சிலப்பதிகாரமும் ஈழத்துச் சார்பு நூல்களும்
Arts
18 நிமிட வாசிப்பு

சிலப்பதிகாரமும் ஈழத்துச் சார்பு நூல்களும்

February 23, 2025 | Ezhuna

முன்னுரை

வரலாற்றுச் சிறப்பும் நாகரீக உயர்வும் உடைய மக்கள் மொழியிலேயே உலகின் செம்மார்ந்த காப்பியங்கள் தோன்றியுள்ளன. இதற்குச் சான்றாக கிரேக்கம், சீனம், எபிரேயம் முதலான மொழிகளில் தோன்றிய காப்பியங்களைக் குறிப்பிடலாம். அவ்வகையில் பண்டுதொட்டே நாகரீகச் சிறப்பினையும் செவ்வியல் இலக்கியங்களையும் செம்மார்ந்த கலைகளையும் உடைய தமிழில் சிலப்பதிகாரம் போன்ற ஒப்பில்லா காப்பியம் தோன்றுதல் இயல்பேயாம். அவ்வாறு தோன்றிய சிலப்பதிகாரம் பன்னெடுங்காலமாக தனது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் தன்மையாலும் அணி நயத்தினாலும் காப்பியக் கட்டமைப்பினாலும் காப்பிய மெய்யியலாலும், தோன்றிய காலம் முதல் இன்றளவும் வரலாற்றில் இடையறாத் தன்மை பெற்று தமிழர்களிடமும் அயலவர்களிடமும் சிறப்புற்று விளங்கக் காணலாம். ஒரு நூலின் சிறப்பும் வாழ்வும் அதன் உரை மரபால் தொடர்வனவாகின்றது. அவ்வகையில் சிலப்பதிகாரம் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும் பெற்றுச் சிறந்து விளங்குகிறது. அதனது இலக்கிய நயத்தினை ஒட்டி சமய, மெய்யியல் மாறுதல்களுக்கேற்ப கிளைத்து எழும் நூல்களும் பலவாக இருக்கக் காணலாம். ஒரு நூலிலிருந்து கிளைத்து எழும் நூலினை வழி நூல் என்பர். நூல்கள் பல தோன்றுவதற்குக் காரணமான நூலினை முதல் நூல் என்பர். இதனை,

அவற்றுள்

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்  

(நன்.6)

என்ற நூற்பாவின் வழி காணலாம். சிலப்பதிகாரம் முதல் நூலாக அமைய அந்நூற்கு வழிநூல்களாக பல நூல்கள் தமிழ் வழங்கும் பகுதிகளில் வழங்கின. வழி நூல் என்பதற்கான இலக்கணமாக,

முன்னோர் நூலின் முடிபுஒருங்கு ஒத்துப்

பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி

அழியா மரபினது வழிநூல் ஆகும்.       

(நன். 7)

என்ற நூற்பாவினைக் காணலாம்.

அவ்வகையில் ஈழத்தில் தோன்றிய வழிநூலுக்குச் சான்றுகளாக கண்ணகி வழக்குரை, சிலம்புகூறல், கோவலன் கதை என்பனவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான வழிநூலினை ஒட்டி அவற்றின் விளக்கமாகவோ அவற்றின் கருத்திற்கு அறம் சேர்ப்பதாகவோ நுண்பொருளினைத் தெளிவுறுத்தவோ தோன்றும் நூலினைச் சார்பு நூல் என்பர். இதனை,

இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்

திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும்       

(நன்.8)

என்ற நன்னூல் நூற்பாவின் வழி காணலாம். அவ்வகையில் சிலப்பதிகார வழிநூல்களின் சார்புநூல்களாக சான்றுக்கு கண்ணகி ஊர்ச்சுற்று காவியம், கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியம், கலியாணக்கால் சுற்றுக் காவியம், பொற்புறாவந்த காவியம் முதலானவற்றைக் கூறலாம். இவற்றுள் கண்ணகி வழக்குரைக் காதையின் சார்பு நூல்களுள் ஒன்றாக அமைவது ’கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியம்’ என்பதாகும்.

கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியத்தின் அமைப்பு

கண்ணகை அம்மன் வழக்குரை காவியம் எனும் இந்நூல் கண்ணகி வழக்குரைக் காதையின் கதைப்போக்கிலும் பொருளமைதியிலும் சில இடங்களில் மாறுபட்டும் சில இடங்களில் ஒன்றுபட்டும் செல்வதினைக் காணலாம். இருபத்தைந்து (25) பாடல்களைக் கொண்ட இந்நூலானது சிந்து நடையில் தாழிசை பயின்றுவரப் பெற்றுள்ளது. அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் ஒரே கதையினைக் கூறுவதாகவும் ஆற்றொழுங்காக அமைந்துள்ளன. எதுகைத் தொடையும் இயைபுத்தொடையும் பயின்று வரக் காணலாம். பாடலடிகள் இயற்சொற்களால் அமைந்திருந்த போதும் நாட்டார் வழக்காற்றுச் சொற்களையும் காணவியலும். கதை அமைப்பிலும் நாட்டார் வழக்காற்றியல் கூறுபாடுகளைத் தழுவிச் செல்வதினைக் காணலாம்.

கதை அமைப்பு

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் எழுந்த கதைகளில் கதைசொல்லும் முறையானது புராணத்தன்மை உடையதாக அமைவதினைக் காணலாம். சான்றாக, பரமசிவன் பார்வதியிடம் நடக்கப்போகின்ற நிகழ்வினைச் சொல்வதாகவும், தேவர்களின் மொழிகளை அறிந்த கிளிகள், கால்நடைகள், எறும்புகள் முதலான பூச்சி வகைகள் பரமசிவனும் பார்வதியும் பேசிக்கொள்ளும் உரையாடலை அறியக்கூடியவைகளாகவும், அவற்றைத் தம்முள் கலந்துரையாடக்கூடியவைகளாகவும், அவ்வாறாகக் கலந்துரையாடக்கூடியதை விலங்குகளின் மொழிதெரிந்த மனிதன் கேட்பதாகவும் அக்கதையமைப்பு அமையும். அவ்வகையான நீண்ட கதைத்தொடர்பு அற்ற நிலையிலும் பரமசிவன், பார்வதி ஆகியோரின் வழிபட்ட கதைசொல்லி மரபின் அடிப்படையிலேயே இக்கதையானது தொடங்கக் காணலாம். கண்ணகியை மிகவும் புனிதத் தன்மையுடைவளாகக் காட்ட, பாலுறவுக்கு அப்பாற்பட்ட நிலையில் கண்ணகியின் பிறப்பானது நிகழ்கின்றது. நாயக்கர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்திலேயே, பாலுறவு தொடர்பற்ற பிறப்பானது தெய்வீக நிலையில் காட்டப்படுவதினைக் காணலாம். இது நாட்டார் மரபின் சிறப்புக் கூறுபாடாகவும் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றது எனலாம். மானாகரின் வளர்ப்பு மகளாக கண்ணகி காட்டப்படுகிறாள். இதனை,

………..நீரோட்டம் வழியாய்

மட்டற மிதந்துவந்தலை கடலிலே தோன்றி

மானாகர் மகளாக வந்த கண்ணகையே.

மானாகர் மகளாக வளர்கின்ற நாளில்

வலியவைந்து தலைநாக மணிபுனைவ னென்று……

(5:6-8, 6:1-2)

என்ற கண்ணகை வழக்குரைக் காவியப் பாடல் வரிகளில் காணலாம். கோவலின் பிறப்புக் குறித்த செய்திகள் எதுவும் கூறப்படவில்லை. அவ்வகையில் மாசாத்துவனின் சிறுவனாக கோவலனும், அச்சிறுவன் கண்ணகியை மணமுடித்ததாகவும் காட்டப்படுகின்றது. கண்ணகியின் திருமணத்தின் பொருட்டு அவளுக்கு அணிகலன்களைச் செய்ய விழையும் மானாகர் அவள் காலில் அணியும் சிலம்பின் உள்ளீட்டுப் பரல்களாக நாகமணியினைக் கொண்டுவருதல் தொடர்பாக மீகாமன் ஒருவனைப் பணித்தான். அம்மீகாமன் வெடியரசனுடன் சண்டையிண்டு நாகமணியினைக் கொண்டுவந்தான். அதனால் கண்ணகிக்கு காற்சிலம்பு செய்யப்பட்டது. இதனைப் பின்வரும்,

……….மேனாளி லுள்ளபடி யறிந்து மானாகரும்

வேல்வள வனைத்தொழுது விண்ணப்ப மிட்டு

தேனாரென் மகளுக்கு நாகமணி யுள்ளிட்டுச்

சிலம்பிலா தேவதுவை செய்யொணா தெனவே

கானாற தாதமீகிப் புயவழுதி கோனுமீ

காமனைய ழைத்தினிது கனவரிசை செய்தாய். (6: 3 – 8)

செய்துசில கப்பல்கள் கொடுத்தவர் விடுத்தார்

செத்தவர் பிழைக்கவர முத்தமி யளித்தாள்

எய்தும்பொழு தெதிர்வெடி யரசனை வென்று

ஈடழி யாமலே நாகமலை சென்று

பையரவி னைத்தொழுது நாகமணி தன்னைப்

பாலித்து வேண்டியர ராலித்து மீண்டும்

துய்யபுகழ் வளவன்முன் வைத்திட மகிழ்ந்து

தொல்வரிசை மீகாமனுக் கருளி விட்டார். (7: 1-8)

அடிகளில் காணமுடிகின்றது.

இவ்வமைப்பில் நாகமணிக்கு மிகுந்த முதன்மை கொடுத்துக் கூறப்படுதல் என்பது சிலம்பினால் கதை அதிகரித்தலை விளக்குவதாக உள்ளதெனலாம். 

ஒப்பீட்டு நிலையில் வழிநூலும் சார்புநூலும்

கண்ணகி வழக்குரைக் காதையின் சார்புநூலாக அமைவது ’கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியம்’ ஆகும். பெயர் ஒப்பீட்டு நிலையில் கண்ணகி வழக்குரைக் காதையானது ‘காதை’ என்று பெயர் கொண்டிருந்த போதும் அளவில் பெரியதாக 2700 க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டு அமைகின்றது. அங்ஙனமான போதிலும் காதை என்ற பெயர் பெற்றது; ஏனெனில் ஒரே ஒரு கதை பற்றி விவரித்துச் செல்வதால் எனலாம். கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியம் என்பது இருபத்தைந்து (25) சிந்து நடைப் பாடல்களைக் கொண்டதாக அமைகின்றது. மிகக் குறைந்த பாடல்களைக் கொண்டிருந்த போதும் காவியம் எனப் பெயர் பெற்றது; என்னவெனின், இந்நூலின் செய்யுள்கள் யாவும் தொடர்ந்த சிந்து நடையில் பாடுவதற்கு ஏற்றவகையில் அமைந்துள்ளமையே அதற்கான காரணம் எனலாம். பாடுவதற்குரிய ஒரு பனுவலைக் காவியம் என்று அழைக்கின்ற மரபினை தமிழ்நாட்டுப்புற வழக்கில் காணலாம். அவ்வகையிலேயே இதனைக் கருதுதல் வேண்டும். இரண்டாயிரத்து இருநூறு (2700) க்கும் மேற்பட்ட பாடல்களால் அமைந்த வழக்குரைக் காதையினைச் சுருக்கி இருபத்தைந்து பாடல்களாகக் குறைத்து ஒரு கதைச்சுருக்கம் போல இச்சார்பு நூலின் அமைப்பானது விளங்குகின்றது. வழக்குரைக் காதையில் வெண்பா அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. ஆனால் வழக்குரை காவியத்தில் உள்ள இருபத்தைந்து (25) பாடல்களுமே தாழிசையில், சிந்து நடையில் அமைந்ததாகவே காணப்படுகின்றன. வழக்குரைக் காதையில் கண்ணகியின் முற்பிறப்பின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் வழக்குரைக் காவியத்தில் ’நாகமங்கலை’ என கண்ணகியின் முற்பிறப்பின் பெயர் கூறப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி தன் முற்பிறப்பில் எண்ணெய் வாணிகனின் மனைவியாகக் காட்டப்படுகின்றாள். இவை போன்ற மாறுபாடுகள் முதல், வழி, சார்பு நூல்களுக்கிடையே காணப்படுகின்றன. பின் நிகழ்வனவற்றினை முன்னுரைக்கும் உத்தியானது, சிலப்பதிகாரத்தில் கனவின் வழி கையாளப்பட்டுள்ளது. இதனைக் கோப்பெருந்தேவியின் கனவு, கண்ணகியின் கனவு, கோவலனின் கனவு ஆகியவற்றின் வழி அறியலாம். கண்ணகி வழக்குரைக் காதையில் சோதிடத்தின் வழியாகவும் கனவின் வழியாகவும் முன்னுரைத்தல் உத்தி கையாளப்பட்டுள்ளது. ஆனால் கண்ணகை வழக்குரைக் காவியத்தில் கனவின் வழிகூறாது சோதிடக் கணியர்களின் வழியே கூறப்பட்டுள்ளமையினை,

கட்டழகுத் திருமதலை தன்னாலுன் அரசளியும்

கன்னியும் நீயுமலர் கழல்மதுரை நகரும்

கெட்டிடு மெனக்கணிதர் சொன்னதை யறிந்து………..

(5: 1-3)      

என்ற பாடல் வரிகளின் வழி அறியலாம். சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டிருக்க வழக்குரைக் காதையும் வழக்குரைக் காவியமும் வஞ்சிக்காண்டத்தினைத் தவிர்த்துள்ளன. மதுரையினை எரித்த கண்ணகி இடைச்சேரி வருவதாகவும் அங்கு இடையர்குலப் பெண்கள் கண்ணகிக்கு ’நீர்வாற்றுக் குளிர்ச்சிப்’ படுத்தியதாகவும் அமைந்துள்ளது. இதில் கண்ணகியின் திருகி எறிந்த இடது மார்பின் காயத்திற்கு வெண்ணெய் சார்த்தியதாகவும் வழக்குரைக் காவியத்தில் பயின்றுவரக் காணலாம். இதனை,

…….காந்து கனலிட்டுமது ரைப்பதி யெரித்துக்

கன்னிவரும் போதினைக் கன்னியர்கள் கண்டு

வேதனை தணிக்க வென்றேதிருக் கொங்கைதனில்

வெண்ணெய்தனை யப்பியவர் கண்ணுற மகிழ்ந்து…..  

(17: 3-6)

எனும் வரிகளில் காணலாம். வஞ்சிக்காண்டம் இல்லாமைக்கான காரணமாக ஜெ. அரங்கராஜ் தனது சிலப்பதிகாரமும் ஈழத்துக் கண்ணகி வழக்குரையும் என்ற ஆய்வுக்கட்டுரையில் ’கண்ணகி வழிபாட்டு மரபினைச் சேரநாட்டுடன் இணைப்பது வஞ்சிக்காண்டம். அவ்வகையில் மதுரைக் காண்டத்துடன் கோவலன், கண்ணகி கதை நிறைவுற்ற நிலையில் தங்களது மண்ணோடும் வாழ்வியலோடும் கண்ணகியை இறைநிலையில், சமயநிலையில் இணைத்துக்கொள்ள தொல்காப்பிய புறத்திணை மரபு வழிவகை செய்வதாகின்றது. மதுரையை எரித்தபின் கண்ணகி சேரநாடடைந்தாள் என வஞ்சிக் காண்டம் கூறுகின்றது. ஈழத்தோடு அது இணையவில்லை; அதனால் அது ஈழத்து வழிபாட்டு மரபினுக்குத் தேவையானதாக இல்லை. எனவே ஈழத்து மக்கள் கண்ணகி தங்களிடம் வந்தது போலவும் தங்களது நாட்டில் எழுந்தருளியது போலவுமான நூல்களைப் படைக்கவேண்டிய தேவை எழுவதாயிற்று. அதனால் மதுரையை எரித்த கண்ணகி ஆயர்குலப் பெண்களால் குளிர்விக்கப்பட்ட பிறகு அங்கிருந்து ஈழம் வந்ததாகவும் சினந்தணிந்த நிலையில் தங்களுக்கு வரந்தந்து அருளியதாகவும் ஈழத்து மக்களும் இலக்கியங்களும் இயம்புகின்றன. ஈழத்துக் கண்ணகி கோயில்களின் தலவரலாறுகளும் மீண்டும் மீண்டும் இதனையே வலியுறுத்துகின்றன. சான்றாக, மட்டக்களப்பிலுள்ள வந்தாறுமூலை என்னும் ஊரிலுள்ள கண்ணகி கோயிலின் வரலாறானது மதுரையை எரித்தபிறகு கண்ணகை ஈழம் வந்து (சினம்) ஆறி வரந்தந்த மூலையாதலால் ‘வந்தாறுமூலை’ எனப் பெயர்பெற்றதென வழங்கக் காணலாம். இவைபோல் இராமன் வந்த இடங்களும் பாண்டவர்கள் வாழ்ந்த இடங்களுமாகப் பல உண்டு. இதன் மூலம் கண்ணகிக்கும் தங்களுக்குமான நேரடித் தொடர்பினை அவ்வவ்வூர் மக்கள் ஏற்ப்படுத்திக் கொள்கின்றனர். இதனாலேயே கண்ணகி சேரநாடு சென்று விண்ணுலகம் சேர்ந்தாள் என்ற வஞ்சிக்காண்டப் பகுதியை ஈழத்து மக்கள் போற்றினாரிலர். தங்களுக்கென்று ஓர் ஈழத்துக் காண்டத்தைப் படைத்துக்கொண்டார்கள்.’ என்று கூறுகிறார்.

தொன்மக் கூறுகளும் கண்ணகி வழக்குரையும்

காலங்காலமாக மக்களின் வழக்கில் இருந்து வருகின்ற தொன்மங்கள் ஏராளம். அவை கதை வடிவமாகவோ அல்லது பழமொழி வழியாகவோ காலந்தோறும் மாறிமாறி மக்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றன. அந்தக் தொன்மக்கூறுகள் மக்களின் வாழ்வியலில் ஆட்சிமை செலுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட தொன்மக் கூறுகளின் ஆதிக்கத்தினை கண்ணகை வழக்குரையிலும் காண முடிகின்றது. சான்றாக, கண்ணகையானவள் விண்ணுலகத்தில் ’நாகமங்கலை’ எனும் அணங்காக வாழ்ந்து இறைவனின் கட்டளைப்படி பூமிக்கு வருகிறாள். அப்படி வருகின்றவள் மாங்கனி வடிவமெடுத்து வருவதாக பாடல் கூறுகின்றது. இவை போன்ற நாட்டார் தொன்மக் கூறுகள் சிலப்பதிகாரத்தில் காணப்படவில்லை; வழக்குரைக் காதையிலும் வழக்குரைக் காவியத்திலும் காணப்படுகின்றன. அத்துடன் இக்காவியம் முழுவதும் சிலப்பதிகாரத்தில் இல்லாத மாறுபட்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. சான்றாக, மாங்கனி வடிவமெடுத்து பின் குழந்தையாக மாறிய கண்ணகையால் மதுரை அழியும் எனக் கணிதர் கூறியதையடுத்து அந்தக் குழந்தையினை பசும் பொன்னால் செய்யப்பட்ட பேழை ஒன்றினுள் வைத்து வைகை ஆற்றில் விட்டதாக ஆசிரியர் குறிப்பிடுவதைக் கூறலாம். இதனை,    

………….. கிரணமணிப் பசும் பொன்னாற் சமைத்த

பொட்டக மதுள்வைத் தடைத்ததுமே வைகையெனும்

பேராற்றி லேவிட நீரோட்டம் வழியாய்

மட்டற மிதந்துவந்தலை கடலிலே தோன்றி

மானாகர் மகளாக வந்த கண்ணகையே.  

(5: 4-8)

எனும் பாடல் அடிகளில் காணமுடிகின்றது.

இந்தச் செய்தியும் பிற தொன்மக் கதைகளில் வருகின்ற குழந்தையினை ஆற்றில் விடுகின்ற நிகழ்வு, கர்ணன் முதலான பாத்திரங்களினை நினைவுபடுத்தும் எச்சமாக அமைந்திருப்பதினைக் காணமுடிகின்றது. இதுபோன்ற பல்வேறு தொன்மக் கதைக்கூறுகள் அமையப்பெற்ற காவியமாக கண்ணகை வழக்குரைக் காவியம் அமைந்துள்ளது. இவற்றோடு கோவலனைக் கள்வன் எனக்கூறி, கொல்ல ஆணை பிறப்பிக்கப்பட்ட போது முதலில் யானையின் காலில் அவனை இடறிக் கொல்ல முயற்சிப்பதாகவும், ஆனால் யானை கொல்லாமல் விட்டுச் சென்றதனையும், பிறகு மழுவினால் அவன் தலை பிளக்கப்பட்டதனையும் இப்பாடல் குறிப்பிடுகின்றது. அறம் தவறாமல் தர்மத்தின் வழி நடப்பவருக்கு இயற்கை உதவி செய்யும். வழக்குரைக் காவியத்தில் வருகின்ற யானை இடறாமல் விட்டகர்ந்த தொன்மக் கதையானது திருவிளையாடற் புராணம் முதலான புராண இதிகாசங்களில் வரும் தொன்மத்தினை ஒத்ததாக அமைவதினைக் காணமுடிகின்றது.

கதைமாந்தரை அடையாளப்படுத்தும் தன்மை

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கதாப்பாத்திர அறிமுகம் என்ற நிலையில் முதலாவதாக கண்ணகியையே அறிமுகம் செய்கின்றார்.

போதிலால் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னுங் கண்ணகியென் பான்மன்ணோ    

(26-29)

எனும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப்பாடல் வரிகளின் வழி கண்ணகியை அறிமுகப் படுத்துதலைக் காணலாம். ’கதைக்கு நாயகி ஆதலால் கண்ணகி முற்கூறப்பட்டது’ என அரும்பத உரையாசிரியர் கூறுவர். வழக்குரைக் காதையிலும், காப்பியத்திலும் கண்ணகி முற்கூறப்படாமல் சிவபெருமானும் பார்வதியுமே முற்கூறப்பட்டனர். கதையின் ஆசிரியர் கதைமாந்தரை அடையாளப்படுத்தும் தன்மை இன்றியமையாதது ஆகும். கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியம் எனும் இச்சிறுநூலில், கண்ணகையினைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே அவளது தோற்றத்திற்கான காரணமும் தமிழ்மாறனான பாண்டியனுக்கு மூன்றாவது கண் இருந்தமையும் குறிப்பிடப்படுகின்றது. அதனை, பாண்டியனை அழிக்கவே கண்ணகை என்பவள் தேன்றுவதாகக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். இதன்மூலம் கண்ணகை பாண்டியனை வீழ்த்துவதற்கு முன்னரே கூறப்பட்ட இந்த வரலாறுகளை முதன்மைக் கதையினைச் சார்ந்து வந்த துணைமைக் கதைகளாகக் கருத முடிகின்றது. பாண்டியனைப் பற்றியும் அவனது செயல்களையும் “மதிமரபில் வந்த தமிழ்மாறன், புயலைமுன் நாள்விலங் கிட்டதிறல் வழுதி, தண்டரளத் திருமார்பன், மீனக்கொடிகளிடவழுதி, குலவழுதி, கடல்வழுதி” என்ற பாடல் வரிகளின் வழி அறிய முடிகின்றது. இதில் பாண்டியன் மதிமரபில் தோன்றியவன் என்றும், முத்து வாணிகம் சிறந்து விளங்கிய நாட்டினை உடையவன் என்றும், மீன்கொடிச் சின்னத்தை உடையவன் என்றும் சுட்டப்பட்டுள்ளதினைக் காணமுடிகின்றது. சிலப்பதிகாரம், கண்ணகி வழக்குரைக் காதை, வழக்குரைக் காவியம் ஆகிய மூன்றிலும் காணப்படக்கூடிய கதைமாந்தர்களாக கண்ணகி, கோவலன், மாநாய்க்கன் (மானாகர்), மாதவி, பாண்டிய மன்னன், பொற்கொல்லன் ஆகியோரினைக் குறிப்பிடலாம். இவர்கள் தவிர மற்றையோர் கதைக்குக் கதை மாறுபட்டுள்ளமையினைக் காணலாம். கண்ணகி வழக்குரைக் காதையில் மீகாமன், வெடியரசன், சித்திராபதி என்பனவாக கதைமாந்தர்களின் எண்ணிக்கை சிலப்பதிகாரத்திலிருந்து வேறுபட்டுள்ளமையினைக் காணலாம். சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்த செய்தியை இடையர்குலப் பெண்கள் மூலமாக கண்ணகி அறிகின்றாள். ஈழத்து இலக்கியங்களான வழக்குரைக் காதையிலும் வழக்குரைக் காவியத்திலும் கோவலன் இறந்த செய்தியினை கனவின்வழி கண்ட கண்ணகி கோவலன் கொலையுண்ட இடத்தைக்கண்டு, வெண்டுண்ட அவனது தலையையும் உடலையும் பொன்னூசியினால் தைத்து உரையாடியதாகவும் காணப்படுகின்ற செய்தி, சிலப்பதிகாரத்தினுடன் ஒப்புமை உடையதாகும். ஆனால் இவ்வுரையாடலைத் தொடர்ந்து, கண்ணகியின் அழுகையும் புலம்பலும், சிலப்பதிகாரத்திலும் மிக்கதாக வழக்குரைக் காதையிலும் வழக்குரைக் காப்பியத்திலும் காணப்படுகின்றன. இதற்கான காரணமாக அவற்றின் நாட்டுப்புறச் சாயல் பாங்கினையே குறிப்பிடலாம். சிலப்பதிகாரத்தில், பாண்டிய மன்னனைக் காணச் செல்லும் கண்ணகி வாயிலோனிடம் கூறி தானே அரசவைக்குச் சென்று பாண்டியனைக் கண்டு வழக்குரைத்ததாக உள்ளது. ஆனால் வழக்குரைக் காதையிலும் வழக்குரைக் காப்பியத்திலும் பாண்டியனே அரண்மனை வாயிலிற்குவந்து கண்ணகியிடம் வினவியதாகக் காணப்படுகின்றது. அத்தோடு பாண்டியன் தன்னுடைய பிழைச்செயலுக்கு அஞ்சி ஓடி, ஏழு கதவுகளுக்குப் பின் ஒளிவதாகவும், அவற்றினைக் கண்ணகை உடைத்து பாண்டியனைக் கொல்வதாகவும் கதையானது கூறப்படுகின்றது. இந்த நிகழ்வும் கண்ணகை வழக்குரைக் காவியம் உரைக்கின்ற பிற நிகழ்வுகளும் ஒரு வகை நாடகப் பாங்கினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

இயற்கை இறந்த நிகழ்வுகள்

சிலப்பதிகாரத்தில் காணப்படக்கூடிய இயற்கைக்கு மீறியதான நிகழ்வுகளை கண்ணகை அம்மன் வழக்குரைக் காப்பியத்திலும் காணமுடிகின்றது. அவ்வகையில் கோவலன் இறந்த நிகழ்வினை நேடியாக (கனவின் வழி) நிகழ்காலக் கனவின் நிகழ்வாகக் காண்கிறாள் கண்ணகை. மேலும் வேங்கை மரத்தடியில் வீழ்ந்து கிடக்கும் தன் கணவனான கோவலைனைக் கண்டு அழுத கண்ணகை, விண்ணுலகிருந்து பொன்னால் ஆன ஊசி – நூலினை வாங்கி, தன் கணவனை அதில் கோர்த்து உயிருடன் மீட்டு, நடந்தவற்றினை அறிபவளாகக் காட்சிப்படுத்தப்படுகின்றாள். இவற்றோடு மாங்கனி வடிவில் வருதல், மாங்கனி குழந்தையாக மாறுதல் முதலான நிகழ்வுகளும் தனது முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்தல், ஏழு மகளிர் விண்ணிலிருந்து இறங்கி வரல் முதலான பல்வேறு செய்திகளும் இயற்கை இறந்த நிகழ்வாக இருப்பதினைக் காணமுடிகின்றது.

கண்ணகை வழக்குரையும் சமூகவியல் பார்வையும்

எவ்வொரு இலக்கியமாக இருப்பினும் அது எத்தகைய வாழ்க்கை முறையினையும் யாருடைய வாழ்க்கை வரலாற்றினையும் கூற முற்படினும், அதனைக் கூற வருகின்ற ஆசிரியரின் பின்புலம், அவர் வாழ்கின்ற சமூகத்தின் பின்புலத்தினை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்திருப்பதினைக் காண முடிகின்றது. அந்த வகையில் கண்ணகை அம்மன் வழக்குரையினை இயற்ற முற்பட்ட புலவரும் தன்னுடைய சமகாலத்தில் சமூகத்தில் இருந்த பழக்கவழக்கங்கள் பலவற்றைக்  குறிப்பிட்டுச் செல்கின்றார்.

சான்றாக, தன் வளர்ப்பு மகளான கண்ணகைக்கு நாகமணி பதித்த சிலம்பினை அணிவிக்க ஆசைகொள்ளும் மானாகர் நாகமணி எடுக்க மீகாமனின் உதவியினை நாடுகின்றார். அப்போது மீகாமனை அழைத்து அவனுக்குக் ‘கனவரிசை’ எனும் ஒரு செயலைச் செய்கின்றார். நாகமணியினைக் கைப்பற்றிக் கொண்டு வந்த பின் அவனுக்குத்  ’தொல்வரிசை’ எனும் ஒரு செயலைச் செய்கின்றார்.

ஒரு செயலைச் செய்யும் முன் அதற்கான உதவியும், அச்செயலை செய்த பின் அதற்கான வெகுமதியும் தருவது அன்றைய காலகட்டத்தின் சமூகச் செயற்பாடாகக் கருத முடிகின்றது. இதனையே ’கனவரிசை’, ’தொல்வரிசை’ எனும் சொற்களால் குறிப்பிடுகின்றார்.

சமூகத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் இப்பாடலில் தட்டானின் கூற்றாக வருகின்ற ‘அண்ணலே பெண்மதியினாலிவள் உரைத்தாள்’ எனும் வரியின் வழி அறிய முடிகின்றது. பாண்டியன் மாதேவி அந்தச் சிலம்பு தன்னுடையது இல்லை என்று சரியாக மறுக்கவே தட்டான் ’செய்த எனக்கு என் சிலம்பு எது என்று தெரியாதா? அவள் பெண்ணுக்கே உரிய மதியால் இவ்வாறு உரைக்கின்றாள்’ என்று கூறுகின்றார். இதன்மூலம் அக்காலச் சமூகத்தில் பெண்கள் வெறும் உடைமைப் பொருளாகவும், ஆண்களைவிட அறிவில் குன்றியவர்களாவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையினைக் காண முடிகின்றது.

மேலும் வழிபாட்டு மரபுகளாக முருக வழிபாடு, நாக வழிபாடு, திருமால் வழிபாடு, சிவன் – உமையம்மை வழிபாடு முதலான வழிபாடுகள் இருந்ததினையும் அறிய முடிகின்றது.

வழக்குரைக் காப்பியத்தில் உவமை நயம்

கண்ணகை வழக்குரை எனும் நூலின் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை. இருப்பினும் இந்நூலாசிரியரின் எடுத்துரைப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதிலும் உவமைகளை கையாளும் பாங்கு தனிச்சிறப்புடையது என்றே கூற வேண்டும்.

முயல் உருவத்தில் நிலாவில் உள்ள வடுவினைப் போலத் தோற்றம் கொண்டவள் நாகமங்கலை எனும் அணங்கு என்பதாக நாகமங்கைங்கு நிலவு ஒப்புமையாகக் காட்டப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. அதனைப்போலவே கண்ணகையும் கோவலனும் திருமணம் செய்து வாழ்ந்த காட்சிக்கு செந்திருவும் திருமாலும் வாழ்கின்ற காட்சி உவமையாகக் காட்டப்படுகின்றது. இந்த உவமையினை சற்றுக் கூர்ந்து நோக்குவோமானால் செந்திருவான திருமகள் செல்வத்தின் உறைவிடம்; அவள் திருமாலின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் வரைதான் திருமாலும் செல்வச்செழிப்புடன் வாழ இயலும். ஒருவேளை திருமகள் திருமாலை நீங்கினால் திருமால் வறியவர் ஆவார். அதைப்போல கண்ணகியுடன் வாழ்ந்திருந்த காலத்தில் செல்வந்தனாக இருந்த கோவலன் கண்ணகையினைப் பிரிந்த பின்பு வறியவனாகி நாட்டைவிட்டு மதுரை நகருக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

கதைப்போக்கில் முரண்பாடுகள்

கண்ணகை வழக்குரையில் முரண் அமைப்பு இடம்பெறுவதைக் காணமுடிகின்றது. கண்ணகையின் தோற்றம் பாண்டியனின் நெற்றிக்கண்ணை அழிப்பதுதான் என்று முதலில் கூறப்பட்டாலும், அடுத்தடுத்த பாடல்களில் கண்ணகையின் தோற்றமானது பாண்டியனை அழிப்பதற்கும், அவனது தலைநகரான மதுரையினை அழிப்பதற்கும் என்று மாற்றப்படுவதினைக் காணமுடிகின்றது.

சார்பு நூலின் தேவை

கால மாறுதலுக்கு ஏற்ப ஒரு மூல நூலிலிருந்து வழிநூலும் சார்பு நூலும் தோன்றுதல் என்பது இயல்பாம். மாறிவரும் சமூகச் சூழல்களையும் சமூகச் சிந்தனைகளையும் தங்களது இலக்கியங்களில் பதியவைத்தல் என்பது ஒரு படைப்பாளியின் கடமையாகும். அவ்வகையில் புதியதாக ஒரு இலக்கியத்தினைப் படைப்பதினைக் காட்டிலும் தங்களது மரபு சார்ந்த பனுவலின் மையக்கதையினை எடுத்து, தங்களது காலச் சூழலுக்கு ஏற்ற இலக்கிய வகைமையில் படைத்தல் என்பதும் தேவையானதாகின்றது. சிலப்பதிகாரம் செம்மார்ந்த காப்பியம் என்றபோதும் பிற்கால நாட்டார் வழக்கியலோடு ஒன்றுதல் என்பது முரண்பட்ட ஒன்றாகவே அமையும். ஆதலால் பிற்கால நாட்டார் வழக்கிற்கு ஏற்ற வகையில் சிலப்பதிகாரக் கருத்தியலை ஒரு காலத்திலிருந்து பிறிதொரு காலத்திற்கு கடத்துதற்கு வழி நூல்களும் சார்பு நூல்களும் தேவையானதாகின்றன. சிலப்பதிகாரத்தினை கண்ணகி வழிபாட்டு மரபிற்கு ஏற்ற முறையில், கண்ணகி வழிபாட்டுச் சடங்கியலோடு ஒப்புமை உடையதாக மாற்றப் படைக்கப்பட்ட நெடிய வழிநூலாக கண்ணகி வழக்குரைக் காதை விளங்குகின்றது. இவ்வழிநூலினைப் பின்பற்றி குறுகிய காலச் சூழலுக்கு ஏற்ப துதிக்கப்பெறும் இருபத்தைந்து (25) பாடல்களைக் கொண்ட சார்பு நூலாக கண்ணகி வழக்குரைக் காவியம் அமைகிறது எனலாம். மேற்கண்டவாறான தேவைகளின் அடிப்படையிலேயே சிலப்பதிகாரத்தின் வழிநூல்களும் சார்பு நூல்களும் எழுந்தனவெனலாம்.

முடிவுரை

சிலப்பதிகாரம் எனும் நூலின் வழிநூலாக அமையும் கண்ணகி வழக்குரைக் காதையும் சார்பு நூலான கண்ணகை அம்மன் வழக்குரைக் காவியமும் எவ்வகையில் ஒன்றுபட்டதும் மாறுபட்டதுமான போக்கைக் கொண்டுள்ளன என்பன குறித்து ஆராய்கின்றபோது, கதை அமைப்பு, உவமை, கருத்தியல், கதையின் நோக்கம், சமூகச் செய்திகள், இறை உணர்வு என்பதான பல்வேறு நிலைகளில் ஒன்றுபட்டுச் செல்வதினையும், மேற்கண்டதான நிலையில் சிலப்பதிகாரத்தின் நிலையிலிருந்து பல மாறுதல்களைப் பெற்றுள்ளமையினையும் காணமுடிகின்றது. இம்மூன்று நூல்களும் புறவயப்பட்டதான நிலையில் செய்யுள் எண்ணிக்கையிலும் யாப்பியல் அமைப்பிலும் ஒன்றுக்கொன்று மிகுந்த வேறுபாடு உடையனவாம். கண்ணகி வழக்குரைக் காதை எனும் பெருங்காப்பியத்தின் குறுகிய நிழல் நூலாக கண்ணகை வழக்குரைக் காவியம் உள்ளது. வெவ்வேறு காலங்களில் சமூகச் சூழலின் மாறுபாடுகளால் எழுந்த இந்நூல்கள் கண்ணகி வரந்தருந்தெய்வம் என்னும் இறைநிலைப் புள்ளியில் ஒன்றாக அமையக் காணலாம்.

உசாத்துணைப் பட்டியல்

  1. சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சாமிநாதையர், டாக்டர் உ.வே.சா நூல்நிலையம், சென்னை, 2008.
  2. கண்ணகி வழக்குரைக் காதை, வி.சி. கந்தையா, மட்டக்களப்பு, 1968.
  3. கண்ணகி வழக்குரை, F.X.C. நடராசா, அரசு பதிப்பகம், மட்டக்களப்பு, 1963.
  4. கண்ணகி அம்மன் பத்ததியும் பாடல்களும், கண ஆறுமுகம், விபுலம் வெளியீடு, இலங்கை, 2008.
  5. கண்ணகியம்மன் காவியமாலை, சிதம்பரம்பிள்ளை பசுபதி, தமிழ்ப்பூங்கா பதிப்பகம், நெல்லியடி, 2012.

ஒலிவடிவில் கேட்க


About the Author

இளஞ்செழியன் சண்முகம்

இளஞ்செழியன், பழனி அருகிலுள்ள வயலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது இளங்கலைத் தமிழ்ப் படிப்பினை உடுமலைப்பேட்டை, அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் வ. கிருஷ்ணன் அவர்களிடம் பயின்று, பல்கலைக்கழக அளவில் எட்டாம் இடத்தினையும், அதனைத் தொடர்ந்து திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை செவ்வியல் தமிழ் பாடத்தைப் பயின்று பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இவர் தேசிய தகுதித் தேர்வில் (NET) மூன்று முறை தேர்வாகியுள்ளார். 2022-2023 ஆம் கல்வியாண்டில் டில்லிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரக்கூடிய இதழியல் துறையில் (Delhi School of Journalism) கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட தமிழாய்வு சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் பங்கேற்றுள்ளார். தற்போது கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தமிழ்த்துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி அவர்களிடம் ‘தொல்காப்பிய சேனாவரையம் மூலபாடத் திறனாய்வும் செம்பதிப்பும்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து தமிழியல் ஆய்வுத்துறையில் இயங்கி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்