தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘தமிழ்த்தூது வண. தனிநாயகம் அடிகளாரின் நான்காவது நினைவுப் பேருரை’ நிகழ்வில் பேராசிரியர். முனைவர். கு. சின்னப்பன் அவர்களால் இக் கட்டுரை வாசிக்கப்பட்டது.
சுருக்கம்
உரைநடை, நாவல், சிறுகதை, அகராதி, நகைச்சுவை இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஒப்பீட்டு இலக்கியம் என்று பல முதற்பணிகளைத் தமிழுக்குச் செய்தவர்கள் கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள். இவர்களில் இருபதாம் நூற்றாண்டில் ஈழம் தந்த தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் (1913-1980), உலகோர் போற்றுமாறு தமிழ் மொழிக்குப் பெருந் தொண்டாற்றியவராவார்.
தமிழ்மொழி, இலக்கியம் – பண்பாடு – கலையென எல்லாச் சிறப்பும் பெற்றிருந்தும் உலக அரங்கில் கவனிப்பாரற்று இருந்த நிலையை மாற்ற, உலகின் பல நாடுகளுக்கும் சென்ற தனிநாயகம் அடிகள் அந்தந்த நாட்டு மொழியில் தமிழின் தொன்மை, வளமை, தமிழ்ப் பண்பாடு, தமிழ்க்கலை ஆகியவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்தத் தமிழ்த்தூதுப் பயணத்தின் விளைவாக உலக அறிஞர்கள் தமிழ்மொழியின் சிறப்பை அறிந்து கொள்ளச்செய்தார். தமிழின் சிறப்பை பிறநாட்டினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்ப் பண்பாடு (இதழ்), தமிழ்க் கல்வி (இதழ்), தமிழ்த்தூது (கட்டுரைக் கொத்து), ஒன்றே உலகம் (பயண நூல்) ஆகிய வெளியீடுகளின் வழி தமிழாய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்ய உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழ் மொழிக்கு முதன் முதலில் மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் (1966) தமிழ் ஆராய்ச்சி மாநாடு கண்டவர் தனிநாயகம் அடிகளார். சென்னை தரமணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கும் அடித்தளமிட்டார்.
இந்தியா மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மட்டுமே தமிழாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையை மாற்றி உலக நாடுகளில் தமிழாய்வு நடைபெறுவதற்கு வழிவகுத்தார். தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் மட்டுமே ஆய்வு செய்த நிலையை மாற்றி தமிழ்ச் சமுதாய வரலாறு, தமிழ்ப் பண்பாடு, திராவிடமொழி, தமிழ்க்கலை, தமிழ்க்கல்வி ஆகிய துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பண்பாட்டு ஆய்வு அணுகுமுறையை உருவாக்கினார். கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு பரவியிருத்தலைக் கண்டு உணர்த்தினார். இதனால், கீழைத்தத்துவம், பண்பாடு என்பதற்கு மட்டுமல்ல உலகத் தத்துவம், பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கும் தமிழ்மொழி முக்கியமானது என்ற புரிதல் உலக அறிஞர்களிடம் உருவாகியது.
தமிழ் ஒரு தனித்துவமான மொழி. தமிழ் ஒரு செம்மொழி என்ற உண்மையை வலியுறுத்தி வந்தார். உலக இலக்கியத்திரட்டு (World Classic) என்னும் பெருந்தொகை நூல்களில் தமிழ் இலக்கிய நூல்களும் இடம்பெற வேண்டுமென்று விரும்பினார். பிறநாட்டு இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வதே தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தினார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஒப்பியல் கல்வித்துறையில் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச்சிந்தனைகள் (1957) என்னும் தலைப்பில் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழி இலக்கியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பாய்வு செய்து வெளியிட்டார்.
தனிநாயகம் அடிகளின் பெருவிருப்பம் தமிழ்க் கற்பித்தல் பணியாகும். தமிழகத்தின் வடக்கன்குளம் பள்ளியிலும் இலங்கை, மலேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் கற்பித்தல் பணிபுரிந்துள்ளார். உலகநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழாய்வுகள் பற்றி வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி என்னும் நூலை எழுதினார். இந்நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 1968 இல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு தனிநாயகம் அடிகள் மேற்கண்ட தமிழாய்வுப் பணிகளையும் தமிழ்த்தூதுச் சொற்பொழிவுகளையும் அவரது நூல்களிலும் இடம் பெற்றுள்ள கல்விச் சிந்தனைகளையும் கல்விச் செயற்பாடுகளையும் விவரிப்பு ஆய்வு முறையை (Descriptive Method) பின்பற்றி உள்ளடக்கப் பகுப்பாய்வு (Content analysis) அணுகுமுறையில் விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவச்செய்ய கல்வி அறிவே அடிப்படை என்னும் கருதுகோளினைக் கொண்டு கல்வியின் நோக்கம், பயன், கல்விக் கொள்கை, கற்றல் கற்பித்தல் முறை, முறைசார் கல்வி, பாலர் கல்வி, வயது வந்தோர் கல்வி, ஆளுமைக் கல்வி, தமிழ்க் கல்வி, இலக்கியக் கல்வி, நுண்கலைக் கல்வி, பிறமொழிக் கல்வி, ஒப்பாய்வுக் கல்வி, பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி ஆகியன பற்றி தனிநாயகம் அடிகளார் குறிப்பிடும் கல்விச் சிந்தனைகள் விளக்கப்படுகின்றன. தனிநாயகம் அடிகளார் எழுதிய நூல்களும் கட்டுரைகளும், அவரது தமிழாய்வுப் பணிகள் பற்றி வெளிவந்துள்ள நூல்களும், கட்டுரைகளும் முதன்மைத் தரவுகளாக (Primary Source) அமைகின்றன.
தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட தனிநாயகம் அடிகளாரைப் போன்று தமிழ்ப்பற்றும், தமிழறிவும் பிறமொழிப் புலமையும், ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்த தெளிவும் நம்மவர்களுக்கு இருக்குமாயின் தமிழ் ஆராய்ச்சியின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்; அப்போதுதான் தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவச் செய்ய இயலும் என்ற கருத்து இந்தக் கட்டுரையின் முடிவாக அமைகின்றது.
அறிமுகம்
தனிநாயகம் அடிகள் இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த ஸ்தனிஸ்லாஸ் கணபதிபிள்ளை, செசில் இராசம்மா தம்பதியர்க்குக் கரம்பனில் 02.08.1913 இல் பிறந்தவர். ‘தனிநாயகம்’ பரம்பரையில் தோன்றியதால் தன் தந்தையின் ஆலோசனைப் பெற்று சேவியர் நிக்கோலஸ் ஸ்தனிஸ்லாஸ் என்னும் தமது பெயரைச் சேவியர் எஸ். தனிநாயகம் என்று 1938 இல் மாற்றிக் கொண்டார். பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘மறு உயிர்த்தல்’ (Resurrection) என்னும் நூலை வாசித்ததன் காரணமாக, இவரது வாழ்க்கை சமயப் பணியிலும் சேவையிலும், கல்விப் பணியிலும் ஈடுபட காரணமாயிற்று. 1934-39 இல் உரோமில் 43 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் குருத்துவக் கல்வி பயின்றார். தமிழ் குருத்துவ மாணவர் நடத்தி வந்த வீரமாமுனிவர் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டார். வத்திக்கான் வானொலி தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தனித்தமிழ்ப் புலமை பெற்றவராயினும் பதின்மூன்று மொழிகளைக் கற்றறிந்த தனிநாயகம் அடிகளின் தமிழாய்வுப் பணிகளையும் தமிழ்த்தூதுச் சொற்பொழிவுகளையும் அவரது நூல்களில் இடம் பெற்றுள்ள கல்விச்சிந்தனைகளையும் கல்விச் செயல்பாடுகளையும் இக் கட்டுரை விபரிக்கிறது. தமிழ்க் கற்றலில் எப்பொழுதும் அறிவை வளர்த்துக் கொண்டே இருக்கும் நற்பண்பு உடைய தனிநாயகம் அடிகள் வடக்கன் குளத்தில் புனித தெரெசாள் பள்ளி துணைத் தலைமையாசிரியராகப் (1940-45) பணியாற்றிய காலத்தில், தமது இருபத்தேழாம் வயதில் தனியாக ஓர் ஆசிரியரின் துணையோடு தமிழை முறையாகப் பயின்று புலமை பெற்றார்.
தமிழ்மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., (1945-1947) பட்டப்படிப்புப் பயின்றார். எம்.லிட் பட்டப்படிப்பில் (1947-1949) ‘Landscape and Poetry: A study of nature in Classical Tamil Poetry’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். சங்கத் தமிழ் நூல்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளின் படைப்புகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு திறனாய்வு செய்து தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார். ஆங்கில இலக்கியத்திலிருந்தும் ஷேக்ஸ்பியர், சாச்சர், ஸ்பெனிசர், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் முதலிய கவிஞர்கள் இயற்கையைப் பாடிய கவிதைகளை ஒப்பிட்டு சங்கத்தமிழ் பாடும் இயற்கையின் தனிப்பெரும் அனுபவத்தை எடுத்துச் சொல்கிறது ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் தனிநாயகம் அடிகளாரின் இந்த ஆய்வு நூல் (எஸ். ஆல்பர்ட், 2013:116).
இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் “பழந்தமிழ் இலக்கியங்களில் கல்வியியல் சிந்தனைகள்” (Educational thoughts in Ancient Tamil Literature) எனும் தலைப்பில் (1955-57) ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். டாக்டர் ஜி.யு. போப், டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற பேரறிஞர்கள் ‘உலகிலேயே ஈடு இணையற்ற ஒரு தனிப்பெரும் நூல் என்றால் அது தமிழில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான்’ என்று கூறியதை தெளிவாகக் காட்டுகிறது தனிநாயகம் அடிகளாரின் கல்விச்சிந்தனைகள் என்னும் இந்த ஆய்வு நூல்.
சமயங்களையெல்லாம் கடந்து வாழ்வியல் சிந்தனைகளை நினைவில் இருத்தும் திருக்குறளையும் பழந்தமிழ் இலக்கிய காலத்தில் சமய சிந்தனைகளை முன்வைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களையும் கவனத்தில் கொண்டு பிறமொழி இலக்கியங்களில் காணும் கல்விச் சிந்தனைகளுடன் ஒப்பிட்டு தமிழின் சிறப்பை உயர்த்திப் பேசுகிறார் (எஸ்.ஆல்பர்ட், 2013, : 117).
தமிழ்க் கற்பித்தல் பணி
தனிநாயகம் அடிகளாரின் பெருவிருப்பம் கல்வி கற்பித்தல் பணியாகும். 1952 இல் இருந்து 1961 வரை இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1961 – 1968 வரை மலேசியப் பல்கலைக்கழகத்தில் (கோலாலம்பூர்) இலக்கியத் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். இங்கு பணியாற்றியபோது தமிழ் விழா நடத்தியதுடன் தமிழ் நூல் கண்காட்சியையும் சிறப்புற நடத்தினார். தமிழ் நூல்கள் வெளியிட ஓர் தனிப் பிரிவை தொடங்கினார். பேராசிரியர் இஸ்மாயில் ஹூசைன் மலாய்மொழியிலும், பேராசிரியர் சீங்ஷ்சி திருக்குறளை சீன மொழியிலும் மொழிபெயர்த்திட, தனிநாயகம் பெருந்துணையாக இருந்தார். 1971 இல் பாரீஸ் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1998 பாரீஸ் College de France மற்றும் ஸ்டார் ஹோம் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகப் பணிப்புரிந்துள்ளார்.
கல்விச் சிந்தனைகள்
கல்வியின் நோக்கம் : ஒவ்வொரு தாயும் தன் மகன் சான்றோன் ஆதல் கூடும் என்று எதிர்பார்ப்பாள். அவ்வாறு ஆவதே கல்வியின் நோக்கம் என்பதற்கு,
“ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழ்வும் ஊரே” ( 191:67)
எனப் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் கூறிய புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோளாகக் கூறுகிறார். உண்மையான கல்வியும், உண்மையான குறிக்கோளும், உண்மையான கோட்பாடுகளும் நிலைபெற்று விளங்கினால் மட்டுமே தமிழ்ச் சான்றோர் அடைந்த சிறப்பு நிலையை நாமும் அடையமுடியும் (தனிநாயகம் அடிகள்,1998:29) என்று அவர் கூறுவதிலிருந்து கல்வியின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
எதுவரை கற்பது என்பதற்கு,
“யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு” (: 397)
என்ற குறட்பா மூலம் நாம் வாழும் இக்காலத்திற்குப் பொருத்தமான கற்றல் சிந்தனையை விளக்குகிறார். அதாவது வேற்று நாட்டு மக்களையும், தத்துவத்தையும், பண்பாட்டையும், மொழிகளையும், இலக்கியங்களையும் நம் நாட்டில் உள்ளதைப் போல அறிந்திருக்க வேண்டுமாயின் நம் வாழ்நாள்கள் போதா, எனவே நம் உயிரிருக்கும் நாள் வரை கற்கவேண்டும் என்கிறார்.
அறிவு வளர்ச்சியில்லாத சமுதாயத்தில் சொந்த இனத்தாரோடுதான் மனிதன் உறவு கொண்டாடுவான். தன்னுடைய குடும்பத்தையும் சிறு இனத்தையும் காப்பாற்றவே முயல்வான். படிப்படியாக அறிவு வளர, மக்கள் அனைவரும் எங்கு வாழ்ந்தாலும் தம் இனத்தவரென்றும், எல்லா உயிர்க்கும் அன்பு காட்டுதல் வேண்டுமென்றும் சிந்தனைகள் அவனுக்குத் தோன்றும். உதாரணமாக ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் மனப்பான்மை, உலக ஒற்றுமைக் கல்விக்கு அடிப்படையாக அமைய வேண்டும் என்கிறார் (தனிநாயகம் அடிகள், 2012:26). எந்தளவிற்குப் பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்தளவிற்கு அவன் ஆளுமை நன்கு வளரும். இச்சிந்தனை, ஆளுமைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நீதியும், நிறைவும் மக்களிடையே நிறைந்து நிலவுவதற்குக் கல்வி அறிவே அடிப்படைக் காரணமாய் இருப்பதாகக் கூறுகின்றன. இதனை,
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை” (: 401)
என்று திருவள்ளுவரும்,
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.மெய், நூற்பா.9)
என்று தொல்காப்பியரும்,
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன வுடன் வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாய்த் தாயும் மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோர் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே” (புறம்: 183)
எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் தம் பாடல்கள் வழி தெரிவிக்கின்றனர்.
கற்பது எப்படி
மனிதன் நிறைவு பெற கல்வி, கேள்வி எனும் இருநிலைகளில் கற்றல் வேண்டும். கல்வி என்பது நேரடியாகத் தன்னார்வத்துடனும், உள்ளுணர்வுடனும் கற்பதாகும். கேள்வி என்பது பிறரால் வழங்கப்படும் வழிமுறை அறிவுரை ஏற்பதன் வழி கற்பதாகும்.
கல்வியின் பயன்
கற்றறிந்தார் அவைகளிலும், மன்னர் அவைகளிலும் உள்ள சான்றோர் ஏற்றுக்கொள்ளுமாறு கல்வி, கேள்விகளால் தான் கற்றறிந்தவற்றைத் தெளிவாகவும், பொருத்தமாகவும் சுருக்கச் சொல்லாடலாகவும் எடுத்துரைக்கும் தகுதி பெறவேண்டும். அத்தகுதியை அடையவில்லை எனில் ஒருவர் பெற்ற கல்வியால் பயனேதுமில்லை.
மொழித் திறன்
தமிழ் ஒலிகள் ஊருக்கு ஊர் உரையாடுதலில் வேறுபடுவது குறிக்கத்தக்கது. ஒலி வேறுபாடுகளை நீக்கி மேல்நாட்டு மொழிகளுக்கு உள்ளதைப்போன்று பொதுநிலை ஒலிப்புமுறை வேண்டும். உதாரணமாக ஆங்கிலத்திற்கு B.B.C இன் ஒலிப்புப் பொதுநிலை விதியாயிருத்தல் போல், தமிழுக்கும் யாதானுமொரு பொதுநிலை ஒலிப்பு வேண்டும் என்பதை உணர்ந்து, நம் எண்ணங்களைத் தமிழில் வெளிப்படுத்தும்போது பிறமொழிக் கலப்பின்றி வெளிப்படுத்த முயல்வோமாகில், நம் மொழிவளம் பெருகுவதற்கும் நம் இலக்கியம் உயர்வடைவதற்கும் வழிநல்கும் என்கிறார் தனிநாயகம் அடிகளார்.
இலக்கியக் கல்வி
தனிநாயகம் அடிகளார் மனித விடுதலைக்கான, சமூக மேம்பாட்டிற்கான வழிகாட்டும் கல்வி இலக்கியமே போற்றுதற்குரியது என்பதை இலக்காக வைத்து பலமொழி இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தவர். தமிழ் இனத்தாரை ஒற்றுமைப்படுத்தும் கருவி தமிழ்மொழிதான் என்கிறார். ஆனால், நமது நாட்டில் தமிழ் கற்பித்தல் இரண்டாம் தர நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது. இந் நிலையை மாற்றிட வேண்டும். திறமைமிக்கவர்களைத் தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இலக்கியங்களைப் படிப்போர் தமிழில் கூறமுடியாத பொருள் ஒன்றும் இல்லை என்றும், எழுதும் பொருளை எவ்வாறு எழுத வேண்டும் என்றும் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தனிநாயகம் அடிகளார்.
நுண்கலைக் கல்வி
நாம் பிறருடைய கலைகளை அனுபவித்தால்தான் தமிழ்க்கலைகளின் சிறப்பைப் பெரிதும் உணரமுடியும். தமிழ் மக்கள் அடைந்த உயர்ந்த பண்பிற்கு நம் நாட்டியக் கலையே ஒப்பற்ற சான்று. அக் கலையை நாம் சிலருக்கென்று ஒதுக்கி வைக்காது பலருக்கும் பயிற்றுவித்தல் வேண்டும் (அறிஞர் தனிநாயகம் அடிகள், 1998:73). தமிழ்நாட்டில் தமிழ் மாணவர் அனைவருக்கும் சிறிதளவேனும் கல்விக் கழகங்களில் தமிழ் இசையைப் பயிற்றுவிக்கும் நாள் விரைவில் வரவேண்டுமென்கிறார் (மேலது,1998:90).
பாலர் கல்வி
தனிநாயகம் அடிகளார் தமிழக அரசின் பாலர் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தபோது அத்துறையில் பல ஆய்வுகள் மேற்கொண்டார். பாலருக்குக் கடுமையான சொற்களைப் படிப்பிக்காமல், குழந்தைகளின் செயலை விளக்குகின்ற எளிய சொற்களைப் பாடநூலில் சேர்த்தால் எளிதாக கற்றுக் கொள்வார்கள் என்கிறார்.
வயதுவந்தோர் கல்வி
நாம் இவ்வுலகில் இன்பமாக வாழ்வதற்குக் கல்வி இன்றியமையாதது. வயதை எண்ணி நாம் கவலை கொள்ளாமல் படிக்கவேண்டும். வயது வந்தோர் கல்வி வரவேற்புக்குரியது என்றார்.
பிறமொழிக் கல்வி
ஜப்பான் மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் எவையேனும் இரண்டு ஐரோப்பிய மொழிகளைப் பயிலுகின்றனர். மொழிபெயர்ப்பு நூல்கள் வழி மேம்பாடு அடைகின்றனர். உலக நாடுகளில் எழுத்தறிவாளர் தொகையில் ஜப்பான் முதல் இடத்தில் உள்ளது. நாமும் பிறமொழிகளைக் கற்றால்தான் தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்ய முடியும்; நம் நாட்டு எழுத்தாளர்கள் புதிய உலகங்களைக் காண்பர்.
“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் புகல்வதிலோர் மகிமை இல்லை
திறமையான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்”
என பாரதி கூறியதை மேற்கோள் காட்டுகிறார் (அறிஞர் தனிநாயகம் அடிகள், 1998:61.) மேலும் வேற்று நாடுகளில் குடியேறியிருக்கும் தமிழர்கள், தமிழை ஒருவாறு மறப்பதற்கு அவர்கள் சூழ்நிலையே காரணமாக இருப்பதால், அந்நாடுகளின் மொழிகள் வாயிலாகத் தமிழின் புகழைப் பரப்புவது நம் கடமையாகும் என்கிறார்.
ஒப்பாய்வுக் கல்வி
உலகத்தில் உள்ள ஒவ்வொரு இனக் குழுவிலும் செயற்பட்ட, செயலற்படும் கல்வி முறைகள் குறித்த புரிதல் தேவைப்படுகிறது. தொல் சமூகமான கிரேக்கம் போன்ற சமூகங்களில் உள்ள கல்வி முறைக்கும் நமது பண்டையச் சமூகத்திலிருந்த கல்வி முறைக்குமான ஒப்பாய்வு தனிநாயகம் அடிகளாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில், ஒரு கல்வி ஒப்பாய்வுத்துறை மாணவர், காலம் காலமாகத் தொடர்ந்து வரும் கல்விச் சிந்தனைகளைச் சுருக்கமாகத் தொகுத்துக் காணக்கூடும் என்கிறார்.
பிளாத்தோ குடிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றார். அவை, காவலர் வகுப்பு, படைவீரர் வகுப்பு, தொழிலாளர் வகுப்பு என்பனவாகும். குடிகள் தம் பிறப்பால் இவ்வகுப்புகளுக்கு உரியவராகிறார்கள். இம்மூன்று வகுப்புகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அந்தந்த வகுப்புகளிலேயே வாழ்ந்து தொழிலாற்றி உயிர் துறப்பர். தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர்க்குக் குடி உரிமைகள் இல்லை. அன்னார்க்கு கல்வி உரிமைகளும் இல்லை. ஒழுக்க வாழ்க்கைக்கு உரியவர்களாகவும் கருதப்பட்டிலர். இக்கருத்திற்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பாடிய திருவள்ளுவரின் திருக்குறளில் இருந்து,
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்”
(குறள்: 973)
எனும் குறளினை ஒப்பிட்டுத் தமிழரின் சமத்துவச் சிந்தனை முதிர்ச்சியைக் காட்டுகிறார் தனிநாயகம் அடிகள்.
தொடரும்.