வரி விலக்கு தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு வழங்குதல்
மேலும், முதலீட்டு சபை மற்றும் தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக வரி விதிவிலக்கினைப் பெறும் நிறுவனங்கள், வரி விலக்களிப்பட்ட (tax exemption) மொத்த தொகை, மற்றும் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரி சலுகை வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தினையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இணையத்தளத்தில் இற்றைப்படுத்த (update) வேண்டும் என இவ்வறிக்கை குறிப்பிடுகின்றது. இதன் மூலம் வரி விலக்கு அளிக்கப்படும் நிறுவனங்கள், அதன் பெறுமதி தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் – அதன் ஊடாக விலைமனு மற்றும் வரி விலக்கு விடயங்களில் வெளிப்படைத்தன்மையினை ஏற்படுத்த முடியும். இன்று அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் தமக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு அல்லது நண்பர்களின் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கும் நடைமுறையே காணப்படுகின்றது. அதில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படுவதில்லை. தேர்தல் காலத்தில் பிரசாரச் செலவுகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு அதிக வரி விலக்கினை வழங்குவது ஊழல் மோசடிகள் நிறைந்த தேர்தல் அரசியலின் ஒரு நிரந்தர அம்சமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களை மறுசீரமைத்தல்
அரசாங்கத்திற்கு சொந்தமான பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான கொள்கை ஒன்றை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்பது ஒன்பதாவது பரிந்துரையாகும். அரசுக்கு சொந்தமான பொது நிறுவனங்களில் பாரிய நட்டம், ஊழல் மற்றம் மோசடிகள் மலிந்து காணப்படுகின்றன. அவை மறுசீரமைக்க வேண்டிய தேவை மிகவும் அவசரமாகவே காணப்படுகிறது. அவை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு எந்தவகையிலும் பங்களிப்பு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவை பாரிய சுமையாக மாறியுள்ளது என சிலர் விமர்சிக்கின்றனர். அரசுக்கு சொந்தமாக 527 பொது நிறுவனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 55 நிறுவனங்கள் மாத்திரமே வருடாந்த அறிக்கையினை வெளியிடுகின்றன. இந்நிறுவனங்கள் மாத்திரமே ஓரளவுக்கு வினைத்திறனாக காணப்படுகின்றன. அதில் 10 விகிதமான நிறுவனங்களுக்கு மாத்திரமே நிதி தொடர்பான தகவல்கள் உள்ளன. 2006 – 2017 காலப்பகுதியில் இந்நிறுவனங்கள் சுமார் 795 பில்லியன் நட்டத்தினை ஏற்படுத்தியதாகக் கொழும்பில் அமைந்துள்ள எட்வகாட்ட (Advocata, 2019) நிறுவனம் அரசுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்கள் தொடர்பாக 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆகவே அவை தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக இருப்பதனால், அவற்றினை மறுசீரமைத்து வினைத்திறன் மற்றும் விளைத்திறனை அதிகரிக்க வேண்டிய பெரிய தேவை காணப்படுகிறது. இந்நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் ஆலோசனைச் சபை மற்றும் உத்தியோகத்தர்கள் திறமை, தகுதி கொண்டவர்களாகவும், ஒழுக்கம் மற்றும் சுயாதீனமாகச் செயற்படகூடிய இயலுமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் IMF அறிக்கை குறிப்பிடுகின்றது.
தந்திரோபாய அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்துதல்
இலங்கை அரசாங்கம் கடந்தகாலங்களில் தொடர்ச்சியாக தந்திரோபாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் என்ற பெயரில் மேற்கொண்ட பல பாரிய செயற்திட்டங்களை நாம் அவதானித்துள்ளோம். கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். சர்வதேச நாணய நிதியம், இத்தகைய தந்திரோபாய அபிவிருத்தி செயற்திட்டங்கள் (strategic development projects) எதனையும் இனி மேற்கொள்ள முடியாது, அத்தகைய சட்டங்கள் இரத்து செய்யப்பட வேண்டும், அல்லது இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதனையே பத்தாவது பரிந்துரையாக முன்வைத்துள்ளது. ஏனென்றால் அத்தகையத் திட்டங்களில் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மாபெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. அரசியல்வாதிகளும், ஒப்பந்தக்காரர்களும் பெரும் இலாபத்தை ஈட்டுகின்ற, பொது மக்களின் பணத்தினை சூறையாடுகின்ற திட்டங்களாக அவை காணப்பட்டன. இலங்கையில் அப்படியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒரு வெளிப்படையான செயன்முறை, அத்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான வினைத்திறன் மிக்க பொறிமுறை என்பன உருவாக்கப்படும் வரைக்கும் அவை கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றது.
இது தொடர்பாக அண்மைக்காலங்களில் பாராளுமன்றத்தில் உள்ள பொது நிதி தொடர்பான குழுவிலும் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றது. பொது நிதி தொடர்பான குழுக்கூட்டங்களில் கூட இத்திட்டங்களின் ஊடாக அரசாங்கம் சில கம்பனிகளுக்கு தொடர்ச்சியாக வரி விலக்கை வழங்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. சில கம்பனிகளுக்கு 17 ஆண்டுகள் வரைக்கும் அரசாங்கம் வரி விலக்கை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். இவை அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரி வருமானத்தினை இல்லாது செய்துள்ளது. அந்த வரி விலக்கு ஊடாக யார் நன்மை அடைந்தார்கள் என்றால் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் வியாபாரிகளுமே ஆகும். அத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகளே இன்று பொருட்களின் விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறமாக நாட்டினை வங்குரோத்து நிலைக்கும் தள்ளியுள்ளது. ஆகவே அத்தகைய பாரியத் திட்டங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது.
வரிச்சட்டத்தினைத் திருத்துதல்
இவ்வறிக்கை வலியுறுத்துகின்ற இன்னுமொரு பரிந்துரை யாதெனில் வரி தொடர்பான சட்டத்தைத் சீர்திருத்த வேண்டும் என்பதாகும். பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் வரி அறவிடும் செயன்முறையை இல்லாது செய்ய வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்பது பதினோராவது பரிந்துரையாகும். கடந்த காலங்களில் சில அமைச்சர்கள் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் சில பொருட்களுக்கு வரித் தீர்வை வழங்கினார்கள். சீனியில் ஏற்பட்ட மிகப்பெரிய மோசடி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஆகவே இவற்றை நிறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் மாத்திரமே வரித்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை இவ்வறிக்கை பரிந்துரைக்கின்றது. பொது நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கு இருப்பதனால் வரி தொடர்பான விடயங்களில் மாற்றங்கள் செய்யும் போதும் பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது.
குறுங்கால ஊழல் ஒழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்
பன்னிரெண்டாவது பரிந்துரை குறுங்கால ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்துக்கு வருமானத்தினைப் பெற்றுத்தரும் சகல திணைக்களங்களிலும் இடம்பெற வேண்டும் – அதன் ஊடாக உள்ளக மேற்பார்வை, குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்ட அமுலாக்கம் என்பவற்றினை ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கான காலக்கெடு 2023 டிசம்பர் மாதம் ஆகும். சுங்கத் திணைக்களம், மதுவரி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதை நோக்காக கொண்டு இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 2024 டிசம்பர் மாதம் ஆகும் போது இச்செயற்பாட்டினால் ஏற்பட்ட பெறுபேறுகள் என்ன என்பது தொடர்பாக பொது அறிக்கையொன்றினை நிதி அமைச்சு வெளியிட வேண்டும் எனக்குறிப்பிடுகின்றது.
ஊழியர் சேமலாப நிதியினைப் பாதுகாத்தல்
பதின்மூன்றாவது பரிந்துரை, மத்திய வங்கியின் முகாமைத்துவத்தில் இருந்து ஊழியர் சேமலாப நிதியை விடுவிப்பதற்கு அவசியமான புதிய முகாமைத்துவ நடைமுறைகளை அடையாளம் காண்பதற்காக, 2024 ஜீன் மாதம் ஆகும்போது, பரந்த கலந்துரையாடலின் பின்னர், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினைத் தயாரிக்க வேண்டும் என்பதாகும். அதனூடாக முரண்பட்ட நலன்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறது. இப்பொழுது EPF தொடர்பான முழு அதிகாரத்தையும் மத்திய வங்கியே கொண்டுள்ளது. மத்திய வங்கி பொதுமக்களின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் இந்நிதியை பயன்படுத்துவதை நாம் இன்று அவதானிக்க முடிகின்றது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் EPF பணத்தில் தற்போதைய அரசாங்கம் கைவைத்துள்ளது. அதனூடாகத் தொழிலாளர்கள் கடின உழைப்பால் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்திற்கு பெரும் ஆபத்தும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் EPF நிதியை கையாள்வதற்குப் பிரத்தியேக நிறுவன கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதனை IMF வலியுறுத்துகின்றது. இன்று EPF பணம் தொடர்பான நம்பிக்கை பிரஜைகள் மத்தியில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. அதனை மத்திய வங்கி தொடர்பிலும் காண முடியும். IMF இன் நிதி உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கு EPF நிதியினைப் பாதுகாப்பதற்கு அவசியமான பொறிமுறை ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.
அரச வங்கிகளின் சுயாதீனத்தன்மையினை உறுதிசெய்தல்
வங்கித் துறையிலே மேற்பார்வையைச் சக்திப்படுத்துவதற்காகச் சட்டங்களைத் திருத்த வேண்டும், ஒழுங்கு விதிகள் மற்றும் செயன்முறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது பதினான்காவது பரிந்துரையாகும். அரச வங்கித் துறையிலே பாரிய ஊழல் மோசடிகள் காணப்படுகின்றன. அரச வங்கித்துறையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதில் பாரிய அரசியல் தலையீடு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை காணப்படுகின்றன. அது ஊழலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். அவர்கள் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானம் எடுப்பதும் நடைமுறைப்படுத்துவதும் அரச வங்கிகளின் வீழ்ச்சிக்கும் சீர்குலைவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலைமை மாற்றப்பட்டு வங்கிகள் சுயாதீனமாக இயங்குவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகின்றது. இன்று அரச வங்கிகளில் பண வைப்பு செய்வதனை மக்கள் தவிர்த்து வருகின்றார்கள். இது அரச வங்கிகள் மீதான மக்களின் அவநம்பிக்கையினைக் காட்டுகின்றது.
காணிப்பதிவு செயன்முறையினை டிஜிட்டல் மயப்படுத்தல்
பதினைந்தாவது பரிந்துரை மிகவும் முக்கியமானதாகும். இலங்கையில் காணிப்பதிவு செயன்முறையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். மிக முக்கியமாக, காணி தொடர்பான அளவை வரைபடங்கள் (survey plan) ஒரு இடத்திலும், காணி தொடர்பான உரித்துகள் (title deed) இன்னுமொரு இடத்திலும் பாதுகாக்கப்படுகின்றன. சிலநேரம் காணி தொடர்பான அளவை வரைபடங்கள் தொலைந்து போவதும் அல்லது உரித்து பத்திரங்கள் தொலைந்து போவதும், அல்லது வேண்டுமென்று காணாமல் ஆக்கப்படுவதும் இலங்கையில் நாம் காணும் பொதுவான பிரச்சினைகள் ஆகும். ஆகவே இந்த நிலைமையைச் சரி செய்வதற்காகக் காணிப்பதிவு செயன்முறையில் வெளிப்படைத்தன்மையினைக் கொண்டு வருவதற்காகக் காணிப்பதிவினை டிஜிட்டல் பதிவு முறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டும் (Online digital land registry) எனவும் அரச காணிகளைப் பதிவு செய்தல் மற்றும் உரித்து வழங்குதல் தொடர்பாக அடையப்பட்ட முன்னேற்றங்களைப் பொது மக்கள் பார்க்கக்கூடிய வகையில் ஒரு பிரத்தியேக இணையதளத்தில் 2024 டிசம்பர் மாதம் ஆகும் போது பதிவிட வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது. காணிகளைப் பதிவு செய்வதற்கும், காணி தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் முக்கியமானதாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் காணிகளைப் பெற்று வியாபார மற்றும் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்க முற்படும் போது காணி உரித்துகளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். அந்த கடினமான செயன்முறையில் இருந்து விடுபடுவதற்காக முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக வழங்கி காணிகளை பதிவு செய்து உரித்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இச்செயன்முறை வெளிநாட்டு முதலீட்டாளர்களை வெறுக்க செய்துவிடுகின்றது. அவர்களின் வர்த்தக ஆர்வத்தை இல்லாமல் செய்து விடுகின்றது. ஆகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்கும், அவர்களுக்குக் காணிகளை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற பொறிமுறை ஒன்றினை இலங்கையில் உருவாக்கவும் இப்பரிந்துரையினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகவேதான் காணிப்பதிவு செயற்பாடுகளை Online மூலமாக டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான ஆலோசனையை சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்றது. காணிப்பதிவு மட்டுமல்ல, ஏனைய அரச சேவைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாக அரச பொது நிறுவனங்களில் பொதுச் சேவைகளை வழங்குவதில் நீண்டகாலமாக காணப்படும் ஊழல் மோசடிகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையினைப் உறுதிசெய்தல்
பதினாறாவதாக இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்படுகின்ற வளங்களையும், இருக்கின்ற திறன்களையும் விஸ்தரிப்பதற்கு திட்டம் ஒன்றினை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கின்றது. அதனூடாக இவ்வாணைக்குழு தமது கடமை பொறுப்புகளைச் சுயாதீனமாக மேற்கொள்வதற்கான இயலுமை மற்றும் ஆற்றலை மேம்படுத்த முடியும். அத்துடன் நீதித்துறைக் கட்டமைப்பில் அல்லது செயன்முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவும், நீதித்துறையினை அபிவிருத்தி செய்யவும், நீதித்துறை ஏனைய துறைகள் மீது கண்காணிப்பு, மேற்பார்வை என்பவற்றை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு இவ்வாணைக்குழுவிற்குப் போதிய வளங்களும் தகுதி மற்றும் திறமை கொண்ட ஆளணியினரும் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது. இது ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றாகும். இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பலவீனத்தைச் சர்வதேச நாணய நிதியம் அடையாளம் கண்டுள்ளது. அந்த பலவீனம் எவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் நிர்வகிப்பதில் தாக்கம் செலுத்துகிறது என்பதை அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல் தலையீட்டினை இவ் அறிக்கை வெளிக்காட்டுகின்றது.
IMF இன் ஆளுகை சீர்திருத்தங்கள் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனவா?
1990 களில் முன்னைய சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்ட பல நாடுகளில் ஆளுகைச் செயன்முறையில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டன (ஊழல், வெளிப்படைத்தன்மையின்மை, பொறுப்புகூறலின்மை உள்ளிட்ட). அவற்றில் 15 நாடுகளில் IMF ஆளுகை முறையில் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது. அதன் விளைவாக, ஆர்மேனியா, ஜோர்ஜியா, எஸ்டோனியா, லிதுவேனியா, லெத்வியா, சேர்பியா ஆகிய நாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஆளுகைக் கட்டமைப்பில் ஏற்பட்டதுடன், அவை அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிப்பு செய்தன என்பதனை பல ஆய்வறிக்கைகள் எடுக்காட்டுகின்றன. இதன் காரணமாக இந்நாடுகள் ஊழல் தரப்படுத்தல், உலக வங்கியின் ஆளுகைக் குறிகாட்டிகள் (Governance indicators) மற்றும் ஜனநாயக தரப்படுத்தல், இலகு வணிகம் செய்தல் குறிகாட்டிகள் என்பவற்றில் கணிசமான முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ஆயினும், ஏனைய ஒன்பது நாடுகளில் IMF இன் ஆளுகைச் சீர்திருத்தங்கள் எதிர்பார்த்த வெற்றியினைப் பெற்றுத்தரவில்லை என்பதனையும் குறிப்பிட வேண்டும். இதற்கு அரசியல் மற்றும் நிர்வாக விருப்பமின்மை, அர்ப்பணிப்பின்மை, சமூக கருத்தொருமைப்பாட்டினைக் கட்டியெழுப்பாமை மற்றும் அதிகாரத்தினை மையப்படுத்திய ஊழல் மோசடிகள் நிறைந்த தேர்தல் அரசியல் கலாச்சாரம் என்பன பிரதான காரணங்களாக அமைந்தன.
மேலும், IMF 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்று ஆபிரிக்க நாடுகளில் தீவிர ஆளுகை மறுசீரமைப்புகளை அறிமுகம் செய்தது. அவை பொஸ்வானா, ருவாண்டா மற்றும் சிசெல்ஸ் ஆகிய நாடுகள் ஆகும். அவை இலங்கைக்கு இம்முறை பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஒப்பானவையாகும். அவற்றை இந்நாடுகள் மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தியதுடன், இன்று இந்நாடுகள் ஆபிரிக்காவில் வியக்கத்தக்க ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளன. இதில் ருவாண்டா நீண்டகாலப் போரின் பின்னர் மீண்டெழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும். அத்துடன் பொஸ்வானா வளர்ந்த நாடுகளுக்கு இணையான சாதனைகளைப் பொருளாதார மற்றும் ஆளுகைப் பரப்புகளில் கண்டுள்ளது என்பதனை இங்கு வலியுறுத்துவது பொருத்தமாகும். இதற்கு காரணம் IMF இன் ஆளுகைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அந்நாடுகளில் அரசியல் விருப்பம், அர்ப்பணிப்பு மற்றும் சமூக கருத்தொருமைப்பாடு காணப்பட்டது – அவை படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டன. அதேவேளை, வேறும் பல ஆபிரிக்க நாடுகளில் IMF பரிந்துரைத்த முன்மொழிவுகள் வெற்றியளிக்கவில்லை –அவை பகுதியளவில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டன. பல நாடுகளில் பரிந்துரைகளின் தோல்விக்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு – குறிப்பாக, அவை IMF இன் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான உபாயமாக மாத்திரம் கருதப்பட்டமை, சீர்திருத்த அமுலாக்கத்தில் நீண்டகால தரிசனமொன்று காணப்படாமை, நிலைபேறுத்தன்மை வெளிப்படையாகவே அலட்சியம் செய்யப்பட்டமை, IMF இன் நிதி வசதிகள் முடிவடைந்தப்பின்னர் இப்பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டமை அல்லது அமுல்படுத்துவதில் ஆர்வம் காட்டப்படாமை என்பவற்றுடன், மிக முக்கியமாக இவை சர்வதேச நன்கொடையாளர்களினால் திணிக்கப்பட்ட சீர்திருத்தங்களாக கருதப்பட்டு அந்நிறுவனங்களின் நிதியில் தங்கியிருந்தமையும் (நிதி உதவிகள் முழுமையாக நிறைவடைந்தப்பின்னர் கைவிடப்பட்டன அல்லது அமுலாக்கம் தொடரவில்லை) இதன் தோல்விக்கு பங்களிப்புச் செய்துள்ளன என வாதிட முடியும். கடந்தகால அனுபவங்களைப் பார்க்கும் போது இது இலங்கைக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை.
முடிவுரை
இதுவரை கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது IMF முன்வைத்துள்ள 16 பிரதான பரிந்துரைகளும் இலங்கைக்குப் பெரிதும் அவசியமாக காணப்படுகின்றன. இந்நாட்டில் புரையோடி போயிருக்கின்ற ஊழல் மோசடிகளை ஒழித்து வெளிப்படைத்தன்மை கொண்ட, பொறுப்புக்கூறுகின்ற, நேர்மைத்திறன் கொண்ட ஆட்சிமுறை கலாச்சாரத்தினை உருவாக்குவதற்கு இப்பரிந்துரைகள் பெரிதும் அவசியமானவையாகும். ஆகவே இப்பரிந்துரைகளை எதிர்ப்பதில் நியாயமில்லை. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, தற்போதைய நெருக்கடியான சூழலில் இத்தகையதொரு கசப்பானதொரு மாத்திரையை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ உட்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. அவை எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை இந்நாட்டிற்கு கொண்டுவர உதவும். அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் IMF வழங்கியுள்ள கால வரையறைக்குள் இப்பரிந்துரைகளை நிறைவேற்றுமா என்ற வினா எழுகின்றது. இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராஜபக்சவின் மொட்டுக் கட்சியினர் எந்தளவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பது பிறிதொரு விடயமாகும். அதேவேளை, இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவதனைக் கிடப்பில் போட்டுவிட்டு அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகளையும், ஜனநாயக போராட்டத்திற்கான பிரஜைகளின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் நசுக்கும் சட்டங்களைக் கொண்டுவருமாக இருந்தால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் காணப்படும் முக்கிய குறைபாடுகள் என்னவென்றால், இலங்கையில் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க மற்றும் சக்திப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படாமையாகும். முப்பது ஆண்டுகால சிவில் யுத்தம், யுத்தத்திற்குப் பின்னர் எழுச்சிப்பெற்ற இன மேலாதிக்க சர்வாதிகார அரசாங்கம், தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் மற்றும் அண்மைக்கால இன மற்றும் மத அடிப்படையிலான வன்முறைகள் போன்றன இலங்கையின் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் பெரிதும் அச்சுறுத்தலுக்குட்படுத்தியுள்ளன. ஆகவே, இலங்கையில் ஜனநாயகத்தினையும் மனித உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டிய தேவையொன்று காணப்படும் நிலையில், அது தொடர்பாக இவ்வறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். இவ்வறிக்கை முழுக்க முழுக்க ஆளுகை செயன்முறையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது. ஆனால் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய இரண்டும் ஆளுகை செயன்முறையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை – அவை நல்லாட்சிக்கு பெரிதும் அடிப்படையானவை என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும்.
பிறிதொரு குறைபாடு யாதெனில், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மிகவும் பலவீனமாக நிலையில் வாழும் சமூக குழுக்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், அவர்களின் சமூகப் பாதுகாப்பினை எவ்வாறு உறுதிசெய்ய வேண்டும் என்பது பற்றியப் பரிந்துரைகள் தெளிவாக சொல்லப்படாமையாகும். இன்று எழுபது லட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். விவசாயிகள், மலையக மக்கள், நாட்கூலித் தொழிலாளர்கள், முறைசாரா துறைகளில் வேலை செய்வோர், பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் பாரிய வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், வாழ்க்கையின் விரக்தி நிலைக்கும் சென்றுள்ளனர். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மேற்கூறிய தரப்பினரை கவனத்தில் கொள்ள வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்ட அமுலாக்கத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அவை ஆளுகைக் கட்டமைப்புடன் தொடர்புடையவை என்பதனை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். பொதுச் சேவை வழங்களில் காணப்படும் ஊழல், மோசடிகள், அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சகாய முறை என்பன உரியவர்களுக்கு அரச சேவைகள் கிடைக்காமைக்குக் காரணமாக அமைகிறது. ஆகவே இது தொடர்பாக இவ்வறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.