ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம்
கூலிகள்
19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் கூலியின் போக்கு எவ்வாறு அமைந்தது என்பதை அறிந்து கொள்வதும், அதனை ஆதாரமாகக் கொண்டு சமூகத்தின் பல்வேறு பிரிவினரதும் வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது என்பதை ஊகித்து அறிவதும் சுவாரசியமானதொரு விடயமாகும். 1835 இல் ஒரு கூலித் தொழிலாளியின் நாட் கூலி 3 துட்டு அல்லது 12.3 சதமாக இருந்தது. கைவினைத் தொழிலாளி ஒருவன் 1 ஷிலிங் அல்லது 50 சதத்தை தன் உழைப்புக்கான கூலியாகப் பெற்றான். 1841 இல் நாட்கூலி 4 1/2 துட்டு அல்லது 181/2 சதமாக உயர்ந்திருந்தது. 1842 இல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயக் கூலிகள் எவ்வளவு கூலியைப் பெற்றார்கள் என்ற விபரங்கள் கிடைக்கின்றன. இடத்துக்கிடம் கூலியின் அளவு வேறுபட்டதுடன், கூலி வழங்கப்படும் முறையிலும் வேறுபாடுகள் காணப்பட்டன. கூலி முழுவதையும் காசாகக் கொடுத்தல், ஒரு நேர உணவும் காசு ஒரு பகுதியும் வழங்குதல், இருநேர உணவும் காசும் வழங்குதல், கூலியாக நெல்லை வழங்குதல், நெல்லும் உணவும் வழங்குதல் எனப் பல முறைகள் இருந்தன. வடமராட்சி, தென்மராட்சி, தீவுப்பகுதிகள் ஆகியவற்றில் கூலியை நெல்லாகவும் உணவாகவும் வழங்குதல் பெருவழக்காக இருந்தது. ஆனால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கூலியைக் காசாக வழங்கும் வழக்கம் இருந்தது. வலிகாமம் மேற்கிலும் கிழக்கிலும் காசும் உணவும் வழங்கப்படும் வழமை இருந்தது. 2 பணம் அல்லது 12 1/2 சதம் கூலியாக வழங்கப்பட்டது. அத்தோடு சில வேளை உணவும் வழங்கப்படும், சிலவேளை உணவு வழங்கப்படுவதில்லை. ஒரு நேர உணவின் பெறுமதி 1 பணம் அல்லது 6 1/2 சதம் என மதிப்பிடப்பட்டது.
முஸ்லிம் கூலித் தொழிலாளருக்கு 3 பணம் அல்லது 19 சதம் கூலியாக வழங்கப்பட்டது. அவ்வாறு உயர் கூலி வழங்கப்படுவதால் உணவு கொடுக்கப்படுவதில்லை. 18 ஆம் நூற்றாண்டின் கூலி வீதங்களைப் பார்க்கும் போது மெய்க்கூலி குறைந்து சென்றதையும், உணவு, மற்றும் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்ச்சிக்கு ஏற்றதாகக் கூலி உயர்ந்து செல்லவில்லை என்பதையும் காணமுடிகிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஏறக்குறையப் பட்டினி நிலையிலேயே வாழ்ந்தனர். உழைப்புக்கான கேள்வி பருவகாலத்திற்கு ஏற்ப மாறுவதாலும் அவர்கள் வாழ்க்கை கஷ்டமானதாக இருந்தது.
1894 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கூலிகள் பற்றிய விபரமான புள்ளிவிபரங்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு கூலி விகிதங்களின் போக்கைக் கணிப்பிட முடிகிறது. மீண்டும் யாழ்ப்பாணத்தில் இடத்துக்கிடம் கூலியின் அளவிலும், கூலி வழங்கும் முறையிலும் மாற்றங்கள் இருந்ததை அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாண நகரிலும் அதனை அண்மித்த கிராமங்களிலும் கூலிக்கான கேள்வி உயர்வாக இருந்ததால் உயர் கூலி அவ்விடங்களில் வழங்கப்பட்டது. பளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய இடங்களிலும் கூலியாட்கள் போதியளவு இன்மையால் உயர் கூலி வழங்கப்பட்டது. ஒரு நாளுக்கான சராசரிக்கூலி இவ்விடங்களில் 18 சதம் முதல் 42 சதம் ஆக இருந்தது. யாழ்ப்பாண நகரில் 35 சதம் பணக் கூலியாகவும் 6 சதம் பெறுமதியுள்ள ஒரு நேர உணவும் வழங்கப்பட்டது. ஏனைய பகுதிகளில் கூலி குறைவாக இருந்தது. வலிகாமம் கிழக்கில் 18 சதம் முதல் 24 சதமாகவும், வலிகாமம் மேற்கில் 24-31 ஆகவும் இருந்தது. கூலியை நெல்லாக வழங்கிய போது கூலியின் பெறுமதி நாள் ஒன்றுக்கு 42 சதம் வரை உயர்வாக இருந்தது. 50 ஆண்டு கால எல்லைக்குள் விவசாயக் கூலிகள் 2 1/2 மடங்கு உயர்ந்திருந்ததை மேற்குறித்த புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பற்றிய புள்ளிவிபரங்கள் இன்மையால் கூலியின் உயர்வை பொருட்களின் விலை உயர்வோடு ஒப்பிட்டுக் கருத்துரைக்க முடியவில்லை. 1842 இல் ஒரு கொத்து நெல்லின் விலை 4 சதமாக இருந்தது. இது 1894 இல் 7 சதமாக உயர்ந்திருந்தது. கூலிகள் நெல்லின் விலையை விட வேகமாக உயர்ந்து சென்றதை இது எடுத்துக் காட்டுகிறது. வாழ்க்கை செலவைக் கணிப்பதில் அரிசியின் விலை ஓர் அம்சம் மட்டுமே ஆகும். ஏனைய பல அத்தியாவசியப் பொருட்களான உடுபுடவை, வாடகை, மரக்கறி வகைகள், உணவில் சேர்ப்பதற்கான எண்ணெய் ஆகிய வற்றின் விலைகளும் இக்கணிப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
அரிசியின் விலை
யாழ்ப்பாண மக்கள் தமது உணவுத் தேவைக்கான அரிசியின் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பெற்றுக் கொண்டனர். இதனால் அரிசியின் நிரம்பலுக்கு ஏற்ப அதன் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டன. இக்காரணத்தால் 20 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டு காலத்தில் அரிசியின் விலை சில வார எல்லைக்குள் ஒரு புசல் ரூ 2.50 இல் (ஒரு கொத்து 8 சதம்) இருந்து ரூ 6.00 வரை (ஒரு கொத்து 19 சதம்) ஏறி இறங்குவதாக இருந்தது. இந்த ஏற்ற இறக்கங்கள் மக்களுக்கு மிகுந்த இன்னல் விளைவிப்பனவாய் இருந்தன. குறிப்பாக நாட்கூலி பெறுவோர் மிகுந்த கஷ்டப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த செட்டி வியாபாரிகள் சிலரது கையில் அரிசி வர்த்தகம் இருந்து வந்தது. யாழ்ப்பாணத்தில் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அல்லது இந்தியாவில் விளைச்சல் குறைவு ஏற்பட்டாலோ விலை திடீரென உயரும். இறக்குமதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவ்வர்த்தகர்கள் விலைகளைத் தீர்மானிக்கும் சக்தியுடையவர்களாய் இருந்தனர். விலைகள் கட்டுமீறி உயரும் போது குடிமக்கள் கலகம் செய்வர் என்ற பயம் இருந்ததால் அரசாங்க அதிபர் இவ்விடயத்தில் தலையிடும் தேவை ஏற்படும். நிலைமை நன்றாக அமைந்து விலைகள் குறைவடைந்தால் அரிசியின் நுகர்வு அதிகரிக்கும். உள்ளூரில் உற்பத்தி வீழ்ச்சியடைந்து அரிசியின் விலை ஏறும்போது மக்கள் உலர் தானியங்களையும் பனம் பொருட்களையும் உணவுத் தேவைக்காக கூடியளவில் பயன்படுத்துவர்.
புகையிலை உற்பத்தியும் ஏற்றுமதி வர்த்தகமும்
குடா நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கினை வகித்த புகையிலைப் பயிரின் முக்கியத்துவம் பற்றி மேற்குறித்த பின்னணியில் புரிந்து கொள்ளலாம். 18 ஆம் நூற்றாண்டில் இந்தியச் சந்தையில் யாழ்ப்பாணத்தின் புகையிலை முக்கிய இடத்தை பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணப் புகையிலை மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும், கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதாயினும் அதன் பெரும் பங்கு மலபார் பகுதிக்கே ஏற்றுமதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு பதப்படுத்தப்பட்ட புகையிலை மலையாளத்தில் உள்ளவர்களின் சுவையுணர்வுக்கு ஏற்றதாக இருந்தது. அதனால் அப்பகுதி மக்கள் அதனை விரும்பி உபயோகித்தார்கள். மலபார் பகுதிக்குள் யாழ்ப்பாணப் புகையிலையை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் தனியுரிமை தனக்கே உரியதென திருவிதாங்கூர் அரசர் பிரகடனப் படுத்தியிருந்தார். அது அவருக்கு மிகுந்த இலாபம் தரும் வர்த்தகமாக இருந்தது. இதனால் மலபார் அரசுக்கும் யாழ்ப்பாண உற்பத்தியாளர்களுக்குமிடையில் ஓர் அந்நியோன்னியமான உறவு வளர்ச்சி பெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தின் புகையிலை உற்பத்தியாளர்கள் மலபார் சந்தையை நம்பியிருந்தனர். வருடா வருடம் உயர்ந்து சென்ற கேள்விக்கு அமைய தமது உற்பத்தியை மலபார் சந்தைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
புகையிலை ஏற்றுமதி வரியும், வர்த்தக விரிவாக்கமும்
பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஆரம்ப முதலே வடமாகாணத்தின் பொருளாதாரத்தில் புகையிலையின் முக்கியத்துவம் குறித்து நன்கு உணர்ந்து செயற்பட்டனர். தமது வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு புகையிலை மீது விதிக்கப்படும் வரி தமது வருமானத்தை அதிகரிக்கும் ஒரு வழியாக உள்ளதை அவர்கள் கண்டனர். 1798 ஆம் ஆண்டில் புகையிலையின் ஏற்றுமதி வரியினால் ரூ 232200 அரசுக்கு வருமானமாகக் கிடைத்தது. டச்சு ஆட்சியில் ஒரு ஆண்டுக்கான புகையிலை ஏற்றுமதி வரி ரூ 80,000 ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியர் ஆட்சியின் முதற்பத்தாண்டு காலத்தில் புகையிலையின் ஏற்றுமதி வரி 25% ஆக இருந்தது. தென்னிந்தியாவில் பிரித்தானியர் அமைதியை ஏற்படுத்திய பின் புகையிலையின் கேள்வி உயர்ந்ததால் வர்த்தகமும் விரிவடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆண்டுக்கு 2 1/2 மில்லியன் இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகையில் 68% மலபாருக்குச் சென்றது. ஏறக்குறைய 30% தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், மிகுதி தென்னிலங்கைக்கும் ஏற்றுமதியாயிற்று. 18 ஆம் நூற்றாண்டில் இருந்து திருவிதாங்கூர் சந்தைக்கும் புகையிலை ஏற்றுமதியாயிற்று. காலப்போக்கில் தென்கிழக்காசியச் சந்தைக்கும் ஏற்றுமதி விரிவாக்கம் பெற்றது. அசே (Aceh), பினாங்கு ஆகிய இடங்களிற்கும் புகையிலை அனுப்பப்பட்டது. தென் கிழக்காசியாவின் வர்த்தகத்தில் தென்னிந்தியாவின் நாகூர், கடலூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களோடு பங்காளிகளாகச் சேர்ந்து செட்டிகள் சிலரும் இவ்வர்த்தகத்தை நடத்தினர். பிரித்தானியரின் அரசியல் அதிகாரம் தென்னிந்தியக் கரையோரப் பகுதிகளிலும், இலங்கையிலும் வலுப்பெற்ற பின்னர் முஸ்லிம் வர்த்தகர்களும், செட்டிகளும் சென்ற் டேவிட் கோட்டையில் இருந்த ஆங்கில நாட்டு வணிகர்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
புகையிலை வர்த்தகத்தின் அரசியல்
இந்தியாவிலும் இலங்கையிலும் பிரித்தானியர் ஆட்சி அதிகாரம் வலுமிக்கதாக இருந்தபடியால் புகையிலை வர்த்தகம் பலமான அத்திவாரத்தில் அமைந்ததாய் தொடர்ந்து முன்னேற்றம் பெற்றிருத்தல் வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆயினும் உண்மையோ இதற்கு நேர் எதிர் மாறானது. புகையிலை விலைகள் சடுதியாக வீழ்ச்சியடைவதும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாவதும் வழக்கமாக இருந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். இடைத்தரகர்களதும் அரசாங்கத்தினதும் வருமானம் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளானது. இந்நிலை பிரித்தானிய அரசின் விநோதமான கொள்கையின் பிரதிபலன் என்றே கூற வேண்டும். பிரித்தானியாவின் பெரிய காலனியான இந்தியாவுடன் இலங்கை இறுகப் பிணைக்கப்பட்டு இருந்ததாயினும் பிரித்தானியர் இந்தியாவையும் இலங்கையையும் தனித்தனி அரசியல் அலகுகளாகவே வைத்திருந்தனர். திருவிதாங்கூர் சுயாட்சியுடைய அரசாகப் பிரித்தானியாவின் மேலாளுகைக்கு உட்பட்டு இருந்த காரணத்தாலும் நிலைமை மேலும் சிக்கலடைந்தது. திருவிதாங்கூர் அரசர் புகையிலை வர்த்தகத்தை தனது ஏகபோக உரிமையாக வைத்திருந்தபடியினால் விலைகளையும் இறக்குமதி அளவையும் அவரே தீர்மானித்தார். புகையிலை வர்த்தகத்தைத் தடையற்ற சுதந்திர வர்த்தகமாக வைத்திருக்க யாழ்ப்பாணம் விரும்பிய போதும் அரசர் அதற்கு இணங்கி வரவில்லை. இலங்கை அரசாங்கம் 1812 ஆம் ஆண்டில் புகையிலையின் கொள்வனவையும் மலபாருக்கு அதனை ஏற்றுமதி செய்வதையும் அரசாங்கத்தின் தனியுரிமையாக்கியது. அத்தோடு புகையிலையின் ஏற்றுமதி வரியை 50% ஆக உயர்த்தியது. இவ்வரி பின்னர் 60% ஆக உயர்த்தப்பட்டது. அசே (Aceh) பகுதிக்கு ஏற்றுமதி செய்வது இதனால் முற்றாகத் தடைப்பட்டது. வரி அதிகரிப்பின் பயனாக அச் சந்தையை முற்றாக இழந்ததோடு அசேயுடனான வர்த்தகம் மீளத் தொடங்கப்பட முடியாததாகியது. மலபார் அல்லாத பிற இடங்களுக்கான வரியின் ஒரு பகுதியை அரசாங்கம் மீளக் கொடுக்க முன் வந்ததேயாயினும் ஆசியாவின் சந்தையை மீளக் கைப்பற்ற முடிய வில்லை. 1826 இற்கும், 1833 இற்கும் இடைப்பட்ட காலத்தில் புகையிலை ஏற்றுமதியும் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. பல வர்த்தக இடைத்தரகர்கள் தம் வியாபாரத்தை மூடும் நிலை ஏற்பட்டது.
ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பினால் யாழ்ப்பாணத்தின் நிதிமுறைமை சீர்குலைந்தது. இந்திய வர்த்தகர்கள் ஆண்டுதோறும் 125000 முதல் 140000 பகோடாஸ் (ரூ.500000 முதல் 600000) பெறுமதியுடைய பணத்தை இறக்குமதிக்காகச் செலவிட்டனர். இப்பணம் குடாநாட்டுக்குள் பரிவர்த்தனைக்குரிய பணமாகச் சுழற்சி பெற்றது. இத்தங்க நாணயத்தைக் கொடுத்து அரிசி, துணிவகைகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டன. ஏற்றுமதிகள் குறைவடைந்தமை ஒருபுறமிருக்க, அரசாங்கமே புகையிலையின் கொள்வனவைத் தனது ஏகபோக உரிமையாகக் கொண்டிருந்தது. உற்பத்தியாளர்கள் அரசினால் அச்சிடப்பட்ட பணத்தாள்களை பெற்றனர். இக்காகிதப் பணம் நாட்டுக்கு வெளியே செலாவணி மதிப்பு அற்றதாக இருந்தது. இதனை அந்நிய வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதனால் குடா நாட்டின் அந்நிய வர்த்தகம் பாதிப்புற்றது. இறக்குமதிகளின் அளவு குறைந்தது.
புகையிலை உற்பத்தியில் நெருக்கடி
புகையிலை தொடர்பான அரசாங்கக் கொள்கையில் இவ்விதமாக ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. புகையிலை உற்பத்தியாளர்களும் பாதிப்புற்றனர். 1820 களில் 3 1/2 மில்லியன் இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று. 1830 களில் இத்தொகை 750000 இறாத்தல்களாகக் குறைந்தது. இந்திய அரசாங்கம், திருவிதாங்கூர் சமஸ்தான அரசாங்கம், இலங்கை அரசாங்கம் என்ற மூன்று அரசாங்கங்களும் புகையிலை வர்த்தகத்தால் தமது ஆதாயத்தை எவ்வாறு பெருக்கிக் கொள்ளலாம் என்று போட்டியிட்டன. புகையிலையின் விலைகள் உயர்ந்தன. வரியின் அளவும் உயர்ந்தது; குடா நாட்டு உற்பத்தியாளர்களின் சந்தை பறிபோயிற்று. உற்பத்தியாளர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர்.
கோல்புறூக் ஆணைக்குழு வரிச் சீர்திருத்தங்களைச் சிபாரிசு செய்தது. இதன்படி புகையிலையின் ஏற்றுமதி வரி 2% ஆகக் குறைக்கப்பட்டது. இதன் பயனாக ஏற்றுமதிகள் உடனடியாகவே உயர்ந்தன. ஆயினும் திருவிதாங்கூர், கொச்சின் அரசுகள் புகையிலையின் இறக்குமதியையும் விற்பனையையும் தமது ஏகபோகமாக வைத்திருந்ததால் புகையிலையின் சந்தை விலையைச் செயற்கையான முறையில் உயர்த்தி வைத்திருக்க முடிந்தது. மிக உயர் விலையைக் கொடுத்து நுகர்வாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டியிருந்ததால் யாழ்ப்பாணப் புகையிலையின் கேள்வி குறைந்தது. இந்திய அரசாங்கம் திருவிதாங்கூர் அரசின் தனியுரிமைக் கொள்கையைக் கைவிடும்படி கேட்க விருப்பம் கொள்ளவில்லை. திருவிதாங்கூருக்கான ஏற்றுமதியிலேயே யாழ்ப்பாணப் புகையிலை உற்பத்தியாளர்கள் தங்கியிருந்தனர். இவ்வாறான நிலையில் இருந்து தப்பிக்க வழியில்லாத நிலையில் மலபாரின் ஏனைய பகுதிகளிலும் சென்னை மாகாணத்திலும் தரங்குறைந்ததும் மலிவானதுமான புகையிலை வகைகள் சந்தையைப் பிடித்துக் கொண்டன. இதனால் இந்திய ஏற்றுமதிச் சந்தையை யாழ்ப்பாணம் இழந்தது.
புகையிலை உச்சக்கட்ட உற்பத்தி 1880-1900
19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் திருவிதாங்கூர் அரசின் தனியுரிமைக் கொள்கை கைவிடப்பட்டதால் புகையிலை ஏற்றுமதி அதிகரித்து உற்பத்தியிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசு புகையிலை மீது இறக்குமதி வரியை மட்டும் அறவிட்டது. 1880- 1900 காலப்பகுதி யாழ்ப்பாணத்தில் புகையிலை உற்பத்தியின் உச்சக்கட்டமாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கையின் கீழ் இருந்த நிலப்பரப்பின் அளவு அதிகரித்தது. இக்காலத்தின் ஏற்றுமதி பற்றிய புள்ளிவிபரங்கள் புகையிலை உற்பத்தியின் முன்னேற்றத்தை எடுத்துக் கூறுகின்றன. இக்காலத்தில் ஏற்பட்டிருந்த உச்ச நிலையை 20 ஆம் நூற்றாண்டில் எட்ட முடியவில்லை. 1896 ஆம் ஆண்டில் 10244752 இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று. இதுவே எந்தவொரு ஆண்டிலும் எட்டப்படாத உயர் அளவாக இருந்தது. இவ்வாண்டின் தொகைக்குக் கிட்டிய உயர் ஏற்றுமதி 1875 இல் அடையப் பெற்றிருந்தது. அவ்வாண்டில் 10188528 இறாத்தல் புகையிலை ஏற்றுமதியாயிற்று. 1896 ஆம் ஆண்டின் புகையிலை ஏற்றுமதி வருமானம் ரூபா 1918950 ஆகும். 1880-1900 ஆண்டு காலத்தில் ஆண்டு ஒன்றுக்குரிய ஏற்றுமதி 74 மில்லியன் இறாத்தலுக்கு மேற்பட்டதாகவே இருந்தது. ஏற்றுமதி வருமானமும் ஆண்டுக்கு ரூ.1400000 முதல் ரூ. 1900000 வரையில் உயர் நிலையில் இருந்தது. யாழ்ப்பாணத்தின் புகையிலை உற்பத்தி யாளர்களான விவசாயிகளின் கொள்வனவு சக்தி இக்காலத்தில் அதிகரித்தது.
புகையிலை வர்த்தகத் தளம்பல் நிலை
யாழ்ப்பாணத்தில் புகையிலை உற்பத்தியின் அதிகரிப்புடன் இணைந்த பல பிரச்சினைகள் இருந்தன. யாழ்ப்பாணப் புகையிலையின் மணமும் குணமும் மலையாள நுகர்வோருக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ்ப்பாண உற்பத்தியாளர்களும் தம் சந்தையை மலபார் என எல்லைப்படுத்தியது மட்டுமன்றி அச்சந்தைக்கு ஏற்ற புகையிலையைப் பயிரிடுவதில் சிறப்புத் தேர்ச்சியையும் பெற்றனர். உற்பத்தி முழுவதையும் இச்சந்தைக்கு அனுப்பி வைக்கக் கூடியதாய் இருந்த போது உற்பத்தியும் வர்த்தகமும் சுறுசுறுப்பாக நடைபெற்றன. ஆயினும் 1890 களில் சந்தைக் கேள்வியை விட நிரம்பல் அதிகரித்ததால் வர்த்தகம் தேக்கமடைந்தது. விலைகள் வீழ்ச்சியடைந்தன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தின் மீது இதன் எதிர்விளைவுகள் மோசமாக இருந்ததால் அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏற்றுமதிகளைப் பரவலாக்கும் அவசியம் உணரப்பட்டது. இந்த இலக்கை அடைவதாயின் மலையாளப் பகுதியில் விருப்புக்குரியதாக இருந்த வகையைவிட வேறு வகைப் புகையிலைகளைப் பயிரிட வேண்டும் என உணரப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தின் புகையிலையின் சந்தை திருவிதாங்கூரில் வீழ்ச்சியுற்றதால் ஏற்றுமதியும் வீழ்ச்சியுற்றது. 1901 ஆம் ஆண்டில் புகையிலை ஏற்றுமதி 5736000 இறாத்தலாகக் குறைந்தது. அவ்வாண்டில் ஏற்றுமதி வருமானம் 573600 ரூபாவாகும். 1902 இல் ஏற்றுமதியின் அளவு 3870000 இறாத்தலாக மேலும் வீழ்ச்சியுற்றது. அவ்வாண்டின் ஏற்றுமதி வருமானமும் ரூ.454967 ஆகக் குறைந்திருந்தது. உற்பத்தியின் வீழ்ச்சியும், விலைகளின் சடுதியான வீழ்ச்சியும் ஏற்றுமதி வருவாயின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியைத் தொடர்ந்தது. பழைய நிலைக்கு மீளவோ, விவசாயிகளுக்கு நிவாரணம் தேடவோ முடிய வில்லை. விவசாய நிபுணர்கள் சிகரட் புகையிலையின் உற்பத்தியை யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்தனர். திருவிதாங்கூர் சந்தையிலும் சாதகமான நிலை மீண்டும் தோன்றிய போதிலும் முன்னைய நிலைக்கு அது முன்னேற முடியவில்லை. 1920 களில் யாழ்ப்பாணத்தின் புகையிலை ஏற்றுமதி 21/2 மில்லியன் இறாத்தல் முதல் 4 மில்லியன் இறாத்தல் வரையிலானதாக இருந்தது. இவ்வாறான ஏற்ற இறக்கங்கள் இருந்த போதும் புகையிலை உற்பத்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு வருமானம் கிடைத்தது. பல விவசாயிகள் நெற்செய்கைக்குப் பதிலாக வருமானம் தரும் பயிரான புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு நன்மை பெற்றனர். 1910 களில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகளுக்குக் கிடைத்த வருமானம் குறைவாகவே இருந்தது. புகையிலையின் உற்பத்திச் செலவு உயர்வாக இருந்தது. ஆனால் விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த புகையிலைக்கு பெற்றுக் கொண்ட விலை உயர்வாக இருக்கவில்லை. ஆயினும் புகையிலையினால் யாழ்ப்பாணத்திற்குக் கிடைத்த பணவருவாய் பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியது. விவசாயக் கூலியாட்கள், புகையிலையைப் பதப்படுத்துவோர், ஏற்றியிறக்கல் தொழிலில் ஈடுபட்டோர். இடைத்தரகர்கள், கப்பல் தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் நன்மை பெற்றனர். 1921 இல் புகையிலைத் தோட்டங்களில் 25000 கூலியாட்கள் வேலை செய்தனர். புகையிலை பயிரிடும் பகுதிகளில் நெற்செய்கையைச் செய்து வந்த பகுதிகளை விட ஒப்பீட்டளவில் செழிப்பு நிலை காணப்பட்டது.
பனம்பொருள் உற்பத்தி
பனை உற்பத்திப் பொருட்கள் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கைக்கு உதவும் பொருளாதார துணைப் பண்டங்களாக இருந்து வந்தன. பனை மரங்களின் சிலாகைள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வேற்றுமதி கடுமையான கட்டுப்பாடுகளை உடையதாய் இருந்தது. பனைவளம் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் இக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெல் உற்பத்தி போதியளவு இல்லாத இடங்களிலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் இல்லாத பகுதிகளிலும் பனம் பொருட்களை மக்கள் பதில் உணவாகக் கொண்டனர். 1890 களில் யாழ்ப்பாணம், தீவுப் பகுதிகள், வன்னி ஆகிய இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பனந்தும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. ‘Vavasseur and Co’ என்னும் கம்பனி யாழ்ப்பாணத்தில் உள்ள முகவர் ஒருவர் மூலம் ஏற்றுமதி வர்த்தகத்தை நடத்தியது. இதன் மூலம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்களவு வருமானம் யாழ்ப்பாணத்திற்குக் கிடைத்தது; பனங்காணிகளின் சிற்றுடமையாளர்களும் பனந்தும்பைச் சேகரித்த வறியவர்களான தொழிலாளர்களும், இடைத்தரகர்களும் இதனால் பயன் பெற்றனர். தொடக்கம் முதலே பெருந்தொகைப் பனந்தும்பு ஏற்றுமதியாயிற்று.1891 இல் 9028 அந்தர், 1892 இல் 12177 அந்தர், 1893 இல் 8743 அந்தர் என்ற அளவுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டது. மேற்படி மூன்று ஆண்டுகளிலும் முறையே ரூ.122559, ரூ.156672, ரூ.115665 என ஏற்றுமதி வருமானம் கிடைத்தது. ஒரு இறாத்தல் தும்பிற்கு ரூ 9/= விலையாகக் கிடைத்தது. தூரக் கிராமங்களுக்குப் பயணம் செய்து முஸ்லிம் வர்த்தகர்கள் தும்பினை மலிவு விலையில் சேகரித்தனர். இலாபம் தரும் இம்முயற்சியில் எல்லோரும் ஆர்வம் காட்டினர். தும்பைச் சேகரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் இளம் பனை மரங்கள் தறிக்கப்பட்டன. கள்ளர் கூட்டம் இரவு வேளைகளில் பிறரது பனங்கூடல்களுக்குள் புகுந்து களவெடுத்தனர். இத்தகைய அழிவு வேலைகள் பற்றி அரசாங்கத்திற்கும் பலமுறைப்பாடுகள் அனுப்பப்பட்டன. கிராமத் தலைமை அதிகாரிகளும் இவ்வழிவினைத் தடுப்பது பற்றியும், பனைமரங்கள் அழிந்து போய்விடும் என்பது பற்றியும் மேலிடத்திற்கு எடுத்துக் கூறினர். இதன் பயனாக பனந்தும்பு சேகரிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்டொன்றுக்கு 4000 தொன்னாக ஏற்றுமதியின் அளவும் குறைக்கப்பட்டது.
தொடரும்