வன வளப் பாதுகாப்பும் பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நில உரிமைகளும்: கிழக்கிலங்கையின் வாகரைப் பிரதேசத்தை முன்வைத்து
Arts
19 நிமிட வாசிப்பு

வன வளப் பாதுகாப்பும் பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நில உரிமைகளும்: கிழக்கிலங்கையின் வாகரைப் பிரதேசத்தை முன்வைத்து

March 29, 2025 | Ezhuna

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குக் கோறளைப்பற்றுப் பிரதேச செயலக (வாகரை) எல்லைக்குள் உள்ள புச்சாக்கேணி கிராம அலுவலர் பிரிவின் மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை மற்றும் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் 25.02.2025 அன்று சேனைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எதிராக நடந்த எரிப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள், வன வளப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த பெரும் அவமானமாகும். இந்தச் செயற்பாட்டில் 13 குடிசைகள், குடும்பங்களின் உடைமைகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், நெல், பயறு உள்ளிட்ட தானியங்கள் எரிக்கப்பட்டன. பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த மக்களுக்கு இது பேரிழப்பாகும். வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் இழந்த மக்களின் நிலை மிகுந்த துயரத்தை விளைவிக்கிறது. இந்தச் சம்பவம், உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் வன வளங்களைப் பாதுகாக்கும் முறையைச் சிக்கலாக்கி, வன வளத்திணைக்களத்தின் செயற்பாடுகள் மீதான நம்பிக்கையை மேலும் சீர்குலைத்திருக்கிறது.

வாழைச்சேனை – கருக்காமுனை வன எல்லைப் பிரிவு அலுவலக உத்தியோகத்தர்களே வாகரையில் தீ வைத்தனர்; சமைக்க வைத்திருந்த அரிசிச் சாக்கிலும் சேமித்திருந்த விதைகளிலும் தீ மூட்டினர்; தேனைக்கூட தங்கள் அலுவலகம் கொண்டுசென்றனர். விவசாயிகளும், அவர்களை ஆதரித்த சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களும் தாக்கப்பட்டனர். மக்கள் பொலிஸில் அளித்த புகார், முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் அரசியல் அழுத்தத்தால் பதிவாக்கப்பட்டது. இது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கான நீதி கிடைக்காமல் போகலாம்; காலம் கடந்து செல்லலாம்; ஆனால், நெல் மணிகளுக்குத் தீ மூட்டிய கைகளை காலம் மன்னிக்காது.

உள்நாட்டுப் போரின் போது பொதுமக்களின் சொத்துகளை எரிப்பதும் அழிப்பதும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகும். பொதுமக்களையும் அவர்களின் உடைமைகளையும் குறிவைப்பது போர்க் குற்றமாகவே கருதப்படுகிறது. இது பெரும்பாலும், எதிரணியை ஆதரிக்கும் மக்களைத் தண்டிக்கவும் மிரட்டவும் செய்யப்படுகிறது. இச்செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எங்கு இருந்தாலும், அவர்கள் தங்களது வன்முறைக்குப் பொறுப்பேற்றாக வேண்டும். வாகரை எரியூட்டலை போரின் பின்னாலான போர் எனலாம். வன வளத்திணைக்களம் பொதுமக்கள் மீது ஒரு மௌனமான போராட்டத்தைத் தொடருகிறது. பொதுமக்களின் சொத்துகளை எரிப்பது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதச் செயலே. இது மக்களுக்குப் பயத்தையும் நீண்டகால மனக்காயத்தையும் ஏற்படுத்தும்.

1977 ஜெனீவா உடன்படிக்கையின்படி, போராளிகள் அல்லாதவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. உணவு, விவசாயப் பகுதிகள், பயிர்கள், கால்நடைகள், குடிநீர் வழங்கும் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசன முறைமைகள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்வாழ்விற்கு இன்றியமையாத உடைமைகளைத் தாக்குவது, அழிப்பது அல்லது மாற்றுவது அனுமதிக்கப்படாத செயல்களாகும். வாழ்வாதாரத்தை மறுக்கும் நோக்கில், பொதுமக்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மற்றும் சர்வதேசச் சட்டத்தின் பாய்ச்சலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், இலங்கையில் அது எப்போது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்பது கேள்வியாகவே தொடர்கிறது.

போரின் பின்னரான காலத்தில் முக்கூட்டு அரச கட்டமைப்புகளின் நெருக்கடிகள் 

போரின் அதிர்வுகள் ஓய்ந்தபின்பு, இடம்பெயர்ந்தவர்களில் பலர் தங்கள் நிலங்களை, வயல்களை, கால்நடைக்கான புல்வெளிகளை மீண்டும் தேடிவந்தபோது, மறுபடியும் துரத்தப்பட்டார்கள், வன்முறையை எதிர்கொண்டார்கள். போர் பலரை நிலமற்ற மக்களாக மாற்றியது. இதில் அரச கட்டமைப்புகளின் பங்கு முக்கியமானது. இந்தவகையில், போரின் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையின அடையாளங்களை வலுப்படுத்தி, நில உரிமையாளர்களை நிலமற்றவராக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த மூன்று நிறுவனங்கள்:

  1. தொல்பொருள் துறை
  2. வனப் பாதுகாப்புத் துறை
  3. வனவிலங்குப் பாதுகாப்புத் துறை

இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயற்பட்டு, அரச அதிகாரத்தின் வலுவுடன் களமிறக்கப்பட்டன. பல பிரச்சினைகளை உருவாக்கி, பதற்றத்தையும் கொந்தளிப்பையும் விதைத்தன. இனஅழிப்பு ஆய்வுகளில், இறப்புகளின் எண்ணிக்கையை விட, அரசின் உள்நோக்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில், அரசின் நிர்வாக அமைப்புகளின் செயற்பாடுகளும் ஆராயப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளின் செயற்பாடுகள், இன அழிப்புத் திட்டத்தின் முக்கிய அங்கங்களாக உள்ளன என்பதற்கான ஆவணவாக்கம் அவசியம்.

தொல்பொருள் துறை, வடக்கில் உள்ள பல தலங்களை பௌத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறுகிறது. இந்த இடங்கள் நீண்டகாலமாகச் சேதமடைந்துள்ளன. தற்போது, அவற்றை மீட்டெடுப்பதில் இத்துறை கவனம் செலுத்துகிறது. தொல்பொருள் அறிவியல் முக்கியமானது என்றாலும், அதன் செயல்முறைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்களுடன் அதற்கு உள்ள தொடர்புகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். போர் முடிந்ததிலிருந்து, இடம்பெயர்ந்த சமூகங்களின் நிலங்களை அபகரிப்பதற்கான கருவியாக தொல்பொருள் துறை மாறிவருகிறது.

வனப் பாதுகாப்புத் துறை (DFC) நிலத் தகராறுகளில் சிக்கியுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களின் நிலங்களை இது கைப்பற்ற முயல்கிறது. இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதன் அதிகாரத்தால் உள்ளூர்ச் சமூகங்கள் மற்றும் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில், இது சிங்களக் குடியேற்றத்திற்கும் இடமளிக்கிறது. வனவிலங்குப் பாதுகாப்புத் துறையும் (DWC) நிலத் தகராறுகளில் ஈடுபட்டுள்ளது. வடக்கில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிக்கும் நடவடிக்கையில், மக்களது வாழ்வாதார நிலங்களைக் கையகப்படுத்தும் செயற்பாடு அதிகரித்து வருகிறது.

அரச திணைக்களங்கள் நில அபகரிப்பில் ஈடுபடுவதோடு, இனங்களுக்கிடையே பதற்றத்தை உருவாக்கி, பல்தேசிய வர்த்தக அமைப்புகளின் தேவைகளுக்காக நிலங்களை ஏற்பாடு செய்கின்றன என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது. வாகரைச் சம்பவம், மத்தியப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பின் மீதான நம்பிக்கையீனத்தையே மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. பொருளாதார நெருக்கடியில், விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டிய அரசே, சிறு விவசாயிகளின் நிலங்களை எரித்து அழிக்கிறது. மிகுந்த நெருக்கடியின் மத்தியில் வாழும் மக்களின் வாழ்வாதார உரிமையை, வன்முறையால் காவு கொள்வதற்கு அதிகாரிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று பாதிக்கப்பட்டோரும், சிவில் அமைப்புகளும் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசின் வன மீளுருவாக்கம் மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டங்களும் பூர்விகப் பழங்குடி மக்களும்

2030க்குள் வனப்பகுதியை 32%ஆக அதிகரிக்க இலங்கை இலக்கு வைத்துள்ளது. இதற்காக:

  1. மீள் காடு வளர்ப்பு – பொருத்தமான நிலங்களை அடையாளம் காணுதல்.
  2. வன மேலாண்மைத் திட்டங்கள் – இயற்கை காடுகளின் நிலையான பாதுகாப்பு.
  3. வன மீள் சீரமைப்பு – சதுப்புநிலங்கள் உட்பட 18,000 ஹெக்டயருக்கு மேல் காடு வளர்ப்பு.

போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

2021-2030 காலகட்டத்தில், வனவியல் துறையின் முயற்சிகள் மூலம், கார்பன் பிரித்தெடுக்கும் திறன் 7%ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2.36 மில்லியன் மெட்ரிக் தொன் கார்பன்டை ஆக்சைட்டிற்குச் சமமாகும். 2015 இல், இலங்கையின் வனப்பகுதி 29.15%ஆக இருந்தது. இதில் ஈரமான, வறண்ட மற்றும் இடைநிலை மண்டலங்களில் உள்ள அடர்ந்த காடுகள், சவன்னாக்கள், சதுப்பு நிலங்கள் ஆகியன அடங்கும். இலங்கை, உயர் பல்லுயிர் வளத்திற்காகவும், வாசனைத்திரவிய மரங்கள், இறப்பர், தேயிலை போன்ற வணிகத் தோட்டங்களுக்காகவும் அறியப்படுகிறது.

இருப்பினும் விவசாயம், தோட்டங்கள், மற்றும் உட்கட்டமைப்புக்காக நிலம் அழிக்கப்படுவதால் வனப்பகுதியின் அளவு குறைந்துள்ளது. சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், வனவிலங்கு வேட்டையாடுதல், காட்டுத் தீ போன்றவை சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தீவின் 60% பரப்பளவைக்கொண்ட உலர் மண்டலத்தில், 84%ஆன பகுதி பாதுகாக்கப்பட்ட நிலையிலுள்ளது. ஆனால் குடியேற்ற விரிவாக்கம், தெளிவில்லாத எல்லைகள் காரணமாக 0.3% வன இழப்பு விகிதம் காணப்படுகிறது. காடழிப்பைத் தணிக்க தரை ஆய்வுகள், எல்லைப் புதுப்பிப்புகள், செயற்கைக்கோள் கண்காணிப்புகள் போன்ற நடவடிக்கைகள் அவசியமாகும்.

மீள்-காட்டுருவாக்கமானது இலங்கை அரசால் மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2024-2026 வரையான காடழிப்புத் தடுப்பு வரைபடம் உருவாக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 142,000 ஹெக்டயர் புதிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை உருவாக்கி, ஆண்டுதோறும் 370,000 தொன் ‘CO2’ உமிழ்வைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1992ஆம் ஆண்டு முதல் வன இழப்பைத் தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் போர் காரணமாக அவற்றை மேற்கொள்ள முடியவில்லை. 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘An Environmental Profile of the Batticaloa District’ எனும் ஆவணத்தின்படி, மாவட்டத்தின் வனப்பகுதி கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது 53,250 ஹெக்டயராக (மொத்தப் பரப்பளவில் 20.2%) உள்ள வனப்பகுதியை, 17,000 ஹெக்டயரால் அதிகரித்து, 70,000 ஹெக்டயராக உயர்த்துவதே அரசின் இலக்காக உள்ளது. இதற்கான மீள் காடு வளர்ப்பு முயற்சிகள் கோறளைப் பற்று வடக்கு, கோறளைப் பற்று, ஏறாவூர்ப் பற்று ஆகிய பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட வேண்டும்; மேலும், அனைத்துப் பிரதேசங்களிலும் வேளாண் காடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டுமென ஆவணம் குறிப்பிடுகிறது.

வாகரைப் பிரதேசச் செயலகம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 25,344 குடியிருப்பாளர்களும் 7,820 குடும்பங்களும் உள்ளன. இது மட்டக்களப்பிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்து, கோறளைப்பற்று வடக்குப் பிரிவின் தலைமையகமாகச் செயற்படுகிறது. வாகரைப் பிரதேச செயலகம் 550 சதுர கி.மீ பரப்பளவில், மாவட்டத்தின் 20.89%ஆன பகுதியை உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் தமிழர்கள் வாழும் இப்பகுதியில் மீன்பிடித்தலும் விவசாயமும் முதன்மையான வாழ்வாதாரங்களாகும். இயற்கை வளங்கள் நிறைந்த வளமான பகுதியாகவும் வாகரை கருதப்படுகிறது.

வாகரை, போர் இடம்பெற்ற பிரதேசமாக இருந்தது; பலர் இடம்பெயர்ந்தனர், பலர் உயிரிழந்தனர். முழுப்பிரதேசமும் இராணுவ மோதல்களின் களமாக மாற்றப்பட்டது. போரின் பின்னர், மக்கள் மீண்டும் நிலங்களுக்குத் திரும்பி, வாழ்வாதாரங்களை மீளுருவாக்கம் செய்தனர். அவர்களின் நிலங்கள் சிறுகாடுகளால் மூடப்பட்டிருந்தன. படிப்படியாக குடியிருப்புகளை அமைத்து, சேனைப் பயிர்கள் மற்றும் கடற்கரையோர வளங்களை வாழ்வாதாரமாகப் பயன்படுத்தினர். இந்த வளங்கள் அவர்களுக்குரியது; அவர்களிடமிருந்து பிரிக்க முடியாதவை.

பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரமும் வனப்பாதுகாப்பும் ஒன்றிணைந்தவை. மீள்குடியேறிய மக்களின் நில உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியன வனங்களை மீளக் கண்டறியும் திட்டத்தில் முக்கியமாகக் கருதப்பட வேண்டியவை. அவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்ட, சமூக வன உருவாக்கமே தற்போதைய அவசியமான தீர்வாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் நிலஉரிமைகள் ஆகியன சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் ஆகும். இலங்கை ஏற்றுக்கொண்ட வழிகாட்டுதல் கொள்கையின்படி, இடம்பெயர்ந்தோர் (IDPs) தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கும், பாகுபாடின்றிப் பொதுச் சேவைகளை அணுகுவதற்கும் உரிமை பெற்றுள்ளார்கள். அவர்கள் சொத்துகளை மீட்டெடுக்கவும், இழப்பீடு பெறவும் அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு உரிய நிலங்களை உறுதிப்படுத்தல் மாவட்ட நிர்வாகத்தின் முக்கியக் கடமையாகும். எனவே, வாகரையிலும் இலங்கையின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் வன மீளுருவாக்கம் மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்வாதார உரிமைகளுடன் ஒருங்கிணைந்து அமைய வேண்டும்.

சமூக வனவியல், உள்ளூர்ச் சமூகங்களுக்கு காடுகளை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதோடு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நிலையான மேலாண்மையை உறுதி செய்யவும் உதவுகிறது. சிறிய அளவிலான வன முகாமைத்துவம் ஊக்குவிக்கப்படுவதால், பொருளாதார வாய்ப்புகள் உருவாகின்றன. பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க, சமூகப் பங்களிப்பு அவசியமானது. உள்ளூர்ச் சமூக உரிமைகளை அங்கீகரிப்பதே, இதற்கான முதல் கட்ட வேலையாக இருக்க வேண்டும்.

கிழக்கிலங்கையின் பழங்குடியினர்

1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, பழங்குடி மக்களை, ஒரு பிரதேசத்திற்குப் பிற சமூகங்கள் வருவதற்கு முன்பு வாழ்ந்தவர்களின் சந்ததியினர் என வரையறை செய்தது. அவர்கள் தனித்துவமான சமூக, பொருளாதார, கலாசார பழக்கவழக்கங்களைப் பேணுகின்றனர். மேலும், அவர்கள் ஆதிக்க சமூகங்களிலிருந்து வேறுபடுகின்றனர்; புதிய குடியேற்றங்கள் இவர்களை இடம்பெயரச் செய்து விளிம்புநிலைக்குத் தள்ளி வருகிறது எனவும் ஐ.நா வரையறுக்கிறது.

பூர்வீக மக்களின் வாழ்க்கைமுறை வனச் சூழலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாடோடி வாழ்க்கை முறையாலும், வளங்களின் குறைபாடாலும், இவர்கள் சிறிய குடும்பக் குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொன்றும் ஒரு தனிக் குடும்பம் அல்லது சில நீட்டிக்கப்பட்ட குடும்பங்களைக் கொண்டுள்ளது. இந்தக் குழுக்கள் தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவும் தனித்துவமான வாழ்வியலைக் கொண்டிருக்கின்றது. 

வேட்டையாடுதல், உணவு சேகரிப்பு, மாற்றுச் சாகுபடி ஆகியவற்றில் ஈடுபடும் இக்குழுக்கள், தனிப்பட்ட உடைமைகளை மிகக் குறைவாகவே கொண்டுள்ளன. இவர்கள் சுதந்திரமாகச் செல்லும் வாழ்க்கைமுறையுடன் இணைந்து, இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வாழ்கின்றனர். இருப்பினும், நிரந்தரமாகத் தங்கியுள்ள சில குழுக்கள், வளங்களுக்கான சிறந்த அணுகலுடன், வேட்டையாடவும் சாதகமான சூழ்நிலைகளைப் பெற்றுள்ளன.

பழங்குடியினர் சமுதாயத்தின் சடங்குகளும் நம்பிக்கைகளும் இயற்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவர்கள் குலங்கள், உறவினர்கள், விலங்குகள், தாவரங்கள் என்பன ஆவியோடு தொடர்புடையன என நம்புகிறார்கள். குறிப்பிட்ட மரங்கள், பாறைகள் என்பன வழிபாடுக்கு உரியவை எனக் கருதப்படுகின்றன. இயற்கையின் மீதான வழிபாட்டு முறைகள், சாகுபடி நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் முடிவிலும் மேற்கொள்ளப்படுவது, அவர்களின் வனச் சூழலுடனான உறவைப் பிரதிபலிக்கிறது.

இலங்கையின் உள்ளகக் காலனித்துவம், பழங்குடியினர் சமுதாயத்தின் அழிவிற்கும், பிளவிற்கும் மற்றும் வெளியாருடனான கலப்பிற்கும் வித்திட்டுள்ளது. மீள்குடியேற்றம் மற்றும் வெளியாரின் வருகை ஆகியன பழங்குடியினரின் வாழ்க்கைமுறையையும் உரிமைகளையும் கேள்விக்கு உள்ளாக்கி, மனிதப் பாதுகாப்புச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் கிழக்கின் பழங்குடிச் சமூகம் (வேடர் சமூகத்தினர்) ‘முகுடு வேடர்கள்’ அல்லது ‘கடலோர வேடர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள், நிலத்தின் ஏனைய பூர்வீக மக்களுடன் முழுமையாகத் தொடர்பு கொண்டவர்களல்லர். பொதுவாகவே, ‘வேடர்’ என்றால் தோளில் ஆயுதம் ஏந்திய, தலைமுடியைப் பின்னால் கட்டிய, வெற்று மார்புடைய மனிதர் என்றே எண்ணப்படும். ஆனால், இந்தப் பாரம்பரியச் சித்திரம், சமகாலக் கிழக்கு வேடர்களை முழுமையாகப் பிரதிபலிக்காது. 

அவர்கள் சில இடங்களில் தனித்துவமான சமூகமாகவும், சில இடங்களில் ஏனைய பழங்குடியினர்களுடன் கலந்த சமூகமாகவும் இருந்து வருகின்றனர். சமூக-அரசியல் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். கிழக்கில் பல பழங்குடியினர் தமிழ்க் குடும்பங்களுடன் கலப்புத் திருமணம் செய்துகொண்டு, பரந்த சமூக வாழ்க்கையில் ஒருங்கிணைந்துள்ளனர்.

செலிக்மேன் (Seligmann, The Veddas, 1911) அவர்கள், கடலோர வேடர் சமூகம் தொடர்பான சில விவரங்களைத் தருகிறார்: “அவர்கள் எப்போது அல்லது எப்படி வந்தார்கள் என்பது அவர்களுக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அவர்களின் மூதாதையர்கள் மேற்கில் மலைகளுக்கு அப்பால் அமைந்துள்ள காலாவிலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். சிலர் அவர்கள் குகுலு-கம்மேடாவில் இருந்து வந்து, பின்னர் கடற்கரைப் பிரதேசத்தில் பரவினர் என்று கூறுகின்றனர். குகுலுகத்தின் எனும் இடம் குறித்த கருத்துகள் வேறுபடுகின்றன. சிலர் இது வெருகல் அருகே இருப்பதாகக் கூறுகின்றனர். மற்றவர்கள் அது மிகத் தொலைவில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பல கடலோர வேடர்கள் உள்ளூர்த் தமிழ்க் கிராமவாசிகளிடமிருந்து எளிதில் வேறுபடுத்திக்காட்டும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள்; பெரும்பாலும் வேடர் மொழியில் புலமை இல்லாதவர்கள். ‘பூனம்மா’ மற்றும் ‘வசந்தி’ போன்ற பெயர்கள் தமிழ்ச் சமூகத்துடனான அவர்களின் ஆழமான ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. கடலோர வேடர்கள் பெரும்பாலும் பழங்குடிப் பூர்விகவாசிகள் என்று முத்திரை குத்தப்படுவதை விரும்புவதில்லை. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவும் சாதிப் படிநிலை, இவர்களைத் ‘தாழ்ந்தவர்களாகக்’ கருதுவதால் இந்தத் தயக்கம் எழுகிறது. தமிழ்ச் சமூகத்திற்குள், ஒரு தனிநபரின் சாதிக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சாதியை அடிப்படையாகக்கொண்ட பாகுபாடு காட்டும் நடைமுறைகள் இன்றும் நீடிக்கின்றன. உள்ளூர்ச் சாதியினர் வேடர் சமூகத்தினரை மிகவும் தாழ்ந்தவர்களாகக் கருதுவதோடு, சமூக ஒடுக்குதலுக்கும் உள்ளாக்கியுள்ளனர்.”

கடலோர வேடப் பழங்குடி மக்கள், தங்கள் பாரம்பரியத்தின் வேரைக் கணிசமானளவு இழந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, தமிழில் ‘வேடர்’ என்று பொருள்படும் ‘வேடன்’ என்ற சொல், தற்போது பொதுவாக இழிவுபடுத்தும் அல்லது திட்டும் வார்த்தையாகவே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு முன்னுதாரணம்: பழங்குடித் தலைவர் திஸ்ஸஹாமியின் போராட்டம்

1981ஆம் ஆண்டில், துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) சில நிபந்தனைகளை விதித்தது. யானைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைவிடங்களைப் பாதுகாக்க, நீர்ப்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவேண்டி, அவ்வறிக்கை பரிந்துரை செய்தது. விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க, இந்தப் பகுதியை தேசிய பூங்காவாக அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு ஆணையின் (FFPO) கீழ் உருவாக்கப்பட்ட தேசிய பூங்கா, தனியார் சொத்துகள் மற்றும் மனிதக் குடியிருப்புகளைத் தடை செய்ததால், அங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்த வேடுவர்களின் எதிர்காலம் குறித்துக் கவலை எழுந்தது. வனவிலங்கு ‘EIA’ குழுவில் சிலர், பூர்விக சமூகத்தினரை வனவிலங்குத்துறையின் கீழ் ஒருங்கிணைத்து, அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. இறுதியில், பழங்குடி மக்கள் முழுமையாக இடம்பெயர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சமூகத் தலைவர் திஸ்ஸஹாமி, தனது குடும்பத்துடனும் மேலும் ஏழு குடும்பங்களுடனும் ‘FFPO’ விதிகளைப் புறக்கணித்து தொடர்ந்தும் அப்பகுதியில் வசித்து வந்தார். இதனால், அரசு அடிபணியும்நிலை வந்தது. இந்த வரலாற்றுச் சம்பவம் பழங்குடிச் சமூகத்தின் இருப்பு, அடையாளம், தனித்துவம் ஆகியவற்றைக் வெளிக்கொணர்ந்தது. இலங்கையில், பழங்குடியினரின் உரிமைகள் குறித்த அரசியல் உணர்வு இதன்பின்னர் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

திஸ்ஸஹாமியின் முன்னுதாரணத்தை பார்க்கும்போது, பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வனத்திற்கும் உள்ள உறவு தெளிவாகப் புரிகிறது. இது கிழக்குப் பகுதியின் பழங்குடிச் சமூகத்திற்கும் பொருந்தும். உள்ளூர் மக்களின் நில உரிமையும், கூட்டு வாழ்வாதாரமும், வனப்பாதுகாப்பும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. பழங்குடி மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரத்தளங்களும் பெரும்பாலும் வனங்களும் கடற்கரையோரப் பகுதிகளும் ஆகவே உள்ளன. வடக்குக் கோறளைப்பற்று வடக்கிலும், மூதூர் மற்றும் வெருகல் பகுதிகளிலும் வாழும் பழங்குடியினரின் வாழ்வாதாரத் தளங்கள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, அதனுடன் இணைந்த வனப்பகுதிகளும் நிலைத்து இருக்கும்.

பாதுகாக்கப்படாத ‘பிற’ காடுகளின் நிர்வாகம் 

இலங்கையில் முறையாகப் பாதுகாக்கப்பட்ட காடுகள், மூன்று முக்கியச் சட்டங்களின் கீழ், வனப் பாதுகாப்புத் துறையாலும் வனவிலங்குப் பாதுகாப்புத் துறையாலுமே நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு, 2020ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம், ‘Other State Forests’ (OSF) என அழைக்கப்படும் பாதுகாக்கப்படாத காடுகளின் நிர்வாகத்தை, விவசாய வளர்ச்சிக்காக, உள்ளூர் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிடம் ஒப்படைத்தது. இந்த நடவடிக்கையில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கமிருந்தாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இதனால் இக்காடுகள் காடழிப்புக்கு உள்ளாகலாம் எனக் கவலைப்பட்டனர். உயர்நில பாதுகாக்கப்படாத பிற காடுகள், முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகவும், தாழ்நில பாதுகாக்கப்படாத பிற காடுகள், பல தனித்துவமான உயிரினங்களுக்குத் தாயகமாகவும் உள்ளன.

இக்காடுகள் மேகக் காடுகள் மற்றும் மழைக்காடுகள் போன்ற வளமான காடுகளை உள்ளடக்கியிருந்தாலும், ‘பிற காடுகள்’ என்ற அடையாளம் காரணமாக, அவை முக்கியத்துவம் இல்லாதவை எனும் தவறான எண்ணம் உருவாக்கப்படுகிறது. இலங்கையின் காட்டு யானைகளில் எழுபது சதவீதம் இக்காடுகளிலேயே வாழ்கின்றன. இதனால் இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவது மனித-யானை மோதலை மேலும் தீவிரப்படுத்தக்கூடியது. 

ஆயினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி, பிற காடுகளின் நிர்வாகம் மீண்டும் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டின் அரசின் ஆணையை ரத்துச் செய்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்தக் காடுகளைத் திறப்பது, அவற்றின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று சூழலியலாளர்கள் அஞ்சியமையே இதற்கான காரணமாகும்.

இவ்வாறான காடுகளின் முகாமைத்துவ முறைமையில் உள்ளூர்ப் பழங்குடிச் சமூகங்களின் பங்களிப்பு அவசியமானதாகும். பாரம்பரியக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அணுகுமுறை பயனற்றது; இது அழிவையே உருவாக்குகிறது. அரசாங்கம் மற்றும் சர்வதேச நிதியுடன், வனவளத் திணைக்களம் பல ஆண்டுகளாக திட்டங்களை அமுல்படுத்தியபோதிலும், உள்ளூர்ச் சமூகப் பங்கேற்பு இல்லாமையால், அத்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. இது சமூக வனவியல் (CF) திட்டங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளில் காணப்படும் அறிவுத் தட்டுப்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. சமூக வனவியல் துறையில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டுமாயின், அரசாங்கக் கொள்கைகள் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவேண்டும்.

முடிவு 

வனப் பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில், பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் நில உரிமைகளைப் பேணுவது வனப்பாதுகாப்புத் துறையின் முக்கிய பொறுப்பாகும். பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்கள் பொறுப்புடன், வெளிப்படையாக இணைந்து செயற்பட்டால், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, வனப் பாதுகாப்பும் உள்ளூர் மக்களின் நலனும் ஒருங்கிணைந்த ஒரு சக வாழ்வை உருவாக்கலாம். அண்மையில் வாகரையில் நடந்த சம்பவம் இந்த நம்பிக்கையைச் சீர்குலைத்துள்ளது. கொழுத்தப்பட்ட குடிசைகள், எரிக்கப்பட்ட உடைமைகள், உணவுப் பொருட்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் ஆகியன திட்டமிடப்பட்ட தாக்குதல்களாகவே தோன்றுகின்றன.

மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மட்டக்களப்பு மாவட்ட நில உரிமையற்ற மக்களின் அமைப்பு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வலுவான குடிசார் அமைப்புகள், பழங்குடி மற்றும் பூர்விக மக்களின் உரிமைகளை முன்வைக்கும் இவ்வாறான பல இயக்கங்கள் உருவாக வேண்டும். இதற்கு, மக்கள் பங்கேற்பிற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வரலாற்றின்வழி உருவான நம்பிக்கையீனம் இம்மக்களிடையிலும் ஆழமாக உள்ளது. ஆதலால், குடிசார் அமைப்புகளின் வளத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகமாக இங்கு குவிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

வாகரைப் பிரதேசம் பல கனிம வளங்களைக் கொண்டுள்ளது. இதனால் பலரின் கவனம் அங்குள்ள வளங்களின் மீது திரும்பியுள்ளது. ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றின் மீதான இவர்களின் அக்கறை குறைவாகவே உள்ளது. வன வளப் பாதுகாப்புத்துறைக்கும் கனிம வளம் தொடர்பிலான விடயத்தில் பங்குள்ளது போலத் தெரிகிறது.

உள்ளூர் மக்களின் வன உரிமைகளும், வாழ்வாதார வளங்களும் ஒன்றிணைந்தவை; அவற்றைப் பிரிக்கவும் பறிக்கவும் முடியாது. உண்மையான வனப் பாதுகாப்பாளர்கள் அங்கு வாழும் மக்களே. அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதே, வனப்பாதுகாப்புத்துறையின் சமூக வனவியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் செயலாக அமையும்.

எரிப்பது, அழிப்பது, புறம் தள்ளுவது போன்ற செயல்களை இன்றைய சமூகம் ஏற்காது. நேர்மையான சூழ்நிலைகள் உருவாகும்போது, நேர்மையான எதிர்வினைகளும் உருவாகும். எதிர்மறையான சூழ்நிலைகள் தொடர்ந்தால், வனத்தைப் பாதுகாக்க வேண்டிய வனத்துறையே, தனது பாதுகாப்புக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்படலாம். உள்ளூர் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் கூட காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. உள்ளூர் வளங்கள் வணிகப் பொருள்களாக மாற்றப்படக்கூடாது. வளமான காடுகளும் வனப்பான நிலங்களும் எமது உண்மையான சொத்துகள் எனக் கருதும்நிலை தோன்றவேண்டும்.

உசாத்துணைகள்

  1. வன வளத் திணைக்கள அதிகாரிகள் வாகரையில் வைத்த தீ, வீரகேசரி, மார்ச் 09, 2025. Retrieved from: https://www.virakesari.lk/article/208715
  2. வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை, தினகரன், மார்ச் 25, 2025. Retrieved from: https://thinakaran.com/2025/03/25/133262/
  3. அபிவிருத்திக்கு இடையூறாக வனவள திணைக்களம், எஸ்.என்.நிபோஜன், தமிழ்மிரர், ஏப்ரல் 21, 2017. Retrieved from: https://www.tamilmirror.lk/195148
  4. வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு ஆளுநர் கோரிக்கை, வடக்கு மாகாண அரசு, Retrieved from: https://np.gov.lk
  5. வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள், மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கனேடிய தூதுவருக்கு கௌரவ ஆளுநர் எடுத்துரைத்தார், வடக்கு மாகாண அரசு, Retrieved from: https://npgov.lk
  6. குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு – அறிக்கைகள், நூலகம் அறக்கட்டளை, Retrieved from: https://noolaham.org/wiki/index.php
  7. The Central Environmental Authority, 1992. Retrieved from: https://core.ac.uk/reader/52179110
  8. Seligmann, C.G. & Brenda Z., 1911. Retrieved from: https://vedda.org/adivasis/east-coast-veddas/
  9. Global Forest Watch. Retrieved from: https://www.globalforestwatch.org/dashboards/country/LKA/4
  10. Diana Bernaola R., August 2, 2023. Retrieved from: https://www.forestpeoples.org/en/guest-article/2023/improve-forest-conservation-recognise-indigenous-local-rights
  11. Kusters, K. & de Graaf, M., 2019. Tropenbos International: Wageningen, Netherlands.
  12. Meera Srinivasan, The Hindu. Retrieved from: https://www.thehindu.com/news/international/our-lands-are-under-threat-say-tamils-in-sri-lankas-eastern-province/article34346590.ece
  13. Ministry of National Coexistence, Dialogue, and Official Languages, March 2017, pp. 237-245. Retrieved from: https://www.scribd.com/document/452027068/People-of-Sri-Lanka-Book
  14. The Centre for Policy Alternatives, August 2024. Retrieved from: https://www.cpalanka.org/wp-content/uploads/2024/08/The-Intersectional-Trends-of-Land-Conflicts-in-Sri-Lanka.pdf

ஒலிவடிவில் கேட்க


About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்