தொல்லியல் நோக்கில் கதிரமலை அரசு
Arts
15 நிமிட வாசிப்பு

தொல்லியல் நோக்கில் கதிரமலை அரசு

August 4, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கைத் தமிழரிடையே அரச மரபு தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆராய முற்படும் ஒருவர் அதன் தொடக்கப் புள்ளியாக தலைநகர் கதிரமலையைக் குறிப்பிடுவார். இதற்கு, 17 – 18 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான தமிழ் இலக்கியங்களில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் உக்கிரசிங்க மன்னன் சோழ இளவரசியான மாருதப்புரவல்லியை பட்டத்தரசியாகக் கொண்டு கதிரமலையில் இருந்து ஆட்சி செய்த வரலாறு கூறப்பட்டிருப்பது முக்கிய காரணமாகும். இக் கதிரமலையைக் கந்தரோடையென அடையாளப்படுத்திய முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் முதலான முன்னோடி வரலாற்று அறிஞர்கள், இது சிங்கை அரசுக்கு முன்னர் வடஇலங்கையில் தோன்றிய முதலாவது தமிழ் அரசின் தலைநகர் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் தமிழ் இலக்கியங்களில் வரும் உக்கிரசிங்கன் – மாருதப்புரவல்லி கதையை நம்பகத்தன்மையற்ற புனைக் கதையெனக் கூறும் பிற்கால வரலாற்றறிஞர்கள் கி.பி.13 ஆம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை மீது படையெடுத்த பாண்டியப் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு தோற்றுவித்த அரசே முதலாவது தமிழ் அரசு என வாதிட்டனர். ஆனால் இக்கருத்தை முன்னிலைப்படுத்தி வாதிட்டு வந்த அறிஞர்களே இன்று சமகாலத் தொல்லியற் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்திற்குச் சமமான காலத்தில் இலங்கைத் தமிழரிடம் அரச மரபு உருவாகியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதால், தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கதிரமலை அரசுக்கு தொல்லியல், இலக்கிய ஆதாரங்களை எடுத்துக் கூறுவது இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கையில் நிலையான கிராமக் குடியிருப்பு, இரும்பின் உபயோகம், நகரமயமாக்கம் என்பன தோன்றுவதற்கும், அவற்றின் பின்னணியில் அரச உருவாக்கம் நிகழ்வதற்கும், தென்னிந்தியாவில் இருந்து, அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து, இற்றைக்கு 3000 ஆண்டளவில் புலம்பெயர்ந்து வந்த பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய திராவிட மக்களே காரணம் என்பது இன்று தொல்லியலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான உண்மையாகும். வட இலங்கையில் இப்பண்பாட்டு மக்களது குடியேற்றம் நிகழ்ந்த இடங்களாக மாதோட்டம், பூநகரி, வெற்றிலைக்கேணி, அரியாலை, சாட்டி, காரைநகர், ஆனைக்கோட்டை, கந்தரோடை முதலான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் அநுராதபுரத்திற்கு அடுத்த நிலையில் மிகப்பரந்த அளவில் பெருங்கற்காலக் குடியிருப்பை கொண்டிருந்த இடமாக கந்தரோடை காணப்படுகிறது. இங்கு ஏறத்தாழ இரண்டரைக் கிலோ மீற்றர் நீள அகலத்தில் இப்பண்பாட்டு மக்களது குடியிருப்புக்கள் இருந்தமைக்கான சான்றுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. 1980 களில் குடா நாட்டின் புராதன குடியிருப்பு மையங்கள் பற்றி ஆய்வு நடாத்திய பேராசிரியர் பொ. இரகுபதி அக் குடியிருப்புகளின் தலைமைக் குடியிருப்பாகக் கந்தரோடை இருந்ததெனக் குறிப்பிடுகின்றார்.

பரந்த அளவில் பெருங்கற்காலக் குடியிருப்புக்குரிய சான்றுகள் காணப்படுவதும், அப் பண்பாடு தொட்டு தற்காலம் வரை அங்கு மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதற்கான தொல்லியற் சான்றுகள் செறிவாகக் காணப்படுவதும் அவ்வாறு கூறியிருப்பதற்குக் காரணமாகும். அத்துடன் இப் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களுடன், மங்கிய நிலையில் பிற நாடுகளுக்குரிய கல்மணிகள், பல அளவுகளில் பல வடிவங்களில் அமைந்த மட்பாண்டங்கள், மதுச் சாடிகளின் உடைந்த பாகங்கள், கண்ணாடிப் பொருட்கள், நாணயங்கள் எனப் பலவகைச் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச் சான்றுகள், இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப் பிரதேச மக்கள் இந்திய, கிரேக்க, உரோம, அரேபிய மற்றும் சீன நாடுகளுடன் வணிக – கலாசார உறவுகளைக் கொண்டிருந்ததைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

1917 இல் கந்தரோடையில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்ட போல் பீரிஸ் என்ற அறிஞர் அங்கு கிடைத்த பலதரப்பட்ட தொல்லியற் சின்னங்களை ஆதாரமாக எடுத்துக்காட்டி, புராதன காலத்தில் அநுராதபுரத்திற்கு அடுத்த தலைநகராக கந்தரோடை திகழ்ந்ததெனக் குறிப்பிட்டார். அவர் எடுத்துக் காட்டிய இந்திய, கிரேக்க, உரோம நாடுகளுக்குரிய ஆதாரங்கள், இலங்கையின் ஆரம்பகால அரசுகள் தோன்றிய அநுராதபுரம், மகாகமை போன்று கந்தரோடையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டு முதிர்ச்சி நிலையில் நகரமயமாக்கமும், அரச உருவாக்கமும் ஏற்பட்டமைக்குச் சான்றாகும். இலங்கையின் அரச உருவாக்கம் நிகழ்ந்த வரலாற்றை ஆய்வு செய்த குணவர்த்தனா, பெரும்பாலும் பெருங்கற்காலக் குடியிருப்புகள் காணப்பட்ட மையங்களில் கிடைத்த பிராமிக் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றுத் தொடக்க காலத்தில் ஏறத்தாழ 268 சிற்றரசுகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தமிழகத்தைப் போல் இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாடு வழியாக அரசு தோன்றியதாகக் கூறும் பேராசிரியர் சுதர்சன் செனிவரட்ன, அதை இனக்குழு நிலையில் இருந்து அரசு உருவாகுவதற்கு இடைக்கட்டமாகத் தோன்றிய அரசுகள் எனக் குறிப்பிடுகிறார். இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இருந்து, அநுராதபுரத்தை அடுத்து மிகப் பரந்த அளவில் பெருங்கற்காலக் குடியிருப்புக்களைக் கொண்டிருந்த இடமாக கந்தரோடை அடையாளம் காணப்பட்டுதால், இங்கும் குறுநில அரசுகள் தோன்றில்ருக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றிற்குச் சார்பாக இங்கு சில சான்றுகளை எடுத்துக்காட்டலாம்.

1988 அளவில் கந்தரோடையில் தொல்லியல் ஆய்வினை மேற்கொண்ட சேயோன் என்ற அறிஞர் அங்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த நாணயங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். அவை இலங்கைக்குரிய தனித்துவமான நாணயங்களாகும். அந்நாணயங்கள் சிலவற்றில் தமிழுக்குரிய எழுத்துகளை தெளிவாகக் காணமுடிகிறது. அவற்றில் ஒரு நாணயத்தின் முற்பக்கத்தில் கஜலட்சுமியின் ஆரம்ப தோற்றமான ஸ்ரீத்ஸாவும், பின்பக்கத்தில் கபதிகன் என்ற தமிழ்ப் பெயரும் காணப்படுகின்றன. தென்னாசியாவில் பண்டு தொட்டு நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் அரசுக்கு அல்லது அரச அங்கீகாரம் பெற்ற தலைவனுக்கே இருந்து வந்துள்ளது. கந்தரோடையில் தனித்துவமான நாணய மரபு காணப்பட்டுள்ளமை, இங்கு அரசு இருந்ததற்குச் சான்றாகும். 1999 – 2000 ஆண்டு காலப் பகுதியில் கந்தரோடையில் தொல்லியல் ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியர் கிருஷ்ணராஜா, அங்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். இவ்வாதாரங்கள் இக் காலப் பகுதியிலேயே, எழுத்துவாசனை உடைய மக்கள் இப்பிராந்தியத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்றாகும். தமிழகத்திலும், இலங்கையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்கள் கி.மு. 3 ஆம் நுாற்றாண்டளவில் எழுத்தின் பயன்பாட்டை அறிந்திருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. ஆனால் அவை எல்லாப் பெருங்கற்காலக் குடியிருப்பு மையங்களிலும் பரவலாக இருந்ததெனக் கூறமுடியாது. மாறாக அரச தோற்றம், கட்டமைப்புடைய சமூக உருவாக்கம் நிகழ்ந்த இடங்களிலேயே பரவலாக இருந்துள்ளன. இந்த அம்சம் கந்தரோடையில் காணப்பட்டமை அங்கு அரசு உருவாக்கம் நிகழ்ந்தமைக்கு இன்னொரு சான்றாகும்.

கந்தரோடைக்கு தென்மேற்கே ஆனைக்கோட்டை என்ற இடத்தில் 1980 களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வு, கந்தரோடையிலும் பெருங்கற்காலப் பண்பாட்டு வழியாக அரசு தோன்றியிருக்கலாம் என்பதற்கு இன்னொரு சான்றாகக் காணப்படுகிறது. குடாநாட்டில் பெருங்கற்காலக் குடியிருப்போடு, அப் பண்பாட்டுக்குரிய ஈமச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு இடமாக ஆனைக்கோட்டை காணப்படுகிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஈமச் சின்னத்தின் தலைமாட்டுப் பகுதியில் வைக்கப்பட்ட பாத்திரம் ஒன்றில் ஈரெழுத்துப் பொறித்த முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

முத்திரையின் கீழ்ப்பகுதியில் பிராமி எழுத்தில் ‘கோவேத’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் முதலெழுத்தாக வரும் ‘கோ’ என்ற சொல்லுக்கு அரசன், வேந்தன் என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம் முத்திரைச் சாசனம் இங்கு தமிழ்ச் சிற்றரசு இருந்ததற்கான முக்கிய சான்றாக அமைகிறதெனப் பேராசிரியர் இந்திரபாலா குறிப்பிடுகிறார். ஆகவே நம்பகத் தன்மையுடைய தொல்லியல் ஆதாரங்களை வைத்து நோக்கும்போது தென்னிலங்கையைப் போல் சமகாலத்தில் வடஇலங்கையிலும் அரசுகள் தோன்றியிருந்ததெனக் கூறலாம். அதில் கந்தரோடை முக்கிய தலைமை அரசாக இருந்திருக்கலாம் என்பதையே அங்கு பரவலாகத் காணப்படும் தொல்லியற் சான்றுகள் உறுதிசெய்கின்றன. இதற்குச் சார்பாக, அநுராதபுரத்தை முன்னிலைப்படுத்திக் கூறும் பாளி இலக்கியங்களிலும் சில சான்றுகள் காணப்படுகின்றன.

பண்டுதொட்டு இலங்கை வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாக வடஇலங்கை காணப்படுகிறது. மஹா வம்ஸத்தில் நாகதீப (ம்) என அழைக்கப்பட்ட இப்பிராந்தியம், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொலமியின் குறிப்பில் ‘நாகடிப’ எனவும், வல்லிபுரத்தில் கிடைத்த கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொற்சாசனத்தில் ‘நகதிவ’ எனவும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் இது நாக நாடு என அழைக்கப்பட்டதற்கு தமிழகத்தில் தோன்றிய இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையிலும், வேலுார்ப்பாளையப் பல்லவச் செப்பேட்டிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. அநுராதபுரத்திற்கு வடக்கே கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1 ஆம் நுாற்றாண்டைச் சார்ந்த பிராமிச் சாசனம் ஒன்று வட இலங்கையில் இருந்த நாக நகர் பற்றிக் கூறுகிறது. இது நாகர்கள் வாழ்ந்த நகரம் என்ற பொருளில் அமைந்துள்ளது. பிராகிருத மொழியில் ‘நஹநஹர’ (Naganara) என எழுதப்படும் இப்பெயர், இச்சாசனத்தில் தமிழில் ‘ந(ா)கநகர்’ (Nakanakar) என எழுதப்பட்டுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் இரகுபதி இந்த ‘நாகநகர்’ அக்காலத்தில் கந்தரோடையின் தலைநகராக இருந்திருக்கலாம் அல்லது கந்தரோடையைக் குறித்திருக்கலாம் எனக் கருதுகிறார்.

அநுராதபுர அரசை முதன்மைப்படுத்திக் கூறும் முதல் வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான மஹாவம்ஸம் கி.மு. 6 ஆம் நுாற்றாண்டில் புத்தர் இலங்கை வந்தபோது இந் நாகதீபத்தில் இரு நாக மன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் போராட்டத்தை தீர்த்து வைத்ததாகக் கூறுகிறது. மஹாவம்ஸம் கூறும் புத்தர் வருகை ஒரு ஐதிகமாக இருப்பினும், இந்நூல் எழுதப்பட்ட கி.பி 6 ஆம் நுாற்றாண்டில், அநுராதபுரத்திற்கு வடக்கில் இருந்த நாகதீபத்தில் அரச மரபு தோன்றி வளர்ந்ததை இது உறுதிப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். மிகிந்தலையில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 2 ஆம் நுாற்றாண்டைச் சார்ந்த பிராமிச் சாசனம் ஒன்று ‘தீபராஜா’ என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவனைப் பற்றிக் கூறுகிறது. இவன் நாகதீபத்தில் ஆட்சி செய்த மன்னனாக இருக்கவேண்டும் என பேராசிரியர் பரணவிதானா குறிப்பிடுகிறார். சமகால வரலாறு கூறும் ‘ஸம்மோஹ விநோதனீ’ என்ற பாளி நுால் நாகதீபத்து ஆட்சியாளன் ‘தீபராஜ’ என்ற விருதைப் பெற்றிருந்தான் எனக் கூறுகிறது. பேராசிரியர் இந்திரபாலா ‘தீபராஜ’ என்ற பெயரே பின்னர் தமிழில் ‘தீபத்தரையன்’ என மாறியதாகக் குறிப்பிடுகிறார். இந்த ஆதாரங்கள் அனைத்தும் நாகதீபம் எனப்பட்ட வடஇலங்கையில், கந்தரோடையை மையப்படுத்திய பலமான சிற்றரசு இருந்திருக்கின்றது என்பதினைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

இந்த இடத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் அநுராதபுரத்திற்கு தெற்கே மிகத் தொலைவிலமைந்த தென்னிலங்கையுடனும், அங்கு ஆட்சியிலிருந்த சிற்றரசுகளுடனும், அநுராதபுர அரசிற்கு இருந்த அரசியல் உறவுகளை விரிவாகக் கூறும் பாளி இலக்கியங்கள், அநுராதபுரத்திற்கு வடக்கே மிகக் கிட்டிய தொலைவில் இருந்த நாகதீபத்துடனான அரசியல் உறவு பற்றி, குறைந்த அளவு தானும் கூறவில்லை. இந்த வேறுபாட்டை நோக்கும் போது இக்காலத்தில் வட இலங்கை அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உட்பட்டிருக்கவில்லை என எண்ணத் தூண்டுகிறது. ஆனால் ஆறாம் நூற்றாண்டின் பின்னர் இந் நிலையில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். இதற்கு தமிழகத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கு ஒரு காரணம் எனக் கருதலாம். பேராசிரியர் கே.எம்.டீ. சில்வா, பக்தி இயக்கத்தின் செல்வாக்கே இலங்கையில் இந்து, பௌத்தம் என்ற சமய வேறுபாடு தோன்றி தமிழரும், சிங்களவரும் தமது இனத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாப்பதில் முனைப்பு பெறுவதற்கும், அதன் விளைவால் தமிழர் வாழ்ந்த பிராந்தியங்கள் தென்னிந்தியப் படையெடுப்பாளருக்கு ஆதரவு வழங்கும் தளமாக மாறுவதற்கும் காரணமாக அமைந்தது என கூறுகிறார். இந்த மாற்றங்கள் முதலில் ஏற்பட்டதன் தொடக்க வாயிலாக நாகதீபம் காணப்பட்டதால் இங்கிருந்த ஆட்சி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் எனக்கருத இடமுண்டு. ஏனெனில் இக் காலத்திலிருந்தே வடஇலங்கைக்கும் அநுராதபுர அரசிற்கும் இடையிலான அரசியல் உறவுகள் பற்றிய தகவல்கள் பாளி இலக்கியங்களில் காணப்படுகின்றன. அந்த உறவுகூட அநுராதபுர அரசின் மேலாதிக்கம் இங்கிருந்ததைக் கூறாது, அநுராதபுர அரசிற்கெதிராக வடஇலங்கையில் இருந்து ஏற்பட்ட படையெடுப்புகள், கிளர்ச்சிகள் பற்றியதாகவே உள்ளன. இது தொடர்பாக பேராசிரியர் இந்திரபாலா கூறும் கருத்துகளை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

“உத்தரதேஸத்தைப் (வட இலங்கை அல்லது நாகதீபம்) பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்தால் அப் பிரதேசம் ஏனைய பிரதேசங்களைவிட வேறுபட்டதாக இருந்தது என்பதை அறியலாம். அநுராதபுரத்து மன்னர்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு பிரதேசமாக அதனைக் காணலாம். அநுராதபுர ஆட்சியை எதிர்த்தோர் அங்கு ஆதரவு பெற்றதையும் காணலாம். முற்பட்ட நூற்றாண்டுகளைப் போல் அல்லாது, ஆறாம் நூற்றாண்டின் பின், தென்னிந்தியாவிலிருந்து வந்த படைகள் வடபகுதியில் வந்து இறங்குவதையும் அவதானிக்க முடிகிறது. அப்படி வந்த படைகள் வடக்கில் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின், அநுராதபுரத்தை நோக்கி முன்னேறின. இவற்றை நோக்குமிடத்து அநுராதபுரத்து ஆட்சியாளருக்குச் சாதகமான சூழ்நிலை வடபகுதியில் நிலவவில்லை என்பது தெளிவு.”

இந்நிலை அநுராதபுர அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாகதீபத்தில் மேலும் தீவிரமடைந்ததைக் காணலாம். சோழர் கி.பி. 993 இல் அநுராதபுர அரசைக் கைப்பற்றி பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு 77 ஆண்டுகள் நேரடி ஆட்சி நடத்தியதன் மூலம், இலங்கைப் பண்பாட்டு வரலாற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவர்களின் நேரடி ஆட்சியே இலங்கைத் தமிழர் வரலாறு தனிப்போக்குடன் வளர்வதற்கு முக்கிய காரணம் எனப் பேராசிரியர் பத்மநாதன் கூறுகிறார். முதலாம் இராஜராஜ சோழன் 993 இல் அநுராதபுர அரசைக் கைப்பற்றி பொலநறுவையைத் தலைநகராக மாற்றிய நிகழ்ச்சியே இலங்கையில் சோழர் ஆட்சியின் தொடக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சோழர் எழுச்சி பெற்ற காலத்தில் இருந்து அவர்கள் இலங்கை மீது மேற்கொண்ட படையெடுப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் நோக்கினால், சோழர் அநுராதபுர அரசை வெற்றி கொள்வதற்கு முன்னரே வடஇலங்கையில் அவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டதெனக் கூறலாம். இது பற்றிப் பேராசிரியர் இந்திரபாலா பின்வருமாறு கூறுகிறார்: 

“சோழப் படையெடுப்புக்களின் (முதலாம், இரண்டாம் பராந்தகச் சோழன்) விளைவாக வடபகுதி, வடகிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிரதேசம் சோழர் ஆட்சிக்கு உட்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இடமுண்டு. ஏற்கனவே பல்லவர் தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த போது, இப் பிரதேசத்தில் பல்லவர் அதிகாரம் பரவியிருக்க கூடும் எனக் கூறப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், சோழர் படைகள் வட பகுதியில் வந்திறங்குவதைக் காணலாம். பராந்தகச் சோழன் காலத்தில் இப்பிரதேசத்தில் சோழர் ஓரளவு அதிகாரம் பெற்றிருப்பர் என்றே தோன்றுகிறது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்திலேயே சோழர் பொலநறுவையில் தங்கள் நிர்வாகத்தை நிறுவியிருந்தார்களா என்று தெரியவில்லை. அவர்களின் அதிகார மையம் பொலநறுவைக்கு வடக்கே அல்லது கிழக்கே பதவியா அல்லது கந்தளாய் போன்ற ஓர் இடத்தில் இருந்து பின்னர் பொலநறுவைக்கு மாற்றப்பட்டிருத்தல் கூடும்.

இச் சோழரின் வருகையைத் தொடர்ந்தே உக்கிரசிங்கன் – மாருதப்புரவல்லியின் ஆட்சி தலைநகர் கதிரமலையில் இருந்து சிங்கை நகருக்கு இடமாறியதாக யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் சூசகமாகத் தெரிவிக்கின்றன. இவ்விலக்கியங்கள் பிற்காலத்தில் எழுந்திருந்தாலும் அவை தோன்றிய காலத்தில் சோழர் வரலாறு தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ வெளிச்சத்திற்கு வரவில்லை. அவற்றைக் கண்டறியும் நோக்கில் தொல்லியல், வரலாற்று ஆய்வுகளும் வளரவில்லை. அப்படியிருந்தும் 800 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி மறைந்த சோழரின் வரலாற்றுடன் கதிரமலை அரசைத் தொடர்புபடுத்தி தமிழ் இலக்கியங்கள் கூறியிருப்பது, கதிரமலை அரசின் வரலாற்று நினைவுகளை இலங்கைத் தமிழர்கள் மறக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஆகவே வரலாற்று அறிஞர்கள் கதிரமலையைக் கந்தரோடையென அடையாளப்படுத்துவது பொருத்தமாயின் அங்கு ஒரு அரச மரபு தோன்றி வளர்ந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில், அங்கு கிடைக்கும் நம்பகத்தன்மை கொண்ட தொல்லியற் சின்னங்களுக்கு என்றும் முக்கிய இடமுண்டு.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4420 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)