இலங்கை முன்னொருபோதும் காணாத கடந்த வருடத்தைய படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரும் அவர்களுக்கு நெருக்கமான மத்திய வங்கியின் இரு முன்னாள் ஆளுநர்கள் உட்பட ஐந்து உயர்மட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நாட்டின் அதியுயர் நீதிமன்றம் வழங்கிய மூன்றாவது தீர்ப்பாகும்.
ஜனாதிபதியாக இருந்தபோது சந்திரிகா குமாரதுங்க பொது நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்கான அரச நிலத்தை தனியார் கோல்ஃப் (வாட்டேர்ஸ் எட்ஜ்) மைதானத்துக்கு வழங்குவதற்கு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக ஓய்வுபெற்ற இரு அரசாங்க அலுவலர்கள் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக கண்டது. 2008 மே இல் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பில், இழப்பீடாக 30 இலட்சம் ரூபாவை வழங்குமாறு திருமதி குமாரதுங்கவிற்கு உத்தரவிடப்பட்டது.
பாதுகாப்பு விவகாரங்களை சரியாகக் கையாளாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில், அவர் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்துக்கோடி ரூபாவை இழப்பீடாக வழங்குமாறு கடந்த ஜனவரியில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகமிழைத்ததாகவும் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை மீறியதாகவும் ராஜபக்ச சகோதரர்களை குற்றவாளிகளாகக் கண்ட உயர்நீதிமன்றம் இழப்பீடு எதையும் வழங்கவேண்டும் என்று உத்தரவிடவில்லை. பதிலாக அவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்த நால்வருக்கும் தலா ஒன்றரை இலட்சம் ரூபாவை வழக்கு செலவுத்தொகையாக செலுத்துமாறு ராஜபக்சாக்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் இழப்பீட்டைக் கோரவில்லை என்பதால் அதற்கு உத்தரவிடவேண்டிய தேவை இருக்கவில்லை என்று அறிவித்த உயர்நீதிமன்றம், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டிருந்தால் எத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கும்?
ராஜபக்சாக்களும் அவர்களுக்கு நெருக்கமான உயர்மட்ட அதிகாரிகளும் பொருளாதாரத்தை தவறான முறையில் முகாமைத்துவம் செய்ததன் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியினால் நாட்டின் 2 கோடி 20 இலட்சம் சனத்தொகையும் அல்லவா பாதிக்கப்பட்டது?
நான்கு மனுதாரர்களுக்கும் தலா ஒன்றரை இலட்சம் ரூபாவை வழக்கு செலவுத்தொகையாக வழங்கிவிட்டால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்ததற்கான ராஜபக்சாக்களின் பொறுப்புக்கூறல் முடிந்துவிடுமா?
உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் சிவில் சமூகங்களிடமிருந்து கோரிக்கைகள் கிளம்பத் தொடங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
பொருளாதாரக் குற்றவாளிகளின் குடியியல் உரிமைகளை பறிப்பது குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தற்போது அதற்கு ஆதரவாக பொதுமனுவில் மக்களிடம் கையெழுத்தைப் பெறும் இயக்கத்தை முன்னெடுத்திருக்கிறார். ஆணைக்குழுவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கிறது என்றும் பிரேமதாச சுட்டிக் காட்டினார்.
அதேவேளை நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை விக்கிரமசிங்க நியமிக்கவேண்டும் என்றும் அந்த ஆணைக்குழுவினால் முன்மொழியப்படக்கூடிய எந்தவொரு தண்டனை நடவடிக்கையும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தனது அரசாங்கத்துக்கு ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ஆதரவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, அத்தகைய ஆணைக்குழுவை நியமிப்பார் என்றும், தற்போதைய பாராளுமன்றத்தில் ராஜபக்சாக்களுக்கு தண்டனை வழங்குவதற்கான தீர்மானமொன்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்க முடியுமா?
இந்திய தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய விக்கிரமசிங்கவிடம் ராஜபக்சாக்களுக்கு எதிரான தீர்ப்புக் குறித்து கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்து சுற்றிவளைத்துப் பேசியதையே காணக்கூடியதாக இருந்தது.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பயன்படுத்தி இந்த வழக்கின் குற்றவாளிகளிடம் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தை நாடமுடியும் என்று சட்டநிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு குடிமகனும் ஒன்றரை இலட்சம் ரூபா இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு உரித்துடையவர் என்று எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறினார்.
அதேவேளை சபையில் பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டிருக்கமுடியும் என்றும் நாட்டு மக்கள் சகலருக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கு போதுமான பணம் ராஜபக்சக்களிடம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
தங்களிடமிருந்து களவாடப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இப்போது உரித்துடையவர். வெளிநாடுகளில் ராஜபக்சாக்கள் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை மீட்டுக்கொண்டுவந்து பொருளாதார மீட்சிக்கும் குடிமக்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கும் பயன்படுத்தமுடியும் என்றும் சுமந்திரன் கூறினார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னணியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும் என்று ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நாஷனல் இலங்கைப் பிரிவு கூறியிருக்கிறது.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கான காரணிகளை ஆராய்வதற்கு கடந்த ஜூலையில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தார். எதிரணி கட்சிகள் பங்கேற்க மறுத்த நிலையில் முற்றிலும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களைக் கொண்டதாகவே அந்த தெரிவுக்குழு அமைந்திருக்கிறது.
அத்துடன் தெரிவுக்குழுவின் தலைவராக பசில் ராஜபக்சவின் தீவிர விசுவாசியான பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவாசம் இருக்கும் நிலையில் எந்த இலட்சணத்தில் அதன் செயற்பாடுகள் அமையும் என்பதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்காது. ஐந்து மாத காலத்தில் ஒரேயொரு தடவையே தெரிவுக்குழு கூடியதாகவும் கூறப்படுகிறது.
பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அந்த தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்திவிடவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கேட்டிருந்தார்.
பொருளாதார முறைகேடுகள் தொடர்பில் ஏற்கெனவே தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் இருந்து சட்ட நுட்ப நுணுக்க காரணங்களின் அடிப்படையில் தங்களை விடுவித்துக்கொண்ட ராஜபக்சாக்கள், பொருளாதார நெருக்கடிக்கு தாங்களே பொறுப்பு என்று இத்தகைய தீர்ப்பு ஒன்றை உயர்நீதிமன்றம் வழங்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் அதிகாரத்தில் இருந்து இறங்கிய ராஜபக்சாக்களின் மக்கள் செல்வாக்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. இந்த தீர்ப்பு அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளின் கைகளுக்கு வலிமையான ‘அரசியல் ஆயுதம்’ ஒன்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் வழியாக கிடைத்திருக்கிறது.
மகிந்த ராஜபக்சவும் மகன் நாமல் ராஜபக்சவும் தான் தீர்ப்பு குறித்து பெருமளவுக்கு பொதுவெளியில் பேசுகிறார்கள். கோட்டாபயவோ பசிலோ இதுவரையில் பகிரங்கமாக எதையும் கூறியதாக செய்தி இல்லை.
முதலில் மகிந்த, தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக கூறிவிட்டு பிறகு அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்டார். முரண்பாடான இந்த கூற்றுக்கள், தீர்ப்பின் மூலமாக தாங்கள் எதிர்நோக்கும் சிக்கலை எவ்வாறு கையாளுவது என்பது தொடர்பில் அவர் தடுமாறுகிறார் என்பதை உணர்த்துகின்றன.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச தனக்கும் சகோதரர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அதேவேளை நிதி முகாமைத்துவம் தொடர்பான சகல தீர்மானங்களும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே எடுக்கப்பட்டன என்று கூறினார்.
ஆனால் ராஜபக்சாக்களின் ஆட்சியில் பாராளுமன்றமும் அமைச்சரவையும் வெறுமனே றப்பர் முத்திரைகளாகவே இருந்தன என்பதையும் சகோதரர்களே கோலோச்சி நாட்டைச் சூறையாடினார்கள் என்பதை நாடும் மக்களும் மாத்திமல்ல முழு உலகமும் அறியும்.
ராஜபக்சாக்களைப் பொறுத்தவரை தங்களது தவறான ஆட்சிமுறையின் விளைவாகவே பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தோன்றியது என்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னரும் கூட அதே நிலைப் பாட்டிலேயே அவர்கள் இருக்கிறார்கள்.
நாட்டு மக்கள் தங்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு விசித்திரமான எண்ணத்தை ராஜபக்சாக்கள் கொண்டிருக்கிறார்கள். விடுதலை புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற தவறான ஒரு எண்ணம் அவர்களிடம் வேரூன்றியிருந்தது. அதனால் அதே சிங்கள மக்கள் தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அதிகாரத்தில் இருந்து விரட்டியதை இன்றுவரை சீரணிக்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.
மிகவும் நீண்டகாலத்துக்கு தங்கள் குடும்ப ஆதிக்க ஆட்சியைத் தொடரமுடியும் என்று கனவு கண்டு கொண்டிருந்த அவர்கள் தங்களது குடியியல் உரிமைகள் பறிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை கிளம்புகின்ற ஒரு நிலை தோன்றும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் பொதுஜன பெரமுனவே வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்குவரும் என்று ராஜபக்சாக்கள் நாட்டு்மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகிப்பவர்களாக ராஜபக்சாக்கள் விளங்குகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக தாங்கள் அனுபவித்த இடர்பாடுகளுக்கும் பௌதீக மற்றும் உளவியல் உபாதைகளுக்கும் ராஜபக்சாக்களிடமிருந்து இழப்பீட்டைக் கோருவதற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சகல இலங்கையர்களுக்கும் ஒரு வாய்ப்பைத் திறந்துவிட்டிருக்கிறது.
வழக்கு செலவுத்தொகையாக மனுதாரர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவை செலுத்துவதுடன் ராஜபக்சாக்களின் பொறுப்புக்கூறல் முடிந்துவிடுமாக இருந்தால் அதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்கமுடியாது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கூடியதாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படாவிட்டால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெறுமனே ஒரு அடையாள பூர்வமானதாக மாத்திரமே மிஞ்சும்.