அரசனின் முழக்கம்
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில், ஜனவரி 20 ஆம் திகதியிலிருந்து, அவர் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அவரின் அதிரடி ஆட்டம் திடீரென முளைத்த விடயம் அல்ல; அது அமெரிக்கச் சிந்தனைக் குழாமின் திட்டமிட்ட நகர்வு. அதனை நோக்கும் போது அமெரிக்காவின் புதிய அணுகுமுறையை அறியக்கூடியதாக உள்ளது. நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஒரு பெரிய உத்தியின் தொடக்கமாக இது இருக்கப்போகிறது. அமெரிக்க வெளிநாட்டு உதவித் திட்டங்களை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி ஆரம்பித்துள்ள ஆட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது: தற்போதைய உதவித் திட்டங்களை மறு மதிப்பீடு செய்தல், குறிப்பிட்ட சித்தாந்த அளவுகோல்களுடன் ஊழியர்களைச் சீரமைத்தல் மற்றும் செலவினங்களை கடுமையாகக் குறைத்தல்.

அமெரிக்க வெளிநாட்டு உதவியின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அந்நாடு ஒரு நன்கொடையாளராக முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்க அபிவிருத்தி உதவி நிறுவனமான USAID மூலம், அமெரிக்கா 158 நாடுகளில் களம் கண்டது. 2023 ஆம் ஆண்டுவாக்கில், மொத்த அமெரிக்க வெளிநாட்டு உதவி $64.7 பில்லியனை எட்டியதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது. இந்தத் தொகை அமெரிக்க கூட்டாட்சி பட்ஜெட்டில் சுமார் 1% ஆகும். இந்த உதவியின் மிக முக்கியமான பகுதி மனிதாபிமான உதவிக்கு (25%) ஒதுக்கப்பட்டது. அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கான திறன் மேம்பாட்டு முயற்சிகள் (20%) மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கும் (12%) குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது.
அமெரிக்க நன்கொடையில் இதுவரை காலம் பயன்களைப் பெற்ற அரச சார்பற்ற கட்டமைப்புகள் தங்களைச் சுயமதிப்பீடு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது நல்ல மாற்றம் தான் எனக் கருதுவோரும் உண்டு. அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்),1980கள் மற்றும் 1990களில் அங்கீகாரம் பெற்றதிலிருந்து, மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பலர், அரசு சாரா நிறுவனங்களின் இன்றைய வகிபாகம் மீதான தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தாலும், சிலர், உலகளவில் சமூகங்களுக்குச் சேவை செய்வதில் அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் செயற்திறனை நல்கின்றன என வாதிடுகின்றனர். வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கும், சமூக நீதியை ஊக்குவிப்பதற்கும், புதுமையான உத்திகளை உருவாக்குவதற்கும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது.
அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கங்கள், கூட்டுறவு அமைப்புக்கள், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து தங்கள் பங்களிப்பை அதிகரித்து, ஆதரவாளர்கள் மற்றும் பயனாளிகளின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அர்ப்பணிப்புக் கலந்த வகிபாகத்தை உள்ளடக்கவேண்டிய தேவை இன்று அதிகரித்து வருகிறது; பரஸ்பர ஒத்துழைப்புடன் அதிக கரிசனை கொள்ளும் காலம் வந்துள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை ஆராய்வதன் மூலமும், தங்கள் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதன் மூலமும் சவால்களுக்கு மத்தியில் செழித்து வளர முடியும்; பிரகாசமான எதிர்காலத்திற்கான சமூக மற்றும் பொருளாதார நீதியை ஏற்படுத்த தகுந்த பங்களிப்பை வழங்க முடியும்.
பூகோள அரசியல்
உலக ஒழுங்குமுறை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது; பரந்த யூரேசியா கண்டத்திற்கும், பொதுவாக முழு உலகிற்கும், ஆழமான தாக்கங்களை கொண்டு வருகிறது. தற்போதைய புவிசார் அரசியல் நிலப்பரப்பு, வளர்ந்து வரும் உலக ஒழுங்கைப் புரிந்துகொள்வதற்கான சூழலை உருவாக்குவதுடன் எதிர்கால ஒழுங்கிற்கான வரைவையும் தருகிறது எனலாம்.
ரஷ்யா, ஐரோப்பாவின் முன்னணி மூலோபாய இராணுவச் சக்தியாக மாறியுள்ளது. சீனா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்கா அதன் உலகளாவிய நிலை குறித்து மறுவரையறை செய்யும் கட்டத்தில் உள்ளது. ஐரோப்பா, நீடித்த மோதல்களால் திசைதிருப்பப்பட்டு தனியாகத் தவிக்கும் நிலையில், உலகின் பிற பகுதிகள் இந்த மாற்றங்களின் வழியாக தங்களை நிலைப்படுத்த முயற்சித்து வருகின்றன. பிரிக்ஸ் உருவாக்கம் G7 இற்கு மாற்றாகும்; இது உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சாதாரண மக்கள், பொதுவான மனிதநேயம், ஜனநாயகம், தேசிய இறையாண்மை மற்றும் மனித உரிமைகள் போன்ற இலட்சியங்கள் பெரும்பாலும் நடைமுறையில் வெறும் கோசம் என்பது நன்கு உணரப்பட்டுள்ளது. இது முக்கியமான அனுபவநிலை எனலாம். உலக சக்திகளின் படிநிலைக்குள் தங்கள் நிலையை தக்கவைக்கும் வகையில் பல நாடுகள் செயற்படுகின்றன. உலக ஒழுங்கு தெளிவான மாற்றத்தின் அறிகுறியை தரும் தற்போதைய ஒழுங்கில், நாடுகளுக்கிடையில் வளர்ந்துவரும் ‘தன் கையே தனக்குதவி’ என்னும் அனுபவப்பாடம் மிகவும் நுணுக்கமாக விளங்கும் ஒரு போக்காகக் காணப்படுகிறது. அத்துடன், நம்பிக்கையானவர்களுடன் ஓர் அணியில் திரளும் போக்கும் காணப்படுகிறது. யார் நண்பன் என்பதை அடையாளம் காட்டியதே பல நாடுகளுக்கு Covid – 19 தந்த ஒரு படிப்பினையாகும்.
புவிசார் அரசியல் மற்றும் அதன் பொருளாதாரம் மாறுநிலைக்கு உள்ளாக்கப்பட்டு அசைவியக்கம் கொள்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் போட்டிப் பொருளாதாரக் கூட்டணிகளில் மையம் கொண்டு பொருளாதார அசைவியக்கத்தை உருவாக்குவதால், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் செல்திசை பதற்ற நிலையில் பயணிக்கிறது. இந்தப் போக்கு, பிராந்தியத்தை மையமாகக் கொண்ட வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிலையை உருவாக்குவதோடு, தற்போதைய வர்த்தக விநியோகச் சங்கிலிகளில் சாத்தியமான இடையூறுகளையும் உண்டாக்கும். நாடுகள், தங்கள் தேசிய பாதுகாப்பில் வலுவான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிலை உருவாக வாய்ப்புகள் அதிகம்.
இலங்கை போன்ற நாடுகள், இன வன்முறைகளில் நீண்ட காலம் மூழ்கி தங்கள் வளத்தை இழந்த நிலையில், நெருக்கடியை நோக்கிப் பயணிக்கும் சாத்தியம் உண்டு. இதன் காரணமாக விளிம்புநிலை மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அடித்தளங்களிலும் அடையாளங்களிலும் ஓர் அழுத்த நிலை ஏற்படலாம். இலங்கையின் வெளியுறவை அதன் உள்ளக நிலைமாற்றத்தின் வழிதான் கட்டமைக்க வேண்டியுள்ளது. அது, உள்ளக முரண்நிலைகளிருந்து தன்னை சுய மதிப்பீடு செய்து நிலையான மாற்றத்துக்கு உட்பட வேண்டிய காலம் விரைவில் வரும். மதிக்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வின் வழி செல்லவும் அது நிர்ப்பந்திக்கப்படும். ஏனெனில் உலக ஒழுங்கு ஓர் அழுத்தத்தைக் கொண்டுவர உள்ளது. இலங்கையின் அக வளர்ச்சி அதிமுக்கியமானதாக மாறவேண்டி உள்ளது. நிர்ப்பந்த அழுத்தம் சகல இலங்கையர்களையும் இணைத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உந்தக்கூடும். வரவுள்ள சூழ்நிலைக்கு, உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகளின் பங்களிப்பு அவசியம் தேவை. இதற்கு, இலங்கையில், குறிப்பாகப் போரின் வலுவான தாக்கத்துக்கு முகம் கொடுத்த பகுதிகளில், உயிர்ப்புடன் உள்ள உள்ளூர் அபிவிருத்தி நிறுவனங்களின் நுண் அரசியல் வகிபாகம் முக்கியமானது. உள்ளூர் மட்ட அமைப்புகளின் பலமான கட்டமைப்பு உள்ளூர் பொருளாதாரத்திற்கு அவசியம் எனக் கருதும் தேவை வந்துள்ளது. புதிய சவாலை எதிர்கொள்ள புதிய முன்னெடுப்புகளும் தேவையாகின்றன. சமூக மட்ட அமைப்புகள், கூட்டுறவுகள் மற்றும் இணை அமைப்புகள் தொலை நோக்கிய பார்வையுடன் களம்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பாதையில் பயணிக்க பல தடைகளைத் தாண்டவேண்டி வரும். அதில் முக்கியமானது, தேவையான வளங்களைத் திரட்டும் கைங்கரியம். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு முதற்கட்டமாகத் தேவையானது, பலமான மாகாண மட்ட, உள்ளூர் அமைப்புகளின் பொருளாதார வளர்ச்சியை மையம் கொண்ட கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். மாவட்ட மற்றும் மாகாண மட்ட உள்ளூர்ச் சமூக அமைப்புகளின் கூட்டுறவுச் சமாசங்களின் ஒன்றிணைந்த ஒரு கட்டமைப்பை நோக்கிய பாதைதான் திருப்பு முனையை உருவாக்கும்.
உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள், சமூக – பொருளாதார மற்றும் கலாசார தேவைகளை அடிமட்ட அளவில் நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நேரடிச் சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. உள்ளூர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இவை, சமூகங்களுக்கு உதவுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அதிகாரத்தை அளிக்கின்றன; மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயற்படுகின்றன. பிராந்தியச் சவால்கள் மற்றும் சமூக – பொருளாதார – கலாசார சிக்கல்கள், நுணுக்கங்கள் பற்றிய அவற்றின் ஆழமான புரிதல், ஒரு சமூக மூலதனமாக விளங்குகின்றது. இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடிகளுக்கு திறம்படப் பதிலளிப்பவையாக இவை இருப்பதற்கும், இவற்றின் உள்ளூர் அமைவிடம் முக்கிய காரணமாகும்.
உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் வகிபாகம்:
- சமூக மேம்பாடு: கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற துறைகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயற்படுத்துகின்றன. பெரும்பாலும் குறிப்பிட்ட உள்ளூர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- திறன் மேம்பாடு: தன்னிறைவை ஊக்குவிக்கும் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவை சமூகங்களை நிர்வாகம் செய்கின்றன.
- ஆதரவு மற்றும் கொள்கை மாற்றம்: உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள், சமூகத்திற்குப் பயனளிக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்காக அரசு அதிகாரிகளை வலியுறுத்துகின்றன. முக்கியமான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
- மனிதாபிமான உதவி: நிவாரணப் பொருட்கள், போர்க்கால அவசரங்கள் மற்றும் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு முயற்சிகள் உள்ளிட்ட அவசர காலங்களின் போது அவை உடனடி உதவியை வழங்குகின்றன.
- கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல்: அரசு சாரா நிறுவனங்கள் அரசாங்கத் திட்டங்களைக் கண்காணித்து, சமூகத்தை பாதிக்கும் செயல்களுக்கு அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கின்றன.
- சமூக விழிப்புணர்வுப் பிரசாரங்கள்: பிரசாரங்கள் மூலம் சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்கின்றன. நேர்மறையான நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை நிவர்த்தி செய்கின்றன.
- ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பு: உள்ளூர்த் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முக்கியமான தேவைகளைக் கண்டறிந்து, திட்ட மேம்பாடு பற்றித் தெரிவிக்க, ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றன.
- ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகள்: வளங்களைப் பயன்படுத்தவும் தாக்கத்தை அதிகரிக்கவும் பிற உள்ளூர் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் அவை இணைந்து செயற்படுகின்றன.
உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பலங்கள்:
- ஆழமான சமூகப் புரிதல்: சமூகத்துடன், அவற்றின் அருகாமையில் இருப்பதால், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிராந்தியப் பிரச்சினைகள், கலாசார இயக்கவியல் மற்றும் பாதிப்புகள் பற்றிய நுணுக்கமான புரிதலைக் கொண்டுள்ளன.
- வலுவான அடிமட்டச் சமூக இணைப்பு: சமூகத் தலைவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடனான அவற்றின் நிறுவப்பட்ட தொடர்புகள், பயனுள்ள அணிதிரட்டல் மற்றும் வெளிப்பாட்டைச் செயற்படுத்துகின்றன.
- நெகிழ்வுத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு: மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக மாற்றியமைக்க முனைவதாகவும், வளர்ந்து வரும் சமூகச் சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதமாகவும் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வகிபாகம் அமைந்துவருகிறது.
உள்ளூர் கூட்டுறவு அமைப்பு
உள்ளூர் கூட்டுறவு அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு, அவர்களின் வளங்களை ஒன்றிணைப்பதன் மூலம், நியாயமான விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பகிரப்பட்ட உரிமை, உறுப்பினர்கள் வணிகத்தை கூட்டாக நிர்வகிக்கவும், இடைத்தரகர்களின் தேவையற்ற இலாபங்களைத் தடுக்கவும், பயன்பாட்டிற்கு ஏற்ப நன்மைகள் நேரடியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் உதவுகிறது. பங்குதாரர்களுக்கு இலாபத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனங்களுக்கு மாறாக, கூட்டுறவுகள் பரஸ்பர நன்மை மற்றும் சமூக மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஜனநாயக, உறுப்பினர்களுக்குச் சொந்தமான அமைப்புகளாகச் செயற்படுகின்றன.
கூட்டுறவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- பொருளாதார அதிகாரமளித்தல்: தனிநபர்களை ஒன்றாக சந்தையில் பங்கேற்க அனுமதிப்பதன் மூலம், அணுக முடியாத அல்லது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் முக்கியமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குகின்றன, குறிப்பாக விளிம்புநிலைக் குழுக்களுக்கு.
- சமூக மேம்பாடு: கூட்டுறவுகள் அடிக்கடி தங்கள் லாபத்தை சமூகத்தில் மீண்டும் முதலீடு செய்கின்றன. உள்ளூர்த் திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
- மேம்படுத்தப்பட்ட பேரம் பேசும் சக்தி: ஒத்துழைப்பு மூலம், உறுப்பினர்கள் பொருட்களை வாங்குவதற்கு அல்லது தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சிறந்த விலைகளைப் பேரம் பேசலாம். பெரிய நிறுவனங்களுக்கு எதிராக தங்கள் அந்நியச் செலாவணியை அதிகரிக்கலாம்.
- ஜனநாயக ஆட்சி: கூட்டுறவுகள் ‘ஓர் உறுப்பினர், ஒரு வாக்கு’ அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் நிதி உள்ளீட்டைப் பொருட்படுத்தாமல் முடிவெடுப்பதில் சமமான குரலை வழங்குகின்றன.
- நிலையான நடைமுறைகள்: உடனடி லாபத்தை விட நீண்டகால நிலைத்தன்மையில் கவனம் செலுத்துவதன் மூலம், கூட்டுறவு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவிக்க முடியும்.
உண்மையில், உள்ளூர் கூட்டுறவு மற்றும் அருகிலுள்ள ஓர் அரசு சாரா நிறுவனம் திறம்பட ஒத்துழைக்க முடியும். நிறுவனங்களின் பலங்களை இணைப்பதன் மூலம், சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்கு பொறுப்பாகப் பதிலளிக்க முடியும். கூட்டுறவு நிறுவனத்தின் அடிமட்ட ஆதரவு, செல்வாக்கு மற்றும் திட்ட மேம்பாடு என்பன அரசு சாரா நிறுவனத்தின் ஆதரவில், நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, சமூகத் தாக்கத்திற்கான வலுவான கூட்டாண்மையை உருவாக்க முடியும்.
கூட்டுறவு – அரசு சாரா நிறுவன ஒத்துழைப்பின் முக்கிய நன்மைகள்:
- பகிரப்பட்ட இலக்குகள்: இரு நிறுவனங்களும் பொதுவாக சமூக மேம்பாட்டை அடைதல், பொருளாதார அதிகாரமளித்தலை ஊக்குவித்தல் மற்றும் சமூக நலனை ஆதரித்தல் போன்ற ஒத்த நோக்கங்களில் கவனம் செலுத்துகின்றன. இது சீரமைக்கப்பட்ட, ஒன்றிணைந்த முயற்சிகளுக்கு வழிவகுக்கிறது.
- வள ஒருங்கிணைப்பு: கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளூர் நெட்வொர்க்குகள் மற்றும் பணியாளர்களை அணுகுகின்றன. திறமையாக ஒத்துழைப்பதன் மூலம், அவர்கள் கூட்டுறவு நிறுவனத்தின் அடிமட்ட இணைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனத்தின் திட்ட மேலாண்மைத் திறன்களைப் பயன்படுத்தி கணிசமான நன்மைகளைப் பெற முடியும்.
- சமூக ஈடுபாடு: கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் நேரடி உறுப்பினர் தொடர்புகள் காரணமாக, திட்டங்களில் சமூக ஈடுபாட்டை வளர்க்கின்றன. அதே நேரத்தில் அரசு சாரா நிறுவனங்கள் பரந்த ஆதரவைச் சேகரிக்க தங்கள் வெளிநோக்கு முயற்சிகளை அதிகப்படுத்த முடியும்.
- பேண்தகு நிலைத்தன்மை: கூட்டுறவு முயற்சிகள் மிகவும் நிலையானதாக இருக்கும். ஏனெனில் கூட்டுறவு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களின் நிதித் திட்டங்களுக்கான தொடர்ச்சியான ஆதரவையும் உரிமையையும் வழங்க முடியும்.
ஒத்துழைப்புக்கான எடுத்துக்காட்டுகள்:
- திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்: கூட்டுறவுப் பயிற்சி வசதிகள், உள்ளூர் பயிற்றுநர்கள் போன்ற வளங்களை வழங்கலாம். அதேநேரத்தில் அரசு சாரா நிறுவனம் பாடத்திட்டத்தை உருவாக்கி தொழில் பயிற்சிக்கான நிதியை நிர்வகிக்கலாம்.
- நுண்நிதி முயற்சிகள்: கூட்டுறவு நிறுவனம் கடன் வழங்கல் மற்றும் சேகரிப்பை நிர்வகிக்க முடியும். அதே நேரத்தில், ஓர் அரசு சாரா நிறுவனம் நிதி, கல்வியறிவு, பயிற்சி, மற்றும் சாத்தியமான கடன் பெறுநர்களை அணுகுதல் போன்ற சேவைகளை வழங்க முடியும்.
- சுற்றுச்சூழல் திட்டங்கள்: கூட்டுறவு நிறுவனம் அதன் உறுப்பினர்களை மரம் நடுதல் அல்லது கழிவு மேலாண்மை முயற்சிகளில் ஈடுபடுத்தலாம். அதே நேரத்தில் அரசு சாரா நிறுவனம் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கலாம்; விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
வெற்றிகரமான ஒத்துழைப்புக்கான அத்தியாவசியப் பரிசீலனைகள்:
- தெளிவான பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகள்: இரு நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுவதைத் தடுக்கவும், பயனுள்ள ஒத்துழைப்பை உறுதி செய்யவும் தங்கள் பாத்திரங்கள் மற்றும் நிபுணத்துவப் பகுதிகளைத் தெளிவுபடுத்த வேண்டும்.
- தொடர்பு மற்றும் நம்பிக்கை: வெளிப்படையான தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஒரு பயனுள்ள கூட்டாண்மைக்கு இன்றியமையாதது.
- கூட்டுத் திட்டமிடல் மற்றும் முடிவெடுத்தல்: இரு நிறுவனங்களும் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பங்கேற்க வேண்டும்.
சர்வதேச, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் எதிர்காலம்
சர்வதேச, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் எதிர்காலம் என்பது இன்றைய விவாதத் தலைப்புகளில் முக்கிய இடத்தை வகிக்கிறது. குறிப்பாக, பொது மக்கள் தொடக்கம் உள்ளூர் மற்றும் சர்வதேசக் கொள்கை வகுப்பாளர்கள், வளரும் நாடுகளில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வளர்ந்த நாடுகளில் உள்ள சர்வதேச நிறுவனங்கள் வரையும் கவலை கொள்ளும் விடயமாக அரசு சாரா அமைப்புகளின் எதிர்காலம் காணப்படுகிறது. பல சமூக ஊடக மையங்களின் அன்றாட விவாதத் தலைப்பாக மாறியுள்ள அரசு சாரா நிறுவனங்களின் மீதான அக்கறை, ஒருவகையில் சமூக அக்கறையும் கூட.
தற்போது, சர்வதேச அரசு சாரா அபிவிருத்தி நிறுவனங்கள் (INGOs) பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. நீடித்த நிலையான அபிவிருத்தியை தொடர்ந்து பறைசாற்றிய பல உலகளாவிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்கள் இன்று பதகளிப்பு நிறைந்த ஒரு காலகட்டத்தைக் கடக்கவேண்டியுள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள், இந்த நிலைமாறும் கால நிலையில், மாற்றங்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க முடியும் என்பது அவசியம் ஆராயப்படவேண்டிய விடயமாக உள்ளது. கடந்த கால வரலாறுகளைப் பார்க்கும் போது, சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள், பல நெருக்கடிகளின் பிடிக்குள்ளிருந்து மீண்டு வந்திருந்தாலும், தற்போதைய நெருக்கடி மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டியதாகவே உள்ளது. அதற்காக ஒரு மாற்று மூலோபாய, தந்திரோபாய அணுகுமுறையில் அக்கறைகொள்ள வேண்டியுள்ளது. தவறும் பட்சத்தில், காலப்போக்கில், பல அமைப்புகள் கரைந்தது போல் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களும் கரைந்து போக வேண்டி வரலாம்.
அரசு சாரா நிறுவனங்களின் நுண் அரசியலும் அதன் விளைவுகளும்
தற்போதைய அரச சார்பற்ற நிறுவனங்களின் மீதான உலகளாவிய நெருக்கடியானது, உண்மையில் ஒரு சகாப்தத்துக்கு முன்பாகவே எதிர்வு கூறப்பட்ட விடயமாகும். மாற்றத்திற்கு இடம் தரும் வகையில் சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் உத்திகளை மறுமதிப்பீடு செய்தன. குறிப்பாக, உள்ளூர்மயமாக்கலை (Localization) நோக்கிய மாற்றம் 2017 இல் ஆரம்பித்தது எனலாம். உலகளவில் ‘மாற்றத்துக்கான முகவர்களை ஆதரிப்பதற்கான (To Support Change Agents Worldwide)’ புதிய சிந்தனை கருக்கொண்டது எனலாம். இது நல்ல தொடக்கம் என்று கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2020 அளவில், சமூக அளவிலான தலைவர்கள் மற்றும் அமைப்புகளை முன்னிலைப்படுத்தும் மாற்றத்திற்கான (Prioritizing the Agendas of Country-level Leaders Driving Systems Change) நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் உத்தி உருவானது.
பல உள்ளூர் அபிவிருத்தி நிறுவனங்கள் உலகளாவிய அபிவிருத்தி நிறுவனங்களின் தயவில் தங்கியிருக்கும் ஒரு சவாலான நிலையை தற்போது எதிர்கொள்கின்றன. உள்ளூர் வளர்ச்சியில் சர்வதேச நிறுவனங்கள் அதிகளவில் கவனம் செலுத்துவதாகக் கூறும் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள், உள்ளூர் அபிவிருத்தி நிறுவனங்களின் இருப்பை இல்லாமலாக்கும் பங்கையும் வகித்தன. இதன் காரணமாக, உலகளாவிய அளவில் பல உள்ளூர் அமைப்புகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் இடையில் ஒரு ‘பனிப்போர்’ நிலவும் தன்மையும் காணப்படுகிறது. தற்போதைய சூழ்நிலை, இரு சாராரையும் அழித்துவிடும் நிலையை உண்டாக்கியுள்ளது.
சர்வதேச அபிவிருத்தி அமைப்புகளின் சவால்கள்
முக்கிய பங்காளிகளான உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுடன் திறம்பட ஒத்துழைத்து, உள்ளூர் தேவைகளுடன் ஒன்றிணைந்து தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே பொதுவான சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்களின் வெளிப்படு கொள்ளையாகும். உலகளாவிய சர்வதேச அபிவிருத்தி அமைப்புகளின் துண்டு துண்டான நடைமுறை அமுலாக்கத் திட்டங்கள், உள்ளூர் அமைப்புகளின் முன்னெடுப்புகளுக்குத் தடையாக அமைந்தன. எந்தவொரு நாட்டிலும் பயனுள்ள அமைப்பு மாற்றத்தை அடைவது இயல்பாகவே சிக்கலானது. மேலும், உள்ளூர் மட்டத்தில் ஒருங்கிணைக்கப்படாத உலகளாவிய அபிவிருத்தி கூட்டாளிகள், தங்கள் போக்கின்படி தனிமையில் செயற்படும்போது, உள்ளூர் முன்னுரிமைகளின் இணைப்புத் துண்டிக்கப்படும். இதனால், களநிலை மேலும் சவாலானதாகிறது.

வளரும் நாடுகளில் உள்ள சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் தொழிற்படு நிலப்பரப்புகளில், தற்போது குறைந்தது ஐந்து வகையான உலகளாவிய மேம்பாட்டு அமைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்கும் பல்தரப்பு நிறுவனங்கள் ஆகும். உலக வங்கி போன்ற அபிவிருத்தி வங்கிகள் கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குகின்றன – உலகளாவிய நிதியம் போன்ற கூட்டாண்மைகள், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உதவி வழங்குகின்றன. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID), ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத்துறை, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை ஆகியவை இருதரப்பு உதவி நிறுவனங்களாகச் செயற்படுகின்றன. கூடுதலாக, பெரிய நிறுவன அறக்கட்டளைகள் முதல் கேட்ஸ் அறக்கட்டளை போன்ற தனிப்பட்ட பில்லியனர்கள் வரை – அறக்கட்டளைகள் மற்றும் பரோபகாரர்கள், உலகளாவிய உதவி முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனர்.
பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், உள்ளூர் நிர்வாகத்தின் அபிவிருத்தியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு, தங்கள் வளங்களை உள்ளூர் நிறுவனங்களுக்கு அதிகளவில் செலுத்தி வந்தாலும், உள்ளூர் அமைப்புகளின் விலகிச்செல்லும் போக்கு, ஒற்றுமையற்ற தன்மை மற்றும் திறமையின்மை காரணமாக பல தவறவிடப்பட்ட வாய்ப்புகளும் உண்டு. பல திட்டங்கள், ஒரே நாட்டிற்குள் ஒரே மாதிரியான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் போக்கில், பல கூட்டாளிகளின் இணைவற்ற அமுலாக்க அணுகுமுறைகளால், விரக்தியை அடைந்த நிலைகளும் உண்டு. உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் அமைப்புகளுடன் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமையால், உள்ளூர் மட்ட அமைப்புகளிடையே குழப்பங்களும் முரண்நிலைகளும் உருவாகிய உதாரணங்களும் உண்டு. உள்ளூர் மட்ட அபிவிருத்தியை திறம்பட ஆதரிக்க, அபிவிருத்திக் கூட்டாளர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்புத் தேவை என்பது தெளிவாகிறது. உள்ளூர் அரசு மற்றும் உள்ளூர் அரசு சாரா கூட்டாளர்களின் ஓர் இறுக்கமான அபிவிருத்தி நோக்கிய பங்களிப்பு மூலம்தான் முழுமையான, அர்த்தமுள்ள, நீடித்த அபிவிருத்தி நோக்கிய பயணமும் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பும் மலரும்.
உண்மையில், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் ‘உள்ளூருக்கான அபிவிருத்தியை நோக்கிய வலுவான இணைப்புப் பாலத்தை’ வகிக்கும் எண்ணத்துடன் 2020களில் தங்கள் கொள்கைகளை திட்டங்கள் ஊடாகக் கொண்டுவர முனைந்தாலும் பெரிதாக சாதகமான வெற்றிகளை அடையமுடியவில்லை. பல திட்டங்கள், உள்ளூர் நிகழ்ச்சி நிரல்களை விரிவுபடுத்தவும், உள்ளூர் தலைவர்கள் தங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் கூட்டாளர்களை இனங்காணவும் உதவின. பிராந்தியத் தலைவர்களுக்கும் உள்ளூர்மட்ட களநிலைகளுக்கும் மிகவும் ஆதரவான சூழலை உருவாக்கவும், அதற்குரிய திறனை வழங்கக்கூடிய திட்டங்கள் முளைத்தன. ஆனால், அத்திட்டங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு நாட்டில் செயற்பாட்டில் இருக்கும் பல்வேறு உலகளாவிய அமைப்புகளின் ஒத்திசைவற்ற அல்லது போட்டியிடும் முன்னுரிமைகள் சவால்களை உருவாக்குகின்றன; இதனால், திட்டங்களின் பயன்கள் முழுமையாகக் கிடைக்காமல் போகின்றன.

தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட அபிவிருத்தி முனைப்பிற்கு ‘வலுவான இணைப்பு’ என்னும் கண்டடைவும் அதற்குரிய நிதிச் செலவும் சிறந்த விடயங்களாக உள்ளன. ஆனால், சில பெரிய நிதியளிப்பாளர்கள், தங்கள் நாடுகளின் அரசியல், பொருளாதார நன்மைகள் கருதி வளங்களை ஒதுக்குவதால் உலகளாவிய அல்லது பிராந்திய இணைப்பு முயற்சிகளை வலுவாக்கும் வேலைத்திட்டம் தோல்வி கண்டு படிப்படியாகச் செயலிழந்தது. உள்ளூர் முன்னுரிமைகளை முன்னேற்றுவதற்கும், உள்ளூர்த் திறனை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய அபிவிருத்தியை பரவலாக்குவதற்கும் இருந்த உத்தி பலன்தரவில்லை. சர்வதேசப் பங்களிப்புகள் பிராந்திய மற்றும் உள்ளூர் மட்ட அமைப்புகளுக்கான இணையான முயற்சிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, நிதியளிப்பவர்களின் நலன்சார் அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன. அதனால் சர்வதேச அபிவிருத்தி அமைப்புகளின் மீதான கவனமும் அக்கறையும் படிப்படியாக குறைந்ததுடன் பலமான, கடுமையான விமர்சனங்களும் வளர்ந்தன.
சமீபத்திய ஆண்டுகளில், பல சர்வதேச அமைப்புகள் வளர்ச்சிக்கான ஆராய்ச்சியை (Research for Development) நோக்கிய பயணங்களை மேற்கொண்டுள்ளன. இந்தத் துறையில் புதுமைகள் மற்றும் புதிய மனநிலைகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை காணப்பட்டாலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நிதி வழங்குநரும் உள்ளூர் நிறுவனங்களை நோக்கி வளங்களை இயக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் உள்ளூர்மயமாக்கலை எவ்வாறு திறம்பட ஆதரிக்க முடியும் என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்தன; பல உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து இதற்காகப் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. பல சர்வதேச அமைப்புகளின் நோக்கங்கள் வலுவிழந்த நிலையை அடைந்தன. உள்ளூர் அமைப்புகளின் பலமான ஆதரவும் ஒத்தாசையும் இல்லாமல் அபிவிருத்தி முன்னெடுப்புகள் நன்கு துலங்காது என்பதைக் காலம் படிப்படியாக உணர்த்தியது.
சர்வதேச அரசு சாரா நிறுவனங்களுக்கான சாத்தியமான ஒரு மாதிரியை நோக்கிய மறுபரிசீலனை
பல தசாப்தங்களாக, உலகளாவிய சுகாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில், சர்வதேச அரசு சாரா நிதி நிறுவனங்கள் கொண்டுவர விரும்பிய மாற்றங்கள் அடையப்படவில்லை. தற்போது, சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மட்டத்தில் ஒரு மாற்றம் அவசியம் தேவை என்பது நன்கு உணரப்பட்டுள்ளது. இன்று நடைமுறையிலுள்ள, குறுகிய காலத் திட்டங்களைத் தாண்டிய, ஒரு மனநிலை மாற்றம் வேண்டும் என்னும் தாகம் அதிகரித்துள்ளது. அதிக சமூகப் பலன்களைத் தரக்கூடிய, குறைந்த நிதியில் மிக அதிகமான தாக்கத்தை வழங்கக்கூடிய, நிலையான திட்டங்களை ஊக்குவிக்கும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் தேவை அதிகமாக உள்ளது. புதுமையான சமூக முதலீட்டை வளர்க்கவும் மதிப்பைத்தரக்கூடிய ‘நன்கொடையாளர்’ கலாசாரத்தை உருவாக்கவும் இன்றைய சூழல் கனிந்துள்ளது எனலாம்.
சமூக மட்டத்தில் கூட்டாண்மை – உள்ளூர் அமைப்புகளுடன் கூட்டாண்மை
சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின், சமூக மட்டத்தில் வலுவான உள்ளூர்க் கூட்டாண்மையை உருவாக்கும் நீண்டகால முயற்சிகள் வெற்றிபெறவில்லை எனலாம். மக்கள் மட்ட அமைப்புகளுடன், கூட்டுறவு அடிப்படையில் இணைவதன் மூலம் வரும் கூட்டு வகிபாகத்தின் மிளிர்வு இன்னும் துலங்கவில்லை எனலாம். தற்போதைய சமூக மட்ட அமைப்புகள் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்தாலும், பரவலான கருத்தின்படி, சர்வதேச அரசு சாரா அமைப்புகள் உள்ளூர் மட்ட சமூக அமைப்புகளை அணுகும் விதங்களில் பாரபட்சம் காட்டுகின்றன. உள்ளூர் மட்டத்தில் செயற்படும் உயரடுக்கு அரசு சாரா அமைப்புகளின் மீது வலுவான சார்பு காணப்படுவதால், எதிர்பார்க்கப்பட்ட சமூகக் கூட்டிணைவு கிடைக்கவில்லை எனக் கருதப்பட இடமுண்டு. ‘பாரம்பரிய நன்கொடையாளர் நிதி உத்திகள்’ வரையறுக்கப்பட்ட நிதியில் பாரிய இலக்குகளை அடைவதற்கான அழுத்த நிலையை உண்டாக்குகின்றன; உள்ளூர் அரசு சாரா அமைப்புகளின் மீதான பொறுப்புணர்வை அதிகம் வலியுறுத்துகின்றன. இந்த முறையில் பல குறைபாடுகள் உள்ளன.
மீள்தன்மையைப் (Resilience) புரிந்துகொள்வதில் அவசரம்
மீள்தன்மை என்பது ஒரு சிக்கலான கருத்தாகும். இது உதவி நிறுவனங்களின் சொற்களில் ஒப்பீட்டளவில் புதிய சொல். மீள்தன்மை என்பது தனிப்பட்ட கூறுகளை விட, அது உள்வாங்கும் அமைப்புகளின் பண்புகளைக் குறிக்கிறது. மீள்தன்மை நல்வாழ்வுக்கு மையமானது – இது பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ச்சிகள், அழுத்தங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டு, தங்கள் உரிமைகளை உணர்ந்து, தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திறனை விபரிக்க முயலும் ஒரு சொல்.
மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் மன அழுத்தங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்வதில் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பானது மிக மிகக் குறைவு தான். குறைந்த வருமானம் கொண்ட மக்களின் மீள்தன்மையை வலுப்படுத்தவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ கூடிய பல்வேறு காரணிகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு அமைப்பு அணுகுமுறை அவசியம் (System Approach). ஆனால், நடைமுறையில் சர்வதேச உதவி என்பது மிகவும் சிறிதளவே சென்றடையும் நிலையில், பலவித அழுத்தங்களைத் தாங்கும் வறியவர்களுக்கும் மக்களுக்கும் ‘மீள்தன்மை’ என்பது எட்டாக்கனியாவே உள்ளது. இவ்விடயம், பல சர்வதேச நிகழ்ச்சிநிரல்களில் உள்வாங்கப்படுவதில்லை. இதனால் எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றமும் மிக மிகக் குறைவுதான்.
பெரும்பாலான சர்வதேச மற்றும் உள்ளூர் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களின் மத்தியில் ஒருவகைப் பதற்றம் வளர்ந்து வருகிறது. உலகளாவிய கொள்கை மாற்றங்களே இந்தப் பதற்றங்களின் மூலம் எனலாம். சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகளும் இன்றைய காலகட்டத்தில் சுய தன்னாய்வுக்கு உட்பட வேண்டிய தேவை வந்துள்ளது. தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிலையான தாக்கத்தை உருவாக்குவதற்கான புதிய பாதைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் ஓர் உத்தியைக் கண்டறிய வேண்டியுள்ளது. மிகப்பெரிய சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் கூட்டாண்மை அணுகுமுறைகளை (Transforming their Partnership Approaches) பாரம்பரிய நிலைக்களத்திலிருந்து மாற்றி காத்திரமான, நிலையான நிறுவன அபிவிருத்திக்கான முறைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளன.
சமூக, பொருளாதார அபிவிருத்திப் பங்களிப்பில் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகளின் வகிபாகம் பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியுள்ளது. தற்போதைய வளர்ச்சி முயற்சிகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, புதிய திட்டங்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றன என்பது மிக முக்கியமானது. அதேவேளையில், பொதுவான சமூக எதிர்பார்ப்பானது ‘எவ்வளவு நிதி’ என்பதாக அல்லாமல், அது சமூக அபிவிருத்தியில் ஏற்படுத்தும் ஆரோக்கியமான தாக்கம் பற்றியதாக இருக்கவேண்டும். சமூக முதலீட்டில் அதிக வருமானம் தேவைப்படும் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமான நிலைக்கக்கூடிய ஒரு பொருளாதார மாதிரியைக் கண்டறிந்து, கூடிய விரைவில் வினைத்திறனுடன் பகுப்பாய்வு செய்து, அதை சமூக மட்டத்தில் அமுலாக்கம் செய்யவேண்டும்.
முடிவு
பல அரசாங்கங்கள் அரசு சார நிறுவனங்களை விரோதிகள் போல் அணுகுவது உண்டு, குறிப்பாக இந்தியா. இலங்கையில் போர்க் காலத்திலும், நெருக்கடி நிலையிலும் முக்கிய பங்காளிகளாக சர்வதேச அரசு சாரா அமைப்புகள் இருந்தன என்பது உண்மை. ‘NGO Culture’ இங்கு ஒரு வாழ்வியக்கமாக மாறியதற்கு போரின் நெருக்கடி மற்றும் சுனாமி ஆகியன முக்கிய காரணங்களாக அமைந்தன. சுனாமிக் காலத்தை அரசு சாரா நிறுவனங்களின் பொற்காலம் எனலாம். விவாக கொடுக்கல் வாங்கல்களிலும் அரசு சாரா நிறுவனங்களில் வேலை செய்தவர்களுக்கு ஒரு சமூக மதிப்பு இருந்தது. செய்யும் வேலையின் தகுதியைவிட பெரும் சம்பளம் சமூக மதிப்பை உருவாக்கியது. ஆனாலும், அரசு சாரா நிறுவனங்கள் வழங்கிய பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. நெருக்கடிக்குள்ளான மக்கள் குழாமின் குரலாக, அரசு சாரா நிறுவனங்கள் விளங்கின.
தற்போதைய உலக ஒழுங்கின் அமைப்பு தெளிவற்றதாக இருந்தாலும், அதன் அசைவியக்கங்கள் கூர்மையாகப் புரிந்துகொள்ளப்படக் கூடியதே. சர்வதேச உதவி குறைந்து வருவது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். நிதியுதவியை எதிர்பார்க்கும் அரசு சாரா நிறுவனங்கள் மீதான சமூக – பொருளாதார அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முழுவதுமாக திட்ட நிதியையே சார்ந்திருக்கும் அமைப்புகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு, புதிய நிலைமைகளுக்கு அமைவாக பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
காலம் ஒரு மாற்றத்தைக் கோருகிறது; தற்போதைய நிலைமாறு காலம் ஒரு சிறந்த வாய்ப்பு என்பதை உணர வேண்டும். பிற நாடுகளின் உதவி இன்றியமையாததே. ஆனால், முழுமையாக அயல்நாட்டு நிதியை – குறிப்பாக அபிவிருத்தி நிறுவனங்களின் நிதிப் பாய்ச்சலைச் சார்ந்து இருப்பது, இனிச் சிறந்த தீர்வாக இருக்க முடியாது. இந்த நிதி குறையும்போது அல்லது முற்றிலும் கிடைக்காமல் போகும்போது, ஓர் உள்ளகத் தயார்ப்படுத்தல் அவசியமாகிறது. இதற்கு, கூட்டுறவு மற்றும் உள்ளூர்முகம் கொண்ட அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்கு இன்றியமையாத தேவையாகிறது.
உசாத்துணைப் பட்டியல்
- Aid That Works: Enhancing U.S. Support for Civil Society Organizations – Global South Experts Turn the Tables by Aude Darnal, Nadia Nata, Seydina Mouhamadou Ndiaye, Preethi Vatadahosahalli, Grand Strategy, January 30, 2025. Link
- All the Executive Orders That Trump Has Signed to Date – The Guardian, January 29, 2025. Link (Accessed on February 23, 2025)
- Cooperation Between Local Government and Non-Governmental Organizations as a Platform for the Development of Social Dialogue – Agnieszka Smalec, Agata Niemczyk, Renata Seweryn, Journal of International Business Research and Marketing, Inovatus, 2021. Link
- Cooperative Initiatives with NGOs in Socially Sustainable Supply Chains: How Is Inter-Organizational Fit Achieved? Link
- Cooperation Between Business and Non-Governmental Organizations to Promote Sustainable Development – Gábor Harangozó, Gyula Zilahy, Department of Environmental Economics and Technology, Corvinus University of Budapest. Link
- “New World Order” – A conspiracy theory that posits an elite group is attempting to establish a totalitarian global government. Link
- Impacts of the U.S. Foreign Aid Pause Link (Accessed on February 25, 2025)
- International NGOs: Networking, Information Flows, and Learning – Shirin Madon, London School of Economics and Political Science. Link
- International NGOs and the Implementation of the Norm for Need-Based Humanitarian Assistance in Sri Lanka – Urvashi Aneja, July 2014. Link
- Project on Russian Power and Purpose in the 21st Century – Examining contemporary Russia’s global interests and influence and formulating responses, The Center for International Security and Cooperation, Stanford’s Freeman Spogli Institute for International Studies. Link
- Pursuing Global Order in the Twenty-First Century – Jon B. Alterman & Lily McElwee, April 22, 2024. Link
- Renegotiating the World Order: Institutional Change in International Relations – Phillip Y. Lipscy, Stanford University, California. Link
- Role of NGOs in Post-War Reconciliation Process in Sri Lanka – UN, UNICEF, UNDP, ICRC, Sayuri Gamage, January 24, 2022. Link
- Sri Lanka’s Development Debate and the Role of NGOs – Sarath Fernando, The Centre for Poverty Analysis (CEPA). Link
- Using the Policy Instruments of NGOs to Promote Locally-Led Development and Governance in Sri Lanka Link