ஆங்கில மூலம் : பேராசிரியர் சி. அரசரத்தினம்
பனஞ்சீனி உற்பத்தித் தொழிற்சாலை
1916 ஆம் ஆண்டில் பதநீரில் இருந்து சீனி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்பட்டது. ‘சிலோன் சுகர் ரிபைனரிஸ் கம்பனி’ என்ற பெயருடைய நிறுவனம் இத்தொழிற் சாலையை இயக்கியது. இத்தொழிற்சாலை அயலில் இருந்த மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது. பதநீரின் விலையும் அதிகரித்தது. கள்ளிறக்கும் தொழிலாளர் குடும்பங்கள் நன்மை பெற்றன. நாட்டின் தென்பகுதிக்கும் இந்தியாவிற்கும் பனை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 19 ஆம் நூற்றாண்டில் படிப்படியாக உயர்ந்து சென்றது. சனத்தொகை அதிகரிப்பால் நுகர்வின் அளவு உயர்ந்து சென்றமையும், பனங்காணிகளின் அளவு குறைந்து கொண்டு சென்றமையும் காரணமாகப் பனம் பொருள் ஏற்றுமதி 20 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது. 1850 இல் தென்னிந்தியாவின் கடற்கரைப் பகுதிகளுக்கு 10,000 அந்தர் பனங்கட்டி யாழ்ப்பாணத்தில் இருந்து ஏற்றுமதியாயிற்று. பருத்தித்துறையில் இருந்து கொழும்புக்குப் பனங்கிழங்கும், ஒடியலும் பெருந்தொகையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. பனம் பொருட்களின் ஏற்றுமதி ஒப்பீட்டளவில் சிறிய அளவு ஆயினும் இவற்றைச் சேகரித்தல், பதப்படுத்தி விற்பனைக்குத் தயார் செய்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட வறிய மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கு இது உதவியது. யாழ்ப்பாணத்தில் பனை உற்பத்திகளை உணவாக உட்கொள்ளும் அளவின் ஏற்றமும் இறக்கமும் அதன் பொருளாதார நிலையினை அறிந்து கொள்வதற்கான குறியீடாக இருந்தது. நெல் விளைச்சல் நன்றாக அமைந்த காலங்களில் அரிசியின் விலை குறைவாக இருந்தது. பணப்புழக்கமும் சுழற்சியும் இக்காலத்தில் மிகுதியாகவும் இருந்தது. இவ்வாறாக செழிப்பான காலங்களில் பனம் பொருட்களை உணவாக மக்கள் விரும்பி உண்பதில்லை. பஞ்ச காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும். நாட்டில் வேலையின்மையும் அதிகரிக்கும். இக்காலத்தில் பெருந்தொகையான மக்கள் பனம்பழம், பனங்கிழங்கு, ஒடியல் ஆகிய உணவுகளைப் பிரதான உணவாகக் கொள்வர்.
தென்னந்தோட்டங்கள்
1840 களில் யாழ்ப்பாணத்தில் தென்னையை வர்த்தக முறையில் பயிரிடும் முயற்சி ஆரம்பமானது. இதனை ஆங்கிலேயர்களே முதலில் ஆரம்பித்து வைத்தனர். இந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனி அதிகாரிகளாக வேலை செய்த ஆங்கிலேயர், குறிப்பாக வங்காளத்தில் பணிபுரிந்தோர், காணிகளைத் துப்புரவு செய்து தென்னந்தோட்டங்களை ஆரம்பிப்பதில் முதலிட்டனர். பச்சிலைப் பள்ளி, தென்மராட்சி ஆகிய பகுதிகள் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றனவாகக் காணப்பட்டன. அத்தோடு இப்பகுதிகளிலேயே அரச காணிகள் சலுகை முறையில் விற்பனை செய்யப்பட்டன. தென்னைப் பயிர்ச்செய்கையால் நல்ல வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு தோட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. பத்து வருடகால எல்லைக்குள் 10,000 ஏக்கர் அரச காணி கொள்வனவு செய்யப்பட்டு தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டுத் தோட்டங்கள் உருவாகின. 50 தோட்டங்கள் வரை இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டன. ஆயினும் இலங்கையின் தென்பகுதியில் நடைபெற்றது போல் தென்னந்தோட்டங்கள் விஸ்தரிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் காணியின் அளவு மட்டுப்பட்டதாக இருந்ததும், காலநிலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களும் விஸ்தரிப்புக்குத் தடையாக இருந்தன. குடாநாட்டில் ஐரோப்பியரே தென்னை வளர்ப்புக்கு ஆரம்பத்தில் முதலிட்டனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய முதலீட்டாளர்களின் தோட்டங்களைத் தமிழர்கள் கொள்வனவு செய்தனர். இவ்வாறு கொள்வனவு செய்தவர்கள் இலங்கையின் தென்பகுதியில் தொழில் முயற்சிகளை ஆரம்பித்து தம்மைப் பலப்படுத்திக் கொண்ட தமிழ்த் தொழில் முயற்சியாளர்கள் ஆவர். பொருளாதாரப் பின்னடைவுடைய பச்சிலைப்பள்ளி தென்மராட்சிப் பகுதிகளில் தென்னைத் தோட்டங்கள் தொழில் வாய்ப்புக்களை ஓரளவு வழங்கின. இது மக்களுக்கு ஆறுதல் அளித்தது. குறைவிளைவுடைய காணிகளில் நெல் ஏனைய தானியங்கள் என்பனவற்றைப் பயிரிடுவதை விடத் தென்னையைப் பயிரிடுவது இலாபமானதால் இவ் வகைக் காணிகளிலும் தென்னை பயிரிடப்பட்டது.
தோட்டப் பயிர்ச் செய்கை
19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற இன்னொரு தொழிற்துறை தோட்டப் பயிர்ச் செய்கையாகும். சனத்தொகை அதிகரிப்பால் தோட்டப் பயிர்ச் செய்கை விரிவடைந்தது. யாழ்ப்பாணத்துக் குடியான் விவசாயிகளின் பசுமையான தோட்டங்கள், தம் நாட்டின் ஃபுல்ஹாம், செல்சியா பகுதிகளின் தோட்டங்களை ஒத்தனவாய் காட்சியளித்ததாக ரெனன்ற் (Tennent) குறிப்பிட்டுள்ளார். உற்பத்தியின் கணிசமான பங்கு அக்காலத்தில் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. முக்கியமாக வெங்காயம், மிளகாய் போன்ற உடன் பழுதடையாத உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியாயின. இவ்வேற்றுமதிகள் காரணமாக பருத்தித்துறைத் துறைமுகத்தில் ஏற்றியிறக்கல் நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக நடந்தன. டச்சுக்காரர் ஆட்சியில் யாழ்ப்பாணத் துறைமுகம் ஊடாக ஏற்றுமதிகள் செய்யப்பட்டதால் முக்கியத்துவம் குறைந்திருந்த பருத்தித்துறையில் மீண்டும் ஏற்றுமதி நடவடிக்கைகள் கலகலப்புடன் நடைபெற்றன.
கடலுணவு உற்பத்தி
மீன்பிடித்தொழிலும், கடலுணவு உற்பத்தியும் பண்டைக்காலம் முதல் தமிழர் வாழ்விலும் பொருளாதாரத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. மீன், கடலுணவுப் பொருட்கள் என்பனவற்றின் விலைகள் குறித்துப் போதிய புள்ளிவிபரங்கள் இன்மையால் மீன் உற்பத்தி பற்றிச் சரியான மதிப்பீட்டைச் செய்ய முடியாதுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீன் சந்தைக் குத்தகை, இலாபம் தரும் தொழில் முயற்சியாகக் கருதப்பட்டதையும், செல்வந்தரான பல முயற்சியாளர்கள் இக் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டதையும் அறிய முடிகிறது. மீனின் விலையிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உயர்ச்சி ஏற்பட்டதையும் அதனால் மீன்பிடித்தொழில் செய்தவர்கள் நன்மை பெற்றனர் என்பதையும் அறிய முடிகிறது. இயந்திரப் படகுகளும், குளிர் சாதன வசதிகளும் இல்லாத காலத்தில் மீன் பிடித்தொழிலில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கவில்லை. ஆயினும் சனத்தொகை விருத்தியும், மக்களின் அன்றாட உணவில் மீன் முக்கிய ஓர் உணவுப் பொருளாகக் கருதப்பட்டதும் கடற்தொழிலின் வளர்ச்சிக்குக் காரணமாயின. மேலும் யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பகுதிகளும் கடலுக்குக் கிட்டிய தூரத்தில் அமைந்திருந்ததால் மீன் இலகுவில் நுகர்வோரைச் சென்றடைந்தது. இதனால் மீன்பிடித் தொழிலில் விருத்தி ஏற்பட்டு அத் தொழிலில் ஈடுபடுவோர் தொகையும் அதிகரித்தது. 1921 ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி 10,130 பேர் மீன்பிடித் தொழில் மூலம் வாழ்க்கையைக் கொண்டு செல்வதாக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்தொழில் மூலம் சில முயற்சியாளர்களும், முதலாளிகளும் வெவ்வேறு இடங்களில் தோன்றினர். ஆயினும், தென்பகுதியில் ஏற்பட்ட மீன்பிடித் தொழில் வளர்ச்சியுடன் யாழ்ப்பாணத்தை ஒப்பிடுதல் இயலாது. குடியான் விவசாயம் போன்று மீன்பிடியும் சிற்றுடமையாளர் முயற்சியாகவும் வருமானம் குறைந்த தொழிலாகவும் இருந்து வந்தது. பொதுவாக மீன்பிடிக் கிராமங்கள் வறியனவாகவும், சன அடர்த்தியுடையனவாயும் விளங்கின. இதற்கு விதிவிலக்கான கிராமங்கள் மிகச் சிலவே.
பொதுச் சுகாதாரம்
மக்களின் சுகாதார நல வசதிகளும் 19 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்திருக்கவில்லை. அடுத்தடுத்து தொற்று நோய்கள் பரவுதலும், போஷாக்கின்மையும் தொடர்ந்து நிலவியது. 1930 களிலேயே நிலைமையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. சுகாதார நிலை 19 ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து மோசமடைந்து வந்ததென்றோ அல்லது அதற்கு முந்திய காலத்திலும் சுகாதாரக்கேடும் நோயும் இருந்து வந்ததென்றோ உறுதியாகக் கூறுவதற்குச் சான்றுகள் இல்லை. இவை பற்றிய பதிவுகள் எவையும் இல்லை. காய்ச்சல், வயிற்றோட்டம் என்பன மக்களை வாட்டிய பரவலான நோய்களாகும். காலரா, சின்னம்மை முதலிய தொற்று நோய்கள் இடைக்கிடை ஏற்பட்டன. மோசமான காலநிலை, பொருளாதார மந்தநிலை, பொதுச்சுகாதார வசதிகள் சீர்கெடுதல் என்பன ஒன்றோடொன்று தொடர்புற்றனவாய் நோய்கள் பெருகுவதற்குக் காரணமாயின. புயல் காற்றினால் ஏற்படும் சேதம், வரட்சியாலும் வெள்ளப் பெருக்காலும் ஏற்படும் பயிரழிவு என்பனவற்றால் மக்கள் பாதிப்புற்றனர். மக்களின் வறுமை காரணமாக போஷாக்கின்மை காணப்பட்டது. இதனால் தொற்று நோய்களுக்கு ஆளாயினர். 1880 களில் மக்கள் வாழ்க்கை நோய்களினால் பாதிப்புற்றது. 1884 ஆம் ஆண்டின் புயல் பெருஞ்சேதத்தை விளைவித்தது. அதனை அடுத்த நான்கு ஆண்டுகளில் காலரா நோயும், சின்னம்மையும் பரவியதால் மக்கள் அவதியுற்றனர். 1910 களில் பொருளாதார நிலை மோசமாகி மக்கள் கஷ்டப்பட்டனர். இறப்பு வீதம் அதிகரித்தது. பல கிராமங்களில் சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக தென்மராட்சிப் பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
கல்வி என்னும் கைத்தொழில்
பிரித்தானியர் இலங்கையில் ஆரம்பித்த பெரிய கைத்தொழில் என்றால் அது கல்வி என்ற கைத்தொழில் என்று கூறப்படுவதுண்டு. கிறிஸ்தவ மிசனரிகளாலும், இந்து அமைப்புக்களாலும், அரசாங்கத்தாலும் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கல்வித்துறையில் ஒரு செழிப்பு நிலையை உருவாக்கியது. கல்வி தமிழர்களின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தது. வட இலங்கைத் தமிழரின் பொருளாதாரத்தில் கல்வியின் பங்களிப்புப் பல பரிமாணங்களைக் கொண்டது. முதலாவதாக, வடக்கில் தோன்றிய கல்வி நிறுவனங்கள் பலவற்றால் தொழில் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இரண்டாவதாக, இக்கல்வி நிறுவனங்களில் கற்று வெளியேறியோர் அரசாங்கத் துறையிலும், தனியார் துறையிலும் அலுவலக உத்தியோகப் பதவிகளைப் பெற்று இலங்கையின் பல பகுதிகளிலும் வேலை செய்தனர். 1921 ஆம் ஆண்டில் பொது நிர்வாகத்திலும், சட்டத்துறை மற்றும் மருத்துவம் போன்ற சுதந்திரமான தொழில்களிலும் 10,185 தமிழர்கள் பணிபுரிந்தனர். மூன்றாவதாக, பிரித்தானியாவின் பிற காலனிகளுக்குச் சென்று தொழில் வாய்ப்புக்களை இக்கல்வி மூலம் பெற முடிந்தது. குறிப்பாக பிரித்தானிய மலாயாவிற்கும் தொடுகடல் குடியேற்றங்களிற்கும் (Straits Settlements) தமிழர்கள் சென்றனர். யாழ்ப்பாணத்தவர்கள் பெற்ற கல்வி அவர்களை அவர்களது நிலத்தில் இருந்து பிரித்தது. இது ஒருவகையில் நன்மையாகவும் அமைந்தது. ஏனெனில், யாழ்ப்பாணம் காணித் தட்டுப்பாடுள்ள இடமாகும். இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது கல்வி தீங்கான பின்விளைவையும் உருவாக்கியிருப்பதைக் காணலாம். கல்வியின் இத்தீங்கான அம்சம் பிரித்தானியர் காலனிகள் யாவற்றினதும் கல்வியின் பொதுவான பண்புக் கூறும் ஆகும். எழுதுவினைஞர்கள் சமூகமாக யாழ்ப்பாணம் உருவாகியது. இதன் தீங்கு அப்போது உணரப்படவில்லை. அதற்குக் காரணம் அக்காலத்தில் பிரித்தானியர் காலனிகள் எங்கும் எழுதுவினைஞர்களுக்கான தேவையிருந்தது. அலுவலக மேசையில் இருந்து எழுதும் பணி மீதான நாட்டம் தமிழர்களிடம் தொழிற்கல்வி, விவசாயக் கல்வி என்பன மீது அக்கறையின்மையை ஏற்படுத்தியது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த எல்லா குடியேற்ற நாடுகளிலும் இவ்வாறான போக்குக் காணப்பட்டது. இக்குறை பற்றித் தமிழர்கள் பின்னர் வருந்த வேண்டியதாயிற்று. நிலத்தின் பயன்பாடு பற்றிய பொருத்தமான தொழில்நுட்ப அறிவு, பயனுள்ள பயிர்கள் பற்றிய பயிர்ச் செய்கைத் தொழில்நுட்பம், இயந்திரங்களைப் பயன்படுத்தல் பற்றிய அறிவு என்பனவற்றைத் தமிழர்கள் பெற்றுக் கொள்வதில் அக்கறை செலுத்தவில்லை. சனத்தொகை அதிகரிப்பும், அதற்கு ஈடுகொடுக்க முடியாத வகையில் உணவு உற்பத்தி தேக்கமுற்றும் இருந்த பின்னணியில் தமிழர்களுக்கு மேற்குறித்த விடயங்கள் தொடர்பான கல்வி அவர்களின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தைக் கொண்டு வந்திருக்கும். பொருளாதார வளர்ச்சியில் பெரியதொரு மாற்றத்தை அடைந்து கொண்டிருந்த ஒரு நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் வந்து பணிபுரிந்தவர்களால் நிறுவப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரி தொழிற்கல்வியில் முன்மாதிரியாகச் செயற்பட்டது. அமெரிக்க மிசனரிகளின் தொலைநோக்குடைய செயற்பாடுகளுக்கு யாழ்ப்பாணத்தவர்களிடம் வரவேற்பு இருக்கவில்லை. அதனால் அவர்களின் முயற்சியும் பயன்தரவில்லை.
தொழில் தேடிய இடப்பெயர்வு
தமிழர்களின் பொருளாதார வரலாற்றின் முக்கியமான ஒரு கட்டமாக உத்தியோகம் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதும், இலங்கையின் தென் பகுதிக்குச் செல்வதும் நடைமுறையாக இருந்தது. அதன் வழி அவர்களின் பொருளாதார எதிர்காலம் அமையலாயிற்று. 17 ஆம் நூற்றாண்டில் இருந்தே யாழ்ப் பாணத்தவர்கள் குடாநாட்டுக்கு வெளியே நெல்வயல்களில் வேலை செய்வதற்காக பருவகால முறையில் இடம்பெயர்ந்து செல்லும் வழக்கம் இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டில் வயல் வேலைகளுக்காக வன்னியின் தென்பகுதிகளுக்குச் செல்வோர் தொகை மேலும் அதிகரித்தது. பிரித்தானியர் சிறிய குளங்களையும், பெரிய குளங்களையும் திருத்திப் புனரமைத்து நீர்ப்பாசன முன்னேற்றத்தை ஏற்படுத்தியதால் வன்னியின் சனத்தொகை அதிகரித்தது. இத்தகைய அபிவிருத்திகள் ஏற்பட்டபோதும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் தெற்கு நோக்கி வன்னிக்கு இடம்பெயரவில்லை. அதுவரை தேக்கமுற்றிருந்த வன்னியின் சனத்தொகை வளர்ச்சி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை விட வேகமாக வளர்ச்சி பெற்றது. இந்தியத் தொழிலாளர்கள் குடியேற்றத்திட்டங்களிற்கு இடம்பெயர்ந்தமையும் வன்னியின் சனத்தொகை வளர்ச்சிக்குக் காரணமாகும். கொழும்புக்கும், தென்பகுதியினதும், மத்திய பகுதியினதும் நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கணிசமான தொகையினர் இடம்பெயர்ந்தனர். இப்பகுதிகளில் முன்பு தமிழர்களின் பிரசன்னம் இருக்கவில்லை. இவ்விடப் பெயர்வையும் துல்லியமாக மதிப்பிடுதல் கடினமாகும். இதனைவிட பர்மாவுக்கும், மலாயாவுக்கும், தொடுகடல் நாடுகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள் இடம்பெயர்ந்து சென்றனர். இவ்விடப்பெயர்வும் 20 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியிலேயே ஏற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் சனத்தொகையில் மேற்குறிப்பிட்ட இடப்பெயர்வுகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஆயினும், இவ்விடப் பெயர்வுகள் மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் உடையன. இலங்கையின் தென்பகுதியில் இருந்தும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்தும் பணம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டது. இது அச்சமூகத் தின் வாழ்க்கை மேம்பாட்டிற்குப் பெரிதும் துணையாயிற்று. மலாயாவிலும் அதனைச் சார்ந்த தொடுகடல் பகுதியிலும் வேலை செய்த யாழ்ப்பாணத்தவர்களுக்கு அங்கு சம்பளமாகக் கிடைத்த தொகை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருந்ததால் தாம் சேமித்த பணத்தை இலங்கை ரூபாவிற்கு மாற்றியபோது தம் கையில் பெருந்தொகை செல்வம் சேமிப்பாகச் சேர்ந்திருந்ததை அவர்கள் கண்டனர். பொதுவாக இப்பணத்தை நிலம், வீடு என்பனவற்றில் முதலீடு செய்தனர். இதனால் மலாயா ஓய்வூதியக்காரர்கள் என்னும் பணம் படைத்த உயர் வகுப்பு எல்லாக் கிராமங்களிலும் தோன்றியது. மலாயாவில் இருந்து அனுப்பப்பட்ட பணமாற்றுதல்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் சில உள்ளன. 1910 ஆம் ஆண்டில் ரூ.6,02,878 அங்கிருந்து அனுப்பப்பட்டது. 1920 இல் இது ரூ 21,20,000 ஆக உயர்ந்தது. 1929 இல் உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் குறைந்தன. பணம் அனுப்புதல்களும் குறைந்தன. 1935 இல் மீண்டும் பொருளாதார மலர்ச்சி ஏற்பட்டதும் மலாயாவில் இருந்து பணம் அனுப்புதல் மீண்டும் ஆரம்பமாயிற்று. இறுதியில் 1942 இல் மலாயா மீது யப்பானியர் தாக்குதலைத் தொடுத்தபோது இத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தொகுப்புரை
வட இலங்கைத் தமிழர்களின் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வரைசட்டகம் இங்கு தரப்பட்டுள்ளது. பொருளாதார வரலாற்றில் ஒரு தொடர்ச்சியையும், அத் தொடர்ச்சியினூடே மாற்றங்கள் நிகழ்ந்து வந்ததையும் எடுத்துக் காட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பை மரபுவழிச் சமூகம் என்றே குறிப்பிடலாம். இம்மரபுவழிச் சமூகத்தில் வெளித்தூண்டல்களுக்கு உள்ளக மாற்றங்கள் ஏற்பட்டன. ஆயினும் இவ்வுள்ளக மாற்றங்கள் அதன் மரபுவழிக் கட்டமைப்பைக் குலைக்கவில்லை. மக்கள் தொகையும், நிலவளத்தின் அளவு என்ற விகிதாசாரம் யாழ்ப்பாணத்தில் பாதகமானதாகவே இருந்தது. நிலம் வளமற்றதாக இருந்தது. நிலத்தின் வளத்தை பேணுதலும், மேம்படுத்தலும் கடினமானதாக இருந்தது. காலநிலை சீரற்றது. மழை வீழ்ச்சியை நம்பிப் பயிர் செய்ய முடியாது. மக்களின் உழைப்புச் சக்திதான் யாழ்ப்பாணத்தின் பிரதான வளம். கடினமான இயற்கைச் சூழல், திடமும் கடின உழைப்பும், சிக்கனமான வாழ்க்கை முறையையும் கொண்ட மக்களாக யாழ்ப்பாணத்தவர்கள் உருவாகினர். அம்மண்ணில் இருந்து கிடைக்கக்கூடிய உற்பத்தியினால் மக்கள் அடையக்கூடிய வாழ்க்கையின் தரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சியின் அதிகாரம் உச்ச நிலைக்குச் சென்ற கட்டத்திலும் கூட அவ்வரசில் ஆடம்பரமும், பகட்டும் இருந்தது கிடையாது. ஏனெனில் ஆடம்பரமான செழிப்புமிக்க நாகரிகமாக யாழ்ப்பாண இராச்சியம் இருப்பதற்கு வேண்டிய உற்பத்தியின் மேன்மிகை அங்கு இருக்கவில்லை.
நிலத்தின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட மேன்மிகை போதியதாக இல்லாத காரணத்தால் யாழ்ப்பாண சமூகம் தென்னாசியாவின் பிற சமூகங்களில் இருந்து ஓர் அம்சத்தில் வித்தியாசமாக இருந்தது. பொருளாதார நிலை காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளின் தீவிரம் காரணமான சமூக அடுக்கமைவு அங்கு உருவாகவில்லை. இது சாதகமான ஒரு விளைவு ஆகும். தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளை இங்கு கொண்டுவந்ததோடு அவற்றைத் தொடர்ந்தனரேனும், பொருளாதார சமத்துவமின்மை தீவிரமானதாக இருக்கவில்லை. பெருநிலப்பரப்பை உடைமையாகக் கொண்டிருத்தல் பரவலாக இருக்கவில்லை. சமூகக் குழுக்களுக்கிடையிலான இடைத் தொடர்புகள் தீவிர சுரண்டல் இயல்புடையதாக இருக்கவில்லை. யாழ்ப்பாணம் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட விரைவாகப் பணப் பொருளாதாரமாக மாறியது. அத்தோடு ஏனைய பகுதிகளை விட மக்களிடையேயான பொருளாதார உறவுகள் சந்தை உறவுகளாக அமைந்திருந்தன. ஆயினும் யாழ்ப் பாணத்தில் பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு துறையிலாவது மூலதனம் திரளுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் முதலாளித்துவ முயற்சியாளர்களின் வளர்ச்சி விரைவானதாக இருக்கவில்லை. அங்கு ஒருவர் முதலாளித்துவ முயற்சியாளராக உருவானதும் தெற்கு நோக்கி இடம்பெயர்பவராகவே இருந்தார்.
சனத்தொகையின் பெரும்பங்கினர் நிலத்தை நம்பி வாழ்பவராகவும், குறை வருமானம் உடையவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் உற்பத்தி விளைவு குறைவானதான வளம் குறைந்த பகுதிகளில் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. மக்களின் தேவைகள் மிகச் சிலவே; ஆடம்பரப் பொருட்களின் நுகர்வு இருக்கவில்லை. இவ்வாறான பொருளாதார அமைப்புக்கும் வெளியில் இருந்து மூலதனம் உட்புகும் போதும், பொருளாதார நடவடிக்கைகள் தூண்டப்படும் போதும் வாழ்க்கைத்தரத்தில் மேம்பாடும் விரைவான முன்னேற்றமும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். யானைகளின் ஏற்றுமதி, புகையிலை வர்த்தகம், வெளிநாடுகளிற்குச் சென்று தொழில்புரிவோர் பணம் அனுப்புதல் என்பனவும் இப்போது வெங்காயம், மிளகாய் என்பனவற்றின் விற்பனை மூலம் யாழ்ப்பாணத்தவர்களுக்குக் கிடைக்கும் பணவருவாயும் வெளியில் இருந்து உட்புகுத்தப்படும் பணத்திற்கு உதாரணங்கள் ஆகும். இவ்வாறு சிறிதளவு பணம் உட்புகுந்தபோது யாழ்ப்பாணத்தில் பொருளாதாரச் செழிப்பும் மலர்ச்சியும் வெளிப்பட்டது.
அடிக்குறிப்புக்கள்
- Proceedings of a committee to investigate the state of revenue in Ceylon 4 August 1797. Mackcenzie Collection General 63.
- Census of Ceylon 1871 (Colombo 1873)
- Census of Ceylon 1881 (Colombo 1882)
- Census of Ceylon 1891 (Colombo 1892) Vol. I
- Census of Ceylon1891 (Colombo 1902) Vol. I
- Census of Ceylon 1911 (Colombo 1912)
- Report of the Census of Ceylon 1921 (Colombo 1923-24) Vol. I, Part 1 and 2
- Report of the Census of Ceylon 1931 (Colombo 1931) Vol. I
- Census of Ceylon1946, Vol. I Pt. I General Report (Colombo 1950)
- Census of Ceylon 1953, Vol. I General Report (Colombo 1956)
- Proceeding of Investigation, pp. 299-307
- C.R.de Silva, Ceylon under the British Occupation, Vol. II (Colombo 1942),pp 522-25
- Based on Ceylon, Administration Report for relevant years
- Ceylon, Administration Report 1893 (Colombo).
- Report of the Census of Ceylon 1921 Vol. I, Pt. 2
- Ceylon, Administration Report 1893, (Colombo) quoting evidence available in Jaffna Kachcheri.
- Ibid.
- Ibid.
- Ceylon, Administration Report 1894 (Colombo).
- Ceylon, Administration Report 1918 (Colombo).
- Ibid.
- Committee of Investigation. 22 August 1798.
- B. Bastiampillai ‘British power in India and Ceylonese trade in the early 19th Century ” International Conference of Indian Ocean Studies, Perth 1979. Selection III.
- Ibid.
- Based on Ceylon, Administration Report for relevant years
- Ceylon, Administration Report 1901, 1902
- Report of the Census of Ceylon 1921 Vol.I.
- Ceylon, Administration Report for relevant years 29. Ceylon, Administration Report 1893
- Ceylon, Administration Report 1916
- Tennent, Ceylon Tennent, Ceylon…………. I p. 531.
- Tennent, Ceylon Tennent, Ceylon… . 1p. 531.
- Tennent, Ceylon Tennent, Ceylon… . 1p. 532.
- Tennent, Ceylon Tennent, Ceylon… . 1p. 532.
- Report of the Census of Ceylon 1921 Vol. I
- Ceylon, Administration Report 1889
- Report of the Census of Ceylon 1921 Vol. I
- Ibid.
- Report of the Census of Ceylon 1921 Vol.I
இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சில முக்கிய டச்சு ஆவணங்களும் நூல்களும் பின்வருவன :
- அந்நதனி பவிலியோயின் நினைவுக் குறிப்புக்கள் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை சோபியா பிரஸ் கொழும்பு 1908 இல் வெளியிட்டது.
- யாழ்ப்பாணப் பட்டணத்தின் கொமாண்டரான ஹொன்றிக் சுவார்ட் குறூன் நினைவுக் குறிப்புக்கள் 1697 (கொழும்பு 1908).
- அந்தனி மூயாட் நினைவுக்குறிப்புக்கள், இதனை சோபியா பிரஸ் கொழும்பு 1910 இல் ஆங்கிலத்தில் பிரசுரித்தது.
- பால்தியெ எழுதிய நூல் 1672 இல் டச்சு மொழியில் பிரசுரிக்கப்பட்டது.
- வெ.வலன்டைன் எழுதிய நூல் டச்சு மொழியில் 1726 இல் பிரசுரிக்கப்பட்டது.
- வன்டர் கிறாவ் நினைவுக் குறிப்புக்கள் 1764 இல் பிரசுரிக்கப்பட்டது. (கட்டுரையாசிரியர் முதற்பகுதியில் 48 அடிக்குறிப்புகளையும் இரண்டாம் பகுதியில் 39 அடிக்குறிப்புகளையும் தந்துள்ளார்; அவற்றை ஆங்கிலத்திலேயே தந்துள்ளோம்.)