சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி - பகுதி 2
Arts
15 நிமிட வாசிப்பு

சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னணி – பகுதி 2

November 15, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : வி. நவரத்தினம்

சட்டசபையில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள் அவர்களது சந்தர்ப்பவாத மனப்பாங்கை பறைசாற்றுவன. அவர்கள் யாவரும் சிங்களவர்களை நம்ப வேண்டும். புதிய அரசியல் யாப்பைச் செயற்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கூறினர். சு. நடேசப்பிள்ளை பேசும்போது “நாம் எமது பக்கக் கருத்தை நீதிபதி ஒருவர் முன்னிலையில் எடுத்துரைத்தோம். அவர் அதனை நிராகரித்துவிட்டார். இனி நாம் செய்வதற்கு எதுவும் இல்லை” (பிரித்தானிய காலனிய அரசை அவர் நீதிபதி என்றார்) என்றதுடன் தமிழ்ப் பண்டிதரான அவர் ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற ஔவையாரின் பொன்மொழியையும் எடுத்துக் காட்டினார். ஜெகநாதன் தியாகராஜா, ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார். வேறு எந்த மக்கள் குழுவாக இருந்தாலும் ஆயுதம் தாங்கி கிளர்ந்து எழுந்திருப்பார்கள். ஆனால் நாம் அப்படிச் செயற்படக் கூடாது. ஆதலால் நாம் சிங்களவரோடு ஒத்துழைத்து புதிய அரசியல் யாப்பைச் செயற்பட வைப்போம் என்பதே நான் எனது மக்களுக்கு கூறக்கூடிய ஆலோசனை என்று தியாகராஜா சமாதான வழி பற்றி பேசினார்.

வெள்ளை அறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது நடந்தது யாது என்பதைப் பற்றி சுவாரசியமான கிசுகிசுப் பேச்சு அக்காலத்தில் அரசியல் வட்டாரங்களில் அடிபட்டது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம், டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன், ஹன்டி பேரின்பநாயகம் ஆகியோரும் இன்னும் சில தமிழ்ப் பிரமுகர்களும் சட்டசபையின் தமிழ் உறுப்பினர்களை வெள்ளை அறிக்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி கோரி அவர்களைத் தம் கருத்துக்கு இசைய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு வெள்ளையறிக்கையை எதிர்த்து தாம் வாக்களிப்பதாக நடேசபிள்ளை கூறியிருந்தார். இப்படியிருக்க வாக்கெடுப்புக்கு முன்னர் டி.எஸ். சேனநாயக்க தனது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் வரவேற்பு உபசார நிகழ்வு ஒன்றை நடத்தினார். அப்போது தமது வீட்டு வளவினுள் உள் நுழைந்த கார் ஒன்று வந்துகொண்டிருப்பதை அவதானித்தார். அதில் தலைப்பாகை தரித்திருந்த ஒருவர் இருப்பதை டி.எஸ். கண்டுகொண்டார். ஆயினும் அக்காரில் வரும் நடேசப்பிள்ளை ஏற்கனவே வெள்ளை அறிக்கையை எதிர்த்து வாக்களிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதை டி.எஸ். தெரிந்துவைத்திருந்தார். உள்ளே வந்த காரிலிருந்து இறங்கிய அக்கனவான் தம்மை நோக்கி வந்தவேளை டி.எஸ் “ஆ! இதோ வருகிறார் எமது எதிர்கால அமைச்சர்” என்று மெல்லிய குரலில், ஆனால் வருபவருக்கு கேட்கும் அளவான ஒலியில் கூறினாராம். இதனைக் கேட்டு கிறங்கிய நடேசப்பிள்ளை மறுநாள் வெள்ளை அறிக்கைக்கு சார்பாக வாக்களித்தார். டி.எஸ் திட்டம் நிறைவேறியது. ஜெகநாதன் தியாகராஜா குறிப்பிட்டது போல் வேறு எந்தவொரு சமூகமாக இருந்தாலும் வன்முறை எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியிருக்கும். ஆனால் தமிழ் மக்கள் தமது கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமை காத்தார்கள். அவர்கள் ஜனநாயக வழியில் செயற்படும் பாரம்பரியத்தை உடையவர்களாக இருந்தபடியால் வன்முறையில் இறங்கவில்லை. புதிய அரசியல் யாப்பின்படி முதலாவது பொதுத்தேர்தல் 1947 இல் நடைபெற்றபோது சட்டசபையின் உறுப்பினர்களாக இருந்து வெள்ளையறிக்கைக்கு சார்பாக வாக்களித்த அத்தனைபேரும் தோற்கடிக்கப்பட்டனர். நடேசப்பிள்ளையை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தோற்கடித்தார். அ. மகாதேவ, ஜி.ஜி. பொன்னம்பலத்தால் தோற்கடிக்கப்பட்டார். ஜெகநாதன் தியாகராஜா அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.

இலங்கை சிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையினரான சிங்கள இனத்தவரை நம்பி ஏமாறுவது அவர்களுடைய பிறவிக் குணமான பலவீனம் தானா என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனை உயர்ந்த பண்பு எனக் கருதினார்களா ? அல்லது தவிர்க்க முடியாத கட்டாயமாக ஏற்றார்களா ? என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் தொடர்ச்சியாக இவ்வாறு நம்பி மோசம் போனவர்களாகவே இருந்துள்ளனர். பாராளுமன்ற ஜனநாயகம் திருப்திகரமாக செயற்படும் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை சமூகங்கள் சிறுபான்மையினரிற்கு கொடுத்த வாக்குறுதிகளையும் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளையும் காப்பாற்றி வந்துள்ளன. நம்பி நடந்தவர்களை ஏமாற்றுவது இல்லை. ஒரு சமூகம் நாகரிக சமூகமாக பொருளாதாரத்திலும் அரசியலிலும் முன்னேறுவதற்கும் உலக அரங்கில் நாகரிக சமூகங்களின் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் இது அவசியமானது. ஜேர்மனியின் நாஜிகளின் அரசுதான் ஆணவத்துடன் சகிப்புத் தன்மையின்றியும் நடந்துகொண்டது. இதன் விளைவாக ஜேர்மனி இரண்டாம் மகாயுத்த முடிவில் பெரும்அவலத்தைச் சந்தித்தது; அந்நாடு துண்டாடப்பட்டது.

சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மிக விரைவாகச் செயற்படுத்தப்பட்டன. பக்கிங்காம் மாளிகை ‘Orders In Council’ என்ற வகையான இரண்டு சட்டங்களை வெளியிட்டது.

அ.) இலங்கை அரசியல் யாப்புச் சட்டம் (Ceylon Constitution Order In Council)

ஆ.) இலங்கை பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் (The Ceylon Parliamentary Elections Order In Council)

இச் சட்டங்களுக்கு அமைய இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய நாடாக ஆகியது. பிரித்தானிய முடியின்கீழ் அமையும் நாடு என்பது ‘டொமினியன்’ என்பதன் பொருள். 1947 இல் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் இலங்கையில் நடத்தப்பட்டது.

புதிய அரசியல் யாப்புத் திட்டம் பிரித்தானிய மாதிரியான கட்சிமுறையின் வளர்ச்சியை எதிர்பார்த்தது. டி.எஸ் தலைமையிலான குழுவினர் அவ்வாறான ஒரு கட்சியை உருவாக்குவதற்கு முயற்சித்தனர். அக் கட்சி சிங்களத் தேசியவாதக் கட்சியாக அமைந்தது. ஆனால் அது இலங்கைத் தேசியவாதம் (Ceylon Nationalism) என்ற போர்வையை போர்த்திக் கொண்டது. டி.எஸ். சேனநாயக்க அவரது மகன் டட்லி சேனநாயக்க, டி.எஸ்ஸின் மருமகன் யோன் கொத்தலாவல, A.F. மொலமுரே, ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆகியோர் இணைந்திருந்த இலங்கைத் தேசிய காங்கிரசும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவைத் தலைவராகக் கொண்டிருந்த சிங்கள மகாசபையும் ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P) என்ற புதிய கட்சியில் சேர்ந்து கொண்டனர். தமிழர் தரப்பில் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தலைமையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி உருவானது. சோல்பரி ஆணைக்குழுவிற்கு தமிழ் மக்கள் சார்பில் அரசியல்யாப்பு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக குழுவே இவ்வாறாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ற பெயருடன் அரசியல் கட்சியாக உருமாற்றம் பெற்றது. ஜி.ஜி. பொன்னம்பலம் அதன் தலைவரானார். மலையகத் தமிழர்கள் ஏலவே இலங்கை இந்திய காங்கிரஸ் (Ceylon Indian Congress) என்ற பெயரில் கட்சியாக ஒழுங்கமைப்பு ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

ds SIGNED

1947 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது இக் கட்சிகள் யாவும் தத்தம் கட்சிச் சின்னங்களின் பேரில் வேட்பாளர்களை நிறுத்தின. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை வென்றது. அதன் தலைவர் டி.எஸ். சேனநாயக்க இலங்கை டொமினியனின் முதலாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். அவ்வேளை இலங்கை முழுமையான சுதந்திரத்தை அடையாத டொமினியனாகவே இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. பிரித்தானிய அரசாங்கத்துடன் டி.எஸ். சேனநாயக்க அரசியல் யாப்புச் சீர்திருத்தம் பற்றிய பேரம்பேசலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அவர் இலங்கைக்குப் பூரண சுதந்திரம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இவ் விடயத்தில் அவர் அழுத்தம் கொடுத்தபோதும் பொதுத்தேர்தல் இலங்கையில் நடத்தப்பட்ட பின்பே இதைப் பற்றிச் சிந்திக்க முடியும் என பிரித்தானியா அவருக்குக் கூறியது. இலங்கையின் சுதந்திரம் பற்றிய சட்டத்தை வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இயற்றும் என்றும் அவருக்குக் கூறப்பட்டது. இலங்கையில் தேர்தல் முடிவுற்ற பின்னர் இலங்கையின் முக்கியமான சமூகங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒருமித்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என அவருக்கு கூறப்பட்டது. இலங்கையின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரை உள்ளடக்கிய அனைத்து முக்கியமான சமூகங்களினதும் ஒன்றுபட்ட கோரிக்கை கிடைத்தால் மட்டுமே இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை வழங்குதல் பற்றி ஆலோசிக்க முடியும் எனவும் கூறப்பட்டது.

DS SOLBARI

தமிழ்த் தலைவர்களுக்கு வரலாறு மீண்டும் ஓர் அரிய சந்தர்ப்பத்தை 1947 இல் வழங்கியது. தமிழ் இனத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் பற்றுடையவர்களாக இத் தலைவர்கள் இருந்திருப்பார்களேயானால் இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறாது பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் தமிழர்களுக்கு பணியாற்றவென முன்வந்த இந்தத் தலைவர்கள் அந்தத் தருணத்தில் கூட தவறிழைத்தனர். இதற்கு அவர்கள் சிங்களத் தலைமைகள் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணமாகும். இது ஒரு மனநோயின் தன்மையுடைய நம்பிக்கை (Psychotic Addiction To Trust) என்றே கூறலாம்.

சேர். ஒலிவர் குணதிலக டி.எஸ். சேனநாயக்கவின் விசுவாசத்திற்குரிய ஆலோசகராக அக்காலத்தில் விளங்கினார். சேர். ஒலிவர் குணதிலக ஒரு கூர்மதி மிக்கவரும் தந்திரசாலியுமான இராஜதந்திரியுமாவர். அவரின் ஆலோசனையின்படி டி.எஸ். சேனநாயக்க மந்திரிசபையை அமைக்கும் வேலையைத் தொடங்கினார் எனக் கருதலாம். பிரித்தானியா சுதந்திரத்தை வழங்குவதற்கு என்ன நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டதோ அவற்றை நிறைவேற்றிக்காட்ட வேண்டும் என்ற முயற்சியில் டி.எஸ் ஈடுபட்டார். தாம் அமைக்கவுள்ள மந்திரிசபையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், மலேயர், ஐரோப்பியர், பறங்கியர் ஆகிய அனைத்து முக்கியமான சமூகங்களினதும் தலைவர்களை அமைச்சர்களாக நியமிக்க டி.எஸ் திட்டமிட்டார். வவுனியா தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் செ. சுந்தரலிங்கம் அவர்களைத் தமிழர் பிரதிநிதியாக அவர் தெரிந்துகொண்டார்.

சுந்தரலிங்கம் அரசில் சேர்ந்து கொள்வதற்கு வலுவான எதிர்ப்பு இருந்தது. டி.எஸ். சேனநாயக்க வழங்க முன்வந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ஏற்பதற்கு முடிவு செய்தேன் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக கொழும்பு நகர மண்டபத்தில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தார். அக் கூட்டமும் கூச்சலும் குழப்பமும் மிகுந்த ஒரு கூட்டமாக முடிந்தது. எதிர்க்கட்சிகளின் தலைவர்களான ஜி.ஜி பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்) எஸ்.ஜே.வி செல்வநாயகம் (காங்கேசன்துறை) கு. வன்னியசிங்கம் (கோப்பாய்) டாக்டர் இ.எம்.வி. நாகநாதன் (செனேட்டர்) வ. குமாரசுவாமி (சாவகச்சேரி) ஆகிய புதிய பாராளுமன்ற உறுப்பினர்களானவர்களாக தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கும் சுந்தரலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே அப்போது மோதல் ஏற்பட்டது. சுந்தரலிங்கத்தை மந்திரி பதவியில் இருந்து விலகும்படி எதிர்ப்பாளர்கள் கோரினர். சுந்தரலிங்கம் உறுதியாக மறுத்துவிட்டார். கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.

டி.எஸ். சேனநாயக்க பிரதமரானதும் செய்த முதல்வேலை இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை வழங்கும்படி பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்ததுதான். சேனநாயக்கவின் இந்த முன்மொழிவை மந்திரிசபை ஏகமனதாக அங்கீகரித்தது. சுந்தரலிங்கம் தனது சம்மதத்தை வழங்கித் தமிழர்கள் இதற்கு உடன்படுகிறார்கள் என்பதை உறுதிசெய்தார். 1947 டிசம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றம் இலங்கைச் சுதந்திரச் சட்டம் (Ceylon Independence Act) என்ற சட்டத்தை இயற்றியது. இச் சட்டத்தின்படி இலங்கைப் பாராளுமன்றத்தை இறைமையுடையதாக்கியதோடு, இலங்கைக்கான சட்டங்களை ஆக்கும் உரிமையை நிரந்தரமாகக் கைவிடுவதையும் உறுதிசெய்தது. இலங்கை ஒரு சுதந்திர தேசம் (Independent Nation) என்பதைச் சட்டம் பிரகடனம் செய்தது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ரொறிங்டன் சதுக்கத்தில் (சுதந்திர சதுக்கம் என்பது இதன் இன்றைய பெயர்) நடைபெற்ற கோலாகலமான விழாவில் கிளங்கெஸ்டர் பிரபு (Duke Of Gloucester) ஐக்கிய இராச்சியத்தின் யூனியன் கொடியை கொடிக் கம்பத்தில் இருந்து கீழிறக்கினார். சிங்களவர்களின் சிங்கக் கொடியை கம்பத்தில் ஏற்றினார். ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டதன் அடையாள நிகழ்வாக இக் கொடியேற்றம் அமைந்தது.

சுந்தரலிங்கம் வழங்கிய சம்மதம் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் சோக நிகழ்வாக அமைந்தது. தமிழ் மக்களிடம் மீதமிருந்த ஒரே ஒரு துருப்புச் சீட்டையும் உரிய தருணத்தில் பயன்படுத்தாது தன் சுயலாபத்திற்காகப் பேரம்செய்து சோரம் போனார். அந்தச் செயல்தான் தமிழர்களின் ஆட்சியாளர்களாக பிரித்தானியா இருந்த நிலையை மாற்றி தமிழர்களின் ஆட்சியாளர்களாக சிங்களவரை மாற்றியது. தனது கூட்டாளிகளின் புத்தி சாதுரியத்தையிட்டு சேர். பொன்னம்பலம் இராமநாதனின் ஆன்மா கண்ணீர் விட்டிருக்கும்.

அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட சுந்தரலிங்கத்தால் அந்தப் பதவியில் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. அவர் பிரதம மந்திரியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக மந்திரிசபையிலிருந்து வெளியேறினார். மலைநாட்டுப் பெருந்தோட்ட துறையில் தமிழர் தொடர்பான ஒரு பிரச்சினையே கருத்துவேறுபாட்டிற்கு காரணமாகவிருந்தது. அரசாங்க தரப்பு வேறு ஏதோ சில காரணங்களுக்காக பதவி விலகுமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது. என்ன காரணங்களுக்காக விலகினாரோ தெரியவில்லை; ஆனால் அவர் அரசாங்கத்திற்குள் இருந்து வெளியேறும் காலத்திற்குள் தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடிய பெருந்தீங்கு முடிக்கப்பட்டுவிட்டது.

சில ஆண்டுகள் கடந்தபின் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது சுந்தரலிங்கம் கழிவிரக்கத்தால் வருந்தினார். தான் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி கவலைப்பட்டார். தனது சம்மதத்தைக் கொடுக்க மறுத்திருந்தால் பிரித்தானியா ஒருபோதும் சுதந்திரத்தை வழங்கியிருக்காது. தமிழர்கள் இந்த அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள் என்று தமிழர்களுக்கு நேர்ந்த விதி பற்றி அவர் குறிப்பிட்டார். இவ் விடயங்களைப் பகிரங்கப்படுத்தி எழுதும் அறிக்கையைத் தான் கண்ணீர் வடித்தபடி எழுதுவதாகவும் குறிப்பிட்டார். தனது நம்பிக்கைக்குரிய நண்பனான டி.எஸ். சேனநாயக்கவிற்குத் தாம் பல உரைகளை எழுதிக் கொடுத்ததாகவும், அரச அறிக்கைகள் பலவற்றை வரைந்து கொடுத்தாகவும் அவர் இத்தகைய நம்பிக்கைத் துரோகத்தைச் செய்வாரென எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.  டி.எஸ் சேனநாயக்க உயிரோடு இருந்தால் அரசியல் யாப்பை இவ்விதம் துஷ்பிரயோகம் செய்வது நடந்திருக்காது என நம்பியதாகவும் குறிப்பிட்டார்.

நுண்மாண் நுழைபுலமும், கல்வியும் அனுபவமும் படைத்தவர்களுமான பல தலைவர்கள் தமது மக்கள் பற்றியும் தமது தாய்மண் பற்றியும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய கடப்பாடு தம்மீது சுமத்தப்பட்ட வேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களான தம் நண்பர்கள் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் உரிய முடிவுகளை எடுக்கத் தவறி தம் நண்பர்களிற்கும் துரோகமிழைத்த சம்பவங்கள் நம்பமுடியாக விந்தையிலும் விந்தை எனலாம்.

அவர்கள் தம் நண்பர்களின் தனிப்பட்ட குணவியல்புகள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்ததால், எதிர்காலத்தில் ஏதாவது தவறோ, பிழைகளோ நடந்துவிடாமல் அவர்கள் தடுத்துவிடுவார்கள் என்றும் வேறு எந்தப் பாதுகாப்பும் நண்பர்களைத் தவிர்ந்த பதிலீடு ஆகாது என்றும் எண்ணினார்கள். அல்லது இந்த நண்பர்கள் இறவாது என்றும் உயிரோடு வாழ்ந்து காத்தருள்வார்கள் என்று நம்பினார்கள் போலும்! பொதுவாழ்வில் ஈடுபடும் தலைவர்களை இயக்கிய தூண்டுவிசை இதுவாக இருக்க வேண்டும். சுந்தரலிங்கம் நடந்தவற்றை நினைத்து வருந்தியமை அவரது உள்ளக்கிடக்கையின் நேர்மறையான வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறியாகியிருக்கும் சூழ்நிலையில் இப் புலம்பல்களால் அவை வாய்மையுடையனவாயினும் அவற்றால் என்ன பயன்?

குறிப்பு : மேற்குறித்த கூற்றுக்களை ஹன்சார்ட் அறிக்கைகளிலிருந்து மேற்கோள்காட்டி 1969 இல் தமிழர் சுயாட்சிக்கழகத் தொடக்கவிழாவில் எனது (வி. நவரத்தினம்) தலைமையுரையாக நிகழ்த்தினேன்.


ஒலிவடிவில் கேட்க

18278 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)