மன்னார்ப் படுகை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வும் அகழ்வும் : அபிவிருத்திக்கான வாய்ப்பா, சாபமா?
Arts
23 நிமிட வாசிப்பு

மன்னார்ப் படுகை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வும் அகழ்வும் : அபிவிருத்திக்கான வாய்ப்பா, சாபமா?

May 20, 2024 | Ezhuna

பின்புலம்

அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு (Political Economy Analysis) என்பது ஒரு சூழ்நிலையில் உண்மையில் என்ன நடக்கிறது, உடனடிப் பிரச்சினையின் மேற்பரப்பிற்குப் பின்னால் என்ன இருக்கிறது, போட்டியிடும் ஆர்வங்கள் உள்ளதா என்பனவற்றைக் கண்டறியும் முயற்சியாகும். அரசியல் பொருளாதாரப் பகுப்பாய்வு, ஒரு சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரச் செயல்முறைகளின் தொடர்புகளை ஆராய்கிறது. இது சமூகத்திலுள்ள குழுக்களின் அதிகாரத்தைப் புரிந்துகொள்வதை உள்ளடக்குகிறது; அவர்கள் வைத்திருக்கும் நலன்கள் மற்றும் அவர்களை உந்துவிக்கும் ஊக்கங்கள், குறிப்பிட்ட விளைவுகள் நடைபெறும் போது அதன் தாக்கங்கள் என்பனவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. பொருளாதாரத்தைப் படிக்க வெவ்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதில் ஒரு பகுதியான அரசியல் பொருளாதாரம் என்பது, பெரும்பரப்பை பல்வேறு சமூகக் கட்டமைப்பு வடிவங்கள் ஊடு (lenses), பொருளாதாரச் சிந்தனைகளின் வரம்பில் அமர்ந்து பார்ப்பதாகும். இது வர்க்கம், பாலினம், இனம் போன்றவை பொருளாதாரம் மற்றும் அவற்றைப் பாதிக்கும் சிக்கல்களை பகுப்பாய்வு செய்ய உதவும் துறையாகும். இத் துறைசார் அணுகுமுறை, ஆய்வுக்குரிய  குழுக்கள் மற்றும் அவர்களின் நலன்களை அடையாளம் காண முயற்சி செய்கிறது; மேலும் அரசியல் நிறுவனங்கள், அதன் கொள்கைகள், எதிர்கால அபிலாசைகள் மீது அவற்றின் தாக்கத்தைப் பதிவு செய்து அபிவிருத்திப் பொருளாதாரத்தை நோக்கி நடைபோடும் வழிக்கு பங்களிப்புச் செய்கிறது.

இலங்கையின் கடந்த கால பொருளாதார முன்னெடுப்புகள் முரண்நிலையை, இனவழிப்பை உருவாக்கின. ஒரு இனப் பரம்பலை நீர்க்கச் செய்து, அதன் வாழ்வாதார வளங்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்து, திட்டமிட்ட முறையில் நீடித்த இனவழிப்பை வழிநடத்துவது கொழும்பு மைய அரசின் அரசியல் பொருளாதார வெளிப்பாடாக இன்றும் விளங்குவது கண்கூடு. 

ரபேல் லெம்கின் (Raphael  Lemkin) இந்நிலை பற்றி மிக விரிவாக ஆராய்ந்து கூறியவர். அவரது இனப்படுகொலை குறித்த கருத்து மிக முக்கியமானது. 

“பொதுவாக, ஒரு தேசத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வெகுஜனக் கொலைகளால் அழித்தல் என்பது மட்டுமே ‘இனப்படுகொலை’ ஆகாது அல்லது ஒரு தேசத்தின் உடனடி அழிவைக் குறிக்காது. நடைமுறையில் அது, தேசியக் குழுக்களின் வாழ்க்கையின் அத்தியாவசிய அடித்தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட வெவ்வேறு செயல்களின் ஒருங்கிணைந்த திட்டத்தைக் குறிக்கும் போக்குடன் நிறைவேற்றப்படுபவை. அத்தகைய திட்டத்தினால் அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள், கலாசாரம், மொழி, தேசிய உணர்வு, மதம், தேசியக் குழுக்களின் பொருளாதார இருப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு, சுதந்திரம், சுகாதாரம், கண்ணியம் மற்றும் பல அழிக்கப்படும். இனப்படுகொலை என்பது ஒரு தேசியக் குழுவிற்கு எதிரான ஒரு அமைப்பாக இயக்கப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட செயல்கள் தனிநபர்களுக்கு எதிராக அவர்களின் தனிப்பட்ட திறனில் அல்லாமல், தேசியக் குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது.”

இலங்கைச் சமூகங்களின் வாழ்விடப் பாதுகாப்பான நிலம் மற்றும் வாழ்வாதார அடிப்படைகளை நீர்க்கச் செய்ததில் மிக முக்கியமானவை:

1. மலையக மக்களின் வாக்குரிமை : மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை மற்றும் அவர்களை இந்தியாவிற்கு நிர்ப்பந்தமாக வெளியேற்றியமை. இதனால், நிலவுரிமையைக் கோரும் அவர்களின் உரிமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டது. மலையக மக்ககளின் வாக்குரிமை பறிக்கப்படாமல் தேசிய அபிவிருத்தியில் அவர்களையும் பங்காளிகளாக இணைத்திருந்தால், அவர்களின் சனத்தொகை இன்றைய சனத்தொகைக்கு மேல், இரண்டு மில்லியன்  இருக்கும். 

2. அரசு முன்னெடுத்த குடியேற்றங்கள் : பட்டிப்பளை (கல்லோயா, அம்பாறை) முதல் மணலாறு வரை மற்றும் திருகோணமலை, வவுனியா தென்பகுதி ஆகிய இடங்களில் அரசு முன்னெடுத்த குடியேற்றங்களால் நில அபகரிப்புகள் நடந்தன. இப்பகுதிகளில் தமிழ் மக்களின் நிலவுரிமைகளை அனுமதித்திருந்தால், தமிழர்களின் இன்றைய சனத்தொகை 15% அதிகரித்திருக்கும். மேலும், கல்வியுரிமை மறுப்பு, அரச உதவியுடனான திட்டமிட்ட வன்முறைகள் தந்த விளைவின் பயனாக வெளிநாடுகளுக்கு இடம்பெயந்த மொத்தச் சனத்தொகை இன்றைய எண்ணிக்கையின் 10 % ஆகும். இது, அரசின் அரசியல் பொருளாதாரத்தின் வெற்றிக்கும், தமிழ்த் தேசிய அரசியல் பொருளாதாரத்தின் தோல்விக்கும் வழிசெய்தது. 

3. மகாவலி அபிவிருத்தித் திட்டம் : மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் (Zone  L  முதல் J  வரை) உள்நோக்கம் தமிழர் தாயக, நில மற்றும் கடல் தொடர்ச்சியைக் கூறுபோடுவது (மணலாறு பிரதேசத்துடன் இணைந்த  ஆற்று மற்றும் நன்னீர் வளங்கள்) ஆகும். மேலும், மட்டக்களப்பின் வளமான, கால்நடை பொருளாதார வாழ்வாதார அடிப்படைகளை திட்டமிட்டு அழித்து, அந்நில மக்களை அகற்றும் முயற்சி தொடர்ந்தும் நடைபெறுகிறது. 

தமிழர் தாயக உருவாக்கம் என்பது, வலுவான அரசியல் ஒருங்கிணைப்பிற்கு ஈடான அதன் அரசியல், பொருளாதார நலன்கள் பற்றிய ஆழமான பார்வையின் தளத்தில் வளரவேண்டும். இலங்கை அரசின் அரசியல், பொருளாதார கொள்கையின் முக்கிய நோக்கம் என்பது மாற்று இனங்களின் உடனடி அழிப்பாக (Direct  physical  destruction) இருப்பதை விட, மற்றொரு சமூகத்தை மௌனமாகக் கைப்பற்றி வலுக்கட்டாயமாக ஒருங்கிணைக்கும் (forced assimilation) முறையாகவே இருக்கிறது. இது பல்வேறு வகையான அரச சார்பு காலனிகளை நிறுவுவதன் மூலம் நடைபெறும். காலனித்துவச் செயற்பாட்டின் போது  கட்டாய ஒருங்கிணைப்பு, பிரதேச அபிவிருத்தியின் பெயரில் அரங்கேறும். அதற்கு வெளி உலக நிதிகளும் கச்சிதமாகப் பாய்ச்சப்படும்.

இந்நிலையில், இவற்றின் தொடர்ச்சியாக ‘மன்னார் எண்ணெய்வள ஆய்வும் அதனை அகழ்வதற்கான முன்னெடுப்பும்’ தற்போது இடம்பெறவிருக்கிறது. போரின் பின்னாலான ஒரு பெரிய முன்னெடுப்பாக இடம்பெறவிருக்கும் மன்னார் படுகை எண்ணெய் வள ஆய்வு பற்றிய ஒரு மதிப்பீடு மிக அவசியம். இச் செயற்பாட்டில், இக்கட்டுரையாக்கம் ஒரு முன்னெடுப்பை தொடங்க முயல்கிறது. 

மன்னார் எண்ணெய்வள, இயற்கை எரிவாயுப் படுகை  

தென்னிந்தியாவிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள மன்னார் படுகையில் சுமார் 260 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படலாம் என ஆரம்பகட்ட ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இலங்கையின் எரிசக்தி அமைச்சும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னார் படுகை இலங்கையின் தென்மேற்கு மற்றும் வடமேற்கிலும், இந்தியாவின் தென்கிழக்கிலும், காவிரிப் படுகையின் தெற்கிலும் அமைந்துள்ளது (படம் 1). இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு ‘உள்-கிரேட்டோனிக்’ தோற்றுவித்த பிளவு மூலம் உருவாகியிருக்கலாம். 

data 1

மன்னார் படுகையின் நிலப்பரப்பு 90% கிரானுலைட்டின் (metamorphic rocks of granulite) உயர்தர உருமாற்ற பாறைகளால் ஆனது. மீதமுள்ள நிலப்பரப்பு ஆம்பிபோலைட் முகங்களினால் (amphibolite facies) ஆனது (கூரே 1984). வடக்குக் கரையோர விளிம்பு, மற்றும் கரையோரப் பகுதி ஆகியன வண்டல் பாறைகளைக் கொண்டுள்ளன. மூன்று கடல் வண்டல் படுகைகள், 1. காவிரி, 2. மன்னார், 3. இலங்கை என எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. மன்னார் கடல் படுகையானது கடலில் அமைந்திருக்கும் இன்னொரு மாகணமாகும் (படம் 1). இது இலங்கையில் மிகவும் செழிப்பான ஹைட்ரோகார்பன் அடங்கியுள்ள பிரதேசமுமாகும். 

நில அதிர்வு (Seismic Surveys) ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வடக்கு கடல் பகுதியில் 30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 1 மில்லியன் தொடக்கம் 5 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளங்கள் இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்விலும் அகழ்விலும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 50% இலாபம் வழங்க அரசு அறிவித்துள்ளது. இலாபமாக 133.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும் எனவும், இது நாட்டின் மொத்தக் கடன் பெறுமதியான 47 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட, கிட்டத்தட்ட மூன்று மடங்கு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் படுகையில் உள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நாட்டின் மொத்த கடனை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

மன்னார் படுகையில் உள்ள எரிவாயு மூலம் மட்டுமே நுரைச்சோலை அனல்மின் நிலையம் 120 வருடங்கள் இயங்க முடியும் என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். அண்டை நாடான இந்தியா 1940 களில் இருந்து இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்திருந்தது. பல்வேறு காரணங்களால் இலங்கை அதை தவறவிட்டது. விடுதலைப் புலிகளின் வலுவான கள நிலை மற்றும் யுத்தம் என்பன அவற்றில் ஒரு காரணம். தற்போது, போரின் பின்பான காலத்தில், இலங்கை இவ்விடயம் தொடர்பாக சர்வதேசக் கேள்வி கோரி, முதலீட்டாளர்களை அழைத்துள்ளது. புலிகளின் அழிவிற்குப் பின், யுத்தத்தின் முடிவை அடுத்து, இவ் விடயத்தில் அரசு காட்டும் அவசரத்தையும் காணக்கூடியதாக இருந்தது.

data 2

2022 டிசெம்பர் மாதத்தில் இலங்கையின் எண்ணெய் நுகர்வு நாளுக்கு 98.000 பீப்பாய்கள் எனப் பதிவாகியுள்ளது (மேலும் தரவுகளுக்கு கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). 2022 ஆம் ஆண்டில், பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய, இலங்கைக்கு $225 மில்லியன் தேவைப்பட்டது. முக்கியமாக ஓமான் ($71.9M), சவுதி அரேபியா ($60M), ஈராக் ($23M), அல்ஜீரியா ($21.4M) மற்றும் மலேசியா ($18.9M) ஆகிய நாடுகளில் இருந்து இது இறக்குமதி செய்யப்பட்டது.

oil
data 3

‘இலங்கையின் ஹைட்ரோகார்பன் ஆய்வுத் தொகுதி வரைபடம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள மேற்குறித்த வரைபடம், ஆய்வு உரிமங்கள், மேம்பாட்டு உரிமங்கள் மற்றும் கூட்டு ஆய்வுகளுக்கான தொகுதிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்தினால், இலங்கைக் கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்புக்கள் இருப்பதாக இனங்காணப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்ததை இந்த வெளியீடு உள்ளடக்கியுள்ளது. இந்த வரைபடத்தில், மன்னார் படுகையில் தலா 15×15 கிமீ நீளமுள்ள 873 தொகுதிகள் காட்டப்பட்டுள்ளன. இது முதலீட்டாளர்கள் சிரமமின்றி ஆய்வுக்கு விருப்பமான நிலங்களைத் தேர்ந்தெடுக்க உதவும். மன்னார், காவேரி மற்றும் லங்கா படுகைகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வரைபடம் மற்றும் ஆய்வு செயல்முறையை உருவாக்க எரிசக்தி அமைச்சகம் முயற்சி செய்துள்ளது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரைபடத் தொகுதிகள் மீது விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டது. புதிதாக வெளியிடப்பட்ட வரைபடம், செயல்முறை என்பன உலகின் முதல் 20 எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை இந்தத் துறையில் முதலீடு செய்ய ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது இரண்டு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் ஒன்பது டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 2

பெற்றோலிய ஆய்வு என்பது பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் சிக்கியுள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் திரட்சிகளைக் கண்டறியும் முயற்சியாகும். பெற்றோலிய உற்பத்தி என்பது, செயலாக்கம், சந்தைப்படுத்தல் மற்றும் பயன்பாட்டிற்காக மறைந்திருக்கும் வளங்களை மீட்டெடுப்பதற்கான செயல்முறையாகும். ஏறக்குறைய அனைத்து வேதியியலாளர்களும் பெற்றோலியம் என்பது உயிரினங்களின் சில மில்லியன் ஆண்டுகள் சிதைவின் விளைவாகும் என்று நம்புகிறார்கள். எண்ணெய் என்பது ஒரு புதைபடிவ எரிபொருளாகும். இது பாசி மற்றும் ஜூப்ளாங்க்டன் போன்ற தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து உருவாகிறது. இந்த உயிரினங்கள் இறந்தவுடன் கடலின் அடிப்பகுதியில் விழுகின்றன. காலப்போக்கில், மணல் மற்றும் சேற்றின் பல அடுக்குகளின் கீழ் சிக்கிக் கொள்கின்றன. பைட்டோபிளாங்க்டன் மற்றும் ஜூப்ளாங்க்டன், பாசிகள் மற்றும் பாக்டீரியாக்கள் கடலின் அடிப்பகுதியில் மூழ்கி, நீரோடைகள் மற்றும் ஆறுகளில் இருந்து இந்தக் கடலுக்குள் நுழையும் கனிமங்கள், களிமண் போன்ற பொருட்களுடன் கலக்கின்றன. காலவோட்டத்தில் இது பெற்றோலியமாக உருவாகுகின்றது. 

data 6

இலங்கையில் பெட்ரோலிய ஆய்வு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1960 களின் பிற்பகுதியில் தொடங்கியது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுப் பணிகளைப் புதுப்பித்து, மன்னார் படுகையில் ‘2D’ நில அதிர்வு ஆய்வுகள் 2001 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள பிராந்திய அலுவலகத்துடன் நோர்வே நில அதிர்வு ஒப்பந்த நிறுவனமான ‘TGS NOPEC’ ஆல் நடத்தப்பட்டது. 2007 இல் முதல் சர்வதேச உரிமச் சுற்று மூன்று ஆய்வுத் தொகுதிகளுக்கு (M1, M2 மற்றும் M3) நடைபெற்றது. மற்றும் ஒரு ஆய்வுத் தொகுதி, 2008 இல், இந்தியாவின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா பிரைவேட் லிமிட்டட்டிற்கு வழங்கப்பட்டது. முதன்முறையாக, 2011 ஆம் ஆண்டில், கெய்ர்ன் நிறுவனத்தால், ‘பிளாக் M2’ இல் தோண்டப்பட்ட மூன்று கிணறுகளில், இரண்டு கிணறுகளில் எரிவாயு கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டன. இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம் (PRDS), மன்னார் படுகை மாத்திரம் இரண்டு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் ஒன்பது டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு (9 TCF) உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க முடியும் என்று மதிப்பிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயுவைத் தோண்டும் நோக்கத்துடன், 2019 ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு மீதான தேசியக் கொள்கையை (NPNG) இயற்றிய பிறகு, மன்னார் மற்றும் காவிரிப் படுகைகளில் மீதமுள்ள தொகுதிகளில், ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக, அடுத்த பெரிய உரிமச் சுற்றுக்கான ஏலங்களை அழைக்க ‘PRDS’ திட்டமிட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு ‘அபன் ஆபிரகாம்’ என்ற எண்ணெய் மற்றும் எரிவாயு துறப்பணம் வந்தது. மன்னார் மற்றும் காவிரிப் படுகைகளில் உள்ள M1, M2 மற்றும் C1 தொகுதிகளில் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2019 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டி ஏலங்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்தது. 

ஒரு அமைச்சரவை தீர்மானத்தின் கீழ், இலங்கை அரசாங்கம் ‘TGS NOPEC’ இல் இருந்து மன்னார் படுகையின் ‘2D’ தரவை வாங்கியது. இதன் மூலம் ‘TGS NOPEC’ இலங்கையின் கடற்பரப்பில் நில அதிர்வு தரவுகளை சேகரிக்க இருந்த பிரத்தியேக உரிமையை ரத்து செய்தது. இந்தத் தரவுகளின் அடிப்படையில் மன்னார் படுகை 3340 முதல் 6640 சதுர கிலோமீட்டர் வரையிலான ஒன்பது ஆய்வுத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கூறப்பட்ட ஒன்பது தொகுதிகளில், சர்வதேச உரிமச் சுற்றின் கீழ், பெற்றோலிய ஆய்வுக்காக மூன்று தொகுதிகளை (M1, M2 மற்றும் M3) வழங்க அமைச்சர்கள் அமைச்சரவை முடிவு செய்தது. இருப்பினும், M2 தொகுதியை மட்டுமே வழங்க அமைச்சரவை முடிவு செய்தது. 2008 இல் இலங்கை அரசாங்கம், பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு ஊடாக கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் பெற்றோலிய வள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. அண்மைய அறிக்கையின் படி, இந்நிறுவனம், இலங்கை அரசானது ஏனைய நிறுவனங்களுக்கு மன்னார் படுகையில் ஆய்வு செய்ய அனுமதியளித்தமைக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இது, இந்தியாவின் கம்பெனி என்பதனால் இந்தியாவின் தலையீடு இதற்கு உண்டு .

data 4

மன்னார் படுகையில் (வடமேற்கு) 1,354 மீட்டர் ஆழத்தில் எரிவாயு அமைந்துள்ளது. கெய்ர்ன் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா அதனைத் தோண்டும் பணியைத் தொடங்கியது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னார் படுகையில் இயற்கை எரிவாயுப் படிவு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். லண்டனில் பட்டியலிடப்பட்ட கெய்ர்ன் எனர்ஜி பிஎல்சியின் ஒரு பகுதியான கெய்ர்ன் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்காவால் இந்த கிணறு உருவாக்கப்பட்டது. மன்னார் படுகையில் உள்ள எட்டுத் தொகுதிகளில் ஒன்றைக் கொண்டுள்ள கெய்ர்ன் லங்கா தோண்டும் பணியைத் தொடங்கியது. இது வர்த்தக ரீதியாக வெற்றியடையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதற்கான அறிகுறிகளை சுரண்டுவதற்கான இலங்கையின் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நிலைமைகள் கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளதாக சர்வதேச எண்ணெய் தொழில்துறையில் நன்கு அறியப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன (AsiaNews).

2011 மற்றும் 2013 இற்கு இடையில் கெய்ர்ன் இந்தியா மூன்று ஆய்வுக் கிணறுகளைத் தோண்டியபோது, ​​இரண்டு கிணறுகளான பாரகுடா மற்றும் டொராடோ முறையே ‘1.8TCF’ மற்றும் ‘300 BCF’ என மதிப்பிடப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டன. கெய்ர்ன் இந்தியா இலங்கையில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது, ஆனால் உற்பத்தி உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்ப 1 பில்லியன் டொலர் முதலீடு தேவைப்படும். எனவே, இலங்கைக்கான நன்மைகளை அதிகப்படுத்த, முடிந்தவரை அதிகமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது இன்றியமையாதது; குறிப்பாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் முதலீட்டாளர்களின் விருப்பத்தை மேம்படுத்தியுள்ள எரிசக்தி விலை அதிகரிப்பு ஆகியவற்றின் வெளிச்சத்தில். 

ஒரு அறிக்கை, ஒரு நிறுவனம் 1,354 மீட்டர் நீர் ஆழத்தில் துளையிட்டதாகக் கூறியது. ஆனால் கண்டுபிடிப்பின் வணிக நம்பகத்தன்மையை நிறுவ மேலும் துளையிடுதல் தேவை எனக் கூறப்பட்டது. மன்னார் படுகை எட்டுத் தொகுதிகளைக் கொண்டது. 2007 இல், இலங்கை அரசு, இந்தியாவிற்கு இரண்டையும் சீனாவிற்கு ஒன்றையும் வழங்கியது. ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ‘Gazprom’ இன் அதிகாரிகள் சமீபத்தில் மன்னார் படுகையில் ஆய்வு நடத்துவது குறித்து விவாதிக்க அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.

சுற்றுசூழல் பாதிப்புகள் மற்றும் வாழ்வாதாப் பிரச்சினைகள்

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் அகழ்வு, உயிரினங்களின் இடப்பெயர் பாதைகளைச் சீர்குலைக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயுக் கசிவானது சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்திருக்கும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு என்பது எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்காகத் தோண்டுதல் மற்றும் பிரித்தெடுப்பதற்கான சாத்தியமான தளங்களைக் கண்டறிதல் ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியது. இவை பல அனர்த்தங்களை விளைவிக்கலாம். புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் செயற்பாடுகள் கொடிய காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இது பூமியை வெப்பமாக்கும் ‘கிரீன்ஹவுஸ்’ வாயு உமிழ்வை வெளியிடுவதோடு, புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது காற்று மாசுபாட்டையும் உருவாக்குகிறது.

ஒருங்கிணைந்த எண்ணெய் நிறுவனங்கள் இலாப நோக்கம் கொண்டவை. இவற்றின் திட்டங்கள் நீர், இயற்கை வாழ்விடங்கள் மற்றும் காற்றின் தரம் போன்ற சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்துவதில்லை. எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சக்தி அணுகல் சாலைகள், குழாய்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகள், வனவிலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து துண்டு துண்டாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை சேதப்படுத்துகின்றன. அவை மண் அரிப்பு, வண்டல், தாவர இழப்பு, களைகளின் பரவல் மற்றும் மண் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றன, சமூக விலை அதிகம். அரசில் மீது தள்ளப்படும் இச் சுமைகள் மோதல்களை உருவாக்கும்; மோதல்களுக்கு அனுபவப்பட்ட பிரதேசம் கூடிய விரைவில் தீயாக பற்றிக்கொள்ளும். அணைப்பது சுலபமில்லை.

முடிவு

வெளிப்புற ‘கான்டினென்டல் ஷெல்ஃப் (OCS)’ நமது நாட்டின் எரிசக்தி பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு நீண்ட கால ஆபத்து என்பது, குறைந்து வரும் இயற்கை விநியோகம் ஆகும். எண்ணெய் மற்றும் எரிவாயு சுரண்டலினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் பலவுண்டு. மீன்பிடித் தொழில் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றது. எண்ணெய் வள ஆய்வு நடவடிக்கைகளின் விளைவாக, மீன்பிடிச் சாதனங்களுக்குப் பாதிப்பு உண்டாகலாம். ஆய்வுப் பிரதேசத்தில் மீன்பிடிக்கத் தடை ஏற்படுத்தப்படல், மீன்கள் வாழும் – இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் ஆய்வை முன்னெடுத்தல் போன்றன மீனவர்களுக்கு பொருளாதார இழப்பைக் கொடுக்கலாம்.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில் நடவடிக்கைகளின் போது எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதன் பாதிப்பு, இத்துறை தரும் பொருளாதார வாய்ப்பை விட பல மடங்கு அதிகம். மேலும், வாழ்வாதார இழப்பு, பாரம்பரியத் தொழில் இழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, குறைந்த வருமானம், நியாயமற்ற எண்ணெய்ப் பகிர்வு, வேலையின்மை மற்றும் போதிய இழப்பீடு இன்மை ஆகியவை இதன் பாதிப்புகளுள் அடங்கும். 

எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிலுக்கு உலக அரங்கில் பலத்த ஆதரவு உண்டு. சமீபத்திய ஆண்டுகளில் எண்ணெய் விலைகள், குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. இது எண்ணெய் வளங்களின் மீதான கட்டுப்பாட்டை வளர்ச்சியின் முக்கிய சாத்தியமான இயக்கியாக மாற்றுகிறது. எண்ணெய் வளத்தை தேசிய ஆதாரமாக வைத்திருப்பது, ஒரு நாட்டை பொருளாதார அடிப்படையில் முன்னேற்றக்கூடியது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

நேரடியாகவும் மறைமுகமாகவும் எண்ணெய்யுடன் தொடர்புடைய செயற்பாடுகளால், பொது நிதியை மேம்படுத்துதல், முதலீட்டை ஊக்குவித்தல், வேலைவாய்ப்பை வழங்குதல் போன்ற நன்மைகளும் உண்டு. இருப்பினும், எண்ணெய் பிரித்தெடுத்தல், வர்த்தகம் மற்றும் தொடர்புடைய வருவாய்கள் போன்றன பலவீனமான சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களைக் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க சவால்களையும் கொண்டு வரும். எண்ணெய் போன்ற புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகள், குறைவான இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான பொருளாதார மற்றும் மனித வளர்ச்சியையே அனுபவிக்கின்றன. இந்த முரண்பாடு ‘வளச் சாபம்’ என்று குறிப்பிடப்படுகிறது. வெளிப்படைத்தன்மை மறைந்து, மோதல் மற்றும் எதேச்சதிகார தன்மை அதிகரிக்க வழியுண்டு.

இந்தியாவின் அயற்துறைக் கொள்கை, இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளை தனது நட்பு நாடுகளாக வைத்திருப்பதை நோக்காகக் கொண்டது. அது, இந் நாடுகள் சீனாவின் கைகளை நாடாமல் பார்த்துக் கொள்ளும் உள் நோக்கத்தையுடையது. மன்னார் படுகை எண்ணெய் வள அகழ்வுக்கு இந்தியாவின் ஆதரவு கட்டாயம் கிடைக்கும். இவ் அகழ்வு, தற்போதைய இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவியாகவும் மாறக் கூடும். அவ்வாறு மாறினால், இலங்கையின் பெரும்பான்மைவாத அரசியல் காரணமாக, பொருளாதாரச் சமத்துவமின்மை உருவாக்கப்படலாம். அது ஏனைய சிறுபான்மை இனங்களைப் பாதிக்கும்.  

ஒரு நாட்டின் இயற்கை வளத்தைச் சூறையாட இன்னொரு நாடு அதனை ஆக்கிரமிப்புச் செய்யும் கதைகளை நாம் மனித குல வரலாறு நெடுகவும் வாசித்தறிய முடியும். எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடுகளின் அரசியலில், அவ் வளத்தின் மீது நிகழ்ந்த போட்டிகளின் காரணமாகவே, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்குச் சம காலம் வரை பல உதாரணங்கள் உண்டு. இந்நிலைமை மன்னார் படுகைகளுக்கும் நடக்கலாம். அதனால், பதட்டங்கள் மோதல்கள் உருவாக வாய்ப்புண்டு. 

தமிழ்த் தரப்பு, உடனடியாகச் செய்யவேண்டியது யாதெனில், ஒரு வலுவான, வளம் கொண்ட சமூக ஆய்வு மையத்தை உருவாக்குவதும், எண்ணெய் வள முன்னெடுப்புகள் பற்றிய முழுக் கருத்தாக்கத்தை உருவாக்குவதற்கு, சகலரையும் இணைத்து, சமூகம் சார் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை உடன் ஆரம்பிப்பதுதான். மன்னார் படுகை எமது வளம், ஆழ் கடலின் முதுசம். அதனை, நாம் கவனமாக நிதானத்துடன் கையாள ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது.


ஒலிவடிவில் கேட்க

8541 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்