(யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் – 2024’ இல் வழங்கப்பெற்ற நினைவுப் பேருரை.)
எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்தித்து, இந்த நிகழ்வைத் தலமையேற்று நடத்துகின்ற யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் அருட்பணி. ஜெறோம் செல்வநாயகம் அடிகளார்களே, இங்கு பிரசன்னமாயிருக்கும் தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் இயக்குனர் அருட்கலாநிதி.அ.பி. ஜெயசேகரம் அடிகளார் உள்ளிட்ட அருட்தந்தையர்களே மற்றும் அருட்சகோதரிகளே, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் தகைசால் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களே அவர் தம் பாரியார் கலாநிதி. மனோன்மணி சண்முகதாஸ் அம்மையார் அவர்களே, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, செயலாளர் செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களே, அங்கத்தவர்களே, திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் திரு. யோன்சன் ராஜகுமார் அவர்களே, அரங்கம் நிறைத்துள்ள பெரியவர்களே மற்றும் பாடசாலை மாணவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கங்கள்.
தமிழ் மொழியின் தனித்துவத்தையும் அதன் ஆழ அகலத்தையும் தனது ஆய்வுப் பணிகளின் ஊடாகவும் அறிவுப்பரவலாக்கச் செயன்முறைகளின் ஊடாகவும் பல தளங்களுக்கு எடுத்துச் சென்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவரங்க நாளில் நாங்கள் சந்தித்து இருக்கின்றோம். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பல பணிகளினுள் தனிநாயகம் அடிகள் பற்றிய நினைவுகளை சமூகப் பரவலாக்கம் செய்ய அவ்வப்போது எடுக்கும் இந்த நினைவரங்கம் மிகவும் காத்திரமானது. பல பரிமாணங்களில் காலத்தனித்துவமிக்கது. வருடம் தோறும் தொடர்ச்சியாக இவ் நினைவரங்கு தவறாது நிகழ்த்தப்பட வேண்டியது மிகவும் அவசியமான தமிழ்த் தொண்டாகும்.
இவ் வருடம் இவ் அரங்கத்தில் தனிநாயகம் அடிகள் தொடர்பில் நடைபெறும் இரண்டாவது நினைவரங்கம் இதுவாகும். கடந்த சித்திரை மாதம் 21 ஆம் திகதி தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் மற்றும் யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவை என்பவற்றின் ஏற்பாட்டில் ஒரு நினைவரங்கம் இடம்பெற்றது. அதில் தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் எனும் தலைப்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு. சின்னப்பன் நினைவுரையாற்றியிருந்தார். அந் நிகழ்வில் காலப் பொருத்தமின்மையால் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இணைந்து கொள்ளமுடியாது போனமை வருத்தமே.
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ச் சமூகத்துக்கான, அதுவும் குறிப்பாக ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கான பங்களிப்பு என்பது பல பரிமாணங்களில் நன்றியுணர்வுடன் நினைக்கத்தக்கது. அவரது பங்களிப்புகளினால் விளைந்த நேரடி அனுகூலங்கள் குறித்து கணிசமானளவு பதிவுகள் உள்ளன. அதேவேளை அடிகளாரின் முயற்சிகளின் விளைவாக நிகழ்ந்த பல வெளித்தெரியாத விடயங்கள் குறித்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அத்தகைய விடயங்களுக்குள் முதன்மையானதாக நான் கருதுவது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றம். தமிழ்ப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை பல தசாப்தங்களாக விடுக்கப்பட்ட போதும் அது அரசாங்கத்தினால் செவிசாய்க்கப்படவில்லை. கோரிக்கைகளுக்குச் சமனாக நிராகரிப்புக்கான முன்மொழிவுகளும் அரசாங்கத்துக்கு முன்வைக்கப்பட்டிருந்தன. நிராகரிப்புக்களுக்குப் பின்னாலும் வலுவான நியாயப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது விடயப் பொருத்தமற்றது என கருதுகின்றேன்.
அதேவேளை தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தினர் திருகோணமலையை மையப்படுத்தி தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு அதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளில் ஏற்கனவே இறங்கியிருந்தனர். முன்னதாகவே நாவலர் மண்டபம் எனும் பெயரில் கொழும்பில் ஒரு நிலையத்தை ஆரம்பித்து அதனை ஒரு பல்கலைக்கழகத்துடன் சேர்த்திணைக்கப்பட்ட நிறுவனமாக தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் இயக்க ஆரம்பித்திருந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் முன்னெடுத்த தன்னாண்மை மிக்க ஒரு பல்கலைக்கழகத்தை தாபிக்கும் முயற்சிகள் பல காரணிகளால் கைகூடவில்லை.
இப் பின்னணியில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனிநாயகம் அடிகளாரின் பெருமுயற்சியின் விளைவாக பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தலமையில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அவ் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசுக்கும் யாழ்ப்பாண மாநகரத்தை நிர்வகித்த அரசியல் தலமைக்கும் மனவிருப்பு இருக்கவில்லை என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உங்களுள் சிலர் அந்தக் காலத்தின் சாட்சியமாகவும் இருக்கின்றீர்கள்.
தமிழாராய்ச்சி மாநாடும் அது நடத்தப்பட்ட போக்கும் அதில் பங்கு கொண்டவர்களின் துறைசார் தகமையும் ஒரு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் முயற்சிக்கு ஈடான தகமையை தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு கொடுத்திருந்தது. மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய தனிநாயகம் அடிகள் தனது உரையை பின்வருமாறு ஆரம்பிக்கின்றார்.
“சங்க இலக்கியத்தில் கூறிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் கொள்கையையும், இந்த நூற்றாண்டில் பாரதியார் கூறிய ‘திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ எனும் கோட்பாட்டையும் அடிப்படைக் கொள்கைகளாக கொண்டிருப்பது அனைத்து உலக தமிழ் ஆராய்ச்சிக் கழகம். இந்தக் கழகம் ஆற்றி வரும் தொண்டுகள் பல. உலகில் உள்ள தமிழ் அறிஞர் பலரையும் ஒன்று சேர்ப்பதும் அவர்களை அறிமுகப்படுத்துவதும் அவர்கள் ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதும் இந்தக் கழகத்தின் சிறப்புப் பணிகள். இக் கழகம் ஓர் ஆராய்ச்சிக் கழகம். அதுவும் பல்கலைக்கழக நிலையில் உள்ள ஆராய்ச்சிக் கழகம்.” (நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு, 1977) என ஆரம்பித்த தனது உரையை அடிகளார் பின்வருமாறு நிறைவு செய்கின்றார்.
“யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று இருந்திருந்தால் இந்த மாநாட்டினை இன்னும் எவ்வளவோ சிறந்த முறையில் நடத்தியிருக்கலாம். தமிழ் ஆராய்ச்சி நம் நாட்டில் வளர்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் பல்கலைக்கழகங்கள் வேண்டும்.” (நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு, 1977)
இந்த உரையின் உட்பொருள் வடக்கிலும் கிழக்கிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தை அழுத்துவதாக அமைந்திருந்தது. உலகப் பல்கலைக்கழகங்களுடன் மிகவும் அணுக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த அடிகளாரும் அவருடன் சேர்ந்திருந்த கூட்டமும் தனியாகவே ஒரு பல்கலைக்கழகத்தை தாபிக்கும் வல்லாண்மை கொண்டது என்பது வெளிப்படையாக உணரத்தக்க விடயமாகவிருந்தது. இப் புலமைத்துவக் கூட்டத்துக்கு இயைபுள்ள ஆட்சி அதிகாரம் அமைகின்றபோது அவர்களது முயற்சியால் தமிழ்ப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் தோன்றுவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. ஆட்சி மாற்றத்துக்கான சூழ்நிலைகளும் இருந்தன. இது இப் புலமைத்துவக் கூட்டத்துக்கு எதிர்க் கூடாரத்தில் இருந்த புலமைத்துவ அணியினருக்கும் புரிந்திருந்தது.
அத்துடன் தமிழாராய்ச்சி மாநாட்டுக்குப் பின்னர் நடைபெற்ற துன்பியல் சம்பவங்களின் காரணமாக ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் மீதும் அதனது யாழ்ப்பாணப் பிரதேசப் பிரதிநிதிகள் மீதும் தமிழ் மக்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள். அந்தக் கோபம் தேர்தல் அரசியலில் தாக்கம் செலுத்தும் என்பது வெளிப்படையானதே. இதனால் தமிழ் மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு ஏதும் செய்தாக வேண்டும் எனும் அவசியம் அரசுக்கு ஏற்பட்டது. அரசுக்குச் சார்பான புலமையாளர்களுக்கும் அந்நிலையில் அரசுக்கு துணைசெய்ய வேண்டிய கடமையிருந்தது.
இந்தச் சூழ்நிலைப் பின்னணிகளில் அரசு எடுக்கும் முடிவு தமிழ் தேசியச் சார்புமிக்க அரசியல் தலைவர்களது சித்தாந்தத்துக்கு முரணானதாகவும் அமைய வேண்டும் என்பதும் அவசியமாகவிருந்தது. தமிழ்த் தேசியச் சார்புமிக்க அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கான பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் அமைப்பதிலேயே குறியாகவிருந்தனர். அவர்களது சிந்தனைக்கு மாறாகவும் அரசு மீது கோபத்துடன் இருந்த யாழ்ப்பாண மக்களைச் சாந்தப்படுத்தவும் அரசு எடுத்த திடீர் முடிவுதான் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை நிறுவும் முயற்சி. தமிழாராய்ச்சி மாநாடு நிறைவுற்று ஆறு மாத காலப் பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகம் ஒன்றைத் தனியாக அமைப்பதற்குரிய எந்தவிதமான பௌதிக வளத் தேவைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படாமல் பரமேஸ்வராக் கல்லூரியினதும் யாழ்ப்பாணக் கல்லூரியினதும் சொத்துகளைச் சுவீகரித்து யாழ்ப்பாண வளாகம் அமைக்கப் பெற்றது வரலாற்றில் பதியப்பட்டுள்ள செய்தியாகும்.
இந்த வரலாற்றுப் போக்குகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றுவாய்க்கு நான்காவது தமிழாராய்ச்சி மாநாடும் அதற்காய் உழைத்த தனிநாயகம் அடிகள் போன்றவர்களின் பங்களிப்பும் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியுள்ளது.
இந்த வருடம் (2024) யாழ்ப்பாணப் பல்கலைகழகம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவுசெய்து பொன்விழாக் காண்கின்றது. இந்த ஆண்டு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. நான்காவது தமிழராய்ச்சி மாநாடு நடைபெற்றும் ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அத்தோடு இது சுவாமி விபுலானந்தர் துறவு பூண்ட நூற்றாண்டு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தரும் தனிநாயகம் அடிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டவருமான பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நூற்றாண்டும் கூட. மேற்குறிப்பிட்ட இந் நிகழ்வுகள் ஏதோவொரு வகையில் நினைவுகூரப்பட்டுள்ளன. அதேவேளை இவ்வாண்டு இலங்கைப் பல்கலைக்கழக முறைமையின் தந்தை எனக் கொண்டாடத்தக்க சேர்.பொன். அருணாசலத்தின் சிரார்த்த நூற்றாண்டு. ஆனால் அந் நிகழ்வு அவ்வளவு கவனம் கொடுக்கப்பட்டு நினைக்கப்பட்டதாக நான் கருதவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமூக விஞ்ஞான மற்றும் மனிதப் பண்பியல் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது. இந்த நிகழ்வை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது. அதன்போது இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படும் சமூக விஞ்ஞான மனிதப் பண்பியல் கற்கைகளினதும் அவற்றைப் போதிக்கும் பீடங்களினதும் மற்றும் துறைகளினதும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய ஒரு தொகுப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இத் தொகுப்பில் சேர்.பொன். அருணாசலம் அவர்கள் குறித்து மிகச் சிறியளவில் ஒரு குறிப்பு இருந்தது. ஆனால் அவரது பங்களிப்புக் குறித்து விரித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இது போன்றே இலங்கைப் பல்கலைக்கழக வரலாறுகள் மற்றும் போக்குகள் குறித்து இதுவரை வெளிவந்த நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலும் அவரது பங்களிப்புகள் சரியான விதத்தில் பதிவு செய்யப்படவில்லை. தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு முன்னால் உள்ள பெரும் பொறுப்பு சேர்.பொன். அருணாசலம் போன்ற மகத்தான மனிதர்களை நினைவுகூரத்தக்க வெளிகளை உருவாக்குதல் என நான் கருதுகின்றேன். இதனடிப்படையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தாபிக்கப்பட மறைகரமாகச் செயற்பட்டவரும் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியருமான வண. தனிநாயகம் அடிகளாரின் நினைவரங்கப் நினைவுப் பேருரையை ‘இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன். அருணாசலத்தின் வகிபாகம்’ எனும் தலைப்பில் அமைக்க விரும்பினேன். அதற்கு அனுமதியளித்த யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்துக்கு எனது நன்றிகள். தனிநாயகம் அடிகளாரின் ஆத்மாவும் இந்த முயற்சியை ஆசிர்வதிக்கும் எனும் பெருநம்பிக்கை எனக்குண்டு. இப்போது உரையின் பிரதான பகுதிக்கு நகர்வோம்.
உரையின் சாராம்சம்
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இலங்கையில் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகள் கற்பிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் கடந்துள்ளன. மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகள் கற்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவுற்றன எனக் கருதுவது போல இலங்கையில் சுதேசிய ஏற்பாடுகளுடன் கூடிய பல்கலைக்கழகக் கல்விக்கான ஆரம்ப நிகழ்வின் நூறு வருடங்கள் நிறைவுற்றன எனவும் இந் நிகழ்வைக் கருத முடியும். அத்துடன் 2024 ஆம் ஆண்டு சேர்.பொன். அருணாசலம் மறைவின் நூற்றாண்டு. எனவே இந்தப் பின்னணியில், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியின் தந்தையாக பிரகடனப்படுத்தத்தக்க சேர்.பொன். அருணாசலம் அவர்கள் இலங்கையில் பல்கலைக்கழக கல்வி முறைமை ஒன்றை தாபிப்பதற்காக ஆற்றிய பணிகளை மீள்பார்வை பார்ப்பதே இவ் உரையின் நோக்கமாகும். கிடைக்கத்தக்க வரலாற்று நூல்கள், வரலாற்று ஆவணங்கள், அறிக்கைகள், தனிப்பட்ட மனிதர்களின் கூற்றுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து இவ் உரையில் உள்ள விடயங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
சேர்.பொன். அருணாசலம், சேர். ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சேர். மார்கஸ் பெர்ணாண்டோ ஆகியோரே இலங்கையில் பல்கலைக்கழக கல்வி முறைமை ஒன்றைத் தாபிப்பதற்கான பூர்வாங்கத்தை உருவாக்கிய முன்னோடிகள். இவர்கள் மூவரினதும் இணைவால் 1906 ஆம் ஆண்டு ‘இலங்கைப் பல்கலைக்கழக அமையம்’ (Ceylon University Association) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு இலங்கையில் பல்கலைக்கழக கல்வியைத் தாபிப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. இருந்தும் சேர்.பொன். அருணாசலம் அவர்கள் ஏனைய இருவருடன் இணைந்து முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு முன்னரே இலங்கையில் பல்கலைக்கழக முறைமை தாபிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ தொடர்பாடல்களை ஆரம்பித்திருந்தார். இதனடிப்படையில் இலங்கைப் பல்கலைக்கழக கல்வியின் தந்தையாக சேர்.பொன். அருணாசலத்தை உரிமைகோர முடியும். இதற்கு வலுவான சான்றாதாரமாக, சேர்.பொன். அருணாசலம் அவர்களின் மறைவுக்கு, இலங்கையில் தாபிக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழக கல்லூரியான இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரி சார்பில் வெளியிடப்பட்ட அஞ்சலிச் செய்தியில், அதன் முதலாவது அதிபர் பேராசிரியர் மார்ஸ் அவர்கள் சேர்.பொன். அருணாசலம் அவர்களை ‘இலங்கைப் பல்கலைக்கழக செயற்றிட்டத்தின் தந்தை’ (Father of the University Project in Ceylon) என விளித்தமையைக் கொள்ளமுடியும். எனவே இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியின் தந்தையாக சேர்.பொன். அருணாசலம் அவர்களை மேன்மைப்படுத்தி அடையாளப்படுத்த முடியும் என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கான முன்மொழிவுகள் இதுவரை முறைமைப்படுத்தப்பட்ட விதத்தில் செய்யப்படவில்லை. அதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இன்றைய தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரையை நான் கருதுகின்றேன்.
அத்துடன் இலங்கைப் பல்கலைக்கழக கல்வியில் சேர்.பொன். அருணாசலம் அவர்களது பங்களிப்புக் குறித்துப் பேசுகின்ற போது அது வெறுமனே அவர் குறித்த வரலாற்றை மீள்பார்வை பார்ப்பதாக அமையாது. சமாந்தரமாக பல்கலைக்கழக கல்வி முறைமை மற்றும் அதனது நோக்குநிலைகள் என்பன குறித்தும் ஒரு விமர்சனச் சிந்தனையைக் கிளறுவதாகவே அமையும். குறிப்பாக சேர்.பொன். அருணாசலம் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் எனத் தன் கருத்தியல்களில் வலிறுத்தினாரோ அதன் தாக்கத்தை தனிநாயகம் அடிகள் கொண்டிருந்த கருத்தியல்களுடனும் இணைத்துப் பார்க்கவும் முடியும். மேலும் ஐம்பதாண்டு கடக்கும் ஈழத்தமிழர் பல்கலைக்கழகத் தனித்துவம் பயணிக்க வேண்டிய செல்நெறி குறித்த சிந்தனைகளை மேற்கிளப்பும் தளமாகவும் இவ் உரையினை எடுத்துக்கொள்ளலாம்.
அறிமுகம்: சேர்.பொன். அருணாசலம் அவர்களின் சுருக்க முறையிலான வாழ்க்கைக் குறிப்பு
சேர்.பொன். அருணாசலம் அவர்கள் 1853 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி மானிப்பாயில் இராசவாசல் முதலியார் என அழைக்கப்பட்ட பொன்னம்பல முதலியார் மற்றும் செல்லாச்சி அம்மையார் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது தாயார், இங்கிலாந்தில் பரிஸ்டர் பட்டம் பெற்ற முதலாவது கிறிஸ்தவரல்லாதவர் எனும் பெருமையைக் கொண்ட சேர். முத்துக்குமாரசாமி அவர்களது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது (வைத்திலிங்கம்,1977).
கொழும்பு றோயல் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்த சேர்.பொன். அருணாசலம் 1870 ஆம் ஆண்டு இராணிப் புலமைப் பரிசிலைப் (Queen Scholarship) பெற்று இங்கிலாந்தின் மிக முக்கியமான மரபுசார்ந்த பல்கலைக்கழகமான கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்விக்காக இணைந்தார். அங்கு கிறிஸ்ட் கல்லூரியில் கணிதம் மற்றும் புராதன இலக்கியம் ஆகிய இரு பரப்புகளையும் கற்று இரட்டைத் தகமை பெற்று கலைமாணிப் பட்டத்தை நிறைவுசெய்தார். இதன் பின்னர் 1875 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்திபெற்று அரச சேவைக்குள் ஓர் உயர்நிலை அதிகாரியாக இணைந்து கொண்டார். இவ்வாறு இணைந்த முதல் இலங்கையர் எனும் பெருமையும் இவரைச் சாரும். 1875 இல் ஆரம்பித்த அரச பணியிலிருந்து 1913 ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை பல உயர் பதவிகளை வகித்தார். குறிப்பாக சட்டத்துறையிலும் பாண்டித்தியம் மிக்க இவர் மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றினார். அப்போது இவரது நிர்வாக மற்றும் சட்டப் புலமையைக் கண்டு பிரித்தானிய ஆளுநரால் பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார். இப் பதவியில் 1888 ஆம் ஆண்டு தொடக்கம் 1902 ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய இவர் இலங்கையின் காணிப் பதிவுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க நடைமுறை ஒன்றை உருவாக்கியிருந்தார். அரச சேவையில் இவர் ஆற்றிய கணிசமான பங்களிப்புக்காக பிரித்தானியாவின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரால் ‘சேர்’ பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகச் செயற்பட்டார்.
அரச சேவையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதும் சமூகத்தின் நலனுக்காக அரசியல் மற்றும் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி சமூக சேவைச் சங்கம் என ஒன்றை உருவாக்கிக் கொண்டார். அதன் பின்னர் 1919 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் சேமாவிருத்திச் சங்கம் என ஒன்றை உருவாக்கினார். இச் சங்கம் பின்னர் 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 1919 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கத்தை இவர் ஆரம்பித்து தலைவராக இருந்தபோதும், சிங்களத் தலைவர்கள் மற்றும் சிங்கள மக்களின் மனப்பாங்கு தமிழ்த் தலைவர்கள் இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஊடாக அரசியலில் முனைப்புடன் பங்குபெற இடம்கொடாது என்பதைப் பல்வேறு அனுபவங்களின் வழி உணர்ந்து, 1921 ஆம் ஆண்டு தமிழர் மகாஜன சபை எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். மிக முக்கியமாக 1906 ஆம் ஆண்டு இவரால் தோற்றுவிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழக அமையம் எனும் அமைப்புத்தான் இலங்கையில் பல்கலைக்கழக கல்வி முறைமை ஆரம்பிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது (வைத்திலிங்கம், 1977).
பல்கலைக்கழக கல்வி குறித்த சேர்.பொன். அருணாசலத்தின் கருத்தியல்
பல்கலைக்கழக கல்வி முறைமை குறித்து சேர்.பொன். அருணாசலம் அவர்கள் தெளிவானதும் தூரநோக்குக் கொண்டதுமான கருத்தியல்களைக் கொண்டிருந்தார். அவர் குறிப்பாக தேசிய நீக்கம் செய்யப்பட்ட பல்கலைக்கழக கல்வி முறைமை குறித்து எதிர்ப்புணர்வு கொண்டவராகவிருந்ததுடன் இலங்கையில் பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்படுவதன் மூலமே தேசிய தேவைக்கான உயர் கல்வியை உற்பத்திசெய்ய முடியும் என்பதில் திடமாக நம்பிக்கை கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார் (கிங்ஸ்லி டி சில்வா, 1978).
1964 ஆம் ஆண்டு ஆர். பீரிஸ் அவர்களால் இலங்கையில் பல்கலைக்கழகங்களும் அரசியலும் எனும் தலைப்பில் எழுதப்பட்ட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் சேர்.பொன். அருணாசலம் அவர்கள் பல்கலைக்கழகக் கல்வி குறித்துக் கொண்டிருந்த அபிப்பிராயம் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“வெளிநாட்டுப் பரீட்சைகளுக்குத் தோற்றத்தக்க வகையில் உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் கற்பிக்கப்படும் பாடங்கள் தொடர்பில் அநேகமான மாணவர்கள் அக்கறை கொண்டவர்களாக இல்லை. அதற்கான காரணம் அவர்களுள் அநேகமானோர் மேலைத்தேயக் கலாசாரத்துக்கு அந்நியப்பட்டவர்களாகவுள்ளனர்.”
அதேவேளை அருணாசலம் அவர்கள் பல்கலைக்கழகங்கள் தமது இலட்சிய நோக்குகளை அடையும் அல்லது அடைய வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவராகவிருந்தார். தேசிய நீக்கம் செய்யப்பட்ட பல்கலைக்கழகக் கல்வி முறைமையினால் பல்கலைக்கழகங்கள் தமது இலட்சிய நோக்குகளை அடைவது முழுமையாகச் சாத்தியப்படமாட்டாது என்பது அவரது திடமான கருத்தாகவிருந்தது. இந்தக் கருத்தியல் பின்னணியிலேயே இலங்கையில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் அக்கறையுடனிருந்தார் (பீரிஸ், 1964).
தேசிய நீக்கம் செய்யப்பட்ட பல்கலைக்கழக முறைமைக்கு எதிராக சேர்.பொன். அருணாசலத்தின் இந்தக் கருத்தியலை தனிநாயகம் அடிகள் பல்கலைக்கழகங்கள் குறித்துக் கொண்டிருந்த கருத்தியலுடன் பொருத்திப் பார்க்க முடியும். பல்கலைக்கழகங்கள் மேற்றிசைக் கண்ணும் கீழ்த்திசைக் கண்ணும் கொண்டிருத்தல் வேண்டும். பல்கலைக்கழகங்கள் மூலம் தமிழ்க் கலைகளின் தனித் தன்மையை உலகிற்கு உணர்த்துதல் வேண்டும் எனத் தனிநாயகம் அடிகள் குறிப்பிடும் கருத்து பல்கலைக்கழகங்களுக்குள் சுதேசிய நீட்சி இருக்க வேண்டும் என்பதுடன் அவை தேசிய நீக்கம் செய்யப்படலாகாது எனும் கருத்தியலை வலியுறுத்துகின்றது (தனிநாயகம் அடிகள், 1998).
சேர்.பொன். அருணாசலம் ஆற்றிய ஒரு பகிரங்க உரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “ஒரு பல்கலைக்கழத்தின் அதியுச்ச நன்மை என்பது அங்கு பெற்றுக்கொள்ளப்படும் வெறும் நூலறிவு என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பல்கலைக்கழகங்கள் உயர் கலாசார விழுமியங்கள் மற்றும் உயர் இலட்சியங்களை சுவாசிக்கும் ஒரு இடம். பல்கலைக்கழகங்கள் மனதுடன் மனது தொடர்பு கொள்வதன் மூலமாகவும் ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் இணைவதன் மூலமாகவும் கலந்துரையாடுவதன் மூலமாகவும் இடம்பெறும் கருத்து மோதல்களுக்கான களம் என்பதுடன் அறிவார்ந்த மற்றும் ஆன்மிகம் சார்ந்த வளர்ச்சிக்கும் உதவும் இடமாகும். இலங்கையில் இத்தகைய வாழ்வின் அடித்தளமான அமைப்பின்றி நாம் இழக்கும் விடயங்களை யாரால் மதிப்பீடு செய்ய முடியும்? இந்த உணர்வுகளின் விளைவு தான் கலாநிதி.எச்.எம். பெர்ணாண்டோ மற்றும் ஜேம்ஸ் பீரிஸ் ஆகியோருடன் இணைந்து நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய இலங்கைப் பல்கலைக்கழக அமையமாகும்.” (கிங்ஸ்லி டி சில்வா, 1978).
இவ் உரையின் மூலமாக 1906 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழக அமையத்தின் நோக்கத்தையும் அவ் அமையத்தை உருவாக்குவதில் சேர்.பொன். அருணாசலம் வகித்த வகிபாகத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது.
இலங்கைப் பல்கலைக்கழக அமையமும் அதனூடான அருணாசலம் அவர்களின் பங்களிப்பும்
1906 ஆம் ஆண்டு சேர்.பொன். அருணாசலம் அவர்களது சிந்தனையின் விளைவாக உருவாக்கப்பட்ட இவ் அமைப்பே இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கான அவசியம் குறித்து வலியுறுத்திய முதலாவது அமைப்பாகும். இவ் அமைப்பின் தலைவராக சேர்.பொன். அருணாசலம் அவர்களே பதவி வகித்தார். இவ் அமைப்பைத் தாபிப்பதற்கான முதலாவது கூட்டம் புறக்கோட்டை நூல்நிலைய மண்டபத்தில் 1906 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலமை தாங்கி சேர்.பொன். அருணாசலம் ஆற்றிய உரை இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் முக்கியமாக கவனம் கொடுக்கப்பட வேண்டிய உரையாகும். இவ் உரையின் நிறைவில் இலங்கைப் பல்கலைக்கழக அமையத்தின் நோக்கம் குறித்தும் மிகவும் தெளிவாக அவர் வரையறை செய்திருந்தார்.
‘Ceylon University Association’ என்பது பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களினால் தமிழில் பல்வேறு சொற்பதங்களினால் குறிக்கப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். குறிப்பாக இவ்வுரையில் அதனை ‘இலங்கைப் பல்கலைக்கழக அமையம்’ எனும் கலைச் சொல்லால் அடையாளப்படுத்தும் சந்தர்ப்பத்தில், வேறு சில கட்டுரைகளில் ‘இலங்கை சர்வகலாசாலைச் சங்கம்’ எனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை சர்வகலாசாலைகள் என அழைக்கும் மரபின் வழி இக் கலைச் சொல்லாக்கம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இவ் அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட பருவகால இதழ்களில் பல்கலைக்கழகக் கல்வி குறித்த தனது சிந்தனைகளையும், இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டிய அவசியம் குறித்தும், அவ்வாறு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படும் போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் சேர்.பொன். அருணாசலம் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
‘A plea for Ceylon University’ (இலங்கைப் பல்கலைக்கழகத்துக்கான ஒரு வேண்டுகை) எனும் தலைப்பில் மேற்குறிப்பிட்ட பருவ இதழின் முதலாவது தொகுதி, இரண்டாவது இதழில் 1906 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அவர் ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதினார். இக் கட்டுரையில் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் ஏன் நிறுவப்பட வேண்டும் எனும் தனது கருத்தை வலுவாக நியாயப்படுத்துவதற்காக 1800 களின் பிற்பகுதியிலும் 1900 களின் முற்பகுதியிலும் இங்கிலாந்தில் பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட பின்னணி, அவற்றின் உருவாக்கத்துக்கான தேவை எவ்வாறு உணரப்பட்டது எனும் விடயங்களை புள்ளிவிபரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தார்.
1900 களில் இலங்கையில் ஏற்றுக்கொள்ளத்தக்க தரமான பாடசாலைக் கல்வி முறைமை இருந்தமையை வலியுறுத்திய சேர்.பொன். அருணாசலம் இந் நிலமையை இந்தியாவுடன் ஒப்பிட்டு இந்தியப் பல்கலைக்கழகங்கள் போன்று சுதேசிகளுக்கான பல்கலைக்கழகம் இலங்கையில் தாபிக்கப்பட வேண்டியது அவசியமானதாகும் என வலியுறுத்தினார்.
இலங்கையில் தாபிக்கப்படும் பல்கலைக்கழகங்களில் முதலில் சட்டம், மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்கள் தாபிக்கப்பட வேண்டும் என்பதுடன் பின்னர் கலை மற்றும் விஞ்ஞானப் பீடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது சேர்.பொன். அருணாசலத்தின் கருத்தியலாகவிருந்தது. இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் மறுதலிப்பான கருத்தியல்களைக் கொண்டிருந்தவர்களையும் கருத்தியல் ரீதியாக அருணாசலம் அவர்கள் எதிர்கொண்டார். குறிப்பாக இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்குத் தேவையானளவு மாணவர்கள் இல்லை என்பது பல்கலைக்கழகக் கோரிக்கையை மறுதலிப்பவர்களின் வாதமாகவிருந்தது. இவ் வாதத்தை மறுதலித்த சேர்.பொன். அருணாசலம் அவர்கள் இலங்கையில் சட்டக்கல்விப் பேரவை, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஏறக்குறைய 450 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருப்பதையும், 1905 ஆம் ஆண்டு ஏறக்குறைய 700 மாணவர்கள் இங்கிலாந்து மெற்றிக்குலேசன் தேர்வுக்கு தோற்றியதையும், அவர்களுள் 300 மாணவர்கள் சித்தி பெற்றமையையும் புள்ளிவிபர ரீதியாக எடுத்துக்காட்டி, இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டால் அதனை நிரப்புவதற்குத் தேவையானளவு மாணவர் எண்ணிக்கை இருப்பதை நிறுவினார். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்கொட்ச் பல்கலைக்கழகம் 1904 ஆம் ஆண்டு 477 மாணவர்களை மட்டுமே கொண்டிருந்தமையையும் சுட்டிக்காட்டி இவ் எண்ணிக்கை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையின் பாதியளவு எனவும் வலியுறுத்தினார். அத்துடன் 1900 களில் அரை நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட மெல்பேர்ண் பல்கலைக்கழகம் 615 மாணவர்களையும், 1881 இல் நிறுவப்பட்ட அடிலோயிட் பல்கலைக்கழகம் 622 மாணவர்களையும் கொண்டிருந்தமையையும் சுட்டிக்காட்டி இலங்கையில் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு மாணவர்களின் எண்ணிக்கை போதாது என முன்வைக்கப்படும் அடிப்படை வாதம் புள்ளிவிபர ரீதியாக வலுவற்ற வாதம் என நிறுவினார். அத்துடன் இந்திய மற்றும் இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை மேலே குறிக்கப்பட்ட எண்ணிக்கைக்குள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவ் எண்ணிக்கை ஏறக்குறைய 200 இனை அண்மிக்கும் எனவும் குறிப்பிட்டார். குறிப்பாக இந்தியாவின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 61 மாணவர்கள் மெற்றிக்குலேசன் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எனவே இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் போது மாணவர்களின் எண்ணிக்கை என்பது ஒரு தடையான விடயமாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை எனும் வாதத்தை மிகவும் துல்லியமாக சேர்.பொன். அருணாசலம் முன்வைத்தார். இவரது இந்தக் கருத்து இலங்கைப் பல்கலைக்கழகம் தொடர்பாக மாணவர்களின் எண்ணிக்கையை மையப்படுத்தி மறுதலிப்புப் போக்கு கொண்டிருந்தவர்கள் தமது கருத்தியலை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தும் அவசியத்தைத் தோற்றுவித்தது.
அத்துடன் பௌத்த கலாசாரப் பின்னனியைக் கொண்ட பர்மா, பூட்டான், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி சமஸ்கிருதம் மற்றும் பாளி கற்கைகளுக்காக மாணவர்கள் வருவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய சேர்.பொன். அருணாசலம் அவர்கள் இந் நாடுகள் மாணவர்களை வழங்குவது மட்டுமன்றி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியிலும் பல்வேறு விதமான தாக்கங்களைச் செலுத்தும் எனவும் குறிப்பிட்டு இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இலங்கையில் அமைக்கப்படும் பல்கலைக்கழகம் எத்தகைய நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும், அங்கு கற்பிக்கப்படும் பாடங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் சேர்.பொன். அருணாசலம் அவர்கள் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். கற்பித்தல் முறைமைகள் பரீட்சை மையமானதாகவன்றி அறிவுற்பத்தி மையமாக அமைய வேண்டும் என்பது அவரது பிரதான சிந்தனையாகவிருந்தது. அத்துடன் ஆழமான மேலைத்தேய இலக்கியப் பயில்வு இலங்கை மாணவர்களுக்கு அவசியமற்றது எனவும், அவர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி இலக்கியங்களை ஆழமாகக் கற்று அவற்றை மேலைத்தேய இலக்கியங்களுடன் ஒப்பீடு செய்யும் வாண்மையுடையவர்களாக நிமிர வேண்டும் என்பது அருணாசலம் அவர்களின் பிரதான எண்ணக்கருவாகவிருந்தது. ஆங்கிலத்தில் இலக்கியப் புலமை பெறுவதில் இலங்கை மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வது சகஜமானது எனவும், அவர்கள் ஆங்கிலத்தில் இலக்கியப்புலமை பெறுவதற்கு அப்பால் ஆங்கிலச் சூழலில் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளத்தக்கவர்களாக இருப்பதே அவசியமானது எனவும் வலியுறுத்தியதுடன், இலங்கைப் பல்கலைக்கழகச் செல்நெறி அவ்வாறே அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் போது அதனுடைய செயற்பாட்டு ஒழுங்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது மட்டுமன்றி, பதவிநிலை ஆளணிகள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுகள் எவ்வளவு தொகையாக அமைய வேண்டும் என்பது குறித்தும் மிகவும் விபரமாகவும் துல்லியமாகவும் சேர்.பொன். அருணாசலம் அவர்கள் பதிவுகளை மேற்கொண்டார்.
ஒரு பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு வருடம் ஒன்றுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதைக்கூட கணித்திருந்தார். அவரது கணிப்பின் பிரகாரம் 1905 களில் பல்கலைக்கழகம் ஒன்றை இயக்குவதற்கு மாதாந்தம் இலங்கைப் பணம் ஒரு லட்சம் தேவைப்பட்டிருந்தது. றோயல் கல்லூரி பல்கலைக்கழகக் கல்லூரியாக மாறினால் இத் தொகை இன்னும் கணிசமாகக் குறையும் எனவும் சேர்.பொன். அருணாசலம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அவர் பல்கலைக்கழகக் கல்வி குறித்த தனது கரிசனையை இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கு முன்னரே பல கட்டுரைகளிலும் பொது அரங்க உரைகளிலும் பிரதிபலித்தார். அத்துடன் ஆட்சியிலிருந்த பிரித்தானிய அரசின் நிர்வாகத் தலமைகள் பலருடன் கடித வழியாகத் தொடர்பு கொள்ளத்தக்க சந்தர்ப்பங்கள் மூலமும் இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்று தாபிக்கப்பட வேண்டும் என்பதை அவர் பல தடவைகள் வலியுறுத்தினார்.
இலங்கைப் பல்கலைக்கழக அமையம் குறித்தும் அதில் சேர்.பொன். அருணாசலம் அவர்களின் பங்களிப்புக் குறித்தும் ச. அம்பிகைபாகன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“அரசியல் விடுதலைக்குப் போல் இலங்கையில் ஒரு சர்வகலாசாலை தாபிக்கப்பட வேண்டும் எனும் கிளர்ச்சிக்குத் தலைவராக விளங்கியவர் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களே. அவர் செய்த பிரசாரத்தின் பயனாக 1906 ஆம் ஆண்டில் இலங்கைச் சர்வகலாசாலைச் சங்கம் தாபிக்கப்பட்டது. பல இனத்தவர்களைக் கொண்ட இச் சங்கத்துக்கு சேர்.பொன். அருணாசலம் அவர்களே தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இச் சங்கத்தின் முயற்சியினாலேயே 1921 ஆம் ஆண்டில் இலங்கை சர்வகலாசாலைக் கல்லூரி தாபிக்கப்பட்டது. இச் சங்கம் ஒரு சஞ்சிகையையும் நடத்தி வந்தது. இச் சஞ்சிகையின் இதழ்கள் இலங்கையின் கல்வி வளர்ச்சியை அறிவதற்கு மிகவும் பிரயோசனமுள்ளதாகக் காணப்படுகின்றது.
இலங்கைச் சர்வகலாசாலை நிர்வாகத்தில் சேர்.பொன். அருணாசலம் பெரும் பங்கெடுத்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் பெரும் நூல் நிலையத்துக்கு வித்திட்டவர் இவரே. அகால மரணமடைந்த தனது மகன் பத்மநாபா பெயரால் அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை சர்வகலாசாலைக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்தார்.” (அம்பிகைபாகன், 1980)
மேற்குறிப்பிட்ட இக் கருத்து சேர்.பொன். அருணாசலம் இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் கொண்டிருந்த ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்துகின்றது.
இலங்கைப் பல்கலைக்கழக அமையம் போன்று பின்நாளில் உருவான தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் முக்கியஸ்தரான பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள், குறித்த இயக்கத்தின் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் தினக்குறிப்பு எனும் நூலில் இலங்கைப் பல்கலைக்கழக முறைமையில் சேர்.பொன். அருணாசலத்தின் பங்களிப்புக் குறித்துப் பதிவு செய்துள்ளார். “1921 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியாக தாபிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரிக்குப் பின்னால் சேர்.பொன். அருணாசலத்தின் பங்களிப்பும் அழுத்தமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே 1928 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது” எனக் குறிப்பிடுகின்றார்.
இவ் உரையின் வழியாக பின்வரும் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து எனது உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன்.
இலங்கையில் பல்கலைக்கழக முறைமை தாபிக்கப்பட வேண்டும் என்பதிலும் அப் பல்கலைக்கழகம் சுயாதீனமானதாகவும் சுதேசியக் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தக்கதாகவும் இருக்க வேண்டும் எனும் சிந்தனையை வலுவாக முதலில் பதிந்தவர் சேர்.பொன். அருணாசலமே. அவர் இது தொடர்பில் பல்வேறு தொடர்பாடல்களை மேற்கொண்டதுடன் பிரித்தானிய அரசுக்கும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தார். இலங்கைப் பல்கலைக்கழக அமையம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக செயற்பட்டு தன் வாழ்வுக் காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியைத் தாபித்தார். அதுவே பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றது. எனவே இலங்கைப் பல்கலைக்கழக முறைமை தொடர்பில் ஆழமான கரிசனையுடன் நீண்ட காலமாகச் செயற்பட்டு இதனை தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் செயற்படுத்தியவர் எனும் பெருமை சேர்.பொன். அருணாசலத்துக்கு உண்டு. எனவே இவரை ‘இலங்கைப் பல்கலைக்கழக முறைமையின் தந்தை’ எனப் பிரகடனப்படுத்துவதில் இரு வேறு கருத்து நிலைகள் இருக்க முடியாது. இருந்தும் அண்மைக் காலமாக பல்கலைக்கழக வரலாறுகள் குறித்துப் பேசப்படும் இலங்கையின் ஆவணங்களில் சேர்.பொன். அருணாசலத்தின் பங்களிப்புக் குறித்துப் பேசப்படுவதில்லை. அல்லது மாறாக ஒற்றை வரிகளில் குறிப்பிட்டுவிட்டு வேறு நபர்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றார்கள். வரலாறு மறைக்கப்படுவதை மன்னிக்க முடியாது என்பார்கள் வரலாற்றாசிரியர்கள். எனவே, அவரது மறைவின் நூற்றாண்டு நினைக்கப்படும் 2024 ஆம் ஆண்டில் ‘இலங்கைப் பல்கலைக்கழக முறைமையின் தந்தை’ எனும் கௌரவத்தை வழங்குவதற்கு இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்வரவேண்டும்.
இந்தச் சிந்தனையையும் கோரிக்கையையும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பிரசன்னத்தின் முன்னிலையில் தமிழ் ஆராய்ச்சிக் கல்விக்காக உழைத்த பல்கலைக்கழகப் பேராசிரியர், வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகள் நினைவுப் பேருரை ஊடாக வலியுறுத்தக் கிடைத்தமையை ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பமாக நான் கருதுகின்றேன். அதற்கு வழியமைத்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.
உசாத்துணைகள்
- Ariyapala, M. B., & St. J. Bastiampillai, B. E. (1987). University Education in Sri Lanka – Some Aspects. Journal of the Royal Asiatic Society of Sri Lanka, 32, 1–24.
- De Silva, K. (1978). The Universities and the Government in Sri Lanka. Minerva, 16(2), pp 251–272.
- Matthews, B. (1995). University Education in Sri Lanka in Context: Consequences of Deteriorating Standards. Pacific Affairs, 68(1), 77–94.
- Pieris, R. (1964). Universities, Politics and Public Opinion in Ceylon. Minerva, 2(4), 435–454.
- Ponnambalam Arunachalam Scholar and Statesman 1853-1924 (1953), Sir Ponnambalam Arunachalam Centenary Committee Ltd, Colombo, Sri Lanka.
- Sinnathampy, A (1981). The Diary of the Tamil University Moment, Ganesharatnam, P. Jaffna, Sri Lanka.
- Vythilingam, M.(1977). Ramanathan of Ceylon, The life of Sir Ponnampalam Ramanathan, Thirumagal Press. Chunnakam, Sri Lanka
- அம்பிகைபாகன்,ச.(1980). சர்வகலாசாலைக் கல்வி சம்பந்தமான பிரச்சினைகள்.
- அறிஞர் தனிநாயகம் அடிகள் தமிழ்த்தூது – கட்டுரைக் கொத்து, (1998). உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
- நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு (1977). அனைத்துலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை, திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.