Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘டெங்கு’ ஏற்படுத்தும் பொருளாதாரச் சுமை 

June 14, 2024 | Ezhuna

டெங்கு நோயின் உலகளாவிய பரவல் சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் பொருளாதாரத் தாக்கங்கள் பற்றிய விரிவான கவனம் குறைவு.  அது பற்றிய தகவல்கள், ஆதாரம் சார்ந்த கொள்கைகள் மற்றும் ஆய்வுகள் அரிது. எவ்வாறாயினும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், டெங்குவின் பொருளாதாரச் சுமை மீதான கவனத்தை ஈர்க்கும் முகமாக இவ் ஆரம்ப விசாரணை முன்வைக்கப்படுகிறது. ஆழமான விசாரணைக்கான ஒரு ஒரு பாதையின் ஆரம்பமாக இம்முயற்சி அமையலாம்.  

உலகளவில் டெங்குவின் மொத்த ஆண்டுச் செலவு 8.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது மிகப்பெரிய சுகாதார, பொருளாதார மற்றும் அரசியற் சுமையைச் சுமத்துகிறது. கடந்த சில தசாப்தங்களில், மாறிவரும் சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக டெங்குவின் அதிர்வெண் மற்றும் அளவு படிப்படியாக அதிகரித்துள்ளது (dengue frequency, magnitude, and extent). டெங்கு வைரஸ் பரவும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஆபத்தில் வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் சுகாதாரத் துறையின் மீதான அதன் தாக்கமும்

தற்போதைய இலங்கையின் சுகாதாரத்துறை, வரலாற்றில் மிகவும் ஒரு மோசமான சமூக, பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக்கியுள்ளது. ஒரு காலத்தில் வலுவான சுகாதார அமைப்பு என புகழப்பட்ட ஒரு துறை வீழ்ச்சியை நெருங்குகிறது. மருத்துவக் கட்டமைப்பானது மின் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் ஆபத்தில் வீழ்ந்துள்ளது. நாடு முழுவதும் பல சுகாதார ஊழியர்களின் நாளாந்த  வேலை நிறுத்தம் தொடர்கிறது. சம்பள முரண்பாடு மற்றும் சம்பள உயர்வு அதன் பிரதான பின்புலம். ஒட்டுமொத்தமாக, இலங்கையில் சுகாதார அமைப்பு தோல்வியில் இருந்து எப்போது மீளமுடியும்?  

நான்கு தசாப்த கால உள்நாட்டுப் போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவற்றின் தாக்கம் ஏற்கனவே இலங்கையின் சுகாதாரத் துறையை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார அமைப்பின் நிலைத்தன்மைக்கு அதிக அழுத்தத்தைச் சேர்த்துள்ளது. நிதி நெருக்கடி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுகாதார அமைப்பைக் கரைக்கும் நிலை நாளாந்தம் நடைபெறுகிறது.

பொருளாதார நெருக்கடியின் போது, அரசாங்கங்கள் தங்கள் சமூகச் செலவினங்களைக் குறைக்க ஆரம்பிக்கும். மேலும், சுகாதாரச் சேவைகளுக்கான தரம் இறங்கும். தனியார் துறையில், சிகிச்சைக்கு கேள்வி அதிகரிக்கும் கூடுதலாக, அதிகரித்து வரும் உணவு விலைகளுடன் குழந்தை மற்றும் தாய்வழி ஊட்டச்சத்து மற்றும் பிற சுகாதார விளைவுகள் மோசமடையும். மக்கள் உணவின் அளவையும் தரத்தையும் குறைக்கத் தள்ளப்படுவர்.  

ஒரு காலத்தில் அதன் வலிமை மற்றும் செலவு-செயல்திறன் ஆகியவற்றிற்காக நன்கு அறியப்பட்ட இலங்கையின் சுகாதார அமைப்பு அதன் முதல் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. பொருளாதார நிதி நெருக்கடியின் பாதகமான பாதிப்புகள், பல ஆண்டுகளாக நாடு அடைந்துள்ள பாராட்டத்தக்க முன்னேற்றத்தைத் தடுத்து பின்னோக்கி தள்ளும். மேலும், முழு இலங்கையிலும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு, தொற்று நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் பரவலாகும்.

அதிகரித்து வரும் டெங்குப் பாதிப்பின் பொருளாதாரச் சுமை

டெங்குவைக் கட்டுப்படுத்துவது ஏன் கடினமாக உள்ளது? டெங்குவுக்கு எதிரான தடுப்பூசி எதுவும் இல்லாததால், டெங்குத் தொற்றுநோயின் வாய்ப்பு கவலையளிக்கிறது. மேலும், குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் சிகிச்சையில் பயனுள்ளதாக இருப்பதாகக் காட்டப்படவில்லை. டெங்கு என்பது நான்கு நெருங்கிய தொடர்புடைய ஃபிளவி வைரஸ்களில் ஏதேனும் ஒன்றால் ஏற்படும் நோயாகும்.

இலங்கையில் டெங்குவினால் ஏற்படும் இறப்பு விகிதம் என்ன? 2017 ஆம் ஆண்டில், 186,101 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதியப்பட்டார்கள். மற்றும் 440 டெங்கு தொடர்பான இறப்புகள் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு டெங்கு, நோயறிதலுக்குரிய நோயாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையில் ஒரே வருடத்தில் பதிவாகிய சந்தேகத்திற்கிடமான எண்ணிக்கையில் இதுவே அதிகூடிய எண்ணிக்கையாகும். இலங்கையில் அதிகரித்து வரும் டெங்குப் பாதிப்பு, ஒரு குறிப்பிடத்தக்க சுகாதாரக் கவலை மட்டுமல்ல, இலங்கையின்  மிகப்பெரிய பொருளாதார இழப்பும் கூட. நிபுணர்கள் ஆண்டு தோறும் இதனால் இழக்கும் தொகை பல பில்லியன்களில் இருக்கும் என்று  கூறுகின்றனர். இலங்கையில் கடந்த வருடம் டிசம்பர் முதல் வாரத்தில் 80,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது. இது தரவு மட்டும் அல்ல; ஒரு சமூகத்தின் மிகப்பெரிய பொருளாதார இழப்பும் கூட. இலங்கையின் உருகுணைப் பல்கலைக்கழகத்தின் ஆலோசகர், நுண்ணுயிரியல் நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர் நயனி பி. வீரசிங்க “டெங்குவின் பொருளாதாரச் சுமை கணிசமானதாக உள்ளது. சுகாதார அமைப்புகள் மற்றும் குடும்பங்கள், குறிப்பாக தினசரிக் கூலியில் தங்கிருப்பவர்களின் மீது குறிப்பிடத்தக்க அழுத்தங்கள் உள்ளன. ஊதியங்கள் இழப்பு அதில் மிக முக்கியம் பெறுகிறது. விவசாயம் மற்றும் தொழிற்துறை ஆகிய இரண்டும் டெங்குவின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படுகிறது. வேலைக்கு வராமல் இருப்பது, குறிப்பாக உழைப்பு மிகுந்த தொழில்களின் உற்பத்தித்திறனை மோசமாகப் பாதிக்கிறது” என்கிறார். “டெங்குவின் சுமை அளப்பெரியது; அது சுகாதாரச் சுமைகளையும் செலவுகளையும் அதிகரிக்கும் அதேவேளை, அது பற்றிய சமூக அக்கறையும் மிகவும் குறைவாகவேயுள்ளது” என பொருளாதார நிபுணர் ரமணன் லக்ஷ்மிநாராயணன் அவர்கள் கணிக்கிறார்.

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, சுரப்பிகள் வீக்கம் மற்றும் சொறி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். அடிவயிற்றில் வலி, ஈறுகள் அல்லது மூக்கில் இரத்தப்போக்கு, வாந்தி அல்லது மலத்தில் இரத்தம் போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படுகின்றன. நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு பயனுள்ள மருந்துகள் எதுவும் இல்லை என்பது டெங்குவின் மோசமான நிலையாகும். பெரும்பாலானோர் இரு வாரங்களில் குணமடைந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் நாளாந்த உழைப்பின் இழப்பு மிக அதிகமாகும். குறிப்பாக நாளாந்த தொழிலாளர்களின் நிலை வறுமையின் கீழ் நோக்கிய அசைவுக்குச் செல்கிறது. இவர்களின் நிலை பற்றிய அக்கறை கவனிக்கப்படுவதில்லை.  

இலங்கையில், அண்மையில் செய்த ஒரு செலவுப் பகுப்பாய்வு, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிக்கு 233.76 டொலர்கள் (சுமார் ரூ. 87,500) நேரடி மருத்துவத்திற்காகச் செலவிடப்படுகின்றது என மதிப்பிடுகிறது. தீவிர சிகிச்சை தேவைப்படும் சிக்கல்கள் எழும்போது, செலவு 733.46 டொலர்களாக உயர்கிறது (ரூ. 262,500 இற்கு மேல்). இது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பாரிய இழப்பாகும். சராசரியாக மாத வருமானத்தில் 77.29 சதவீதத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இழக்கின்றன. நேரடி மருத்துவச் செலவுகளைத் தாண்டி, மறைமுகச் செலவுகள் இன்னும் அதிகமாக உள்ளன. சுமையின் வலி முழுச்சமூகத்தையும் பாதிக்கிறது. காரணம், இலவச அரச மருத்துவச் செலவின் கனதி, அரச செலவினத்தை அதிகரிக்கிறது. இதன் பொருளாதாரச் சுமை முழு நாட்டையும் பின்தள்ளுகிறது.

நோய்க்கான மருத்துவச் சேவையைப் பெறுவதற்கான நேரடிச் செலவுகள், சேனல் கட்டணம், ஆய்வக ஆய்வுகள், மருந்துகள், மருத்துவச் சேவையைப் பெறுவதற்கான பயணச் செலவுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைப் பார்ப்பது போன்றவை இச் செலவுகளுட் சில. ஒரு நோயாளியின் நேரடி வீட்டுச் செலவு 16.29 டொலர்கள் (ரூ. 5,950) ஆகும். இது தீவு நாட்டின் ஒரு நபரின் சராசரி மாத வருமானத்தில் கிட்டத்தட்ட 4 சதவீதம் ஆகும். 

டெங்குவின் பொருளாதாரத் தாக்கம் பன்முகத்தன்மை கொண்டது. இலங்கையில் உள்ள  கணிசமான குடும்பங்களில் ஒரு உறுப்பினர் மட்டுமே வேலை செய்கிறார். தொற்று நோய்களுக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட 2019 ஆய்வின்படி, நாட்டில் டெங்கு காரணமாக சராசரியாக 22 வேலை நாள்கள் இழப்பு அல்லது பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. குடும்பத்திற்கான நேரடி மற்றும் மறைமுகச் செலவுகளை சேர்க்கும் போது, அது 77.29 வீதமாகும். இது இலங்கையின் மாதாந்தக் குடும்ப வருமானத்தில் நான்கில் மூன்று பங்காகும். இந்நோயின் தொற்றுநோயியல் மாற்றமடைந்து, தற்போது சிறுவர்கள் மற்றும் பெரியவர்களையும் பாதிக்கிறது. எனவே இலங்கையில் கடந்த காலத்தை விட எதிர்காலத்தில் இதன் பொருளாதாரத் தாக்கம் அதிகமாக இருக்கும். டெங்குவின் நீண்டகால விளைவுகள், குறிப்பாக குழந்தை நோய்த்தொற்றுகள், பள்ளிக்குச் செல்லாத நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இது எதிர்கால வருமானத்தைப் பாதிக்கும். எவ்வாறாயினும், நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாவிட்டாலும் கூட, டெங்குக் காய்ச்சல் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டால், அவர்கள் தினசரி தங்கள் மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருக்கும், ஏனெனில் பிளாஸ்மா கசிவின் உருவாக்கத்தைக் கண்டறியும் சோதனைகள் எங்களிடம் இல்லை.

நகரமயமாக்கல், அதிகரிக்கும் பயணங்கள்  மற்றும் காலநிலை ஆகியவற்றின் உலகளாவிய மாற்றங்கள் டெங்கு பரவுவதற்குப் பங்களிக்கின்றன. காலநிலை மாற்றம் டெங்குவின் முதன்மைக் காவி ‘ஏடிஸ் எஜிப்டியின்’ வரம்பை, பெருக்கத்தை அதிகரிக்கிறது. டெங்கு நோயின் பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நோயைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை அமல்படுத்துவது அவசியம். சுகாதாரக் கல்வித் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மைக்கான சட்ட நடவடிக்கைகள் உட்பட தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். இலங்கையில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகள் செயலிழந்து இருப்பது. டெங்குவின் பொருளாதாரச் சுமையை மேலும் பல மடங்கு அதிகரிக்கப்போகிறது.

இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவின் தகவலின் படி, 2024 இல் பதிவுசெய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 24,000 இனைத் தாண்டியுள்ளது. மே 23 வரை, 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 24,227 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 5,183 பேர் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 8,711 பேர் மட்டும் பதிவாகியுள்ளனர். இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்து வருவதால், டெங்குவைத் தடுப்பதற்காக சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்பு  பெருகும் இடங்களை அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இல்லை.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை இலங்கையில் 61,361 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2022 ஆம் ஆண்டின் 34 ஆவது வார இறுதி வரை (ஆகஸ்ட் 26) பதிவான 53,181 நோயாளர்களுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில், 34 ஆவது வாரத்தில் (19 முதல் 25 ஆகஸ்ட் 2023 வரை) மொத்தம் 1,219 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2017 இல், இலங்கையில் எதிர்பாராத அளவு டெங்கு தொற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டது. மொத்தம் 186,101 நோயாளிகள் மற்றும் 440 டெங்கு தொடர்பான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய கண்காணிப்புத் தரவை முந்தைய ஐந்து ஆண்டுகளின் தரவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் இந்தத் தொற்றுநோய் விரிவாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும், 2017 இல் டெங்கு நோயின் தாக்கம் கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்டதை விட கணிசமாக அதிகரித்துள்ளது. பள்ளிக்குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிக வயதானவர்களைக் காட்டிலும் மருத்துவ ரீதியாக அதிக அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். 2017 ஆம் ஆண்டில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் நேரடிச் செலவு 12.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

டெங்கு முகாமைத்துவத்தின் ஒட்டுமொத்தச் சுகாதார அமைப்பு நிதிச் சுமை, 2012 இல் சுகாதார அமைப்பின் வரவு செலவுத் திட்டங்களின் மூலம் செலவழிக்கப்பட்டது. இது 452.9 மில்லியன் இலங்கை ரூபாய் (அமெரிக்க $3.5 மில்லியன்) ஆகும்.

வடக்கு மாகாணத்தில் டெங்கு பரவல்

2023 ஆம் ஆண்டு வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நிலைமை மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. யாழ். மாவட்டத்தில் மட்டும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராம அளவில் கலந்துரையாடல்களை நடத்த வலியுறுத்தி பல ஆலோசனைகள் பின்பற்றப்பட்டன. பராமரிக்கப்படாத நிலங்கள் தொடர்பாக நில உரிமையாளர்கள் மீது விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கவும், கைவிடப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழிவு நீர்க் கால்வாய்களை அமைக்கவும் என பல யோசனைகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.    

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47.2 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 13 திகதி முதல் 19 வரையான காலப்பகுதியில் இவ்வருடம் ஆரம்பமான 20 ஆவது வாரத்தில் 770 பேரும், 19 ஆவது வாரத்தில் 523 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆவது வாரத்துடன் ஒப்பிடுகையில் 20 ஆவது வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.19 ஆவது வாரத்தில் 08 ஆக இருந்த டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 20 ஆவது வாரத்தில் 09 ஆக அதிகரித்துள்ளது.  நோய்த் தாக்கத்தின் தீவிரம் மேலும் அதிதீவிரத்தை நோக்கிச் செல்லும் என்பது தெரிகிறது.

2023 இல் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,481 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் உள்ளது. மொத்த டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 36 வீதமானோர் மேல் மாகாணத்திலும், 18.1 வீதமானோர் வட மாகாணத்திலும், 8.9 வீதமானோர் மத்திய மாகாணத்திலும், 7.3 வீதமானோர் தென் மாகாணத்திலும், 9.4 வீதமானோர் சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளனர். கொழும்பில் 5,244 பேர், யாழ்ப்பாணத்தில் 3,887 பேர், கம்பஹாவில் 2,293 பேர், களுத்துறையில் 1,844 பேர், குருநாகலில் 1,090 பேர், இரத்தினபுரியில் 1,272 பேர், காலியில் 1,156 பேர், கேகாலையில் 1,037 பேர், புத்தளத்தில் 692 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எப்படித் தடுப்பது?

நுளம்பை ஒழிப்பதுதான் இதற்கான சரியான வழி. நுளம்பு பெருகும் இடங்கள் பல பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகாமையிலேயே காணப்படுகின்றன. இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதன் மூலம் டெங்குவைக் கட்டுப்படுத்தலாம். நுளம்புகள் பொதுவாக நீர் சேகரமாகும் கொள்கலன்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. தேங்கி நிற்கும் தண்ணீரில் முட்டைகள் ஒரு வருடம் வரை உயிர்வாழும். அதே சமயம் முட்டைகள் வறண்ட சுற்றுச்சூழல் நிலைமைகளைத் தாங்கக் கூடியது. அதன் பிறகு, தண்ணீர் கிடைக்கும்போது மற்றும் சூழல் சாதகமாக இருக்கும்போது குஞ்சு பொரிக்கும். டெங்கு நுளம்பு 400 மீட்டர் தூரம் வரை பறக்கக் கூடியது. முட்டையிடுவதற்கான நீர் மனித வாழ்விடத்திற்கு அருகிலேயே உள்ளதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துச் செல்கிறது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பதாலும், நுளம்புகளை ஈர்க்கும் பாத்திரங்களை அகற்றுவதாலும் மட்டும் டெங்குவின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடமுடியாது.

இலங்கையில் ஏன் டெங்குவை ஒழிக்க முடியவில்லை?

டெங்குக் காய்ச்சல் இப்போது தீவு முழுவதும் பரவிவிட்டது. அத்துடன் இது இலங்கையில் ஆண்டு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இலங்கையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU), 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 36,628 டெங்கு நோயாளர்கள் (மே 24 ஆம் தேதி வரை) பதிவாகியுள்ளதாக அறியத்தந்துள்ளது. உண்மையில், இந்தப் புள்ளிவிவரங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான நோயாளிகளை விட மூன்று மடங்கு அதிகம். அதைவிட ஆபத்தான விடயம், பாதிக்கப்பட்டோர் பதியப்பட்ட நோயார்களை விட மிக அதிகம். இலங்கையில் டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான பொது நடவடிக்கைகளில் 13 வருடங்களாகப் பணியாற்றிய தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த வைத்தியரான நிமல்கா பன்னில ஹெட்டி, “டெங்கு என்பது ஒழிக்க முடியாத ஒரு நோயாகும். ஏனெனில் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் ஏராளமாக மறைந்து இருக்கலாம்” எனச் சொல்வது கவனத்துக்குரியது. 

டெங்கு தடுப்புச் சவால்கள்

மக்களின் அக்கறையின்மை, தடுப்பதற்குரிய செலவு, விநியோகம், பூச்சிக்கொல்லி எதிர்ப்பு, தடுப்பு நடவடிக்கைகளின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் டெங்குவைத் தடுப்பதற்கு பல சவால்கள் உள்ளன. ‘WHO’ மற்றும் இலங்கைச் சுகாதார முகாமைத்துவத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஒருங்கிணைந்த காவி முகாமைத்துவ (IVM) மூலோபாயத்தை திறம்படச் செயற்படுத்துவதற்கு இந்தக் காரணிகள் தடையாக உள்ளன. டெங்குவை ஒழிப்பது ஏன் கடினமாக உள்ளது? டெங்குவுக்கு எதிராக பயனுள்ள தடுப்பூசி எதுவும் தற்போது இல்லாததாலும், நோய்க்கான குறிப்பிட்ட சிகிச்சை இல்லாததாலும், டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தான் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாததும், நுளம்பு உற்பத்திக்கு காரணமாகிறது. டயர்கள் மற்றும் நீர் தேங்கும் இதர பொருட்களைக் வெளியே வீசுவது நுளம்பு உற்பத்தியை ஊக்குவிக்கும். 

ஆய்வு செய்யப்பட்ட பள்ளிகள், அரசு நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 10% இற்கும் அதிகமான இடங்களில் லார்வாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது (Below, Compiled Report from WHO, Sri Lanka-2022).

நிலையான மற்றும் வலுவான அரசியல் அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் சமூகப் பங்கேற்பு வலுவாக உள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்ற, உள்ளூர்ச் சபைகளை உள்ளடக்கிய சமூக அடிப்படையிலான திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். இதுதான் வளங்கள் குறைவாக உள்ள நாடுகளில், டெங்குக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கான செலவு குறைந்த மற்றும் நிலையான வழியாகும். குடும்பம், சமூகம் மற்றும் தேசிய அளவில் டெங்குவிற்கு எதிராக சமூகத்தை அணிதிரட்டும் செயற்பாடு டெங்குத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ‘தாய்லாந்து தேசிய டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம்’ அத்தகைய ஒரு வெற்றிக் கதை ஆகும். இது தாய்லாந்து மக்களுக்கு டெங்கு உடல்நலப் பாதிப்புகளை குறைக்க உதவியது. எவ்வாறாயினும், சமூக அணிதிரட்டலுக்கு வளங்கள் மற்றும் அதிகாரங்களின் பரவலாக்கம் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களிடையே உயர் மட்ட ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. சகல அரச திணைக்களங்கள் மற்றும் சமூகங்களில் ஒருங்கிணைப்பு இல்லாமை அனைத்து முயற்சிகளின் பயனற்ற நிலைக்கு வழிவகுக்கும். எனவே, அன்றாட சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதும், டெங்குத் தடுப்புக்கான பயனுள்ள ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் இன்றைய தேவைகளாகும். டெங்குக் கட்டுப்பாட்டு திட்டங்கள் மீதான மதிப்பீட்டு ஆய்வுகள், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகளின் சரியான திட்டமிடல் மற்றும் மேலாண்மை மற்றும் அனைத்துப் பங்குதாரர்களின் தீவிர ஈடுபாட்டின் மூலம் டெங்குவைக் கட்டுப்படுத்தலாம். நுளம்பு வளரக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்துவது வெற்றிகரமான டெங்குக் கட்டுப்பாட்டுக்கான பயனுள்ள நடவடிக்கையாகும்.

முடிவு

டெங்குவின் பொருளாதாரத் தாக்கம் பன்முகத்தன்மை கொண்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்குவின் பொருளாதாரச் சுமை மேலும் பாதிப்புக்களை மக்கள் மீது சுமத்துகிறது. முழுமையான மக்கள் அக்கறையின்மை டெங்குவின் பரவலுக்கு பிரதானமான காரணியாக உள்ளது. உள்ளூராட்சி அமைப்புகளின் திண்மக் கழிவு முகாமைத்துவம் தோல்வியுறும் போது டெங்குவின் ஆதிக்கம் தொடங்குகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவம் தோல்வியின் விளிம்பில் ஊசலாடுகிறது. திண்மைக் கழிவு கொட்டும் இடங்கள் தொடர்பான பிரச்சினைகளே இதற்குக் காரணம். திண்மக்கழிவு முகாமைத்துவம் முறையாகத் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். ஒன்றிணைந்த மாகாணத் திட்டமிடல் இல்லாமல் இப் பிரச்சினையை தீர்க்க முடியாது. மறுசுழற்சி ஆதார மையங்களை (recycle resource  centers) நிறுவுதல் இதற்கு உதவக் கூடியது.

டெங்கு நோய்ப் பரவியதன் பின்பு டெங்கு வாரம், விழிப்புணர்வு வாரம், ஊரெங்கும் பதாதைகள், நாளாந்த அறிவிப்புகள், அரச மட்டக் கூட்டங்கள், ஊடக அறிக்கைகள் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பது பயனற்றது. உண்மையான டெங்குத் தடுப்புக்கு, முன்கூட்டிய தயாரிப்பு தான் அவசியம். பருவகால மழை ஆரம்பிக்க  ஆறு மாதங்களுக்கு முன்பு, மாவட்ட மட்ட உள்ளூராட்சி திணைக்கள ஒத்துழைப்புடன் மாவட்ட மட்ட டெங்கு ஒழிப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும். முழுமையான திணைக்கள ஒத்துழைப்பு கிடைக்கும் போது தடுப்பின் முழுப்பயனும் கிடைக்கும். மாகாண மட்டத் திட்டமிடல், மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு, உள்ளூராட்சி மட்ட அமுலாக்கம் போன்றன நடைமுறைக்குரிய வழிகளாகும்.

உசாத்துணை

  1. Dengue Fact Sheet and Situation Report, July 2022, WHO, Sri Lanka, https://cdn.who.int/media/docs/default-source/sri-lanka-documents/dengue-fact-sheet_7-2022-srl.pdf?sfvrsn=49021bd_1
  2. Preventing Dengue in Sri Lanka, 8 July 2019 News release, WHO, Sri Lanka, https://www.who.int/srilanka/news/detail/08-07-2019-preventive-action-is-vital-to-curtail-dengue-outbreaks-in-sri-lanka
  3. Severe Dengue Epidemic, Sri Lanka, 2017, https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7101108/
  4. Vitharana T, Jayakuru WS. Historical account of dengue haemorrhagic fever in Sri Lanka. WHO/SEARO. Dengue Bull. 1997;21:117–8. [Google Scholar]
  5. Increase in the number of dengue patients in Jaffna district – announcement by the Honorable Governor of Northern Province to enlighten the public through village level discussions. https://np.gov.lk/increase-in-the-number-of-dengue-patients-in-jaffna-district-announcement-by-the-honorable-governor-of-northern-province-to-enlighten-the-public-through-village-level-discussions/
  6. The impact of population mobility on dengue fever: an experience from northern Sri Lanka , T Kumanan1, V Sujanitha1, N Rajeshkannan2 Sri Lankan Journal of Infectious Diseases 2019 Vol.9 (2):98-102 DOI: http://doi.org/10.4038/sljid.v9i2.8252 http://repo.jfn.ac.lk/med/bitstream/701/1880/1/8252-30676-1-PB.pdf

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

2587 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)