இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் : நடைமுறைச் சிக்கல்களும் சாத்தியங்களும்
Arts
20 நிமிட வாசிப்பு

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் : நடைமுறைச் சிக்கல்களும் சாத்தியங்களும்

January 12, 2025 | Ezhuna

1

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் மீன்பிடித்துறை முக்கியமானது. மீன் உணவு, விலங்குப் புரதத்தின் இன்றியமையாத ஆதாரமாகும். அது உயர்தர புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் டி, பொஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இலங்கையர்கள் தங்களுக்கான விலங்குப் புரதத்தை 50% மீன்களிலிருந்து பெறுகிறார்கள். இது உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம். இலங்கையின் கடல் உணவு அதன் தனித்துவமான சுவைக்காக அறியப்படுகிறது. இதற்கு இந் நாட்டின் தனித்துவமான காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் காரணமாகும்.

உலகளாவிய ஏற்றுமதிச் சந்தையில் 0.2% என்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி, இலங்கை உலகின் சிறந்த 50 ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தச் சாதனையானது இலங்கையின் தனிச்சிறப்பான காலநிலை நிலைமைகளும் வளமான சுற்றுச்சூழல் அமைப்பும் உருவாக்கும் தரமான கடல் உணவின் அடிப்படையில் கிடைத்துள்ளது. தனித்துவமான சுவையை மதிக்கும் உலகளாவிய கொள்வனவாளர்கள், ‘பிரீமியம்’ தரம் கொண்ட கடல் உணவின் சீரான தரத்தைப் பேணுவதற்காக இலங்கையிலிருந்து கடல் உணவுப் பொருட்களைப் பெறுவதில் உறுதியாக உள்ளனர். இறால் போன்ற சில பருவகால தயாரிப்புகளைத் தவிர, இலங்கையின் கடல் உணவு உலகளாவிய சந்தையில் உயர்ந்த நம்பகத்தன்மையுடன் ‘பிரீமியம்’ தேர்வாகத் திகழ்கிறது. தீவு நாடாகிய இலங்கை, ஆண்டு முழுவதும் மீன்பிடித்தலை முன்னிலைப்படுத்தும் எண்ணத்துடன் செயல்படுகிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய, நிலையான உற்பத்தியை உறுதி செய்ய, பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும், உற்பத்தியாகும் தரமான மற்றும் சுவைமிக்க கடல் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் ‘பிரீமியம்’ தரத்தில் ஏற்றுமதிக்காக அனுப்பப்படுகின்றன. இதனால் உள்ளூர் நுகர்வோரின் தெரிவு பெரும்பாலும் டின் மீன் வகைகளுக்குள் சுருங்கி விடுகிறது.

சந்தையில் கிடைக்கும் உடன் மீன்களைக் காட்டிலும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்கள் விலை மலிவாக மாறியுள்ள ஒரு தனித்துவமான சூழ்நிலையை நமது நாடு எதிர்கொண்டு வருகிறது. இது மட்டுமன்றி, உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பனிப்போர் பல்வேறு கருத்து வேறுபாடுகளின் காரணமாக இன்னும் தொடர்கிறது. இந்நிலையில், அரசாங்கம் இதனை வேடிக்கை பார்க்கும் தரப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. 

மீன் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் அந்நிய செலாவணியை குறைப்பதற்கான திட்டங்களை வகுக்கும் தேவையைப் பற்றி பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அதற்கான அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்தாலும், இறக்குமதிக்கு செலவிடப்படும் தொகை ஆண்டு தோறும் அதிகரித்தே வருகிறது. கடந்த ஆண்டுகளின் தரவுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டின் தகவலின்படி, மீன், கருவாடு, மாசி மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்களை இறக்குமதி செய்வதற்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக மீன்பிடி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், 2024 ஆண்டில் இச்செலவின் அளவு மூன்று மடங்குக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கையின் நியாயமான சந்தைப் போட்டியை உறுதிப்படுத்தும் முக்கிய அரசாங்க அமைப்பான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (CAA), சில பொருட்களுக்கு விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அரிசித் தட்டுப்பாட்டின் பின்னணியில் (Economy Next, 30 December 2024), டின் மீன்களுக்கு விலைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் கீழ்: ஒரு டின் சூரைக்கு உச்சவரம்பு விலை 380 ரூபாய், கானாங்கெளுத்திக்கு 420 ரூபாய், பலா கானாங்கெளுத்தி டின்களுக்கு 560 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் கட்டுப்பாடுகள், நுகர்வோருக்கு சுமுகமான சந்தை அணுகலை வழங்குவதற்கான முனைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

டின் மீன்களுக்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாடுகள், கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு செய்யப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பின்னடைவை நினைவூட்டுகிறது. 1970களில் கடுமையான விலைக் கட்டுப்பாடுகள், தட்டுப்பாட்டை உருவாக்கியதோடு, தரம் குறைந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் நிலைக்கும் வழிவகுத்தன. அதேபோல், தற்போதைய நிலைமையிலும், டின் மீன்களுக்கான விலைக் கட்டுப்பாடுகள் குறிப்பிடத்தக்க தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்களை பாதுகாக்க, இலங்கை இறக்குமதிகளுக்கு அதிக வரி விதிக்கின்றது என்றாலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் டின் மீன்களின் தரம் மற்றும் சுவை குறித்து நுகர்வோரின் மத்தியில் பல சிக்கல்கள் மற்றும் அதிருப்திகள் உருவாகியுள்ளன. இதனால், பலர் தங்கள் அசௌகரியங்களை வெளிப்படுத்தியுள்ளனர். உள்ளூர் உற்பத்தியாளர்களும், புதிய வரி (VAT) விதிமுறைகள் காரணமாக, தங்கள் வர்த்தக இயங்குநிலை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால், டின் மீன் தொடர்பான தேவையின் ‘அரசியல்’, அரிசி குறித்த அரசியல் நிலைகளைப் போன்று சூடுபிடித்து வருகிறது.

தரமான தேயிலை, சேதன உயர்தர அரிசி, மற்றும் கடல் உணவுகள் ஆகியவை பெரும்பாலான இலங்கையர்களின் உள்ளூர் நுகர்வுக்கு வருமுன் முழுமையாக ஏற்றுமதிக்கே செல்லும் வகையில், மீன்வள மற்றும் வேளாண் பொருட்கள் சார்ந்த வர்த்தகக் கட்டமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தங்கள் உற்பத்தியை உயர்தரமாக ஏற்றுமதிக்கு அனுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் உற்பத்தியாளர்களும், அதன் இலாபத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் உள்ளனர். ஏற்றுமதியில் இருந்து பெறப்படும் உபரி இலாபம் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை. 

கடல் உணவு, குறிப்பாக டின் மீன் இறக்குமதியிலிருந்து கிடைக்கும் உச்ச இலாபம், பன்னாட்டு கம்பெனிகளின் ஆதரவுடன் இயங்கும் ஒரு மையக் குழுமத்தின் பங்குதாரர்களை மட்டுமே சென்றடைகிறது. கடல் உணவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் ஒரு நெருக்கமான ஏகபோக வர்த்தக முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அரசியல் சக்திகளின் அனுசரணை மற்றும் அதிகாரக் குழுமங்களின் கூட்டு ஒத்துழைப்புடன் மையம்கொண்டுள்ளன. இது தன் நலனை பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியை உறுதிசெய்வதற்கும் பௌத்த பெரும்பான்மைச் சிந்தனையின் மூலவேர்களோடு தொடர்பு கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில், மீன்பிடித் துறையின் முழுமையான ஆதிக்கம் இந்த ஏகபோக வர்த்தகச் சக்திகளின் பிடியிலேயே உள்ளது. மீனவக் குடியேற்றங்கள், வாடி அமைப்புகள், மற்றும் மீன் சந்தை ஆதிக்கம் ஆகியவை, இந்த ஆதிக்கக் குழுமத்தின் நீட்சியாகச் செயற்படுகின்றன. இதனால் உள்ளூர் மீனவ சமூகங்களின் பொருளாதாரச் சுயாதீனமும், சமூக நலனும் இடையூறடைகின்றன.

இலங்கையின் அரிசிச் சந்தை, பெரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து, அதைப் பதப்படுத்தி அதிக விலைக்கு விற்பதன் மூலம், இந்த ஆலை உரிமையாளர்கள் ஒரு வலுவான ஏகபோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்தச் செயற்பாட்டிற்கு அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியாக இருந்துள்ளது. நிலபுலமும் அதிகாரமும் கொண்ட இந்தக் குழாம்கள், அரசின் கொள்கைகளைத் திசைதிருப்பி, அதில் இருந்து அதிகபட்ச இலாபங்களைப் பெறும் சூழலை உருவாக்கியுள்ளன. அரிசி அரசியலின் இந்த விபரீத நிலை, மீன்பிடித் துறையிலும் ஆழமாகப் புரையோடியுள்ளது. மீன்பிடிச் சமூகங்கள், குறிப்பாக சிறு அளவில் செயற்படும் மீனவர்கள், பெரிய வர்த்தக ஏகபோக அமைப்புகளின் கீழ், தங்கள் வாழ்வாதாரத்தை அமைப்பதற்காகப் போராடி வருகின்றனர். இந்த அமைப்புகள், இனவாதத்துடன் தொடர்புடைய அரசியல் மோதல்களுடனும் அதைத் தொடர்ந்து எழும் வன்முறைகளுடனும் ஊடாடிச் செயற்படுகின்றன. சிறு நில விவசாயிகளும் மீனவச் சமூகங்களும், சமூக – பொருளாதார ரீதியாக முன்னேற முடியாமல் அடிப்படை நிலைகளில் தங்கி விடுவதற்கான முக்கிய காரணமாக இந்த அரச-சார் ஏகபோக வர்த்தக அமைப்புகளே உள்ளன. இது, இலங்கையின் அரசியல், பொருளாதார அமைப்பின் கவலையளிக்கும் யதார்த்தம் என்று கூறலாம்.

2

இலங்கையின் மீன்பிடித் துறை, சுமார் 2.4 மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு முக்கியமான பொருளாதாரத் துறை. இதன் முக்கிய பங்குதாரர்கள்: மீனவர்கள், மீன் வளர்ப்பவர்கள், பொதிசெய்வோர்கள், செயலிகள், விநியோக மற்றும் தளவாட வசதிகள், குளிர் சங்கிலி (Cold Chain) செயற்பாட்டாளர்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்கள். இந்தத் துறையில் 75 க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்கின்றன. அதில் 32 நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயலாக்க ஆலைகளைக் (EU – approved processing plants) கொண்டுள்ளன; இது தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உதாரணமாகும். ஆனால், இத்தனை வலுவான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட மீன்பிடித்துறை, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் வசம் சிக்கியிருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு டின் மீன் கொள்கலனையும், மீன்பிடித்துறையில் வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் ஒரு சின்னமாகக் கருதவேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒலுவில் துறைமுகத்தில் 150 மில்லியன் ரூபா முதலீட்டில் தொடங்கத் திட்டமிடப்பட்ட டின் மீன் தொழிற்சாலை, தற்போது செயற்படாமல் முடங்கியுள்ளது. இது குறித்து இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ, 2024 மார்ச் 10 ஆம் தேதியன்று ‘Sunday Observer’ இல், தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில் : 

“டின் மீன்களை உற்பத்தி செய்யும் 16 உள்ளூர்த் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. அவற்றின் குறைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வைக் காணவில்லை என்றால், நாட்டிற்கு ஆண்டுக்கு 80 மில்லியன் யூரோக்களுக்கு மேல் வருமானத்தைக் கொண்டுவரும் ஒட்டுமொத்த உள்ளூர் டின் மீன் உற்பத்தித் தொழிலும் அழிக்கப்பட்டுவிடும். மீன்பிடிப் பருவம் விரைவில் தொடங்கும். ஆனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் டின் மீன் உற்பத்தியில் ஈடுபட முடியாது. இதனால் பிடிபட்ட மீன்களை விற்கமுடியாமல் பேரழிவு ஏற்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கான சிறப்புப் பொருள் வரியை (SCL) 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கவும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து டின் மீன்களுக்கும் 18% VAT வரியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் உள்ளூர்ச் சந்தையில் வெள்ளம் புகுந்தது. இதனால், உள்ளூர் டின் மீன்களுக்கு 18% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதன் விலை 125 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு உள்நாட்டு டின் மீன்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு VAT வரி விதிக்கப்படாமை காரணமாக, வெளிநாட்டு டின் மீன்களுடன் போட்டிபோட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நாட்டில் டின் மீன்களை உற்பத்தி செய்யாமல் இருந்திருந்தால், இலங்கை வருடாந்தம் 80 மில்லியன் யூரோக்களை டின் மீன்களை இறக்குமதி செய்ய செலவழித்திருக்கும். ஆனால், எங்கள் உற்பத்தியால் அதனை நிறுத்த முடிந்தது. இப்போது மீண்டும் பழைய நிலையே ஏற்பட்டுள்ளது. பத்து வருடக் கடின உழைப்பு வீணாகிவிட்டது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய ஒவ்வொரு கொள்கலனும் வாழ்வாதாரப் பாதிப்பையும் குறித்த துறையில் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஏற்படுத்தப்போகிறது” என்றார்.

டிசம்பர் 2019 இல் EDB (Export Development Board) வெளியிட்ட தொழில்திறன் அறிக்கையின் படி, இலங்கையின் மீன்பிடித் துறை 26,600 மீன்பிடிப் படகுகளைக் கொண்டது. இதில் 15,022 சிறிய பாரம்பரிய படகுகள் (அவற்றில் 48% மோட்டார் பொருத்தப்பட்டவை), 8,334 கண்ணாடியிழை வேகப் படகுகள் (18 முதல் 24 அடி நீளம் மற்றும் 25 முதல் 40 குதிரைவலுத்திறன் வரை), 1,550 நாள் படகுகள் (21 முதல் 24 அடி), மற்றும் 1,700 பெரிய பல-நாள் கப்பல்கள் (32 முதல் 52 அடி) உள்ளன. இந்த துறையின் உள்கட்டமைப்பு வலுவானது. ஏனெனில் இங்கு 32 ஐரோப்பிய – அங்கீகரிக்கப்பட்ட செயலாக்க ஆலைகள், குளிர் சங்கிலி வசதிகள், செயலாக்க ஆலைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு மீன்களை திறம்பட நகர்த்தும் நன்கு வளர்ந்த போக்குவரத்து வலையமைப்புகள் உள்ளன. கூடுதலாக, 1,600 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் சர்வதேசத் தரத்துடன் உள்ளன. அவற்றில் சுறுசுறுப்பான கப்பல் கண்காணிப்பு அமைப்புகளும் (VMS), பெருங் கடல் நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலைகயில் உள்ளன. இந்த வலுவான உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தும், இலங்கையின் உள்ளூர் கடல் உணவு, குறிப்பாக மீன் நுகர்வு, இறக்குமதியில் தங்கியுள்ளது. இது இத்துறையின் முழுமையான திறனை அடையத் தடையாக உள்ளது.

இலங்கை அரசாங்கம் அதன் பரந்த மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக டின் மீன் கடல் உணவுச் சந்தையை அபிவிருத்தி செய்ய தீவிரமாகப் போராடுகிறது. மீன்பிடி உபகரணங்களுக்கான மானியங்கள் மற்றும் நிலையான மீன்பிடி நடைமுறைகளுக்கான பயிற்சித் திட்டங்கள் ஆகியன அரசாங்கத்தின் உதவிகளாகும். டின்னில் அடைக்கப்பட்ட கடல் உணவுகளின் சர்வதேச போட்டித்தன்மையை உயர்த்துவதற்காக ஏற்றுமதி ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. தரக் கட்டுப்பாடு மற்றும் சான்றிதழ் செயல்முறைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரங்களை எட்ட மிகவும் அவசியமானவை. நிலையான மீன்பிடித்தலை உறுதி செய்வதற்கும், அதிகப்படியான மீன்பிடித்தலைத் தடுப்பதற்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் இயங்குகிறது. ஆயினும் அரசு உள்ளூர் டின் மீன் உற்பத்தித் தொழிலின் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பல முனைப்புகளைக் காட்டினாலும், நடைமுறையில் நிலையான மாற்றம் இன்னும் எட்டப்படவில்லை. கடந்த காலங்களில், அரசாங்கம் அநேக தொழிற்சாலைகளை டின் மீன் இறக்குமதிக்காக அமைக்க உதவியது. பல நிறுவனங்கள் உருவாகின. முன்னைய அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்களைக் குறைத்ததன் காரணமாக, உள்நாட்டு மீன் சந்தைகள் அழிவுக்குள்ளாகின; உள்ளூர் தொழில் வாய்ப்புகள் மறைந்து, மீன்பிடியாளர்கள் டின் மீன் இறக்குமதிக்கான தொழிலாளர்களின் தேவைகளை நிரப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளூர் டின் மீன் உணவு உற்பத்திக்குத் தடையாக உள்ளது. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் கடல் உணவு கிடைப்பதைக் கட்டுப்படுத்துகிறது. பதப்படுத்தலுக்கான மூலப்பொருட்களின் விநியோகம் எப்போதும் ஒரு தளம்பல் நிலையிலேயே உள்ளது. கூடுதலாக, இலங்கையில் நுகர்வோர் மத்தியில் உடன் கடல் உணவுகளுக்கு வலுவான விருப்பம் உள்ளமை டின் மீன் மாற்றுகளுக்கான தேவையை மட்டுப்படுத்துகிறது. அதிக உற்பத்திச் செலவுகள், உள்ளூர் உடன் கடல் உணவு விற்பனையாளர்கள் மற்றும் சர்வதேச டின் மீன் உணவு பிராண்டுகளின் போட்டி போன்றன உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சவாலாகவே உள்ளது.

கடந்த காலங்களில், டின்மீன் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான தூண்டுதலான காரணங்களாக, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, டின்மீன் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்பது ஆகியன இருந்தன. நோக்கம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், யதார்த்தமாக இருந்தாலும், இது மிகவும் சிக்கலான விளைவையே ஏற்படுத்தியது. கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தால், 2015 ஆம் ஆண்டில், ஆண்டுக்கு 49,000 மெட்ரிக் தொன்னாக இருந்த டின்மீன் இறக்குமதி சமீபத்தில் ஆண்டுக்கு 8,000 மெட்ரிக் தொன்னாக குறைந்துள்ளது. ஆனால், உறைந்த மீன்களின் இறக்குமதி 2023 இல் 200 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,400 மெட்ரிக் தொன்னாக உயர்ந்துள்ளது. இந்த வியத்தகு அதிகரிப்பு, டின்மீன் இறக்குமதி உள்ளூர் மீனவர்களை கணிசமாகப் பாதிக்கும் என்ற கூற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

சந்தைத் தேவையைப் பூர்த்திசெய்ய உள்ளூர் டின் மீன் உற்பத்தி போதுமானதாக இல்லை என்பது மற்றொரு முக்கியமான பிரச்சினை. பதப்படுத்தலுக்கு ஏற்ற உள்ளூர் மீன்கள் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. மீதமுள்ள எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்கு, இத்தொழில்துறை உறைந்த மீன் இறக்குமதியையே நம்பியுள்ளது. அவை ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் சலுகை வரி விகிதத்தில் இறக்குமதி செய்யப்படுகின்றன (10 ஆகஸ்ட் 2024 நிலவரப்படி). உறைந்த மீன் இறக்குமதியின் மீதான இந்தச் சலுகை வரியால் நமது நாட்டு மீனவர்களை விட வெளிநாட்டு மீனவர்களே அதிகம் பயன் அடைகின்றனர்.

டின் மீன் இறக்குமதியை நிறுத்தினால் அன்னியச் செலாவணி மிச்சமாகும் என்ற வாதம் தவறானது எனத் தோன்றுகிறது. கடந்த காலத்தில் உறைந்த மீன் மற்றும் உள்ளூர் உற்பத்திக்குத் தேவையான பிற பொருட்கள்/ கொள்கலன்களின் இறக்குமதிக்காகச் செலவழிக்கப்பட்ட ஒட்டுமொத்த அந்நியச் செலாவணியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், டின் மீன் இறக்குமதிக்காகச் செலவழிக்கப்படும் அந்நியச் செலாவணி பயனுடையதே எனலாம். மறுபுறம், இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் மீது விதிக்கப்படும் உயர் சிறப்புப் பொருள் வரியான 200 கிலோவுக்கு ரூ. 200 என்ற உயர் வரி விதிப்பால் அரசாங்கம் கணிசமான வருவாயை இழக்கிறது எனலாம்.

3

தீவின் பெரும்பான்மையான மக்களின் மீன் புரதத்தின் முதன்மை ஆதாரமாக டின் மீன் இருப்பதால், அவற்றின் தரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை விட உள்ளூர் டின் மீன் பொருட்களின் தரம் குறைவாக உள்ளது என்ற கருத்து நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள், பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும், கடுமையான இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLSI) அனுமதியைப் பெறுகிறது. இதற்கு நேர்மாறாக, உள்ளூர் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த மீன்களுக்கு, உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே மாதிரியான தரச் சரிபார்ப்புச் செய்யப்படுவதில்லை. இது சாத்தியமான உடல்நல அபாயங்கள் பற்றிய கவலைகளை எழுப்புகிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் இந்த உறைந்த மீன் இறக்குமதிகளின் தரத்தைச் சரிபார்க்க எந்த ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை. மேலும் உணர்திறன் பண்புகள், கன உலோகங்கள், ஹிஸ்டமின் அளவுகள் மற்றும் மலட்டுத்தன்மைக்கான சோதனைகள் செய்யப்படுவதில்லை. இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த மீன்களின் ஒவ்வொரு கொள்கலனும் அறியப்படாத சுகாதார ஆபத்தினைக் கொண்டிருக்கலாம். எனவே, உள்ளூர் கைத்தொழில்களை ஆதரிப்பது இன்றியமையாததாக இருந்தாலும், இலங்கை மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதும் முக்கியமானது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட மீன்களின் ஒவ்வொரு தொகுதிக்கும் தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயற்படுத்துவது அவசியம். இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது சந்தைப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்டது போன்று அத்தியாவசியப் பொருட்களுக்கான MRP இனை உயர்த்துவது, உள்ளூர் தொழில்துறையை சுரண்டல் மயப்படுத்தலாம். அனைத்துப் பங்குதாரர்களின், அதாவது உள்ளூர் மீனவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களை சமநிலைப்படுத்த, தற்போதைய கொள்கைகளை மறு மதிப்பீடு செய்வது அவசியம். அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலமும், தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதன் மூலமும், நம் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மீன்களுக்கு மிகவும் நிலையான மற்றும் சமமான சந்தையை உருவாக்க முடியும்.

இலங்கையில் புரதம் நிறைந்த, எளிதில் கிடைக்கக்கூடிய உணவு விருப்பங்களுக்கான அதிகரித்து வரும் தேவை, டின் மீன் உணவுச் சந்தையை தொடர்ந்து நிரப்பி வருகிறது. டின் கடல் உணவுகள், நீண்ட காலம் பேணக்கூடியதாகவும், எளிதான உணவுத் தயாரிப்பை வழங்குவதாகவும் உள்ளதால், நுகர்வோர் மத்தியில் பிரபலமாக உள்ளது. கூடுதலாக, சில்லறை விற்பனைத் துறையின் விரிவாக்கம் மற்றும் பலவிதமான டின் மீன் உற்பத்திகள் கிடைக்கும் தன்மை போன்றன நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்து, சந்தையை மேலும் ஊக்குவிக்கின்றன.

டின் மீன், புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக இருப்பினும், இதற்கு சில சாத்தியமான குறைபாடுகளும் உள்ளன. சில டின் மீன் பொருட்களில் சோடியம் அதிகமாக இருக்கலாம். இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்குப் பங்களிக்கக்கூடும். மேலும், டின் மீன் பொருட்களில் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் அல்லது செயற்கைச் சுவைகள் போன்ற ஆரோக்கியமற்ற சேர்க்கைகள் இருக்கலாம். டின் டுனா (Tuna) தயாரிப்புகளில் அதிகளவு பாதரசம் இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் குழந்தைகள் டின் மீன்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுவாக, டின் மீன் ஒரு சீரான உணவின் ஆரோக்கியமான பகுதியாக இருக்கலாம். ஆனால் சோடியம் குறைவாகவும் ஆரோக்கியமற்ற சேர்க்கைகள் அல்லது அசுத்தங்கள் இல்லாத தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

முடிவு   

இலங்கையின் மீன்பிடித்துறை பலவிதமான சவால்களை எதிர்நோக்கியுள்ளது. வளமான கடல் வளத்தைக் கொண்ட ஒரு நாடாகக் கருதப்படும் இலங்கை, அந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதில் பல தடைகளைச் சந்தித்து வருகிறது. மீன்பிடித் தொழிலின் பெரும் பகுதி சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. சிறு வியாபாரத் தளங்கள் மற்றும் மீன்பிடியைச் சார்ந்த சமூகங்கள் பொருளாதார அடிப்படையிலும் சமூக பாதுகாப்பிலும் பின்னடைவைச் சந்திக்கின்றன. மீன்பிடித்துறையின் மேலாண்மை மற்றும் பணிகளை அரசியல் ஆதிக்கமும் வர்த்தகத் தன்னாட்சியும் கொண்ட கொழும்பு மைய குழாமின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாத நிலையே இந்தப் பிரச்சினைகளின் மூல காரணங்களில் ஒன்று. மீன்பிடித்துறையில் உள்ளூர் மீனின் விலையை தீர்மானிப்பதிலிருந்து, டின் மீன் இறக்குமதி, உறைந்த மீன் இறக்குமதி, மற்றும் ஏற்றுமதி வரி ஆகியவற்றின் கட்டுப்பாடுகளை வரை, இவ் வர்த்தகக் குழாமின் ஆதிக்கம் பலவகைகளில் ஊடுருவியுள்ளது. இந்த ஏகபோகக் குழுமம், அரசின் ஆதரவுடன் சட்டரீதியாக அதன் தீர்மானங்களை அமுல்படுத்தி வருகிறது.

இன முரண்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிரந்தரச் சிக்கல்களின் பின்னணியில், மீன்பிடித்துறையின் வளர்ச்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மீன்பிடித்துறை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படாமைக்கு, வர்த்தக மற்றும் இனப் பாகுபாடு காரணமாக இருக்கக்கூடும்.

சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்துள்ள இலங்கை, இத்துறையின் வளங்களை முறையாக மேம்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. மீன்பிடிச் சமூகத்தின் சமூக – பொருளாதார நிலை மேம்படாமல், வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. பொருளாதார மையங்களை பிராந்திய ரீதியில் நகர்த்துவதன் மூலமே மீன்பிடித் துறையின் நிலைமையை மாற்ற முடியும்.

டின் மீன் இறக்குமதி, ஒரு நீண்டகால மூலோபாயமாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, தேவைக்கேற்ப ஒரு தந்திரோபாயமாக அணுகப்பட வேண்டும். இலங்கையின் உள்ளூர் டின் மீன் உற்பத்தியில் பரந்த அளவிலான வளர்ச்சியை உறுதிசெய்ய அரசின் கனிவான பங்களிப்பு மற்றும் நிர்வாகப் பார்வை அவசியம். உள்ளூர் மீன்பிடித் துறையின் மேம்பாட்டில் சகல பங்காளிகளின் பங்களிப்பும் ஒரே அளவிலான முக்கியத்துவத்துடன் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்காக, உள்நாட்டு மீனவர்களுக்கான உதவிகளும் ஊக்கங்களும் தக்கமுறையில் வழங்கப்பட வேண்டும். இது, உள்ளூர் மீன்பிடித்துறை, அதன் முழுமையான திறனை அடைய வழிவகுக்கும்.

இலங்கையின் மீன்பிடித் துறையின் தனித்துவமான அடையாளம் வெளிக்கொணரப்பட வேண்டும். ஒரு அரச மூலோபாய முன்னெடுப்பின் மூலம், அந்த அடையாளத்தை உருவாக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்வது மிக முக்கியம். இது, நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, அதன் பிற தேவைகளை அடையவும் பெரும் பங்களிப்பு நல்கும்.

உசாத்துணை

  1. Adopt Urgent Measures to Save Local Canned Fish, Fisheries Industry – SLCFMA Chief. (2024, January 16). Daily News. Retrieved from www.dailynews.lk
  2. Capabilities of the Fisheries Industry in Sri Lanka. Sri Lanka Export Development Board. Retrieved from www.srilankabusiness.com
  3. Canned Fish Manufacturers Fear Collapse of Industry Amidst Free Flowing Imports. (2024). Daily Mirror. Retrieved from www.dailymirror.lk
  4. Department of Fisheries and Aquatic Resources (DFAR). (n.d.). Retrieved from www.fisheriesdept.gov.lk
  5. Fisheries Sector Records Historic Performance in 2021. (2021). Daily FT. Retrieved from www.ft.lk
  6. Fisheries Industry: A Deep Dive into the Struggling Sector. (2024, April 21). Pamodi Waravita. The Morning. Retrieved from www.themorning.lk
  7. Sri Lanka’s Fishers Face a Tangled Future. (n.d.). New Lines Magazine. Retrieved from newlinesmag.com
  8. Sri Lanka: Over 16 Local Canned Fish Factories Closed. (n.d.). ICSF News. Retrieved from icsf.net
  9. Sri Lanka Bans Imported Canned Fish to Save Local Industry. (2024, January 17). Asian Agribiz. Retrieved from www.asian-agribiz.com
  10. Sri Lanka Imports: Volume: Fishery Products: Canned Fish. (n.d.). CEIC Data. Retrieved from www.ceicdata.com
  11. Northern Province Sustainable Fisheries Development Project Sovereign Project | 49325-001. (n.d.). Asian Development Bank (ADB). Retrieved from www.adb.org
  12. Sri Lanka Fishery Sector Structure Overall Fishery Sector. (n.d.). Food and Agriculture Organization (FAO). Retrieved from www.fao.org
  13. Towards Improved Livelihoods and Higher Revenues from Sustainable Fisheries in Sri Lanka. (2022, March 2). World Bank. Retrieved from www.worldbank.org
  14. Turning the Tide: Charting a Sustainable Future for Sri Lanka’s Fisheries. (2023, November 21). United Nations Sri Lanka. Retrieved from srilanka.un.org

ஒலிவடிவில் கேட்க

2795 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்