திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும்

April 24, 2025 | Ezhuna

திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிசின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. திருத்தந்தை பிரான்சிசின் ‘புவிசார் அரசியல்’ என்ற நூல் 2019இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம்.

தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியலைத் தழுவி பதிப்புக்கள் வெளிவந்ததாக அறிய முடியவில்லை. இக்கட்டுரை ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வாசிப்புப் பரப்பில் உள்ள வெறுமையை நிரப்ப முனைவதாக அமையும்.

திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியலை புரிந்து கொள்வதற்கு அவருடைய இலத்தின் அமெரிக்க புவிசார் அரசியலை விளங்கிக் கொள்வது அதிக தெளிவைக் கொடுக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருச்சபை,  கத்தோலிக்க வெளியை நிலப்பரப்பு சார்ந்து புதுப்பித்தல் அல்லது மீளமைத்தல் செயன்முறைக்குள் போக நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய உலக நோக்கிலிருந்தும், நிர்வாக ரீதியிலிருந்தும் இவை மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றிற்கொரு அரசியல் இருப்பதை மறுக்க முடியாது. சர்வதேச தொடர்பாடலில் யதார்த்தவாத கருத்தியலை முன்வைத்து உலக ஒழுங்கு நடைமுறையை ஆய்வு செய்பவர்கள் அரசியல் அதிகார வலுவையும் அவ்வலுவை தக்கவைப்பதற்கான போட்டியையும், இவ்விரண்டிற்கும் இடையேயான உரசலால் ஏற்படுகின்ற அரசியல் பண்பாடு உலக ஒழுங்கை  உருவமைப்பதில் காத்திரமான பங்களிப்பு செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இதிலிருந்தே மத-புவிசார் அரசியல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். உரோமை மையமாகக் கொண்ட பேரரசுக் கட்டமைப்பு, வரலாற்றில் பேரரசுக் கட்டமைப்பை மறுசீரமைப்புக்குட்படுத்தி தொடர்ந்தும் தனது அரசாங்கத்தன்மையை மேய்ப்புப் பணிக்கூடாக முன்னெடுத்து ஏனைய பல்துருவ, இருதுருவ, ஒருதுருவ உலக ஒழுங்கில் பேரரசை உருவாக்கி அரசியல் வலுவை ஒரு மையத்தை நோக்கிக் குவிக்க முற்பட்டவர்களுக்கு ஒரு பெரும் சவாலகவே இருந்து வந்துள்ளது.

தற்போதைய தேச-அரசு கட்டமைப்பிலிருந்து அணுகும்போது அவற்றின் நிலவெளி என்பது எப்போதுமே வரையறைக்குட்பட்டது. ஆனால், உரோமய திருச்சபையின் மேய்ப்புப்பணி வெளி மேற்குறிப்பிட்ட தேச-அரச எல்லைகளைக் கடந்து, அதன் அதிகார வரையறைகளையும் தாண்டிய அரசியல் வலுவைக் கொண்டிருந்தது என்பது நோக்கத்தக்கது. இதற்கு காலனித்துவத்தின் பங்கு மிகவும் காத்திரமானது. வரலாற்றில் ஐரோப்பிய-மைய அல்லது மேற்குலக மைய உலக ஒழுங்கை கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கை மறுதலிக்க முடியாது. அதேநேரத்தில் காலனித்துவமும், கிறிஸ்தவ மதமும் இணைந்து முன்னெடுத்த நவீனத்துவ நாகரிகமயமாக்குதலில் பல பழங்குடி/பூர்வீக குடிகளின் இன அழிப்பு அரங்கேற்றப்பட்டதையும் திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. திருச்சபையின் வரலாற்றுத் தவறுகளுக்காக திருத்தந்தை மன்னிப்பு கோரியுள்ளதும் நினைவுகூரப்பட வேண்டியது. மன்னிப்பு கோரியது மட்டும் தீர்வாகாது என்கின்ற உண்மையையும் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்.

இக்கட்டுரை இலத்தின் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையின் கூட்டு அடையாளக் கட்டமைப்பையும், அது புவிசார் அரசியலில் செலுத்திய செல்வாக்கையும், இக்கட்டமைப்பிற்கு திருத்தந்தையாக வருமுன்  ஜோர்ஜ் பெர்கோலியோவின் பங்களிப்பையும் அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியல் கட்டமைப்பில் ஆசிய மைய நகர்வையும் அவரது சிறிலங்கா திருப்பயணத்தையும் புவிசார் அரசியல் நோக்கிலிருந்து ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.

இலத்தின் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபையும் புவிசார் அரசியலும்

திருத்தந்தை ஆறாவது அலெக்சாண்டரின் (1472-1503) ஆணை, Inter Cantera Divine பூகோளத்தை இரு துருவங்களாக்கியது. ஒரு துருவம் ஸ்பெயினிற்கும், மறு துருவம் போத்துக்கல்லுக்கும் வழங்கப்பட்டது. இவ் ஆணை ஐரோப்பிய கிறிஸ்தவ காலனித்துவத்திற்கு சமய/சட்ட வலுவை வழங்கியது என்றால் மிகையாகாது. இவ்விரண்டு துருவங்களையும் கத்தோலிக்க திருச்சபையே ஒருங்கிணைத்தது. பேரரசுக் கட்டமைப்புகளைக் கடந்து கத்தோலிக்கர்களை ஒருங்கிணைக்கின்ற வலுவை திருச்சபை கொண்டிருந்தது.

பின்-காலனித்துவ அரசியல் வரலாற்றில் புதிய அரசுகளின்  தோற்றம் உருவானதை அரசியல் வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது. இவ் அரசியல் சூழலில் மதச்சார்பற்ற உலகியல் வாதத்தை முன்வைத்து ஒரு அரசியல் கருத்தியல் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அரசும், மதமும் வெவ்வேறானது என்ற பிரிப்பு கட்டமைக்கப்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை ‘மதச்சார்பற்ற அரசு’ கோரிக்கைக்கூடாக அதாவது இறையியல் கோட்பாட்டுத் தன்மையில் விட்டுக்கொடுப்பிற்கு உடன்படாமல் அதன் அரசாங்கத் தன்மையில் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடித்து தனது அரசியல் வலுவை பயன்படுத்திக்கொண்டே வந்ததெனலாம். இதனது ஒரு அலகாக அல்லது உத்தியாக ‘இலத்தீன் அமெரிக்கமயமாக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டு, அது தேச-அரசுகளைக் கடந்த அடையாளத்திற்கூடாக மக்களை ஒன்றிணைத்தது. அதை ஓர் புவிசார் அரசியல் அலகாக அங்கீகரிப்பதன்மூலம் பெருநிலப்பரப்பிற்குரிய/கண்டத்திற்குரிய தோற்றுவாயாக பரிணமித்தது.

அமெரிக்க கண்டமயமாக்கலுக்குள் இலத்தின் அமெரிக்கா புவிசார்ந்து உள்வாங்கப்பட்டாலும் அது தனது தனித்துவத்தை இலத்தின் அமெரிக்கமயமாக்கலுக்கூடான அடையாளத்தினூடு தக்கவைத்துக் கொண்டது. அரசியல் ரீதியாக இலத்தின் அமெரிக்க திருச்சபை என்கின்ற கூட்டு, தேச–அரசுகளைக் கடந்து கூட்டு குழுமமான ஓர் அரசியல் வலுவாக கட்டமைக்கப்படத் தொடங்கியது,  அதுவே பின்னர் புவிசார் அரசியலில் மிகவும் அரசியல் செல்வாக்கான அங்கமாகியது. அடித்தள மக்கள் தொடக்கம் அரசியல் கொள்கை உருவாக்கம் வரைக்கும் இதனது செல்வாக்கை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலத்தின் அமெரிக்கமயமாக்கம் மதத்தைக் கடந்து அந்த நிலப்பரப்பில் வாழுகின்ற அனைவருக்கும் புதிய அடையாளத்தையும், பரந்த குழுமத்தைச் சேர்ந்த ‘கூட்டு’ உணர்வையும் ஒருசேரக் குவித்து, ‘ஹிஸ்பானிக்’ அடையாளத்தை ஊக்குவித்து,  தனித்தன்மையை உறுதியாக உருவாக்க வழிவகுத்தது. மேற்குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக பல்வேறு இயக்கங்கள் உருவானதை அவதானிக்க முடிகின்றது. ‘ஹிஸ்பானிக்’ அடையாள வலுவாக்கத்திலும், முன்னெடுப்பிலும் இலத்தின் அமெரிக்கத் திருச்சபை மிக முற்போக்குள்ள நிலையை கடைப்பிடித்ததோடு, சமூக மறுசீரமைப்பிற்கும் வழிகோலியது. கருத்தியல் கட்டமைப்புக்கும் அதை அகவயப்படுத்துவதற்குமான செயன்முறைக்குமிடையே அதிக இடைவெளி இருந்ததாகத் தெரியவில்லை.

புதிய அடையாள ஏற்பை வலியுறுத்தி உருவான அமைப்புக்கள், காலனித்துவத்தை, பேரரசுக்கட்டமைப்பை, ஏகாதிபத்தியத்தை, பொருளாதாரச் சுரண்டலை, கட்டமைக்கப்பட்ட ஏழ்மை போன்றவற்றிற்கெதிராக போராடுகின்ற சூழலை உருவாக்கியது மட்டுமல்லாது; விளிம்புநிலை தன்னுணர்வு மற்றும் ‘மூன்றாம் வழி’, அபிவிருத்தியடையாத வகையினை கட்டமைத்து, அபிவிருத்தியடையாத கூட்டை நோக்கி பயணிக்க ஏதுவாகியது. மூன்றாம் வழியான இலத்தின் அமெரிக்க ”அபிவிருத்தி” உத்திக்கூடாக நகருவதற்கு காரணமாக அப்போதைய பூகோள அரசியல் சூழல் இருந்தது. அமெரிக்கா முதலாளித்துவத்தையும், சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தையும் கையிலெடுத்து இருதுருவ பூகோள ஒழுங்கை கட்டமைத்தது. இவையிரண்டிற்குமிடையேயான மாற்றாக ”மூன்றாம் வழி” கட்டமைக்கப்பட்டது. Justificialist  என்கின்ற சமூக செயற்றிட்டம் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கியிருந்தது. இக்காலத்தில் எழுந்த அனைத்து புரட்சிகர சமூகமாற்ற செயற்பாடுகளோடும் திருச்சபை தன்னை இணைத்திருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலத்தின் அமெரிக்க திருச்சபை, அடிப்படையில் மாற்றம் தேவை எனக்கருதி பண்டுங் மாநாட்டிற்கு இணையான  (Bandung Conference) பிராந்திய மாநாட்டு முன்னெடுப்புக்களை நோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்திற்குள் வலிந்து  தள்ளப்பட்டது. திருச்சபை ஐரோப்பிய மையவாதத்தைக் கொண்டது என விழித்தெழுந்த இலத்தின் அமெரிக்க கூட்டு உளவியல் பிரக்ஞை ஐரோப்பிய-மையவாத நீக்கத்தை வலுவாக ஆதரித்து, விளிம்புநிலைமைய திருச்சபை கட்டமைக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி அதற்கான வழிவரைபடத்தை தயாரித்துக்கொண்டதை அதன்பின்னர் வெளிவந்த மாநாட்டு ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இலத்தின் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் தொகைப் பெருக்கமும் அவர்கள் எதிர்நோக்கிய அரசியல் யதார்த்தமும், ஏழை மக்களின் வறுமையும், எண்ணிக்கையில் குறைந்த மேட்டுக்குடியினரின் அரசியல், அதிகார பொருளாதார சொத்துக்குவிவும் புதிய வழிமுறைகளைத் திறந்துவிட்டது. ‘மூன்றாம் உலக’ (Third World) கருத்தியலின் உருவாக்கம் இவ் அரசியல் வரலாற்றுச் சூழமைவில்தான் வலுவடையத் தொடங்கியது.

ஜோர்ஜ் பெர்கோலியோ (பின்னாளில் திருத்தந்தை பிரான்சிஸ் – விளிம்பிலிருந்து யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளல்)

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் இலத்தின் அமெரிக்க திருச்சபை தனக்கான புவிசார் அரசியல் கொள்கைகளை மிகத் தெளிவாக வரைந்து அதற்கான உத்திகளைத் தேர்ந்தெடுத்து நகரத் தொடங்கியது. பெருநிலப்பரப்பிற்குரிய/கண்டத்திற்குரிய அகண்ட அடையாளம் இதற்கு அடித்தளமிட்டது. இதன் முன்னணியில் Juan Diego de Guadalupe குழுமம் மிக முக்கிய பங்காற்றியது. அக்குழுவின் முக்கிய செயற்குழு உறுப்பினராக ஜோர்ஜ் பெர்கோலியோ இடம்பெற்றிருந்தார். இக்குழுமம் ‘பெர்கோலியா ஆய்வறிஞர்குழு’ என்றும் அறியப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பெருநிலப்பரப்புவாதம் (Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக்கப்பட்டு, இலத்தின் அமெரிக்க தேசத்திற்கான ஒருங்கிணைக்கும் கருவியாக உபயோகப்படுத்தப்பட்டது. பெர்கோலியாவின் குழு பெருநிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப்படைகளை கட்டமைத்தது மட்டுமல்லாது, இலத்தின் அமெரிக்க திருச்சபை, பூகோளத் திருச்சபையில் எவ்வாறு தனித்துவ பங்களிப்பை வழங்க முடியும் என்கின்ற வழிவரைபடத்தையும் முன்னிறுத்தியது. இதில் குறிப்பாக Aparecida ஆவணம் திருச்சபையின் புவிசார் அரசியலின் போக்கை குறிப்பிடுகின்றது. உதாரணத்திற்கு வெளிநாட்டுக் கொள்கை இலத்தின் அமெரிக்க ஒருங்கிணைப்பில் எவ்வாறு இருக்க வேண்டும் என அடிக்கோடிடுகிறது. ஒருங்கிணைவு வேறுபாட்டை ஊக்குவிக்கின்றது என்ற ஏற்பு, ஏக பண்பாட்டை ஏற்றுக் கொள்வதல்ல.

மேற்குறிப்பிட்டதன் ஒரு அலகாகவே ‘பொதுமக்கள் இறையியலை’ நோக்க வேண்டும். பொதுமக்கள் இறையியல் மேய்ப்புப்பணி அரசாங்கத் தன்மையையும் (Pastoral Governmentality) புவிசார் அரசியலையும் ஒரே சட்டகத்திற்குள்ளிருந்து அணுக முயற்சிக்கின்றது. இவற்றிற்கு அடிப்படையான கருத்தியலாக மக்கள்-தேசம் (People Nation)  இருப்பதோடல்லாமல், மக்களை ஒருங்கிணைக்கின்ற வெளியை உருவாக்கி சுயநிர்ணய உரிமைக்கான விருப்புரிமையை வழங்குகின்றது. இது விளிம்புமையக் கட்டமைப்பை மாற்றாக முன்வைக்கின்றது.

திருத்தந்தை பிரான்சிசின் வரலாற்றுப் பரிணாமம் விளிம்புமைய புவிசார் அரசியலை உள்ளடக்கமாகக் கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய விரிவாக்கத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு நபராக இருந்ததை அவதானிக்க முடிவதோடு பல்வகைத் தன்மையை யதார்த்தமானதாக, இயற்கையானதாக அங்கீகரித்து; ஐரோப்பிய அல்லது ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புகளின் ஏக பண்பாட்டு அரசியல் திட்டத்திற்கு ஒவ்வாததாக அதை மறுதலிக்கின்ற அல்லது அதற்கு மாற்றான ஒரு கருத்தியலை, ஒழுங்கை முன்னிறுத்தி நகர்வது துணிகரமிக்கது.

இச்செயற்றிட்டம் மக்களை மக்களாகவே பார்க்கின்ற, அவர்களது கூட்டு இருப்பை உறுதி செய்வதாக அமைகின்றது. ஐரோப்பிய-மைய பார்வையை அல்லது எல்லாவற்றையும் ஐரோப்பிய/மேற்குல மையத்திற்கூடாக நோக்குகின்ற பார்வைப் பரப்பு இல்லாது போதல்  என்பது ஏறக்குறைய ஏகாதிபத்திய பேரரசின் அலகுகளை இல்லாமற் செய்தலாகும். மூன்றாவது வழியூடான அணுகுமுறைமை மற்றமைகளை (Other) மையப்படுத்தி அவர்களை வரலாற்றின் கதாபாத்திரங்களாக உருவகித்து விடுதலையை உள்ளீடாகக்கொண்ட அணுகுமுறையை எல்லாவற்றிலும் விரிவுபடுத்துகின்றது.

திருத்தந்தை தற்போதைய அரசியல் உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். ஜோன் ஜக்கென்பெறி குறிப்பிடுகின்ற ‘மூன்று உலகங்கள்’; மேற்கு, கிழக்கு, தெற்கு, உலக ஒழுங்கை வடிவமைக்கையில் எழுகின்ற போட்டி. இதில் குறிப்பிடப்படும் மேற்குலகு-ஐக்கிய அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் உள்ளடக்கியது. கிழக்குலகு-சீனாவையும் ரஷ்யாவையும், தெற்குலகு மேற்குலகல்லாத அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைக் குறிக்கின்றது. மேற்குலகு நவதாராளவாத சனநாயகத்தையும் கீழைத்தேசம், மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமத்துவ இறைமையை, தனித்துவத்தை, பல்வகைமையை, அபிவிருத்தியை மனித உரிமையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இவ்விரண்டுமே ஏகாதிபத்திய அதிகாரத்திற்கான போட்டியை தெற்கு நோக்கியும், தெற்கில் மேலும் பரவலாக்குவதற்கு முயற்சிக்கின்றது. தற்போதைய  உலக ஒழுங்கு மிகை ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருப்பதை அவதானிக்கும் எவரும் அவற்றை கண்டிக்கத் தவற மாட்டார்கள். திருத்தந்தை பிரான்சிசும் தற்போதைய உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார்.  அவர் கண்டிப்பதற்குரிய காரணத்தின் வரலாற்றுப் பின்னணி பற்றிய தெளிவு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

 திருத்தந்தை பிரான்சிஸ் தெற்குலகில் இருந்தே (ஆர்ஜென்டீனா) உதயமாகிறார். ஐரோப்பிய மைய திருச்சபைக்கு இது பெரும் சவாலாக இருந்திருக்கலாம். தனது பதவிக்காலத்தில் திருச்சபையை விளிம்பு மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தமை அவரது நியமனங்கள், எழுத்துக்கள், உரைகள், பயணங்களின் மூலம் தெரியவந்தன. அதேபோல் உலக யதார்த்தத்தையும் விளிம்புநிலை மையத்திலிருந்து நோக்க வேண்டிய தேவையை கற்பிதமாக  அறிமுகப்படுத்தியிருப்பது பிரளய மாற்றமாக கருத வேண்டியிருக்கும். விளிம்புநிலை மைய நோக்குநிலை, ஏக பார்வையைத் தவிர்த்து பல்வகைமையை யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாது, வேறுபாட்டை அச்சத்திற்குரியதாகக் கருதாமல் பாராட்டப்பட வேண்டியதாக அணுகுகின்றது. இவ்வாறான அணுகுமுறை காலனித்துவம், நவதாராளவாத முதலாளித்துவம் உருவாக்கும் மற்றமைகளை(Others) கதாநாயகர்களாக அல்லது திருச்சபையின் மையமாக மாற்றுவது; மேற்குலகு பார்க்க விரும்பும் யதார்த்தத்தையும், யதார்த்தத்தை ஆய்வுமுறைக்குட்படுத்தும் முறையியலையும் முற்றிலும் கேள்விக்குட்படுத்துகின்றது. இவ்வாறான முறையியலை அங்கீகரிப்பது மாற்றம் விளிம்பு நிலையிலிருந்து மட்டுமே வர முடியும் என்ற பட்டறிவிலிருந்து எழுகின்றது.  அப்பட்டறிவுக் கோட்பாட்டு மையத்திலிருந்து விலகி மக்கள் மையத்திலிருந்து புறப்படுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் இம்முறையியலை புவிசார் அரசியலுக்கும், இறையியலுக்கும் அவசியமானதாக மாற்றினார்.

புவிசார் அரசியலில் ஆசிய-மையத்தின் முக்கியத்துவம்

திருத்தந்தை  பிரான்சிசின் புவிசார் அரசியலில் ஆசியா இரு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றதாக Enrico Beltramini குறிப்பிடுகின்றார். முதலாவது, ஆசியாவின் அரசியல், சமூக, பொருளாதார, யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளல் அதாவது, கட்டமைக்கப்பட்ட அநீதியின் விளைவையும் அதிலிருந்து மீளெழ முயலும் மக்களின் வாழ்வும், அதே நேரத்தில் மேற்குலகின் அசிரத்தையும் உள்ளடக்கும். இரண்டாவது ஆசிய மையம் மேற்குலக ஏகாதிபத்தியத்தையும் மேற்குலக பேரரசுக் கட்டமைப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றது.  விளிம்புமையத்தை நோக்கி நகர்தலிலே ஆசிய மையம் முக்கியத்துவம் பெறுகின்றது. திருச்சபையின் மையம் விளிம்புநிலையில் இருக்க முடியுமே தவிர, மேற்குலக மையத்திலே அல்ல என்பது அவரது திடமான நம்பிக்கை. இந்நகர்வு ஆசிய பல்வகைத்தன்மையை அங்கீகரிப்பது  மட்டுமல்ல மேற்குலக இறையியல் அணுகுமுறையை அல்லது அறிவுசார் முறையியலைக் கேள்விக்குட்படுத்தி பூர்வீக முறையியலை, ஏற்கனவே ஆசியாவில் வெவ்வேறு நாகரிக மரபுகளுக்கூடாக வரும் முறையியலை ஊக்கப்படுத்துவதாகும். இம்முறையியல் அணுகுமுறை, விடுதலை, கிறிஸ்தவத்திலிருந்து மட்டும்தான் வரமுடியும் என்ற காலனித்துவ ஏக வழியை விடுத்து, ஆசியாவில் உள்ள பல் மதங்கள் கூறும் விடுதலை முறைமையையும் ஏற்றுக்கொள்வதாகும். இம்முறையியல் மேற்குலகு கட்டமைக்க முயலும் ஏக பேரரசுக் கட்டமைப்பைக் கட்டவிழ்க்கின்றது மட்டுமல்லாது, ஆசியாவை மேற்குலகு அடிமைப் பண்பாக கருதுகின்ற, அல்லது தனது நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற செல்நெறியை உடைக்கின்றது. இதன்மூலம் மேற்குலகின் வீழ்ச்சியையும், கீழக்குலகின் எழுச்சியையும் மறைமுகமாக சுட்டுவதாக அமையும். திருத்தந்தை பிரான்சிசின் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படும் வாசகமாக இருப்பது: “யதார்த்தத்தை மையத்திலிருந்து நோக்குவதைவிட விளிம்பிலிருந்து பார்ப்பது அதிக தெளிவைத் தரும்”.

காலனித்துவத்திலிருந்து மீளெழும் நாடுகளில் காலனித்துவத்தின் எச்சங்கள் தொடர்ந்தும் காலனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும். அவ்வாறான தன்மையை Coloniality  என்ற பதத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். Coloniality என்பதை காலனித்துவத் தன்மை என்று மொழிபெயர்த்தால், மேற்குலக அறிவு உருவாக்கம் மிக முக்கியம் பெறுகின்றது. மேற்குலக அறிவுக் கட்டமைப்பு அதற்கான முறையியலைக் கொண்டுள்ளது. அதையே அது ஏனையவற்றிலும் பார்க்க அதிக தரமுள்ளதாக கட்டமைத்து தர உயர்வாக வெளிக்காட்டுகின்றது. இம்முறையியல் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்குரிய உத்தியாக பயன்படுத்தப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஆசியாவை மையமாக நகர்த்தல், மேற்குலக அறிவுக் கட்டமைப்பு முறையியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இவ்வாறான செயற்றிட்டம் மேற்குலக- கிழக்குலக உரசல்களுக்கும், இறுக்கத்திற்கும் வழி கோலும் என்பது அறியாததல்ல.

”சீனாவின் எழுச்சியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்ற திருத்தந்தையின் கூற்றும், அதைத் தொடர்ந்த கருத்துரையும், ”மேற்குலகு கிழக்குலகு, சீனா இவையெல்லாமே அமைதிச் சமநிலையைப் பேணுவதற்குரிய கொள்திறனையும் செயற்திறனையும் கொண்டிருக்கின்றன. நாங்கள் இதனை அடைவதற்கான உத்தியாக உரையாடலை பயன்படுத்த முடியும். கலந்துரையாடலைத் தவிர வேறு வழி கிடையாது”. அவர் சீனாவைத் தனது நண்பனாக கருதுவதாகவும் தொடர்ந்தும் உறவுகளையும் தொடர்புகளையும் பேண விரும்புவதாகவும் காட்டிய அறிகுறி திருத்தந்தை பிரான்சிஸ் தூரநோக்கோடு  கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்கிலிருந்தே அவதானிக்கப்பட வேண்டும். இவ்வாறான அவதானிப்பு மேற்குலகு, சீனாவை அணுகும் விதத்திலிருந்து- வெறுமனே பொருளாதார அரசியல் வல்லரசாக அல்லாமல் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றதை வலுப்படுத்தி சமத்துவத்தை ஆழப்படுத்துவதைச் சுட்டி நிற்கின்றது. வத்திக்கான் சர்வதேச தொடர்புகள் சார்ந்தும் புவிசார் அரசியல் சார்ந்தும் செப்ரெம்பர் 22 2018இல் (வத்திக்கானுக்கும் சீனாவுக்குமிடையில்) கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை ஒரு மைல்க்கல் ஆகும்.

இந்த உடன்படிக்கைக்கு எதிராக தாய்வான் போர்க்கொடி தூக்கியதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. தாய்வானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையிலான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் இருக்கின்ற உறவுகளையும் அவதானிப்பது சிறந்தது.

 ஒரு சில ஆய்வாளர்கள் Brics , Brics Plus இன் எழுச்சியையும் இதே கோணத்தில் பார்க்க விரும்புவர். மேற்கூறப்பட்டவற்றின் எழுச்சிக்கும் திருத்தந்தை பிரான்சிசுக்குமிடையேயான நேரடித் தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாவிட்டாலும் திருத்தந்தை பிரான்சிஸ் Brics Plus இன் எழுச்சியை மாற்று உலக ஒழுங்கிற்கான அடிப்படையாக பார்க்கும்போது மகிழ்ச்சியடைந்திருக்கலாம் என்பது சிலரது கருத்து.

திருத்தந்தை பிரான்சிசின் பயணங்களையும் அவர் கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவது இலகுவாயிருக்கும்.

திருத்தந்தையின் பயணங்களை  புவிசார் அரசியல் கோணத்திலிருந்து ஆய்வு செய்பவர்கள் முன்னிருந்த திருத்தந்தையர்களின் பயணங்களிற்கும் பிரான்சிசின் பயணங்களிற்குமிடையேயான இடைவெளியை அவதானிக்கத் தவறுவதில்லை. அவற்றில் ஆசியாவை நோக்கிய பயணங்கள் மிக  அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் 12நாட்களாக தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, பப்புவா நியூகினி, கிழக்கு தீமோர், சிங்கப்பூர் பயணங்கள் மிக அவதானிப்பு பெற்றவையாகக் கருதப்படுகின்றன.

சிறிலங்கா பயணம்  

திருத்தந்தை பிரான்சிஸ் 2015இல் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவின் ஒற்றையாட்சி சனநாயக மாதிரி, மையத்தில் அதீத அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ளது. கொழும்பு சிறிலங்காவின் அதிகார மையமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. போரின் பின்னரான வரலாற்றுக் காலப்பகுதியில் ஒரு சில அரசியல் தலைவர்களைத் தவிர வேறு எவருமே வடக்கிற்குப் பயணித்ததில்லை. அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ பயணங்களும் பார்வையிடலும் கொழும்பை மையப்படுத்தியதாக வரையறைப்படுத்தப்பட்டிருக்கும். கொழும்பைத் தாண்டினால் அது பௌத்த விகாரையை பார்வையிடுவதாக அமைந்திருக்கும். கொழும்பு மையத்திற்கும், பௌத்த விகாரைக்குமான தொடர்புகள் சிறிலங்காவின் சிங்கள-பௌத்த அடையாளத்தை வலியுறுத்தி ஆழப்படுத்தப்படுவதற்கான முயற்சிகளாகவே இந்த இணைப்புக்களையும் இணைப்புக்களிலுள்ள  இடைவெளிகளையும் நோக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சிறிலங்காவின் அரசியல் அதிகாரம் மட்டும் கொழும்பில் மையப்படுத்தப்படவில்லை. சிங்கள கத்தோலிக்க மையமும் கொழும்பில்தான் மையப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சி மீயுயர் சொல்லாடலிற்குள் சிங்கள கத்தோலிக்க திருச்சபை உள்வாங்கப்பட்டது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நிறையவே உள்ளன. ஆனால் அவை ஒரு ஆய்வு நூலாக இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒரு சில உதாரணங்களாக, சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் ”ஒரு நாடு ஒரு தேசம்” என்கின்ற ஏற்பு: நீர்கொழும்பு, சிலாபம், கரையோரங்களிலிருந்து தமிழ்ப்பாடசாலைகள் சிங்களமயமாவதற்கு சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மிக முக்கியமானது.

 2015இற்கு முன்னர் வருகை தந்த திருத்தந்தையர்கள் கொழும்பை மட்டுமே இலக்காக கொண்டிருந்தனர். திருத்தந்தையர்களின் கொழும்பை மையப்படுத்திய உத்தியோகபூர்வ பயணங்கள், சிங்கள கத்தோலிக்கர்கள் மத்தியில் சிறிலங்காவின் ஒற்றையாட்சித் தன்மையை இன்னும் அதிகமாக வலுப்படுத்தியது எனக்கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது. 2015இல் திருத்தந்தையின் பயணம் போரின் பின்னர் தற்போதைய சிங்கள பௌத்த அரசின் அடிப்படை கருத்தியலானது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அப்போது பதவியிலிருந்தவர்களுக்கு தமிழ் இன அழிப்பின் பின்னரான அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்துவதற்கு திருத்தந்தையின் பயணத்தை பயன்படுத்தியிருக்கலாம்/ பயன்படுத்தப்பட்டது. இதுபற்றி வடக்கு கிழக்கிலிருந்தே தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இப்பயணத்தின் ஆபத்தை வத்திக்கான் பிரதிநிதியூடாக தெளிவுபடுத்தியிருந்தனர்.

 தமிழ் இன அழிப்பு உச்சந்தொட்ட முள்ளிவாய்க்காலுக்கும் வருகைதர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கான வருகை வரலாற்றில் இடம்பெற்றிருந்தால் அதை தமிழ் இன அழிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என்பதை அறிந்த கொழும்புமைய கத்தோலிக்கத் திருச்சபை அப்போது அதிகாரத்திலிருந்த மகிந்த குடும்பத்துடன்  இணைந்து நிச்சயமாக தடுத்திருக்க வேண்டும் என்று ஊகிப்பதைத் தவிர வேறு முன்னெண்ணம் கொள்ள முடியாது. அதே கொழும்புமைய திருச்சபைதான் மகிந்தவையும் அவரது பரிவாரங்களையும் திருத்தந்தையை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்பதை வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது.

அப்போதிருந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் நெருக்குவார அழைப்பின் பேரிலேயே மடுவிற்கான திருத்தந்தையின் பயணம் அமைந்திருந்ததை மறுக்கவியலாது. திருத்தந்தை அப்போதிருந்த அரசியல் நிலைமையை ஓரளவிற்கு அவரது பட்டறிவிலிருந்து  விளங்கிக் கொண்டிருந்தாலும் முழுமையாக விளங்கிக் கொண்டாரா அல்லது அது பற்றிய தெளிவு கொடுக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனாலும் புவிசார் அரசியல் சார்ந்தும், திருத்தந்தை கொண்டிருந்த விளிம்புநிலை மைய நம்பிக்கையிலும் மடுப்பயணம் முக்கியம் பெறுகின்றது. மடுப்பயணம் கொழும்புமைய அதிகாரக் குவிப்பை கேள்விக்குட்படுத்தியதோடு விளிம்புநிலை நோக்கி சிறிலங்கா திருச்சபை நகர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. சிறிலங்கா திருச்சபை இனரீதியில் பிளவுபட்டிருப்பது வெள்ளிடைமலை.

மடுவிற்கான பயணம் ஒரு வகையில் ஈழத்தமிழ் மைய திருச்சபையின் எழுச்சிக்கான அவசியத்தை கோடிட்டு அங்கீகரித்துக் கொண்டது என்ற உண்மை வரலாற்றுப் பதிவாகியது. தமிழ்த்தேச விடுதலை நோக்கிலிருந்து ஈழத்தமிழ் திருச்சபை எழுச்சி காண வேண்டும் என்கின்ற வேணவா போரின் பின்னான அரசியல் வெளியில் இன்னும் காத்திரமாக வலியுறுத்தப்பட்டது. நீதியை, விடுதலையை மையப்படுத்தி ஈழத்தமிழ் திருச்சபை எழுச்சி காணவேண்டும் என்கின்ற கனவோடு திருத்தந்தையின் மடுப்பயணம் நிறைவுற்றிருக்கலாம்.

உசாத்துணைகள்

  1. Allen. Jr, John L. ‘BRIC by BRIC, the Foundation for Pope’s Geopolitical Endgame Is Being Laid’. Crux, 27 August 2023. https://cruxnow.com/news-analysis/2023/08/bric-by-bric-the-foundation-for-popes-geopolitical-endgame-is-being-laid/.
  2. Barbato, Mariano P. ‘Geopolitics of Papal Traveling: (Re)Constructing a Catholic Landscape in Europe’. Religions 11, no. 10 (October 2020): 525. https://doi.org/10.3390/rel11100525.
  3. Beltramini, Dr Enrico. ‘The Church of the Periphery and the Catholic Pivot to the Indo-Pacific’, n.d.
  4. Beránek, Ondřej. ‘The Geopolitics of Pope Francis’ Latest Tour’. European Values Center for Security Policy (blog), 16 September 2024. https://europeanvalues.cz/en/the-geopolitics-of-pope-francis-latest-tour/.
  5. Ikenberry, G John. ‘Three Worlds: The West, East and South and the Competition to Shape Global Order’. International Affairs 100, no. 1 (8 January 2024): 121–38. https://doi.org/10.1093/ia/iiad284.
  6. Kratochvíl, Petr, and Jana Hovorková. ‘Papal Geopolitics: The World According to Urbi et Orbi’. In Modern Papal Diplomacy and Social Teaching in World Affairs. Routledge, 2019.
  7. Løland, Ole Jakob. ‘The Political Theology of Pope Francis: Understanding the Latin American Pope’. Routledge & CRC Press. Accessed 22 April 2025. https://www.routledge.com/The-Political-Theology-of-Pope-Francis-Understanding-the-Latin-American-Pope/Loland/p/book/9781032392882.
  8. ———. ‘The Solved Conflict: Pope Francis and Liberation Theology’. International Journal of Latin American Religions 5, no. 2 (1 December 2021): 287–314. https://doi.org/10.1007/s41603-021-00137-3.
  9. Lynch, Andrew P. ‘A Global Papacy: The International Travels of Pope Francis and Geopolitics’. In Research in the Social Scientific Study of Religion, Volume 30, 258–373. Brill, 2019. https://doi.org/10.1163/9789004416987_022.
  10. Mcaleer, Graham James. ‘Aquinas and the Geopolitical Thinking of Pope Francis’. Revista Portuguesa de Filosofia 79, no. 1/2 (2023): 531–48.
  11. Puntigliano, Andrés Rivarola. ‘The Geopolitics of the Catholic Church in Latin America’. Territory, Politics, Governance 9, no. 3 (27 May 2021): 455–70. https://doi.org/10.1080/21622671.2019.1687326.
  12. Raditio, JB Heru Prakosa and Klaus H. ‘Pope Francis, Power Rivalry and the Global Order’. Accessed 22 April 2025. https://asianews.network/pope-francis-power-rivalry-and-the-global-order/.
  13. SJ, Vladimir Pachkov. ‘BRICS Plus: An Alternative to the Current World Order? -’. LA CIVILTÀ CATTOLICA, 29 November 2023. https://www.laciviltacattolica.com/brics-plus-an-alternative-to-the-current-world-order/.
  14. Volder, Jan De, ed. The Geopolitics of Pope Francis. 1st edition. Leuven: Peeters, uitgeverij, 2019.


ஒலிவடிவில் கேட்க


About the Author

எழில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஆய்வாளரான அருட்தந்தை எழில் அவர்கள், தன்னுடைய முதுகலைமாணிப் பட்டப்படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் நிறைவு செய்துள்ளார்.

இவர், தமிழின விடுதலை சார்ந்த அநுபவங்களை உள்ளடக்கிய ‘உள்மை’ என்ற கவிதைத் தொகுப்பை 2006 ஆம் ஆண்டிலும், 2009 இற்குப் பின்னரான தமிழ்த் தேசிய வெளி, தமிழ்த் தேசிய அரசியற் கருத்தியல் சார்ந்த பத்திகளின் தொகுப்பை ‘பின்முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்