கப்பட்ட ஊவா மாகாணத்தோடு இணைப்பதன் மூலம் அம்பாறையில் முஸ்லிம் அரசியல் நலன்களை சவாலுக்குள்ளாக்கியமை போன்ற செயற்பாடுகள், இறுதியாக UNP மற்றும் SLFP யில் இருந்து கிழக்கு முஸ்லிம்கள் பிரிந்து, சுதந்திர இலங்கையின் முதல் தனித்துவமான முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒழுங்கமைக்க வழியமைத்தது.
கிழக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் முன்னணி (ESLMF), பின்னர் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகியன இந்த தனியான அரசியல் முன்னெடுப்பில் உள்ளடங்கியது. 1989 இல் SLMC நான்கு வெற்றிகளைப் பெற்றது. கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகளின் முதல் சுய-வெற்றியாக இதனைக் கருதலாம் (அலி 1992b; ஹென்நாயக்க என்.டி. வாக்னர் 1990, 1991).
இருப்பினும், 1996 தேர்தலில் மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள மாவட்டங்களில் இருந்து UNP கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியானது, வடக்கு – கிழக்கு பிராந்தியத்தில் செறிந்து வாழும் விவசாய முஸ்லிம்களின் பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் SLMC யின் உறுதியான கொள்கைகளுக்கும், சிங்களவர்களுடன் ஊடுருவி வாழும் வளமான மற்றும் பாதுகாப்பற்ற முஸ்லிம் நடுத்தர வர்க்கத்தின் மோதலற்ற ஆசைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் அரசியற் பிளவை அடையாளம் காட்டுவதாக அமைகிறது (ஓ’ சல்லிவன் 1997).
தொடரும்.