தமிழ்/சோனக பண்பாட்டு வேறுபாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆனால் ஒவ்வொரு குழு உறுப்பினர்களிடமிருந்தும் கிடைத்த கருத்துகளில் சில அடிப்படைக் கருத்துகள் வெளிப்பட்டன. சோனகர்கள் மிகவும் ஆற்றலும், கடின உழைப்பும் கொண்டவர்கள் என்று தமிழர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் வளர்ந்து வரும் செல்வம் போன்றவை இந்த உண்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. உண்மையில், சோனகர்களின் பெருகிவரும் செழிப்பு பல தமிழ் உயர்சாதியினருக்கு கடுமையான கவலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது சமூகத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் அவர்களின் செல்வாக்கை சவாலுக்குட்படுத்துகிறது. சோனகர்கள் பணக்காரர்களாக மாறுவது மட்டுமன்றி அவர்கள் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் குற்றச்சாட்டுக்குள்ளாகிறது. கடந்த ஐம்பது வருடங்களாக நாட்டிலுள்ள எந்தவொரு இனத்தவர்களைக் காட்டிலும் மிக அதிகமான பிறப்பு விகிதத்தை சோனகர்கள் கொண்டிருப்பது உண்மையே (குருகுலசூரிய மற்றும் பலர்- 1988: 191). இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தொடர்பிலும் உண்மையாக உள்ளது. மக்கள்தொகை மற்றும் தேர்தல் போக்குகளை மனதில் கொண்டு, பல தமிழர்கள் மற்றும் சோனகர்கள் – இப்போது சில சிங்களவர்களும் கூட (Schrijvers 1998: 12) – அத்தகைய தொடர்ச்சியான கருவுறுதலை ஒரு அரசியல் செயலாகப் பார்க்கின்றனர். நான் மேலும் இரகசியமான ஒரு இனவாத சித்தரிப்பையும் எதிர்கொண்டேன். இது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. நான் அதிக நேரத்தை செலவழித்த இளைஞர்கள் மத்தியில் இந்த இரகசிய உரையாடல் நடந்தது. இது அவர்களின் ஆர்வத்தையும் உடல் தொடர்பான விஷயங்களில் உள்ள கவலையையும் பிரதிபலித்தது. இந்தக் கருத்துகள் தமிழ் – முஸ்லிம் இனவாத அரசியலில் ஏதேனும் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் சில மட்டத்தில் அவை இரண்டு குழுக்களையும் பிரிக்கும் கலாசாரப் பிம்பங்களின் குறியீட்டு வலையின் ஒரு பகுதியாக அவை உருக்கொள்கின்றன. நான் கண்டது என்னவென்றால், முஸ்லிம் உணவுப் பழக்கம், பாலுறவு மற்றும் சுகாதாரம் போன்ற மிக நெருக்கமான களங்கள்; அவை பொதுப் பார்வையில் இருந்து தடுக்கப்பட்டதால், அவை பொதவாக தமிழர்களின் கிசுகிசுக்கு காரணமாகின.
ஆனால், அக்கரைப்பற்றில் நான் பேசிய தமிழர்களுக்கு பெண் விருத்தசேதனம் என்ற சோனகரின் நடைமுறை முற்றிலும் தெரியவில்லை. இந்தக் கட்டாயச் (வாஜிப்) செயற்பாடு (அஹ்மத் லெப்பை 1873/1963:479) பிறந்த நாற்பது நாட்களுக்குள் விருத்தசேதனம் செய்பவரின் மனைவியால் (osta mami) நடத்தப்பட்டதை, எனது ஆண் நண்பர்கள் விவரித்தார்கள். அவர்கள் இது தொடர்பான பூரண தகவல்களை தங்கள் மனைவி மற்றும் மூத்த சகோதரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டனர். குழந்தையின் தோலை (கிளிட்டோரிஸ்) ஒரு துளி இரத்தம் அடையாளமாக வருமாறு வெட்டுகின்றனர். ஆனால் முழு அளவிலான பிறப்புறுப்பை அகற்றுவது அல்லது ‘கிளிட்டோரிடெக்டோமி’ போன்றது அல்ல இந்தச் செயற்பாடு.
சோனகர்களை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்துவதற்கு வேறு சில சீர்ப்படுத்தல் மற்றும் அலங்கார நடைமுறைகளும் உள்ளன. சோனக ஆண்களும் பெண்களும் நாற்பது நாட்களுக்கு ஒருமுறை தங்கள் அக்குள் மற்றும் அந்தரங்க முடியை ஷேவ் செய்வது நல்லது (சுன்னத்). சடங்குரீதியாக சுத்தமாக (முழுக்கு நீக்க) உடலின் அனைத்துப் பாகங்களும் குளிக்கும்போது நனைவதை உறுதி செய்ய வேண்டும்.
கையால் பிடிக்கும் அளவுக்கு நீளமான முடி இருக்கக்கூடாது என்று, 1970 களில் சோனக முடி திருத்தும் ஒருவரிடம் (ஒஸ்தா) மாதந்தோறும் தங்களது அக்குள்களை மொட்டையடித்துக் கொள்ளும் பல வயதான, பாரம்பரியச் சோனக ஆண்களை நான் அறிவேன். அதே சமயம் தமிழர்களிடையே அந்தப் பழக்கம் இல்லை. தனிப்பட்ட நேர்த்திக் கடனை நிறைவேற்ற தலையை மொட்டை அடித்தல் எனும் வழக்கமே அவர்களிடம் உள்ளது. இரு சமூகப் பெண்களும் குத்திய காதணிகளை அணிந்தாலும், தமிழ் பெண்கள் போன்று மூக்குத்தி அணிவது சோனகப் பெண்களுக்கு கடினமானது (இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதனால்). அதேபோல, பாரம்பரிய இந்துத் தமிழர்களைப் போலன்றி, மூரிஷ் ஆண்கள் தங்கள் காதுகளைத் துளைக்கவோ அல்லது காதணிகளை அணியவோ கூடாது (அஹ்மத் லெப்பை 1873/1963: 480). எனது நெருங்கிய சோனக மற்றும் தமிழ் ஆண் நண்பர்களில் சிலர் மட்டுமே முன்வைத்த நெருக்கமான அவதானிப்புகளில் இருந்து பார்த்தால் அசுத்தம் பற்றிய இரு சமூகங்களினதும் பார்வை சற்று ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. இரு சமூகத்தினரும் இரத்தம், விந்து, மாதவிடாய் மற்றும் பிரசவப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதில் வெறுப்பைப் பகிர்ந்து கொண்டாலும், தமிழர்கள் உமிழ்நீர் (எச்சில்) மீது குறிப்பிடத்தக்க வெறுப்பைக் கொண்டுள்ளனர். ஆனால் இது சோனகர்களிடையே வலுவாகப் பின்பற்றப்படவில்லை. உண்மையில், உள்ளூர் பாவாக்களால் நடத்தப்படும் சில பரவச சூஃபி சடங்குகளில், புனித சக்தியை வெளிப்படுத்துவதில் தலைமை தாங்கும் கலிபாவின் சுவாசம் மற்றும் உமிழ்நீரில் இருந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கருவிகள் வரை காண்பிக்கப்படுகின்றன (Bayly 1989: 127-28; McGilvray 1988b).
மறுபுறம், சோனகர்களிடம் மலம், குறிப்பாக சிறுநீர் மற்றும் பாலியல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதில் வலுவான தடைகள் இருப்பதாகத் தெரிகிறது. சோனக ஆண்கள் சிறுநீர் கழிக்கக் குந்தும்போது சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள் அதனால் அவர்களின் சாரன் அல்லது பிற ஆடைகளை சிறுநீர் தொடாது. அவ்வாறு பட்டுவிட்டால் அவர்கள் மசூதிக்குச் செல்வதோ, தொழுவதோ தடையாகும். என்னுடைய சில ஆண் நண்பர்கள், சிறுநீரின் கடைசித் துளிகளை உறிஞ்சுவதற்கு ஒரு சிறு செங்கல் துண்டைப் பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். இஸ்லாமிய விதிகள் அனைத்து உடலுறவுச் செயற்பாடுகளுக்குப் பிறகு மட்டுமல்ல, இடையிலும், முழுத் தலைக் குளியலைக் கோருகின்றன. இது, சோனகச் சுற்றுப்புறங்களில் இரவில் கிணற்றில் நீர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்கும்போது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தும்.
சோனகர்கள் பற்றி தமிழர்களிடம் இருந்து கூட்டாக நான் அடிக்கடி கேட்ட புகார்கள் என்னவென்றால், அவர்கள் அரசியல் ரீதியாக நம்பகத்தன்மையற்றவர்கள். அவர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த கல்வியறிவு கொண்டவர்கள் (இது நூற்றாண்டின் முற்பகுதியில் உண்மை. ஆனால் இப்போது இல்லை). அவர்கள் ஆரோக்கியமற்ற, நிரம்பிய வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் வாழ்கின்றனர் (உதாரணமாக, காத்தான்குடி, இலங்கையில் மிகவும் அடர்த்தியான மக்கள் வசிக்கும் நகரம்). அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் (இந்துக்களின் வருத்தம்; ஆனால் கோபம் அல்ல). மற்றும் ஒரு சிறிய விஷயமும் உண்டு. அதாவது – அவர்கள் மூச்சுத்திணறும் வகையிலான வாசனை மற்றும் வாசனைத் திரவியங்கள் (அத்தர்) மீது விருப்பம் கொண்டிருக்கின்றனர். பிந்தையது வெளிப்படையானதும், கவனிக்கத்தக்கதுமான விமர்சனம். ஏனெனில் தமிழர்கள் தங்கள் இந்துச் சடங்குகள் அனைத்திலும் வலுவான நறுமணமுள்ள கற்பூரத்தை எரித்து இனிய மணம் கொண்ட சந்தனத்தைப் பூசுகிறார்கள். முஸ்லிம் நடைமுறைகள் பற்றிய மாப்பிள்ளை ஆலிமின் கட்டுரை, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்துவதைப் பாராட்டுகிறது (அஹ்மத் லெப்பை 1873/1963: 274). தவிர, பல சோனக நிகழ்வுகளில் விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு சடங்கு நிகழ்வின் உணர்வை மேம்படுத்துவதற்காக நீண்ட கால, செறிவூட்டப்பட்ட அத்தர் வழக்கமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டேன். தமிழர்களின் பாலியல் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் பற்றி சோனகரிடம் மிக மிகக் குறைவான புகார்களே இருந்தன. மாறாக, தொழிற்துறைகள் மற்றும் சிவில் சேவைகளில் தமிழர்களின் ஏகபோக உரிமையைப் பற்றி சோனகர்கள் என்னிடம் புகார் செய்தார்கள். இந்தக் குற்றச்சாட்டு யாழ்ப்பாணத் தமிழர்களையே நேரடியாகக் குறிக்கிறது. ஏனெனில் இப் பணித்துறைகளில் அவர்கள் மட்டக்களப்பு தமிழர்களை விட அதிகளவில் உள்ளனர்.
சமீபத்திய தசாப்தங்கள் வரை, தமிழர்கள் பாரம்பரியத் தமிழ்க் கலாசாரம் மற்றும் நவீன தொழில்கள் இரண்டிலும் சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர் என்பதை சோனகர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் தமிழர்களின் தேவையற்ற ஆணவம் மற்றும் மேலாதிக்க அணுகுமுறைகளை வெறுக்கிறார்கள். இந்துச் சாதி அமைப்பின் கடினத்தன்மையும், அதனை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமற்ற படிநிலை மனப்பான்மையுமே இதற்குக் காரணம் என்று சோனகர்கள் கூறுகின்றனர். எல்லா முஸ்லிம்களும், அல்லாஹ்வின் முன் சமமானவர்கள் என்று அவர்கள் எனக்கு உறுதியளித்தார்கள். எனது களப்பணியில் இறுதியியாக சில மிகச் சிறிய பரம்பரையாக தரவரிசைப்படுத்தப்பட்ட சோனகத் துணைக் குழுக்களுக்கும் கூட (Ostd barber-circumcisers,), முஸ்லிம்களின் சடங்குகளின் போது சமத்துவம் வழங்கப்பட்டதை நான் பார்த்தேன். எனவே சோனகரிடையே பரந்த சடங்குச் சமத்துவம் உண்டு என்கிற கூற்று உண்மையில் செல்லுபடியானதாகும். அக்கரைப்பற்று போன்ற ஒரு ஊரில், தமிழர்களை விட முஸ்லிம்களிடையே செல்வ வேறுபாடுகள் அதிகமாகத் தெரிகிறது. குடித்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் போக்கினால் சோனகரின் பார்வையில் தமிழர்கள் களங்கப்படுகிறார்கள். இருப்பினும் சில சோனகரும் சில சமயங்களில் இரகசியமாக மது உட்கொள்வதாக அறியப்படுகிறது. இறுதியாக, இந்து மத நடைமுறைகள் குறித்த சோனகரின் கருத்துகள் ஒரே மாதிரியாக எதிர்மறையாகவே இருந்தன. தமிழ் – சைவ சமயமானது பலதெய்வ வழிபாடு; உருவ வழிபாடு மற்றும் பேய்த்தனம் கொண்டது என்றும், மற்றும் வேதத்தைக் கொண்ட தீர்க்கதரிசன மதம் அல்ல என்றும் விமர்சிக்கப்பட்டது. இந்த விடயத்தில், உள்ளூர் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் கண்டிப்பாகக் சமபார்வையே கொண்டிருக்கின்றனர்.
தொடரும்.