இலங்கையின் அரசியல் உயரடுக்குகள் நலன் சார் அரசு, சகல இலங்கையரின் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகைளையும் உள்ளடக்கும் செயன்முறையில் ஆர்வம் கொள்வதில்லை; மாறாக, பொருளாதார வாய்ப்புகளை மட்டும் உறிஞ்சி தங்கள் நலன் சார் விடயங்களில் மட்டும் உச்ச ஆர்வம் கொள்பவையாக உள்ளன. இந்தப் போக்கின் நேரடி விளைவு சமூக, பொருளாதாரப் பின்னடைவாகவும் வங்குரோத்து நிலையாகவும் அமையும். புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதார வாய்ப்புகளின் ஊற்றுகளாக மட்டுமே கருதப்படுகின்றனர். அவர்களின் அரசியல் உரிமைகள் பற்றிய கவனம் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படும் நிலையே தொடர்கிறது. ஆகவே, புலம்பெயர் சமூகம் பொருளாதாரப் பிராணிகளாக நிலைக்கும் தன்மை நீடிக்கிறது. இந்நிலையில் உடனடி மாற்றம் தேவை.
1984 களில் ஈழ ஆய்வு நிறுவனம் வெளியிட்ட மோகன்ராஜ் (பி.ஏ. காதர்) அவர்கள் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம் என்கிற நூல் மலையக மக்கள் குறித்த முக்கிய ஆய்வு நூலாகும். சுதந்திர இலங்கையின் முக்கிய சட்டமாக வந்த இலங்கை குடியுரிமைச் சட்டம் (1948) மலையக மக்களின் வாழ்வையும் அவர்களின் வாக்குரிமையையும் பறிக்க வழிவிட்டது. ‘பிடுங்கி எறியப்பட பூசணிக் கொடிகள் போல்’ மலையக மக்களின் வாழ்க்கை மாறியது. வாக்குரிமையின்மை அவர்களின் வாழ்க்கையானது. மலையக மக்களின் வாக்குரிமை நீக்கம் இலங்கையின் பாரிய சமூக, பொருளாதார நெருக்கடியாக அமைந்தது.
வாக்களிக்கும் சமூகம் அல்லது மக்கள் தொகை ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கிறது; அது தான் ஜனநாயகம். சமூகங்களின் தலைவர்கள் வாக்காளர்களின் நலன்களை கவனமாகக் கேட்கவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் அதிக உந்துதல் பெறுகிறார்கள்; பங்கேற்கிறார்கள். வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை யார் இயக்குகிறார்கள் என்பதில் ஒரு கருத்து இருப்பது இன்றியமையாத மனித உரிமை. வாக்களிக்கும் முறை நடைமுறையில் இல்லாதபோது, மக்கள் அரசியலில் பங்கேற்க முடியாது. வாக்களிக்கும் வாய்ப்பே சிறுபான்மையினருக்கு மீண்டும் அதிகாரத்தை அளிக்கிறது. வரவு – செலவுத் திட்டங்களுக்கான அணுகலுக்கும் அதிகாரத்திற்கும் வாக்குரிமை தான் ஆரம்பப்புள்ளி. பணம் எங்கு செல்கிறது, என்ன வரவு – செலவுத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன, நம்மைப் பாதிக்கும் சாத்தியமான வரிகள், யார் என்ன வரி செலுத்துகிறார்கள் என்பதைக் கூட்டாகத் தீர்மானிப்பதற்கு வாக்களிப்பது தான் ஆதியாக விளங்குகிறது.
1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் நாட்டிலிருந்து தொழில் காரணமாக விலகி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களின் வாக்குகள் எண்ணப்படுவதில்லை. அரசியல் முடிவெடுக்கும் செயற்பாட்டில் அவர்களின் விருப்பத்தைத் தீர்மானிப்பதில் அவர்களின் உரிமைகளைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் நிலை இன்றும் தொடர்கிறது. வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகள், உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள் வளர்ந்த நாடுகளில் வேலைவாய்ப்பைத் தேடி, சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் இடம்பெயர்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர், அவர்களது தாய்நாட்டில் முடிவெடுக்கும் செயற்பாட்டில் தங்கள் பங்கை வகிக்க ஆர்வமாக உள்ளனர். உதாரணமாக, பல சிங்களவர்கள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணிபுரிவதைக் காணலாம். பல இலங்கைத் தமிழர்கள் கனடாவில் வேலை செய்து வசிப்பவர்களாக உள்ளனர். இந்தப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தற்காலிக வதிவிட உரிமை பெற்றுள்ளனர்; அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள். 2008 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இடப்பெயர்வுக் கொள்கையானது, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும், பொருத்தமான சர்வதேச உடன்படிக்கைகளுடன் இணங்குவதற்கும் முன்மொழிகிறது. இருப்பினும், தேசிய இடப்பெயர்வுக் கொள்கை வெறும் உடன்படிக்கை அளவில் மட்டும் உள்ளது; நடைமுறையில் இன்னும் இல்லை.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் நேரடியாகத் தேர்தலில் பங்குபற்றுவதற்கு வாய்ப்புத் தரும் போது இலங்கையின் ஜனநாயகம், அழகையும் ஆழத்தையும் உள்ளடக்கத்தையும் பெரிதும் பெற முடியும். குறிப்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில், கணிசமான அளவு புலம்பெயர்ந்தோர் கண்டங்கள் முழுவதும் பரவியுள்ளனர். வெளிநாட்டு வாக்களிப்பை வழங்குவது, தாயகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முறையான குரல் கொடுக்க இவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
புலம்பெயர் இலங்கையர்களை வாக்களிக்க அனுமதிப்பது அவர்களின் உரிமை. இது இலங்கையர்களுக்கும் அவர்களின் தேசத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமன்றி கொள்கை வகுப்பதில் பன்முகத்தன்மையையும் விரிவுபடுத்தும்; பல்வேறு அரசியல் அமைப்புகளின் அனுபவங்கள், உலகளாவிய சவால்களுக்கு சக நாடுகள் முகம்கொடுக்கும் அணுகுமுறைகள் குறித்த சிந்தனைகளை வெளிநாடு வாழ் இலங்கையர்கள் இலங்கைக்குக் கொண்டுவர வழிசெய்யும். இது பொருளாதாரச் சீர்திருத்தம், கல்வி மற்றும் நிலையான அபிவிருத்தி போன்ற விடயங்களில் பெறுமதியான நுண்ணறிவுகளைக் கொண்டு வருவதுடன், இலங்கையின் ஜனநாயகப் பேச்சுகளை வளப்படுத்தவும் உதவும். எல்லைகளைத் தாண்டிய ஒரு அமைப்பை வளர்ப்பதன் மூலம், ஜனநாயகத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்துக் குடிமக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் ஒரு உள்ளடக்கிய அரசியல் நிலப்பரப்பை இதனால் உருவாக்கவும் முடியும். இதன் மூலம் தேசிய ஒற்றுமையை வளர்க்கலாம்; ஜனநாயக செயல்முறைகளுக்கு பரந்த ஆதரவைப் பெறலாம்; நாட்டின் சமூக, பொருளாதார உறுதியைப் பேணலாம்; உலகளாவிய ரீதியில் இலங்கையின் புதிய பிம்பத்தை வலுப்படுத்தலாம். இலங்கைக்கான வெளிநாட்டு வருகையாளர் வாக்களிப்பு (OAV) முறையை படிப்படியாக நடைமுறைப்படுத்த, கவனமாகத் திட்டமிட, முன்னோடித் திட்டங்களுடன் கூடிய அணுகுமுறையானது இன்று தேவைப்படுகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் பிறந்த நாடுகளின் பொது விவகாரங்களில் பங்கேற்கவும், அந்த நாடுகளின் தேர்தல்களில் வாக்களிக்கவும், அதன் சட்டத்தின்படி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை உண்டு. சம்பந்தப்பட்ட நாடுகள் அவற்றின் சட்டத்தின்படி, இந்த உரிமைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்க உறுதி கொள்வதோடு, இலங்கையும் அதனை உறுதிசெய்வதாக கையொப்பம் இட்டுள்ளது (அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு, UN ஆவணம் A/RES/45/158, 18 டிசம்பர் 1990, Article 41).
புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுள்ள வாக்களிக்கும் உரிமை சட்ட வலுவானது. ஆனால் இதனை நடைமுறையில் கொண்டு வருவதில் பல தடைகள் உண்டு எனக் கருதப்படுகிறது. வெளிப்புற வாக்களிப்பை செயற்படுத்துவது தொடர்பாக முன்வைக்கும் காரணங்கள் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சிக்கல்களை உள்ளடக்கியது. உண்மையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பண வருகைக்குத் தரும் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் ஒப்பிடும் போது, வாக்களிக்கும் உரிமையைப் கொடுப்பதை மிகச் சிறப்பாக செய்யமுடியும் என்பதே உண்மை. ஆனால், அதில் அக்கறை காட்டப்படுவதில்லை.
வெளிப்புற வாக்களிப்பு யோசனை தற்போது மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் தேர்தல் நிர்வாகத்தில் சிக்கல்கள் இல்லாத புதிய ஜனநாயக நாடுகளில்கூட, வெளிப்புற வாக்களிப்பு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்படும் பாதையில் உள்ளது. மெக்சிகோவில் ஒரு குறிப்பிடத்தக்க வழக்கு சுதந்திரமான தேர்தல்கள் தொடர்பாக புலம்பெயர்ந்தவர்கள் மீதான கரிசனையை உறுதிப்படுத்தியுள்ளது (Turning rights into ballots: Mexican external voting from the US; Victoria Finn ABSTRACT and Andrés Besserer Rayas, May 2022).
அரசியல் உயரடுக்குகள், பொதுவாக வெளிப்புற வாக்கெடுப்புக்கு ஆதரவாக அல்லது எதிராக நெறிமுறை வாதங்களை எதிர் கொள்ளத் தயாரில்லை; அல்லது அது பற்றி அறிந்திருக்கவில்லை. வாக்களிக்கும் உரிமையை திட்டமிட்டுத் தவிர்க்கும் போக்கு நீடிப்பதால் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இதன் விளைவாக, வெளிப்புற வாக்களிப்பு மற்றும் அதன் நிறுவனமயமாக்கலுக்கான தேவைகளில் நிபுணத்துவத்திற்கான பெரும் தேவை உள்ளது. இலங்கையில், சிறப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்சார் ஆய்வுகள் மிக மிக அரிது.
இலங்கையில் வெளிப்புற வாக்களிப்பு விஷயத்தில் சிறிய ஒப்பீட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்ச் சமூக அறிவியல் துறையில் கிட்டத்தட்ட இது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை எனலாம். புலம்பெயர்வு என்பது எமது வாழ்வுடன் இணைந்த பகுதி. தமிழர்களின் சனத்தொகையில் அரைவாசியளவு இலங்கைக்கு வெளியில் உள்ளது. எமது பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு தனிப்பெரும் துறையாக வரவேண்டிய விடயம், புலம்பெயர்வு தொடர்பானது. இலக்கியங்கள் தான் தங்கள் மன நினைவுகளை வடித்துள்ளன; சிறப்பான இலக்கியப் பதிவுகளை நல்கியுள்ளன. ஆனால், சமூக அறிவியல் ஆய்வுத்துறை புலம்பெயர்வு தொடர்பாக கரிசனை கொள்ளவில்லை.
புலம்பெயர்வு தொடர்பாக சட்ட விதிகள் பற்றிய முறையான தகவல் பொதுவாக இல்லாதது ஒரு பெரும் குறையாகக் காணப்படுகிறது. மேலும், வெளிப்புற வாக்களிப்புடன் தொடர்புடைய சில நிறுவன ஏற்பாடுகளின் செயற்பாட்டை மதிப்பீடு செய்யக்கூடிய அளவுகோல்கள் பற்றிய கரிசனை இன்மையும் தொடர்ந்து நீடிக்கிறது. எதிர்காலத் தேர்தல்களுக்கு, வெளிப்புற வாக்கெடுப்பைத் திட்டமிட்டுச் செயற்படுத்துவதற்கான அறிவுபூர்வமான தெளிவு அவசியம். இலங்கையின் தமிழர் பகுதிகளில் இவ் அறிவுசார் சமூக ஆய்வுகளுக்கான உறுதுணை கிட்டத்தட்ட இல்லை எனலாம்.
இலங்கையின் கள நிலையில் வெளிப்புற வாக்களிப்பின் சரியான அர்த்தத்தை தர தரமான ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். வெளிப்புற வாக்களிப்பின் சட்டக் கட்டமைப்பின் முறையான கண்ணோட்டத்தை வரையறை செய்ய வேண்டும். இந்தப் பரிமாணங்கள் தொடர்பாக அடிப்படை நிறுவன மாற்றுகளை தர முனைய வேண்டும். அரசியல் விவாதங்களில் இதை கருத்தில் கொள்ளச் செய்ய வேண்டும். வெளிப்புற வாக்களிப்புப் பிரச்சினையை முறையான ஒப்பீட்டு முறையில் அறிமுகப்படுத்தி ஒரு சமூக அக்கறையை கவனம் கொள்ளச் செய்வதே இங்கு முக்கியம். இதனை மூன்று படிகளில் நாம் அணுக வேண்டும்.
அ) வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவப் பிரச்சினை.
(ஆ) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை ஒழுங்கமைப்பதில் உள்ள சிக்கல்கள்; வெளிப்புற வாக்களிப்பு நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை; கட்சிப் போட்டியின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை.
(இ) வெளிநாடுகளில் காணப்படும் சட்ட, நீதித்துறை பற்றிய தொகுத்த அறிவு.
ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட சூழலையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மட்டுமே வெளிப்புற வாக்களிப்பு நியாயமான முறையில் அறிமுகப்படுத்தலாம். சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்து வெளி வாக்களிப்பில் அறிமுகம் அல்லது சீர்திருத்தங்களைச் செய்யும்போது சிறந்த வெளிப்புற வாக்களிப்பு முன்னெடுக்கப்படும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இலங்கை நாட்டின் தேர்தல் செயற்பாட்டில் வெளிநாட்டு இலங்கையர்களிடமிருந்து (Overseas Sri Lankans) அதிக ஈடுபாடு கிடைத்திருப்பது குறிப்பாக கவனிக்கத்தக்கது. ஆனால், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய துயரமான விடயம், பல வெளிநாட்டு இலங்கையர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பது. வெளிநாட்டு இலங்கையரின் பொருளாதாரப் பங்களிப்பைப் பெறுவதில் இருக்கும் அக்கறை வாக்குரிமை வழங்கக்கூடிய வழிமுறைகளை மற்றும் பொறிமுறைகளை உருவாக்குவதில் இல்லை எனலாம். வாக்குரிமை இன்மை என்பது ஒரு அரசியல், சமூக, பொருளாதார ஒதுக்கம் ஆகும். தொடரும் ஒதுக்க நிலை என்பது இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடியின் ஒரு முகம் எனவும் கூறலாம்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தென் கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் மிகத் தீவிரமாக உரையாடலில் ஈடுபட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போக்கை தொடர்ந்து, இலங்கையர்கள் பலர் வாக்களிக்க நாடு திரும்பியதற்கான சான்றுகள் உள்ளன. இந்த உற்சாகம் காணப்படும் நிலையிலும், புலம்பெயர்ந்தோருக்கு வெளிநாட்டில் இருந்து வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்த நீண்டகால விவாதம் தீர்க்கப்படாமலே உள்ளது. தொடரும் இழுத்தடிப்பு என்பது ஒரு வகை திட்டமிட்ட சமூக ஒதுக்கம் எனலாம். SLBFE (Sri Lanka Bureau of Foreign Employment) தரும் தகவலின் படி, வெளிநாட்டில் உள்ள 1.5 மில்லியன் இலங்கைத் தொழிலாளர்களால் சமீபத்திய தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை.
வெளிநாட்டு இலங்கையருக்கு இன்னும் வாக்களிக்கும் உரிமை இல்லை என்றாலும், இலங்கைக்கு தொடர்ந்து வருமானத்தை தருவதில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. 2022 காலத்தின் பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கை அரசாங்கம் அதிக வட்டி விகிதங்களை வழங்குவதன் மூலம் புலம் பெயர்ந்தவர்களின் பண வருகையை அதிகரிக்க முயற்சி எடுத்தது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. புலம் பெயர்ந்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு குறைந்தபோது நாடு வங்குரோத்து நிலையைத் தழுவிக்கொண்டது. ஏனெனில் வழங்கப்படும் முறையான அந்நியச் செலாவணி விகிதம் முறைசாரா விகிதத்தை விட மிகக் குறைவாக இருந்தது. இதன் விளைவாக, 2022 இல், இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் 42% ஆகக் குறைந்தது. நிலையான 10 ஆண்டுச் சராசரியான USD 6.4 பில்லியன் வருகை (2010 முதல் 2020 வரை), USD 3.7 பில்லியனாகக் குறைந்தமை, 2022 இன் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தாமையைத் தூண்டிய சவப்பெட்டியின் இறுதி ஆணியாக அமைந்தது. இலங்கையின் பொருளாதாரத்தில் வெளிநாட்டு இலங்கையரின் பங்களிப்பு இதன் மூலம் நன்கு புலப்படும்.
வெளிநாட்டு இலங்கையரின் செல்வாக்கும் வாக்குரிமைக்கான இடைநிலைத் தொடர்பும்
புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பெருமளவான பணம் அரசியல் பங்கேற்பு இணைப்பைத் தருகிறது. இது குறித்து ஆராய்ந்த ஆய்வுகள் மூன்று வழிமுறைகளை அடையாளம் காட்டுகின்றன: 1) வருமான வழி – அதிக வளங்களைக் கொண்டவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு அதிக வளங்களை (பொருள் மற்றும் நேரத்தின் அடிப்படையில்) ஒதுக்கும் நிலை, 2) சுதந்திர வழிமுறை உருவாக்கம்/சேனல் – பணம் அனுப்புவது பொருள் செழிப்புக்காக. அரசாங்கத்தின் மீது பெறுநர்களின் சார்பைக் குறைக்கும் தன்மை, 3) காப்புறுதி/ இன்சூரன்ஸ் சேனல் – அனுப்பும் பணம் பெறுநர்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு உணர்வுகளைத் தருகிறது. இது பொருள் அல்லாத கவலைகளுக்கு (Non Material Concerns) அதிக கவனம் தருகிறது.
இலங்கையின் பொருளாதார முகாமைத்துவ முறைமை தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எவ்வாறு நாட்டை நிர்வகிக்கிறது என்பது மிக முக்கியமானது. அதாவது, அரசாங்கம் எவ்வாறு புலம்பெயர்ந்தோர் பங்களிப்புச் செய்யும் அந்நியச் செலாவணியை நாட்டின் நலன் கருதிச் செலவளிக்கிறது என்பது முக்கியம். அவர்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் என்ன, பணவீக்கம் அவர்களின் பணம் அனுப்பும் – வாங்கும் சக்திக்கு எவ்வாறு ஊட்டமளிக்கிறது, அந்நியச் செலாவணி விகிதம் அவர்கள் அனுப்பும் பணத்தின் செலவழிப்பு வருமானத்தை எவ்வாறு பாதிக்கிறது, அவர்கள் அனுப்பும் பணத்தின் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது, விட்டுச் சென்ற அவர்களது குடும்பங்களுக்கு என்ன பொதுச் சேவைகள் உள்ளன? என்பன அவற்றுள் பெயரிட்டுக் கூறக்கூடிய சில. இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் பல நன்மைகளை விளைவிக்கும். புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமைகள் இருப்பது, பணம் அனுப்புதல் மற்றும் நிதி நலன்களைப் பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க ஒரு வாய்ப்பைத் தரும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது (சரத்து 41). அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையையும் இலங்கை அங்கீகரித்துள்ளது. முந்தைய அரசாங்கங்கள் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், வாக்குரிமையை வழங்க ஆர்வமாக இருந்திருந்தாலும் நடைமுறையில் பலனிருக்கவில்லை. முக்கியமாக 2021 ஆம் ஆண்டில், புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்கும் உரிமையைப் பரிந்துரைக்கும் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவும், 2023 இல் ஒரு சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவும் வாக்களிக்கும் உரிமைக்கான பொறிமுறை பற்றிய பரிந்துரைகளை முன்மொழிந்தன. 2023 ஆம் ஆண்டில், வாக்களிப்பதற்காக புலம்பெயர்ந்தோரை பதிவு செய்வதற்கான ‘ஒன்லைன்’ முறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியது. எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் புலம்பெயர்ந்த இடங்களிருந்து வாக்களிக்க, பாராளுமன்றம் சட்டம் இயற்றும் வரை ஒன்றும் நடைபெறப்போவதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் சட்டக் கட்டமைப்புத் தேவைகளின் அவசியம்
சில நீண்டகால ஜனநாயக நாடுகளில் கூட, 1980கள் வரை, ஏனைய நாடுகளில் வசிக்கும் தமது குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. தற்போது, 115 நாடுகளில் தங்கள் குடிமக்கள் வெளிநாட்டில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டவிதிகள் உள்ளன. ஒப்பீட்டளவில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போதிலும், சமீப காலம் வரை இது பற்றி எழும் சர்வதேச விவாதங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அதன் திடீர் பொருத்தம் உணரப்பட்டுள்ளது. 1990 களின் உலகளாவிய அரசியல் மாற்றங்களிலிருந்து இக் கருத்து வலுத்து வருகிறது. முதலாவதாக, கம்யூனிஸ்ட் கூட்டணி உடைந்த பிறகு, ஜனநாயக நாடுகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதன் விளைவாக, ஜனநாயக தேர்தல் விதிகளின் வடிவமைப்பு அதிக கவனத்தைப் பெற்றது. இரண்டாவதாக, அதிகரித்து வரும் இடப்பெயர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வெளிப்புற வாக்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
இந்தப் பின்னணியில், ஒரு பிரச்சினை எழுகிறது: பிறந்த நாட்டிற்கு வெளியே வாழும் மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது? பெரும்பாலும் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால், உலகமயமாக்கலின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டின் தேசிய தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றால் மட்டுமே உலகளாவிய வாக்குரிமைக் கொள்கையை முழுமையாக அடைய முடியும். இந்த வாதம் பல்வேறு சர்வதேச அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் உலகளாவிய, சமமான, சுதந்திரமான மற்றும் இரகசிய வாக்குரிமை மனித உரிமைகளின் பிரிக்க முடியாத பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது (உதாரணமாக, 1948 மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம், உறுப்புரை 21; 1948 மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க பிரகடனம் மற்றும் கடமைகள், உறுப்புரை 20; மனித உரிமைகள் மீதான 1969 அமெரிக்க மாநாடு, உறுப்புரை 23). இந்த ஆவணங்களில் வெளிப்புற வாக்களிப்பு உலகளாவிய வாக்குரிமையின் ஒருங்கிணைந்த பகுதியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான 1990 சர்வதேச மாநாடு வாக்களிக்கும் உரிமையை வெளிப்படையாகக் அங்கீகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் உள்ளவர்களின் வாக்களிப்பை எப்படி உண்மையாக்குவது?
OAV (Overseas Absentee Voting) இனை நடைமுறைப்படுத்த பல சாத்தியமான மற்றும் அதிநவீன வழிகள் உள்ளன, இதில் மேம்பட்ட ஒன்று அஞ்சல், தொலைநகல் அல்லது இணையம் மூலம் வாக்களித்தல் (இலங்கையில் அஞ்சல் வாக்களிப்பதைப் போன்றது). அத்துடன் பதிலாள் வாக்களிப்பு (முறையாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் மூலம் வாக்களித்தல்) முறையையும் பின்பற்றலாம். பிலிப்பைன்ஸ், நேரில் வாக்களிக்கும் மற்றும் தபால் மூலம் வாக்களிக்கும் முறைகளைப் பயன்படுத்துகின்றன. பிலிப்பைன்ஸின் கடல் கடந்த பிலிப்பினோ தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அவர்கள் வேலை செய்யும் நாடுகளிலுள்ள தூதரகத்தில் வாக்களிக்க அனுமதியளிக்கும் சட்டங்கள் அந் நாட்டில் நடைமுறையில் உண்டு. வெளிநாட்டு இலங்கையர்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்ய பின்வரும் செயற்பாடுகளில் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.
1. தகுதியான புலம்பெயர்ந்தோரின் வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பில் உறுதி செய்தல்.
2. ‘OAV’ தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்தல்.
3. அத்தகைய உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை வரையறுக்கவும் சட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்தவும் ஒரு அமைப்பு உருவாக்கம் அவசியம். முக்கியமாக ‘OAV’ இற்கான தகுதிகளை வரையறுத்தல். தகுதியான புலம்பெயர்ந்தோருக்கான பதிவு நடைமுறையைக் கண்டறிதல். பொருத்தமான வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் வழிமுறைகளைக் கண்டறிதல்.
வெளிநாடு வாழ் இலங்கையரின் வாக்குரிமையை உறுதிசெய்வதற்கு பல சிரமங்களை தாண்ட வேண்டியுள்ளது. உள்ளூர்த் தூதரகம் இல்லாத நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், பதிவுசெய்ய மற்றும் வாக்களிக்க அருகிலுள்ள தூதரகத்திற்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். நேரமும் நிதிச் செலவும் புலம்பெயர்ந்தோரை முன்கூட்டியே வாக்களிப்பதில் இருந்து தடுக்கும். பெண் வீட்டுப் பணியாளர்கள் போன்றவர்களின் சிரமங்களையும் முக்கிய கவனம் கொள்ளவேண்டியுள்ளது. தங்கள் எஜமானர்களின் ஒப்புதலைப் பெறுவது, வாக்களிக்க நீண்ட தூரம் பயணிப்பது அவர்களுக்கு கூடுதல் சவாலாக அமையும். அஞ்சல் வாக்களிப்பு அல்லது வார இறுதி நாட்கள் உட்பட நீண்ட வாக்களிப்புக் காலங்களை ஒதுக்குவது இந்தக் கவலைகளில் பலத்தைப் போக்க உதவும்.
நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் பொறிமுறைகள் பல உள்ளக சவால்களை கொண்டுள்ளன. சாத்தியமான வாக்குகளை வாங்குதல் மற்றும் சுரண்டல் அவற்றில் முக்கியமானவை; இராஜதந்திரப் பணிகளில் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள், சிந்தனையற்ற மற்றும் குரல் அற்ற புலம்பெயர்ந்தோர் போன்றவர்களை தங்கள் அரசியல் நலன்சார் நோக்கங்களுக்கு பயன்படுத்தும் போக்கும் இருக்கும். எனவே, தேர்தல் முடிவுகளின் நேர்மை கேள்விக்குறியாவதைத் தடுக்க சமநிலைப் பொறிமுறை (Check And Balance) அவசியம் கண்டறியப்பட வேண்டும்
நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் பொறிமுறைகளில் வாக்களிப்பு நடைபெறுகிறதா என்பதைத் தீர்மானிப்பதில் அரசியல் பரிசீலனைகள் முக்கியமானவை. அது அதன் வடிவத்தை வரையறுப்பதிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. தேர்தல் முறை வடிவமைப்பு என்பது ஒரு நாட்டின் நிறுவனக் கட்டமைப்பில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். இது அரசியல் கட்சி அமைப்பைப் போலவே நாட்டின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துகிறது. சில அரசியல் பங்கேற்பாளர்களின் குறுகிய கால மோசமான காரணங்களுக்காக நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் பொறிமுறை தடுக்கப்படலாம். ஆயினும், அனைத்துக் குடிமக்களும் அரசியலில் பங்கேற்பதற்கான சம உரிமையில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது நாட்டிற்கு வெளியே வாக்களிக்கும் முறைமையே ஆகும்.