ஆங்கில மூலம் : வி. நவரத்தினம்
1947 இல் சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த யாப்புடன் தமிழர்களின் துயர நாடகம் ஆரம்பித்தது. சோல்பரி அரசியல் யாப்பின் தோற்றம், அதன் வீழ்ச்சி, இறுதியில் அது ஒழிக்கப்பட்டமை ஆகிய வரலாறு தமிழர்களின் இத்துன்பியல் நாடகத்தில் உள்ளடங்குவதாகும். தமிழ் – சிங்கள உறவுகளில் இவ்வரசியல் யாப்பு கறுப்புப் பக்கங்களாக உள்ளது.
காலனிய ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் சமூகங்கள் அரசியல் விடுதலையும் சுதந்திரமும் என்ற பாதையில் வெற்றிகரமாக பயணிப்பதாயின் அம் மக்கள் சமூகங்கள் சில திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வெற்றிப் பயணத்திற்கு நாகரிகமான அரசியல் நடத்தையென கருதப்படுவதும் உலகு தழுவிய பொதுவிதிகள் சிலவற்றால், எழுதப்படாத நாகரிக நடத்தை விதிகளால் வழிநடத்தப்படக்கூடிய அரசியல் பண்பாட்டை அச்சமூகங்கள் ஏற்று நடக்கும் திறமைகள் என்பன அவசியமான முன்தேவைகளாகும். சுதந்திரம் என்பது இந்த விதிகளை மீறுவதற்கான அனுமதிப்பத்திரம் அன்று. புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தை சிங்களத் தலைவர்கள் ஆரோக்கியமானதும், வளம்மிக்கதுமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உபயோகிப்பதற்குத் தவறினர். பிரித்தானியா விட்ட இடத்திலிருந்து முன்னோக்கிய பாதையில் செல்வதைவிடுத்து, இத் தலைவர்கள் மத்தியகால இலங்கையின் மகாவம்சப் பகைகளுக்கு புத்துயிர் அளித்தனர். இதுவோர் அவல நிலையாகும்.
சுதந்திரத்தை சும்மா பெற்றவர்களுக்கு, அதற்காகப் போராடாமல், தியாகங்களைச் செய்யாமல் அதனைப் பெற்றவர்களுக்கு அச் சுதந்திரத்தின் அருமை தெரிவதில்லை என்று கூறுவர். அது இலங்கைத் தலைவர்கள் விடயத்தில் வெளிப்படையான உண்மையாகிவிட்டது. வன்முறையிலான அமெரிக்கச் சுதந்திரப் போராயிருந்தாலென்ன, சாத்வீக வழியிலான இந்திய சுதந்திரப் போராட்டமாகவிருந்தாலென்ன மக்களின் தியாகங்கள் இல்லாமல் சுதந்திரம் கிடைப்பதில்லை. அளப்பரிய தியாகங்கள் மூலம் பெற்ற சுதந்திரத்தின் பெறுமதியை மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அரசியல் சுதந்திரத்தின் பெறுமதியை உணர்ந்திருந்த அமெரிக்கர்களும் இந்தியர்களும் தாம் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பயன்களை நன்முறையில் துய்க்க முடிந்தது. இலங்கை வன்முறை போராட்டத்தின் மூலம் சுதந்திரத்தைப் பெறவில்லை. சாத்வீக வழிகளில் கூட அது போராட்டத்தை நடத்தவில்லை. இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடி அதனைப் பெற்றது. இந்நிலையில் பிரித்தானியர் இலங்கைக்கும் சேர்த்துச் சுதந்திரத்தை வெள்ளித்தட்டத்தில் வைத்து சும்மா கொடுத்துவிட்டனர். சிங்களத் தலைவர்களுக்கு அதன் அருமை தெரியவில்லை.
இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தவேளையில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் தனது காலனியக் கொள்கையில் பெருமாற்றம் ஒன்றை செய்தேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த உண்மை அரசியல் நோக்கர்களிற்குப் புலப்படலாயிற்று. இங்கிலாந்து தனது தூரதேசத்துக் காலனிகளை இனிமேலும் முன்னரைப் போல கட்டியாள முடியாது என்பது தெளிவாயிற்று. இந்தியாவின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. காந்தி, நேரு ஆகிய தலைவர்களோடு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பிரித்தானிய வைஸ்ராய் ஆகவிருந்த வேவல் பிரபுவால் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தனது ஆணையை செலுத்த முடியவில்லை.
மௌன்ட் பேட்டன் பிரபுவின் தலைமைக் கட்டளைப் பணியகம் இலங்கையில் கண்டியில் அமைக்கப்பட்டிருந்தது. அவர் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பொறுப்பான உயர் படைத் தளபதியாக இருந்தார். அட்மிரல் லெய்டன் (Layto) என்பவர் இலங்கைத் தீவின் பொறுப்பதிகாரியாக இருந்தார். இலங்கையின் சிவில் விவகாரங்கள் (Civil Affairs) மந்திரிகள் சபையிடம் (Board of ministers) இருந்தது. மந்திரி சபையின் தலைவராக டி.எஸ். சேனநாயக்க இருந்தார். அக்கால டொனமூர் அரசியல் அமைப்பின்படி பிரித்தானியர்களான மூன்று செயலாளர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே சேனநாயக்கவும் மந்திரிசபையினரும் குடியியல் விவகாரங்களை நிர்வகித்துக் கொண்டிருந்தனர். இவ்வேளை இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குதல் பற்றிய செய்திகள் பரவலாயின.
டி.எஸ்.சேனநாயக்க பிரித்தானியாவின் அதிகார வகுப்புடன் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குதல் பற்றிப் பேசுவதற்கு இதுவே நல்ல தருணம் என்ற முடிவுக்கு வந்தார். பிரித்தானியாவின் வெள்ளை மாளிகை (White Hall) அலுவலகத்துடன் டி.எஸ் தொடர்புகொண்டார். அவ் அலுவலகம் யுத்தம் முடியும் வரை இதைப் பற்றிப் பேசமுடியாது என அறிவித்தது. யுத்தம் முடிவுற்றதும் அரச ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிப்பதற்கான அரசியல் யாப்பு வரைவை சமர்ப்பிக்குமாறு மந்திரிகள் சபையை (Board of Ministers) வெள்ளை மாளிகை அலுவலகம் கேட்டுக்கொண்டது. சிங்கள அமைச்சர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இம் மந்திரிசபை ஓர் அரசியல் திட்டவரைவை முன்வைத்தது. இத்திட்டம் பிரித்தானியாவின் ‘மந்திரி சபை அரசாங்கம்’ (Cabinet Government) என்ற மாதிரியைப் பின்பற்றி வரையப்பட்டது. மந்திரிசபை அந்த வரைவை ஏற்றுக்கொள்ளும்படியும் அது பற்றி அரச ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டிய தேவை இல்லையென்றும் கேட்டுக்கொண்டது. அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபராகவிருந்த சேர். ஐவர் ஜெனிங்ஸ் இந்த வரைவைத் தனித்து எழுதி வழங்கினார் என்பது பலரும் அறிந்த உண்மை.
யுத்தம் முடிவடைந்ததும் பிரித்தானியா அரச ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. மந்திரிசபை வரைவை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான அரசியல் யாப்பை சிபார்சு செய்யும் படி இவ்வாணைக்குழு வேண்டப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவராக சோல்பரிப் பிரபு நியமிக்கப்பட்டிருந்தார். ஆணைக்குழு இலங்கையரிடம் சான்றுகளை கேட்டறியும்படியும் கோரப்பட்டது. டி.எஸ். சேனநாயக்கவும் மந்திரிசபையும் ஆணைக்குழுவை பகிஷ்கரிப்பது என முடிவு செய்தனர். இந்தப் பகிஷ்கரிப்பு வெறுமனே உத்தியோகபூர்வமான அறிவிப்புத்தான். அவர்கள் இரகசியமாக ஆணைக்குழுவுடன் கொழும்பில் வைத்துப் பேரம்பேசலிலும், நீண்ட உரையாடலிலும் ஈடுபட்டனர்.
மந்திரிசபையின் வரைவை அப்படியே ஏற்கவேண்டுமென்றால், ஏன் ஆணைக்குழுவொன்றை அமைத்திருக்க வேண்டும்? ஆணைக்குழுவை நியமித்த வெள்ளை மாளிகை அலுவலகம், இலங்கையில் சிங்களவர் – தமிழர் முரண்பாடுகள் இருப்பதை நன்கு அறிந்திருந்தது. மந்திரிசபை வரைவு சிங்களவர் சமர்ப்பித்த வரைவு என்பனவற்றை நன்கு தெரிந்திருந்தது. தமிழர்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் தம்பக்க கருத்துக்களைக் கூறவும், கேட்டறியவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குறை வரக்கூடாது என்பதற்காகவே வெள்ளை மாளிகை அலுவலகம் ஆணைக்குழுவை விசாரணைக்காக நியமித்தது. இலங்கையில் உள்ளது போன்ற பிரச்சினையை பிரித்தானியர் இந்தியா விடயத்தில் எதிர்கொண்டனர். அங்கு இந்து- முஸ்லிம் பிரச்சினை இருந்தது. பிரித்தானியர் இந்தியா விடயத்தில் முஸ்லிம் சார்பாக தீர்மானம் எடுக்கவிருந்தனர். இலங்கையில் சிங்களவர்களுக்குச் சார்பாக முடிவுசெய்யத் தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால் தம்மீது குற்றம்சாட்ட முடியாத வகையில் ஆணைக்குழுவை நியமித்தனர். இந்தியாவில் ஒரு விதமாகவும், இலங்கையில் இன்னொரு விதமாகவும் நடந்து கொள்வது தம்மீது குற்றம் சுமத்துவதற்கு ஏதுவாகலாம் எனப் பிரித்தானியா கருதியது.
சோல்பரி ஆணைக்குழுவை என்ன காரணத்திற்காக நியமித்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, 1944-45 காலத்தில் ஆணைக்குழு இலங்கையின் பிரதான நகரங்கள் யாவற்றிலும் அமர்வுகளை நடத்தியது. எல்லாச் சிறுபான்மை சமூகங்களும் தமது அமைப்புகள் ஊடாக தமது கருத்துக்களை முன்வைத்தன.
இலங்கைத் தமிழர்கள் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டுபட்டவர்களாய் அன்று இருக்கவில்லை. அவர்களிடையே பல குழுக்கள் இருந்தன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பாதையில் பயணித்தவண்ணம் இருந்தன. தமிழ்த் தேசியவாதத்தினை ஜி.ஜி.பொன்னம்பலம் பிரதிநிதித்துவம் செய்தார். அவருக்கு கீழ்மட்டத்தில் இருந்து எழும் மக்கள் ஆதரவு இருந்தது. அவரிடம் கவர்ச்சி ஆளுமையும் இருந்தது. எதிர்காலத்தில் அமையப்போகும் சட்டசபையில் இலங்கையின் சிறுபான்மை இனங்களின் சமநிலைப் பிரதிநிதித்துவத்திற்கான (Balanced representation) ஒரு திட்டம் அவரிடமிருந்தது. பொன்னம்பலத்தின் 50 இற்கு 50 கோரிக்கை என அது பெயர்பெற்றது. தமிழர்களில் மிதவாதக் போக்குடையோர் அருணாசலம் மகாதேவாவின் தலைமையை ஏற்றிருந்தனர். (அருணாச்சலம் மகாதேவா பின்னர் சேர் பட்டம் பெற்றார்) இவர் டி.எஸ்.சேனாநாயக்காவின் மந்திரிசபையில் டொனமூர் யாப்பின் படியான அரசில் அமைச்சராகவும் பதவிவகித்தார். தமிழ் மிதவாதிகள் சிங்களவர்களிடம் எவ்வித நிபந்தனையையும் விதிக்காமல் அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கினர்.
தமிழ்த் தேசியவாதிகளிடமும், தமிழ் மிதவாதிகளிடமும் ஒரு விடயத்தில் கருத்தொற்றுமை இருந்தது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் குடியேறி வாழ்வதற்கான உரிமை தமிழர்களுக்கு உள்ளது என்பதில் அவர்கள் இருசாராரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் யதார்த்தத்தில் வடக்கு – கிழக்கு தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதியாகவும், ஏனைய பகுதிகள் சிங்களவர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளாகவும் இருந்தன. இந்த விடயத்தில் தமிழ்த் தலைவர்கள் பெருந்தவறை இழைத்தார்கள். இத் தவறே பெரும் கேடு சூழ்வதற்குக் காரணமாயிற்று. இந்தத் தவறான அரசியல் கொள்கை பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களையும் அவர்களின் சொத்துக்களையும் இழப்பதற்கு காரணமாயிற்று.
சிறுபான்மை இனத்தவர்களிடையே பல்வேறுபட்ட அபிப்பிராயங்களையும் கொண்டவர்களான பலர் இருந்தனர். இவர்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கி ஒருமித்த குரலில் சோல்பரி ஆணைக்குழுவிற்குக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. இந்த நோக்கத்தோடு 1944 ஆம் ஆண்டு கொழும்பு சாகிராக் கல்லூரியின் மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தை ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆதரவாளர்களே முன்மொழிந்து கூட்ட அறிவித்தலை யாவருக்கும் அனுப்பினர். கொழும்பு நீதிமன்றத்தின் சட்டவாளர்களான எனது இரு நண்பர்கள் அந்த கூட்ட அறிவித்தலை என்னிடம் கொடுத்து கூட்டத்தின் அமைப்பாளர் என்றவகையில் கையெழுத்திடுமாறு கேட்டனர். நான் கைழுத்திட மறுத்துவிட்டேன். இதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. தனிப்பட்ட காரணங்களுக்காக நான் அவ்வேளை அரசியலில் இறங்கத் தயாராக இருக்கவில்லை. இரண்டாவதாக சமநிலைப் பிரதிநிதித்துவம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது நியாயமான ஒரு வழிமுறையென்றோ தமிழர்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கு அதனைத் திறன்மிகு வழிமுறையாகவோ நான் கருதவில்லை. மூன்றாவதாக நான் அக்காலத்தில் சமஷ்டி முறை பற்றிய அரசியல் சிந்தனையால் கவரப்பட்டிருந்தேன். இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பகைமை உணர்வை அம்முறையே நீக்கவல்லது என்றும் கருதினேன். எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பிய சிலநாட்களின் பின்னர் இலங்கைக்கு சமஷ்டி முறை வேண்டும் என்று வாதிடும் முறையில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையால் நான் கவரப்பட்டிருந்தேன்.
என்னிடம் கூட்ட அறிவித்தலைக் கொண்டுவந்து காண்பித்த சட்டவாளர்களான நண்பர்கள் சட்ட நூலகத்தில் இருந்த நண்பர்கள் பலருக்கும் அக் கூட்ட அறிவித்தலைக் காட்டி ஆதரவு கேட்டனர் என்பதை அறிந்துகொண்டேன். இந்த விடயம் பற்றி பல ஆண்டுகள் கடந்தபின் எஸ். ஜே. வி செல்வநாயகம் அவர்கள் ஒரு தகவலை எனக்கு கூறினார். அந்த அறிவித்தலைக் கொண்டுவந்த நண்பர்கள் ஏதோ காரணத்தால் அதனைக் தமக்கு காண்பிக்கவில்லை எனவும், தாமாகவே முன்வந்து அந்த அறிவித்தலில் தாம் கையெழுத்திட்டதாகவும் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் கோரிக்கைகளுக்குப் பலமான ஆதரவைக் கொடுக்க வேண்டுமென தாம் அப்போது கருதியதாகவும் தெரிவித்தார். பின்னர் தற்காலிக குழுவொன்று அமைக்கப்பட்டது. அக் குழுவில் எஸ். ஜே. வி செல்வநாயகம் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அ. மகாதேவ, சு. நடேசப்பிள்ளை ஆகிய இருவரும், பொன்னம்பலத்தின் கருத்தில் இருந்து மாறுபட்ட கருத்துக்களையுடையவர்களாயினும், தமிழ் மிதவாதக் கருத்துக்களை உடையவர்களாயிருந்த இவ் இருவரும் தற்காலிக குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஜி. ஜி. பொன்னம்பலம் இறுதியில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்காலிகக் குழு பின்னர் இலங்கைத் தமிழர் காங்கிரஸ் கட்சியென உருவாக்கம் பெற்றது.
தற்காலிகக் குழு, தமிழர் சார்பில் ஆணைக்குழுவிற்கு தமிழர் தரப்பின் கோரிக்கைகளையும் நியாயங்களையும் எடுத்துக்கூறியது. ஜி. ஜி. பொன்னம்பலம் தற்காலிக குழுவின் முதன்மைப் பேச்சாளராக விளங்கினார். அவர் 50 இற்கு 50 திட்டம் பற்றிப் பாராளுமன்றத்தில் நீண்டநேர உரையாற்றினார். அவரது உரையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இருக்கவில்லை. அவர் பெறுமதிமிக்க திட்டத்தை அவ் உரையில் முன்வைத்திருப்பாரேயானால் அவரது உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொன்றாக அமைந்திருக்கும். ஆயினும் அவரது 50 இற்கு 50 யோசனை அக் காலத்தில் சிறுபான்மை இனத்தவர்களின் பொது இணக்கத்தின்படியான கருத்தாக இருந்தது என்பதைக் குறிப்பிடலாம்.
50 இற்கு 50 யோசனை சிங்களவர் நாட்டின் பெரும்பான்மை என்ற காரணத்தினால் புதிய யாப்பின்படியான சட்டசபையில் அவர்களுக்கு 50 வீத ஆசனங்களை கொடுக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 50 வீத ஆசனங்களையும் சிறுபான்மை இனங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறுவதாக இருந்தது.
சட்டசபையில் எந்தவொரு குறிப்பிட்ட சமூகமும் மேலாதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே இந்த யோசனையின் பொருளாகும். இதற்கு முந்திய டொனமூர் சட்டசபையும் இவ்வாறான கருத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து தமிழர் பிரதிநிதித்துவம் தெரிவுசெய்யப்படலாம். ஏனைய மாகாணங்களில் அங்குமிங்குமாக சிதறிவாழும் தமிழர்களும் தமது குரலை அழுத்தமாக வெளிப்படுத்த முடியுமெனினும் அவர்கள் ஒருபோதும் அப்பிரதேசங்களிற்கு தமிழ்ப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்தல் இயலாது. பல தலைமுறைகளாகக் கட்டி எழுப்பப்பட்ட தமிழர் நலன்களைப் பாதுகாக்கும் வழி இதுவே. 50 இற்கு 50 திட்டத்தின்படி சிறுபான்மை இனத்தவர்கள் யாவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பொன்னம்பலத்தின் 50 இற்கு 50 திட்டம் முன்வைத்த தீர்வு போலியானது. அதனால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் நடைமுறையில் 50 வீதத்தினதாக இருப்பதை உறுதிசெய்திருக்க முடியாது. சிங்கள தலைவர்கள் அதனை ஏற்றிருப்பார்களா? ஆணைக்குழு அதனை ஏற்றிருக்குமா? என்பது ஒருபுறம் இருக்க சுதந்திரத்தின் பிந்திய நிகழ்வுப் போக்குகளில் 50க்கு 50திட்டம் நடைமுறையில் எவ்வித வேறுபாட்டையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. பொன்னம்பலத்தின் சிறப்பான உரை, எடுத்துரைப்பு என்பவற்றிற்கு ஆணைக்குழு பாராட்டுரையை வழங்கியது. ஆனால் அவரின் கோரிக்கையை ஆணைக்குழு முற்றாக நிராகரித்தது. மந்திரிசபை வரைந்தளித்த யாப்பை ஆணைக்குழு முழுமையாக ஏற்றது.
அன்றைய காலத்தின் தலைவர்கள் அரசியல் ஞானமும் தீர்க்கதரிசனமும் அற்றவர்களாக நடந்துகொண்டனர். இதற்காக பிற்காலத் தலைமுறையினர் அவர்கள் மீது குற்றம் சுமத்துவார்களானால் அதில் தவறு இல்லை. அன்றைய தலைவர்கள் குறுகிய குழு நலன்கள் பற்றிச் சிந்தித்து தமிழ் இனத்தின் நலன்களும் எதிர்காலமும் பற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டனர். இதனால் ஏற்பட்ட துன்பத்தை இன்றும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் இன்றைய தமிழர்கள் தான். சிங்களவர்களின் கொடுங்கோலாட்சியாலும் அவர்கள் இழைக்கும் அநீதியான செயல்களாலும் அவதிக்குள்ளானவர்கள் பிற்காலச் சந்ததியினரே.
பிரித்தானியர் இலங்கையை விட்டு நீங்கிச் சென்று 30ஆண்டுகள் கடந்துவிட்ட இக் கால எல்லையுள் தமிழினத்தைப் பூண்டோடு அழிப்பது ஒன்றே ஒரே பணி என்ற பாங்கில் இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது. தமிழர்களுக்கு அவர்கள் பிறந்த தாயக மண்ணில் குடியுரிமை என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே அமைந்துள்ளது. அவர்களுள் ஒரு பிரிவினரின் குடியுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. தமிழர்களின் நிலங்கள் அரசாங்க நிதியுடன் செயற்படுத்தப்படும் குடியேற்றத் திட்டங்களால் பறிக்கப்படுகிறது. அவர்களது மொழிக்கு அங்கீகாரம் இல்லை. அரசாங்கத்திலும் தனியார் துறைகளிலும் உத்தியோகம் பெறுவதானால் அவர்கள் சிங்களத்தைக் கற்கவேண்டும் என்ற நிலை உள்ளது. அரசாங்கப் பதவிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு கொடுக்கபட்டது. புதிதாக நடைபெறும் ஆட்சேர்ப்புகளில் அவர்களுக்கு இடம் இல்லை. பல்கலைக் கழகங்களிற்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அல்லது தவிர்க்கமுடியாத ஆகக்குறைந்த அளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சர்வாதிகார ஆட்சியின் உச்சமாக அமையும் விடயம் தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலைதான்.
ஏறக்குறைய நானூறு ஆண்டுகால அந்நிய ஆட்சியின் பின்னர் தமிழர்களுக்கு தாம் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கு வரலாறு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. அதனை உரியமுறையில் பயன்படுத்த அக்காலத் தலைவர்கள் தவறிவிட்டார்கள். அருகே உள்ள இந்தியாவில் ஒரு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு தனி அரசை அமைத்துக் கொண்டனர். சுதந்திரத்திற்கு பிந்தைய புதிய தலைமுறையினரான இலங்கைத் தமிழர்கள் ஏன் இவ்விதம் சிந்தித்து செயற்படத் தவறினர்? தமிழர் பிரச்சினையை தீர்க்கத் தவறினர் எனத் தெரியவில்லை.
அக்காலத் தலைவர்களுக்கு இந்தச் சிந்தனை தோன்றவில்லை எனக் கூறமுடியாது. சோல்பரி ஆணைக்குழுவின் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டுத் தெரிய வந்தநிலையில் ஜி. ஜி. பொன்னம்பலம் உடனடியாகவே குடியேற்ற நாடுகளின் செயலாளருக்கு தந்திச் செய்தி அறிவித்தார். சோல்பரி ஆணைக்குழுவின் முன்மொழிவு திருத்தம் செய்யப்படாவிட்டால் தமிழர் சமஷ்டித் தீர்வை கோருவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என அவர் அச் செய்தியில் கூறியிருந்தார். அச் செய்தியை அனுப்பியதும் அல்லாமல் அவர் லண்டனுக்கு விரைந்து பயணமானார். அவரது பயணம் எவ்வித பயனையும் தரவில்லை.
அக்காலத் தலைவர்கள் யாவரும் கொழும்பு நகரின் செல்வந்த வகுப்புத் தமிழர்களாக இருந்தனர். அவர்கள் தமது குறுகிய சுயநலன்களைப் பற்றியே சிந்தித்தனர். இருந்தபடியே மாற்றமின்றி யாவும் தொடரவேண்டும் என்ற மனப்பான்மையுடன் அவர்கள் சிந்தித்தனர். இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் ஏற்படக் கூடிய புரட்சிகர மாற்றம் தங்களின் வாழ்க்கையைக் குலைத்து தலைகீழாகப் புரட்டிவிடும் என அச்சம் கொண்டிருந்தனர். நாட்டில் எவ்வகைப்பட்ட பிரிவினைக்கும் அவர்கள் தயாராக இருக்கவில்லை. கொழும்பிலும், பிற சிங்களப் பகுதிகளிலும் அவர்களுக்கு இருந்துவந்த வேறூன்றிய நலன்கள் அவர்களின் அரசியல் சிந்தனையின் மீது செல்வாக்கைச் செலுத்தியது. அவர்கள் தம் நலன்களைப் பற்றியே கவலை கொண்டிருந்தனர். மிக அண்மைக் காலம்வரை, அவர்களின் சொத்து சுகங்கள் யாவும் எரிந்து சாம்பலாகிப் போனதும், இரத்த ஆறு பெருகியோடியதுமான நிகழ்வுகள் நடைபெறும் வரை, அத் தலைவர்கள் தாம் உருவாக்கிய மாயக் கற்பனையோடுதான் வாழ்ந்தார்கள் என்பது ஒரு சாபக்கேடு.
தமிழ்த் தலைவர்களின் இக் குறுகிய சுயநலநோக்கு அவர்களைத் தொடர்ச்சியாகத் தொல்லைப்படுத்தியது: திசைமாறிச் செல்ல வைத்தது. அவர்களின் இப் பலவீனத்தைப் புரிந்துகொண்ட சிங்களத் தலைவர்கள் அவர்களைத் தம் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டனர். புதிய அரசியல் யாப்புப் பற்றிய வெள்ளை அறிக்கை விவாதத்தில் அவர்களது கபடத்தனம் வெளிப்பட்டது. தமிழ்த் தலைவர்களும் அவர்களது சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டனர்.
இந்தியாவில் அரசியல் சுதந்திரம் பற்றிய தீர்மானம், இந்தியாவின் இருபெரும் தேசியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் என்ற இரண்டினாலும் தீர்மானிக்கப்பட்டன. அவை முறையே இந்துக்கள், முஸ்லிம் என்ற இருபெரும் சமூங்களை பிரதிநிதித்துவம் செய்தன. இக் கட்சிகள் தமது மக்களின் தலைவிதியைத் தாமே தீர்மானித்தன. இலங்கையில் வெள்ளை அறிக்கையை ஏற்பதா இல்லையா என்பது குறித்து மக்களின் விருப்பு அறியப்படவில்லை. மக்களின் விருப்பத்தை ஒரு தேர்தலை நடத்தி அறிந்திருக்கலாம். இதற்குப் பதிலாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையிடம் (State Council) அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இது காலம் கடந்த வலுவற்ற சபையாகும். இந்தப் பத்தாண்டு காலத்தில் இலங்கையில் அரசியல் அபிப்பிராயத்தில் பெருமாற்றம் ஏற்பட்டிருந்தது. காலம் கடந்து போன இச்சபையின் உறுப்பினர்கள் மக்களின் அபிப்பிராயத்தையும் விருப்புக்களையும் பிரதிநிதித்துவம் செய்தார்கள் எனக் கொள்ள முடியாது. மந்திரிசபையும் (Board of ministers) வெள்ளை மாளிகையும் பழைய சட்டசபையின் தீர்மானத்தின்படி செயற்படுவதென முடிவு செய்தன.
1946ஆம் ஆண்டு சட்டசபையில் வெள்ளை அறிக்கை பற்றிய விவாதம் நடைபெற்ற போது தமிழ் மிதவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களான அருணாசலம் மகாதேவா, சு. நடேசப்பிள்ளை, ஜெகநாதன் தியாகராஜா என்போரும் வேறு சிலரும் சோல்பரி ஆணைக்குழுவிற்கு தெரிவித்த கருத்துக்களுக்கு மாறாக பேசினர். தமது முன்னைய நிலைப்பாடான சிங்களவருடன் ஒத்துப்போதல் என்ற கொள்கையை மீண்டும் ஏற்றுக்கொண்டனர். காலனிய அரசின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இங்கிலாந்து சென்றிருந்த ஜி. ஜி. பொன்னம்பலம் அப்போது சபையில் நடந்த இவ் விவாதத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.
அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான தமது முன்மொழிவுகளை தமிழ்த் தலைவர்களையும் சிறுபான்மை இனத் தலைவர்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் உபயோகித்து ஆதரவைப் பெற்றுக்கொண்டனர். டி. எஸ். சேனநாயக்க, எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்க, ஏ. எவ் மொலமுரே (இவர் பின்னர் சனப் பிரதிநிதிகள் சபையின் முதலாவது சபாநாயகர் ஆகப் பதவிவகித்தார்.) ஜோர்ஜ். ஈ. டி. சில்வா என்று பலரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினர். ஒவ்வொருவராக எழுந்து, சிங்களத் தலைவர்களோடு ஒத்துழைக்கும்படியும் அரசியல் யாப்பு யோசனைகளை ஆதரிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். கிளிப்பிள்ளை பேசுவது போல அவர்கள் ஒவ்வொருவரும் பின்வரும் கூற்றுக்களைத் தமது உரையில் ஒப்புவித்தனர்.
- ‘தயவுசெய்து எங்களை நம்புங்கள். உங்கள் நம்பிக்கை காப்பாற்றுவோமா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு வழங்குங்கள்.’
- ‘தயவுசெய்து எங்களை நம்புங்கள். நாம் பெருமைமிகு சிங்கள இனத்தின் வாரிசுகள் இல்லையா, உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோமா இல்லையா என்பதை இருந்து பாருங்கள்’
- ‘தயவுசெய்து நாம் இந்த அரசியல் யாப்பு நன்கு செயற்படுகிறதா இல்லையா, எம்மால் இதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து முன்செல்ல முடிகிறதா இல்லையா என்பதை அறிய அனுமதியுங்கள்.’
- ‘இந்த அரசியல் யாப்பைச் செயற்படுத்தி பரிசோதிப்பதற்கு தயைகூர்ந்து வாய்ப்பைத் தாருங்கள். நாங்கள் உங்களின் அச்சம் ஆதாரமற்றது என்பதை நிரூபிப்போம்.’
டி. எஸ். சேனநாயக்க கடந்தகால வரலாற்றை உதாரணம் காட்டிப் பேசினார்: ‘சிங்களவரைத் தமிழ் அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். தமிழர்களை சிங்கள அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் மக்கள் எப்போதுமே ஐக்கியமாகவே வாழ்ந்தனர்.’
தொடரும்.