இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் : 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி
Arts
17 நிமிட வாசிப்பு

இலங்கையின் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் : 2024 ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கான ஓர் கொள்கை வழிகாட்டி

November 22, 2024 | Ezhuna

ஆங்கில மூலம் : அசங்க வெலிக்கல

‘Abolition of Executive Presidency: A Voters Policy Guide to the 2024 Presidential Election’ என்ற தலைப்பில் இலங்கையின் சட்டத்துறை அறிஞரும், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுபவருமான அசங்க வெலிக்கல (Asanka Welikala) ‘Groundviews’ எனும் இணைய இதழில் ஓர் கட்டுரையை வெளியிட்டார். 15 வினாக்களையும், அவ் வினாக்களுக்கான விடைகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை ஜனாதிபதிமுறை (Presidentialism) பற்றிய விமர்சன நோக்கிலான நுட்பமான பகுப்பாய்வாக விளங்குகிறது. செறிவான கருத்துகளையுடைய இந்த ஆங்கிலக் கட்டுரையை எளிமைப்படுத்திய தமிழாக்கமாகத் தந்துள்ளோம். 

  1. வினா: 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் படியான நிறைவேற்று ஜனாதிபதிமுறை என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவீர்களா?

விடை:

அ) ஜனாதிபதி, வாக்காளர்களால் அரசின் தலைவர் (Head of State) என்ற பதவி நிலைக்குத் தெரிவு செய்யப்படுகிறார். அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அரசின் நிர்வாக அதிகாரத்தைச் செயற்படுத்துபவராக (Exercises the Executive Power of the State) விளங்குகிறார்.

ஆ) ஜனாதிபதி பிரதமருடனும், அமைச்சர்களுடனும் சேர்ந்தே நிர்வாக அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார். பிரதமரும் மந்திரிசபை உறுப்பினர்களான அமைச்சர்களும் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாகவும், பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

இ) ஜனாதிபதி மந்திரிசபையின் தலைவராவர். பிரதமரையும் மந்திரி சபையின் அமைச்சர்களையும் அவரே நியமனம் செய்கின்றார். அவரால் பிரதமரையும், அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யவும் முடியும்.

ஈ) மந்திரிசபை கூட்டாக (Collectively) பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறவும் பதிலளிக்கவும் வேண்டியதாக உள்ளது. அத்தோடு பாராளுமன்றம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் மந்திரிசபையைப் பதவி நீக்கம் செய்யலாம்.

உ) ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும், ஆனால் அவர் பதிலளிக்க வேண்டியதில்லை (Responsible but not Answerable). பாராளுமன்றம் ‘Impeachment’ எனப்படும் குற்றஞ் சாட்டல் நடைமுறை மூலம் ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யலாம்.

  1. வினா: 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் படியான ஜனாதிபதி ஆட்சி முறையை எத்தகைய அரசாங்க ஆட்சி வகை (Regime Type) என்று வகைப்படுத்திக் கூறலாம்?

விடை:

அ) இதுவொரு சர்வாதிகார அரசாங்க ஆட்சி வகையாகும் (It is an authoritarian regimes type).

ஆ) தேர்தல் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகிறார். பாராளுமன்றமும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நிர்வாகியாகிய ஜனாதிபதிக்கு அடுத்த தேர்தல் நடைபெறும் வரை கட்டுப்பாடுகள் என்று சொல்வதற்குப் பெரிதாக எதுவும் இருக்க மாட்டாது. அவரின் தற்துணிவு அதிகாரம் தடையின்றிச் செயற்படும். இதனைக் கையளித்துவிட்ட ஜனநாயகம் (Delegated Democracy) என்று கூறுவர்.

இ) ஜனாதிபதி என்ற நிர்வாகி அரசின் ஏனைய துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறார். பாராளுமன்றம் அவர் மீது கட்டுப்பாடு எதனையும் விதிக்க முடியாது. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் ஜனாதிபதியைக் கட்டுப்படுத்துதல் நிகழ இடமுண்டு.

ஈ) நிர்வாகத்துறை, நிதித்துறை, ஆயுதப் படைகள் முதலிய நிறுவனங்களை உள்ளடக்கிய அரசு யந்திரம் (State Apparatus) இறுதியிலும் இறுதியாக ஜனாதிபதி என்ற தனிநபர் ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

உ) நீதித்துறையின் சுதந்திரம் நடைமுறையில் பாதிப்புக்கு உள்ளாகிறது. நிர்வாகத் துறையின் மேலாதிக்கத்தாலும் (Executive Dominance) அதிகாரத்தைத் தனிநபர் சார்ந்ததாக ஆக்குவதாலும் (Personalisation) ஜனாபதியின் அதிகாரம் சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) இல்லாமல் செய்து விடுகிறது.

ஊ) உயர்குழுவினரான அதிகாரிகளை ஒருங்கிணைத்தல் (Coordinating Elites), கீழ்மட்ட அதிகாரிகளைக் கட்டுப்படுத்தல், ஆளப்படும் மக்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் ஆகியன ஜனாதிபதி என்ற தனி நபரின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறுகின்றன. இந்நிகழ்ச்சி நிரலுக்குச் சேவகம் செய்வதாக அரசியல் யாப்பு விளங்குகிறது.

  1. வினா : ஜனாதிபதி முறையின் கீழ் உருவாகியுள்ள ஆளுகைப் பண்பாடு (Culture of Governance) எத்தகையது எனக் கூறுவீர்களா?

விடை :

அ) அரச அதிகாரம் ஜனாதிபதியென்ற பதவிநிலையின் பக்கம் குவிக்கப்பட்டுள்ளது. அவ்வதிகாரங்கள் ஜனாதிபதி என்ற தனி நபரின் சார்புடையனவாக (Personalised) ஆக்கப்பட்டுள்ளது.

ஆ) ஜனாதிபதியின் அதிகாரங்களை எல்லைப்படுத்தும் கட்டுப்படுத்தல்களும் சமன்படுத்தல்களும் (Checks and Balances) பலமற்றவையாக உள்ளன.

இ) ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுதல், அதிகாரங்கள் தனிநபர் சார்புடையனவாக ஆக்கப்படுதல் என்பன இடம்பெறுவதால் எல்லை மீறிய அதிகாரங்களையுடைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அரச நிறுவனங்களைப் பலவீனப்படுத்துகின்றன. அந்நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

ஈ) ஜனாபதிமுறை ‘வெகுஜனக் கவர்ச்சி’ பெற்ற சர்வாதிகாரி (Populist Strongman) என்ற வீரவழிபாட்டுப் பண்பாட்டை ஊக்குவிக்கிறது. பொறுப்புடைய பிரஜைகள் சமூகத்தை இப் பண்பாடு உருவாக்குவதில்லை. பலமுடைய, வீரியமுடைய நிறுவனங்களைக் கட்டி வளர்ப்பதற்கும் இம்முறை உதவுவதில்லை.

  1. வினா: உறுதி நிலையுடைய அரசாங்கத்தை (Stable Government) அமைப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிமுறை தேவை எனக் கூற முடியுமா?

விடை  :

அ) நிறைவேற்று ஜனாபதிமுறை உறுதி நிலைநிலையுடைய அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவுகிறது என்றே கூறப்படுகிறது. ஜனாபதி குறித்தவொரு காலப்பகுதியில் (Fixed Term) பதவியில் இருப்பதற்காகத் தெரிவு செய்யப்படுகிறார். ஜனாதிபதிக்கு தனியான மக்களாணை (Independent Mandate) வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆட்சி உறுதி நிலையுடையதாக அமைக்கிறதென்றும் கூறப்படுகிறது.

ஆ) கோட்பாடு இவ்வாறிருக்க யதார்த்த நிலையோ (Reality) வேறாக உள்ளது. ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பு பல பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. இந்தப் பாதுகாப்புகளை அவர் ஒரு கேடயம் போன்று பயன்படுத்தி கட்டுப்படுத்தல்களும் மட்டுப்படுத்தல்களும் (Checks and Balances) தமது செயற்பாடுகளைத் தடை செய்யாத வகையில் தப்பிக் கொள்கிறார்.

இ) ஜனாதிபதி ஒருவரை பொறுப்புக்கூற வைக்க முடியாது. அவரைப் பதவி நீக்கவும் முடியாது. இதனால், பலவீனமானவரும் திறமையற்றவருமானவரான ஒருவர் பதவியில் நீடிக்கலாம். ஊழல் புரிபவராகவும் சர்வாதிகாரியாகவும் மாறுகின்ற அத்தகைய ஒருவர், ஜனாதிபதிப் பதவியில் தொடரக்கூடிய சாத்தியப்பாடு அதிகமாகவே உள்ளது.

  1. வினா: பொருளாதார வளர்ச்சியடைவதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை தேவையா?

விடை:

அ) ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும் ஒருவர் குறிப்பிட்ட கால எல்லைக்கு பதவி வகிப்பார். நேரடியாக வாக்காளர்களால் அவர் தெரிவு செய்யப்படுகிறார். அவருக்கு மக்களினால் தனித்த ஆணை வழங்கப்படுகிறது. இக் காரணங்களால் ஜனாதிபதி பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இது கோட்பாட்டளவில் சரி போலவே தோன்றலாம்.

ஆ) ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக உள்ளது. கட்டுப்படுத்தல்களும் சமன்படுத்தல்களும் செயலிழப்பதால் ஒருதலைப்பட்சமான, வெளிப்படைத்தன்மையற்ற பொருளாதார முடிவுகளை ஜனாதிபதி எடுக்கலாம். இதனால் வினைத்திறனற்றதும் ஊழலுக்கு இடந்தருவதுமான பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

இ) 1978 அரசியல் யாப்பு புகுத்தப்பட்ட காலம் தொட்டு இலங்கை பிறநாடுகளோடு ஒப்பிடும் போது தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவுக்கு உட்பட்டதைக் காண முடிகிறது. தவறான பொருளாதார முடிவுகளால் இலங்கையில் அடிக்கடி பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. இம்முடிவுகளை மேற்கொண்ட ஜனாதிபதிகளைக் கட்டுப்படுத்தும் வழிவகைகள் இருக்கவில்லை.

  1. வினா: நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிமுறை வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புக் கூறலையும் வளர்ப்பதற்கு உதவுகிறதா?

விடை :

அ) நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை வடிவமைத்ததன் நோக்கமே, ஜனாதிபதி ஒருவரின் நாளாந்தச் செயற்பாடுகளில் பொறுப்புக்கூறல், கட்டுப்பாடுகள் இருத்தலாகாது, அவற்றைத் தளர்த்த வேண்டும் என்பதாகும்.

ஆ) ஜனாதிபதியின் கையில் அதிகாரங்கைளைக் குவிப்பதன் மூலம், அவர் தன் விருப்பப்படி செயற்படுதல் ஊக்குவிக்கப்படுகிறது. முடிவு எடுத்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போகிறது.

இ) ஆகையால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ‘தலைவரை நம்புதல்’ (Trusting the Leader) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. தலைவரை நம்புதல் என்ற கருத்து வெளிப்படைத் தன்மை, பொறுக்கூறல் என்பனவற்றிற்கு எதிரானது.

ஈ) நிறைவேற்று ஜனாதிபதியின் மீதான நம்பிக்கை இழக்கப்படும் போது அல்லது அவர் நம்பிக்கையைத் துஸ்பிரயோகம் செய்யும் போது, நிர்வாகமுறையில் சுய திருத்தம் (Self Correction) என்ற செயல்முறை இயங்குவதில்லை. இதனால் அரசியல் நெருக்கடி (Political Crisis) தோன்றும். அத்தகைய நிர்வாக முறைமை வினைத்திறமையற்றதாகி விடும். சமூகத்திற்குப் பாரிய பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன.

  1. வினா: நாட்டில் இனங்களிற்கிடையிலான இணக்கப்பாட்டையும் நல்லுறவையும் வளர்ப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதிமுறை தேவையானதா?

விடை :

அ) ஜனாதிபதி முழு நாட்டினதும் மக்களிடமிருந்து பெறப்படும் தேசிய வாக்கினால் (National Vote), 50+1 என்ற பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்படுகிறார். ஆகையால் அவர் நாட்டின் எல்லா இன மக்களினதும் பெரும்பான்மை ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இது கொள்கையளவில் சரியானதே.

ஆ) ஆனால் நடைமுறை யதார்த்தம் எதிர்மாறானதாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும்பான்மை இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையினத்தின் தேசியவாதத்தைத் தூண்டி விடும் பிரசாரத்தைச் செய்கிறார்கள். இதனால் நாட்டின் சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன.

இ) நிறைவேற்று ஜனாதிபதிமுறை புகுத்தப்பட்ட பின்னர்தான் 1980 இல் இலங்கை உள்நாட்டு யுத்தம் என்ற பேரழிவுப் பொறிக்குள் வீழ்ந்தது ஒன்றும் தற்செயலானதன்று.

  1. வினா: நாட்டின் புவியியல் இடப்பரப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவைதானா?

விடை:

அ) அரசின் தலைவரான ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலின் போது, முழுநாட்டினையும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கொண்டு, வாக்காளர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்படுகிறார். இதனால் நாட்டின் புவியியல் இடப்பரப்பின் ஒருமைப்பாடு (Territorial Integrity) உறுதி செய்யப்படுகிறது என்று கருதப்படுகிறது. கோட்பாட்டு நிலையில் இது உண்மை போலத்தான் தோன்றுகிறது.

ஆ) ஆனால் நாட்டின் புவியியல் இடப்பரப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு ஜனாதிபதிமுறை அவசியமானது என்று கூறமுடியாது. உலகில் பாராளுமன்றமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பல உள்ளனவே. அவை எதிர்காலத்தில் துண்டங்களாகச் சிதறிப்போகும் என்ற அனுமானத்தின்படி அமைக்கப்பட்டனவா?

இ) அதிகாரப் பரவலாக்கம் மூலம் அதிகாரப்பகிர்வு (Power Sharing) பிரதேச ரீதியாகச் சமத்துவமாகப் பகிரப்படுவதற்கு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் மிகையாகக் குவிக்கப்படுவது தடையாக அமைவதால், பிரதேச ஒருமைப்பாட்டை அரசியல் ஒற்றுமை (Political Unity) மூலம் பாதுகாப்பதற்கு ஜனாதிபதிமுறை முட்டுக் கட்டையாக அமைகிறது.

  1. வினா: நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை எவ்வாறு பாராளுமன்றத்தினைப் பாதிக்கிறது?

விடை:

அ) நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை பாராளுமன்றத்தை நிறைவேற்றுத் துறைக்குக் கீழ்ப்பட்டதாக மாற்றி அதன் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்து விட்டது. 1978 இற்கு முற்பட்ட காலத்தில் பாராளுமன்றம் பிரதிநிதித்துவத்திற்கான (Representation) அவையாகவும், விவாதங்கள் மூலம் விடயங்களைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுத்தலுக்கான (Deliberation) அவையாகவும், அதிகாரத்தின் உறைவிடமாகவும் விளங்கியது. 1978 அரசியல் யாப்பு ஜனாதிபதி பதவியை அதிகாரத்தின் உறைவிடமாக மாற்றிவிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதனால் பல பிரதிநிதிகள் கொண்ட கூட்டு அவையாக, பிரதிநிதித்துவ சபையாக இருந்த பாராளுமன்றத்திற்குரிய விடயங்கள் ஒரு தனிநபரான ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டுவிட்டன. பாராளுமன்றம் மக்களிடம் உள்ள பல்வகைப்பட்ட கருத்துகளையும் பிரதிபலிக்கும்  (A Body Reflecting the Diversity of Public Opinion) அவையாகும். அத்தகைய ஒரு அவை ஜனாதிபதிக்குக் கீழ்ப்பட்டதாக  மாற்றப்பட்டுள்ளது.

ஆ) இதன் பொருள் பிரதம நிர்வாகியான ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டியவராக (Accountable) இல்லை. அரசாங்கம் வெளிப்படைத்தன்மை (Transparency) அற்றதாக மாறிவிட்டது. சட்டங்கள் இயற்றப்படும் போது, அவை முறையாகப் பரிசீலிக்கப்படுவதில்லை. பொதுநிதி வினைத்திறனுடன் செலவிடப்படுவதில்லை. நாட்டைத் தவறான முறையில் வழிநடத்திச் செல்லும் ஜனாதிபதி ஒருவரை பதவியில் இருந்து இலகுவில் நீக்கவும் முடியாது.

  1. வினா : நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) எவ்வாறு பாதிக்கிறது?

விடை :

அ) கோட்பாட்டு அளவில் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர்; நீதித்துறைப் பொறுப்புக் கூறலுக்கு அவர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உட்பட்டவராக (Limited Accountability) உள்ளார். அரசியல் யாப்பில் குறிப்பிடப்படும் நீதி மீளாய்வு (Constitutional Review), உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கம் (Fundamental Rights Jurisdiction) என்பன ஜனாதிபதியைக் கட்டுப்படுத்துவன. இவை கோட்பாடு என்ற நிலையில், ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவர் என்ற கருத்தை உறுதி செய்வனவாக உள்ளன.

ஆ) ஆனால் யதார்த்த நிலை (Reality) வேறானது. ஜனாதிபதியிடம் மிகையான அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவரது அதிகாரங்கள் தனிநபர் சார்பானவையாக (Personalised) ஆக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் நீதிமன்றக் கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்து விடலாம். குறிப்பாக கீழ்நிலை நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப் பொருட்படுத்தாது விடலாம். பாராளுமன்றத்தின் மீது நிர்வாகத்துறையின் கட்டுப்பாடு அளவுக்கு மீறிய அளவில் உள்ளதால் சட்டங்களினை இயற்றும் செயற்பாடு (Legislation) பாதிக்கப்படுகிறது. பாராளுமன்றம் சட்டங்களை ஆக்கும் போது உயர் நீதிமன்றம் கண்காணிப்புச் செய்கிறது; மேற்பார்வை செய்கிறது என்று கூறப்படும். இதனை ஆங்கிலத்தில் ‘Pre-enactment Supervision’ என்பர். சட்டங்களை ஆக்கும் செயல்முறையில் இம் மேற்பார்வை, நிறைவேற்று ஜனாதிபதி முறையினால் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.

  1. வினா: ஆளுகையை அரசியல் நீக்கம் செய்தல் (De-politicise Governance) நிறைவேற்று ஜனாதிபதிமுறையால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

விடை :

அ) அரசியல் யாப்பு கவுன்சில் (Constitutional Council), சுதந்திரமான ஆணைக்குழுக்கள் (Independent Commissions) என்பன ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டன. இவை ஜனாதிபதியின் அதிகாரங்களின் எல்லையை (Scope) மட்டுப்படுத்துபவை; ஆளுகையை அரசியல் நீக்கம் செய்வதற்கு (De-politicize Governance) உதவுவன.

ஆ) அரசியல் நீக்கம் செய்தல் (De-politicization) என்பதன் பொருள் யாது? ஜனாதிபதியினதும், ஆளும் அரசியல் கட்சியினதும் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டுச் சுதந்திரமாகவும், நடுநிலையுடனும் முக்கிய அரச பதவிகளில் உள்ளவர்கள் (Key State Officers) செயற்பட வேண்டும். அதன் மூலமே அவர்களால் அரச சேவைகளை (State Services) வினைத்திறன், நீதி, பாரபட்சமின்மை என்பனவற்றுடன் செய்தல் முடியும். அதிகாரிகளின் செயற்பாடுகள் வினைத்திறன் அற்றனவாக, ஊழல் மலிந்ததாக ஆவதைத் தடுக்க முடியும்.

இ) இலங்கையில் நடப்பது என்ன? ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒவ்வொரு ஜனாதிபதியும் அரச நிறுவனங்களை அரசியல் நீக்கம் செய்வதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முறியடித்தார்கள். அலட்சியப்படுத்தல், புறம் ஒதுக்குதல், எதிர்த்தல் ஆகிய செயல்கள் மூலம் அதற்கான நடவடிக்கைகளை முடக்கினார்கள். இவ்வாறு முடக்கப்பட்டமைக்கான காரணம் ஜனாதிபதி பதவியில் இருப்பவரிடம் அதிகாரங்கள் மிகையாகக் குவிக்கப்பட்டிருந்தமையும் (Over Concentration), அவரது அதிகாரங்கள் தனிநபர் சார்பானவையாக ஆக்கப்பட்டிருப்பதும் (Personalisation) ஆகும்.

  1. வினா : நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஊழலைக் குறைக்கின்றதா? அல்லது ஊழலை அதிகரிக்கின்றதா?

விடை :

அ) 1978 அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த காலம் தொடக்கம் ஊழல் அதிகரித்தே வந்துள்ளது. ஊழல் அதிகரிப்புக்கு இலங்கையின் தேர்தல் முறை (Electoral System) போன்ற பல காரணிகள் உள்ளன. ஆனால் நிறைவேற்று ஜனாதிபதிமுறை தான் பிரதான காரணி.

ஆ) ஜனாதிபதியிடம் அதிகாரம் குவிக்கப்படுவதால் கட்டுப்படுத்தல்களும் மட்டுப்படுத்தல்களும் (Checks and Balances) செயற்படுவதில்லை. இதன் விளைவாக அரச முறைமை முழுமையிலுமாக வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் (Transparency and Accountability) இல்லாமல் போகிறது. இதன் விளைவாக அரசமுறைமை முழுவதும் பாதிக்கப்படுகிறது. பொது மக்கள் நலனை உதாசீனம் செய்து அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சேவகம் செய்பவர்களாக தீர்மானங்களை எடுப்போர் (Decision Makers) செயற்படும் போக்கு தடுக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஊழல் கட்டுப்படுத்தப்படாமல் தாண்டவம் ஆடுகிறது.

  1. வினா : இலங்கை மக்கள் ஜனாதிபதி முறையை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று கூற முடியுமா?

விடை :

அ) 1978 அரசியல் யாப்பிற்கு நீண்ட ஆயுள் அமைந்து விட்டமை உண்மைதான். ஆனால் அதற்கு தொடக்க காலத்தில் இருந்து எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. அதன் வடிவமும் சட்ட வலிதுடமையும் (Form and Legitimacy) இலங்கையின் அரசியல் சொல்லாடலில் (Political Discourse) கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது.

ஆ) 1982 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றுள் ஒரே ஒரு தேர்தல் மட்டும் விதிவிலக்கானது. இவ் விதிவிலக்குத் தவிர்ந்த எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி முறையை ஒழித்தல் அல்லது சீர்திருத்தல் வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய பிரச்சினை கவனத்தில் கொள்ளப்பட்டது. நான்கு தேர்தல்களின் முடிவில் வெற்றி பெற்றுப் பதவியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று உறுதிமொழி வழங்கினர். தோல்வியுற்ற பிரதான வேட்பாளர்கள் மூவர் மூன்று தேர்தல்கள் முடிவில் ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறினர் (இவர்களுக்கு கிட்டத்தட்ட 50% க்கும் குறைவான அதாவது 50– வாக்குகள் கிடைத்திருந்தன). மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போது வென்றவர்களும் தோற்றவர்களும் ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என உறுதி வழங்கியிருந்தனர்.

இ) நாட்டு மக்கள் ஜனாதிபதிமுறையை அறிவு பூர்வமாகவும், உளப்பூர்வமாகவும் விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால் தேர்தல்களின் போது இந்தத் தலைவர்கள் ஏன் அப்படி உறுதி மொழிகளைத் திரும்பத் திரும்ப நீண்டகாலம் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?

  1. வினா : 1978 அரசியல் யாப்பை முற்றாக நீக்கி அதனிடத்தில் புதியதொரு அரசியல் யாப்பைப் பதிலீடு செய்யாமல் நிருவாக ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியுமா?

  விடை :

அ) இலங்கையின் உச்சநீதிமன்றம் (சுப்பிரீம் கோர்ட்) 1978 அரசியல் யாப்புக்குத் திருத்தம் (Amendment) கொண்டு வருவதன் மூலம் நிருவாக ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது என்று தெளிவாகத் தீர்ப்புக் கூறிவிட்டது. ஆகையால் நிருவாக ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பது புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருதல் மூலமே சாத்தியமாகும்.

ஆ) ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்படும் புதிய யாப்பு, 2022 ‘அரகலய’ வின் கோரிக்கையான முறைமை மாற்றத்தையும் (System Change) உட்படுத்தல் வேண்டும். அவ்வாறாயின் முன்பிருந்த பாராளுமன்ற முறையை (Parliamentary System) மீளக் கொண்டு வரும் தேவை எழுகிறது. அப் பாராளுமன்ற முறையில் ஜனாதிபதி சடங்கியல் முறையிலான அரசுத் தலைவராகவே (Ceremonial Head of State) இருப்பார். பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் (Head of Government) பாராளுமன்றத்திற்குக் கூற வேண்டிய மந்திரி சபையின் தலைவராகவும் இருப்பார். அத்தகைய முறையில் பாராளுமன்றத்தின் நம்பிக்கையை எப்பொழுது அரசாங்கம் இழக்கின்றதோ அப்பொழுதே அவ்வரசாங்கம் பதவியிழக்கும். பதவியைத் தொடர முடியாது.

  1.  வினா: 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறை தொடர்பாக (வாக்காளர்களுக்கு) முன்வைக்கும் தெரிவுகள் (Choices) எவை?

விடை :

அ) மூன்று பிரதான வேட்பாளர்களில் இருவர் (பிரேமதாசவும், திசாநாயக்கவும்) புதிய அரசியல் யாப்பைக் கொண்டு வருவதன் மூலம் அரசியல் யாப்பை ஒழிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். மூன்றாமவர் (விக்கிரமசிங்க) புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படும். ஆனால் ஜனாதிபதி முறையை ஒழிப்பதா என்ற தெரிவை அடுத்து வரும் பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்கு விட்டுவிடப் போவதாகக் கூறுகிறார்.

ஆ) மூவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, இவர்களது முடிவைப் பற்றி ஊகிக்க முடிகிறது. இவர்களுள் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதிமுறையை ஒழிப்பதற்கு முன்வரவே மாட்டார் என்று கூறிவிடலாம். இவர்கள் மூவருள்ளும் திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதிமுறையை ஒழித்தல் வேண்டும் என்பதை உறுதியாகக் கூறிவந்தவர்; வாதிட்டவர். ஆயினும் யாப்புச் சீர்திருத்தத்திற்கான வழிவரைபடத்தை (Road Map) அவர் தயாரித்து வழங்குவதற்கு முன்பே அதனை ஒழிப்பதற்கான சந்தர்ப்பம் கைநழுவிப் போய்விடக்கூடும். பிரேமதாசவின் நோக்கங்கள் தெளிவானவை. இருந்து வரும் அரசியல் யாப்பை நீக்கி புதிய யாப்பை அவர் கொண்டு வருவாரா, இல்லையா என்பதும்; அதில் அவர் வெற்றி பெறுவாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனென்றால் அவ்வாறு செய்வதை புதிய பாராளுமன்றத்தை அமைத்து ஒரு ஆண்டுகால எல்லைக்குள் அவர் செய்து முடிக்க வேண்டும். அப்படி, ஓர் ஆண்டுக்குள் செய்து முடிப்பேன் என்று அவர் உறுதிமொழி தரவில்லை.

குறிப்பு : இவ் வினா விடை வடிவிலான வாக்காளர் வழிகாட்டி 13.09.2024 திகதியன்று அசங்க வெலிக்கல அவர்களால் Groundviews இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டும் முடிந்த பின்னரும் இந்த வழிகாட்டி பெறுமதிமிக்க ஒன்றாகவே இருக்கிறது. செறிவான கருத்துகள் பொதிந்த இக்கட்டுரை இலகு நடையில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கட்டுரையாசிரியருக்கும், Groundviews இணைய இதழுக்கும் உளப்பூர்வமான நன்றிகள்.

சட்டத்துறை அறிஞர். அசங்க வெலிக்கல

டாக்டர் அசங்க வெலிக்கல, எடின் பேர்க் பல்கலைக்கழகத்தில் ‘பொதுச்சட்டம்’ (Public Law) பற்றிய விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அப் பல்கலைக்கழகத்தின் ‘Centre for Constitutional Law’ நிலையத்தின் கூடுதல் பணிப்பாளராகவும் (Associate Director) பணியாற்றுகிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் ‘Institute for Commonwealth Studies’, இலங்கையின் மாற்றுக் கொள்கைக்கான நிறுவனம் (CPA) என்பனவற்றின் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்திருத்தம், ஜனாதிபதிமுறை, இன முரண்பாட்டிற்கான தீர்வு யோசனைகள் என்பன தொடர்பான பல ஆய்வுகளை இலங்கையின் மாற்றுக் கொள்கை நிறுவனத்தின் ஊடாக வெளிக்கொணரவும் இவர் நீண்டகாலமாக உழைத்து வந்துள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பருவ இதழ்களிலும், பொதுசன ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. 


ஒலிவடிவில் கேட்க

2145 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)