Arts
16 நிமிட வாசிப்பு

தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் – பகுதி 2

May 13, 2024 | Ezhuna

விடுதலைக்கான கருவி கல்வி

சமுதாயத் தலைவர்களாக இருப்பவர்களின் கல்விநிலை தாழ்ந்திருக்குமாயின் நாட்டினுடைய முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது எங்ஙனம்? இந்திய நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்தவர் பலர் எவ்வாறு ஆங்கில நாட்டில் கல்வி கற்றிருந்தனரோ அவ்வாறே இந்தோனேசியாவின் விடுதலைக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் பலர் டச்சு நாட்டில் கல்வி கற்றிருந்தனர். எனவேதான், கல்வி விடுதலைக்கான கருவி என்பது தனிநாயகம் அடிகளார் சிந்தனையாகும்.

ரஷ்யா : செய்தித்தாள்களே பொதுமக்களின் கல்விக்கழகம், அங்கு அனைவரும் செய்தித் தாள்களைப் படிக்குமாறு நகர்களின் சிறப்பான இடங்களில் விளம்பரங்களைப் போல் செய்தித்தாள்களை விளம்பரப் பலகையின் மீது ஒட்டியிருக்கக் கண்டேன் என்கிறார் (தனிநாயக அடிகள், 2012:79).

இங்கிலாந்து : ஆங்கிலேயர் எங்கும் புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் கொண்டிருப்பவர். புகைவண்டி, பால்வண்டி, நிலம்புகும் வண்டி முதலிய வண்டிகளில் மக்கள் ஏனைய நாடுகளில் உரையாடுவதுபோல் உரையாடாது புத்தகங்களையும் ஏனைய வெளியீடுகளையும் பற்றி உரையாடிக் கொண்டே இருப்பார்கள் என்கிறார் (தனிநாயக அடிகள், 2012:103).

பாரசீகம் : பாரசீகப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது அங்கு பாரசீக மொழியின் வழியாகவே மருத்துவக் கல்வியைப் புகட்டுவதை அறிந்தேன் (மேலது, 2012:299) என்கிறார். இத்தகைய கற்பிக்கும் போக்கு தமிழிலும் வரவேண்டும் என்னும் ஆவலை வெளிப்படுத்துகிறார்.

ஆப்பிரிக்கா : ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்ந்த மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் கல்வி அடிப்படையாக இருந்தது (மேலது, 2012:192) என்கிறார்.

தமிழாய்வுப் பணி

இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையை மாற்றி உலக நாடுகளில் தமிழாய்வு நடைபெற வழிவகுத்தவர் தனிநாயகம் அடிகள். தமிழ்சார்ந்த எல்லாத் துறைகளுமே தமிழ் ஆய்வுக்கு உட்பட்டவைதாம். தமிழ் ஆராய்ச்சியைப் பிரிவு பிரிவாகச் செய்வதைவிட அதை ஒருமுகப்படுத்தி முழுமையாகச் செய்வதே பொருத்தமானது என்பதை முதன்முதலாக உணர்ந்த அறிஞர் தனிநாயகம் அடிகளார் என்கிறார் க. கைலாசபதி. ஐரோப்பிய மனிதநேய ஆய்வுகளில் ஊறித் திளைத்த அவர், இலக்கியத்தையும் மொழியையும் மட்டுமல்லாமல் கலைகளையும் பிறதுறைகளையும் இணைத்து ஒருமுகப்படுத்திய ஒரு பண்பாட்டு அணுகுமுறையை உருவாக்கினார். ஆய்வியல் ஒப்பியல்துறை அவருக்கு தனித்தன்மை அளிப்பது. பிறநாட்டு இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்வது தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும் என்றார்.

thaninayagam 1

தனிநாயகம் அடிகளாரின் தமிழாய்வுப் பணிகளால், இந்தியாவில் ஆய்வுகள் என்றால் சமஸ்கிருதம், பாலி மொழிகள் சார்ந்தவை என்ற எண்ணம் தகர்ந்தது. கீழைத் தத்துவம் பண்பாடு என்பதற்கு மட்டுமல்ல, உலகத்தத்துவம் பண்பாடு குறித்த ஆய்வுகளுக்கும் தமிழ்மொழி முக்கியமானது என்ற உண்மை வெளிச்சம் உலக அறிஞர்களிடம் உருவாகியது (இரா. காமராசு, 2013, ப.4).

இவரே ஒவ்வொரு நாட்டில் உள்ள நூலகங்களிலும், பொருட்காட்சிகளிலும், கலைக்கூடங்களிலும் காணப்படுகின்ற தமிழியல் தொடர்பான ஆவணங்களை எதிர்காலத்தில் தமிழாய்வுக்குப் பயன்படும் வகையில் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார். எனவே இன்று நம் தமிழ்நாட்டுக்கு வேண்டியவர் யாரெனின், ஆற்றல் நிறைந்த கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர்கள்தாம் என்கிறார். தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் பிறநாட்டு அறிஞர்களைப்போல் தமிழ்ப்பற்றும், தமிழறிவும், பன்மொழிப்புலமையும், இக்கால ஆராய்ச்சி நெறிமுறைகளும் நம் இளைஞர்களுக்கு இருக்குமாயின் தமிழ் ஆராய்ச்சியின் எதிர்கால வெற்றிகள் எல்லையற்றவையாய் இருக்கும் என்கிறார் (அறிஞர் தனிநாயக அடிகள், 1998:30).

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி பற்றிய கண்ணோட்டங்களை உலகத்தொல்குடிச் சமூகங்களின் கண்ணோட்டங்களில் இணைந்து ஆய்வு செய்கிறபோது, பண்டைய கிரேக்கம், செல்டிக் மற்றும் வடஇந்தியாவில் நிலவியிருந்த கல்வி முறைக்கு நிகரான வளர்ச்சியுடன் தமிழகக் கல்வியும் இருந்து வந்துள்ளதை இலக்கியச் சான்றுகளால் அறியலாம் (சேவியர் தனிநாயகம் அடிகளார், 2009:33-34) இந்தியக் கல்வி முறையில் பழந்தமிழகத்தில் நிலவிய கல்விமுறை சமயச் சார்பற்றது.

மனித மைய எண்ணங்கள் உருவாகி மனிதனின் வீரதீரச் செயல்களைப் பாடுவோரே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் முதல் கல்வியாளர்கள். தமிழ்ச் சமூகத்தின் இரண்டாம் கட்டக் கல்வி நிலை பாரம்பரியத் தொழில் வகுப்பினரான பாடகர், கூத்தர், இசைஞர், வாழ்த்துப்பா இசைக்கும் பாணர் ஆகியோரிடம் வெளிப்படுகிறது. பாணர், கூத்தர் பணியாக இருந்து வந்த கல்வியைப் புலவர்கள் முறைசார் கல்வியாகத் தகுதிப்படுத்தியது மூன்றாம் கட்டமாகும். புலவர்கள் தத்துவஞானியராகவும், சமயக் கல்வியாளருமாக நாகரிகமடைந்த காலத்தில் செய்யப்பட்டது நான்காம் காலகட்டமாகும். சங்ககாலத்தில் தொடக்கத்தில் பொதுத்தன்மையும் முறைசாராத் தன்மையும் கொண்டிருந்த கல்வி பின்னர் சமயம் சார்ந்த கல்வியாக மாறியது.

பாணர் – கூத்தர் காலக் கல்வி: 

நிலவியல் சார் பண்பாடும் சமுதாய அமைப்புகளும் உடைபட்டு குறுநில மன்னர்களின் ஆட்சியின் கீழமைந்த ஊர்களாகவும், நாடுகளாகவும் மாறிய சூழலில் பாணரும் கூத்தரும் பரிணாமம் பெற்றுள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் தொடர்பாளர்களாக இருந்த பாணர்களும் கூத்தர்களும் தொடக்கக்கால வெகுவான கல்வியாளர்களாக இருந்துள்ளனர். பொதுமக்களுக்குத் தம் கலையால் பொழுதுபோக்களித்தல், கற்பித்தல் எனும் பணிகளைப் பாணர்களே கைக்கொண்டிருந்தனர்.

புலவர் காலக் கல்வி :

கிரேக்க சமூகத்தில் கவிஞர்களும் அறிவுவாதிகளும், தத்துவாதிகளும் செல்வாக்குப் பெற்று உயர்ந்ததும் கூத்தர்களது கலையும் வீரகாவியப் பாடல்களும் தமது முக்கியத்தவத்தை இழந்து தொய்வுற்றன. தமிழகத்தின் இக்காலகட்டம் கிரேக்கத்தின் புலவர் காலகட்டத்திற்கு நிகரானது. இயற்கையை, மனிதர்களை, வாழ்க்கையைப் பாடிய, சங்ககாலப் புலவர்கள் முறைசார் கல்வியின் தொடக்கப் புள்ளிகளாக இருப்பதைக் கிரேக்கச் சான்றுகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். யூத தீர்க்கதரிசிகளின் நீதிப்பற்றும், சமூகநீதியை நடைமுறைப்படுத்தும் திறனும், உண்மையும், தமிழ்ப் புலவர்களிடமும் குடிகொண்டிருந்தன (சேவியர் தனிநாயகம் அடிகளார், 2009:60) என்கிறார்.

மன்னராட்சி நடைபெற்று வந்த சமூகத்திலும், குலத்தலைவர்களும், குடித்தலைவர்களும் நிலத்தனியாட்சி பெற்றுவந்த சமூகத்திலும் புலவர்கள், மாணவர் குழுக்களுக்கு ஆசிரியர்களாகவும் பொதுச் சமூகத்திற்குத் தகவலாளிகளாகவும் இருந்துள்ளனர். தமது மாணவர்களுக்கு முறைசார் ஆரம்பக் கல்வியை அளித்ததோடு மட்டுமின்றிச் சமூகத்திற்கு நீதி வழிகாட்டல், ஒழுக்கவிதி கற்பித்தல், ஆலோசனை வழங்குதல் என்ற நிலையில் முறைசாராப் போதகர்களாகவும் தொழிற்பட்டனர்.

புலவர்காலப் பண்பாட்டில் கல்வி உயர்குடி மரபுடன் இணைவதையும் எடுத்துக் காட்டுகின்றது. அரசருக்கு அமைச்சர்களும், ஆலோசனைக் குழுக்களும் இருந்தன. அவர்களைவிடவும் புலவர்களே அறிவுரை வழங்கும், கற்பிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். புலவர் எனும் சொல் உலக அறிவு, தருக்கம், கல்வி என்பனவற்றுடன் தொடர்புடையது. புலவர்கள் காலத்தில் கல்வி ஒரு கல்வித் தொழில்நுட்பமாக இருந்தது. பெண்பாற்புலவர்கள் சமகாலத்தில் புலவர்கள் போல ஆற்றல்மிக்க ஆசிரியர்களாகவும் ஆலோசகராகவும் இருந்தனர். கற்றலில் கவிதை புனைவதில் பால் வேற்றுமையோ, தொழில் வேற்றுமையோ காட்டப்படவில்லை. கல்வியின் இலக்கு சிறந்த குடிகளாக வாழத் தயார் செய்வதாக இருந்தது.

தொகை நூல்கள் காலம் என்பது பண்பாட்டிலும் கல்விச் செயல்பாடுகளிலும் புலவர்கள் முக்கியத்துவம் பெற்றுவந்த காலகட்டமாகும். தொல்காப்பியத்திலும் தொகை நூல்களிலும் காணப்படுகின்ற கவிதை மரபுகள் இளம் மகளிர் உயர்குடிச் சூழலில் தோழியர் உடனிருக்க, செவிலியரால் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததைக் காட்டுகிறது. செவிலி, தோழி இருவரும் காதல் உளவியலின் கரைகண்ட வல்லுநர்களாக இருப்பதைப் பழந்தமிழ்க் கவிஞர்கள் துல்லியமாகச் சித்தரிக்கின்றனர் (சேவியர் தனிநாயக அடிகளார், 2009:63). அக, புறப் பாடல்களில் புலவர்களின் உளவியல் ரீதியான நுண்ணறிவு வெளிப்பட்டது. தொல்காப்பியம் கவிதை இயற்றுவதற்கான துணை நூலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தமை மொழியியல், இலக்கணம், யாப்பு, மரபுகள், உளவியல் போன்ற பல்வேறு பெருநூல்களின் செறிவாக, சுருக்கப் பதிவாக இருந்திருக்கலாமென்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

இறையாண்மையின் இலக்குகள், அறவியல், உண்மை, நீதி, சமத்துவம், நன்றியறிதல், அன்பு ஆகிய சான்றாண்மைமிக்க மனித உருவாக்கத்திற்கான இலட்சியங்களையும், நல்லொழுக்க நீதிக் கூற்றுகளையும் தொகைநூற்களிலும் முன்னூற்களிலிருந்தும் தொகுக்கின்றது திருக்குறள்.

யாதானும் நாடாமால் (குறள்:397)

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் (குறள்:996)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் (குறள்:72)

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் (குறள்:82)

இன்னாசெய் தார்க்கும் இனியவே (குறள்:987)

அறத்தான் வருவதே இன்பம் (குறள்:39)

இருள்நீக்கி இன்பம் பயக்கும் (குறள்:352)

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (குறள்:457)

மேலிருந்தும் மேலல்லார் (குறள்:973)

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் (குறள்:596)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ (குறள்:798)

நல்லாண்மை என்பது (குறள்:1026)

என ஒவ்வொரு குறட்பாக்களும் முழுக்க முழுக்க மனிதநேய உணர்வின் உந்தலில் நின்று உருப் பெற்றுள்ளன என்பதே திருக்குறள் உலக மானுடக் கவிதை எனும் பார்வையை நியாயப்படுத்துகிறது (சேவியர் தனிநாயகம் அடிகளார், 2009:85) என்கிறார்.

முறைசார் கல்வி அறிமுகம்

கி.பி. முதலாம் நூற்றாண்டு தமிழகம் உரோமானியரோடு பெருமளவு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. வியாபாரத்தினால் பொருளாதாரச் சூழல் பெருகி வளர நகரங்கள் முன்னேற்றமடைந்தன. தென்னகத்தின் கிழக்கு மேற்குக் கரையோரத் துறைமுகங்கள் யாவும் இரண்டாம் தொழிற்சாலைகளாகவும், வெளிநாட்டு வணிக மையங்களாகவும் வளர்ச்சி பெற்றன. இதனால் மக்கள் அடிப்படை உற்பத்தித் தொழில்களைக் கைவிட்டு இரண்டாம் நிலைப் பணிகளைச் சென்றடைந்தனர். அதையொட்டி முறைசார்ந்த கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு அதைப்பெறுவதற்கான வாய்ப்புக்களும் பெருகின (சேவியர் தனிநாயகம் அடிகளார், 2009:55).

காலனியாதிக்க காலத்தில் ஐரோப்பிய உள்ளடக்கமே இங்கு வெகுகாலமாகக் கல்விப் பொருளாக இருந்து வந்துள்ளது. அரசாங்க வேலைத் தேவையை நிறைவேற்றுவது மட்டுமே அதன் நோக்கமாக இருந்தது. நமது மரபுகளைத் தொடருகின்ற கல்வி நிலையங்களை நமது சூழலின் சமூகப் பொருளாதாரத் தேவைகளுக்குப் பதிலளிக்கின்ற வகையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சமயக் கல்வி

இந்தியக் கல்வி முறையில் பழந்தமிழகத்தில் நிலவிய கல்விமுறை சமயச் சார்பற்றது. ஆனால் சங்க காலத்தின் தொடக்கத்தின் பொதுத் தன்மையும் முறைசாராத் தன்மையையும் கொண்டிருந்த கல்வி பின்னர் சமயம் சார்ந்த முறைசார் கல்வியால் மாறியது. புலவர்கள் தடம் மறையத் தொடங்கிய பின்னர் தத்துவ ஞானியர் கவிதை மொழியையும் மரபுகளையும் பயன்படுத்துவதைக் காண்கிறோம். புலவர்கள் இடத்தைச் சமய ஆசிரியர்களும் தத்துவ ஞானிகளும் பெறுவதை அறியலாம்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தத்துவக் காலகட்ட வளர்ச்சியின் சமயக் கல்வியை முன்னிறுத்துகின்றன. இரட்டைக் காப்பியக் காலத்தில் வேத பிராமணர்களும் சமண, பௌத்த சமயத் துறவிகளும் கல்வியாளர்களாக விளங்கியுள்ளனர். துறவியல்லாதோரும் கூடப் பண்டிதர்களும் புலவர்களுமாக இருந்து வந்ததுள்ளதைக் காணமுடிகின்றது. கல்வியைப் பரப்புதல், மரபான வழக்காறுகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளைச் செய்தனர். காப்பியங்கள் முன்னிலைப்படுத்தும் இக்காலகட்டத்தில் திருக்குறள் கருதுகின்ற இலக்கிய மனிதனைப் படைத்து உருவாக்குகின்ற கல்வி நடைபெற்றிருக்கலாம் என்கிறார் தனிநாயகம் அடிகள்.

வேதக் கல்வி

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வைதீகக் கல்வி, வட இந்தியாவில் நிலவி வந்த வைதீகக் கல்வியின் அமைப்பை மிக நுட்பமாகப் பின்பற்றியது. சாதிக்கட்டுப்பாடு சமாச்சாரங்களில் மறு பரிசீலனையைப் பொருட்படுத்தாமல் கற்றல் வாய்ப்புகள் அனைத்தும் பிராமண மாணவர்களையே சென்றடைந்தன. வேதக் கல்வியும், அதன் வளர்ச்சியும் வேள்வி, சடங்குகள், வேத நூற்பாராயணம் போன்ற நடவடிக்கைகளில் மையம் கொண்டது. மாணவர்கள் இளம்பருத்திலிருந்து கற்பிக்கப்பட்டு வந்தனர். வேள்வி செய்தலின் பொருட்டாகவே வேதங்கள் திறன்மிகு ஆசிரியர்களைக் கொண்டு நன்கு கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. மனித வீடுபேற்றுக்கு வழிநடத்தும் ஓர் அமைப்புமுறை வேதக் கல்விக்கு உண்டு (சேவியர் தனிநாயகம் அடிகளார், 2009:73).

சமண-பௌத்தக் கல்வி

சமணம், பௌத்தம், ஆசிவகம் போன்ற இறைமைசாராச் சமயங்கள் மற்றும் உலக இன்ப சிந்தனைப் பள்ளிகள், கற்பித்தல் இலக்குகள், இறைமைக் கோட்பாட்டை வலியுறுத்தும் வேதக் கல்வியுடன் மிகுந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தன. சமண, பௌத்த தமிழ்ச் செவ்விலக்கியங்களில், வேதம் ஓதவல்ல ஒருவர் தனது இச்சைகளையும், உணர்வுகளையும் அடக்கித் தன் ஈடேற்றத்திற்காகக் கொள்ளும் வேட்கையும் தேடலுமே அவரது அற நடவடிக்கையாகக் காணப்படுகிறது. வினைப் பயனிலிருந்து ஒருவராலும் தப்பிக்க இயலாது என்பதே சமண, பௌத்தத்தின் வழி உருவான நீதி இலக்கியங்களின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கின்றது (சேவியர் தனிநாயகம் அடிகளார், 2009:75).

புகார், உறையூர், மதுரை நகரங்களில் இக்காலத்தில் சமயப்பள்ளிகள் நிறுவப்பட்டிருந்தன. தத்துவம் நேரடியாகக் கற்பிக்கப்படுவதுடன் காப்பிய மாந்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து எடுத்துக்காட்டும் அளிக்கப்படுகின்றது.

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேன் உலகம் புதல்வருக்தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது

(மணிமேகலை, சிறைசெய்காதை, 22, 135-38)

சமணமும் பௌத்தமும் தமது சமய ஆசிரியர்களின் ஆளுமையை பெருமதிப்புடன் போற்றி மனதினுள் ஆழப் பதியச் செய்வதை தமது சமயக் கல்வியின் கற்பித்தல் முறையாகக் கொண்டிருந்தன. சமகால நிகழ்வுகளிலிருந்தும் வாழ்வின் போக்கிலிருந்தும் அவர்கள் பாடுபொருளை தேர்வு செய்தனர். உதாரணமாக, ‘கவுந்தியடிகள் இரவுப் பயணம் தவிர்த்ததின் நோக்கம் சிறுஉயிரினங்களை மிதித்துத் தீங்கு செய்ய நேரிடும் என்பதின் மூலம் அகிம்சை தத்துவம் கற்பிக்கப்படுகிறது.’ ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம். வினைப்பயனும் துன்பமும் அதனாலேயே நிகழ்கின்றன. பௌத்த இளம் பிக்குணி மணிமேகலை மற்றும் பௌத்த தத்துவஞானி அறவண்டிகள் உரையாடலில் வினயமும், தம்மமும், அபிதம்மமும் குறித்துப் பேசப்படுகின்றன.

தமிழர் சமய மரபில் இயற்கைச் சமயங்களாகவே இருந்து வந்த சைவம், வைணவம் சமயக் கல்வியை அவர்களின் வழிபாட்டு நெறிகளின் வாயிலாகவும், துறவிகள், பூசாரிகள் வாயிலாகவும் தொடர்புபடுத்தியிருப்பதைக் காணமுடிகிறது (சேவியர் தனிநாயகம் அடிகள், 2009:72).

தமிழ்மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்சுலாமியர், கிறித்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அடிகள் எடுத்துரைத்தார் (எஸ். ஆல்பர்ட், 2013:119).

தமிழ்த் தூதுப் பணி

உலக அரங்கில் தமிழ்மொழியும், தமிழ் இலக்கியமும், தமிழ்ப் பண்பாடும் எல்லாச் சிறப்பும் பெருமையும் பெற்றிருந்தும் கவனிப்பாரற்று இருந்த நிலையை மாற்ற உலகப் பயணத்தை மேற்கொண்டு தமிழ்த்தூது நிகழ்த்தினார். உலகின் பல நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டு மொழியில் தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார். அவரது தூதுப் பயணத்தின் விளைவாக உலக அறிஞர்கள் தமிழ்மொழியை பற்றி அறிந்து கொண்டனர் என்பார் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் (தனிநாயகம் அடிகளார் நினைவு மலர், 1992).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றபின் உலகப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்த உலகப் பயணங்களில் பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பும், பல நாடுகளின் நாகரீகங்களையும் பண்பாடுகளையும் அறியும் வாய்ப்பும் ஏற்பட்டது. இந்த அனுபவங்களை வைத்து ‘தமிழ்த்தூது’ என்ற ஒரு நூலும் ‘ஒன்றே உலகம்’ என்ற ஒரு நூலும் எழுதியுள்ளார்.

magazine

1950-51 இல் ஜப்பான் மற்றும் அமெரிக்கக் கண்டத்திலும் 1954 இல் இங்கிலாந்திலும் ஜரோப்பிய நாடுகளிலும் உள்ள கல்வியியல் நிறுவனங்களுக்கு ஒரு கல்விப் பயணம் மேற்கொண்டார். 1955 இல் இந்தோனேஷியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் ஆசியா பவுண்டேஷன் ஏற்பாட்டில் கல்விப் பயணம் மேற்கொண்டார். 1960 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்காண்டிநேவியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் வயது வந்தோர் கல்வி பற்றி ஆய்வுப் பயணம் மற்றும் 1970 இல் ஐரோப்பா நூலகங்களில் கல்விப் பயணம் மேற்கொண்டார். தனிநாயகம் அடிகள் தன்வாழ்நாள் முழுவதும் படிப்பதும், எழுதுவதும் உலக நாடுகளுக்குப் பயணம் செய்வதும் தமிழ் பற்றி அறிஞர் அவைகளில் பேசுவதுமாக வாழ்ந்திருக்கிறார்.

ஹோமரின் ஒடிசியையும், வெர்ஜிலின் இலியதையும் மக்கள் போற்றுவது போல் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை உலகம் போற்றுமாறு நாம் செய்ய வேண்டும். கொன்பூசியஸ், செனக்கா முதலிய நீதி நூல் ஆசிரியர்களை உலகமாந்தர் எங்ஙனம் அறிந்து படிக்கின்றனரோ அங்ஙனம் திருவள்ளுவரையும் அறிந்து படிக்குமாறு நாம் செய்தல் வேண்டும். சாலோ, எலிசபெத், பிரளெனிங், ஷேக்ஸ்பியர் போன்றோரின் காதற்பாக்களை மக்கள் காதலித்துப் படித்து இன்புறுவதுபோல் நம் அகத்துறை இலக்கியங்களையும் அவர்கள் படித்து இன்புறும் நாள் உதிக்க வேண்டும். உலக இலக்கியத் திரட்டு (World Classics) எனும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும். மேற்றிசை கண்ணும், கீழ்த்திசைகண்ணும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கலைகளின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும் என்கிறார் (அறிஞர் தனிநாயகம் அடிகள், 1998:29).

தமிழ்த் தூதுவுக்கென வேற்றுநாடு செல்வோர் திருவள்ளுவர் கூறும் மூன்று பண்புகளில் முதன்மை சான்றவராய் இருத்தல் இன்றியமையாதது என்பதை,

“அறிஉரு ஆராய்ந்த கல்வி இம்மூன்றன் செறிவு உடையான் செல்க வினைக்கு”

(குறள்: 684)

எனும் குறள் கூறுகிறது. அதாவது இயற்கையிலே அறிவும், கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவும் பலரோடும் பலகாலம் ஆராயப்பட்ட கல்வியும் என நன்கு மதித்தற்கேதுவாய் இம்மூன்றன் செறிவு உடையவர் அவ்வினைக்குச் செல்லுதல் வேண்டும் என்கிறார் (அறிஞர் தனிநாயகம் அடிகள், 1998:12).

ஏட்டுச்சுவடிகளைத் தேடிக் கண்டு தொகுத்த பணி எவ்வளவு உயர்வானதோ, தமிழ்நாட்டுக்கு வந்த சமயக் குருமார்கள் தமிழ் இலக்கியங்களை கற்று தேர்ந்து பரப்பியது எவ்வளவு உயர்வானதோ அவற்றைப் போன்றதொரு பணிதான் தனிநாயகம் அடிகளாரின் அயலகத் தமிழ் பரப்பும் பணி (இரா. காமராசு, 2013:3-6) ஆகும்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம்

கொழும்பில் 1952 இல் ‘தமிழ்ப் பண்பாட்டு மையம், தூத்துக்குடியில் 1950 இல் தமிழ் இலக்கியக்கழகம் (தற்போது திருச்சிராப்பள்ளியிலும் செயலாற்றிக் கொண்டுள்ளது). புதுதில்லியில் 1964 இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஆகிய தமிழ் அமைப்புகளைத் தோற்றுவித்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் வெளிநாட்டினர் தமிழை அறியவும் ஆராயவும் வழி வகுத்தது. உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறவும் வழி அமைத்தது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற கருதுகோளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் தனிநாயகம் அடிகள். சென்னை தரமணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க அடித்தளமிட்ட தனிநாயகம் அடிகளார்,

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யு மாறே”

(திருமந்திரம், 81)

என்ற திருமூலர் கோட்பாட்டை வாழ்வின் கோட்பாடாக அமைத்துக் கொண்டவர் என்கிறார் ச.சு. இராமர் இளங்கோ (தனிநாயகம் அடிகள், 1998 : iii).

1963 இல் தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்குழு உறுப்பினராக இருந்த தனிநாயகம் அடிகளார் தமிழின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் உழைத்தவர். இவரைத் ‘தமிழ் உலகின் சின்னம்’ என்று குறிப்பிடுகிறார் சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை. ‘எங்கள் சிறப்பெல்லாம் தமிழ்நாட்டிற்குள்தான்; தனிநாயகம் அடிகளாரின் சிறப்பெல்லாம் தரணியெங்கும் பரவி இருக்கிறது’ என்று டாக்டர் மு.வ. குறிப்பிடுகிறார். ‘தனிநாயகம் அடிகளாரைப் போல் தமிழ் உணர்வு தமிழர்கள் எல்லோருக்கும் வரவேண்டும்’ என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார். (மதுரை இளங்கவின், 2016:102-103)

உலகத்தமிழ் மாநாடு

உலகத்தமிழ் மாநாட்டினைக் கூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். 1966 இல் மலேசியா கோலாலம்பூரில் நடந்த முதல் உலகத் தமிழ் மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 132 தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். தமிழ் வரலாறும் பண்பாடும், தமிழ் இலக்கியத் திறனாய்வு, இலக்கியமும் சமுதாயமும், இசையும் நடனமும் கலையும் தொன்மையியலும் திராவிட ஒப்பியல் திறனாய்வு ஆகியன பற்றி 146 கட்டுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் அச்சு இயந்திரம் வந்த புதிதில் முதலில் அச்சிடப்பட்ட கார்த்திய்யா (1534), தம்பிரான் வணக்கம் (1578), கிரிசித்தியாணி வணக்கம் (1579) தமிழ்ப் போர்ச்சுகீசிய அகராதி (1679) ஆகிய நூற்களைக் கண்டுபிடித்து பதிப்பித்து முதல் மாநாட்டில் வெளியிட்டியிருக்கிறார் (எஸ். ஆல்பர்ட், 2013:118). இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968 இல் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டில் வாழும் தமிழர் வாழ்வு பற்றி ஆராயப்பட்டது.

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970 இல் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 186 தமிழ் அறிஞர்கள் பங்குபெற்றுள்ளனர். சிந்து சமவெளி எழுத்து, சங்க இலக்கியங்களின் கால அளவு, தமிழுக்கும் வடமொழிக்குமான உறவு, தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வரங்குகள் சிறப்பாக நடைபெற்றது. நான்காவது உலகத் தமிழ் மாநாடு 1974 இல் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

முடிவுரை

தனிநாயகம் அடிகள் தமிழைப் பற்றிப் பேசத் தொடங்கிய காலம் முதலே தமிழ் ஒரு செம்மொழி என்ற உண்மையை வலியுறுத்தி வந்தார். தமிழை உலக அரங்கில் உயர்த்திய தமிழ் அறிஞர், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் நிறுவி, உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து உலகத் தமிழ் மாநாடு கண்ட கல்வியாளர் அவர். தமிழ்த்தூதுப் பணியை மேற்கொண்டு ஐரோப்பா கண்டத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி குறித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமது பன்மொழிப்புலமையால் தமிழ் மொழியின் தொன்மையை, வளமையை, பெருமையை ஆய்வு நூல்கள் மூலம் உலகறியச் செய்தவர். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்துகொள்ள “Tamil Culture” என்னும் காலாண்டு ஆய்விதழை நடத்தியவர். கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு பரவியிருத்தலைக் கண்டு உணர்த்தியவர். மறைந்த தமிழ் நூல்களைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்தவர். தமிழின் சிறப்பை உலகம் அறிந்திட ஆங்கிலத்தில் மூன்று நூல்கள் தனிநாயகம் அடிகளாரால் வெளியிடப்பட்டன. உலகில் பிற நாடுகளில் தமிழ் ஆய்வு மேற்கொண்டு வருவது பற்றி வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி என்ற நூலை (1968) வெளியிட்டார்.

portrait

இவ்வாறு தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட தனிநாயகம் அடிகளாரைப் போன்று தமிழ்ப் பற்றும், தமிழறிவும் பிறமொழிப் புலமையும், ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்த தெளிவும் நம்மவர்களுக்கு இருக்குமாயின் தமிழ் ஆராய்ச்சியின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்; அப்போதுதான் தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவச் செய்ய இயலும் என்ற கருத்து இந்தக் கட்டுரையின் முடிவாக அமைகின்றது.

திறவுச்சொற்கள்

தமிழ்த்தூது, தமிழ்ப்பண்பாடு, தமிழ்க்கலை, தமிழோசை, தமிழ்த் தொண்டர், தமிழ்க்கல்வி, தமிழ் ஒப்பாய்வுக்கல்வி. 

மேற்பார்வை நூல்

  1. சேவியர் தனிநாயகம் அடிகளார், பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி, ந. மனோகரன் (மொ.பெ). மாற்று வெளியீட்டகம், சென்னை. முதற் பதிப்பு, டிசம்பர் 2009.
  2. தனிநாயக அடிகள், ஒன்றே உலகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், தமிழ்ப் பேராயம், காட்டாங்குளத்தூர், சென்னை, 2012.
  3. அறிஞர் தனிநாயகம் அடிகள், தமிழ்த் தூது (கட்டுரைக் கொத்து), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1998.
  4. சிவசுப்பிரமணியன், ஆ., தமிழ்க் கிறித்துவம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி, லிட், நாகர்கோவில், முதற்பதிப்பு, டிசம்பர் 2014.
  5. மதுரை இளங்கவின், தமிழ் போற்றும் கிறிஸ்துவர், சேவியர் தனிநாயகம் பக்: 8-13, வைரவன் பதிப்பகம், மதுரை, முதற்பதிப்பு, டிசம்பர் 1984.
  6. மதுரை இளங்கவின், தமிழ்க் கிறிஸ்தவம், தனிநாயகம் அடிகள் பக்: 97-103, காவ்யா, சென்னை, முதற்பதிப்பு 2016.
  7. ஜான்சன், எஸ்.பி., (தொ.ஆ), நூறாவது தமிழ் மலராய்ப் பூத்த தனிநாயகம், தேடல் வெளியீடு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2013.
  8. ஆல்பர்ட், எஸ்., தமிழ்க் கலாச்சாரமும் தவத்திரு தனிநாயகம் அடிகளாரும் தளம் கலை இலக்கிய இதழ் (காலாண்டு), ஏப்.- ஜூன் 2013, பக்:114 119.
  9. காமராசு, இரா., தமிழ்த்தூதர் தனிநாயகம் அடிகளார், காக்கை சிறகினிலே, கலை இலக்கிய மாத இதழ், அக்டோபர் 2013, பக். 3-6, .
  10. தனிநாயகம் அடிகளார் நினைவு மலர், திருச்சிராப்பள்ளி, 1992.
  11. உXavier.s, Thaninayagam (Thaninayaga Adigal), Educational Thought in Ancient Tamil Literature, The Publication Division, Bharathidasan University, Tiruchirappalli, Tamilnadu, First Edition 2010.
  12. Complete works of Thani Nayagam Adigalar Vol.I., August 2013, Pop- ular Pathipagam, Chennai.

ஒலிவடிவில் கேட்க

4563 பார்வைகள்

About the Author

கு. சின்னப்பன்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)