ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம்
தானிய வரி
நிலத்திலிருந்து அறுவடைசெய்த தானியத்திற்கு வரியாக, விளைவின் பத்தில் ஒரு பங்கு அறவிடப்பட்டது. விவசாயிகள் தானியவரி பற்றி அடிக்கடி முறைப்பாடு செய்து வந்தனர். நிலத்திற்கு அறவிடப்பட்ட வரிக்கும் மேலாக, அறுவடை செய்த தானியத்திற்கு எனவும் வரி அறவிடப்பட்டது. இது விவசாயிகளின் வரிச் சுமையை அதிகரித்தது. இந்த வரியைக் கழித்துவிடும்படி விவசாயிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. அறுவடைக் காலத்தில் டச்சுக்காரர் நெல்லை வரியாக அறவிட்டு தமது இராணுவத்தினதும் சிவில் உத்தியோகத்தினரதும் உணவுத் தேவைக்காக உபயோகித்தனர்.
வரி எதிர்ப்புக் கிளர்ச்சிகள்
வரி அறவிடுவதற்கான தோம்புகளை பதிவு செய்தமையினால் அரசு மீதான அதிருப்தி அதிகரித்தது. நவீன காலத்தில், வரலாற்றில் முதன்முதலாக விவசாயக் குடியானவர்களின் கிளர்ச்சி ஏற்பட்டது. பதிவுக்காரர்களான உத்தியோகத்தர் குழு, கிராமங்களுக்குச் சென்றபோது, அந்தக்குழுவினர் கிராமத்தில் நிலத்தின் உடைமையாளர்களாக உள்ளவர்களை தமது உறுதிகளுடன் சமுகமளிக்கும்படி கட்டளையிடுவர். இதனால் தமக்கு கூடிய வரி விதிக்கப்பட போகிறதே என்று மக்கள் அஞ்சினர். பதிவு நடைமுறையை கைவிடும்படி அரசாங்கத்துக்கு முறையிட்டனர். பதிவு நடைமுறையை கைவிட்டால் இப்போது அறவிடப்படும் வரியைவிட இரண்டு மடங்கு வரியைச் செலுத்துவதாகவும் கூறினர். பெருந்தொகையான காணிகள் பதிவு செய்யப்படாமல் இருந்தன. அந்தக்காணிகளின் அறுவடை மீதான வரி அறவிடப்படவில்லை. கிராமங்களில் செல்வந்தர்களான நில உடமையாளர்கள், இதனால் வரியில் இருந்து தப்பிக் கொண்டனர் என்ற உண்மைகள் தெரியவருகின்றன. இந்தச்செல்வந்தர்கள் கிராமத்தில் ஏழைகளை வரி உயர்வுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டிவிட்டார்கள். ஏழைகள் மத்தியிலும் வரி உயர்வு பற்றிய அச்சம் இயற்கையாகவே இருந்தது. கிராமத்துத் தலைவர்களின் தலைமையில் திரண்ட கிராமத்து ஏழைகள் கிராமங்களைவிட்டு வன்னிக்குத் தப்பிச் சென்றனர். இவ்வாறு கிராமங்களை விட்டு குடிபெயர்தல், தென்னாசியா எங்கணும் விவசாயக் குடியான்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். வடமராட்சி, தென்மராட்சி என்ற பகுதிகளிலும் இவ்விதமாக விவசாயிகள் எண்ணிக்கை குறைந்தது. வன்னியைச் சேர்ந்த பனங்காமத்துக் கயிலை வன்னியன், தப்பியோடியவர்களுக்கு பாதுகாப்பு அளித்தான். வலிமைமிக்க கயிலை வன்னியன் டச்சுக்காரரோடு பகைமை பூண்டவனாய் அவர்களை எதிர்த்து வந்தான். தப்பியோடிச் சரண்புகுந்து வன்னிக் கிராமங்களில் தங்கிய விவசாயிகள் டச்சுக்காரருக்கு வரி கொடுக்காமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஆனையிறவு இராணுவ முகாம்
யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளுக்கு கிளர்ச்சி பரவாதிருப்பதற்காக டச்சுக்காரர்கள் கிளர்ச்சியை அடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே கிளர்ச்சியாளர்களிடையே தொடர்பாடலைத் தடுத்தனர். வன்னியிலிருந்து தென்மராட்சிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திச் சேதம் விளைவித்த கொள்ளைக் கூட்டத்தை அடக்கினர். இதற்காக ஆனையிறவில் தற்காலிகமாக இராணுவமுகாம் ஒன்றை அமைத்து யாழ்ப்பாணத்தை வன்னியிலிருந்து தொடர்பு இல்லாமல் பிரித்து வைத்தனர். இதனால் கிளர்ச்சி வலுவிழந்து அடங்கிப்போனது. சில மாதங்கள் கழிந்ததும் மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பினர். டச்சுக்காரர்கள் காணிப் பதிவுகளை மீளத் தொடங்கி 1677 ஆம் ஆண்டில் அவ்வேலையை முடித்தனர்.
இறக்குமதிப் பொருட்களின் தட்டுப்பாடு
டச்சுக்காரர் ஆட்சியில் மக்களின் பொருளாதார நிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து கருத்துப் பேதத்திற்கும், ஊகங்களுக்கும் இடம் உள்ளது. யாழ்ப்பாண மக்கள் சுபீட்சமாக வாழ்ந்தனரா அல்லது வறுமையில் வாடினரா என்பது பற்றி டச்சு அதிகாரிகளின் எழுத்துகளிலும் முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. டச்சுக்காரர் ஆட்சியின் தொடக்க காலத்தில் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர் என்பது தெளிவு. டச்சுக்காரர் வர்த்தகத்திலும், வியாபார நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகளை விதித்ததால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்பத்தில் தேர்ச்சி உடையவர் தொழில் முயற்சிகளில் ஈடுபடுதல் தடைப்பட்டது. வங்காளம், கோல்கொண்டா, தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களோடு இருந்துவந்த தூரதேச வர்த்தகம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. உள்ளூர்த் தரகர்கள் இத் தூரதேசத்து வர்த்தகர்களுக்கு உதவிசெய்து வருவாய் ஈட்டி வந்தனர். டச்சுக்காரர்களின் வர்த்தகக் கொள்கையால் அந்நிய வர்த்தகர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று. இந்தியாவில் இருந்து இறக்குமதியான பொருட்கள், டச்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதால் அதனால் வர்த்தகர்களுக்குக் கிடைத்த லாபம் அரசுக்கு கிடைக்கலாயிற்று. அத்தோடு இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. தம் கப்பல்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்த வெளிநாட்டு வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. முக்கியமாக அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாணம், தன் அரிசித் தேவைக்காக இறக்குமதியில் தங்கியிருக்கும் நிலையை அடைந்தது. அரிசித் தட்டுப்பாடு அதன் சந்தை விலையை பன்மடங்கு உயர்த்தும் விளைவை கொண்டது. அரிசி விலை உயர்வின் காரணமாக கூலியின் அளவும் உயர்ந்து சென்றது. இறக்குமதித் தடையால் பாதிப்புற்ற இன்னொரு நுகர்வுப் பண்டம் புடவையாகும். தமிழர்கள் தமது புடவைத் தேவையை இந்திய இறக்குமதி மூலமே நிறைவு செய்தனர். டச்சுக்காரர் துணி, புடவை வகைகள் மீது கூடிய வரியை விதித்தனர். இதனால் தனியார் வர்த்தகம் தடைப்பட்டது. புடைவைகளின் இறக்குமதி குறைந்து, விலைகள் உயர்ந்தன. உள்ளூர் நெசவு உற்பத்தியாளர்களால் யாழ்ப்பாண மக்களின் தேவையை ஈடுசெய்ய முடியவில்லை.
பணப் பொருளாதாரம்
1680 களில் யாழ்ப்பாணப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவ்வாறு வாதிடுகின்ற அதிகாரிகள் அதற்குச் சான்றாக பணப் புழக்கம் அதிகரித்திருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். நெற்காணியின் விலையும் 50 வருட எல்லையில் உயர்ந்ததென்றும், காணியின் தரத்தைப் பொறுத்து இவ்விலை உயர்வு 60 வீதம் முதல் 120 வீதம் வரை வேறுபட்டதாக இருந்தது என்றும் கூறப்படுகிறது. உழைப்பாளர்களின் கூலி 100 வீதத்தால் அதிகரித்தது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு பெரும் எண்ணிக்கையினர் தமது ஊழியக் கடமைக்குப் பதில், பணமாக தண்டப் பணத்தைச் செலுத்த முன்வருகின்றனர் என்றும் இவ்வாறு வரிப் பணம் செலுத்துவோர் தொகை அதிகரித்தல் பொருளாதாரச் சுபீட்சத்தின் அறிகுறி என்றும் குறிப்பிட்டனர். இது உண்மையாக இருக்கலாம். ஆனால் நாம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும், கூலியின் உயர்வையும் தொடர்புபடுத்தியும் பார்த்தல் வேண்டும். அத்தோடு பணப் புழக்கத்தின் அதிகரிப்பால் சமூகத்தின் எந்தப் பிரிவினர் நன்மை பெற்றனர் என்பதையும் நோக்குதல் வேண்டும். தென்னாசியப் பிராந்தியத்தில் அடிக்கடி ஏற்பட்ட வளர்ச்சியும், பொருளாதார மந்தமும், பஞ்சங்களும் உள்நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. இதனால் வேலையின்மையும் அதிகரித்தது. ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட பணப் பொருளாதாரத்தின் வளர்ச்சியால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டன என்பதும் சிந்தனைக்குரிய விடமாகும்.
சம்பளங்களும் கூலிகளும் அரிசி விலையும்
வேலைவாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகள் என்பனவற்றில் டச்சுக் காலத்தில் தொடர்ச்சியான முன்னேற்றம் ஏற்பட்டதைக் காட்டும் பல குறி காட்டிகள் உள்ளன. ஓரளவிற்கு கல்விகற்ற இளைஞர்கள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ்நிலை நிர்வாகப் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். கம்பெனியின் அலுவலகங்களில் இவர்களில் பலர் மொழிபெயர்ப்பாளர்களாகவும், வருவாய்த் துறையில் பல்வேறு பதவிகளிலும், பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும் கடமையாற்றினர். இவற்றால் நல்ல வருவாயைப் பெறமுடிந்தது. பாடசாலை ஆசிரியர்களாக இருந்தோருக்கு காணிகளின் விற்பனை மாற்றங்கள் போன்ற நொத்தாரிஸ் வேலை மூலம், முத்திரை வரியில் ஒருபகுதி தரகாகக் கிடைத்தது. வேறுபல சலுகைகளும் கிடைத்தன. மேற்குறித்த வகையான உத்தியோகர்களுக்கு 8 முதல் 9 புளோரின் வரை மாதச் சம்பளம் கிடைத்தது. 24 புளோரின் ஆகக்கூடிய மாதச் சம்பளமாக இருந்தது. தச்சுத் தொழிலாளர், கொல்லர்கள், கல்தச்சர்கள் போன்றவர்களுள் தொழில்திறன் மிக்கவர்களுக்கு 18 புளோரின்கள் வரை மாதக் கூலியாகப் பெறமுடிந்தது. இவ்வகைப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வெண்சட்டை உத்தியோகத்தர்களுடன் ஒப்பிடக்கூடியவர்களாக இருந்தனர். பயிற்சி பெறாத உடல் உழைப்புக் கூலிகளுக்கு ஒரு மாதத்திற்கு 6 புளோரின் கூலி வழங்கப்பட்டது. கூலித் தொழிலுக்கு தீவிரத் தட்டுப்பாடு காணப்படும் காலங்களில் கூலிக்கும் மேலதிகமாக ஒரு பறை அரிசியும் வழங்கப்பட்டது. பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கும் பயிற்றப்படாதோருக்கும் பெரியளவில் தேவை இருந்தது. அரசாங்கம் அவர்களுக்கு கூலி வேலை வழங்கியது. தனியாரிடமும் கூலி வேலை செய்ய முடிந்தது.
கூலி விகிதங்களை அரிசியின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பயன்தருவது. ஏனெனில் அரிசியின் விலையே கூலியை நிர்ணயிப்பதாய் இருந்தது. ஏனெனில், அரசியின் நிரம்பல் போதியதாகவுள்ள காலங்களில் ஒரு பறை அரிசியின் விலை 3/4 புளோரின் ஆகும். 32 கொத்து அரிசி ஒரு பறை அளவுடையது. ஒரு பறை, 44 இறாத்தல் அளவிற்குச் சமமானது. அரிசி நிரம்பல் குறைந்த காலத்தில் அதன்விலை ஒரு பறை 1 1/2 புளோரின் அளவுக்கு உயரும். சிலவேளை இதனைவிட உயர்விலையிலும் விற்கப்படும். ஆகக் குறைந்த மாதக்கூலியான 6 புளோரின்களை பெறும் ஒரு கூலியாளின் குடும்பம், சம்பளத்தின் அரைப் பங்கினைக் கொண்டு அரிசியைக் கொள்வனவு செய்தால், 4 பறை அரிசி கிடைக்கும். ஆகையால் கூலி சீவியத்திற்குப் போதியது என்றே கூறலாம். ஒரு குடும்பத்திற்கு தேவையான உடை, மீன், கறிச்சரக்குகள், எண்ணெய் போன்ற எல்லாப் பொருட்களையும் விலை கொடுத்து சந்தையில் உயர்விலைகளில் கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது. கைவினைஞர்களும், விவசாயிகளும், சமூகத்தின் செல்வந்தப் பிரிவினரும் தமது வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை வசதிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மேல் குறிப்பிட்டது போன்று சமூகத்தின் வறியபிரிவினர் தங்கள் வருமானத்தின் கணிசமான தொகையை வரியாகச் செலுத்தினர். அவர்கள் கொடுக்க வேண்டிய வரி நிலையான ஒரு தொகையாக இருந்தது. ஆனால் வேலையும் உழைப்பும் வருமானமும் எல்லா மாதங்களிலும் ஒரே சீரானதாக இருக்கவில்லை. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரிசியின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. ஒரு பறை அரிசி 1 1/2 புளோரின் விலை விற்கப்பட்டது. ஆயினும் இந்த அளவுக்கு கூலிகள் உயரவில்லை. கிடைக்கும் சான்றுகளை ஆராய்ந்து பார்க்கும்போது பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
அடிமை முறை
அக்காலத்து ஆவணங்களில் அடிமை முறை பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுவதைக் காணலாம். அடிமைகள் என்ற வகைப்படுத்தப்பட்டோரில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தனர். இவர்கள் எஜமான்களால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களாக இருந்தனர். இவர்களுள் ஒரு பகுதியினர் காலப்போக்கில் அடிமை நிலையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். இருந்தபோதும் அவர்கள் தமது எஜமான்களின் காணிகளில் தொடர்ந்து குடியிருந்து வரலாயினர். அத்தோடு எஜமான்களுக்கு சில சேவைக்கடமைகளைச் செய்துவந்தனர். சட்டம் தொகுக்கப்பட்டபோது அடிமைகளின் உரிமைகள் அதில் வரையறுத்துக் கூறப்பட்டன. முதலியார்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் சட்டக்கோவையில் உரிமைகள் குறிப்பிடப்பட்டன. டச்சுக்காரர் அடிமைகளைக் கொண்டு வேலை செய்வித்தபோதும் கூலியை வழங்கத் தொடங்கினர். இந்தக் கூலியைப் பெற்றோர் அதனைச் சேமித்தனர். இந்தச் சேமிப்பை தமது எஜமான்களுக்குக் கொடுத்து அடிமை நிலையில் இருந்து விடுதலை பெற்றனர்.
இந்தியாவிலிருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டதால் அடிமைகளின் எண்ணிக்கை இந்தக்காலத்தில் அதிகரித்தது. ஆசியாவின் கரையோர நாடுகளில் இக்காலத்தில் அடிமை வியாபாரம் சுறுசுறுப்புடன் இயங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அமைதியின்மையும், குழப்ப நிலையும் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் தம்மை அடிமைகளாக விற்கும் நிலையை உருவாக்கியது. டச்சுக்காரர்கள் அடிமைகளை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் இவர்களைவிட யாழ்ப்பாணத்தின் செல்வந்தர்களே கூடியளவு அடிமைகளைக் கொண்டு வந்தனர். அடிமைகள் தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். டச்சுக்காரர்களின் அடிமைகளாக இருந்த நளவர்கள், 1784 ஆம் ஆண்டில் தம்மை அடிமைச் சேவைக் கடப்பாட்டிலிருந்து விடுவிக்கும் படியும், அதற்காக தாம் ஆண்டுக்கு பத்துப் புளோரின்கள் செலுத்துவதாகவும் சம்மதம் தெரிவித்துக் கோரிக்கை விடுத்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒவ்வொரு அடிமைக்கும் 2 1/4 புளோரின்கள் வரி அறவிடப்பட்டது. 1694 – 96 காலத்தில் கருநாடகக் கரைப்பகுதியிலிருந்து 35879 அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டனர். இவ்வடிமைகளை தனிநபர்களான செல்வந்தர்கள் இறக்குமதி செய்தனர். ஒவ்வொரு அடிமைக்கும் 11 பணம் அல்லது 21 புளோரின்கள் வரி இவர்களால் கொடுக்கப்பட்டது. இந்த அடிமைகள் வீட்டுவேலைக்கும், தோட்ட வேலைக்கும் உபயோகிக்கப்பட்டனர். டச்சுக்காரர்களுக்குச் செய்யவேண்டிய ஊழியத்தைச் செய்வதற்காகவும் அடிமைகள் பயன்பட்டனர். இவ்வாறு அடிமைகளை ஊழியத்திற்கு அனுப்புவதன் மூலம் தாம் செய்ய வேண்டிய ஊழியத்திற்காக கொடுக்க வேண்டிய தண்டப்பணத்தை செலுத்துவதிலிருந்து எஜமான்கள் தப்பிக் கொண்டனர்.
ஒல்லாந்தர் காலத்தில் எழுச்சி பெறும் யாழ்ப்பாண வர்த்தக சமூகம்
பணக்கார வகுப்பினர்கள் பல்வேறு பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தி நன்மை பெற்றனர். வர்த்தகர்களும், தரகர்களும் பெருஞ் செல்வத்தை ஈட்டினர். தரகு வேலையில் நல்ல லாபம் கிடைத்தது. புகையிலைத் தரகும், யானை ஏற்றுமதித் தரகும் குறிப்பாக நல்ல வருவாயைத் தந்தன. புகையிலைத் தரகர்கள், மலையாளி வர்த்தகர்கள் – திருவிதாங்கூர் அரசனின் முகவர்கள் ஆகியவர்களுடன் வர்த்தகப் பேரம் செய்தனர். யானை ஏற்றுமதித் தரகர்கள் இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். வங்காளத்தின் நவாப். கோல்கொண்டா அரசன், தஞ்சை நாயக்கர் முதலிய பலமிக்க அரசர்களுடன் வர்த்தகம் செய்தனர். யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்து வர்த்தகம் செய்தவர்களும் பலர் இருந்தனர். இலங்கையின் பிற பாகங்களுடனும் வர்த்தகம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்களில் பல சமூகப் பிரிவினர்கள் இருந்தனர். செல்வந்த நில உடைமையாளர்கள் பலர் வர்த்தகர்களாயினர். இவர்களுக்கு முதலியார்கள் என்ற பட்டப் பெயரும் இருந்தது. கடலோடிகளும், மீன்பிடித் தொழில் செய்வோருமான சிலரும் வர்த்தகர்களாய் இருந்தனர். யாழ்ப்பாணத்தில் குடியேறியிருந்த செட்டிகளும் பரம்பரையாக வர்த்தகம் செய்பவராய் இருந்தனர். இவர்களை விட யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டினரான வர்த்தகர்களும் தங்கி இருந்தனர். இவ் வெளிநாட்டவர்களில் சிலர் செல்வாக்குமிக்க வர்த்தகர்களாவர். யாழ்ப்பாணத்து முஸ்லிம்களும் இக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் வர்த்தகத்தில் முக்கியமான பங்காற்றினர். 1675 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 300 முதல் 400 வரையான முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன. இவர்களில் பெரும்பங்கினர் இலங்கையின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரத்தில் சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இவர்களுள் சிலர் மதுரை, தஞ்சாவூர் போன்ற இடங்களுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம்களுள் சிலர் செல்வந்தர்களான தொழில் முயற்சியாளர்களாக இருந்தனர். தம் வர்த்தக முயற்சிகளை பல்வேறு துறைகளுடன் விரிவாக்கம் செய்து ஊகவாணிபத்திலும் இம் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இந்து வர்த்தகர்களோடு இணைந்தும் வர்த்தகம் செய்தனர். வர்த்தகம் செய்த உள்ளூர்க்காரர்கள் வரிகளைக் குத்தகைக்கு எடுத்து அறவிடும் வேலையிலும் ஈடுபட்டனர். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை குத்தகையாகப் பெற்று அறவிடும் வியாபார நடவடிக்கை பரவலாக இருந்தது. டச்சுக்காரர் இலங்கையில் இம்முறையைப் புகுத்தினர். அவர்கள் பல வரிகளை பண்டங்கள் மீதும், சேவைகள் மீதும் விதித்தனர். இவ்வரிகளை ஆண்டுக் குத்தகைக்கு ஏலத்தில் விடுவர். இந்தக் குத்தகைகளை உள்ளூர் வர்த்தகர்கள் பலர் ஏலத்தில் விலைகூறிப் பெற்றுக் கொள்வர். இந்த ஏல வியாபாரம் சிறு தொகையிலிருந்து பெருந்தொகை வரை வேறுபட்டது. உதாரணமாக அராலியின் மீன் சந்தையின் குத்தகை 380 புளோரின்கள் ஆகும். ஆயின் யாழ்ப்பாணத் துறைமுகத்தின் சுங்கவரிக் குத்தகை 1761 ஆம் ஆண்டில் 50,000 புளோரின்களாக இருந்தது. இந்தக் குத்தகையை யாழ்ப்பாணத்தவர்களான பல வர்த்தகர்கள் ஒன்று சேர்ந்து குத்தகைக்குப் பெற்று நடத்தினர். இதில் பல சாதியைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். முஸ்லிம்களும் வரிக் குத்தகை வியாபாரத்தில் ஈடுபட்டனர். இது போன்ற வியாபார முயற்சிகளில் பல சாதிகளைச் சேர்ந்தோரும் ஒன்று சேர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இவ்வாறான ஒத்துழைப்பு பிற துறைகளிலும் காணப்பட்டது எனலாம். யாழ்ப்பாணத்தில் பணக்காரர்களான வர்த்தக சமூகம் ஒன்று ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
பன்முகப்பட்ட பொருளாதார வளர்ச்சியும் மந்தநிலையும்
டச்சு ஆட்சியின் கீழ் தமிழ்ப்பகுதிகளில் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரநிலையும் இருந்து வந்தது என்று இக்கட்டுரையின் முடிவுரையாகக் கூற விரும்புகிறேன். நாட்டின் பொருளாதார அடித்தளம் இக்காலத்தில் இடப்பட்டது. யாழ்ப்பாணத்தின் நான்கு பகுதிகளிலுமுள்ள கிராமங்களில் சிற்றுடைமைக் குடியான் விவசாயம் நிலைபேறுடையதாக அமையலாயிற்று. இந்தக் கிராமங்களில் பல, காசுப் பயிர் உற்பத்திக்கும், சந்தையை நோக்கிய விவசாயத்திற்கும் மாறின. இரண்டாவதாக கடலோடுதலும், வர்த்தக முயற்சிகளும் வளர்ச்சியுற்றன. வர்த்தகத்தில் ஈடுபட்ட குழுக்கள் கடலில் கப்பல்களைச் செலுத்தி வர்த்தகம் செய்தல், மீன்பிடிப் பொருட்களை வாங்குதலும் விற்றலும், தரகு வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டன. இதனால் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்தும் செல்வந்தர்கள் தோற்றம் பெற்றனர். கைவினைஞர்களுக்கும் பல்வேறு கைப்பணித் தொழில் செய்வோருக்கும் பெரும் வேலைவாய்ப்புப் பெருகியதோடு தொழிற்திறன்களும் வளர்ச்சியுற்றன. விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் ஆகிய எல்லாத் துறைகளிலும் தொழிலாளர்கள் கூலியானது பிழைப்பு மட்டத்தை விட உயர்வாக இருந்தது. பணப் புழக்கம் அதிகரித்திருந்தது. அத்தோடு இக்காலத்தில் குடாநாட்டின் சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக மேன்மிகையான மக்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்து குடியேறுவதும் நடைபெற்றது. நெல்லும் பிற தானிய வகைகளும் வன்னியிலிருந்து குடாநாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
டச்சு ஆட்சியில் வடபகுதியின் பொருளாதாரம் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக அமைந்தது. லாபம் தரும் பண்டங்களின் வர்த்தகத்தில் டச்சுக்காரர் தனியுரிமையை ஏற்படுத்தினர். வடபகுதியின் காணிச் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் உற்பத்தி வருவாயிலிருந்து எவ்வளவு உச்சமான அளவினை வரியாகப் பிழிந்து எடுக்க முடியுமோ அவ்வளவுக்கு வரி விதிப்பை உயர்த்தினர். இலங்கையின் தென் பகுதியின் வருவாயைவிடச் செலவு அதிகமானதால் ஏற்பட்ட பற்றாக்குறையை, வட பகுதியின் வரி அறவீடு மூலம் ஈடுசெய்வதும் அவர்களின் நோக்கமாக இருந்தது. விவசாயத்தில் சிறப்புத் தேர்ச்சி ஏற்பட்டதால் தானியங்களுக்கான சந்தை விரிவடைந்தது. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் சந்தையால் தூண்டப் பெற்று உயர்ச்சியடைந்தன. குறிப்பாக அரிசியின் விலை அதிகரித்தது. இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்ததால், மக்களுக்கு கஷ்டம் விளைந்தது. டச்சு ஆளுநர்களுள் யாழ்ப்பாணத்தில் இறுதியாக கடமையாற்றிய வன்டர் கிறாவ் (Van der Graef) என்பவர் 1794 ஆம் ஆண்டில் எழுதிய அறிக்கையில் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண வாசிகள், முன்பு நன்றாக உறுதியான நிலையில் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது மேலும் மேலும் வறியவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் எழுதினார். தாம் பெற்ற கடன்களைத் தீர்க்க வகையில்லாதவர்களாய் பலர் காணிகளையும், பிற உடைமைகளையும் விற்றனர். இவ்வாறு விற்போர் எண்ணிக்கை பிற பகுதிகளை விட யாழ்ப்பாணத்தில் அதிகமாக இருந்தது. யாழ்ப்பாணம் சனஅடர்த்தி மிக்கதாயும், உணவுத் தேவைக்காக இறக்குமதியில் தங்கியிருக்கும் பகுதியாகவும் இருந்ததால் யாழ்பாணத்திற்குள்ளேயும் அதற்கு வெளியேயும் இருந்து வரும் மாற்றங்களின் தாக்கத்திற்கு அது உட்படுவதாக இருந்தது.
அடிக்குறிப்புக்கள்
- Memoir of Anthony Paviljeon Commander of Jaffnapatnam to his Succes bor, Instructions from the Governor – General and Council of India to the Governor of Ceylon 1656 to 1665. Transl Sophia ieters (Colombo 1908), p. 108.
- Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffna patnam, 1697 (Colombo 1911), P 16.
- Memoir by Anthony Mooyaart, 1766 Translation, by Sophia Pieters (Colombo 1910) p.3.
- Census of Ceylon Return of the population of the Island of Ceylon (Colombo 1827).
- Census of Ceylon 1871 (Colombo 1873)
- P.E.Pieris, The Kingdom of Jaffna patnam, 1645 (Colombo 1920. pp. 47-52).
- P. Baldaeus, Beshrijving der Oost-Indische Kusten, Malabaar en Choromandel…. als ook het keijserrijck Ceylon (Amsterdam 1672) pp. 161-72
- F. Valentijn, Oud en Nieww Oost-Indien (Dordrecht 1726), Vol. I Ceylon, pp. 30-31
- This can be seen in any one of the many extant thombos of Jaffna completed in the 18th Century. National Archives of Sri Lanka. Dutch Records 6822 to 6857
- J.E.Tennent, Ceylon, An account of the Island…. (London 1859), Vol.1,p.532.
- Baldaeus, op. cit., p. 187.
- H.W.Tambiah, Laws and customs among the Tamils of Jaffna (Colombo 1954), pp. 34 ff.
- Kolianale Archief (The Hague), 1164, f. 43. Letter of 30 November 1670.
- See, for example Memoir of Julius Stein van Gollenesse, 1751, Ed, by S, Arasaratnam (Colombo 1974), pp. 72-3.
- Koloniale Archief, 1244, f. 81. Letter of 9 January 1681.
- Diary of Jan Schreuder, Governor of Ceylon 18 July 1760. Hooge Regeering Van Batavia, 535.
- Based on accounts of Ceylon in the V.O.C’s papers. Koloniale Archief.
- Schereuder to Van der Graaf 7 October 1784, Mackenzie Collection, Private, 72, III (India Office Library, London)
- Ibid.
- Memoir of Van der Graaf 15 July 1794, Hooge Regeering, 586.
- Memoir of Jan Schreuder 16 August 1760. Hooge Regeering, 577.
- Memoir of Golleneses, 1751, pp. 77-8.
- Koloniale Archief.1322, f. 576, Letter of 18 January 1688.
- Koloniale Archief. 1120. f. 160. Letter of 12 November 1659.
- Koloniale Archief. 798, f. 474. Letter of 16 July 1671.
- F. de Qusyroz. The temporal and spiritual conquest of Ceylon. Translation. by. S.G. Perera (Colombo 1930), IT. P. 666.
- For a detailed description of the pearl fishery and the trade in pearls, see p. Van Dam, Beschryvinge van de Oostidische Compagnie S. Gravenhage 1932. Bk. II. Part 2. pp. 412-33.
- Memoir of Joan Gideon Loten 1757 (Colombo 1757), p. 41.
- Information derived from V.O.C.records in Koloniale Archief.
- Memoir of Rijcklofvan Goens, 1675 (Colombo 1932), p. 42.
- Koloniale Archief, 1213, f. 261. Letter of 14 December 1677.
- Koloniale Archief, 1322, f.139 Letter of 18 January 1688.
- Memoir of Hendrick Zwaardercroon, 1697 (Colombo 1911). p. 21.
- Memoir of Zwaardecroon, pp. 21-22.
- Memoir of Zwaardecroon,pp. 22-23
- Memoir of Van de Graaf, 15 July 1794.
- Koloniale Archief, 1213, f. 247. Letter of 9 September 1677.
- S. Arasaratnam, “Trade and agricultural economy of the Tamils of Jaffna during the second half of the 17th Century, Tamil Culture, IX, 4 (1961), pp. 10-12.
- Koloniale Archief, 1252, f. 204, Letter of 16 March 1681.
- Koloniale Archief, 1322, f, 576, Letter of 18 January 1688.
- Memoir of Jan Schreuder, 16 August 1760.
- Memoir of Baron van imhoff 1740 (Colombo 1911), p. 76.
- Memoir of Zwaardecroon, pp. 20-21.
- Memoir of Van der Graaf, 15 July 1794.
- Memoir of Zwaardecroon, p. 21.
- Valentijn, op cit, Vol I, p.214.
- Appendix to Memoir of Schreuder August 1760, Hooge Regeering 533.
- Memoir of Van der Graaf, 15 July 1794.