ஒரு சமூகம் தங்கள் பண்பாட்டு அம்சங்களைத் தக்கவைக்கின்ற போதே அதற்குரிய தனித்துவ அடையாளமும், இருப்பும் உறுதிப்படுத்தப்படும். அந்தப் பண்பாட்டு அம்சங்களை நிலைபெறச் செய்வதற்கு அச்சமூகத்தின் கலைகள்மீதான கவனம் இன்றியமையாததாகும். அந்தவகையில் இருநூறு வருடங்களுக்குமுன்பு புலம்பெயர்ந்த இந்தியவம்சாவளித் தமிழர்கள் தங்களது பாரம்பரிய உணர்வுடன், தம் சமூகம்சார் கலைகளைப் பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய கலைகளுள் காமன்கூத்துக்கலை மிக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அவ்வாறு முக்கியத்துவம் பெறுவதற்கு ஏதுவான காரணங்கள்பற்றி அறிய விழைவதை நோக்காகக்கொண்டு இக்கட்டுரை விரிவுபெறுகிறது. சமகாலத்தில் அக்கூத்தின் போக்குப்பற்றியும், எதிர்காலத்தில் அவற்றை ஆவணப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள்பற்றியும் தெளிவுறுத்துவதாகவே இக்கட்டுரையின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.
தெய்வீகக் கலையாக காமன்கூத்து
பக்தி உணர்வுடன் மாசிமாதம் பிறையன்று காமன் பொட்டலில் காமன் ஊன்றுதல் இடம்பெறும். காமன் ஊன்றுதல் தொடக்கம், காமனைத் தகனம்செய்து மூன்றாம்நாள் காமனுக்கு உயிர்வழங்கும் நிகழ்வுவரை பக்தியுணர்வுடனே ஒவ்வொரு நிகழ்வும் இடம்பெறும். அண்ணாவியாரின் (காமன் மாஸ்டர்) வழிகாட்டலில் இடம்பெறும் இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டுள்ள சமூகத்தினரின் ஒன்றித்த ஈடுபாடு இக்கூத்து அரங்கேற்றத்தில் முக்கிய கவனிப்பிற்குரியதாகும். இக்கூத்துடன் தொடர்புபட்ட வேடங்களைத் தரிப்பவர்கள், அப்பாத்திரங்களுடனும், ஏனையவர்கள் இக்கூத்துடனும் ஒன்றித்தநிலையில், அதன் உச்சக்கட்டமாக ‘மருள்’ வருவதுண்டு. மேலும், தெய்வீக உணர்வுகளுக்கு மதிப்பளித்து விரதம் அனுஷ்டித்தல், நேர்த்திக்கடன் வைத்து எண்ணிய காரியம் சித்திகிடைத்த பின்பு, நேர்த்திக்கடனை நிறைவேற்றல் போன்ற விடயங்களில் இக்கலையை நேசிக்கின்றதரப்பினர் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இக்கூத்துடன் தொடர்புபட்ட குருவை தெய்வீகத்தன்மையோடு பொருத்திப்பார்க்கின்ற தன்மையையும் அவதானிக்கலாம். மூத்தகலைஞர் ஒருவரிடமிருந்து குருவாக்குப் பெற்றுக்கொள்வதற்கு சீடர்கள் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். காமன் மாஸ்டர் (அண்ணாவியார்) ஒருவர் தங்கள் சிஷ்யர்களுக்கு குருவாக்கை வழங்குவது அபூர்வம். தன் மனதைவென்ற ஒருவருக்கு அல்லது மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே குருவாக்கை வழங்கிவந்துள்ளார்கள். பெரும்பாலும் குடும்பரீதியான ஆதிக்கத்தைக்கருதி தங்களுடைய புதல்வர்களுக்கு மாத்திரமே குருவாக்கை வழங்குவார்கள். இவ்வாறு குருவாக்கைப் பெற்றவர்கள் மாத்திரமே தொடர்ந்து காமன்கூத்துக் கலையை நடத்தி வந்துள்ளனர். குருதட்சணை செலுத்துதல், குருவுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவம் செலுத்துதல், குருவுக்கு உபசாரம் செய்தல் போன்ற நிகழ்வுகள் குருமீதான முக்கியத்துவத்தைக் காட்டுவதாக அமைகின்றன எனலாம்.

கந்தபுராணத்தின்படி, குமாரக் கடவுளின் தோற்றம் நிகழ்வதற்காக, சிவன் மற்றும் பார்வதி இடையே காதல் ஏற்படவேண்டும்; இதனைச்செய்யும் முக்கியப்பாத்திரமாக காமன் காணப்படுகிறார். சிலப்பதிகாரத்தில் காமன்விழா தொடர்பிலும், நாச்சியார் திருமொழியில் காமன் தொர்பிலும் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். காமனை கிரேக்கர் ‘இரான்’ என்றும் ரோமானியர்கள் ‘கூப்பிட்’ என்றும் பெயரிட்டு, காமனுடன் தொடர்புடைய கதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கிவந்துள்ளனர். இந்துக்களின் நம்பிக்கையாக முத்தொழில்களுக்கும், செல்வங்களை வழங்குவதற்கும் தனித்தனியே கடவுள்கள் இருப்பதுபோல், ஆணும் பெண்ணும் ஓருயிர் ஈருடலாக வாழ்ந்து தங்கள் இனத்தை விருத்திசெய்வதற்கு ஏற்ற சக்தியை வழங்குவதற்கான கடவுளாக காமன் போற்றப்படுகிறான். காமனுக்குப் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவனது தோற்றம்பற்றி பல்வேறு கதைகள் சித்திரிக்கப்படுகின்றன. புராணங்கள் பலவற்றில் காமனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கத்தியக் கலாசாரங்களிலும், இந்தியக் கலாசார அம்சத்திலும் காமன் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும், விமர்சனத்திற்குட்பட்டவனாகவும் சித்திரிக்கப்பட்டு வந்துள்ளான். இந்தியமரபின் வழிவந்த மலையகத்தவர்களின் கவனிப்பில், காமன் எவ்வகையில் காட்டப்படுகின்றான் என்பதுபற்றி காமன்கூத்துக் கலையை உற்றுநோக்குவதன் வாயிலாக அறியமுடிகிறது.
இந்திரனின் வேண்டுகோளை ஏற்று, சிவனின் தவம் கலைக்க முயற்சிக்கும் மதன், அதற்குமுன் தனது மனைவி ரதியிடம் விடைபெற முயல்கிறான். ஆனால், சிவனின் மகிமையால் மதன் அழியப்போவது நிச்சயம் என்பதை உணர்ந்த ரதி, தவம் கலைக்கச் செல்லவேண்டாம் எனக் கண்டித்துப் பேசுகிறாள். இந்தநிலையில், தங்கள் தந்தையரின் மேன்மையை வலியுறுத்தும் வகையில், சிவன் மற்றும் விஷ்ணுவைப் பற்றி ரதி மற்றும் மதன் ஆகியோர் பாடல்களை எடுத்துரைப்பதைக் காணலாம். ரதியின் கேலிக்கு உள்ளாகும்போது, மதன் தனது தந்தையான விஷ்ணுவின் உயர்வை எடுத்துரைக்கும் பாடல்களையும், போற்றும் பாடல்களையும் பாடுவதைக் காணமுடிகிறது.
“பச்சமுள்ள பெண் ரதியே இக்கணமே என் தகப்பன்
பரந்தாமன் தன் பெருமை நிரந்தரமாய் கேட்டிடுவாய்
பக்தரட்சகனெனும் முத்திக்கு ஆதாரமான
பன்னவர் சகாயனெனும் விண்ணோர் மாயன் துதிக்கும்”
எனத் தொடங்கி, பத்மாசூரனுக்கு வரத்தைவழங்கி அவனிடமே சிக்கிக்கொள்ளும் சிவனை, விஷ்ணு காப்பாற்றிய கதையை பாடலாக மதன் கூறுகிறான். அவ்வாறே மதனை நோக்கி ரதியானவள்,
“அச்சுதனார் தன் மகனே பச்சைக்கிளி வாகனனே
அரண்மேல் கணை தொடுக்க பரமசிவனை ஜெயிக்க
ஆராலுக்காகாது நேராக இப்போது
அவருடைய தன் சமர்த்தும் பாண்டு ரங்கன் சமர்த்தும்”
எனத் தொடங்கும் பாடல் அடிகளின் வாயிலாக சிவனின் பெருமையை எடுத்துரைக்கின்றாள்.
மதன், ரதி இருவருக்கும் இடையில் கருத்துகள் பரிமாறப்படுகின்றன. மதத்தின் மேன்மைகள் எடுத்துரைக்கப்படுவதுடன், கணவனை இழக்கும் பெண் எதிர்கொள்ளும் சவால்கள், காதல் பிரிவைத் தாங்கமுடியாத வேதனை ஆகியனவும் இப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. பாடலினூடாகவே கதை அம்சம் நகரும் வடிவில் மதன், ரதி உரையாடல் தன்மை எடுத்துக்காட்டப்படுகிறது.
“தென்றல் ரதம் நானெடுத்து பெண்ணே – பெண்ணே
அந்த தேவர் சபை போறனடி கண்ணே கண்ணே”
“தென்றல் ரதம் நீர் எடுக்க வேண்டாம் வேண்டாம்
அந்த தேவர் சபை நீரும் போக வேண்டாம் வேண்டாம்”
“செங்கரும்பு வில்லெடுத்து பெண்ணே பெண்ணே
அந்த சிவன் மீது போர்தொடுக்கப் போறேன் போறேன்”
“ஐயா செங்கரும்பு வில்லெடுக்க வேண்டாம் வேண்டாம்
அந்த சிவன் மீது போர்தொடுக்க வேண்டாம் வேண்டாம்”
காமன் கூத்தில் பாடப்படுகின்ற பாடல்கள் இயல்பான சொற்களுடன், ரசனையை ஏற்படுத்துவதையும் பல பாடல்களில் ஒவ்வொருவரியும் ஒரே எழுத்தில் தொடங்குவதையும் சிறப்பம்சமாகக் கொண்டமைந்துள்ளதைக் காணலாம். எடுத்துக்காட்டாக ரதியைநோக்கி மதன் ‘ந’ எழுத்தில் ஒவ்வொருவரியும் தொடங்குமாறு அமைந்த பாடலொன்று பின்வருமாறு அமைகின்றது:
“நல்லதடி பெண்ணரசே வில்லடி கொண்டோன் மகளே
நாராயணன் மருகிதோ நா வடிவழகி
நாட்டில் உள்ள கன்னியர்க்கே மேட்டிமையான கண்ணே
நடமாடும் சித்திரமே வடிவான ரத்தினமே
நாடியே தூதனுப்ப வாடியே நீயுமிப்போ
நாயமதாய் உரைத்து போகாதென தடுத்து
நாட்டமதாய் சொல்லவந்த வாட்ட மென்ன உந்தனுக்கு
நலமான தேவரென்னை பிறவானென்றறிந்து
நாடியே தூதனுப்ப வாடியே நீயுமிப்போ
நானே போய் இந்திரசபை மானே அதை அறிந்து
நாயகியே வாரனென்றான் மாயன் மகன் மன்மதனார்”
கேட்பவரை எளிதில் கவரும் வகையிலும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு பாடல்களில் புனைவுத்திறமையை வெளிபடுத்தும் ஆற்றல்களை இப்பாடல்களில் காணலாம்.
மொழித்திறனை வளர்க்கும் கலையாக காமன்கூத்து
மொழிப்புலமையையும், வாதத்திறமையையும் வளர்த்தெடுக்கும் வகையில் சொல்லாட்சிச் சிறப்பை வளர்க்கும் கலையாகவும் காமன்கூத்துக் கலை திகழ்கிறது. அண்ணாவியாரின் பாடல்கள், ரதி – மதன் சார்பான குரல்களாகத் தர்க்கித்துக் கொள்வதாக அமைகிறது. ‘மதன் எரிந்தான், மதன் எரியவில்லை’ போன்ற வாதங்கள், தர்க்கிக்கும் திறனை வளர்த்துவந்துள்ளன. மொழி, பாடும்திறன், பாடல் புனையும்திறன் என்பனவற்றை வளர்க்கும் பணியில் பாடலாசிரியர்களின் வித்துவச்செருக்கும் மொழிப்புலமையும் வெளிப்படக்காணலாம். விடுகதைகள், பழமொழிகள் மற்றும் நுண்ணறிவு தொடர்பான அறிவும் இக்கூத்தினூடாக வளர்க்கப்படுமாற்றைக் காணலாம். எடுத்துக்காட்டாக எரிந்தகட்சிசார் பிரதிநிதிகள் எரியாத கட்சித்தரப்பினரிடம் மொழிப்புலமையை பரீட்சிக்கும் வண்ணம்,
“ஐந்தாறு வண்டி மாட்டை ஓர்
ஆற்றங் கரையான் முழுங்குது பார்
அம்மியைத் தூக்கித் தண்ணித் தவளை
முழுங்குது பார்
வாத்தியாரை தூக்கிக் கீரைப் பாத்தி
முழுங்குது பார்
கவியறிந்த வானவரே எந்தன்
செவிதனிலே சொல்லும்படி
கட்டுடைக்க வேண்டுமென்று
உன் கால்களிலே தெண்டமிட்டேன்
என்றவாறு வினாத்தொடுப்பதும், தொடர்ந்து எரியாத கட்சி சார்பான குரலாக,
கண்ணுமுண்டு வாயுமுண்டு
அது பெண்ணுமல்ல ஆணுமல்ல
கழுத்திலே மாலையுண்டு
நெழிந்த கால் கையுமில்லை
கவுந்தமில்லா மேனியது
கொஞ்சம் சிவந்திருக்கும் ரூபமது
மங்கையர்க்கு காடை வார்க்க
அது என்ன வசனமது?”
எனப் புதிர்போடுவதும் மொழிவளர்ப்பின் ஒரு முக்கிய அம்சமாகும்.
தமிழ்ப்பண்பாட்டு மரபில் ஆண், பெண் உறவு தந்த படிமமுறைமையில் பரஸ்பரப் புரிதலை உணர்த்தும் வகையிலான அம்சங்கள் காமன்கூத்தில் எடுத்துரைக்கப்படுவதைக் காணலாம். இந்திரசபையின் கோரிக்கையை செவிமடுத்தநிலையில் மதன், ரதியிடம் உத்தரவு கேட்பதும், ரதியானவள் தன்நிலையை நினைத்து மதனைத் தடுப்பதும், வாழ்வியலில் ஆண், பெண் உறவில் ஒருவரையொருவர் இழந்து வாழும்போது ஏற்படும் பாதிப்பையும், பிரிவுதரும் தாக்கத்தையும் புலப்படுத்துகின்றன. இல்லறம் போற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் முனைப்பினையும் காமன்கூத்துக் கொண்டுள்ளது. கணவன் இடர்படுகின்ற நேரத்தில், பெண் நாசூக்காகப் புத்திமதி சொல்லுவதை இக்கூத்தில் காணலாம். பெண்ணின் ஆலோசனையை மதிக்காதபோது ஏற்படும் பாதிப்புகளையும், வாழ்க்கைத் தீர்மானங்களில் இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் பணியையும் காமன்கூத்து மேற்கொள்கிறது எனலாம்.
பெண்ணிலைவாதத்தை முன்நிறுத்தும் கலையாகக் காமன்கூத்து
பெண்ணிலைவாத முனைப்பில் ரதி என்ற பாத்திரத்தினூடாக மதனின் ஆதிக்கக் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதை அவதானிக்கலாம். முற்போக்கான சிந்தனை ஓட்டம் இருந்தபோதிலும், மதன் ஆதிக்கச் சிந்தனை மேலோங்கி ரதியின் கோரிக்கையைச் செவிமடுக்காது செயற்படுகிறான். இது ஆண் வர்க்கத்தின் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஏகப்பிரதிநிதியாக மதனைக் காட்சிப்படுத்துகிறது. இந்நிலை, சமகால இந்திய நாகரிகமரபின் தன்மையையும் பிரதிபலிக்கிறது. முற்போக்கான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ரதி தன் கணவனுக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்க்கத் துணிந்தவளாக உருவாகுகின்றாள். உலக சிருஷ்டிப்பின் பிரதானியாகச் சித்திரிக்கப்படும் சிவன் தன் தந்தையாக இருந்தபோதிலும், அவரை எதிர்க்கத்துணியும் ரதி, மதன் இழந்த செய்தியின்பின், வேதனையுறுவதைக் காணலாம். அந்தப்பாதிப்பின் தாக்கத்துடன், தனக்கு ஆதரவான அணியைத்திரட்ட ஊர்வலமாகப் புறப்படுகிறாள். அவலச்சுவையுடன் ஒப்பாரி இசைத்து, தனக்கான ஆதரவையும் பிரசாரத்தையும் முனைந்து மேற்கொள்கின்றாள். சமூக அணித்திரட்டலில் பெண்ணின் இயங்கும் தன்மைகள் இவ்வண்ணம் வெளிப்படுகின்றன.

பெருந்தோட்டப் பொறிமுறையில் தொழிலாளர் வர்க்கம் ஏகாதிபத்திய அசைவியக்கத்தினுள் அகப்பட்டுள்ளமையின் அடையாளத்தோடும் இந்நிலைமை பொருந்துவதாக அமைகிறது. அதற்கெதிரான மீளெழுச்சியை வலியுறுத்தும் முனைப்பாக இந்நிகழ்வு அமைகிறது; அது பார்ப்பவரையும் கேட்பவரையும், துணிந்தவருடன் மனதளவில் இணைவதற்கான அனுபவமாக வெளிப்படுகிறது.
ஒப்பாரியின் ஊடாக வலியுறுத்தப்படும் வேதனையைச் செவிமடுக்கும்போது, ரதியுடன் ஓர் அணி உருவாகுவது கண்கூடாகத் தெரிகிறது. மலையக நாட்டுப்புற மரபில் ஒப்பாரிப்பாடல்கள் வாழ்வியலை வெளிப்படுத்துவதில் முனைப்புப்பெறுகின்றன. கணவனை இழந்த பெண் தூற்றுவதற்குரியவளாகும் நிலைபற்றி,
“ஆத்தில வாழை வச்சி
அளர பழுத்தாலும்
ஆகாத வாழையினு – என்னை
ஆத்தில தள்ளுவாங்க
குளத்தில வாழை வச்சி
குளுர பழுத்தாலும்
கோவமுள்ள வாழையினு
குளத்தில தள்ளுவாங்க”
என ரதி கூறுவதும், அந்த இழப்புத்தந்த வேதனை,
“ஆத்தங் கரையோரம்
அன்னம் போல் குந்தியிருந்தேன்
அம்பு மேல் அம்பு போட்டு
குண்டு மேல் குண்டு போட்டு
இந்த அம்புபட்ட காயமது
அணைய நாள் செல்லுமையா”
என்றவாறும் அமைகிறது.
நியாயத்திற்கான பெண்ணிலைவாதக் குரல் சிவனைச் சிந்திக்கவைப்பதும், ரதியின் வெற்றியாக அமைகிறது. பெண்களின் முற்போக்குத்தன்மையை வலியுறுத்தும் கலையாகவும் காமன்கூத்துத் திகழ்கிறது. சிவனை எதிர்த்த சக்திகள் சிறுதெய்வங்களாகப் போற்றப்படும் மரபின்வழியில் அவ்வழிபாட்டுமுறை மலையகத்திலும் ஊடுருவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்முனைப்பின் வெளிப்பாடகவே சிவனை எதிர்த்த உமையின் வழித்தோன்றலாக மாரியம்மன் வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளதைக் காணலாம்.
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வைத் தூண்டும் கலையாக காமன்கூத்து
சமூக அடக்குமுறைக்கெதிரான வலியுறுத்தலை, அணிதிரட்டலை உளவியல்ரீதியில் ஏற்படுத்தும் முனைப்பையும் காமன்கூத்து உட்பொருளாகக் கொண்டமைந்தமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன. “கலை என்பது கலைஞனுக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். இங்கு தொழிலாளி கலைஞனாகிறான். எனவே தொழிலாளியின் பாதிப்பு கலைஞனின் பாதிப்பாக வெளிப்படுத்தப்படுகிறது.” மேலும் “கலையின்மூலம் தன் அகவுணர்வை, அதன் அழுத்தத்தை வெளிப்படுத்தும் புறக்கருவியாகவும் அவன் கலைகளைக் காண்கிறான்.” என்ற இரா. நித்தியானந்தனின் கூற்றுக்கமைய, தொழிலாளி தன்னுள் சுமந்துள்ள அடக்குமுறை தந்த அவலத்திற்கெதிரான தயார்ப்படுத்தலுக்கான, சமூக அணிதிரட்டலை ஏற்படுத்தும் முனைப்பும், காமன்கூத்தினூடாகக் கையாளப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஒடுக்கப்பட்ட சமூகமொன்றில் எதிர்ப்புணர்வையும், தன்னம்பிக்கையையும் வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் கைங்கரியமும் இக்கூத்தினூடாக கட்டியெழுப்பப்படுகிறது. இவ்வெளிப்படுத்தலின் உண்மையைப் புரிந்துகொண்டநிலை, இக்கலை தொடர்பான பற்றுதல் மலையகமக்களிடத்தில் ஊடுருவியுள்ளமைக்குக் காரணமாக அமைகின்றது. பெருந்தோட்டப்பொறிமுறையில் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சி நிலையில், தோட்டத்துரைமார்கள் தொடக்கம் கங்காணிமார் வரையிலான கட்டமைப்பு, ஆதிக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. அடிமைத்தனம் பொருந்திய வாழ்வியலுக்கு மட்டுமே சொந்தமான துன்பியல் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில், சிவனையே எதிர்க்கத்துணிந்த மதன் பாத்திரம் மலையகமக்களால் நேசிக்கப்படுகிறது. இவ்வாறு, எதிர்ப்பியக்கக் கட்டமைப்பிற்கும் இக்கூத்து வழிசமைத்திருக்கலாம்.
சாதிய எதிர்ப்புணர்வைத் தூண்டும் கலையாகக் காமன்கூத்து
தனியே எதிர்ப்புணர்வு மட்டுமல்லாமல், வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வழிகாட்டல் இக்கூத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மதன் ஒரு போராளியாகவும், போராட்டத்தில் தன்னை இழக்கத் துணிந்தவனாகவும் இருந்தமை கவனிக்கத்தக்கதாகும். ‘ஆதிக்கச் செல்நெறியை உடைக்கமுற்படும் முற்போக்கு எண்ணமும், போராட்டம் ஒன்றின் இழப்பும், விடிவுக்கான வழியைப் புதுப்பிக்கும் தெம்பும்’ என்பதே இதன்மூலம் வளர்க்கப்படும் சிந்தனையாகும்.
பொருளாதாரப் பொறிமுறையின் ஏற்றத்தாழ்வுகள், வர்க்க அடக்குமுறைக்கெதிரான போர்க்குணப் பாய்ச்சலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. அதேநேரத்தில், தொழிலாளர் வர்க்கம் சாதி அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பை ஆமோதித்ததாகவே திகழ்ந்துள்ளது. இச்சாதிய அமைப்பை அங்கீகரித்து, அதனை வளர்த்தெடுக்கும் கைங்கரியத்தில் முதலாளி வர்க்கம் அக்கறை செலுத்தியுள்ளது; தொழிலாளர் வர்க்கத்தை நாசூக்காகப் பிரித்துவைத்துப் பயன்படுத்தியும், பிரிவினைவாதத்தை வளர்த்தும் வந்துள்ளது. இந்நிலையைச் சாதகமாக்கிய சூழலில், அதனுடன் குளிர்காய்ந்து வந்துள்ளதான கசப்பான வரலாற்றை மலையகச்சமூகம் கொண்டுள்ளது. மாரியம்மன் வழிபாடு தொடர்பான ஆதிக்கம், தோட்டங்களைச் சேர்ந்த உயர்சாதியினருடன் தொடர்புடையதாகவே காணப்பட்டது. இந்நிலையில், விரக்தி மனப்பான்மையின் உந்துதலோடு, ஏனைய சிறுதெய்வங்கள் மீதான கவனம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உருவான மனநிலையின் வெளிப்பாடாகவே, காமன்கூத்துக் கலை தாழ்த்தப்பட்ட சாதியினரின் கவனத்தை ஈர்த்ததாகவும் பார்க்கப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்துச்செல்வதற்குப் பதிலாக, அதை ஊடறுக்கும் வகையில் காமன்கூத்து நேசிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. உயர்சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினரை கோயிலுக்குள் அனுமதிக்காத கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. துரைமார்களின் கைக்கூலிகளாக இருந்த கங்காணிமார்கள், மேல்சாதியினர் என்றவகையில் இக்கட்டுப்பாட்டை தோட்டங்களில் நிலைபெறச் செய்துள்ளனர். கோயிலுக்குள் நுழையமுடியாத வேதனையின் வெளிப்பாடாக, தங்களது முற்றத்தில் தங்கள் வழிபாட்டுமுறையைத் தீர்மானித்ததோடு, அதனுடன் கலைகளையும் வளர்ப்பதில் ஒடுக்கப்பட்டோர் தங்கள் பங்களிப்பை வழங்கிவந்துள்ளனர். மேல்சாதியினரின் செயற்பாட்டுக்கு எதிராகவே இவ்வழிபாட்டுமுறையும், கலைவளர்ப்பும் உருவாகி வந்ததாகக் கூறலாம்.

ஓர் அசைவியக்கத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டம், தங்களுக்குள் ஒரு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டும், ஒரு நெறியாள்கையின்கீழ் வழிப்படுத்தப்பட்டும், அழகியல் எதிர்ப்புணர்வுகளை வளர்த்துக்கொண்டும் வாழ்வதற்கான முன்னுதாரணக் கலையாக காமன்கூத்து திகழ்கிறது. புராணம், இதிகாசம், வரலாறு, ஒழுக்கம் தொடர்பான மேற்கோள்களை உள்ளடக்கியதாகவும் இக்கூத்தின் அம்சம் அமைந்துள்ளது.
மகாபாரதம், இராமாயணம், சிறுதொண்டர் புராணம், நளவெண்பா, அரிச்சந்திரன் புராணம், இரணியன் கதை, தக்கன் கதை போன்றவற்றின் உபகதைகள் இக்கூத்துடன் தொடர்புபடுகின்றன. வாழ்வியலுக்குத் தேவையான ஒழுக்கநெறிகளைப் போதிக்கும் பணியை ஆற்றுவதே இவற்றின் பிரதான நோக்காகக் கொள்ளப்படுகின்றது. இக்கூத்தில் பல வேடங்கள் காட்டப்படுவதுடன், உலக உற்பத்தி தொடர்பிலான அம்சங்களும் சித்திரிக்கப்படுகின்றன. உயிரின் உற்பத்தி, பஞ்சபூதங்களின் தொழிற்பாட்டு ஆதிக்கம் தொடர்பிலான அறிவை பாமரமக்களிடம் ஏற்படுத்தும் முனைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது எனலாம். தர்க்கத்திறனுடன் அறிவியல் தொடர்பான சிந்தனைவாதத்தையும் போதிக்கும்வகையில் காமன்கூத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒழுக்கநெறியினை வலியுறுத்தும் காமன்கூத்து, வாழ்வியலில் காமம் எந்தளவிற்கு முறையாகக்கொள்ளப்படல் வேண்டும் என்பதைப் போதிக்கின்றது. இறைவனானாலும் காமம் முறையாகக் கைக்கொள்ளப்படாதபோது ஏற்படும் விளைவுகள் தொடர்பிலான வலியுறுத்தல் இங்கு முன்வைக்கப்படுகிறது. இது ஒருவேளை அக்காலத்தில் நிலவிய பலதாரத் திருமணத்தைத் தடுக்கும் கைங்கரியமாகவும் அமையப்பெற்றுள்ளது. தேவலோகமாக இருப்பினும் காமம் முறையற்றுப் பிரயோகப்படுத்தப்பட்டதன் விளைவு பிரம்மன், சிவன் போன்ற பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தப்படுவதையும் காணலாம்.
பல்வேறு கலைகளின் சேர்க்கையாகக் காமன்கூத்து
காமன்கூத்தினூடாக பல கலைகள் வளர்க்கப்பட்டுள்ளன. இதில், இசைக்கலை முக்கிய இடம் வகிக்கிறது. இக்கூத்தின் ஒவ்வொரு அங்கமும் பாடலினூடாகவே நகர்த்தப்படுகிறது. நல்ல குரல்வளமும் இசைஞானமும் உடையவர்களே அண்ணாவியார்களாகத் திகழ்ந்துள்ளனர். இக்கூத்து வளர்ப்பின் கடப்பாடுகள் இவர்களின் வசமே காணப்படுகின்றன. இக்கூத்தில் பாடகர்கள் இல்லையெனில், கூத்தே இல்லை என்றநிலை காணப்படுகிறது. இக்கூத்தில் பாடகர்களைப் போலவே, இசைக்கலைஞர்களின் பங்கும், ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவையாகத் திகழ்கிறது. இப்பாடல்களில் தப்பிசையே பிரதான இடம் வகித்தது. ஜால்ராவின் ஆதிக்கமும் இக்கூத்தை மெருகூட்டுகிறது.
ஆடற்கலை இக்கூத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இசைக்கேற்ற பாடல்களுக்கு தாளக்கட்டுடனான ஆடல், பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. பல்வேறு பாத்திரங்களின் பங்களிப்பு இருந்தபோதிலும், ரதி – மதன் ஆகிய பாத்திரங்களின் ஆட்டமே கூடுதல் செல்வாக்குப் பெற்றுள்ளது. சந்தோசம், துக்கம், தர்க்கம் என்பவற்றை வெளிப்படுத்துமாறு ரதி – மதனின் ஆட்டம் காணப்படும். அரைவட்டத்தில் எதிரெதிரே இருந்து உலாவரும் ஆட்டம், பல்வேறு தப்பிசைக்கமைய மாறுபடும். ஒயிலாட்டத்தின் தன்மையும் ஓர் ஆட்டமாகக் காணப்படும். ஏனைய பாத்திரங்கள் சாதுவான நிலையிலும் யமன், தூதன், வீரபத்திரர் போன்ற பாத்திரங்களின் ஆட்டங்கள் பய உணர்வைத் தூண்டுவதாகவும் அமையும். சபையோரைக் கவரும் ஆட்டமான குறத்தி நடனமும், சபையோருக்கு நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தும் பபூன் ஆட்டமும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே பல்வேறு ஆடல்களின் சேர்கையாகவும் இக்கலை திகழ்கிறது.
ஒப்பனைக்கலை, உடைவடிவமைப்புக்கலை, ஓவியம் என்பன குறித்து தனித்து மதிப்பிடக்கூடிய வகையிலும் இக்கலைகளை வளர்க்கும் பணியைக் காமன்கூத்து வளர்த்துள்ளது. வாதிடும் கலை, அரங்கமைப்புக்கலை, நிர்மாணக்கலை, ஆபரணங்களை உருவாக்கும் கலை என்பவற்றையும் வளர்த்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கின்றபோது காமன்கூத்தானது ஆன்மீகம், அறிவியல் கலைகள், ஒழுக்கவியல் என்பவற்றைப் போதிக்கும்தன்மையைக் கொண்டுள்ளது. இக்கூத்து மலையகச்சமூகத்தின் முக்கிய வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. இக்கலை தொடர்பான சமகாலக்கண்ணோட்டம் பற்றியும், பார்வையைச் செலுத்தவேண்டியது அவசியமாகும். மலையகத்தின் சகல பிரதேசங்களிலும் காமன்கூத்து அரங்கேற்றப்பட்டு வந்துள்ளநிலையில் தற்போது மிகக்குறைந்தளவே தோட்டங்களிலே அரங்கேற்றப்படுகிறது.
- தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் கலை என்ற மனநிலை.
- இக்கலையை ஏனையவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் மனநிலை காமன் ‘மாஸ்டர்’களிடம் இல்லாமை.
- இக்கூத்தில் பங்கெடுப்பது கௌரவக் குறைச்சல் எனும் படித்தவர்களின் மனநிலை.
- மலையகமக்கள் மத்தியில் கூட்டுணர்வு, ஒற்றுமையுணர்வு குறைந்து போயுள்ளமை.
- சமூகக் கட்டுக்கோப்பிலிருந்து விடுபட்டுள்ள தன்மை.
- நாகரீகமோகத்தில் இக்கூத்துக் கலைஞர்களை ஏளனமாகப் பார்க்கின்ற தன்மை.
- தொலைக்காட்சித் திரைப்படங்களின் ஆதிக்கத்தன்மை.
போன்ற காரணங்களினால் இக்கலை மலையகச் சமூகத்தவர்களிலிருந்து ஒதுங்கிப் போய்க்கொண்டிருக்கும் துர்ப்பாக்கியநிலை காணப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.
இருந்தபோதிலும் இக்கலையை நேசித்த கலைஞர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் சமூகப்பங்களிப்புக் குறைவான நிலையிலும், உயிரோட்டமாக இதனை நிகழ்த்திவருவது குறிப்பிடத்தக்கதாகும். இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், மரபுநிலை மறாமல் தொடரும் தேயிலைத் தொழிற்துறையைப் போலவே, இந்தக் கலைஞர்களும் கௌரவப்படுத்தப்படுவதில்லை. அண்மைக்காலமாக இக்கூத்தை தோட்டங்களில் அரங்கேற்றுவதும் அதனைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதன் ஊடாக பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நிலைமையும் வரவேற்கத்தக்கதாக அமைகிறது.
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகக் காமன்கூத்து
காலவோட்டத்திற்கேற்ப காமன்கூத்துக் கலையைப் பாதுகாக்கும் நோக்கில் நவீனநுட்பத்தைக் கையாண்டு, உள்ளக அரங்கமயப்படுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு இக்கலையை மேடைவடிவத்திற்குக் கொண்டுவரும் முயற்சிக்கு அமரர்களான திரு. வி.டீ. தர்மலிங்கம், திரு. திருச்செந்தூரன் ஆகியோர் எழுபதுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இக்கூத்தில் ரதி பாத்திரத்தை ஆண்களே ஏற்றுவந்துள்ளனர். மேடைவடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளநிலையில் முதன்முறையாக பிராஷிஸ் அசுந்தா என்ற பெண்மனியே பெண் வேடமிட்டுள்ளதாக வே. இராமர் குறிப்பிடுவார். தொடர்ந்து உள்ளக அரங்கமயப்படுத்தும் முயற்சியில் கொட்டகலை, அரசினர் ஆசிரியர் கலாசாலை, ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி போன்றன ஈடுபட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றும் அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டி நிகழ்வுகளில் கூத்து அரங்கேற்றம் ஒரு போட்டி நிகழ்வாகக் காணப்பட்டது. அக்காலகட்டங்களில் மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கிடையே காமன்கூத்துத் தொடர்பிலான கவனம் காணப்பட்டமை வரவேற்கத்தக்கது. துரதிர்ஷ்டவசமாக முக்கியத்துவம் இழந்துசெல்லும் தமிழ்மொழித்தினப் போட்டி நிகழ்விலிருந்து கூத்து தொடர்பான போட்டி நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டமை கவலைக்குரியதாகும். இருந்தபோதும் தரம் 6 தமிழ்மொழி பாடத்திட்டத்திலும், உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்திட்டத்திலும் இது இணைத்துக்கொள்ளப்பட்டமை, நாட்டின் சகல பிரதேச மாணவர்களும் காமன்கூத்துத் தொடர்பில் கவனத்தைச் செலுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது எனலாம்.
மலையகக் கவிதை இலக்கியத்தில், வீதிப்பாடல் யுகம் திருப்புமுனைகளை ஏற்படுத்திய காலமாகும். அக்காலத்தில் மலையகத்தில் செங்கொடிச் சங்கத்தின் புரட்சிகரக் கலை, இலக்கியக் குழுவினர் காமன்கூத்தில் உள்ள பலவீன அம்சங்களை, காமன்கூத்தின் சாயலில், காமன்கூத்திற்குரிய இசை, தாள அமைப்புகளைக் கையாண்டு தோட்டங்கள் தோறும் ‘கீமன்கூத்து’ எனப் பெயரிட்டு, தெருக்கூத்துகளையும், மேடை நாடகங்களையும் நடாத்திவந்துள்ளனர். மேலும் அண்மைக்காலங்களில் கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியினர், வீதி நாடகங்களை காமன்கூத்திற்குரிய இசைகளுடன் நடாத்துகின்றனர். காமன்கூத்திற்குப் பயன்படுத்தப்படும் தப்பு வாத்தியமே இந்நாடகங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
கடந்த சில வருடங்களாக இதனை மேடை அமைப்பிற்குக் கொண்டுவரும் முயிற்சியில் ஈடுபட்டுவந்த பிரான்சிஸ் ஹெலன் தலைமையிலான மலையகமக்கள் கலை அரங்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், கடந்த வருடம் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் காமன்கூத்தை அரங்கேற்றிப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக இவ்வாய்ப்பின் பின்னணியில் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களது பங்களிப்புக் குறித்து வியந்துகூறுவார்கள்.
மலையகமக்களின் வரலாற்று ஆவணமாகத் திகழும் இக்கலையை ஆவணப்படுத்தும் பிரயத்தனத்தில் மலையக கலை, இலக்கிய அமைப்பினர் கவனம் செலுத்தி வருகின்றமை கவனிக்கத்தக்கது. அந்தவகையில், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம், புசல்லாவை இராமன்துரைத் தோட்டத்தில் அமைந்துள்ள மலையக அருங்காட்சியகத்தில் இக்கூத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காமன்கூத்திற்கு பயன்படுத்தும் உடைகள், ஆபரணங்கள் பாடல்கள் என்பனவும் பாதுகாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி, உபபீடாதிபதி திரு. எஸ். இராஜேந்திரன் அவர்களது வழிகாட்டலில், வருடாந்தம் ஆசிரியர் பயிலுநர்களைக்கொண்டு சமூகவியல் கண்காட்சியை நடத்தி வருகின்றது. அக்காட்சியில் காமன்கூத்து தொடர்பான அரும்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இக்கண்காட்சி மலையகத்திற்கென்ற பெரியதொரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
அவ்வாறே யாழ். பல்கலைக்கழகம், கொழும்புத் தமிழ்ச்சங்கம், வசந்தம் தொலைக்காட்சி ஆகியன இக்கூத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, அரங்கேற்றியும் ஆவணப்படுத்தியுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆய்வு முயற்சிகளில் காமன்கூத்து
இருநூறு வருடகால புலம்பெயர் சமூகமொன்றின் வாழ்வியலோடும் வரலாறோடும் தொடர்புபட்ட ஒரு கலையாக விளங்கிய காமன்கூத்துத் தொடர்பிலான ஆய்வு முயற்சிகள் அரிதாகவே காணப்படுகின்றன. சு. திருச்செந்தூரன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன், சு. முரளிதரன், லெனின் மதிவானம், ரா. நித்தியானந்தன், பொன். பிரபாகரன், அ. லெட்சுமணன் ஆகியோர் சுயாதீனமாக இது தொடர்பில் ஆய்வில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக மட்டத்திலிருந்து பேராசிரியர் காரை செ. சுந்தரம்பிள்ளை, பேராசிரியர் கா. சிவதம்பி, பேராசிரியர். சி. தில்லைநாதன், கலாநிதி துரை மனோகரன், பேராசிரியர் சி. மௌனகுரு, திருமதி. சோதிமலர் ரவீந்திரன் ஆகியோர் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.
காமன்கூத்துத் தொடர்பிலான ஆய்வுத்தளம் அகலச் செல்லவேண்டியது அவசியமாகும். அண்மைக்காலமாக பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெறுவதற்கென மாணவர்கள், நுனிப்புல் மேய்ந்தாற்போல் காமன்கூத்துத் தொடர்பிலான தரவுகளை வழங்கிவருகின்றனர். இந்தியப் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி மாணவர்களாகப் பயில்பவர்களிடமிருந்து வரும் ஆய்வுத்தகவல்கள், பல்வேறு பலவீன அம்சங்களோடு காணப்படுகின்றன. இவ்வாறான காரணங்களினால் காமன்கூத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடியநிலைமை தோன்றுகின்றது. எனவே இவ்வாறான குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்படல் வேண்டும்.
உதயசூரியன் இதழில் ‘காமன்கூத்துக் கலையறிவோம்’ எனும் அ. லெட்சுமணன் எழுதிய தொடர் 2011 ஆம் வருடம், வாராந்தம் தொடர்ந்து வெளிவந்தது. அதன் விரிவான பார்வை ‘தாய்வீடு’ இதழில் ‘காமன்கூத்து – வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த கலை’ எனும் தலைப்பில் தொடராக வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சமூகமொன்றின் வரலாற்று ஆவணம் என்றவகையில் இக்கூத்துக் கட்டிக்காக்கப்படும் நோக்கில் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதன்பொருட்டு:
- காலங்காலமாக காமன்கூத்துக் கலையில் ஈடுபடும் கலைஞர்களுக்கு தகுந்த கௌரவத்தை வழங்குதல்; அவர்கள் தொடர்பிலான ஆவணங்களைப் பேணுதல்.
- பல்கலைக்கழகங்களில் பயில்நிலைக்குரிய கலையாக காமன்கூத்தையும் இணைத்துக்கொள்ளல்.
- பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் கலை, இலக்கிய அமைப்புகளில் நவீன உத்திகளைக் கையாண்டு உள்ளக அரங்கமயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளல்.
- தோட்டங்களில், காமன்கூத்தை உண்மைநிலை மாறாதவகையில் அரங்கேற்றல்.
- காமன்கூத்துத் தொடர்பில் ஆய்வுத்தளத்தை விஸ்தரித்தல்.
- காமன்கூத்தில் பாடப்படும் பாடல்களின் உள்ளடக்கம் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளல்.
- மலையகத்திற்கென தனியான அருங்காட்சியகம் அமைத்தல் மற்றும் தேசிய அருங்காட்சியகத்தில் காமன்கூத்துத் தொடர்பிலான ஆவணங்களைப் பாதுகாத்தல்.
- இக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் ஒன்றிணைந்து செயலூக்கம் பொருந்திய வகையில் செயற்படல்.
போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட சமூகமொன்றின் விடிவைத் தேடவேண்டிய அவசியத்தை உணரச்செய்து, எழுச்சிக்குரிய எண்ணங்களைப் புரையோடச்செய்வதில் பங்களிப்புச்செய்யும் கலையாக காமன்கூத்துத் திகழ்கிறது. அவ்வகையில் இது ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கின்றது. இக்கூத்தினூடாக மலையகத்தவரின் இருப்பிற்கான அவசியம் உணரப்படுகிறது. திட்டமிட்ட இன அழிப்புகள்மூலம் சமூகச்செறிவு குறைக்கப்படுகின்றது. இச்செய்தி நமக்குப்போதிக்கும் அபாயத்தை உணரவேண்டியுள்ளது. உலகமயமாக்கத்தில் புரளவேண்டிய அவசியம் தவிர்க்க முடியாததே; இருந்தபோதிலும், இன அடையாளத்தை உறுதிப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில், இவ்வாறான கலைகள் மலையகமக்களின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும் என உறுதியாகக் கூறலாம்.
உசாத்துணைகள்
நூல்கள்:
- சோதிமலர், ரவீந்திரன். (காமன் கூத்து மற்றும் மலையகப் பாரம்பரியம்)
- பிரான்சிஸ், ஹெலன். (2011). இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் வழங்கும் காமன் கூத்து (பிரதியாக்கம்). மலையக மக்கள் கலை அரங்கு.
- சுகவனேச்வரன், அ. வெ. (2007). குமார சம்பவம். வரம்.
- சத்தியநாதன், ச. (2002). காமன் கூத்து ஓர் கள ஆய்வு. ஞானம் பதிப்பகம்.
- சிவலிங்கம், மு. (2007). மலையக தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள். குறிஞ்சி தமிழ் இலக்கிய மன்றம்.
- இராமர், வே. (2018). மலையக மக்களின் கலையான காமன் கூத்து. மக்கள் கலை பண்பாட்டு அரங்கு.
நேர்காணல்கள்:
- காமன் மாஸ்டர் சு. கோபால் (அண்ணாவியார்), பிளக்குவாட்டர், கினிகத்ஹேன.
- காமன் மாஸ்டர் N. மோகனதாஸ், பிளக்குவாட்டர், கினிகத்ஹேன.
- காமன் மாஸ்டர் பாட்டையா, அல்லித்தோட்டம், கினிகத்ஹேன.
- திரு. சுப்ரமணியம், பார்கேப்பல், கெட்டபுலா.
பாடல் உதவி:
- திரு. கந்தையா, கடியன்லேன கட்டபுலா.
- திருமதி. அருணாசலம் தெய்வானை, கல்லாறு இம்புல்பிட்டி, நாவலப்பிட்டி.
கட்டுரைகள்:
- சு. முரளிதரன். ‘இலங்கையில் காமன் கூத்து சில அர்த்தக்கோடல்கள்’. உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் அரங்கேறிய காமன் கூத்து பிரதியாக்கம்.
- லெனின் மதிவானம். ‘மலையத்தில் காமன் கூத்து சில அவதானிப்புகள்’. மல்லிகை ஜனவரி 2001 ஆண்டுமலர்.
- ரா. நித்தியானந்தன். ‘தாழ்த்தப்பட்ட மக்களின் சின்னஞ் சிறிய கடவுளர்’. (இலங்கை தழிழ்ப் பெருந்தோட்ட மக்களின் கடவுளர் வழிபாடு தொடர்பான சமூகவியல் ஆய்வு). சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 கட்டுரைக்கோவை.
- வே. இராமர். ‘மலையக கலைகளும் இன்றைய நிலையும்’. நிகர் சஞ்சிகை.