நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் : அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு - பகுதி 1
Arts
21 நிமிட வாசிப்பு

நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் : அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – பகுதி 1

May 11, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

தென்னாசியாவில் பண்டு தொட்டு பெரிதும் புழக்கத்தில் இருந்து வந்த ஒரு பெயராக வடமொழியில் ‘நாஹ’ என்ற பெயரும், தமிழில் ‘நாகம், நாகன், நாகர்’ என்ற பெயர்களும் காணப்படுகின்றன. மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வட இந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர். தமிழகத்தின் பண்டைய தலைநகரான நாகபட்டினம் நாகரின் தலைநகர் என்ற கருத்துண்டு. தமிழ்நாட்டில் சங்க இலக்கியத்திலும், சமகாலப் பிராமிக் கல்வெட்டுகளிலும் நாகன், நாகர் என்ற பெயர்கள் குறுநிலத் தலைவர்களுடனும்,  புலவர்களுடனும், நாடு – நகர் – ஊர் ஆகிய இடப்பெயர்களுடனும் இணைந்து வருகின்றன. இலங்கையின் முதற் பாளி வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சம் ஈழத்திற்கு விஜயன் வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் எனக் குறிப்பிடுகின்றது (Mahavamsa : vi-vii.51-55). ஆயினும் இலங்கையின் மனித வரலாறும், நாகரிக உருவாக்கமும் வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் வந்து குடியேறிய மக்களுடன் தோன்றியவை என்ற கருத்துடைய அறிஞர்கள் பலரும் வடஇந்தியக் குடியேற்றம் நடப்பதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த இயக்கரையும், நாகரையும் மனிதப் பிறவிகள் அற்ற அமானுசர் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர் (Mendis 1946:8, Paranavitana 1961181-82). இந்நிலையில் பேராசிரியர் சத்தமங்கல கருணாரட்ன, பேராசிரியர் ராஜ் சோமதேவா போன்ற அறிஞர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகளை நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களாகக் காட்டி இயக்கரையும், நாகரையும் இலங்கையில் வாழ்ந்த தொடக்க கால இனக்குழுக்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர் (Karunaratne 1984:56). இக்கருத்தை வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள், பண்பாடு தொடர்பான தொல்லியற் சான்றுகள் மேலும் உறுதி செய்கின்றன. இத்தொல்லியல் ஆதாரங்கள் இலங்கையில் மனிதவரலாறு, பண்பாடு என்பவற்றின் உருவாக்கத்தை இங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் எனும் இனக்குழுக்களில் இருந்து ஆராய்ந்து பார்க்க வழியேற்படுத்தியுள்ளது எனலாம்.

இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலங்கையின் தொடக்ககால எழுத்து, மொழி, மதம், இனம், பண்பாடு என்பவற்றை அறிவதற்கு பிராமிக் கல்வெட்டுகள் நம்பகரமான சான்றுகளாகக் காணப்படுகின்றன. இலங்கையில் இதுவரை 1500 இற்கும் மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு எண்ணிக்கையிலான கல்வெட்டுகள் தென்னாசியாவில் வேறு எந்த வட்டாரத்திலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றுள் ஏறத்தாழ 200 கல்வெட்டுக்களில் ‘நாக’ என்ற பெயரை பலதரப்பட்ட மக்களும் தனிநபரின் முன்னொட்டு அல்லது பின்னொட்டுப் பெயராகப் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. அப்பெயருக்குரியவர்கள் இனக் குழுத்தலைவர்கள், சிற்றரசர்கள், அரச அதிகாரிகள், வணிகர்கள் என உயர் பதவிகளில் இருந்ததை அக்கல்வெட்டுகள் மேலும் கூறுகின்றன. அவற்றுள் வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு கல்வெட்டுகள் அப்பிராந்தியத்தில் ஆட்சியில் இருந்த நாகச் சிற்றரசர்கள் பற்றிக் கூறுகின்றன. கல்வெட்டுகளில் வரும் செய்திகளை சமகாலப் பாளி இலக்கியங்களும் உறுதிசெய்கின்றன. அவ்விலக்கியங்கள் புராதன அநுராதபுரகால அரசியல் வரலாற்றை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த துல்லத்த நாக (கி.மு.119), கல்லத்த நாக (கி.மு.109-103), சோறநாக (கி.மு.63-51), மகாநாக (கி.பி.7-9), இளநாக (கி.பி.33-43), மகல்லநாக (கி.பி.136-143), குஜநாக (கி.பி.186-187), குஞ்சநாக (கி.பி.187-189), ஸ்ரீநாக (கி.பி.189-209), அபயநாக (கி.பி.231-240), ஸ்ரீநாக (கி.பி.240-242) முதலான  நாக மன்னர்களின் ஆட்சி பற்றியே சிறப்பாகக் கூறியுள்ளன. இலங்கையில் வடஇந்தியக் குடியேற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முந்திய நாக மக்கள் பற்றி வரலாறு, பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில், வரலாற்றுத் தொடக்ககால (கி.மு.3-கி.பி.3நூற்றாண்டு வரை) வரலாற்றில் முன்னிலைப்படுத்திக் கூறப்படுவது நாக மக்களுக்கும் பிற்கால மக்களுக்கு இடையிலான உறவையும், தொடர்பையும் காட்டுவதாகக் கொள்ளலாம். வடஇந்தியக் குடியேற்றத்திற்கு முந்திய இலங்கை வரலாறு பற்றி தொல்லியல் ஆய்வுகள் கூறுவதை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது இதற்குப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

நீண்டகாலமாக இலங்கையின் பூர்வீக மக்கள் தொடர்பாக  வெளியிடப்பட்ட  வரலாற்றுப் பாட நூல்களில், இலங்கையின் பூர்வீக மக்கள், வடஇந்தியாவில் இருந்து விஜயன் தலைமையில் வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்றே கூறப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் அண்மைக்காலங்களில் இலங்கை அரசால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் வரலாற்றுப் பாட நூல்களில் விஜயன் தலமையிலான குடியேற்றம் நடப்பதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த மக்கள், பண்பாடு பற்றிய விடயதானங்களை சேர்க்கப்பட்டிருக்கின்றன. 1970 களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட நவீனத் தொல்லியல் ஆய்வுகள், விஜயன் வருகைக்கு முன்னரே வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று வகையான பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பதே இந்த மாற்றத்திற்கு காரணமாகும். இப் பண்பாட்டுக்குரிய மக்களையே மகாவம்சம் கூறும் இயக்கர் – நாகர் என தொல்லியல், மானிடவியல், மொழியியல் அறிஞர்களும்  அடையாளப்படுத்தி வருகின்றனர்.

கற்காலப் பண்பாடு

1970 களில் வடஇலங்கையில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட கலாநிதி சிரான் தெரணியகல கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுப் பகுதியில் இருந்து இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேலைப்பழங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தார். இந்த ஆய்வின் போது, உணவு தேடி நாடோடிகளாக வாழ்ந்த இப்பண்பாட்டு மக்கள் பெரிய மிருகங்களை வேட்டையாடவும், காடுகளில் இயற்கையாகக் கிடைக்கும் காய்கனிகள், கிழங்கு வகைகளைப் பறிக்கவும் பயன்படுத்திய பல அளவுகளில், வடிவங்களில் செய்யப்பட்ட குவாட்ஸ், சேட் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். மேலும் இப்பண்பாட்டு மக்கள், இரணைமடுவில் இருந்து தெற்கே மாங்குளம், தென்மேற்கே மன்னார் வரை வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. நடோடிகளாக வாழ்ந்த கற்கால மக்கள் தற்காலிகமாகத் தங்கி வாழ்வதற்குப் பொருத்தமான அடர்ந்த காடுகள், குகைகள், பாறைகள், சமவெளிகள், மிருகங்களை வேட்டையாடுவதற்குப் பொருத்தமான வைரமான கற்கள், இலகுவாக நீரைப் பெறுவதற்கு ஏற்ற இயற்கையான நீர்நிலைகள் என்பன வன்னிப் பிராந்தியத்தின் இயற்கை அமைப்பாக இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இரணைமடுவைத் தொடர்ந்து, இலங்கைத் தொல்லியற் திணைக்களமும், தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களும் இணைந்தும், தனித்தும் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளில் தென்னிலங்கையில் முந்தல் போன்ற இடங்களில் இம்மேலைப்பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளால் தென்னாசியாவின் ஏனைய நாடுகள் சிலவற்றைப் போல இலங்கையிலும் கற்காலப்பண்பாட்டிற்குரிய மக்கள் வாழ்ந்துள்ளமை உறுதியாயிற்று.

2016-17 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினர் மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளப் பிரதேசத்தில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டபோது யாழ்ப்பாண தொல்லியல் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர் திரு. மணிமாறன் செயற்கையாகச் செய்யப்பட்ட சில கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். அவற்றுள் ஒரு கற்கருவி காட்டுப் பகுதியில் பிற தேவைக்காக மண் அகழப்பட்ட இடத்தில் ஏறத்தாழ 12 அடி ஆழத்தில் கிரவல் மண்படையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இக்கருவி செயற்கையாக வடிவமைக்கப்பட்டதை கற்கருவியின் வடிவமைப்பும், அதில் பதிந்துள்ள கைவிரல் அடையாளங்களும் உறுதிசெய்கின்றன. இருப்பினும் இக்கருவியை வைத்து அதன் காலத்தையோ அல்லது அக்கருவியைப் பயன்படுத்திய மக்களையோ உறுதிப்படுத்த முடியாது. முறையான அகழ்வாய்வில் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கலாசார மண் அடுக்குகளையும், கருவிகளுடன் இணைந்திருக்கக் கூடிய (Associate Findings) பிற ஆதாரங்களையும் நவீன ஆய்வு முறைக்கு உட்படுத்துவதன் மூலமே ஒரு கருவியின் காலத்தையும், அதன் பண்பாட்டையும் உறுதி செய்ய முடியும். அதற்கான வாய்ப்புகள் விரைவில் கட்டுக்கரை ஆய்வுகளுக்கு ஏற்படும் என நம்பலாம்.

மேலைப்பழங்கற்காலப் பண்பாடு (Upper Paleolithic Culture) பற்றிய ஆதாரங்கள் வடஇலங்கையிலும், தென்னிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் இலங்கையின் பூர்வீக மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகள் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இப்பண்பாட்டு மக்களுக்கும் இலங்கையின் பிற்கால மக்களுக்கும் இடையே இருந்திருக்கக் கூடிய உறவு, தொடர்பு பற்றிய விரிவான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலைப்பழங்கற்காலப் பண்பாட்டின் முடிவுக்கும், பிற்காலத்தில் தோன்றிய நுண்கற்காலப் பண்பாட்டிற்கும் இடைப்பட்ட நீண்டகால இடைவெளியில் வாழந்திருக்க கூடிய மக்கள், பண்பாடுகள் பற்றிய ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாதிருப்பது முக்கிய காரணம் எனக் கூறலாம்.

நுண்கற்கால மக்கள் (Mesolithic People)

தென்னிந்தியாவைப் போல் இலங்கையிலும், மேலைப்பழங்கற்காலப் பண்பாடு மறைந்து  நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தொழில்நுட்பம் வாய்ந்த சிறிய நுண்ணிய கற்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் நாளாந்த வாழ்க்கையில் நுண்ணிய கற்கருவிகள் முக்கிய தொழில்நுட்ப சாதனங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததால் இம்மக்களை தொல்லியலாளர்கள் நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் அல்லது குறுணிக்கற்காலப் பண்பாட்டு (People of Mesolithic Culture) மக்கள் எனப் பெயரிட்டுள்ளனர். இம் மக்கள் கி.மு. 37,000 இல் இருந்து மலைநாடு தொட்டு தாழ்நிலம் வரை இலங்கையில் ஏறத்தாழ 75 இற்கும் மேற்பட்ட இடங்களில் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடஇலங்கையில் மாதோட்டம், மாங்குளம், பூநகரி, இரணைமடு, புளியங்குளம், அண்மையில் கட்டுக்கரைக்குளம் ஆகிய இடங்களில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய குவாட்ஸ், சேட் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த குகைகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இப்பண்பாட்டின் தோற்றமும், மறைவும் இடத்திற்கு இடம் வேறுபட்டதாக இருப்பது தெரியவந்துள்ளது (Deraniyagala 1992: 695-701, 2004:6). இக்கால வேறுபாடுகளுக்கு, தொடக்க காலத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் காலப்போக்கில் அவர்களின் வாழ்வியலுக்குச் சாதகமாக இருந்த இடங்களைக் கண்டறிந்து வேறுபட்ட காலங்களில் அங்கு சென்று குடியேறியமையோ, அல்லது வேறுபட்ட காலங்களில் இப்பண்பாட்டு மக்கள் இலங்கைக்கு வெளியே இருந்து வந்து குடியேறியமையோ காரணமாக இருக்கலாம்.

balangoda

தென்னிலங்கையில் பலாங்கொடைக்கு அண்மையில் உள்ள குகைகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காலத்தால் முந்திய நுண்கற்கால கருவிகளும், மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்பண்பாட்டை பலாங்கொடைப் பண்பாடு எனவும், இங்குவாழ்ந்த மனிதர்களை பலாங்கொடை மனிதன் எனவும் அழைக்கின்றனர். இப்பண்பாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கற்கருவிகளே முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் மிருக எலும்புகள், மான் கொம்புகள் என்பவற்றில் வடிவமைக்கப்பட்ட முனைகள், ஊசிகள் போன்ற கருவிகளையும் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (Seneviratne 1085:149, Deraniyagala, 1992:278-81, 2004:9). இப்பண்பாட்டு மக்களின் இருப்பிடங்கள் மிக அரிதாகவும், சிறிதாகவும் காணப்பட்டன. அவை ஏறத்தாழ 50 சதுர மீற்றரில் ஒரு சில மையக் குடும்பங்கள் வாழக்கூடிய நிலையில் அமைந்திருந்தன (Deraniyagala 1992:351, 2004:8). இறந்தவர்களை இம்மக்கள், வாழ்விடங்களிலேயே அடக்கம் செய்தனர். பாகியன் (Fa-hien Cave) மற்றும் ரணவிலா குகைகளில் (Ranaella Cave) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இறந்த மனிதனின்  ஒரு சில எலும்புகளை மட்டும் அடக்கம் செய்து அதன் மேல் செம்மண்ணால் பூசப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இம்மரபு அக்கால மக்களின் சமய நம்பிக்கைகளைப்  பிரதிபலிப்பதாகக் கருதப்படுகின்றது (Deraniyagala 1992: 465-7, 696). பெல்லன்-பண்டி-பலச (Bellan-bandi-palasa) குகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இம்மக்கள் பலவகைப்பட்ட தானியங்கள், கிழங்குவகைகள், பழங்கள், காட்டு விலங்குகள், மீன் போன்ற கடல் உணவுகளைப் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இச்சான்றுகளில் இருந்து இம்மக்கள் உணவுகளைச் சேமித்துவைக்கும் பழக்கத்தையும் நெருப்பின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர் என்பது மேலும் தெரியவந்துள்ளது. 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டுள்ள பெலி குகையில் (Beli Cave) இருந்து உப்புப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இம்மக்கள் மலைநாட்டிற்கும் கடற்கரைகளுக்கும் இடையே வலைப்பின்னலான தொடர்புகளைக் கொண்டிருந்தமை தெரிகிறது (Deraniyagala 1992:326, 2004:9).

batadomba cave

நுண்கற்கால மக்களின் கலைப் படைப்புக்களையும், கலையுணர்வையும் அறிந்து கொள்ளக்கூடிய சான்றுகள் அதிகம் கிடைக்கவில்லை. ஆயினும் சிரான் தெரணியகல சில குகை ஓவியங்கள் நுண்கற்கால மக்களுக்கு உரியவையாக இருக்கலாம் எனக் கருதுகிறார் (1992:465,2004:10). குருவித்தைக்கு அண்மையில் உள்ள பட்டதொம்பா (Batadomba Cave 31,000-11,500) குகையில் இருந்து சங்கிலிருந்து வடிவமைக்கப்பட்ட மணிகள் (beds of shell) கடல் ஓடுகள், சங்கு, சிப்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அக்கால மக்களின் கலையுணர்வையும் கடற்கரையோடு இம் மக்களுக்கிருந்த தொடர்பையும் எடுத்துக்காட்டுகின்றன. அண்மையில் தொல்லியலாளர் பிரேமதிலகா, ஹற்றன் சமவெளியில் கிடைத்த தானிய விதைகளை ஆய்வுக்கு (Palynological Evidence) உட்படுத்தியதில் இருந்து கி.மு 17,000 இல் இருந்து வாற்கோதுமை, ஓட்ஸ் (oats) எனப்படும் தானியங்கள் இம்மக்களால் பயிரிடப்பட்டமை தெரியவந்துள்ளது (Deraniyagala 2004:10).

நுண்கற்காலப் பண்பாடு பற்றி ஆதாரங்கள் மேலைப்பழங்கற்கால மறைவிற்குப் பின்னர் இலங்கையில் ஓரளவு நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இம்மக்கள் பிற்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்து வந்த பெருங்கற்கால (Megalithic People) அல்லது ஆதி இரும்புக்கால (Early Iron Age People) மக்கள் அறிமுகப்படுத்திய புதிய பண்பாட்டுடன் கலந்துள்ளனர். இந்த உண்மை பொம்பரிப்பு, அநுராதபுரம் அண்மையில் கட்டுக்கரைக் குளம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் போது அவ்விடங்களில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக அதன் மேற்படையில் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய சான்றுகளும், அதன் தொடர்ச்சியாக வரலாற்றுத் தொடக்ககாலச் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து உறுதியாகின்றது. இந்நிலையில் கட்டுக்கரைப் பிரதேச அகழ்வாய்வின் போது பெருங்கற்காலச் சின்னங்களுடன் நுண்கற்காலக் கருவிகளும் கலந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை இதை மேலும் உறுதிசெய்கின்றன. இம்மரபு தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டிலும் காணப்படுகின்றன. இலங்கைக்கு முதலில் இரும்பினை அறிமுகப்படுத்திய பெருங்கற்கால மக்கள் தமக்கு முற்பட்ட காலப்பண்பாட்டையும் உள்வாங்கிக் கொண்டனர் என்பதை இது காட்டுகிறது.

பெருங்கற்காலப் பண்பாடு

பெருங்கற்காலப் பண்பாட்டின் அறிமுகம் இலங்கையின் பண்பாட்டு வரலாற்றில் புதிய காலகட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகின்றது. இப்பண்பாட்டின் அறிமுகத்தோடு நாடோடிகளாக வாழ்ந்த இலங்கை மக்கள் ஓர் இடத்தில் நிரந்தரமாகக் கூடி வாழ்தல், நிரந்தரப் பொருளாதாரம், நீர்ப்பாசன விவசாயம், குளத்தை மையப்படுத்திய கிராமக் குடியிருப்புக்கள், இரும்பின் பயன்பாடு, மிகை உற்பத்தி, சிறு தொழில்நுட்ப வளர்ச்சி, சக்கரங்களைப் பயன்படுத்திய மட்பாண்ட உற்பத்தி, பண்டமாற்று, உள்நாட்டு – வெளிநாட்டு வர்த்தகம், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தோற்றம் பெற்றன.

பெருங்கற்காலப் பண்பாடு என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைப் (Mega-ngupa,Lithic – கற்கள்) பயன்படுத்திக் கட்டப்பட்டதைக் குறிக்கின்றது. ஆதிகால மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில், தமது வாழ்விடங்களை விட இறந்தவர்களுக்கு பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்ததற்கான சான்றுகள் உலகின் பல நாடுகளில் காணப்படுகின்றன. ஆயினும் திராவிட மொழி பேசும் தென்னிந்திய மாநிலங்களின் பெருங்கற்காலப் பண்பாட்டில் சில தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. அதிலும் தென்தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் ஒரே பிராந்தியம் என மயங்கும் அளவிற்கு பல்வேறு அம்சங்களில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது. அவற்றுள் இரும்பின் அறிமுகம், கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்களின் பயன்பாடு, தாழியடக்க முறை, சுடுமண் கலைவடிவங்கள் என்பவற்றில் காணப்படும் ஒற்றுமைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

kantharodai

இலங்கையில் இதுவரை 60 இற்கும் மேற்பட்ட இடங்களில் பெருங்கற்காலக் குடியிருப்புக்களும், ஈமச் சின்ன மையங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பெரிய குடியிருப்பு மையமாக அநுராதபுரம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதையடுத்து இரண்டாவது பெரிய குடியிருப்பு மையமாக வடஇலங்கையில் உள்ள கந்தரோடை அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் ஆரம்பகால பெருங்கற்காலக் குடியிருப்புகள் இலகுவாக நீரைப் பெறக்கூடிய மணற்பாங்கான இடங்கள், சிறிய பற்றைக் காடுகள், கடலுணவை இலகுவாகப் பெறக்கூடிய பரவைக்கடல், கடல் – தரை வழிப் போக்குவரத்திற்குச் சாதகமான இயற்கைத் துறைமுகங்கள் என்பவற்றைக் கொண்டிருந்த கடற்கரை ஓரங்களிலேயே உருவாகின. இலங்கையில் இக்குடியிருப்புகள் தமிழகத்தில் அரிக்கமேட்டுக்கு நேரெதிரே அமைந்த மாதோட்டத்திலும், ஆதிச்சநல்லூருக்கு நேரெதிரே அமைந்த புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பிலும் முதலில் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. இங்கு குடியேறிய மக்களே காலப்போக்கில் வளமான இடங்களைத் தேடிச் சென்று அவ்விடங்களில் குடியேறினர் (Seneviratne 1983 237 -307). அவற்றுள் பௌதிக மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருந்த அநுராதபுரம், கந்தரோடை, மகாகமை ஆகிய இடங்களில் பெருங்கற்காலக் குடியிருப்புக்கள் உருவாகி அவ்விடங்களில் ஆரம்பகால நகரமயமாக்கமும், அரச உருவாக்கமும் நிகழ்ந்தன. அநுராதபுரத்தில் மிகப்பெரிய பெருங்கற்காலக் குடியிருப்புகள் தோன்றியதால் அங்கு பலமான அரச தலைநகர் தோன்றியது. இங்கு 1994 இல் இருந்து உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் கனிங்காம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளை நவீன காலக்கணிப்பிற்கு உட்படுத்தியதிலிருந்து இங்கு பெருங்கற்காலப் பண்பாடு தோன்றிய காலம் கி.மு. 1000 (இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்) எனக்  கணிப்பிடப்பட்டுள்ளது.

பாளி இலக்கியங்கள் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலிருந்து (இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர்) இலங்கைக்கு வடஇந்தியக் குடியேற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறுகின்றன. இது பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களின் புலப்பெயர்வை அடுத்து 400 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட புதிய குடியேற்றமாகக் கொள்ளலாம். ஆயினும் இவ்வாறான குடியேற்றங்கள் நடந்ததற்கு நம்பகரமான தொல்லியற சான்றுகள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதே பாளி இலக்கியங்கள் வடஇந்தியாவில் இருந்து கி.மு.3 ஆம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு பௌத்த மதம் பரவியதாகக் கூறுகின்றது. இவற்றை உறுதிப்படுத்தும் பிராமிக் கல்வெட்டுகளும், பௌத்த மதம் சார்ந்த தொல்பொருட் சான்றுகளும் பெரும்பாலும் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குடியிருப்பு  மையங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள், இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களே, புதிதாக அறிமுகமான பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதனை உறுதிப்படுத்துகின்றன.

பௌத்தத்திற்கு முந்திய இலங்கை மக்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் ஒரே இன வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். தொல்லியலாளர்கள் இலங்கையில் இம்மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளுக்கும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். அல்ஜின் என்ற தொல்லியலாளர் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரு பக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தேரிக் கலாசாரத்துடன், ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார் (Kennedy 1990:34). மொழியியலாளர்கள் இலங்கையில் நுண்கற்கால மக்கள் பேசிய ஆதி ஒஷ்ரிக் மொழி தென்னிந்தியாவில் நுண்கற்கால மக்கள் பேசிய ஆதி ஒஷ்ரிக் மொழியோடு கொண்டுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் தற்காலத்தில் இலங்கையில் பேச்சுவழக்கில் உள்ள 200 இற்கும் மேற்பட்ட சொற்கள் நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் பேசிய ஆதி ஒஷ்ரிக் மொழிச் சொற்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வொற்றுமைகளின் அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள், தென்னிந்தியா – அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள – தேரி மணற்குன்றுப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. பேராசிரியர் இந்திரபாலா வடஇலங்கை – அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு – தமிழகத்தின் தொடக்க வாயிலாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்துவந்த இம்மக்கள் முதலில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலேயே குடியேறியிருக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

நுண்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து இலங்கைக்குப் பரவிய பெருங்கற்காலப் பண்பாட்டை அறிஞர்கள் பலரும் இலங்கையின் ஆக்க காலமாகவே (Formation Period) எடுத்துக் கொள்கின்றனர். இப்பண்பாடு எங்கே தோன்றியது? எப்போது தோன்றியது? தோற்றுவித்த மக்கள் யார்? என்பது தொடர்பாக அறிஞர்களின் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. ஆயினும் திராவிட மொழி பேசும் மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலப் பெருங்கற்காலப் பண்பாட்டில் காணப்படும் தனித்துவமான அம்சங்கள் ஒரே பிராந்தியத்திற்குரிய பண்பாடாக தோற்றமளிக்கின்றன. இப்பண்பாட்டு வட்டத்திற்குள்ளேயே இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாடு உள்ளடக்கப்படுவதால் இப்பண்பாட்டை தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த திராவிட மக்களே அறிமுகப்படுத்தினர் என்பது அறிஞர்களின் பொதுவான கருத்தாகும். கலாநிதி சிரான் தெரணியாகல இப்பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனத் தனித்து அடையாளப்படுத்திக் கூறுகின்றார் (Deraniyagala 1992:735). பேராசிரியர் இந்திரபாலா தென் தமிழக – இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கு இடையே ஈமச் சின்னங்கள், தாழியடக்க முறை, இரும்புக் கருவிகள், சமயச் சின்னங்கள், சுடுமண் உருவங்கள், கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்கள் என்பவற்றில் காணப்படும் ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக பெருங்கற்காலப் பண்பாடும் தென்தமிழகத்தில் இருந்தே இலங்கைக்குப் பரவியதாகக் கூறுகின்றார் (இந்திரபாலா 2006). இவ்வாதாரங்களில் இருந்து பௌத்தத்திற்கு முந்திய இலங்கை மக்களும், பண்பாடும் தமிழகத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டவை என்பது தெரிகிறது. இதனால் பௌத்த மதத்தின் பரவலோடு இலங்கையில் தோன்றிய மொழிவழிப் பண்பாடுகளை பௌத்தத்திற்கு முற்பட்ட பெருங்கற்கால மக்கள், பண்பாடு என்பவற்றுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதே பொருத்தமாகும்.

இலங்கைக்கு, விஜயன் யுகத்திற்கு முந்திய வரலாறு உண்டு என்பதற்கு தொல்லியற் கண்டுபிடிப்புக்களை ஆதாரங்களாகக் காட்டியிருக்கும் பேராசிரியர் சேனக பண்டாரநாயக்கா இலங்கை மக்களின் இன அடையாளங்களுக்கு உடற்கூற்றியல் வேறுபாடுகள் காரணமல்ல, பண்பாட்டு வேறுபாடுகளே காரணம் எனக் கூறி அப்பண்பாட்டு வேறுபாடுகளை இலங்கையில் மனித நாகரிக வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றார் (சேனக பண்டாரநாயக 1985:1-23). அண்மையில் “வல்லியக்கனும் வல்லிபுரநாதரும்” என்ற பொருளில் கலாநிதி பொ. இரகுபதி எழுதிய கட்டுரையொன்றில் இலங்கைத் தமிழரது பண்பாட்டு அடையாளங்கள் பூர்வீக மக்களது பண்பாட்டிலிருந்து தொடங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, 2500 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வழிபாட்டில் இருந்துவந்த இயக்கர் வழிபாடு எவ்வாறு அண்மைக் காலங்களில் வல்லிபுரநாதர் ஆலயமாக மாறியதென்பதற்கு பொருத்தமான ஆதாரங்களைக் காட்டியிருந்தார் (இரகுபதி 2006:1-23). தற்காலத்தில் தமிழர் சமூகத்தில் மாடுகளுக்கு இடப்படும் குறிகள், சலவைத் தொழிலாளர் பயன்படுத்தும் அடையாளச் சின்னங்கள் என்பவை – அவை வரலாற்றுக் காலத்தில் கல்வெட்டுகள், நாணயங்களில் பயன்படுத்தப்படுவதற்கு முன்னரே – பெருங்கற்கால மக்களின் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டதற்கு, பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் பொறித்துள்ள குறியீடுகள், சின்னங்கள் என்பன சான்றாகக் காணப்படுகின்றன (புஷ்;பரட்ணம்: 1999: 62-67). இவ்வாதாரங்கள் இலங்கைத் தமிழர் வாழ்வியலுடன் இணைந்திருக்கும் நாக மரபிற்கும் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

தென்னாசிய நாடுகள் பலவற்றில் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் இருந்து நாகத்தைக் குலமரபுத் தெய்வமாக கொண்ட மக்கள் வாழ்ந்ததற்கு நம்பகரமான தொல்லியல் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்நாக வழிபாட்டு மரபு வடஇந்தியா, தக்கணம், தென்னிந்தியா, தமிழகம், தென் தமிழகம் ஆகிய வட்டாரங்களிலும், வட்டாரங்களுக்கு உள்ளேயும் வேறுபட்ட காலங்களில், செம்புக்காலம் (Chalcolithic Culture), புதிய கற்காலம் (Neolithic  Culture), நுண்கற்காலம் (Mesolithic  Culture), பெருங்கற்காலம் (Megalithic  Culture) முதலான  பண்பாடுகளின் உருவாக்கத்துடன் தோன்றியதை தொல்லியல் ஆதாரங்கள் மேலும் உறுதிசெய்கின்றன. இலங்கைக்குரிய பெருங்கற்காலப் பண்பாடு தென்தமிழகத்தில் இருந்து பரவியதற்கே அதிக சான்றுகள் காணப்படுகின்றன. கலாநிதி சிரான் தெரணியாகல நாகர்களே இலங்கைக்குப் பெருங்கற்காலப் பண்பாட்டை பரப்பியவர்கள் எனக் கூறுகின்றார். 1960 களில் புத்தளம், பொம்பரிப்பு பெருங்கற்காலப் பண்பாடு பற்றி ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதானாவும் இக் கருத்தையே முதலில் முன்வைத்துள்ளார். பேராசிரியர் இந்திரபாலா பௌத்த மொழியான பிராகிருத மொழியை ஏற்றுக் கொண்ட மக்கள் அம்மொழி சார்ந்த இனக்குழுவாக உருவாகிக் கொண்டிருந்த போது நாக இன மக்கள் தமிழ் மொழி பேசும் இனக்குழுவாக உருவாகி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழத் தொடங்கினர் எனக் கூறுகிறார். இந்நிலையில் வடஇலங்கையில் கட்டுக்கரை, நாகபடுவான் ஆகிய பெருங்கற்கால மையங்களிலும் நாக வழிபாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இம்மக்களிடையே நாகத்தை குலமரபுத் தெய்வமாக வழிபடும் மரபு தோன்றிவிட்டதை உறுதி செய்வதாக உள்ளது.

kattukarai 1

கட்டுக்கரைத் தொல்லியல் மையம் வடஇலங்கையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து வடகிழக்கே 26 கி.மீ. தொலைவில் வட்டக்கண்டல் பிரதேசத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். குளத்தை மையப்படுத்தி தோன்றிய இக்கிராமத்தின் பெயர் சிங்களத்தில் ‘யோதவெவ’ எனவும், தமிழில் கட்டுக்கரைக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றது. ஆயினும் இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இக்குளம் உட்பட அதைச் சுற்றியமைந்த சில கிராமங்கள் ‘பாலப் பெருமாள் கட்டு’ என்றே அழைக்கப்பட்டது. இலங்கையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த பெருங்குளங்களில் ஒன்றான இக்குளத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு.  2016 – 2017 காலப்பகுதியில் எமது பல்கலைக்கழகத் தொல்லியல் பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள மற்றும் மத்திய கலாசர நிதியம் என்பவற்றின் தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர்களின் துணையோடு இரண்டு இடங்களில் அகழ்வாய்வும், ஏறத்தாழ நான்கு மைல் சுற்றுவட்டத்தில் தொல்லியல் மேலாய்வுகளும் நடாத்தப்பட்டன. இந்த ஆய்வு நடவடிக்கைகளின் போது தென்னிலங்கைத் தொல்லியல் அறிஞர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் அவ்வப்போது பெறப்பட்டன. இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம் பெருங்கற்காலப் பண்பாட்டிற்கும் நாக மரபிற்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுவதாகும். ஆயினும் கட்டுக்கரை ஆய்வுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து கி.பி.13 ஆம் நூற்றாண்டு வரையான வடஇலங்கை வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்குப் புதுச் செய்திகளைச் சொல்வதால் அவற்றை இவ்விடத்தில் சுருக்கமாகக் கூறுவது  பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

kattukarai 2

வடஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாக கட்டுக்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்குடியிருப்பை அநுராதபுரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள மிகப்பெரிய பெருங்கற்கால ஊரிருக்கைப் பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். பெருங்கற்காலப் பண்பாட்டில் குடியிருப்பு, ஈமக்காடு, குளம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அப்பண்பாட்டின் முக்கிய அம்சமாகும். இலங்கையில் இந்த நான்கு அம்சங்களும் ஒரேயிடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கட்டுக்கரை அகழ்வாய்வில் இந்த நான்கு அம்சங்களும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருங்கற்கால ஈமச் சின்னங்களுள் ஈமப்பேழையும் ஒன்றாகும். இலங்கையில் முதன்முறையாகக் கட்டுக்கரை அகழ்வாய்வில் தாழியடக்க முறையுடன், ஈமப்பேழையும் ஈமச்சின்னமும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. வரலாற்று மூலங்கள் பலவும் இலங்கையின் வரலாற்றுப் பழமைவாய்ந்த துறைமுகமாக மாதோட்டத்தைக் கூறுகின்றன. அங்கு 1825 இல் இருந்து அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அங்கு கண்டுபிடிக்கப்படாத தொன்மைச் சான்றுகள் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கட்டுக்கரையில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களிடையே இரும்பு, கல்மணி, சங்கு, மட்பாண்டம் என்பவற்றை உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலைகள் இருந்தமைக்கான உபகரணங்களும், உற்பத்திப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு வேண்டிய கார்ணீலியன் கல்வகைகளும், விலையுயர்ந்த மட்பாண்டங்களும் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துவரும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குரிய தொன்மைச் சான்றுகள் பண்டைய காலத்தில் அநுராதபுரத்திற்கும் மாதோட்டத்திற்கும் இடைப்பட்ட தரைவழிப் பாதையில் கட்டுக்கரை ஒரு நகரமாக வளரச்சி அடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.

தென்னாசியாவில் பிராமி எழுத்து தோன்றுவதற்கு முன்னர் மக்களிடையே குறியீடுகள் ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தில் தோன்றிய இக்குறியீடுகள் மேற்கிந்தியா ஊடாக பெருங்கற்காலப் பண்பாடுவரை தொடர்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் பற்றி ஆராய்ந்த பி.பி. லால், யஸ்தானி போன்ற அறிஞர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட 80 வீதமான குறியீடுகள் சிந்துவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளை ஒத்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இக்குறியீடுகளில் இருந்தே பிராமி எழுத்து தோன்றியதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கட்டுக்கரை அகழ்வாய்வில் ஈமச்சின்னங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களில் சில வகையான குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் குறியீடுகளை ஆய்வு செய்த தென்னிந்தியாவின் முதன்மைத் தொல்லியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் இராஜன் கட்டுக்கரை பெருங்கற்காலக் குடியிருப்புகளின் தோற்றம் தமிழகத்தின் மிகப்பெரிய குடியிருப்பு மையமான கொடுமணலின் சமகாலமாக அல்லது அதற்கு முற்பட்ட காலமாக இருக்கலாம் எனக் கூறுகிறார். அண்மையில்  கட்டுக்கரைப் பிரதேசத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட இராஜரட்டைப் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுக் குழுவினரும் நாம் முன்வைத்திருக்கும் கருத்துக்கள் பலவற்றை தமது ஆய்வு அறிக்கையில் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளதை இவ்விடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

kattukarai 4

எமது தொல்லியல் அகழ்வாய்வின் போது பெருங்கற்காலக் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளிவந்த சமயச் சின்னங்கள் பொது மக்கள் பலரின் கவனத்தைக் கட்டுக்கரையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்ட முறையில் கட்டுக்கரைக் குளத்தின் கரையோரமாக உள்ள காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் ஆறு மீற்றர் நீளமும், மூன்று மீற்றர் அகலமும் கொண்ட ஆறு குழிகளில் அதன் இயற்கை மண் அடையாளம் காணப்படும் வரை அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று வேறுபட்ட கலாசாரமண் அடுக்குகளைக் கொண்ட இவ்வாய்வுக் குழிகளின் மூன்றாவது கலாசார மண் அடுக்கில் செங்கட்டிகள் கொண்டு கட்டப்பட்ட அத்திவாரத்தின் ஒரு பகுதி கண்டுபிடிக்கபபட்டுள்ளது. ஏனைய பகுதி குளத்திற்குள் புதையுண்டு இருப்பதை நீரலையினால் கரையோரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் செங்கற்களும், பிற தொல்பொருட்ச் சான்றுகளும் உறுதிசெய்கின்றன. இக் கட்ட ஆதாரங்கள் இவ்விடத்தில் பழமையான  ஆலயம் அல்லது சமயச் சடங்கு நடந்த மண்டபம் இருந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இக்கட்டிப் பகுதியில் இருந்தே பெருமளவு சுடுமண் சிற்பங்கள், சிலைகள், மணிகள், யானை, குதிரை, நந்தி, முதலான தெய்வ வாகனங்களின் பாகங்கள், அகல் விளக்குகள், தீபங்கள், சமயச் சின்னங்கள், இலட்சனைகள், குறியீடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக் கலைவடிவங்கள் பெரும்பாலானவை களிமண் அல்லது களிமண்ணுடன் குருமணல், நெல் உமி அல்லது வைக்கோல் என்பன கலந்து உருவாக்கப்பட்டு பின்னர் அவை சுடப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இவை தமிழகப் பெருங்கற்காலப் பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சமயச் சின்னங்களைப் பெருமளவு ஒத்ததாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டுவரை இந்து ஆலயங்களும், அவை சார்ந்த கலைவடிங்களும் அழியக்கூடிய மண், மரம், சுதை என்பன கொண்டு அமைக்கப்பட்டவையாகும். இதைச் சமகாலப் பழந்தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிசெய்கின்றன. இம்மரபே சமகால இலங்கையிலும் பின்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கட்டுக்கரை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சமயச் சின்னங்கள் மேலும் சிறந்த சான்றுகளாகும்.

கட்டுக்கரை அகழ்வாய்வில் சிவன், முருகன், விநாயகர், அகத்தியர், நாகபாம்புகள்  முதலான வழிபாடுகளுக்குரிய சின்னங்கள், சிற்பங்கள், சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள் ஐயனார் வழிபாட்டுக்குரிய சான்றுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஆலயத்தை ஐயனாருக்குரிய ஆலயமாக அல்லது ஐயனார் வழிபாட்டுச் சடங்கு நடந்த இடமாக எடுத்துக் கொள்வதே பொருத்தமாகும். தென் தமிழகத்திலும், இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தோன்றிய குளக் குடியிருப்பில் ஐயனாரை முக்கிய தெய்வமாக வழிபடும் மரபு இருந்துள்ளது. இது பொருளாதரச் செழிப்பிற்காகவும், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கொடிய மிருகங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கவும் மக்களால் வழிபடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கு தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகத் தொன்மையான ஐயனார் வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிறந்த சான்றாகும். வன்னியிலும் பண்டுதொட்டு ஐயனார் ஒரு முக்கிய தெய்வமாக வழிபடப்பட்டு வருவதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. கட்டுக்கரை அகழ்வாய்வுகளில் ஐயனார் தெய்வத்தை அடையாளப்படுத்தும் நூற்றுக்கணக்கான யானை, குதிரை என்பவற்றின் உடற்பாகங்கள், தலைப்பகுதிகள், 75 இற்கும் மேற்பட்ட யானைத் தந்தங்கள், 50 இற்கும் மேற்பட்ட யானை, குதிரை, நந்தி முதலான வாகனங்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த மணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.  இவ்வாதாரங்களிடையே யானை அல்லது குதிரையின் மேலமைந்திருந்த பீடத்தில் தெய்வீகக் கோலத்தில் இரு கால்களையும் கீழே தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் இரு பெண் தெய்வங்களின் அரிய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஐயனாரின் இரு தேவியர்களைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவற்றைத் தவிர ஆண், பெண் தெய்வங்களின் தலை உருவங்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை ஐயனார், ஐயனாரின் தேவியர்களின் சிலைகளின் உடைந்த பாகங்களாக இருக்கலாம்.

kattukarai 3

இங்கு ஐயனார் வழிபாட்டுக்குரிய சான்றுகளுடன் சிவன், முருகன், விநாயகர், அகத்தியர் முதலான வழிபாட்டுக்குரிய சான்றுகளும் கிடைத்துள்ளன. இவ்வாதாரங்கள் பிற்கால ஐயனார் ஆலயங்களில் பிறதெய்வங்களையும் வைத்து வழிபடப்படும் மரபு பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்திலிருந்தே தோன்றியதைக் காட்டுகின்றது எனக் கூறலாம். அல்லது பொருளாதாரச் செழிப்பு, பாதுகாப்பு என்பவற்றை வேண்டி ஐயனாரை வழிபாடு செய்த மக்கள் தமது குலத் தெய்வங்களின் உருவங்களை, சின்னங்களை மண்ணிலே செய்து ஐயனாருக்கு காணிக்கையாக வழங்கியிருக்கலாம். அல்லது அவ்விடத்தில் வைத்து வழிபட்டிருக்கலாம் எனக் கருதலாம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட  நந்தி, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், திரிசூலம் என்பன சிவ வழிபாடு இங்கிருந்ததை உறுதி செய்கின்றன. நந்தி, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் முதலான சுடுமண் சிற்பங்கள் முதன் முறையாக கட்டுக்கரை பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை முக்கியமாக நோக்கத்தக்கது. தமிழக ஆதிச்சநல்லூர் பெருங்கற்காலப் பண்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட முருக வழிபாட்டிற்குரிய வேலும், சேவல் சின்னமும் இரும்பால் செய்யப்பட்டிருந்தன. ஆனால் கட்டுக்கரையில் முருகவழிபாட்டை நினைவுபடுத்தும் மயில் சின்னங்களும், அதன் இறகும் சுடுமண் உருவங்களாகக் கிடைத்திருப்பது அவ்வழிபாட்டின் தொன்மையைக் காட்டுவதாக உள்ளது. கட்டுக்கரை அகழ்வாய்வின் போது மிகச் சிறிய கலசங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் வாய்ப் பகுதியில் இருந்து ஏதோவொரு தெய்வ உருவம் வெளிவருவது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. வரலாற்றுக் கதைகளில் அகத்தியரை குடமுனி என அழைக்கும் மரபு காணப்படுவதுடன், அகத்தியர் வழிபாடு இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கலசங்கள் அகத்தியர் வழிபாடு இங்கிருந்ததை நினைவுபடுத்துவதாக இருக்கலாம். ஆயினும் தமிழக இலங்கைப் பெருங்கற்கால மையங்களில் இது போன்ற கலசங்கள் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை.

பண்டு தொட்டு ஐயனார் வழிபாட்டு ஆலயங்களுடன் இணைந்த ஒன்றாக நாகவழிபாடு காணப்படுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஐயனார் ஆலயங்களில் நாகபாம்புகளை வைத்து வழிபடும் மரபைக் காணமுடிகின்றது. இம்மரபு பெருங்கற்காலப் பண்பாட்டிலேயே தோன்றிவிட்டதை கட்டுக்கரை அகழ்வாய்வுகள் உறுதிசெய்கின்றன. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது இலகுவாக சிற்பங்களைச் செதுக்கக் கூடிய வெண்மையான கற்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன. அக்கற்களில் காணப்படும் உருவத்தை ஆய்வு செய்த தமிழக ஆய்வாளர்கள் அவற்றில் உள்ள உருவம் நாக பாம்பைப் பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட  நாக உருவங்கள் வேறுபட்ட தோற்ற அமைப்பில் காணப்படுகின்றன. நீண்ட பெரிய நாக உருவங்களில் சில சாதாரணமாகப் படுத்த நிலையில் காணப்படுகின்றன. ஏனைய நாக உருவங்கள் வளைந்து படமெடுப்பது போன்ற தோற்றத்தில் வாயைப் பிளந்த நிலையில் காணப்படுகின்றன. சிறிய சில நாக உருவங்கள் படமெடுப்பது போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன. இவை மண் சட்டியில் வைத்து வழிபடப்பட்டவையாக இருக்கலாம். சில சிறிய நாக உருவங்கள் பீடத்துடன் காணப்படுகின்றன. இச் சிறிய பீடத்தின் மத்தியில் காணப்படும் அரை வட்ட வளைவு நாகச் சிற்பம் இன்னொரு உருவத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் காட்டுகிறது. இது பிற்கால நாக வழிபாட்டு மரபை நினைவுபடுத்துவதாக உள்ளது. சமகாலத் தொல்லியல் ஆய்வில் இனத் தொல்லியல் (Ethno archaeology) முக்கி இடத்தைப் பெற்று வருகிறது. இது குறிப்பிட்ட இனத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பை ஆராய்கின்றது. இன்று கட்டுக்கரையிலும், பொதுவாக வன்னியிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கும் நாக வழிபாட்டு ஆலயங்களின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அவற்றுள் சிலவற்றின் தொடக்கம் பெருங்கற்காலப் பண்பாடாக இருக்கலாம் என்பதற்கு கட்டுக்கரை அகழ்வாய்வு சிறந்த உதாரணமாகும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க


About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்